புதுடில்லி: பீகாரின் கயா மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ஒரு குழந்தை கூட நிதியுதவி பலனை பெறவில்லை. இத்திட்டம் குழந்தைகளை பள்ளியில் தொடர்ந்து படிக்கவும், குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை கடத்தலை தடுப்பதை நோக்கமாகக் கொண்டது.

சிறுவர் கடத்தலின் மையப்பகுதியாக கருதப்படும் பீகார் மாநிலம் கயாவின் ஆறு கிராமங்களில், பாதிக்கக்கூடிய 342 குழந்தைகளை, புதுடெல்லியை சேர்ந்த பொது கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான அக்கவுன்டபிலிட்டி இனிஷியேடிவ், 2018 ஆம் ஆண்டில் அடையாளம் கண்டது.

உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜஸ்டிஸ் வென்ச்சர்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல ஆணைய தலைவரின் கூற்றுப்படி, ஒரு வருடத்தில் ஒரு குழந்தைக்கு கூட திட்டத்தின் மூலம் நிதியுதவி அளிக்கப்படவில்லை.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் நிதியளிக்கப்படும் இந்த ஸ்பான்சர்ஷிப் திட்டம், மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் வறுமையில் வாடும் குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாதத்திற்கு ரூ. 2,000 வழங்க வழி செய்கிறது.

ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பு செயல்திட்டம் 2017இன் தரவுகள்படி, ஆண்டுக்கு ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் வேலைபார்க்கும் 4,50,000 குழந்தைகளையும், ஆண்டு முழுவதும் வேலை பார்க்கும் 6,30,000 குழந்தைகளையும் கொண்டுள்ள பீகாரில், இந்த திட்டத்தால் சிறிதளவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சீதாமரி மாவட்டம், இத்தகைய 200 விண்ணப்பங்களை பீகார் அரசுக்கு அனுப்பியிருந்தது; ஆனால் அவற்றில் எதற்குமே ஒப்புதல் தரப்படவில்லை என்று பாட்னாவில் செயல்பட்டு பீகாரின் 18 மாவட்டங்களில் பணிபுரியும் அதிதி ஆர்கனைசேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பீகாரின் ஷியோஹர் தொகுதியில், 2018ஆம் ஆண்டில் 64 குழந்தைகளுக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கப்பட்டது என்று பாட்னாவை சேர்ந்த குழந்தைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான சென்டர் டைரக்ட் தெரிவித்துள்ளது. ஷியோஹரின் அருகாமையில் உள்ல முசாபர்பூரில் தான், உறைவிட காப்பகத்தில் 11 சிறுமிகள் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான சம்பவம், 2018 மே மாதம் வெளிச்சத்திற்கு வந்தது என்பதை உள்ளூர் ஆர்வலர்கள் நினைவு கூர்கின்றனர்.

"ஸ்பான்சர்ஷிப் திட்டத்தை செயல்படுத்துவது உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவின் ஆர்வத்தைப் பொறுத்தது. சிவில் சமூகம் மற்றும் அரசு அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் தான் இது ஷியோஹார் ஒன்றியத்தில் சாத்தியமானது" என்று சென்டர் டைரக்ட் மையத்தின் நிர்வாக இயக்குநர் சுரேஷ்குமார் கூறினார்.

இத்திட்டத்தின் தோல்வியானது, 1.01 கோடி குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட இந்தியாவுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியாவின் குழந்தைகள் எண்ணிக்கையில் 30%; குழந்தை தொழிலாளர்களில் 32% பங்கை உத்தரபிரதேசம் மற்றும் பீகார் கொண்டுள்ளதாக, செயல்திட்டம் தெரிவிக்கிறது. 2011ல் பீகாரில் 10 லட்சம் குழந்தைகள் வேலைகளின் ஈடுபடுத்தப்பட்டதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

