பழங்குடி சிறுமியருக்கான ஒடிசாவின் உறைவிடப்பள்ளிகளில் கல்வி ஒரு செலவுக்குரியதாகிறது
ராயகடா, மல்கங்கிரி (ஒடிசா): ஒரு மரத்தின் நிழலில் பாறை ஒன்றின் மீது அமர்ந்து, நண்பர்கள் மொமிதா பத்ரா மற்றும் கர்மா மண்டலி இருவரும் தங்கள் பள்ளியின் முதல்நாள் நினைவுகளை எண்ணிப்பார்த்து சிரித்தனர். அவர்கள் இருவரும் ஐந்து வயதாக இருக்கும் போது, அந்த கிராமத்தில் ஏற்கனவே பள்ளி சென்ற சகோதரர்கள், வயதாகிவிட்டவர்களிடம் கல்வியின் நன்மை பற்றி கேட்டிருக்கிறார்கள். இருவரும் தங்களை பள்ளிக்கு அனுப்பும்படி கேட்டபோது, அவர்களது பெற்றோர் உறுதியாக மறுத்துவிட்டனர்.
அருகாமையில் இருக்கும் ஒரே பள்ளியும் பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள உறைவிடப் பள்ளியாக இருந்தது. "நாங்கள் சில துணிமணிகளை எடுத்துக் கொண்டு, ஒருநாள் அந்த பள்ளிக்கு சென்றுவிட்டோம்," என்று சிரித்தபடி பத்ரா கூறினார்.“பள்ளியின் சமையல்காரர் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் எங்களை அனுமதித்தார்; ஆனால், பின்னர் எங்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்" என்றார் அவர். இப்பொழுது 14 வயதுடைய அந்த சிறுமிகள், இடைநிலைப் பள்ளி வாரியத்தேர்வுக்கு செல்ல சில மாதங்களே உள்ளன. தெற்கு ஒடிசாவின் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் உள்ள தொலைதூர கிராமமான பொடிகுடாவுக்கு விடுமுறைக்கு வந்துள்ளனர். விடுதி தான் அவர்களின் வீடாக இருந்து வருகிறது.
மல்கங்கிரி மாவட்டம் பொடிகுடா, ஒடிசாவில் 13 குறிப்பிடத்தக்க பாதிக்கும் பழங்குடி குழுக்களில் (பி.வி.டி.ஜி) ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போந்தாஸ்களின் தாயகமாகும். இங்குள்ள பல பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு பள்ளிக்கல்வியை மறுக்கவில்லை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இச்சமூகத்தில் பெண் கல்வியறிவு 22% ஆக இருந்தது).
சுமார் 160 கி.மீ தூரத்தில், ஒரு தாய் தனது மகளின் மரணச்செய்தி கேட்டு கதறி அழுதார். 14 வயதுள்ள அந்த சிறுமி, சிகாபாலியில் உள்ள அரசு நடத்தும் உறைவிடப்பள்ளியில் சடலமாக கிடந்தார். “அது ஒரு பெண்களுக்கான பள்ளி, ஒரு ஆசிரம பள்ளி. அது பாதுகாப்பாக இருக்கும் என்று நாங்கள் நினைத்து என் மகளை அங்கே படிக்க அனுப்பினோம், ”என்று தனது கண்ணீரை புடவை தலைப்பால் துடைத்தபடி அவர் கூறினார். பெங்காலி வம்சாவளியை சேர்ந்த இந்த குடும்பம், ஒடிசாவில் பல தலைமுறைகளாக வசித்து வருகிறது.
மல்கங்கிரி போலீசாரின் கூற்றுப்படி, அந்த சிறுமி தலைமை ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால், தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ஆனால், தங்களது மகள் கொலை செய்யப்பட்டுவிட்டதாக, பெற்றோர்கள் திட்டவட்டமாக கூறுகின்றனர். எனினும், உண்மையை அல்லது நீதி கிடைக்க, தங்களால் எதுவும் செய்வதற்கில்லை என்று அவர்கள் கவலையோடு கூறினர்.
பல தசாப்தங்களாக, ஒடிசா அரசின் உறைவிடப்பள்ளிகள் தொலைதூர பழங்குடியின குக்கிராமங்களுக்கு பள்ளி கல்வியை எடுத்துச் செல்வதில் உள்ள சவாலுக்கு விடையாக உள்ளன. ஒடிசாவில் பெண்கள் கல்வி வாய்ப்புகளை இழந்து, வீட்டை நடத்தும் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மாவோயிஸ்ட் இயக்கத்தில் இளைஞர்கள் சேர்ந்துவிடாமல் தடுக்கவும் இக்கல்வி உதவுகிறது.
கடந்த 2016-17இல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 550,000 சிறுமிகள், அரசின் உறைவிடப்பள்ளியில் இருந்தனர். இந்த விடுதிகளில் ஏராளமான எண்ணிக்கையில் இறப்புகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்ததாக புகார்கள் உள்ளன. மயூர்பஞ்சில் 100 சிறுமிகள் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக, 2017இல்15 கி.மீ தூரம் நடந்து சென்று கலெக்டரிடம் புகார் அளித்தனர். ஜூலை 2019 இல் காந்தமால் மாவட்டத்தில், சிறுமி கர்ப்பமாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. அண்மையில் அங்குல் மாவட்டத்தில் 250 மாணவியர் உணவு மற்றும் சுகாதாரம் இல்லாததால் விடுதிகளை காலி செய்தனர்.
