புதுடில்லி: மோசமான நிதி ஒதுக்கீட்டால் இந்தியாவின் நீதி அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக, சமீபத்தில் வெளியான இந்திய நீதி அறிக்கை தெரிவித்துள்ளது. போதிய ஒதுக்கீடுகள் இல்லாமை, மோசமான திட்டமிடல் மற்றும் நிதிகளின் பயனற்ற தன்மை - இவை அனைத்தும் நீதி அமைப்பின் திறனை கட்டுப்படுத்தி, அதன் மேம்பட்ட செயல்பாட்டை பாதித்துள்ளன.

டெல்லியை தவிர இந்தியாவில் எந்தவொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசமோ, அதன் பட்ஜெட்டில் 1% கூட நீதித்துறைக்காக செலவிடவில்லை என்று 2011-2012 மற்றும் 2015-2016 க்கு இடையிலான பட்ஜெட்டுகளை ஆய்வு செய்த அந்த அறிக்கை கூறியுள்ளது. இக்காலகட்டத்தில் நீதித்துறையின் சராசரி தேசிய செலவினம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 0.08% ஆகும் என்று டாடா டிரஸ்ட்ஸ் அமைப்பு ஆறு பிற அமைப்புகளுடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை, சிறைச்சாலைகள், நீதித்துறை மற்றும் சட்ட உதவி ஆகிய நான்கு முக்கிய அமைப்புகளின் புள்ளிவிவரங்களை இது ஆய்வு செய்தது.

இந்திய மக்கள் தொகையில் 80% தகுதி பெற்றுள்ள நிலையில், சட்ட உதவிக்காக அவர்களின் ஆண்டு தனிநபர் செலவினம், இந்த ஆய்வின்படி வெறும் 75 பைசா மட்டுமே. காவல்துறை, சிறைச்சாலைகள் மற்றும் சட்ட உதவிக்கான செலவினம் மாநிலங்களுக்கு இடையில் வேறுபடுகிறது. காவல்துறைக்கான பட்ஜெட் செலவின சராசரி 3-5% என்று மாநிலங்கள் கொண்டிருந்தாலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சிறைத்துறை பட்ஜெட் செலவினங்களுக்கு சராசரி செலவினம் 0.2% மட்டுமே.

மோசமான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு, நீதித்துறை அமைப்பில் திறன்களுக்கு தடையாக அமைந்ததாக, ஆய்வில் கூறப்பட்டுள்ளது. காமன் காஸ் அமைப்பின் இந்திய காவல்துறையின் நிலை என்ற 2019 அறிக்கையின்படி, வாகனங்கள், எரிபொருள், கணினிகள் மற்றும் எழுதுபொருள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகூட சரிவர இல்லை என காவலர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 665 மாவட்ட நீதிமன்றங்களில் 80 வரை வாஷ்ரூம்கள் இல்லை; , அவை இருந்த இடங்களிலும் 40% மட்டுமே செயல்பட்டு வந்ததாக, விதி என்ற சட்ட கொள்கை மையம் என்ற சிந்தனைக் குழுவின் 2019 அறிக்கை கூறுகிறது.

இதற்கு அப்பால், நீதி அமைப்பின் பாதிப்பானது நீண்டகால பொருளாதார வளர்ச்சியையும் தடுக்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். நீதி வழங்குதல், சட்டத்தின் ஆட்சியைப் பேணுவதில் இந்த அமைப்பால் இயலாமை போவது வன்முறை அதிகரிப்பிற்கு வழிவகுத்தது. வன்முறையால் ஏற்படும் பாதிப்பின் மதிப்பு, இந்தியாவின் ஜி.டி.பி.யி ல் 9% க்கு சமமாகும் என்று, ஆஸ்திரேலியாவை சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் அமைப்பின் 2018 அறிக்கை தெரிவித்தது.