ஸ்பான்சர்ஷிப் திட்டம் ஏன் தேவை

"இதில் [குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் கடத்தலால்] மிகவும் பாதிக்கப்படும் குடும்பங்கள், பின்தங்கிய பட்டியலினத்தவர்கள் தான். குரல் கொடுக்கக்கூட இயலாத பீகாரில் உள்ள மஹாதலித் சமூகத்தவர்கள்" என்று ஜஸ்டிஸ் வென்ச்சர்ஸ் அமைப்பின் களஒருங்கிணைப்பாளர் தீனநாத் மவுரியா கூறினார். அந்த சமூகத்தவர்களுக்கு சமூக-பொருளாதார பாதுகாப்பு இல்லை - அவர்களில் பெரும்பாலோர் தினக்கூலிக்கு, விவசாய கூலி வேலை செய்கிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அந்த குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை கூலி வேலைக்கு அனுப்புகின்றன.

தலைநகர் பாட்னாவில் இருந்து 120 கி.மீ தெற்கே இருக்கும் கயா, குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் கடத்தலின் முக்கிய கேந்திரமாகும். பெரும்பாலான குழந்தைகள் வேலைக்காக மற்ற மாநிலங்களுக்கு குடிபெயர்கிறார்கள் - அதன் குழந்தைகளில் 6.4% (8,438) ஊதிய வேலைகளில் உள்ளனர்.

“குழந்தைகள் ஜெய்ப்பூருக்கு கடத்தப்பட்டு வளையல் தயாரிக்கும் தொழிலில் வேலை செய்கிறார்கள். செங்கல் சூளைகளில் வேலை செய்வதற்காக அவர்கள் தெலுங்கானா, ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு குடிபெயர்கிறார்கள் ”என்று ஜஸ்டிஸ் வென்ச்சர்ஸ் இன்டர்நேஷனலின் திட்ட மேலாளர் ஜைத் ஹுசைன் கூறினார். "கயாவில் இதுபோன்ற குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்; அவர்களுக்கு உள்ளூரோ, அரசோ போதுமானதை செய்யவில்லை" என்றார்.

மீட்கப்பட்டு வீட்டிற்கு அழைத்து வரப்படும் குழந்தைகளுக்கு முறையான மறுவாழ்வு திட்டம் இல்லாததால், மீண்டும் கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர். "கடத்தல்காரர்களின் வலைபின்னல் அமைப்பு, சமூகத்தோடு கலந்துள்ளது. அவர்களுக்கு பெரும்பாலும் குடும்பத்தினர்கள் நன்கு தெரிந்தவர்கள்” என்று ஹுசைன் கூறினார். "ஒரு குழந்தையை மீட்டு மீண்டும் அழைத்து வரும்போது, அவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்காக அரசோ, சமூக சேவையாளர்களோ தொடர்பு கொள்ளும் முன்பே, அக்குழந்தைகள் மீண்டும் கடத்தப்படுகிறார்கள். அரசு அமைப்புகளின் வேகம் இதில் மந்தமாக உள்ளது” என்றார் அவர்.

கயாவில் உள்ள ஷெர்காட்டி மற்றும் தோபி நகரங்களில், ஜெய்ப்பூர் வளையல் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்டு 160 குழந்தைகள் வீடு திரும்பினர்; சரியான நேரத்தில் மறுவாழ்வு அளிக்க அரசு தவறியதால், அவர்களில் 22 பேர் மீண்டும் கடத்தப்பட்டதாக கூறும் ஜஸ்டிஸ் வென்ச்சர்ஸ் பிரதிநிதிகள், ஸ்பான்சர்ஷிப் திட்டத்தின் உடனடி அவசியத்தை வலியுறுத்தி உள்ளனர்.