மல்கங்கிரி மற்றும் ராயகடா மாவட்டங்களில் ஐந்து பள்ளிகள் மற்றும் ஏழு கிராமங்களை, நமது நிருபர் 2018 டிசம்பரில் 10 நாட்கள் பயணமாக ஒடிசாவின் உறைவிடப்பள்ளிகளில், சிறுமிகளுக்கான நிலைமைகளை ஆராய்ந்தார்.
பல மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் பேசியதில், பின் தொடர்ந்ததில், பழங்குடி சிறுமியரின் கல்வி மீது அரசின் கவனம், முதலீடுகள் இருந்தபோதிலும், உறைவிடப்பள்ளிகள் மோசமாக இயங்குகின்றன மற்றும் துஷ்பிரயோகங்கள் அதிகமுள்ளன என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
முதல் தலைமுறை மாணவர்களின் அனுபவம் தனிமை மற்றும் பெரும்பாலும் பரிதாபகர சூழலில் இருப்பது, தனிப்பட்ட வளர்ச்சிக்கு உகந்ததல்ல. இலவச கல்வி மற்றும் உறைவிடம் ஆகியவற்றிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்; வசதி மற்றும் சேவை குறைபாடு இருந்தால் புகார் செய்யக்கூடாது என்று மாணவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்துள்ளனர் - இது நாங்கள் பல இடங்களில் கண்டறிந்தோம்.
பெண்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் குறைகளை அச்சமின்றி பகிர, நிவாரணம் அல்லது நீதியை நாடுவதற்கு மிகக்குறை வழிகளே உள்ளன. தரமில்லாத வாழ்க்கைத்தரம் மற்றும் கல்வியை வழங்குவதன் மூலம், உறைவிடப்பள்ளிகள் வர்க்கம் மற்றும் சாதிப்பிளவு, பாகுபாடு ஆகியவற்றை நிலைநிறுத்தி வருகின்றன - ஒடிசாவின் கல்வி சவால்களுக்கான இது சரியான பதில் அல்ல என்று நிபுணர்கள் கருதினர்.
"முன்னோடி" உறைவிடப்பள்ளி
ஒடிசாவின் ஒட்டுமொத்த பெண் கல்வியறிவு விகிதம் 64% என்பது இந்திய சராசரி 65% உடன் ஏறக்குறைய சமமாக உள்ளது. கடந்த இரு தசாப்தங்களாக நிலையான வளர்ச்சி காணப்பட்டாலும், ஒடிசாவின் பட்டியலின பழங்குடியினர் இடையே விகிதம் 41.2% என குறைவாக உள்ளது.
இந்த இடைவெளியை அரசும் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கான நிறுவனமயமாக்கப்பட்ட கல்வி முறையை முன்வைத்து, உறைவிடப்பள்ளிப்படிப்பின் முன்னோடி என்று தன்னை அறிவித்துக் கொண்டது. 2016-17 ஆம் ஆண்டில், 828 கிராமப் பள்ளிகளை, குறிப்பாக பழங்குடியினர் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில், குறைந்த மாணவர் சேர்க்கை காரணமாக அரசு மூடியது. அதற்கான நிதியை உறைவிடப் பள்ளிகளுக்கு ஒதுக்கியது. இதன்மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டை விட்டு உறைவிடப்பள்ளிக்கு அனுப்பும் கட்டாயம் உருவானது.
உறைவிடப்பள்ளி விடுதிகளில் எஸ்சி / எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த 3,30,000 சிறுமியர் இருப்பதாக பட்டியலினத்தவர் (எஸ்சி) / பட்டியலின மலைவாழ் மக்கள் (எஸ்டி) மேம்பாட்டுக்கான மாநில அமைச்சர் ஜகந்நாத் சரகா, 2019 ஜூலையில் சட்டசபையில் அறிக்கையில் தெரிவித்தார். குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவைக்கு அவர் உறுதி அளித்தார்.
"நல்ல கல்விக்கு விடுதிகள் மட்டுமே சிறந்த இடம் என்று பழங்குடி சமூகங்கள் மத்தியில் ஒரு எண்ணம் பொதிந்துள்ளது," என்று, மல்கங்கிரியை சேர்ந்த இளைஞர் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான இலாப நோக்கற்ற மையத்தின் (சி.ஒய்.எஸ்.டி) கல்வி ஒருங்கிணைப்பாளர் பிகாஷ் குமார் தண்டசேனா கூறினார். "ஆனால் உண்மையில் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை... அச்சமான சூழல் உள்ளது. இதன் விளைவாக பல சம்பவங்கள் நடக்கின்றன" என்றார் அவர்.
கடந்த 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுக்கு இடையில் உறைவிடப்பள்ளிகளில் 155 இறப்புகள், 16 பாலியல் அத்துமீறல் வழக்குகள் ஒடிசாவில் பதிவானதாக, 2015 ஆகஸ்ட்டில் தி எகனாமிக் டைம்ஸ் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை கேள்விக்கு பதில் கிடைக்கப் பெற்றது. இதற்கு சில மாவட்டங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.
தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பல ஆண்டுகளாக பதிவாகியுள்ளன - 2010ஆம் ஆண்டில் ஹெல்ப்லைன் வசதி அமைக்க உறைவிட பள்ளிகளுக்கு அரசு கட்டாயப்படுத்தியது. பெண்கள் விடுதிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை 2017 ஆம் ஆண்டில் அரசு வெளியிட்டது. மேலும் எஸ்சி / எஸ்டி பள்ளி மாணவர் விடுதிகளில் இவற்றைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமூகத்தின் வளர்ச்சியைக் கவனிப்பதற்காக 1976 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அரசு அமைப்பான போந்டா வளர்ச்சி முகமையின் (பி.டி.ஏ) திட்ட அலுவலர் தேபேந்திர சந்திர மகரி, தமது அலுவலகத்தில் ஒரு தடிமனான பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தை வெளியே எடுத்தார். இது "எஸ்.டி / எஸ்சி மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள பள்ளிகள் மற்றும் விடுதிகளில் மாணவர்களின் பாதுகாப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான ஒடிசா அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள்”. இது 2014 ஆம் ஆண்டில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. அரசுக்கு அப்போதைய ஆணையர் மற்றும் செயலாளர் எழுதிய கடிதத்தில், “சமீபகாலமாக பல உறைவிடப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அத்துமீறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன” என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (POCSO) சட்டம் 2012இல் பள்ளி மற்றும் விடுதி வளாகங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஊழியர் - மாணவர்கள் இடையே தொடர்பு ஆகியன தொடர்பாக கட்டாய அறிக்கை மற்றும் பதில் குறித்த தகவல்களை, இந்த வழிகாட்டுதல்களில் உள்ளடக்கியது. பிடிஏ-வின் கீழ் வந்த கல்வி வளாகங்கள், அந்த வழிமுறைகளை பின்பற்றுமாறு கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மகாரி கூறினார்.
ஆயினும்கூட, 2019 ஜனவரியில் தேசிய சிறுவர் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) இருந்து பெற்ற அறிவிப்பின் மூலம் மாநிலத்தில் நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது என்று தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி தெரிவித்துள்ளது. ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள உறைவிடப் பள்ளிகளில் அண்மையில் சிறார் பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகள் குறித்து ஆணையம் வேதனை தெரிவித்துள்ளது. அத்துமீறல் என்ற இத்தகைய வழக்கமான அத்தியாயங்கள், குடும்பங்களில் இருந்து பிரிந்து வாழும் குழந்தைகளின் நல்வாழ்வு குறித்த சந்தேகத்தை உருவாக்குகின்றன.
ஒடிசாவில் பழங்குடி சமூகங்களுடன் இணைந்து செயல்படும் இலாப நோக்கற்ற அக்ரகமியின் இணை நிறுவனர் வித்யா தாஸ், நிலைமை பல மட்டங்களில் ஆபத்தானது என்றார். "பழங்குடியின குழந்தைகள் ஒரு சுதந்திரமான சூழலில் கற்க முடியாது என்று எங்களுக்கு ஒரு அதிகாரி சொன்னார், அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடுள்ள சூழ்நிலை தேவை; அங்கு தான் அவர்களால் கற்றுக்கொள்ள முடியும். எனவே அவர்களை ஒரு விடுதியில் தங்குகின்றனர்," என்று அவர் கூறினார். “பல குழந்தைகள் ஓடிவிடுகிறார்கள், ஆனால் அவர்கள் வெளியே வரும்போது பேசுவதில்லை. பல சம்பவங்கள் உள்ளன.நாம் அறிந்து கொள்வது ஒரு பெரிய பனிப்பாறையின் முனை மட்டும் தான். சில மாதங்களுள் அவர்கள் மவுனம் சாதிக்கிறார்கள்” என்றார்.
புகார்கள் குறைவு
கடந்த 2018 டிசம்பரில், பள்ளி வகுப்பின் கடைசி நாளில் சிகபாலி ஆசிரம பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் முகத்தில் பிரகாசத்துடன் சல்வார் - கமீஸ், பிராக்ஸ் அணிந்து உற்சாகத்துடன் மாணவியர், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு தங்கள் பாதுகாவலர்கள் அழைத்துச் செல்வார்கள் என்று காத்திருந்தனர்.
சிகபாலி ஆசிரம பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவியர், டிசம்பர் 2018 கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல தங்கள் பாதுகாவலர் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். அந்த ஆண்டில் தான் 14 வயது மாணவி விடுதியில் இறந்தார்.
ஆசிரம பள்ளிகள் என்பது அரசு நடத்தும் உறைவிடப் பள்ளிகளாகும். அவை பட்டியலின பழங்குடியின சிறுவர் சிறுமிகளுக்கு இடைநிலைக் கல்வியை வழங்குகின்றன. இந்த முயற்சிகளுக்கு துணைபுரியும் வகையில், மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் 1990 ஆம் ஆண்டில் (ஒடிசா உட்பட 22 மாநிலங்களில் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் செயல்பட்டு வருகிறது) மாநிலங்களுக்கு ஆசிரம பள்ளிகளை நிர்மாணிப்பதற்கான மானிய உதவிகளை வழங்குவதற்காக ஒரு திட்டத்தைத் தொடங்கியது.