நீதித்துறைக்கு ஆதரவு உதவி இல்லாதது, அந்நிய முதலீடுகளையும் பாதிக்கிறது. சமீபத்திய தரவரிசையில் 14 இடங்கள் முன்னேறினாலும், முதலீடு தொடர்பான ஒரு ஒப்பந்தத்தை அமல்படுத்த சராசரி நான்கு ஆண்டுகள் ஆவதாக, உலக வங்கி வெளியிட்டுள்ள ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ் 2020 அறிக்கை கூறுகிறது. 2016 ஆம் ஆண்டில், நீதித்துறையின் தாமதங்களால் இந்தியாவிற்கு ஏற்பட்ட செலவினம் ஜிடிபி-யில் 0.5% அதாவது ரூ.50,387 கோடி (7.5 பில்லியன் டாலர்) என்று மதிப்பிடப்பட்டது.

ஜீரோ கணக்கு விளையாட்டு

கடந்த 15 ஆண்டுகளில், பட்ஜெட் செயல்பாடுகள் பூஜ்ஜியம் தொகை விளையாட்டாக மாறியுள்ளன - அதாவது ஒரு துறைக்கான செலவினங்களின் அதிகரிப்பு தவிர்க்க முடியாமல் மற்றொன்றுக்கான செலவினங்களைக் குறைப்பதைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் நீதி முறைமைக்கான போதிய பட்ஜெட்டில் விளைவை ஏற்படுத்துகிறது. அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளால் தூண்டப்படும் பல்வேறு துறைகளுக்கு, நிதி ஒதுக்குவதில் முன்னுரிமை தரப்படுகிறது.

பட்ஜெட் ஒதுக்கீடுகள் நிதித்துறைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. வழக்கமாக பட்ஜெட் அதிகரிப்புக்கு இயந்திரத்தனமான நடைமுறை பின்பற்றுகிறது.அதாவது முந்தைய ஆண்டின் அடிப்படையில் தற்போதைய பட்ஜெட்டில் நிதி அதிகரிப்பு தீர்மானிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் வேறு வழிக்கு பதிலாக திட்டங்கள் பட்ஜெட்டைப் பின்பற்றுகின்றன என்பதாகும்.

ஒதுக்கீடுகள் மத்திய - மாநிலங்களுக்கு இடையில் பகிரப்படுகின்றன. நீதித்துறையில், 2016-17 மற்றும் 2018-19 க்கு இடையில் மத்திய - மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செலவினம் 53% வளர்ச்சியடைந்த நிலையில், மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் சுமார் 92% பங்களித்ததாக, சென்டர் ஃபார் பட்ஜெட்,கவர்னன்ஸ் அண்ட் அனலைசிஸ் (CBGA) மற்றும் தக்ஷ் (DAKSH) அறிக்கை கூறுகிறது.

ஐந்தாண்டு போக்குகளிய பகுப்பாய்வு செய்ததில், நீதித்துறைக்கான பெரும்பாலான பட்ஜெட் ஒதுக்கீடுகள் எவ்வாறு மாநில செலவினங்களின் ஒட்டுமொத்த அதிகரிப்புடன் பொருந்தாமல் இருந்தது என்பதை இந்திய நீதி அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. நீதி அமைப்பின் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு அவசியம்: உதாரணமாக, அதிகரித்து வரும் சராசரி நிலுவையில் உள்ள பெரும்பாலான மாநிலங்களின் நீதித்துறை பட்ஜெட் அதிகரிப்பு, ஒட்டுமொத்த மாநில பட்ஜெட்டின் பின்னால் இருந்தன என்று தரவு காட்டுகிறது.

ராஜஸ்தானில், 2011-2012 மற்றும் 2015-2016 ஆம் ஆண்டுகளுக்கான மொத்த பட்ஜெட்டை சராசரியாக 20% அதிகரித்துள்ளது; ஆனால் நீதித்துறைக்கான ஒதுக்கீடு 8% மட்டுமே உயர்ந்தது. அதே காலகட்டத்தில், குஜராத்தின் பட்ஜெட்டில் மாநில செலவினங்களை விட நீதித்துறைக்கான ஒதுக்கீடு கிட்டத்தட்ட 22% புள்ளிகள் பின்தங்கி இருந்தது; ஒடிசாவில் இது 26% புள்ளிகளைத் தாண்டியது. காவல்துறை, சிறைச்சாலைகள் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட நீதி அமைப்பு முழுவதும், ஒட்டுமொத்த மாநில செலவினங்களை விட பட்ஜெட் ஒதுக்கீட்டில் அதிகரிப்பு காணப்பட்ட ஒரே மாநிலம் பஞ்சாப் மட்டுமே.