குடியிருக்கும் பகுதியின் வகை, சமூக இழப்பு மற்றும் தொழில் போன்ற அளவுருக்கள் குழந்தைகளுக்கான ஸ்பான்சர்ஷிப் பலனை பெறுவதற்கான தகுதிகளை தீர்மானிக்கின்றன. வருமான சான்றிதழ் மற்றும் வங்கிக் கணக்கை அளித்தால் மட்டுமே, இக்குடும்பங்கள் பலனை பெற முடியும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் பெருநகரங்களில் ரூ.36,000; மற்ற நகரங்களில் ஆண்டுக்கு ரூ.30,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களுக்கான வரம்பு ஆண்டுக்கு ரூ.24,000. எந்தவொரு குழந்தையும் கடுமையான தேவைக்கு கூட ரூ.2,000-க்கு மேல் பெறுவதில்லை; அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே தகுதியுடையவர். இந்த ஸ்பான்சர்ஷிப் பலன் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் போது, அங்குள்ள குழந்தைகள் தொடர்ந்து வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்கின்றன. குடும்பங்களுக்கும் இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது.

தூக்கி உயர்த்துவதில் தோல்வி

கயா மாவட்டத்தின் ஆறு கிராமங்களில் ஜஸ்டிஸ் வென்ச்சர்ஸ் இன்டர்நேஷனல் நடத்திய 2018 முக்கிய ஆய்வில், 57 ஆதரவற்ற குழந்தைகள், 36 மது / போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், 51 புலம்பெயர்ந்த குழந்தைகள், குழந்தை திருமண அச்சுறுத்தல் உள்ள 17 பேர், பள்ளியில் இருந்து பாதியில் நின்ற 122 குழந்தைகள் மற்றும் 37 குழந்தைத் தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஸ்பான்சர்ஷிப் பெற, 834 பேர் (குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்) தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்தனர். ஆனால், கயா மாவட்டத்தில் எந்தவொரு குழந்தைக்கும் இதுவரை ஸ்பான்சர்ஷிப் வழங்கப்படவில்லை என்று கயாவில் உள்ள குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் ராஜேஷ் ரஞ்சன் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

ஸ்பான்சர்ஷிப் தேவைப்படும் குழந்தைகளை கண்டறியவும், பலன்களை பெறுவதில் அவர்களுக்கு வசதி செய்து தரவும் ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகள் பாதுகாப்புக்குழு இருக்க வேண்டும்.

புதுடெல்லியை சேர்ந்த பொது கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான அக்கவுன்டபிலிட்டி இனிஷியேடிவ் 2019 அடிப்படை ஆய்வின்படி, 2016 ஜூலையில் கயாவில் உள்ள மாவட்ட அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்த பிறகே, பல கிராமங்களில் 2019 மார்ச் மாதத்திற்கு பிறகு, குழந்தைகள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டன.

கயா மாவட்டம் முழுவதும், "நன்கு செயல்படும் குழுக்கள் எதுவும் இல்லை" என்பதை, அடிப்படை கணக்கெடுப்பு கண்டறிந்தது. குழந்தை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக அரசு அதிகாரிகள் கிராமத்தினருக்கோ அல்லது ஊராட்சி தலைவர்களுக்கோ பயிற்சி தரவில்லை. அனைத்து கிராமங்களிலும் குழு உள்ளதா அல்லது எந்தவொரு பயிற்சியும் தரப்பட்டதா என்பது வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களுக்கே தெரியாது என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

"கிராமம், ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்களின் முக்கிய செயல்பாடு, பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளை அடையாளம் காண்பது ஆகும். ஆனால் மூன்று அடுக்குகளிலும் உள்ள குழுக்களுக்கு தங்களது பொறுப்புகள் பற்றியோ, கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவுவது என்பது பற்றியோ தெரியாது,” என்று புதுடெல்லியை சேர்ந்த கொள்கை ஆராய்ச்சி அமைப்பான சென்டர் பார் பாலிசி ரிசர்ச் (சிபிஆர்) மூத்த ஆராய்ச்சியாளர் மிருது ஸ்மிதா போர்டோலோய் கூறினார். "மேலும், குழுவின் உறுப்பினர்கள் குழந்தை மேம்பாடு தொடர்பான பிற திட்டங்களை ஏற்கனவே கையாண்டு வருவதால் இதை ஒரு கூடுதல் சுமையாக கருதி, இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கவில்லை" என்றார்.