பதினான்கு வயது கமலேஸ்வரி துர்கா, லாவெண்டர் நிற சால்வையை போர்த்தியவாறு, தனது சகோதரரின் வருகைக்காக காத்திருந்தார்.அவர் துர்வா பழங்குடியினத்தை சேர்ந்தவர். தனது வயதிற்குட்பட்ட பெண்கள் யாரும் தனது வீட்டருகே இல்லை - அவர்கள் அனைவரும் திருமணமானவர்கள் என்றார். “படிக்க வேண்டும் என்பது எனது சொந்த உந்துதலாகும். நான் என் அம்மாவையும் சகோதரனையும் பெருமைப்படுத்த விரும்புகிறேன், ”என்றவாறு அவர் புன்னகை புரிந்தார். குழந்தையாக இருந்த போதே துர்கா தனது தந்தையை இழந்தார்.
இறந்த 14 வயது சிறுமி, அவரது வகுப்புத் தோழி ஆவார். அவர் எப்போதாவது தான் பேசுவர் அமைதியாகவே இருப்பார் என்று, துர்கா நினைவு கூர்ந்தார். அவர் எப்படி இறந்தார் என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை என்று துர்கா கூறினார் - பள்ளி முதல்வர் எப்போதாவது தவறாக நடந்து கொண்டாரா அல்லது தவறாகப் பேசினாரா என்று காவல்துறை அவர்களிடம் கேட்டது; அவர்கள் இல்லை என்று கூறியிருந்தார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு தங்களுக்கு எந்த ஆலோசனையும் பாதுகாப்புப் பயிற்சியும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் மனோரமா ஸ்வைன் இதை எதிர்கொண்டார். சைல்ட்லைன் இந்தியா அறக்கட்டளையின் அதிகாரிகள் ஒரு அமர்வுக்கு வருகை தந்ததாகவும், குழந்தைகள் மீதான அத்துமீறல் குறித்த தகவல்களை உள்ளடக்கிய வாழ்க்கைத் திறன் அமர்வுகள் தவறாமல் வழங்கப்படுகின்றன என்றும் கூறினார். "நாங்கள் தொடர்ந்து பெண்கள் பற்றி கவலைப்படுகிறோம்," ஸ்வைன் கூறினார். "ஆசிரியர்களும் ஊழியர்களும் தங்கள் வேலையைச் சரியாகச் செய்தால் தான் விடுதிகளை நன்றாக இயக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்" என்றார். இச்சம்பவத்தில் இருந்து, பள்ளிகளில் கடுமை கூடிவிட்டது. முன் அனுமதியின்றி ஆண்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
துர்காவும் அவரது நண்பர்களும் ஏதேனும் தவறு நடந்தால் அல்லது விஷயங்கள் கடினமாகிவிட்டால் தங்களின் பெற்றோர் மீது நம்பிக்கை வைத்து கூற தயாராக இல்லை என்றனர்.
இந்தியா ஸ்பெண்ட் குழு பார்வையிட்ட பல ஆசிரம பள்ளிகளைப் போலவே, இங்கும் தங்குமிடங்களில் மெத்தை இல்லை. சிறுமிகளே தங்களது துணிகளை சுவைத்து, அறைகளை பெருக்கி சுத்தம் செய்ததாகக் கூறினர். ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டீர்களா என்று கேட்டபோது, அவர்கள் மீண்டும் மீண்டும் "எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்று சொன்னார்கள்.
30 நிமிட உரையாடலின் முடிவில், எந்தவொரு துன்புறுத்தலையும் எதிர்கொண்டால் யார் மீது நம்பிக்கை வைத்து கூறுவீர்கள் என்று கேட்டபோது, துர்கா அமைதியாக சென்றுவிட்டார். அவர் தலையைக் குனிந்து, கைகளை வெறித்துப்பார்த்தார்; அமைதியாக வேண்டாம் என்று சொல்லுவதற்காக இல்லை என்பது போல் தலையை ஆட்டினார்.
நமது நிருபர் பேட்டி கண்ட ஆசிரம பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களில் இருவர் மட்டுமே தாங்கள் ஹெல்ப்லைனை பயன்படுத்தியதாகக் கூறினர்; அதுவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை பற்றிய புகாராகும். அவர்கள் அனைவரும் விடுதியில் கிடைக்கும் லேண்ட்லைன் தொலைபேசி பற்றி அறிந்திருந்தனர்; வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே இதை பயன்படுத்தினர். எல்லாம் சரியாகிவிட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
பிற பகுதிகளில், ராயகடா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவியர் தாங்கள் ஒருபோதும் பெற்றோரிடம் புகார் செய்யவில்லை என்று கூறினர். "நாங்கள் விடுதியில் இருந்து வெளியேறுவதற்காக பொய் சொல்வதாக பெற்றோர் நினைக்கின்றனர்," என்று 15 வயதான நித்ரவாடி நுண்ட்ரூகா சிரித்தார். அவருடன் இருந்த ஐந்து சிறுமியரும் இதை ஒப்புக்கொண்டனர்.
கல்வியின் தரம்
கடந்த 2017இல், 14 டோங்ரியா கோந்த் சிறுமியர் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, “பின்தங்கிய” சமூகத்தினர் மத்தியில் புதிய வரலாற்றை உருவாக்கியதாக, ஊடகங்கள் பாராட்டின. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பழங்குடியினரில் 3% பெண்களே கல்வியறிவு பெற்றவர்கள்.
