மும்பை: "சீருடை (வர்தி) மீதான வெறியால் நான் காவல்துறையில் சேர்ந்தேன்" என்று, கிழக்கு மும்பை காவல் நிலைய அதிகாரி (SHO) ஒருவர் நம்மிடம் கூறினார். அது, செப்டம்பர் நடுப்பகுதியில் ஒரு அதிகாலை நேரம். அந்த காவல் நிலைய அதிகாரி, சக காவலர்கள், புகார்தாரர்கள், நிருபர்கள் என, தமது 12 அடி மேசையை சுற்றி நிற்பவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

"இது சிங்கம் படத்தில் வருவது போன்றதல்ல," என்று அவர், ஒரு பிரபல சினிமாவை சுட்டிக்காட்டுகிறார். “காவல்துறையில் பணியாற்றுவது என்பது, திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதில் போல் அல்ல; மிக வித்தியாசமானது. நாங்கள் அதிகமாக வேலை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறோம் மற்றும் வெளிப்புற அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டும்" என்றார்.

நீண்ட வேலைநேரம், சில வார மற்றும் மாதாந்திர சலுகைகள் என, இந்திய காவல்துறையினரின் வாழ்க்கை நகர்கிறது. இந்தியாவில் 24% காவல்துறையினர் ஒருநாளைக்கு சராசரி 16 மணி நேரத்திற்கும் மேல்; 44% பேர் 12 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றுகின்றனர் என்று, 2019 ஆகஸ்ட் 27இல் வெளியான இந்திய காவல்துறையினரின் நிலை அறிக்கை 2019 (Status of Policing in India Report 2019) தெரிவித்துள்ளது. ஒருநாளின் பணி என்பது, சராசரி 14 மணி நேரம் வரை நீடிக்கிறது.

மேலும், 73% காவலர்கள் பணிச்சுமை தங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்று கூறியதாக, காமன்காஸ் & லோக்நிதி ஆய்வு மேம்பாட்டு மையம்- இது டெல்லியை சேர்ந்த லாபநோக்கற்ற மையம் - மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் 84% பேர், தங்களது பணி காரணமாக குடும்பத்துடன் செலவிட நேரம் கிடைப்பதில்லை என்றனர்.

‘எங்கள் குழந்தைகளை காவல்துறையில் சேர்க்க மாட்டோம்’

"நீங்கள் காவல்துறையில் பணிபுரிந்தால் எதிர்கொள்ள வேண்டிய பல சிரமங்கள் உள்ளன" என்று மும்பை கான்ஸ்டபிள் ஒருவர் கூறினார். தனது குழந்தைகள் காவல்துறையில் சேருதை விரும்பவில்லை என்றார். "நீங்கள் பணிக்காக செலவிடும் நேரம், உங்களது கடமைக்கு எந்த மதிப்பையும் தருவதில்லை" என்று அவர் விளக்கம் தந்தார். "நான் வேலை செய்யத் தொடங்கியபோது, 12 மணிநேரம், 15 மணிநேரம் அல்லது 24 மணி நேரம் வேலை செய்தாலும், ஊதியம் என்னவோ அதேதான் வழங்கப்பட்டது" என்றார் அவர்.

ஐந்து காவலர்களில் நான்கு பேர், கூடுதல் நேர பணிக்கான ஊதியத்தை பெறவில்லை என்றனர். அனைத்து பணியாளர்களுக்கும் குறைந்தது ஒரு வாரவிடுமுறையை தரும் ஒரே மாநிலம் மகாராஷ்டிரா தான் என்று ஆய்வு கூறுகிறது.

கான்ஸ்டபிளுக்கு மாதாந்திர சலுகைகள் எத்தனை கிடைக்கும்? இந்த கேள்வியை கேட்டதும் அவர் சிரித்தார். "கஹான் சாஹிப்? (ஏன் சார்?), எனக்கு 2-3 மாதத்திற்கு ஒரு வாரவிடுமுறை தான் அரிதாக எடுக்க முடியும்" என்றார்.

"அவர்கள் [எங்கள் குழந்தைகள்] விரும்பும் இடத்தில், எந்தத்துறையில் வேண்டுமானாலும் பணிக்கு சேரட்டும்; ஆனால் நான் அவர்களை ஒருபோதும் காவல்துறையில் சேர அனுமதிக்க மாட்டேன்" என்று ஒரு துணை ஆய்வாளர் கூறினார். “நான் இத்தகைய கஷ்டங்களை எதிர்கொண்டால், என் குழந்தைகளும் அதை அனுபவிப்பதை நான் ஏன் விரும்புகிறேன்? நான் இதை பற்றி யோசிக்க மாட்டேன்” என்றார்.

