புதுடெல்லி: பொது சுகாதார செலவினங்களின் இலக்கை அடைய இந்தியாவுக்கு “நீண்ட தூரம் செல்ல வேண்டும்”, அதன் ஆரம்ப சுகாதார உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லை, மேலும் 2030-க்குள் ஆரோக்கியத்திற்கான நிலையான அபிவிருத்தி இலக்குகளை (எஸ்.டி.ஜி) அடைவதற்கான அதன் முன்னேற்றத்தைக் கண்காணிக்க, தரவுகளின் பற்றாக்குறையை நாடு எதிர்கொள்கிறது என, அரசு தணிக்கையாளரான இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) கூறியுள்ளார்.

இந்த இடைவெளிகள் “2030 திட்ட நிரலின் முக்கிய குறிக்கோள்களை அடைவதற்கான அபாயங்களைக் குறிக்கின்றன” என்று சிஏஜி 2019 ஜூலை 8 அறிக்கையில் கூறியது.

வரும் 2025 ஆம் ஆண்டில், இந்தியாவின் பொது சுகாதார செலவினங்களை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்- ஜிடிபி (GDP) 2.5% ஆக உயர்த்த, மத்திய சுகாதார அமைச்சகம் முன்மொழிந்தாலும், “இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.02 - 1.28% என்ற குறுகிய வட்டத்திற்குள் உள்ளது” என்று அறிக்கை கூறியுள்ளது.

இந்த அறிக்கைக்காக, நிதி ஆயோக், சுகாதார அமைச்சகம், புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மற்றும் எஸ்.டி.ஜி.களை அடைவதற்கான ஆயத்தத்திற்காக 14 பிற அமைச்சகங்களை சிஏஜி தணிக்கை செய்தது. மாநிலங்களின் செயல்திறனை ஆய்வு செய்ய, அசாம், சத்தீஸ்ர், ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் (உ.பி.) மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்கள் 2015-16 ஆம் ஆண்டிற்கான பல்வேறு சுகாதார குறியீடுகளின் தரவரிசை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன.

நிதி ஆயோக்கின் மூன்று ஆண்டு செயல் திட்ட நிரல்களில் (2017-2020),மத்திய சுகாதார பட்ஜெட்டில் 2019-20 ஆம் ஆண்டில் தான் ரூ.1 லட்சம் கோடி (.5 14.5 பில்லியன்) உயர்வு காணப்படுகிறது. ஆனால், ஒதுக்கீடுகள் குறைந்துவிட்டன: 2017-18 ஆம் ஆண்டில் இந்தியா ரூ. 53,294 கோடி (7.7 பில்லியன் டாலர்) ஒதுக்கியது; 2018-19ல் ரூ. 56,045 கோடி (8.1 பில்லியன் டாலர்) மற்றும் 2019-20 ஆம் ஆண்டில் ரூ. 65,038 கோடி (9.4 பில்லியன் டாலர்) என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய சுகாதார கொள்கை 2017, எஸ்.டி.ஜி களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது, 2020 ஆம் ஆண்டளவில் மாநிலங்களின் சுகாதார செலவினங்களை அவர்களின் ஆண்டு வரவு செலவுத் திட்டங்களில் 8% க்கும் அதிகமாக அதிகரிக்க பரிந்துரைக்கிறது. ஆனால் மதிப்பீடு செய்யப்பட்ட ஏழு மாநிலங்கள், 2012-2017 காலகட்டத்தில் 3.29% முதல் 5.32% வரை செலவிடப்பட்டுள்ளதாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுகாதாரக் கொள்கை சமமான, மலிவு மற்றும் தரமான சுகாதார சேவைகளுக்கு உலகளாவிய அணுகலை வழங்கும் தேசிய சுகாதார பணி - சுகாதார இலக்குகளை அடைவதற்கான முதன்மை கருவியாக கருதப்பட்டது: தாய்வழி இறப்பு விகிதம் - எம்.எம்.ஆர் (MMR) 100,000 பிறப்புகளுக்கு 70 க்கும் குறைவான மரணங்கள், பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் -என்.எம்.ஆர் (NMR) 1,000 பிறப்புகளுக்கு 12 இறப்புகள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட இறப்பு விகிதம் (U5MR) 1,000 பிறப்புகளுக்கு 25 இறப்புகள்.