கடந்த 2017இல், 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற டோங்ரியா கோந்த் சமூகத்தைச் சேர்ந்த 14 சிறுமிகளில் ஒருவரான பூர்ணிமா ஹுயிகா, அவர்களில் சிறந்த தேர்ச்சியை பெற்றவர். தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து அவர் ராயகடாவில் உள்ள ஏக்லவ்யா மாடல் ரெசிடென்ஷியல் பள்ளியில் (ஈ.எம்.ஆர்.எஸ்) சேர்ந்தார்.
பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் 1997 ஆம் ஆண்டில் பட்டியலின பழங்குடியின மாணவர்களுக்கு இலவச, தரமான கல்வியை வழங்கும் நோக்கில் ஈ.எம்.ஆர்.எஸ் தொடங்கப்பட்டது. இதில் சேர மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்தியா ஸ்பெண்ட் டிசம்பர் 2018 இல் பயணம் செய்தபோது, பூர்ணிமா தயக்கத்துடனும் பரபரப்புடனும் இருந்தார்; தனது மேல்நிலை இரண்டாம் கட்ட தேர்வுகளுக்குத் தயாரானார். "நான் இதுவரை பல நேர்காணல்களை வழங்கி இருக்கிறேன்," என்றபடி சிரித்த அவர், தனது சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை அறிமுகம் செய்தார். பழங்குடி சமூக குழந்தைகளுக்காக ஒரு பள்ளியில், அவர்கள் இன்னும் தனித்தே இருந்தனர்.
பிங்கி வடகா மற்றும் மினோட்டி நிஷிகா, இருவரும் 14 வயது கொண்டவர்கள். பிஸ்ஸாம் கட்டாக் தொகுதியைச் சேர்ந்தவர்கள். தங்கள் கிராமங்களைச் சேர்ந்த பெரும்பாலான குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறிவிட்டனர்; ஆயினும் இவர்கள் இருவரும் இன்னமும் விடுதியில் தொடர விரும்புவதாக கூறினர். “நாங்கள் படிக்க விரும்புகிறோம்; அதனால் இங்கேயே இருக்கிறோம், ”என்று வடகா கூறினார். “நான் கிராமத்தில் இருக்கும்போது, கிராமத்தைச் சேர்ந்தவள். நான் எல்லா விதிகளையும் மரபுகளையும் பின்பற்றுகிறேன். நான் வெளியில் இருக்கும்போது, அதற்கேற்ப மாறிக் கொண்டு வெளியூருக்கு தக்கபடி இருக்கிறேன்” என்றார் அவர்.
ராயகடாவில் உள்ள ஏக்லவ்யா மாடல் ரெசிடென்ஷியல் பள்ளியில் படிக்கும் பிங்கி வடகா (இடது) மற்றும் மினோட்டி நிஷிகா இருவரும் டோங்ரியா கோந்த் சமூகத்தை சேர்ந்தவர்கள்.2011 மக்கள் தொகையின் படி இச்சமூகத்தில் 3% பெண் கல்வியறிவு உள்ளது.
சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு தொலைபேசி உரையாடலின் போது, பள்ளி முதல்வர் சந்தோஷ் குமார் பத்ரா, ஹூய்கா பிரிவில் தேர்வெழுதிய 61 மாணவியரில் 20 பேர் தங்கள் மேல்நிலைத் தேர்வுகளுக்குத் தேர்ச்சி பெற்றதாகக் கூறினார். ஆனால், ஹுயிகா அவர்களில் ஒருவர் அல்ல.
ஆசிரியர்களின் பற்றாக்குறைதான் இதற்கு காரணம் என்று பத்ரா கூறினார். ஹுயிகாவின் பிரிவில் இயற்பியல், கணிதம், தாவரவியல் மற்றும் ஒடியா பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. "இந்த காலியிடங்களை நிரப்புமாறு கடிதங்களை அனுப்பி எங்களுக்கு அலுத்துவிட்டது," என்று பத்ரா கூறினார். "நாங்கள் கேந்திர வித்யாலயா, நவோதயா வித்யாலயாவுடன் இணையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களை போல் அல்லாமல் ஏக்லவ்யா பள்ளிகளில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் மட்டுமே உள்ளனர் - எனவே கூடுதல் முயற்சியும் ஆதரவும் தேவை. ஆனால் அது இல்லை” என்றார்.
(அடிக்கடி பணியிட மாற்றத்தை சந்திக்கும் அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி தடைபடக்கூடாது என்பதற்காக தடையற்ற தரமான கல்வியை வழங்கும் நோக்கில் கேந்திரியா வித்யாலயாக்கள் தொடங்கப்பட்டன. ஆனால் அதில் பிற பிரிவினருக்கும் சேர்க்கை நடக்கிறது. கட்டணம் தொடர்ந்து மானியமாக வழங்கப்படுகிறது. நவோதயா பள்ளிகள் கிராமப்புற குழந்தைகளுக்கு இலவச தரமான கல்வியை வழங்குபவை. இதற்கான சேர்க்கை, தகுதிச்சோதனை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது).