ஏராளமான காலி பணியிடங்கள்

பட்ஜெட் பற்றாக்குறைகள்,நாம் முன்பு கூறியது போல் நீதித்துறையின் திறன்களை மேம்படுத்துவதையும், நீதித்துறை, சட்ட உதவி, காவல் மற்றும் சிறைச்சாலைகளின் முக்கிய திறன்களை பராமரிப்பதையும் பாதிக்கின்றன. இதில் மிக முக்கியமானது நீதி அமைப்பின் முக்கிய பதவிகளில் உள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை.

கடந்த 2018 நிலவரப்படி, நீதித்துறை அமைப்பு அதர்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நீதிபதிகளை விட குறைவான எண்ணிக்கையில் செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. நீதித்துறை காலியிடங்கள் அனைத்து மட்டங்களிலும் 23.25% ஆக இருந்தன; 2016-17இல் உயர்நீதிமன்றங்களில் நீதிபதி காலி பணியிடங்கள் 42% ஆகவும், துணை நீதிமன்றங்கள் 23% ஆகவும் இருந்ததை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2017 ஜனவரியில் வெளியான காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் (பிபிஆர் & டி) அறிக்கையின்படி, அந்த துறையில் சுமார் 22% காலி பணியிடங்கள் இருந்தன. மிக அதிக எண்ணிக்கையாக உத்தரபிரதேசத்தில் - கான்ஸ்டபிள் பணியிடம் 53% மற்றும் அதிகாரிகள் பணியிடம் 63% (2017) நிரப்பப்படாமல் இருந்தன.

இதேபோல் நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. உத்தரகண்ட் மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவற்றில் மிகக் குறைவான ஊழியர்கள் இருந்தனர். உதாரணமாக, உத்தரகண்ட்டில் கேடர் அளவில் காலி பணியிடங்கள் 72% (2016) ஆக பதிவானது. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாவட்ட சட்ட சேவை அதிகாரிகளில் 79% மட்டுமே சட்ட உதவி வழங்கலை நிர்வகிக்க முழுநேர செயலாளர்களைக் கொண்டிருந்தனர்.

"போதிய ஒதுக்கீடுகள் இல்லாதது, ஊழியர்களை மோசமாக பாதித்துள்ளன" என்று சென்டர் ஃபார் பட்ஜெட்,கவர்னன்ஸ் அண்ட் அனலைசிஸ் (CBGA) திட்ட இயக்குனர் அசதுல்லா கூறினார். "நீதி அமைப்பின் பல்வேறு மட்டங்களில் உள்ள காலி பணியிடங்கள், தனியார்மயமாக்கல் மற்றும் (பதவிகளை) ஒப்பந்த அடிப்படையில் செய்ய வழிவகுக்கின்றன. மனிதவள செலவினங்களை நிறுவன ரீதியாக நிதியளிக்கும் கடுமையான முடிவை மத்திய- மாநில அரசுகள் எடுக்க வேண்டும்” என்றார் அவர்.

எடுத்துக்காட்டாக, பீகாரில், 2019-2020 பட்ஜெட்டில் சட்டத்துறையின் சம்பளத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் 13.6% ஒப்பந்த சேவைகளுக்கானது.

நீதித்துறை அமைப்பின் பல்வேறு மட்டங்களில் பெரும்பாலான செலவுகள் சம்பளத்திற்கே செல்கின்றன; உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், புதிய முயற்சிகளுக்கும், திறனை வளர்ப்பதற்கும் சிறிதளவே நிதி கிடைக்கிறது. உதாரணமாக, சட்ட உதவி நிதியில் பெரும்பகுதி வழக்கறிஞர் தொகைக்கே செலவாகிறது; சட்ட உதவி கோருவோர் மற்றும் காவலில் உள்ளவர்களுக்கு செல்விடப்படுவது மிகக்குறைவாகவே உள்ளது.