2017 இல், இந்தியாவின் எம்.எம்.ஆர் 100,000 பிறப்புகளுக்கு 130 இறப்புகள் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் என்எம்ஆர் 1,000 பிறப்புகளுக்கு 24 இறப்புகள் மற்றும் யு-5 எம்ஆர் 1,000 பிறப்புகளுக்கு 39 மரணங்கள் என, செப்டம்பர் 20, 2018 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

ஆயினும்கூட, தேசிய சுகாதார இயக்கத்திற்கான ஒதுக்கீடு 2018-19 ஆம் ஆண்டில் பட்ஜெட் திட்டங்களுடன் ஒப்பிடும்போது 13.6% குறைந்துள்ளது என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Report of the Parliamentary Standing Committee, cited in the Comptroller & Auditor General’s report

உடல்நலம் தொடர்பான பாராளுமன்றத்தின் நிலைக்குழு, ஒதுக்கீடுகளை ஆராய்ந்தபோது, இந்த குறைபாடுகள் சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதை பாதிக்கும் என்பதை ஊகித்திருந்தது.

இந்தியாவின் பிறந்த குழந்தை இறப்பு விகிதம் (1,000 பிறப்புகளுக்கு 24 இறப்புகள்) உலகளாவிய சராசரியை விட (18) அதிகம். தனிநபர் வருமானம் குறைவாக இருந்தாலும் இலங்கை (8), பங்களாதேஷ் (18), நேபாளம் (21) ஆகியவை சிறந்தவை என்று இந்தியா ஸ்பெண்ட் செப்டம்பர் 20, 2018 கட்டுரை தெரிவித்திருந்தது.

2015 ஆம் ஆண்டில், இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% பொது சுகாதாரத்திற்காக செலவிட்டது. இது, தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் இரண்டாவது மிகக் குறைவானது என்று தேசிய சுகாதார விவரக்குறிப்பு-2018 இல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதே ஆண்டில், மாலத்தீவு 9.4%, இலங்கை 1.6%, பூட்டான் 2.5%, தாய்லாந்து 2.9% செலவிட்டன.

சுகாதாரத்திற்கான மாநில செலவினங்கள் இன்னும் அதிகரிக்கவில்லை

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% ஆரோக்கியத்திற்காக செலவழிக்கும் 2025 இலக்கை அடைய, தேசிய சுகாதாரக் கொள்கை மாநிலங்களுக்கு முதன்மை பராமரிப்புக்கான சுகாதார செலவினங்களை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10% ஆக அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. கூடுதலாக, 4% சுகாதார மற்றும் கல்வி செஸ் கூட முன்மொழியப்பட்டது, ஆனால், அது செயல்படுத்தப்படவில்லை.

நாங்கள் கூறியது போல, 2020 ஆம் ஆண்டளவில் மாநிலங்களின் சுகாதார செலவினங்களை அவர்களின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 8% க்கும் அதிகமாக அதிகரிக்கவும் கொள்கை பரிந்துரைக்கிறது. ஆயினும்கூட, சி.ஏ.ஜி.-இன் இந்த அறிக்கைக்காக ஆய்வு செய்த ஏழு மாநிலங்கள் எதுவும் 2017- க்குள் அந்த தொகையை செலவிடவில்லை.

மேலும், ஆகஸ்ட் 20, 2018 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தபடி, மாநிலங்களுடனான தேசிய சுகாதார இயக்க நிதிகளில் 29%, 2016 வரையிலான ஐந்து ஆண்டுகளில் செலவிடப்படவில்லை.

முன்னேற்றத்தை பாதிக்கும் சுகாதார பற்றாக்குறை

நாட்டின் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் (பி.எச்.சி) மற்றும் சமூகக் கூட மையங்களின் எண்ணிக்கையில், கிராமப்புற இந்தியாவில் 24% முதல் 38% வரை பற்றாக்குறை உள்ளது என, கிராமப்புற இந்தியாவில் பொது சுகாதார சேவைகளை வழங்குவதை வலுப்படுத்த முற்படும் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் குழந்தை ஆரோக்கியம் குறித்த சி.ஏ.ஜி. 2017 தணிக்கை அறிக்கை தரவுகள் காட்டுகின்றன.

2006 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்திய பொது சுகாதார தரநிலைகளின்படி, மாதத்திற்கு 20 க்கும் மேற்பட்ட பிரசவங்களைக் கொண்ட ஒவ்வொரு பி.எச்.சிக்கும் குறைந்தது இரண்டு மருத்துவ அதிகாரிகள் தேவை. சத்தீஸ்கரில் மொத்தம் 341 மருத்துவர்கள் பி.எச்.சி.களில் உள்ளனர், இது பி.எச்.சிக்கு 0.43 மருத்துவர்களை உருவாக்குகிறது, இது தேவையானதை விட குறைவாக உள்ளது என்று சிஏஜி அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மற்றும் உ.பி.யில் "கணிசமான" மனித வள பற்றாக்குறை இருப்பதாக அறிக்கை கூறியுள்ளது.