ஆசிரியர்கள் ஒப்பந்தத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டனர்; அவர்களுக்கு குறைந்த சம்பளம் மற்றும் வேலை பாதுகாப்பு இல்லை என்பதே மிகப்பெரிய தடையாக இருந்தது என்று பத்ரா கூறினார். இது, அவர்களை விரக்தியடையச் செய்து, அவர்களின் அணுகுமுறையில் தளர்த்தியது. ஏக்லவ்யா பள்ளிகளுக்கான நிதி மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் வழங்கப்பட்டு, அதை கண்காணிப்பது மாநில அரசின் பொறுப்பாகும். ஒட்டுமொத்தமாக உறைவிட பள்ளிகளின் கண்காணிப்பு சரியில்லை; தரமற்றதாக உள்ளது என்பதை பார்வையாளர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
"கற்றல் மிக மோசமாக இருப்பதை நாங்கள் கண்டோம்," என்ற தாஸ், “ உறைவிடப்பள்ளிகள் மிகவும் மோசமாக இருந்தன. குறைந்தபட்சம் குழந்தைகள் [எழுத] படிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதுவும் இல்லை. கற்பித்தல் தரம் குறைந்துள்ளது” என்றார்.
சி.ஒய்.எஸ்.டி.-இன் தண்டசேனாவின் கூற்றுப்படி, மாணவர்கள் பாடங்களை புரிந்து கொள்ள முதலில் ஒடியாவைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சவாலை எதிர்கொள்கின்றனர். "இதனால் அவர்கள் வயதுக்கேற்றா கல்வியைப் பெறத் தவறிவிடுகிறார்கள். கைவிடப்படுவதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்" என்றார்.
அவர்கள் மாநில மொழியைக் கற்றுக்கொண்டவுடன், அவர்கள் தங்கள் சொந்த பழங்குடி மொழிகளை மறந்து விடுகிறார்கள் அல்லது அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று விரும்புகிறார்கள். "அவர்கள் தங்கள் சொந்த கிராமங்களின் சூழ்நிலைகளைப் பார்க்கத் தொடங்குகிறார்கள்; அவர்கள் முற்றிலும் அந்நியப்படுகிறார்கள்" என்று தாஸ் கூறினார்.
பொருத்தமற்ற சூழல்
ராயகடா மாவட்டத்தின் கொல்னாரா ஒன்றியத்தில் உள்ள சிறுமியருக்கான முதன்மை சேவாஷ்ரம் பள்ளியில், மாணவியர் தரையில் அமர்ந்திருந்தனர்’ டிசம்பர் மாதத்தின் குளிர்ச்சியை தாங்கிக் கொள்ள அவர்களுக்கு ஸ்வெட்டர் அல்லது மழைக்கு குடையோ இல்லை. "நாங்கள் எதிர்கொள்ளும் சவால் சின்னஞ்சிறு குழந்தைகளிடம் இருந்து தான். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர் இங்கு சேர்க்கிறார்கள்,” என்று பள்ளி சமையல்காரரும், பராமரிப்பாளருமான ஜெயந்தி ஹப்ரிகா கூறினார். “அவர்களுக்கு மொழி புரியவில்லை. ஒரு தட்டை எப்படி பிடிப்பது அல்லது குளிப்பது என்று அவர்களுக்கு தெரியவில்லை. புதிதாக எல்லாவற்றையும் அவர்களுக்கு நாம் கற்பிக்க வேண்டும்” என்றார்.
ராயகடா மாவட்டம் கொல்னாரா ஒன்றியத்தில் உள்ள சிறுமியருக்கான ஆரம்ப ஆசிரம பள்ளியில், மழை பெய்யும் டிசம்பர் நாளில் ன் குளிரில் தரையில் அமர்ந்து படித்த குழந்தைகள். அவர்களுக்கு ஸ்வெட்டரோ அல்லது குடைகளோ கிடையாது.
தலைமை ஆசிரியர், 52 வயதான பிரமோத் குமார் பத்ரா, உணவு, சீருடை முதல் கழிப்பறை வரை அனைத்து செலவுகளுக்கும் ஒரு மாணவருக்கு மாதத்திற்கு ரூ.800ஐ பள்ளி பெறுகிறது என்றார். "சில மாணவர்களுக்கு [அவர்களின் வீட்டுக்கு] அருகிலேயே பள்ளிகள் உள்ளன; ஆனால் [இலவச] உணவு மற்றும் பிறவசதிகள் காரணமாக தங்கள் குழந்தைகளை பெற்றோர் இங்கு சேர்க்கிறார்கள்," என்று அவர் கூறினார். இங்கு 140 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், ஒரு விடுதி வார்டன் உள்ளார்.
குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டால் (பெற்றோர் விருப்பத்துடன் அல்லது வேறுவிதமாக இருந்தாலும்) கலாச்சார சூழ்நிலைகள் அவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்போது, கலாச்சார மற்றும் உளவியல் எழுச்சிகள் தவிர்க்க முடியாதவை என்று தாஸ் கூறினார். "ஆனால் கவனிக்க வேண்டியது என்னவென்றால், [பள்ளிகள்] மிகவும் மோசமாக இயங்குகின்றன," என்று அவர் கூறினார்.“அவை ஒரு தொண்டு அமைப்பு போல் இயங்குகின்றன. குழந்தைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. அதனால்தான் அவர்கள் இந்த பள்ளிகளைப் பராமரிக்காமல் உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள். உறைவிடப்பள்ளிகளில் அவர்களுக்கு வழங்கப்படும் நிதி மிகக் குறைவு. பிற அத்தியாவசிய தேவைகளும் ள்ளன" என்றார்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, வாழ்க்கைத்திறன் கல்விக்காக ஒரு மாணவியர் ஆசிரமப் பள்ளிக்குச் சென்றதை தண்டசேன நினைவு கூர்ந்தார். அப்போது மதியம் 2 மணி வரை மாணவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்பதை அவர் கவனித்தார்.