பீகார் அரசு தரவுகளை சிபிஆர் உடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்று போர்டோலோய் கூறினார்: "ஐந்து மாதங்களுக்கும் மேலாக நாங்கள் மாநில ஐசிபிஎஸ் அலுவலகம், கயா ஐசிபிஎஸ் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டிருந்தோம். ஆனால் முசாபர்பூர் உறைவிட இல்ல சம்பவம் குறித்த சிபிஐ விசாரணையால், திட்டத்தின் பல்வேறு கூறுகளின் கீழ் நிதி ஒதுக்கீடு தொடர்பான தகவல்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை" என்றார்.

கடந்த 2018-19 ஆம் ஆண்டில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு தனது சொந்த நிர்வாக மற்றும் பிற செலவுகளுக்காக ரூ. 25.8 லட்சத்தை செலவிட்டது; இது, 2017-18 ஆம் ஆண்டில் செலவிடப்பட்ட ரூ.8.9 லட்சத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்று சமூக நலத்துறையின் தரவுகளின் அடிப்படையில் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

Expenditure Under Integrated Child Protection Scheme In Gaya District, Bihar
District Level Bodies Expenditure in absolute terms (Rs lakh) Distribution of expenditure (%)
2017-18 2018-19 2017-18 2018-19
District child protection committee 8.9 25.8 7.2 17.4
Child welfare committee 7.8 4.9 6.3 3.3
Juvenile justice board 6.0 9.3 4.8 6.2
Observation home 35.0 36.4 28.3 24.4
Specialised adoption agency 15.8 15.4 12.8 10.4
Children homes 32.8 25.4 26.5 17.1
Open shelters 17.5 13.23 14.1 8.9
Girls homes 0.0 18.37 0.0 12.4
Integrated Child Protection Scheme total 123.8 148.56 100.0 100

Source: Data from the Department of Social Welfare, Patna, Bihar, cited in Accountability Initiative’s 2019 Baseline Study

நிர்வாக இடையூறுகள்

ஸ்பான்சர்ஷிப் திட்டம், நிர்வாக சிக்கல்கள் மற்றும் காகித வேலைகளால் நிரம்பியுள்ளது. இதனால் குடும்பங்கள் இதை நாடி வருவது கடினம். ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஒற்றை பெற்றோரின் குழந்தைகள், சம்பந்தப்பட்டவரின் இறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும். "நாம், அடிப்படை கல்வி கூட இல்லாத சமூகங்களைப் பற்றி பேசுகிறோம். அவர்களிடம் பிறப்புச் சான்றிதழ் இருப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவு” என்று மவுரியா கூறினார்.

இத்திட்டத்தில், மாதாந்திர நிபந்தனை பணப்பரிமாற்றத்தைப் பெற குழந்தை மற்றும் பராமரிப்பாளர் ஒரு கூட்டு வங்கிக் கணக்கை வைத்திருக்க வேண்டும்; இது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வரை தொடர்ந்து இருக்கும். ஆனால் ஆய்வில் ஸ்பான்சர்ஷிப்பிற்கு தகுதியானவர்கள் என அடையாளம் காணப்பட்ட பெரும்பாலான குழந்தைகள், பள்ளிக்கு செல்லவில்லை. அங்கீகாரத்திற்காக ஆதார் அட்டைகளை பயன்படுத்தும் போது கைரேகை ஒத்துவராதது போன்ற பிரச்சனைகள் உள்ளன (நேரடி பலன் பரிமாற்றத்தை பெற, வங்கிக் கணக்குகளுடன் ஆதார் ‘இணைக்கப்பட வேண்டும்’). ஏனெனில் பெரும்பாலான பெற்றோர்கள் விவசாயத்தொழில் தொழிலாளர்கள்; வயலில் கடுமையாக உழைப்பதால் கைரேகைகள் மங்கிவிடுகின்றன. ஆதார் கைரேகை அங்கீகார சிக்கல்கள் மற்றும் பலன்கள் மறுப்பு போன்ற பிரச்சனைகள் நாடு முழுவதும் பரவலாக தகவல்கள் உள்ளன.