மார்ச் 16, 2017 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளபடி, குழந்தை மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட இறப்பு தரவரிசையில் மிக மோசமாக செயல்படும் மாநிலங்களில் உத்திரப்பிரதேசமும் ஒன்றாகும். உத்திரப்பிரதேசத்தில், 30% பி.எச்.சி பற்றாக்குறை உள்ளது; மேற்கு வங்கத்தில் 69% பற்றாக்குறை உள்ளது.

6.2 கோடி கிராமப்புற மக்கள்தொகை உள்ள மேற்கு வங்கத்தில், ஒவ்வொரு 68,000 மக்களுக்கும் ஒரு பி.எச்.சி உள்ளது - இது, 30,000 பேருக்கு ஒரு பி.எச்.சி பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவானது.

Health Resources In Select Indian States, 2016-17
State Primary Health Centres Required Primary Health Centres Functioning Shortfall In Primary Health Centres Doctors in Primary Health Centres Average Doctors Per Primary Health Centre
Assam 1112 1014 98 1048 1.03
Chhattisgarh 870 785 85 341 0.43
Haryana 501 366 135 429 1.17
Kerala 1141 849 292 1169 1.38
Maharashtra 2461 1814 647 2929 1.62
Uttar Pradesh 5183 3621 1562 2209 0.61
West Bengal 3046 914 2132 918 1

Source: Report of CAG (No. 25 of 2017)

இந்தியாவில் மக்கள் தொகை-மருத்துவர் விகிதம் அரசு மருத்துவமனைகளில் 2017 இல் 11,082: 1 ஆக இருந்தது, இது உலக சுகாதார அமைப்பின் 10,000 மக்கள்தொகைக்கு 25 நிபுணர்களின் பரிந்துரையை விட 25 மடங்கு அதிகம் என்று இந்தியா ஸ்பெண்ட் 2019 ஜனவரி 28 கட்டுரை தெரிவித்துள்ளது.

தரவு பற்றாக்குறை

எஸ்.டி.ஜி களை செயல்படுத்துவதற்கான மேற்பார்வைக்கு பொறுப்பான நிதி ஆயோக் மற்றும் எஸ்.டி.ஜி.களை செயல்படுத்துவதை மேற்பார்வையிடும் அமைப்பு மற்றும் மாநில அமைச்சகங்களுடன் கலந்தாலோசிக்கும் புள்ளிவிவர அமைச்சகம் ஆகியன, எஸ்.டி.ஜி களை கண்காணிப்பதற்கான முதுகெலும்பான தேசிய காட்டி கட்டமைப்பை (National Indicator Framework) தயாரிக்க வேண்டும்.

இருப்பினும், 13 எஸ்.டி.ஜி இலக்குகளுக்கு 306 தேசிய குறிகாட்டிகளில் 137-களுக்கான தரவு கிடைக்கவில்லை என்று சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த கட்டமைப்பில் உடல்நலம் தொடர்பான 50 குறிகாட்டிகள் உள்ளன, ஆனால் இவற்றில் 23-களுக்கான தரவுகள் - பெண்கள் மத்தியில் கர்ப்பப்பை புற்றுநோய் கண்காணிப்பு மற்றும் வைரஸ் ஹெபடைடிஸ் பாதிப்பு போன்றவை- கிடைக்கவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில அளவில், இலக்கு 3-க்கான (நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு) “ஒரு விரிவான காட்டி கட்டமைப்பை, தரவு மூலங்களை அடையாளம் காண்பது, பிரிக்கப்படாத தரவுகளை தயரிப்பதில் போதிய முயற்சி இல்லை என்பதற்கான சான்றுகள் உள்ளன” என்று அறிக்கை கூறியுள்ளது.

மே 15, 2019 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை கூறியபடி, “சிறந்த அளவீடு, அதிக சான்றுகள் மற்றும் அதிக தகவலறிந்த அறிக்கையிடல் ஆகியன வாக்காளர் விழிப்புணர்வை விரிவுபடுத்துவதோடு கொள்கை விவாதங்களை ஆழப்படுத்துகின்றன” என்பதாகும். "இது பொது சுகாதார தரவுகளின் தரத்தை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளை கட்டாயப்படுத்துகிறது".

(அலி, இந்தியா ஸ்பெண்ட் செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.