புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் தாக்கூர் சமூக ஆண்கள் தலித் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், சர்ச்சையும் கோபமும் தொடர்ந்து புகைந்து கொண்டிருக்கும் நிலையில், 2019 வரையிலான நான்கு ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அதிகரிப்பு 66.7% ஆக பதிவாகியுள்ளதை, சமீபத்திய குற்றத்தகவல்கள் காட்டுகின்றன.

நாடு முழுவதும், பட்டியல் சாதி பெண்களுக்கு எதிரான பலாத்கார வழக்குகள் 37%, தாக்குதல்கள் 20% அதிகரித்துள்ளதை, செப்டம்பர் 29 அன்று வெளியிடப்பட்ட க்ரைம் இன் இந்தியா-2019 அறிக்கையின் பகுப்பாய்வு மற்றும் முந்தைய ஆண்டுகளின் தரவுகள் காட்டுகின்றன.

ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் (CAW) 23.3% ஆகவும், பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்கள் 18.8% ஆகவும் அதிகரித்துள்ளன. அதே காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட மொத்த அறிவுசார்ந்த குற்றங்களின் (இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிற சிறப்புச் சட்டங்களின் கீழ் ஒப்பீட்டளவில் கடுமையான குற்றங்கள்) 9.5% அதிகரிப்பு என்பது சிறிதாகிவிட்டது.

பெண்களுக்கு எதிராகவும், பட்டியல் இனத்தவர்களுக்கு எதிராகவும் அதிகமான குற்றங்கள் பதிவாகி இருந்தாலும் இந்த வழக்குகளின் விசாரணை மற்றும் வழக்கு, மற்றவகை வழக்குகளை விட மிகவும் கடினமானவை. 2019 ஆம் ஆண்டின் இறுதியில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விசாரணை நிலுவை என்பது, மிக அதிக விகிதமாக - 33.8% என்று இருந்தது. இது அனைத்து அறியக்கூடிய ஐபிசி குற்றங்களில் 29.3% உடன் ஒப்பிடும்போது அதிகம். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 7.6% வழக்குகளில் மட்டுமே விசாரணை முடிந்தது.

பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்களில் இந்த எண்ணிக்கை 6.1% ஆகவும், பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களில் 8.4% ஆகவும் இருந்தது.

இவற்றில், 60% அல்லது அதற்கு மேற்பட்ட வழக்குகள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதற்கு வழிவகுத்தன.

ஹத்ராஸ் சம்பவம் குறித்த எங்களின் செய்தித்தொகுப்பை இங்கே பாருங்கள்:

பதிவான குற்றங்களின் ஒட்டுமொத்த அதிகரிப்புக்கு, அறிக்கை வழங்கல் மேம்பட்டிருப்பது (உண்மையான குற்றங்களின் அதிகரிப்பு மட்டுமல்ல) பங்களித்திருக்கலாம் என்றாலும், தரவு பொது பார்வையில் ஒரு திசைதிருப்பலை சுட்டிக்காட்டுகிறது - பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பலாத்கார வழக்குகளே தலைப்புச்செய்திகளாகின்றன, ஆனால் இது இந்திய தண்டனைச் சட்டத்தில் கணவர் மற்றும் உறவினர்களால் கொடுமை என வரையறுக்கப்பட்ட குற்றமாகும், இது மொத்த பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மிகப்பெரிய விகிதமாக 30.9% என தொடர்கிறது.

சொத்துக்களை மிரட்டி பணம் பறித்தல் அல்லது ஒப்புதல் வாக்குமூலம் போன்ற பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்களில் 28.9%, ‘எளிய காயம்’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன, இது பட்டியல் சாதியினருக்கு எதிரான மொத்த பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் மிக உயர்ந்த விகிதமாகும்.

