இந்திய காவல்துறைக்கு தகவல் தொடர்பு, போக்குவரத்து, ஆயுதங்களில் பற்றாக்குறை; ஆனால் நிதிக்கு அல்ல
மும்பை: 2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், முந்தைய ஆண்டை விட காவல்துறை நவீனமயமாக்கலுக்கான நிதி, 8% அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல மாநிலங்களின் பட்ஜெட்டில், தொலைபேசி, வயர்லெஸ் சாதனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் போன்ற காவல்துறைக்கான அடிப்படை உள்கட்டமைப்புகள் நவீனமயமாக்கல் என்பது பயன்பாட்டில் இல்லை என்பதைக் காட்டுகிறது.
‘நவீனமயமாக்கலில்’ ஆயுதங்களை மேம்படுத்துதல், வயர்லெஸ் சாதனங்கள் மற்றும் செயற்கைக்கோள் நெட்வொர்க்குகள் உள்ளிட்ட தகவல்தொடர்பு அமைப்புகள் மற்றும் ஆய்வகங்கள் உள்ளிட்ட தடயவியல் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மனிதவள பயிற்சி ஆகியன அடங்கும். ஒட்டுமொத்தமாக, காவல்துறை நவீனமயமாக்கலுக்கு, பட்ஜெட்டில் கிடைக்கக்கூடிய நிதியில் பாதிக்கும் (48%) குறைவாக இருந்தது என, அரசு தரவுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது.
"நவீனமயமாக்கலுக்கான மானியங்களை மத்திய அரசு விடுவிக்கிறது; இது மாநிலத்துடன் பொருந்த வேண்டும். நவீனமயமாக்கல் நிதிகளை மாநிலங்கள் எப்போதும் வெளியிடாது. இதை மாற்ற வேண்டும் ”என்று மும்பையின் முன்னாள் போலீஸ் கமிஷனர் எம் என் சிங் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில், ‘காவல்துறை உள்கட்டமைப்பு’- நவீனமயமாக்கல் ஒதுக்கீட்டில் இருந்து வேறுபட்டதுமற்றும் ஏற்கனவே உள்ள வாகனங்கள், அடிப்படை ஆயுதங்கள் மற்றும் தொலைபேசி பராமரிப்பு போன்றவை உட்பட - ஒதுக்கீடு உண்மையில் 2% குறைந்துள்ளது.
இதன் விளைவாக, இந்தியா முழுவதும் உள்ள காவல் துறை படைகளுக்கு ஆயுதங்கள், அடிப்படை தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு இல்லை - 2017 ஜனவரியின்படி, 267 காவல் நிலையங்களுக்கு தொலைபேசி இல்லை, 129 வயர்லெஸ் தகவல்தொடர்பு சாதனங்கள் இல்லை என, காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் பிபிஆர்டி (BPRD) சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு 100 காவல்துறையினருக்கும் அழைப்புகளுக்கு பதிலளிக்க, ரோந்து செல்ல மற்றும் சட்டம், ஒழுங்கை பராமரிப்பதற்கு என, எட்டு வாகனங்கள் இருந்தன.
இந்தியா முழுவதும் வயர்லெஸ் தகவல்தொடர்பு சாதனங்கள் இல்லாமல் செயல்படும் காவல் நிலையங்களின் எண்ணிக்கை 2012ஆம் ஆண்டில் 39 ஆக இருந்தது, 231% அதிகரித்து 2016 இறுதியில் 129 ஆக உயர்ந்துள்ளது. 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நாடு முழுவதும் 273 காவல் நிலையங்களில் ஒரு போக்குவரத்து வாகனம் கூட இல்லை.
தகவல்தொடர்பு உள்கட்டமைப்பு
வயர்லெஸ் தகவல்தொடர்பு சாதனங்கள் இல்லாத காவல் நிலையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மணிப்பூர் (30), ஜார்க்கண்ட் (22) மற்றும் மேகாலயா (18) ஆகிய மாநிலங்களில் உள்ளன. குற்ற விகிதத்தின் அடிப்படையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மணிப்பூர் 28வது இடத்தில் (1,00,000 பேருக்கு 121.9 என) உள்ளது.