"பால் தாக்கரே இறந்தபோது, வேறு சில விஐபிக்களின் பந்தோபஸ்துக்காக [முக்கிய நபர்களுக்கான பாதுகாப்பு], நாங்கள் மூன்று, நான்கு நாட்கள் வீட்டிற்கு செல்லவில்லை" என்று துணை ஆய்வாளர் தொடர்ந்தார். "காவல் நிலையத்தில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் சிறிது நேரம் மட்டுமே கொஞ்சம் கண் அயர முடியும்" என்றார்.

அவர்கள், விடுமுறை எடுத்து எங்கே செல்கிறார்கள்? "நாளைய மறுநாள் பணிக்கே என்னால் திட்டமிட முடியாதபோது, விடுமுறை சுற்றுலாவுக்கு எங்கே திட்டமிடுவது?" என்று ஒரு துணை ஆய்வாளர் கூறினார்.

ஆவணங்களின்படி அவர் ஒருநாளைக்கு 12 மணிநேரம் மட்டுமே வேலை செய்வதாக இருந்தாலும், காவலர்கள் ஒவ்வொரு நாளும் 14-15 மணி நேரம் பணியில் இருக்கினறனர் என்று, ஒரு எஸ்.எச்.ஓ கூறினார். "நாங்கள் வாரத்திற்கு ஒருமுறை விடுமுறை எடுக்க வேண்டும்; ஆனால் அது ஒருபோதும் உறுதியாக கூற முடியாது" என்றார். தனது பயணத்தை எண்ணி, ஒருநாளைக்கு சுமார் 17 மணி நேரம் வேலை செய்கிறார்.

உதாரணத்திற்கு அவர் தனது திருமண நிச்சயதார்த்தத்தை விவரித்தார். "நான் இரவு 11 மணிக்கு ரயிலில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.30-6 மணியளவில் சென்றடைந்தேன். அன்று என் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு மறுநாளே பணிக்கு கிளம்பினேன்" என்றார்.

சிவாஜி நகர் காவல் நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் தனது திருமண நாளில் இதேபோன்ற அனுபவத்தை பெற்றார்.

"குடும்பத்துடன் செலவிட எனக்கு நேரமில்லை" என்று காவல் நிலைய அதிகாரி ஒருவர் புலம்பினார். “எனக்கு 18 மாத வயதுள்ள மகன் உள்ளான். நான் காலையில் வேலைக்கு செல்லும்போது, அவன் தூங்கிக் கொண்டிருப்பான்; வேலையில் இருந்து திரும்பும்போதும் அவன் தூங்கிக் கொண்டிருப்பான்” என்றார். சாகினோக்காவை சேர்ந்த உதவி ஆய்வாளரை போலவே, காவல் நிலைய அதிகாரிகளை விட மூத்த மற்ற உதவி ஆய்வாளர்களிடமும் இதேபோன்ற சோக நிகழ்வுகள் இருந்தன. "எங்கள் குழந்தைகள் தந்தை முகம் தெரியாமலேயே வளர்ந்தார்கள்," என்று அவர்கள் கூறினர்.

"நான் பணி தொடங்கிய காலத்தில் எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியவில்லை, இப்போதும் அவர்களுடன் நேரத்தை செலவிட முடியாத நிலை தான்" என்று துணை ஆய்வாளர் கூறினார்.

"பிரிட்டிஷ் காலத்தில் இருந்து இது நடந்து கொண்டிருக்கிறது," என்று மற்றொரு துணை ஆய்வாளர் கூறினார். "பண்டிகை காலத்தில் குடும்பத்துடன் நான் செலவிடாவிட்டால், அவர்கள் அதை எப்படி உணரப் போகிறார்கள்?" என்று மற்றொருவர் கேட்டார்.

பிற மாநிலங்களிலும் இதே நிலைமை

நாட்டின் 21 மாநிலங்களில் உள்ள காவல்துறையினர் தினமும் சராசரியாக 11-18 மணி நேரம் வேலை செய்கிறார்கள். கணக்கெடுப்பு முடிவுகளின்படி, ஒடிசாவில் காவல்துறையினர் சராசரி வேலைநேரம் ஒருநாளைக்கு 18 மணிநேரம். இது நாகாலாந்தில் ஒருநாளைக்கு 8 மணி நேரம் வேலையாக உள்ளது.