பெண்கள் மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் பற்றிய, க்ரைம் இன் இந்தியா-2019 அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இங்கே.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

வரதட்சணை பலி, கணவன் மற்றும் உறவினர்களின் கொடுமை, ஆசிட் தாக்குதல், பாலியல் துன்புறுத்தல், தாக்குதல், பலாத்காரம், கடத்தல் போன்ற குற்றங்கள் ‘பெண்களுக்கு எதிரான குற்றங்கள்’ ஆகும்.

2015 ல் இருந்து 23% அதிகரிப்பு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், 2015ம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, 2019ல் மட்டும் 7.3% அதிகரித்துள்ளது. 66.7% என்ற அதிக விகிதம் கொண்ட உத்திரப்பிரதேசம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் அதிக விகிதங்களை கொண்டவையாக ஹரியானா (54.4%), ராஜஸ்தான் (47.2%) மற்றும் ஒடிசா மற்றும் பீகார் ஆகியன 34-35% என்றளவில் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2019ம் ஆண்டில், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் கிட்டத்தட்ட 15% உத்தரப்பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இங்கு 59,853 வழக்குகள் பதிவுவான நிலையில், ஒவ்வொரு நாளும் சராசரி இதுபோன்ற 164 குற்றங்களை அந்த மாநில அரசு கண்டது. அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் இருந்தபோதும் - வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதபடி - உத்தரப்பிரதேசத்தின் அதிக மக்கள்தொகை, பெண்களுக்கு எதிரான குற்ற விகிதத்தை ஒப்பீட்டளவில் குறைவாகவே வைத்திருந்தது, அதாவது 100,000 பேருக்கு 55.4 வழக்குகள் என்றுள்ளது.

இதற்கு மாறாக அசாம் (177.8) மற்றும் டெல்லி (144) ஆகியவற்றில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அதிக விகிதம் பதிவாகியுள்ளது. இந்த காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 22% சரிவை டெல்லி கண்டிருந்தாலும், இரு மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் 2019ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

வழக்குகளின் பெரும்பகுதி கணவர் / உறவினர்களின் கொடுமையை உள்ளடக்கியது

கணவர் மற்றும் உறவினர்களின் கொடுமை (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498- ஏ இன் கீழ்) பெண்களுக்கு எதிரான பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் மிகப்பெரிய விகிதமாக 30.9% ஐ கொண்டுள்ளது, அதையடுத்து தாக்குதல் சம்பவஞ்கள் (21.8%), மற்றும் ஆள் கடத்தல் (17.9%) ஆகும்.

Source: Table 3A.2, Crime in India report 2019, National Crime Records Bureau
Note: *Data do not include cases of murder with rape.

தினமும் 90 பலாத்கார வழக்குகள் - பெரும்பாலான குற்றவாளிகள் தெரிந்தவர்களே

கடந்த 2019ம் ஆண்டில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கிட்டத்தட்ட 8% பலாத்காரம் தொடர்பானது, மொத்தம் 32,316 வழக்குகள் (பலாத்காரம் மற்றும் சிறுமியரை பலாத்காரம் செய்தல் & பலாத்காரம் செய்து கொன்றது என 283 சம்பவங்கள் உட்பட) பதிவு செய்யப்பட்டன. இது சராசரியாக ஒருநாளைக்கு 88 பலாத்கார வழக்குகள் அல்லது ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் ஒரு பலாத்கார வழக்கு என்ற எண்ணிக்கையாகும். புகார் அளிக்கப்பட்ட வழக்குகளில், பாலியல் பலாத்காரத்தில் தப்பியவர்களில் / பாதிக்கப்பட்டவர்களில் 80% வயது வந்த பெண்கள், அதாவது 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள்; 60% பேர் 18-30 வயதுக்குட்பட்டவர்கள்.