இதற்கிடையில், தொலைபேசி இல்லாமல் செயல்படும் காவல் நிலையங்களின் எண்ணிக்கை 2012 ல் 296 ஆக இருந்து 2017ஆம் ஆண்டில் 269 ஆக 10% குறைந்துள்ளது.
தொலைபேசி இல்லாத 45% க்கும் மேற்பட்ட நிலையங்கள் உத்தரபிரதேசம் (51), பீகார் (41) மற்றும் பஞ்சாப் (30) ஆகிய இடங்களில் இருந்தன. 128.7 குற்ற விகிதத்துடன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உத்தரபிரதேசம் 26வது இடத்தில் உள்ளது, 157.4 குற்ற விகிதத்துடன் பீகார் 22வது, மற்றும் 137 குற்ற விகிதத்துடன் பஞ்சாப் 24 வது இடத்தில் உள்ளது.
2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நாடு முழுவதும் 51 காவல் நிலையங்களில் தொலைபேசி அல்லது வயர்லெஸ் தகவல்தொடர்பு சாதனங்கள் இல்லை - 2012ஆம் ஆண்டில் 100 நிலையங்கள் என்றிருந்த இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் (15) மற்றும் மேகாலயா (12) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
"அதிக போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு கருவிகளைக் கொண்டு, காவல்துறையினர் அதிக அளவில் ரோந்து செல்ல முடியும்" என்று சிங் கூறினார். “வயர்லெஸ் தகவல்தொடர்பு சாதனங்கள், மொபைல்கள் மற்றும் வாகனங்கள் இன்று இன்றியமையாதவை. ஏதேனும் நடந்தால், பிரச்சினையைத் தீர்க்க காவல்துறையினர் நன்கு தொடர்பு கொள்ள வேண்டும். சிறந்த தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து மூலம், ஒரு போலீஸ்காரர் பத்து போலீஸ்காரரை போல் வேலை செய்ய முடியும்” என்றார்.
போக்குவரத்து உள்கட்டமைப்பு
2016 ஆம் ஆண்டின் இறுதியில், இந்திய காவல் படைகள் சராசரியாக 12.38 காவலருக்கு ஒரு போக்குவரத்து வாகனம் என வைத்திருந்தன - இது 2011 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு வாகனத்திற்கு 15 ஆக இருந்தது.
100 காவலர்களுக்கு போக்குவரத்து உள்கட்டமைப்பு கிடைப்பது, 2011 ஆம் ஆண்டின் இறுதியில் 6.78 என்று 2016 ஆம் ஆண்டின் இறுதியில் 8.08 ஆக 19% உயர்ந்துள்ளது; பெரும்பாலும் நிலக்கண்ணி வெடியில் சிக்காத வாகனங்கள், தடயவியல் வேன்கள், சிறை வாகனம் போன்றவற்றின் எண்ணிக்கையில் 500% அதிகரிப்பு காரணமாக லாரிகள் மற்றும் நீர் டேங்கர்கள் 2011ஆம் ஆண்டில் 1,255 ஆக இருந்து 2016 ல் 7,536 ஆக இருந்தது.
கார்கள் மற்றும் ஜீப்புகள் போன்ற நடுத்தர மற்றும் இலகுவான வாகனங்களின் எண்ணிக்கை 2012 ல் 76,088 ஆக இருந்தது, 2016 ல் 92,043 ஆக 21% மட்டுமே அதிகரித்துள்ளது.
ஆயினும்கூட, நாடு முழுவதும் 273 காவல் நிலையங்களுக்கு 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் போக்குவரத்து வசதிகள் இல்லை. இவற்றில் கிட்டத்தட்ட 90%, கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கர் (126), அண்டை மாநிலமான தெலுங்கானா (91) மற்றும் மணிப்பூர் (25) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன; அவை உள் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டவை.