அனுமதித்த 5 பதவிகளில் 1 காலி

ஜனவரி 2017 நிலவரப்படி காவல்துறையில் 22% பதவிகள் இன்னும் நிரப்பப்படவில்லை என காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் (பிபிஆர்டி) தரவு காட்டுகிறது. ஜனவரி 2016 முதல் ஜனவரி 2017 வரை மனிதவளம் 11% உயர்ந்த போதும் இந்நிலை தொடர்கிறது.

கடந்த 2011-2016க்கு இடையில், இந்திய காவல் துறையில் காலியிடங்கள் 25.4% என்று இருந்தது, 21.8% ஆக குறைந்துவிட்டதாக தரவு காட்டுகிறது. ஆயினும், ஜனவரி 2017 நிலவரப்படி, இந்திய காவலர்கள் - மக்கள் தொகை இடையிலான விகிதம் 100,000 பேருக்கு 148 காவலர்கள் என்று இருந்தது, இது ஐக்கிய நாடுகள் சபையின் 222 என்ற பரிந்துரைக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.

"இந்த ஸ்டேஷனில் கூட பல காலி இடங்கள் உள்ளன," என்று கான்ஸ்டபிள் ஒருவர் கூறினார். "இதன் பொருள், நான் எப்போதாவது ஒரு பயணம் செய்யலாம் என்று விரும்பினால்,எனக்கு அதற்கான வாய்ப்பை பெற மாட்டேன். எங்கள் துறையில் போதிய பணியாளர் இருந்தால், சுழற்சி அடிப்படையில் எல்லா வேலைகளையும் முடிக்கலாம். ஆனால் நான் விடுப்பு எடுத்தால் வேலை முழுமை அடையாது” என்றார்.

"ஒருநபர், பத்து பேருக்கு இணையான பணிகளை செய்ய வேண்டும்," என்று காவல் நிலைய அதிகாரி ஒருவர் விவரித்தார். "உதாரணத்துக்கு, இப்பகுதியில் எங்களுக்கு குறைந்தது மூன்று முதல் நான்கு காவல் நிலையங்கள் தேவை, ஆனால் எங்களிடம் ஒன்று மட்டுமே உள்ளது" என்றார்.

"நாங்கள் எல்லா இடங்களையும் எவ்வாறு நிரப்ப முடியும்?" என்று மற்றொரு காவல் நிலைய அதிகாரி கேட்டார். "பணக்காரர், வசதி படைத்தவர்கள், ஏழைகளின் பிரச்சினைகளை நாங்கள் கையாள வேண்டும், மேலும் தொழில்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் குடிசைகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என்றார்.

4இல் 3 காவல்துறையினர் பணிச்சூழல் தங்கள் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கருதுகின்றனர்

நாடு தழுவிய அளவில், 74% காவல் நிலைய ஊழியர்களும், 76.3% காவல் அதிகாரிகளும், தற்போதைய பணிச்சூழல் தங்கள் ஆரோக்கியத்தை பாதிப்பதாக உணர்ந்தனர். பி.பி.ஆர்.டி.யின் 2014 அறிக்கையின்படி, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், தூக்கமின்மை, சோர்வு, ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சினைகள், இரைப்பை பிரச்சனை மற்றும் உடல்வலி போன்றவற்றை பணியாளர்கள் குறிப்பிட்டனர்.

தேசிய தலைநகர் பிராந்தியமான டெல்லியில், ஒவ்வொரு இரண்டாவது காவலரும் உடல்நலப் பிரச்சினைகளை பற்றி தெரிவித்தனர். ஆனால் அவர்களில் பாதி (47%) பேர் மட்டுமே சிகிச்சைக்கு சென்றனர் என்று இந்தியன் ஜேர்னல் ஆப் ஆகுபேஷனல் அண்ட் என்விரோன்மெண்டல் மெடிசின் மருத்துவ இதழின் 2018 ஆய்வில் தெரிய வந்துள்ளது. வளர்சிதை மாற்ற மற்றும் இருதயம் (36.2%), தசைக்கூட்டு (31.5%) மற்றும் பார்வை பிரச்சனை (28.1%) ஆகியன பொதுவான சுகாதார பிரச்சினைகள்.