ஒவ்வொரு குடும்பமும், திட்ட சலுகைகளைப்பெற கிராம ஊராட்சியில் இருந்து வருமான சான்றிதழை பெற வேண்டும். நாம் குறிப்பிட்டது போல், கிராமப்புறங்களில் ரூ. 24,000-க்கும் குறைவாக, நகர்ப்புறங்களில் ரூ.30,000-க்கும் குறைவாக வருமானம் உள்ள குடும்பங்கள் மட்டுமே, இதற்கு தகுதியுடையவை. "குடும்பங்களுக்கு வருமான சான்றிதழ் எளிதில் வழங்கப்படுவதில்லை" என்று ஜஸ்டிஸ் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் ஹுசைன் கூறினார். “குறிப்பாக தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் [எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ] கீழ் சேர்க்கப்பட்ட கிராமங்கள்,குறைந்த வருமான சான்றிதழை ஊராட்சி தலைவரால் வழங்க இயலாது. பல சந்தர்ப்பங்களில், சான்றிதழில் குறிப்பிடப்படும் வருமானம், அவை திட்டத்தில் பயன்பெற தகுதியற்றதாக்கிவிடுகிறது. ஊராட்சி உறுப்பினர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். கடத்தப்படும் அச்சுறுத்தலின் கீழ் பாதிக்கப்படக்கூடிய ஒவ்வொரு குழந்தையும் கிராம அளவில் குழந்தை பாதுகாப்புக் குழுவால் அடையாளம் காணப்பட்டால், அது உயிர்களைக் காப்பாற்றும்” என்றார் அவர்.

பீகாரில் உள்ள மோதிஹாரி மாவட்டத்தில், எந்தவொரு குழந்தைகள் நலக் குழுவும் அமைக்கப்படவில்லை என்று அங்கு பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனமான மேம்பாட்டு கல்வி மற்றும் செயல் நிறுவனத்தின் கள ஒருங்கிணைப்பாளர் அபிஷேக் குமார், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். ஐ.சி.பி.எஸ் திட்டம் முழுமையான நிலைக்கு வந்துவிட்டது. குழந்தைகள் நல அலுவலர், குழந்தைகள் நலக்குழுவின் செயல்பாடுகளை நிறைவேற்ற வேண்டும். "பாட்னாவில் உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மாநில அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்களுக்கு நாங்கள் பலமுறை கடிதம் அனுப்பினோம். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று குமார் கூறினார்.

ஸ்பான்சர்ஷிப் விண்ணப்பங்களை மறுஆய்வு செய்வதற்கும் அனுமதிப்பதற்கும் கயா மாவட்டம் ‘ஸ்பான்சர்ஷிப் மற்றும் வளர்ப்பு பராமரிப்பு ஒப்புதல் குழு’ ஒன்றை நிறுவவில்லை என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

செல்வதற்கு கூட போதிய பணம் இல்லை

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் கிடைக்கிறது. இது 41 குழந்தைகளுக்கு மட்டுமே போதுமானது, அதே நேரம் நிதி தேவைப்படும் குழந்தைகளின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகம் என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