உத்தரபிரதேசத்தில், ஒரு வாகனத்திற்கு 30 காவல்துறை ஊழியர்களும், மிசோரம் 22 பேரும், மிகக்குறைந்த அளவாக 18 பேர் கொண்ட இமாச்சல பிரதேசமும் 2017 இல் 100 காவல்துறையினருக்கு மிகக் குறைந்த போக்குவரத்து வசதிகளைக் கொண்டிருந்தன.
ஆயுதங்கள் பற்றாக்குறை
பல மாநில காவல் படைகள் குறைந்தபட்ச ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்புடன் செயல்படுகின்றன என்று, 2014 முதல் 2018 வரை ஐந்து மாநிலங்களின் நிலையை ஆய்வு செய்த தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை தெரிவிக்கிறது.
உத்தரபிரதேசத்தில், மாநில காவல் படைகளின் நவீனமயமாக்கல் (எம்.பி.எப்) திட்டத்தின் கீழ் ரூ. 69.91 கோடியின் ஆரம்ப கோரிக்கையில், 55% அல்லது ரூ.38.31 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது, மேலும் ரூ. 32.99 கோடி (ஆரம்ப தேவையில் 47%) மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்று மாநிலத்திற்கான சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏறக்குறைய பாதி (48%) காவல்துறை படையினர், உள்துறை அமைச்சகம் காலாவதியானது என்று அறிவித்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய ஆயுதங்களை பயன்படுத்துகிறது.
ராஜஸ்தானில், சிஏஜி அறிக்கையின்படி 2009 மற்றும் 2014ஆம் ஆண்டுக்கு இடையில் பரிந்துரைக்கப்பட்ட குவாண்டத்துடன் ஒப்பிடும்போது 2015 ஆம் ஆண்டில் 75% ஆயுதங்கள் பற்றாக்குறையாக இருந்தது. மாநில காவல்துறைக்கு 15,884 ஆயுதங்கள் தேவைப்பட்டன, அவற்றில் 3,962 (25%) தணிக்கை நேரத்தில் பெற்றன.இவற்றில், 2,350, அல்லது 59% ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டு இருந்தன; அவை காவல் நிலையங்களுக்கு வழங்கப்படவில்லை.
எனவே, ராஜஸ்தானில் உள்ள காவல் நிலையங்கள் தேவையான ஆயுதங்களில் 14.7% மட்டுமே பெற்றன, மேலும் 85% க்கும் அதிகமான பற்றாக்குறையை எதிர்கொண்டன.
மேற்கு வங்கத்தில் நடந்த தணிக்கை 71% ஆயுத பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டது. கர்நாடகா மற்றும் குஜராத்தில் முறையே 37% மற்றும் 36% பற்றாக்குறை இருந்தன.
நவீனமயமாக்கல் பட்ஜெட்டின் ஒழுங்கற்ற பயன்பாடு
பிபிஆர்டி கூற்றின்படி, நவீனமயமாக்கல் பட்ஜெட், - மக்களுக்கு உகந்த நட்புரீதியான காவல் நிலையங்கள் மற்றும் பதவிகளை நிர்மாணித்தல், மற்றும் செயல்பாடுகளை, ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை மேம்படுத்துதல் என காவல்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த உதவுகிறது.
இருப்பினும், மாநிலங்களின் இந்த நிதியை ஒழுங்கற்று பயன்படுத்துகின்றன. இந்தியா முழுவதும், 2017 வரையிலான ஐந்து ஆண்டுகளில், ஒட்டுமொத்த நவீனமயமாக்கல் பட்ஜெட்டில் ரூ. 28,703 கோடி (4 பில்லியன் டாலர்) பாதிக்கும் குறைவான (48%) அல்லது ரூ. 13,720 கோடி (1.9 பில்லியன் டாலர்) பயன்படுத்தப்பட்டது.
2014 ஆம் ஆண்டில் 87% பயன்பாட்டிலிருந்து, நவீனமயமாக்கல் நிதிகளின் அகில இந்திய பயன்பாடு 2016 இல் 14% ஆகக் குறைந்தது, 2017 ஆம் ஆண்டில் மீண்டும் 75% ஆக உயர்ந்தது.