ஒவ்வொரு நாளும் சராசரியாக 16-17 மணிநேர வேலை மற்றும் பயணத்தை மேற்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், அதிக வேலை செய்வதால் அவரது நினைவகம் பலவீனமடைந்திருப்பதை உணர்ந்தார். ஒரு சப்-இன்ஸ்பெக்டரிடம் பேசிய போது, கணிக்க முடியாத வேலை நேரம் மற்றும் அதன் விளைவாக ஒழுங்கற்ற உணவுப்பழக்கம் காரணமாக, அசிடிட்டி போன்ற உபாதைகள் அதிகரித்து வருவதாக கூறினார்.

அசிடிட்டி போன்ற சுகாதார பிரச்சினைகளுக்கு, காவல்துறையினரின் சுகாதார காப்பீட்டில் பலன் பெற முடியாது.

"இருதய பிரச்சினைகள், புற்றுநோய், கல்லீரல் பிரச்சினைகள் போன்ற பெரிய பிரச்சனைகள் மட்டுமே காவலர் மருத்துவக்காப்பீட்டில் உள்ளன," என்று, குழு காப்பீடு திட்டத்தை குறிப்பிட்டு, சப் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். இருமல் மற்றும் சளி, மலேரியா, டெங்கு, டைபாய்டு போன்றவை நாம் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் சுகாதார பிரச்சினைகளில் அடங்காது. ஆனால், எங்களுக்கு இதற்கான காப்பீடு உண்மையில் தேவை. மேலும் நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே, காப்பீட்டில் செலவுகள் ஈடுசெய்யப்படும்” என்றார். "ஆனால் அவசர நேரத்தில் யாரும் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்வார்கள்” என்றார்.

"அதோ அவருக்கு” என்று அறையின் மறுமுனையில் அமர்ந்திருக்கும் ஒரு அதிகாரியை சுட்டிக்காட்டி,"சர்க்கரை அளவில் பிரச்சினைகள் உள்ளது. அதன் அளவு அதிகரிப்பால் அருகில் உள்ள மருத்துவரிடம் செல்ல வேண்டியிருந்தது. இதற்கு அவர் தனது பணத்தை செலுத்த வேண்டியிருக்கும்” என்றார். இப்பகுதியில் காப்பீடு பெற அரசு அங்கீகரித்த மருத்துவமனை ஒன்று மட்டுமே உள்ளது என்றார்.

இன்னொரு காவல் அதிகாரி, தனது சக காவலர்களில் சிலர் எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதை விவரித்தார்; அதற்கு காரணம் வேலைப்பளு தந்த மன அழுத்தத்தை சமாளிக்க கடினமாக இருந்தது தான். மாரடைப்பு காரணமாக 35 வயது காவலர் இறந்ததை, மற்றொருவர் சுட்டிக் காட்டினார்.

காவல் நிலையம் ஒன்றில் சப்-இன்ஸ்பெக்டரிடம் அவருக்கான மருத்துவ காப்பீடு பற்றி கேட்டபோது, அவர் தனது சக ஊழியர்களில் பார்த்து “நமக்கு மருத்துவக்காப்பீடு இருக்கிறதா?” என்று ஆச்சரியமாக கேட்டார்.

5 இல் 4 பேர் கூடுதல் பணி நேரத்திற்கு ஊதியம் பெறுவதில்லை

ஐந்து பணியாளர்களில் நான்கு பேர் கூடுதல் நேர பணிக்கு ஊதியம் பெறவில்லை என்று சி.எஸ்.டி.எஸ்-லோக்நிதி அறிக்கை கண்டறிந்துள்ளது.

பி.பி.ஆர்.டி அறிக்கையின்படி, காவலர்களுக்கு அவர்களின் கூடுதல் நேர வேலைக்காக ஆண்டுதோறும் ஒருமாத சம்பளத்தை இழப்பீடு வழங்கப்படுவதாக “பெரும்பான்மையான மாநிலங்கள்” தெரிவித்துள்ளன. இது ஒரு வருட மதிப்புள்ள கூடுதல் நேர வேலைக்கு “போதுமான இழப்பீடு” அல்ல.

அசாம், குஜராத், கர்நாடகா, மிசோரம் மற்றும் திரிபுராவில், இழப்பீட்டு முறை - பண அல்லது வேறு எந்த முறையும் காணப்படவில்லை.

கூடுதல் நேர பணிக்கு ஊதியம் வழங்கப்படுவதாக அவர்கள் யாரும் கூறவில்லை. அவர்கள் எல்லோரும் சம்பளத்தின் பெரும்பகுதியை வாடகைக்கு செலவிடுகின்றனர். ஏனெனில் அரசு குடியிருப்புகளை அவர்கள் பெற முடியவில்லை.