இந்த தரவு மற்றொரு போக்கையும் காட்டுகிறது: அனைத்து பலாத்கார வழக்குகளிலும் 7.3% இலக்கு வைக்கப்பட்ட பெண்ணுக்கு, மீண்டும் மீண்டும் அதே சம்பவங்கள் (பிரிவு 376 (2) (என்) நிகழ்ந்துள்ளன. 2019 ஆம் ஆண்டில் நிகழ்ந்த 94.2% வழக்குகளில், பாதிக்கப்பட்டவருக்கு தெரிந்த நபரே குற்றம் புரிந்திருந்தார். 51% வழக்குகளில், குற்றவாளிகள் நண்பர்கள், ஆன்லைன் நண்பர்கள், மணமாகாமல் சேர்ந்து வாழ்பவர் மற்றும் முன்னாள் கணவர் - திருமணம் செய்வதாகக்கூறி பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது பதிவு செய்யப்படலாம். 36% வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குடும்ப நண்பராகவோ அல்லது அயலார் மற்றும் சுமார் 9% வழக்குகளில், குடும்ப உறுப்பினர்கள் தொடர்பு கொண்டிருந்தனர்.

கூட்டு பலாத்காரம் (பிரிவு 376 டி) இந்தியாவில் நடந்த அனைத்து பலாத்கார வழக்குகளில் கிட்டத்தட்ட 6% ஆகும், 2019 ஆம் ஆண்டில் இதில் 1,931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் அதிக எண்ணிக்கையிலான கூட்டு பலாத்கார வழக்குகள் (902) பதிவாகியுள்ளன, அடுத்தடுத்து உத்தரபிரதேசம் (301), மத்தியப் பிரதேசம் (162) உள்ளன.

நிலுவையில் உள்ள விசாரணைகளின் அதிக விகிதம்

கடந்த 2019ம் ஆண்டின் இறுதிக்குள், பெண்கள் மீதான குற்றங்கள் தொடர்பான 2,00,018 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது. இது அனைத்து அறியப்பட்ட ஐபிசி குற்றங்களுடன் ஒப்பிடும்போது 29.3%, இதுபோன்ற எல்லா வழக்குகளிலும் 33.8% ஆகும். தாக்குதல், பலாத்காரம் மற்றும் கொடுமை வழக்குகளில், 50% க்கும் மேற்பட்ட வழக்குகள் ஆறு மாதங்களுக்கும் மேலாக விசாரணை நிலுவையில் உள்ளன.

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள்

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களில் மூன்று வகை குற்றங்கள் அடங்கும்:

  • எஸ்சி / எஸ்டிக்கு எதிராக எஸ்சி / எஸ்டி அல்லாதவர்களால் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு நிகழ்த்தப்படும் கொடுமை (வன்கொடுமைச்சட்டம்)- 1989 (இனி வன் கொடுமைத்தடுப்பு சட்டம்);
  • எந்தவொரு நபராலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் எஸ்சி / எஸ்டி உறுப்பினர்களுக்கு எதிரான கொலை, காயம் மற்றும் கொள்ளை போன்ற குற்றங்கள் (கொடுமைச் சட்டத்துடன் சேர்ந்து படித்தல்) புரிதல்; மற்றும்
  • சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம்- 1955 இன் கீழ் இழைக்கப்படும் குற்றங்கள்.

பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்கள், 2015ல் இருந்து 19% அதிகரிப்பு

பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்கள் 2015ம் ஆண்டில் 38,670 என்பதில் இருந்து 2019ம் ஆண்டில் 45,935 என, 18.8% அதிகரித்துள்ளது. பல மாநிலங்கள் சரிவைக் காட்டினாலும் ஹரியானா மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு காணப்படுகிறது. (கீழே உள்ள அட்டவணையை காண்க).