ராயகடா மாவட்டம் முனிகுடா நகரில் இருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 15 வயதான நித்ரவாடி நுண்ட்ரூகா, தண்ணீர் வசதி இல்லாததால் ஆசிரம பள்ளியில் இருந்து வெளியேறியதாகக் கூறினார். பள்ளி புத்தகங்கள் வழங்கவில்லை; எனவே புத்தகம் வாங்குவதற்கு பணம் சம்பாதிப்பதற்காக அவ்வப்போது கட்டுமான தளங்களில் கூலி வேலையை செய்துள்ளார்.
ஆனாலும், அவர் இதுபோன்ற சிறிய தடைகளை விலக்கினார். “நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நாம் என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியமல்ல, குறைந்தபட்சம் எங்களால் படிக்க முடிகிறது, ”என்று நுண்ட்ரூகா கூறினார். “எங்கள் தாய்மார்களுக்கு படிக்க இயலாது. அதனால் அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியாது. குறைந்தபட்சம் எங்களால் கடினமாக உழைத்து படிக்க முடியும்” என்றார்.
அவரது கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் பலர் ஊக்கம் அடைந்தாலும் அல்லது நிறுத்தப்பட்டபோதும், நித்ராவடி பகல் நேர மாணவியாக தொடர்ந்து படித்து வருகிறார். “வீட்டுப் பொறுப்புகளுடன் படிப்பிற்கான நேரத்தை நிர்வகிப்பது கடினம். ஆனால் நான் முயற்சி செய்கிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.
வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் 13 வயது சாவித்ரி சரகா, தனது ஆசிரம பள்ளியில் இருக்கும் ஒரேயொரு போர்வெலில் தண்ணீருக்கு பெரும் கூட்டம் இருக்கும் என்றார். எனினும் அவர் அங்கே தொடர்ந்து படித்தார்.
முன்னோக்கி செல்லும் வழி
முனிகுடாவில் இருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 21 வீடுகளைக் கொண்ட கிராமமான படங்பத்ராவில் இருந்த ஆரம்பப்பள்ளி 2018இன் பிற்பகுதியில் மூடப்பட்டது. மேல்நிலைப்பள்ளி குழந்தைகள் அனைவரும் விடுதியில் இருக்கும்போது, இளைய மாணவர்கள் அருகில் உள்ள பள்ளியில் சேர 3 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும்; இதனால் தாய்மார்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள்.
ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள படங்பத்ரா கிராமத்து குழந்தைகள் 3கி.மீ தூரத்தில் உள்ள பள்ளிக்கு சென்று திரும்பி வருகின்றனர். அவர்களின் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி 2018இன் பிற்பகுதியில் மூடப்பட்டது.
மூன்று குழந்தைகளின் தாயான ஜுனு சிகோகா கூறினார்: “நாங்கள் எங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பதாக இல்லை. ஆனால் நாங்கள் அவர்களை அனுப்பவில்லை என்றால் அவர்கள் எப்படி கல்வியறிவு பெறுவார்கள்? தற்போதைய போக்கு குழந்தைகளை உறைவிடப்பள்ளிகளுக்கு அனுப்புவதாகும். ஏனென்றால் எங்களுக்கு கற்பிக்கத் தெரியாது. குறைந்தபட்சம் [விடுதிகளில்] அவர்கள் கவனம் செலுத்தப்பட்டு படிப்பார்கள்” என்றார்.
சிகோகா மற்றும் பல தாய்மார்கள், தங்களது குழந்தைகளுக்கான பொறுப்பை பள்ளி ஏற்றுக்கொள்வதாக உணர்ந்ததை ஒப்புக்கொண்டனர். இருப்பினும், பெரும்பாலான பெண்கள் 10ஆம் வகுப்புக்குப் பிறகு வெளியேறி, விரைவில் திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.
வேறு சில கிராமங்களில், குடியிருப்பாளர்கள் வித்தியாசமாக நினைத்தார்கள். ரத்னகிரி மாவட்டத்தின் வனப்பகுதியில் அமைந்துள்ள கேசரபாடியை சேர்ந்த டோங்ரியா- கோந்த் 20 குடும்பங்களின் கிராமத்தலைவர் அர்ஜி குத்ருகா கூறுகையில், “நாங்கள் எங்கள் இளம்வயது பெண்களை வெகு தொலைவில் அனுப்ப விரும்பவில்லை” என்றார். அங்கிருந்த குடியிருப்பாளர்கள் வெளி நபர்களுடன் பேசுவதில் எச்சரிக்கையாக இருந்தனர். நமது நிருபரையும் சீக்கிரமே வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்.
ரத்னகிரி மாவட்டத்தின் காடுகளில் ஆழமாக அமைந்துள்ள 20 குடும்பங்களைக் கொண்ட டோங்ரியா-கோந்த் கிராமமான கேசராபாடி. இங்குள்ள பெற்றோர்கள் தங்கள் மகள்களை உறைவிடப் பள்ளிகளுக்கு அனுப்புவதில் மிகவும் கவனமாக உள்ளனர்.