ஆயினும்கூட, உண்மையில், "குழுவால் பெறப்பட்ட விண்ணப்பங்கள் முழுமை பெறாததால், கிடைத்த நிதியில் 90% பயன்படுத்தப்படவில்லை" என்று கயா குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் ராஜேஷ் ரஞ்சன் கூறினார். "குழந்தைகள் விண்ணப்பத்திற்கான செயல்முறையை எளிதாக்க வங்கிகளுடன் நாங்கள் தொடர்பு கொள்கிறோம். ஆனால் வங்கிகள் ஒத்துழைக்கவில்லை. வருமான சான்றிதழையும் வழங்குவது கடினம். பயன்பாடுகளை அங்கீகரிக்க இது எங்களுக்கு ஒரு தடையாக செயல்படுகிறது. கமிட்டிக்கு முறையான விண்ணப்பங்கள் கிடைக்கும்போதுதான், ஒதுக்கீடு போதுமானதா என்பதை நாங்கள் சொல்ல முடியும், ”என்றார்.

குழந்தை 18 வயதாகும் வரை அந்த குடும்பங்களுக்கு மாதம் ரூ.1,000 செலுத்தும் பீகாரின் பர்வாரிஷ் திட்டம், சிறந்த முன்னேற்றத்தைக் கொண்டுள்ளது என்று கூறும் ரஞ்சன், மத்திய திட்டத்துடன் ஒன்றிணைவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் கூறினார்.

மத்திய திட்டத்தில் சில வடிவமைப்பு குறைபாடுகள் உள்ளன. அவை சரி செய்யப்பட வேண்டும் என்று ஜஸ்டிஸ் வென்ச்சர்ஸ் மவுரியா கூறினார். உதாரணமாக, இது ஒரு குழந்தைக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் நிதியுதவி செய்கிறது, அதன் பிறகு குழந்தைகள் மீண்டும் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் கடத்தலுக்கு ஆளாகிறார்கள். ஒருமுறை நிதியுதவி செய்தால், அந்த குழந்தை 18 வயதை எட்டும் வரை உதவ வேண்டும் என்றார்.

ராஷ்டிரிய கிஷோர் ஸ்வஸ்திய காரியக்ரம் (இளம்பருவ சுகாதாரத் திட்டம்) வழங்கும் ஆலோசனை, சேவைகளை பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கு உதவுவதற்கும், குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு செல்வதை தடுக்க உதவலாம். "வளரிளம் பருவ குழந்தைகளுக்கான சுகாதார கிளினிக்குகள் ஒன்றிய அளவில் தான் [கிராம அளவில் அல்ல] திறக்கப்படுகின்றன; எனவே எந்த குழந்தையும் இதில் பயனடையவில்லை" என்று ஆதிதி ஆர்கனிசேஷன் பரினிதா சிங் கூறினார்.

அதே நேரம், குழந்தைகளை வீட்டிற்கு திருப்பி அனுப்புவது சிறந்த வழி அல்ல. "ஸ்பான்சர்ஷிப் மூலம் குடும்பங்களை வலுப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல், சில குழந்தைகளை தங்குமிடம் மற்றும் குழந்தை பராமரிப்பு வீடுகளில் வைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் நாங்கள் கண்டோம்" என்று சென்டர் டைரக்டை சேர்ந்த குமார் கூறினார். "குழந்தையை உடனடியாக குடும்பத்துடன் திருப்பி அனுப்புவது எப்போதுமே ஆதரவாக இருக்காது, உதாரணமாக அவர்கள் பிச்சை எடுப்பது அல்லது குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் கடத்தல் ஆகியவற்றில் காணப்பட்டால், அவர்களை உடனே குடும்பத்தினருடன் ஒப்படைக்கக் கூடாது" என்றார்.

மறுபுறம், குமார் கூறுகையில், குழந்தை பராமரிப்பு இல்லங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்படும் குழந்தைகளுக்கும், இத்தகைய ஸ்பான்சர்ஷிப் திட்டத்தை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்கிறார். "அவர்கள் வந்த அதே சூழலுக்குத் திரும்பிச் செல்லப்படுகிறார்கள்; இங்கு தலையீடு முக்கியமானது" என்று அவர் கூறினார்.

(அலி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.