பட்டியல் சாதியினருக்கு எதிரானது ‘எளிய காயம்’

கடந்த 2019ல், பட்டியல் சாதியினருக்கு எதிராக அதிகம் பதிவான குற்றங்களில், ‘எளிய காயம்’ (சொத்துக்களை மிரட்டி பணம் பறித்தல் அல்லது ஒப்புதல் வாக்குமூலம் அளித்தல் அல்லது ஒரு பொது ஊழியரை கடமை செய்வதில் இருந்து தடுத்தல்) என்ற பிரிவிலான வழக்குகள், அதிக விகிதத்தில் 28.9% ஆக இருந்தன (கீழே உள்ள வரைபடத்தை காண்க). பீகார் இதுபோன்ற வழக்குகளில் அதிக எண்ணிக்கையில் (100,000 க்கு 32.1) உள்ளது; அடுத்து மத்தியப் பிரதேசம் (22.7), ராஜஸ்தான் (12.4) ஆகியன இடம் பெற்றுள்ளன.

எஸ்சி பெண்களுக்கு எதிரான பலாத்கார வழக்குகள் 2015 முதல் 37% அதிகரிப்பு

கடந்த 2019ம் ஆண்டில், சிறுமியர் உட்பட பட்டியலின பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட 3,486 வழக்குகளும்; 3,375 தாக்குதல் வழக்குகளும் பதிவாகின. இது ஒவ்வொன்றும் பட்டியல் சாதியினருக்கு எதிரான மொத்த குற்றங்களில் 7-8% ஆகும் (வரைபடத்தை காண்க). பட்டியலின பெண்கள் மீதான பலாத்காரம் மற்றும் தாக்குதல் வழக்குகள் முறையே 37% மற்றும் 20% அதிகரித்துள்ளன.

பட்டியலின பெண்களுக்கு எதிரான தாக்குதல் வழக்குகளில் 87% வரை, வயது வந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில், ‘அடக்குமுறை சீண்டல் மற்றும் உள்நோக்கத்துடன் தாக்குதல்’ (பிரிவு 354, ஐபிசி) மிகப் பெரிய விகிதத்தில் (60%) நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் (பிரிவு 354 ஏ, ஐபிசி) கிட்டத்தட்ட 23% வழக்குகள் ஆகும். 32% பலாத்கார வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்கள் சிறுமியர்.

வன்கொடுமை வழக்குகளில் 10% க்கும் குறைவானவையே தவறுதலானவை

கடந்த 2019ம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட மொத்த வழக்குகளில் (முந்தைய ஆண்டுகளில் இருந்து மேற்கொள்ளப்பட்டவை உட்பட), பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்களில் 78.5% வழக்குகளிலும், பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களில் 81.7% வழக்குகளிலும் காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இது ஐபிசியின் கீழ் அறியக்கூடிய மொத்த குற்றங்களின் விகிதத்தை விட கணிசமாக அதிகமாகும், இது 67.2% ஆக இருந்தது. குற்றப்பத்திரிகை என்பது வழக்கு விசாரணைக்கான ஆதாரங்களை முன்வைத்து விசாரணை முடிந்ததும் தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை அறிக்கையாகும். மீதமுள்ள வழக்குகளில் (எஸ்சி-க்கு எதிரான குற்றங்களில் 21.5% மற்றும் எஸ்டி-க்கு எதிரான குற்றங்களில் 18.3%) காவல்துறை இன்னும் விசாரணையை முடிக்கவில்லை என்று தரவு காட்டுகிறது.

பிற மாநிலங்களை எடுத்துக் கொண்டால் ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகியன எஸ்.சி.க்கு எதிரான குற்றங்களின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் விகித்தை முறையே 34.1% மற்றும் 49% என கொண்டிருந்தன. 100% வீதத்துடன் கூடிய மாநிலங்களில் மத்திய பிரதேசம் (99.3%), சத்தீஸ்கர் (98.7%), ஒடிசா (97.7%) மற்றும் குஜராத் (96.9%) ஆகியன அடங்கும். எஸ்.டி.க்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கலில் அசாம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மிசோரம், சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் 100% விகிதத்தை கொண்டிருந்தன. குறைந்த விகிதங்களைக் கொண்ட மாநிலங்களில் கோவா (50%), ராஜஸ்தான் (49.5%), மற்றும் மேற்கு வங்கம் (55.6%) மற்றும் மத்தியப்பிரதேசமான தாத்ரா மற்றும் நகர் ஹவேலி (50%) ஆகியன அடங்கும்.