தூரத்தில், நான்கு இளம்பெண்கள் விவசாய குடிசையில் வேலை செய்து கொண்டிருந்தனர்; அவர்களும் பின்னர் இந்த விவாதத்தில் சேர வந்தனர். அவர்கள் யாரும் பள்ளிக்குச் செல்லவில்லை. கிராமத்தை சேர்ந்த மூன்று சிறுமியர் ஒரு ஆசிரமப்பள்ளியில் சேர்ந்துள்ளனர்; ஆனால் சில ஆண்டுகளில் அது கைவிடப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
அங்கு கட்டப்படாத ஆரம்பப் பள்ளி, சிதிலமடைந்து எலும்புக்கூடு போலவே அப்படியே இருந்தது. "அவர்கள் இந்த பள்ளியை கட்டி முடித்தால், நாங்கள் குழந்தைகளை இங்கு சேர்ப்போம்," என்று தனது பெயரைக் கூற விரும்பாத மற்றொரு குடியிருப்பாளரான ஒரு வயதான பெண் கூறினார்.
ஆனால், மேலும் உறைவிடப்பள்ளிகளைக் கட்ட அரசு முயற்சிக்கிறது. 2018 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில், 2022 ஆம் ஆண்டிற்குள் 50% க்கும் மேற்பட்ட எஸ்டி மக்கள்தொகை கொண்ட ஒவ்வொரு ஒன்றியம் அல்லது 20,000 பழங்குடியின மக்களை கொண்ட பகுதிகளில் ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
"இது அனைவருக்கும் கல்வி பிரச்சினையை தீர்க்காது" என்று தாஸ் கூறினார். கிராமப் பள்ளிகளை மூடுவது மோசமான யோசனை என்று அவர் கூறினார். “ஒவ்வொரு கிராமப் பள்ளியும் ஏன் அனைத்து வசதிகளையும் நல்ல ஆசிரியர்களையும் கொண்ட ஒரு மாதிரி பள்ளியாக இருக்க முடியாது? இது உறைவிடம் செய்வதற்கான செலவுகளை மிச்சப்படுத்தும், மேலும் குழந்தைகளுக்கு தரமான கல்வியைப் பெறவும் உதவும்” என்றார் அவர். கிராமப் பள்ளிகள் குறைந்த மாணவர்களைக் கொண்டிருந்தாலும் கூட அவற்றை அனுமதிக்க வேண்டும், ஏனென்றால் சமூகங்கள் வளர பள்ளிகள் தேவைப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
அவர்களின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட முடிவுகள் மற்றும் செயல்முறைகளில் சமூகத்தை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தை தந்தசேனா வலியுறுத்தினார். "நகர்ப்புற மக்களைப் பொறுத்தவரை, கல்வி என்பது வாசிப்பு, எழுதுதல் மற்றும் அடிப்படை கணக்கு என்று பொருள், ஆனால் பழங்குடி சமூகங்கள் வேறுபட்ட கல்வித் தரம், அறிவு மற்றும் முழுத் திறன்களையும் கொண்டுள்ளன" என்று அவர் கூறினார். “நகர்ப்புற மக்களுக்கு இது புரியவில்லை. இந்த சமூகம் படித்தவர்கள் அல்ல என்று அவர்கள் தொடர்ந்து நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை விடுதிகளுக்குள் தள்ளுவதன் மூலம் நெறிப்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த சிந்தனை மாற வேண்டும்” என்றார்.
போடிகுடாவைச் சேர்ந்த பாத்ரா மற்றும் மொண்டாலியை பொறுத்தவரை, அவர்கள் பள்ளிக்கு செல்வதில் இருந்து விடுபட்டு ஒரு தசாப்தத்திற்குப் பிறகும் கிராமத்திற்கு வெளியே படித்து வாழ வேண்டும் என்ற ஆசை வலுவாக உள்ளது. அவர்களின் பாடசாலைகளில் அனைத்து பாடங்களுக்கும் போதுமான எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் இல்லை என்றால்- எந்தப் பயனும் இல்லை என்று புகார் கூறுகிறார்கள்.
தங்களது சமுதாய பண்டிகைகளின் போது அவர்கள் எப்போதாவது விடுமுறைக்கு வருவார்கள்;ஆனால், பாரம்பரிய முறையில் ஆடை அணிவதை அவர்கள் விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். அதே நேரம் பெற்றோர்கள் தங்கள் கல்வியைத் தொடர அனுமதிப்பார்கள்; இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர்.
“படிக்காத மற்ற பெண்களைப் பார்க்கும்போது நாங்களும் மோசமாக இருப்பதை உணர்கிறோம். எங்கள் நண்பர்களில் பலர் ஏற்கனவே திருமணமானவர்கள்,” என்று பத்ரா கூறினார். “நான் ஒரு ஆசிரியராக இருக்க விரும்புகிறேன். கல்லூரி மேலும் தொலைவில் உள்ளது. என்னை பெற்றோர்கள் அங்கு அனுப்புவார்கள் என்று நம்புகிறேன்” என்றார் அவர்.
(சந்தோஷினி, மனித உரிமைகள், வளர்ச்சி மற்றும் பாலினம் குறித்து கட்டுரை எழுதி வரும் சுயாதீன பத்திரிகையாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.