பிருந்தாவனத்தில் விதவையர் இல்லம் கோவிட்-19ல் இருந்து தனது முதியவர்களை பாதுகாக்க ஆயத்தம்
மதுரா: உத்தரப்பிரதேசத்தின் பிருந்தாவனத்தில் உள்ள மா ஷர்தா ஆசிரமத்தில் உள்ள 72 வயதான உஷா, 2020 மார்ச் இரண்டாவது வாரத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து அறிந்ததும், 1.5 கி.மீ தூரத்தில் உள்ள ராதா ராமன் கோவிலில் நடைபெற்று வந்த பூஜையில் கலந்து கொள்வதை நிறுத்திக் கொண்டார். சுமார் 15 வருட தனது இந்த வழக்கத்தை முறித்துக் கொண்ட அவர், இப்போது தனது இல்லத்தின் அறையிலேயே பிரார்த்தனை செய்வதாகக் கூறினார்.
"சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவுதல், முகங்களை முகக்கவசம் கொண்டு மூடுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, கொரோனா நோய் பரவலை தடுக்கும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று உஷா தாசி, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். அவர் வசிக்கும் இல்லத்தில், 100 வயது கடந்தவர்களும் வசிக்கின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனத்தில் உள்ள காப்பகத்தில் உள்ள விதவைகள், பல ஆண்டுகளாக வசிக்கவும், பிரார்த்தனை செய்வதற்கும் இங்கு கூடுவது வழக்கம் - அவர்கள், குடும்பம் மற்றும் சமுதாயத்தில் இருந்து விலகி, ஆன்மீகம் வழியே நிம்மதியைத் தேடுகிறார்கள். பிருந்தாவனத்தில் உள்ள இல்லத்தில் இதுபோல், 10,000 க்கும் மேற்பட்ட விதவைகள் உள்ளதாக, சுலாப் இன்டர்நேஷனல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான அறிக்கை தெரிவிக்கிறது. 2005ம் ஆண்டில் 3,000 க்கும் அதிகமானவர்கள் என்பதைவிட இது கணிசமாக உயர்வு என்று தேசிய பெண்கள் ஆணையம் (என்.சி.டபிள்யூ) 2009-10 ஆய்வு மதிப்பீடு தெரிவிக்கிறது.
இங்குள்ள பெண்களில் பெரும்பாலோர் வயதானவர்கள் - இத்தகையவர்கள் தான், கோவிட்-19 வைரஸால் அதிக ஆபத்துக்கு உள்ளாகும் வாய்ப்பில் இருப்பவர்கள். கோவிட்-19 சிறைச்சாலைகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் போன்ற மக்கள் நெருக்கமாக வசிக்கும் ஒரு சூழலில் பரவினால், அது மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த தொற்றுநோய் இந்தியாவில் (ஏப்ரல் 3, 2020 மாலை 5:30 நிலவரப்படி ) 62 உயிர்களைக் பலி கொண்டிருக்கிறது; குறைந்தது 2547 பேருக்கு பரவி இருக்கிறது.
இத்தகைய சூழலுக்கு மா ஷாரதா ஆசிரமம் தயாராக உள்ளது என்று அதன் பராமரிப்பாளர் ராஜ்வீர் சிங் தெரிவித்தார். சோப்புடன் அடிக்கடி கைகளை கழுவுவதுடன், முகக்கவசங்கள் அணிய வேண்டியதன் அவசியத்தை பெண்களுக்கு உணர்த்துவதற்காக மருத்துவர்கள், 24 மணி நேர ஆம்புலன்ஸ் வசதி, வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனை அமர்வுகள் என, 15 பேர் கொண்ட குழு அவர்களிடம் உள்ளது.
மா ஷாரதா ஆசிரமத்தை சுலப் இன்டர்நேஷனல் பராமரிக்கிறது. பிருந்தாவனத்தில் விதவைகளுக்கென ஆறு அரசு இல்லங்கள் உள்ளன; சுமார் 650 குடியிருப்பாளர்கள் உள்ளதாக, இந்த இல்லங்களின் பொறுப்பாளரான சந்தோஷ் மிஸ்ரா கூறினார்.