நிதி முரண்பாடு

ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும், பட்ஜெட் நிதி பற்றாக்குறை பிரச்சினை நிதிகளின் பயன்பாட்டு சிக்கலுடன் ஒத்துப்போகிறது. பல்வேறு திட்டங்களின் கீழ் மத்திய அரசிடம் நிதி கிடைத்தாலும் அவை குறிப்பிட்ட செலவினங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக மாநிலங்களுக்கு நவீனமயமாக்கல் என்ற பிரிவில் உள்துறை அமைச்சகம் வழங்கும் நிதி, உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, பழுது மற்றும் பராமரிப்பு ஆகியவற்றிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட முடியும்;மிகவும் தேவைப்படும் ஊழியர்களை பணியமர்த்துவதற்கு அவற்றைப் பயன்படுத்த முடியாது. நாகாலாந்து மாநிலத்தால் மட்டுமே 2016-17 நிதி உதவியை காவல் படைகளின் நவீனமயமாக்கலுக்கு முழுமையாகப் பயன்படுத்த முடிந்தது.

மத்திய நிதிகளுக்கு பொருந்தக்கூடிய பங்கை வழங்குவது போன்ற மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களுக்கான கடும் விதிமுறைகள், நிபந்தனைகளை பூர்த்தி செய்ய மாநிலங்கள் பெரும்பாலும் தேவைப்படுகின்றன. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய இயலாதவை, நிதிகளின் ஓட்டத்தில் மட்டுமல்ல, நிதி பயன்பாட்டிலும் இடையூறுகளை எதிர்கொள்கின்றன.

மோசமான திட்டமிடல் மற்றும் பட்ஜெட்டில் குறைந்த நிதி பிறவிளைவுகளையும் ஏற்படுத்துகின்றன: காலியிடங்கள், பன்முகத்தன்மை ஒதுக்கீட்டை பூர்த்தி செய்யும் அமைப்பின் திறனை பாதிக்கின்றன. புதிய பணியாளர்கள் போதிய பயிற்சியுடன் பணிபுரிந்தாலும், தற்போதுள்ள ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமையாக அது மாறியுள்ளது. காமன் காஸ் 2019 அறிக்கையின்படி, சராசரியாக காவல்துறையினர் ஒருநாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்கின்றனர்; அதே நேரம், கடந்த ஐந்து ஆண்டுகளில் 6.4% காவல்துறையினர் மட்டுமே புதிதாக பணிப்பயிற்சியை பெற்றுள்ளனர்.

ஆனால் நீதித்துறைக்கு ஒதுக்கீடுகளை உயர்த்துவது மட்டுமே பயனுள்ள முடிவுகளை தந்துவிடாது. திறன் பற்றாக்குறைகள், மோசமான திட்டமிடல், இடையூறுகள் மற்றும் நெகிழ்வான விதிமுறைகள் ஆகியன இன்னும் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

"நாம் நிதி முயற்சிகளை பற்றி சிந்திக்க வேண்டும். அதன் தாக்கம் நேரியல் அல்லாததாக இருக்கும்" என்று தக்ஷ் அமைப்பின் திட்ட இயக்குனர் சூர்யா பிரகாஷ் பி.எஸ். தெரிவித்தார். "பட்ஜெட் செயல்முறையை மேம்படுத்துவதற்கு, நீதித்துறையின் பல்வேறு அம்சங்களை பொறுத்து, பணியாளர், தொழில்நுட்பம் அல்லது நிலுவை போன்றவற்றை அடைய வேண்டியது குறித்த ஒரு பார்வை தேவைப்படும்.அத்தகைய பார்வை, அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைய குறைந்தபட்சம் ஐந்து வருடங்களாவது வைத்திருக்க வேண்டும்" என்றார் அவர்.

(சிங், இந்திய நீதி அறிக்கையின் முதன்மை ஆராய்ச்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.