இருப்பினும், வன்கொடுமை சட்டத்தின் கீழ் மட்டுமே பதிவுசெய்யப்பட்ட வழக்குகளுக்கு, பட்டியல் சாதியினருக்கு எதிரான மற்ற குற்றங்களுடன் ஒப்பிடும்போது, ​​குற்றப்பத்திரிகை விகிதம் 68.5% என மிகக் குறைவாக இருந்தது. வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவான நான்கு குறிப்பிட்ட குற்றங்களில், இந்த விகிதம் ‘வசிக்கும் இடத்தை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துதல் / சமூக புறக்கணிப்பு’ (14%), எஸ்சி / எஸ்டி (34%) க்கு சொந்தமான நிலங்களை அகற்றுவது, பொது இடங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பது (60%) மற்றும் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பது (72%) என்றிருந்தது.

வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 10%-க்கும் குறைவான வழக்குகளை காவல்துறையினர் பொய்யான வழக்குகளாக முடித்துவிட்டதாக தரவு காட்டுகிறது. விசாரணையை முடித்தவுடன், காவல்துறையினர் பல்வேறு காரணங்களைக் கூறி வழக்கை இப்படி முடிப்பதுண்டு, அதில் ஒன்று இறுதி அறிக்கையில் குற்றச்சாட்டுகள் "பொய்யானவை" என்று கூறுவது கண்டறியப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் எஸ்சிக்கு எதிரான 62,195 குற்றங்களில், 5,482 வழக்குகள் (8.81%) மற்றும் எஸ்.டி.க்கு எதிரான குற்றங்களில் (8.61%) 10,878 வழக்குகளில் 937 வழக்குகள் பொய்யானவை என்று போலீசார் முடித்துவிட்டனர். எனவே, வன்கொடுமை சட்டத்தின் கீழுள்ள வழக்குகள் பெரும்பாலும் தவறானவை அல்லது உள்நோக்கம் கொண்டவை என காவல்துறையினர் உட்பட பரவலாக நிலவும் கருத்துக்கு இந்த தகவல்கள் முரண்படுகின்றன. காவல்துறையினர் உண்மையில் எஸ்.சி.க்களுக்கு எதிரான 78.5% குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

எஸ்சி/எஸ்.டி.களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த போதிய தரவு இல்லை

வன்கொடுமை தடுப்புச் சட்டம்- 1989 (வன்கொடுமை சட்டம்) பிரிவு 3 இன் கீழ் வரையறுக்கப்பட்ட குற்றங்களில் சில தகவல்கள் கிடைக்கின்றன. இது காலணிகளால் மாலை அணிவித்தல், நிர்வாணமாக அழைத்துச் செல்வது, எஸ்சி / எஸ்டி உறுப்பினரை கையால் துப்புரவுப்பணி மேற்கொள்ள கட்டாயப்படுத்துதல், பொதுவான குழிகளை பயன்படுத்த தடை செய்தல் அல்லது சாதிப்பெயரில் துஷ்பிரயோகம் செய்தல் போன்ற சாதி மற்றும் பழங்குடி அடையாள அடிப்படையில் பொது இடத்தில் நடைபெறும் எந்தவொரு பாகுபாடு நடவடிக்கைகளுக்கும் அபராதம் விதிக்கிறது.