இங்கு வசிக்கும் விதவைகளுக்கு ஒவ்வொரு மாதமும் 20 கிலோ கோதுமை மற்றும் 15 கிலோ அரிசி கிடைக்கும் என்றார் மிஸ்ரா. அரசின் இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டம், 40 வயதிற்கு மேற்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள விதவைகளுக்கு மாதத்திற்கு ரூ.300 ஓய்வூதியத்தை வழங்குகிறது. 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மாதத்திற்கு ரூ.500 பெறுகிறார்கள். ஊரடங்கு உத்தரவால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை தணிக்க, நோய் பரவுவதை குறைப்பதற்கு அரசு தனது நிதித்தொகுப்பில், விதவை பெண்களுக்கு மூன்று மாதத்திற்கு ரூ.1,000 வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இங்குள்ள அனைத்து ஆசிரமங்களிலும் தானியங்கள், சோப்பு, சானிடிசர், மருந்து மற்றும் முகக்கவசங்கள் போதிய அளவிற்கு இருப்பில் உள்ளன. அவற்றை வழங்குவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று மிஸ்ரா தெரிவித்தார்.
வயதானவர்களுக்கு சிறப்பு கவனம் தேவை
பிருந்தாவனில் உள்ள வயதான விதவைகளை தனிமைப்படுத்துவது அல்லது இல்லத்தினுள் தனிமைப்படுத்தி கண்காணிப்பது மிக முக்கியம். அவர்கள் சத்தான உணவை சாப்பிடுவது உறுதி செய்யப்படுவதாக, லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மூத்த மருத்துவர் வேத் பிரகாஷ் கூறினார். "பிருந்தாவனம் இல்லத்தில் முன்னெச்சரிக்கைகள் அவசியம். ஏனெனில் இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு இடமாகவும் இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள், இந்த கோயில் நகருக்கு குறிப்பாக கோடைகாலங்களில் திரண்டு வருகிறார்கள்," என்று அவர் கூறினார்.
மார்ச் 25, 2020ல் தொடங்கிய நாடு தழுவிய ஊரடங்கிற்கு முன்பு, மாவட்ட நிர்வாகமும் அரசு மருத்துவமனைகளும் பல குழுக்களை அமைத்து சுகாதார பரிசோதனைகளை நடத்தின. ஹோட்டல், மருத்துவமனைகள், கோயில்கள் மற்றும் அதிகம் பேர் கூடும் பிற இடங்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தியதாக, மதுராவின் தலைமை மருத்துவ அதிகாரி ஷெர் சிங், மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் சர்வக்யரம் மிஸ்ரா ஆகியோர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். வீதிகள் சுத்தம் செய்யப்பட்டதுடன், முகக்கவசம் அணியும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இல்லங்களில் அவர்கள் தொலைக்காட்சி செய்திகளை பார்த்து, நோயின் ஆபத்துகள் குறித்தும் அதன் தன்மை குறித்தும் தகவல்களை புதுப்பித்துக் கொள்கிறார்கள் என்று மாவட்ட மாஜிஸ்திரேட் கூறினார். வாராந்திர சோதனைகள் உள்ளன; குடியிருப்பாளர்களுக்கு சோப்பு மற்றும் சானிடிசர் வழங்கப்பட்டுள்ளன. வெளியில் இருந்து மக்கள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
நமது நிருபர் 2020 மார்ச் 22 அன்று, அதாவது நாடு தழுவிய ஊரடங்குக்கு முன்பு இந்த இல்லைத்தை பார்வையிடச் சென்றபோது, முதலில் சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். பின்னர் அவருக்கு ஒரு சானிடிசர் வழங்கப்பட்டது. எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்தவாரே, அங்கு வசிப்போரிடம் சற்று தள்ளி இருந்து சமூக விலகலுடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.
உத்தரபிரதேசத்தின் பிருந்தாவனத்தில் உள்ள மா ஷாரதா ஆசிரமத்தில் வசிக்கும் ஒருவர், மார்ச் 22, 2020 அன்று முகக்கவசத்தை எப்படி அணிய வேண்டும் என்பதை மற்றொருவருக்கு செய்து காட்டுகிறார்.
கோயில் செல்வதில்லை; 24 மணி நேர ஆம்புலன்ஸ் தயார்
வைணவ இந்துக்களுக்கு புனிதமான பிருந்தாவனத்தில் உள்ள ஏராளமான கோயில்களுக்கு பொதுவாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வழிபாட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இவை தற்போது குறைந்தபட்சம் ஏப்ரல் 15, 2020 வரை அனைத்து மத வழிபாட்டு தலங்களும் பொதுமக்கள் வருகை தடை செய்யப்பட்டு, மூடப்பட்டு உள்ளன.