அக்டோபர் 7, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தபடி, 2017 நிலவரப்படி 29.7% சிவில் மற்றும் ஆயுதப்படை வீரர்கள் மட்டுமே அதிகாரபூர்வ காவலர் குடியிருப்பு வீடுகளை பெற முடிந்தது. வீடு ஒதுக்கீடு பெற்றவர்களில் நான்கில் மூன்று பேர் மட்டுமே அதில் திருப்தி தெரிவித்தனர். தற்போதுள்ள காவலர் குடியிருப்புகள் பாதுகாப்பற்றவை மற்றும் போதுமானதாக இல்லை என்பதை எங்கள் கள ஆய்வில் கண்டோம்.

கான்ஸ்டபிள் ஒருவர் தனது சம்பளம் 25 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தபோது, மாதத்திற்கு ரூ.1,200ல் இப்போது ரூ.60,000 ஆக உயர்ந்துள்ளது என்றார். "நான் அதிகம் சேமிக்கவில்லை," என்று அவர் மகிழ்ச்சியின்றி கூறினார், "ஆனால் எனது குடும்பத்தின் வாழ்க்கை நன்கு கவனிக்கப்படுகிறது. எனது குழந்தைகளின் கல்விச்செலவுக்கு நான் கடன் வாங்கத் தேவையில்லை” என்றார்.

ஒரு காவல் அதிகாரியாக தமது வருமானத்தை பூர்த்தி செய்வதற்காக கிராமத்தில் வசிக்கும் குடும்பம் விவசாயத்தால் ஏதாவது சம்பாதித்ததற்கு, கட்கோபரை சேர்ந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் நன்றி தெரிவித்து கொண்டார். "இதுபோன்ற நிதி ஆதரவு இல்லாதவர்கள், தங்களது வாழ்க்கையின் முடிவில் எதையும் சம்பாதிக்க மாட்டார்கள்," என்று அவர் கூறினார். "ஒரு நாளைக்கு 17 மணி நேரத்தை காவல் நிலையத்தில் செலவிடுவதற்கு பதிலாக சொந்த பிசினஸ் செய்து வந்தால், நான் இன்னும் அதிகம் சம்பாதித்திருக்க முடியும்" என்றார் அவர்.

மனித உரிமை, தொழிலாளர் உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் பறிப்பு

"நியாயமான மற்றும் சாதகமான பணிச்சூழல்" என்பது அனைவருக்குமான உரிமை. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் 23வது பிரிவு - ஆவணத்தில் இந்திய தூதுக்குழுவினரால்- இந்த பிரகடனம் சேர்க்கப்பட்டு உள்ளது. மேலும், பிரிவு 24ன் படி, “ஓய்வு மற்றும் ஆஸ்வாசம்”, “வேலை நேரத்தை வரையறை செய்தல்” மற்றும் ஊதியம் பெறும் “கால விடுமுறைகள்” ஆகியன மனித உரிமையாகும்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்த, ஐ.நா. சபையின் உறுப்பினரான இந்தியா, தனது காவல்துறை உட்பட அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளையும் நிலைநிறுத்த கடமைப்பட்டுள்ளது.

இதேபோல், இந்திய அரசியலமைப்பின் 42வது பிரிவு "நியாயமான மற்றும் மனிதாபிமான பணிச்சூழலை" வழங்க அரசை கட்டாயப்படுத்துகிறது.

நாற்பது மணி நேர வார வேலை என்ற மரபை சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) 1935ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டது, நாடுகள் நாற்பது மணி நேர வாரத்தை வேலை செய்பவர்களுக்கு வாழ்க்கைத்தரத்தின் வாய்ப்புகளை குறைக்காமல் வழங்க வேண்டும் என்று கட்டளையிட்டது. இன்றுவரை, இந்த மரபை இந்தியா அங்கீகரிக்கவில்லை.

"எங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும்போது நாங்கள் நடுநிலை வகிக்கிறோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்று ஒரு துணை ஆய்வாளர் எங்கள் நிருபரிடம் கேட்டார்; அதே நேரத்தில் விஷயங்கள் எவ்வாறு மாறிவிட்டன என்று விவாதிக்கிறது. "ஏனென்றால் ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை உங்களை போன்ற ஒருவர் எங்களுடன் பேசுகிறார், ஆனால் எதுவும் மாறவில்லை," என்று அவர் கூறினார். "ஏன் விஷயங்கள் மாறக்கூடாது?".

(மேத்தா, சிகாகோ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டதாரி. இந்தியா ஸ்பெண்டில் பயிற்சி பெற்றார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.