வன்கொடுமை சட்டத்தில் 2015 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரிவு 3இல் மேலும் 30 குற்றங்களை உள்ளடக்கி விரிவாக்கப்பட்டது. ஆயினும்கூட, கிரைம் இன் இந்தியா அறிக்கை நான்கு குற்றங்கள் குறித்த தரவையே அளிக்கிறது: வேண்டுமென்றே அவமதித்தல் அல்லது அவமானப்படுத்தும் நோக்கத்துடன் மிரட்டுதல்; எஸ்சி / எஸ்டிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தல் / அகற்றுவது; பொது இடம் / பாதை பயன்படுத்துவதற்கு மறுப்பு தெரிவித்தல் அல்லது தடுத்தல்; மற்றும் வசிக்கும் இடத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துதல் / சமூக புறக்கணிப்பு. வன்கொடுமை சட்டத்தின் கீழ் உள்ள மற்ற அனைத்து குற்றங்களும் “பிற” என்று வகைப்படுத்தப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், வன்கொடுமை சட்டத்தின் கீழ் பட்டியல் சாதியினருக்கு எதிரான மொத்த குற்றங்களில் வெறும் 8.9% மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களில் 5.3% மட்டுமே (அட்டவணை கீழே உள்ளது) பதிவாகி உள்ளது. 2019 ஆம் ஆண்டில் எஸ்சி-க்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மொத்த குற்றங்களில், 91% வழக்குகள் ஐபிசி குற்றங்களோடு வன்கொடுமை சட்டத்தின் குற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இமாச்சலப் பிரதேசத்தை தவிர - அங்கு வன்கொடுமை சட்டத்தின் கீழ் மட்டும் 82% - பெரும்பாலான மாநிலங்களில் இந்த போக்கு உண்மைதான், ஜார்கண்ட்டில் எஸ்சிக்களுக்கு எதிரான மொத்த குற்றங்கள் 49.9% ஆகும். பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களைப் பொறுத்தவரை, மொத்தம் பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் கிட்டத்தட்ட 60% வன்கொடுமை சட்டத்தின் கீழ் மட்டுமே உள்ள ஒரே மாநிலம் ஜார்கண்ட் ஆகும்.

பிரிவு 3 இன் கீழ் வன்கொடுமை குறித்த தரவு இல்லாததால், இச்சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளவை, தினசரி வாழ்ந்த அனுபவங்களில் எந்த அளவும் இல்லை. உதாரணமாக, ஹத்ராஸ் சம்பவத்தில், வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தங்கள் கிராமத்தில் உள்ள தாக்கூர்கள் எவ்வாறு சாலையின் ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் இருந்து நடக்க வேண்டாம் என்று சொல்வதன் மூலமாகவோ அல்லது சாக்கடை நீரை வீடுகள் மீது எறிந்துவிடுவதன் மூலமாகவோ பாகுபாட்டைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதைப் பகிர்ந்துள்ளனர். இத்தகைய நடைமுறைகள் பிரிவு 3 இன் கீழ் ஒரு வன்கொடுமையின் வரையறைக்கு உட்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உத்தரவாதம் அளிக்கின்றன.

பொறுப்பேற்பு விதிகள் குறித்த தரவு இல்லை

காணாமல் போன மற்றொரு முக்கியமான தரவுத் தொகுப்பு, அரசு ஊழியர்களால் கடமையை வேண்டுமென்றே புறக்கணித்ததாகப் பெறப்பட்ட புகார்கள். வன்கொடுமை குறித்து புகார் செய்யப்படும்போது, முதல் தகவல் அறிக்கையை உடனடியாக பதிவுசெய்தல், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சிகளின் அறிக்கைகளை பதிவு செய்தல், மற்றும் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தல் மற்றும் அதில் உள்ள ஏதேனும் தாமதம் ஏற்படுவதை விளக்குதல் ஆகியன அடங்கும் என்று வன்கொடுமை சட்டத்தின் 4 வது பிரிவு, அரசு ஊழியர்களின் கடமைகளை வரையறுக்கிறது.

இத்தகைய கடமைகளை வேண்டுமென்றே புறக்கணித்தால், அந்த அரசு ஊழியரை ஒரு வருடம் வரை சிறைக்கு அனுப்பலாம். வன்கொடுமை புகார் அளித்து காவல்துறையினர் அதை அடிக்கடி தாமதப்படுத்துதல் / அல்லது எஃப்.ஐ.ஆரைப் பதிவு செய்ய மறுப்பது போன்ற நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் ஆராய்ச்சி இருந்தபோதும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெறப்பட்ட புகார்களின் தரவு எதுவும் கிடைக்கவில்லை.