"நகரத்தில் இருக்கும் மதத்தலைவர்கள், பார்வையாளர்கள் மற்றும் பீடாதிபதிகள் கூட கோயில்களுக்கு வரவில்லை அல்லது குழுக்களாக வர வேண்டாம் என்று பொதுமக்களிடம் முறையீடு செய்யுமாறு நாங்கள் கேட்டுள்ளோம்" என்று மருத்துவ அதிகாரி சிங் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
மா ஷாரதா ஆசிரமத்திலும், அரசு நடத்தும் இல்லங்களிலும் உள்ள பெண்கள் கோயிலுக்குச் செல்ல வேண்டாம் அல்லது பிரார்த்தனை செய்வதற்காக இல்லத்திற்குள் கூட்டமாக சேரக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். "அதற்கு பதிலாக அவர்கள் தங்கள் அறைகளில் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்" என்று அரசு இல்லங்களின் பொறுப்பாளர் மிஸ்ரா கூறினார்.
மா ஷாரதா ஆசிரமத்தில், எந்த நேரத்திலும் இயக்க ஆம்புலன்ஸ் தயாராக உள்ளது. அங்கு இதுவரை யாரும் நோய்வாய்ப்படவில்லை என்று இல்லத்தினரை மருத்துவ பரிசோதனைகள் செய்த மருத்துவர் கோவிந்த் குப்தா தெரிவித்தார். "இந்த நோயின் அறிகுறிகளை பற்றி நாங்கள் அவர்களிடம் [குடியிருப்பாளர்களிடம்] கூறியுள்ளோம், அவர்களுக்கு ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு தெரிவிக்கும்படி கூறியிருக்கிறோம்" என்றார் அவர்.
சுகாதாரமற்ற, ஆபத்தான நிலைமைகள்
கோவிட் 19 வைரஸுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் சமூக இடைவெளி கடைபிடித்தலையும், சுகாதாரத்தையும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால் பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளபடி, பிருந்தாவனில் தங்குமிடம் நெரிசலானது மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு இல்லாதது.
அரசு அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் தங்குமிடம் மற்றும் வாடகை வசிப்பிடங்களில் வசிக்கும் 216 பெண்களுடன் நேர்காணல்களின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையத்தின் 2009-10 ஆய்வில் மேலே காணப்பட்டவை வலிறுத்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. போதுமான உள்கட்டமைப்பு இல்லாதது, “முக்கியமாக குளியலறைகள் மற்றும் கழிப்பறைகளில் தண்ணீர் செல்வது” மற்றும் வீடுகளில் கழிப்பறைகளின் சுகாதாரமற்ற நிலை ஆகியவற்றை, இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
மேலும், அறைகள் மற்றும் தங்குமிடங்களில் கூட்டம் அதிகமாக இருப்பது “ஆரோக்கியமற்ற மற்றும் சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகளுக்கு வழிவகுக்கிறது” என்று ஆய்வு தெரிவித்துள்ளது. மா ஷாரதா ஆசிரமத்தில், ஒவ்வொரு அறைக்கு இரண்டு அல்லது மூன்று பெண்கள் தங்கியிருந்தார்கள்.
ஒன்றுபட்டு இருப்பது "நற்பண்பு" என்றாலும், இந்த இல்லங்களின் நிலை “பரிதாபகரமானது” என்று, பிருந்தாவனில் உள்ள விதவைகளின் நிலை குறித்த பல ஆய்வுகளை நடத்தி நவம்பர் 2017 மதிப்பாய்வு செய்த தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம், பிருந்தாவனில் உள்ள இல்லங்களில் விதவைகள் "கண்ணியத்துடன் வாழ" உத்தரவிடுமாரு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், மத்திய மற்றும் உத்தரப்பிரதேச அரசுகள், "விதவையர் மறுவாழ்வுக்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.
கோவிட் 19 நெருக்கடியானது நீண்ட காலத்திற்கு இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
(பரத்வாஜ் மற்றும் ஷர்மா, பான்-இந்தியா நெட்வொர்க்கின் 101 ரிப்போர்ட்டர்ஸ்.காமின் ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர்கள்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.