மாநிலங்களில், நாகாலாந்து மட்டும் 2015-16 நிதியாண்டில் 1,172 கோடி ரூபாய் நவீனமயமாக்க தனது ஒதுக்கீடு அனைத்தையும் பயன்படுத்தியது என்று பிபிஆர்டி தரவு காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீர் அதன் நவீனமயமாக்கல் பட்ஜெட்டில் 45%, ரூ.89.59 கோடியில் ரூ.40 கோடி செலவிட்டது. உத்தரபிரதேசம் தனது ரூ.116.66 கோடியில் 23% (ரூ. 26.31 கோடி) பயன்படுத்தியது.
தகவல்தொடர்பு உள்கட்டமைப்பின் நவீனமயமாக்கல் பல மாநிலங்களிலும் முழுமையடையவில்லை.
2011-12 முதல் 2015-16 வரையிலான காலப்பகுதியில் உத்தரபிரதேசம் தனது தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த 137 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 28% அல்லது ரூ.56 கோடியை மட்டுமே செலவிட்டதாக சிஏஜி தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில், 2013-14 முதல் 2016-17 வரை, புதுப்பிக்கப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களை வாங்குவதற்கான ஆரம்ப கோரிக்கையான ரூ.15.93 கோடி என்பதில், ரூ.6.93 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டது. அதில்2018 ஆம் ஆண்டு வரை எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று மற்றொரு சிஏஜி அறிக்கை கண்டறிந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், மாநில காவல்துறையினருக்கான 43,636 தகவல் தொடர்பு பெட்டிகள் (வயர்லெஸ் சாதனங்கள், வாக்கி-டாக்கிபோன்றவை) அவை பரிந்துரைக்கப்பட்ட ஆயுட்காலம் கடந்தவையாக இருந்தன.
“இப்போது காவல்துறை, தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டுள்ளது. சைபர் குற்றம், நாணய விமானம், சர்வதேச கடத்தல் மற்றும் பிற பரிமாண குற்றங்களில், காவல்துறை அதன் திறன்களை நவீனமயமாக்கி விரிவுபடுத்த வேண்டும். சைபர் தடயவியல் தொடர்பாக நமது திறன்களையும் மேம்படுத்த வேண்டும், இது தற்போது முக்கியமானது, ”என்று சிங் கூறினார்.
காவல்துறை மற்றும் துணை ராணுவப்படைகளுக்கு இடையில் விரைவான தகவல் தொடர்புக்கு உதவும் வகையில், 2002 ஆம் ஆண்டில், இந்தியா காவல் தொலைத்தொடர்பு நெட்வொர்க்-போல்நெட் (POLNET) என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான தகவல் தொடர்பு வலையமைப்பை அமைக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, உத்தரபிரதேசத்தில் 75 (51%) மாவட்டங்களில் 38 மட்டுமே, போல்நெட் செயல்பாட்டுக்கான உள்கட்டமைப்பைக் கொண்டிருந்தன என்பதை சி.ஏ.ஜி. கண்டறிந்தது.
குஜராத்தில், 2015 அக்டோபரின் படி முழு போல்நெட் முறையும் ஒழுங்கற்றதாக இருந்தது அல்லது இல்லை என்று சி.ஏ.ஜி. கண்டறிந்தது; மற்றும் மார்ச் 2015 நிலவரப்படி, சம்பந்தப்பட்ட உபகரணங்களை இயக்க பயிற்சி பெற்ற மனிதவளம் என்பதில் 32% பற்றாக்குறை இருப்பது தெரிந்தது.
குஜராத் தனது நகர்ப்புற காவலர் உள்கட்டமைப்பை மேம்படுத்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பெறப்பட்ட ரூ.11.81 கோடியில் எதையும் செலவிடவில்லை. 2009-10 முதல் 2014-15 வரை, இதே நோக்கத்திற்காக குஜராத் மாநிலம் பெற்ற நிதியில் 73% செலவிடப்படவில்லை.
(மேத்தா, சிகாகோ பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டதாரி மாணவர்; இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.