விசாரணை தரவு

நிலுவையில் உள்ள 90% க்கும் மேற்பட்ட வழக்கு விசாரணைகள்

இந்த வகை குற்றங்களுக்கான விசாரணை சராசரி ஐபிசி வழக்கை விட நீண்ட காலம் நீடிக்கிறது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 7.6% வழக்குகளில் மட்டுமே விசாரணை முடிந்தது, பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்களின் 6.1% வழக்குகள் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களின் 8.4% வழக்குகள், ஐபிசி அறியக்கூடிய குற்றங்களுக்கு 9.7% எதிராக (அட்டவணை 18A.1) விசாரிக்கப்பட்டிருந்தன.

விசாரணை அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் அதேவேளையில், இந்த குற்றவகைகளில் தண்டனை விகிதம் (குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்படுவதோடு, காவல்துறையினரால் தயாரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளியாக நிரூபிக்கப்படுவதும்) ஐபிசி குற்றங்களை விட மிகக் குறைவு. ஐபிசி குற்றங்களுக்கு 50.4% தண்டனை விகிதத்திற்கு எதிராக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 23.7%, எஸ்சி 32.1% மற்றும் எஸ்.டி 26.4% க்கு எதிரான குற்றங்கள். ஐபிசி குற்றத்தை விட இந்த குற்றங்களில் குற்றப்பத்திரிகை விகிதம் மிக அதிகமாக உள்ளது.

Trial Completed In Fewer Than 10% Cases. 60% Or More Led To Acquittal
Crimes against Women Crimes against SC Crimes against ST
Total in % Total in % Total in %
Cases for trial 1714944 204191 33583
Cases disposed without trial 20216 1.18 245 0.12 72 0.21
Cases in which trial completed 130927 7.63 12498 6.12 2814 8.38
a. Cases convicted 31007 23.68 4007 32.06 742 26.37
b. Cases discharged 9281 7.09 1061 8.49 297 10.55
c. Cases acquitted 90639 69.23 7430 59.45 1775 63.08
Cases pending trial 1563801 91.19 191448 93.76 30697 91.41

Source: Crime in India 2019 report (Tables 3A.8, 7A.6 and 7C.6)

பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்களில் உத்தரகண்ட் (68%), உத்தரப்பிரதேசம் (66%) மற்றும் ராஜஸ்தான் (51%) ஆகியன அதிக தண்டனை பெற்றுத்தந்த மாநிலங்களாகும். கிட்டத்தட்ட 100% குற்றப்பத்திரிக்கை தாக்கல் விகிதத்தைக் கொண்ட எந்த மாநிலங்களிலும் (மத்தியப் பிரதேசம், ஒடிசா, குஜராத் மற்றும் சத்தீஸ்கர்) அதிக தண்டனை விகிதங்களைக் கொண்டிருக்கவில்லை.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் நான்கு வடகிழக்கு மாநிலங்களுடன் (மிசோரம், மேகாலயா, நாகாலாந்து மற்றும் சிக்கிம்) 50% க்கும் அதிகமான தண்டனை விகிதத்தை கொண்டுள்ளன.

எஸ்.டி.க்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் சிக்கிம் ஆகியன, குற்றங்களுக்கு தலா 100% தண்டனை விகிதம் கொண்டுள்ளன.

(ஸ்ரீவஸ்தவா, காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சியில் (சி.எச்.ஆர்.ஐ) காவல் சீர்திருத்த திட்டத்திற்காக பணியாற்றுகிறார். அவரை, devyani@humanrightsinitiative.org வாயிலாக அணுகலாம். சி.எச்.ஆர்.ஐ.யின் போலீஸ் சீர்திருத்த திட்டத்தின் தலைவர் தேவிகா பிரசாத், இக்கட்டுரைக்கு பங்களிப்பு செய்துள்ளார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.