மும்பை: நடப்பு ஆண்டில் அருகேயுள்ள தனியார் பள்ளியில் தனது ஆறு வயது மகளை, முதல் வகுப்பில் சேர்ப்பது சாரதாசந்திர காலேவின் கனவாக இருந்தது. மேற்கு மும்பை புறநகர்ப் பகுதியான அந்தேரியைச் சேர்ந்த 33 வயதான பட்டியல் சாதியைச் சேர்ந்த அந்த தொழிலாளி, கல்வி உரிமைச்சட்டத்தின் (ஆர்.டி.இ) பிரிவு 12 (1) (சி) கீழ், பள்ளியில் சேர விண்ணப்பத்தார். இச்சட்டம், சிறுபான்மையல்லாத, அரசு உதவி பெறாத தனியார் பள்ளி சேர்க்கைகளில் ஏழை மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு, சேர்க்கையில் 25% இடஒதுக்கீடு உத்தரவாதத்தை தருகிறது.

காலேயின் மகளுக்கு அந்தேரி பகுதி பள்ளியில் இடம் கிடைத்தது. ஆனால் அங்கு ஏற்பட்ட அனுபவம் அவருக்கு கசப்பையே தந்தது. “நான் அங்கு இரண்டாம் தர குடிமகனை போல் நடத்தப்படுவதை உணர்ந்தேன். அவர்கள் ஆங்கிலத்தில் பேசினார்கள், அது எனக்கு புரியவில்லை. நான் மீண்டும் மீண்டும் விளக்கம் கேட்டு பெற வேண்டியிருந்தது,” என்றார் காலே. “எனது குழந்தையின் புத்தகங்களை பெற பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை, அதற்காக பள்ளி தரப்பில் கூடுதலாக ரூ.1,200 கேட்டனர். ஆன்லைன் வகுப்புகள் பற்றி அவர்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை” என்றார்.

மகாராஷ்டிராவில் ஆர்டிஇ இடஒதுக்கீடு முறை அதன் நோக்கத்தை அடைய ஏன் போராடுகிறது என்பதற்கான முக்கியமான காரணங்களில், காலே எதிர்கொண்ட இத்தகைய தடைகளும் அடங்கும் - அதாவது ஏழை, பின்தங்கிய குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான செலவுகளை திரும்பத்தந்து தனியார் பள்ளிகளை அரசு ஊக்குவித்து, இலவசம் உள்ளடக்கிய கல்வியை அரசு வழங்குவதை கண்டோம். அந்தேரி பள்ளி ஆர்டிஇ விதிகளைப் பின்பற்றி இருந்தால், காலே தனது மகளின் புத்தகங்களுக்கு பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கமாட்டார் அல்லது அவமானமாகவும் வேண்டப்படாதவராகவும் நடத்தப்பட்டு இருக்கமாட்டார்.

ஆறு வயது முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வசிப்பிடம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் இலவச மற்றும் கட்டாய தொடக்கக்கல்வியை வழங்க வகை செய்யும் கல்வி உரிமை சட்டம் (ஆர்.டி.இ.- RTE) 2009ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளுக்கான அளவுகோல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகையில், மகாராஷ்டிராவில் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், ஆர்டிஇ சட்டத்தின் கீழ் கல்விச் சேர்க்கைக்கு தகுதியுடையவர்கள்.

புத்தகங்கள், கட்டணம் மற்றும் சீருடைகளுக்கான தொகையை தனியார் பள்ளிகளுக்கு மாநில அரசு திருப்பிச் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளுக்கு ஆர்டிஇ கீழ் மாணவர் சேர்க்கைக்கான நிதியை - ஆர்டிஇ சட்டத்தின் கீழ் - திருப்பிச் செலுத்தாததால் மாணவர் சேர்க்கையின் போது சிக்கல்கள் மீண்டும் தோன்றும். மாநில அரசு ஆர்.டி.இ. சேர்க்கைக்காக நிலுவையில் வைத்துள்ள தொகையை வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரி வருகின்றன, மேலும் நிதி இல்லை என்று கூறி ஆர்டிஇ கீழ் புதிய சேர்க்கைகளை மறுத்து வருகின்றன.

இதன் விளைவாக, மகாராஷ்டிராவில் உள்ள அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் எண்ணிக்கையான 22,840ல் பாதிக்கும் குறைவான - அதாவது 9,331 (41%) பள்ளிகள் மட்டுமே இந்த ஆண்டு ஆர்டிஇ கீழ் மாணவர் சேர்க்கைக்கு பதிவு செய்துள்ளன. இந்த பள்ளிகளில் கூட, ஒதுக்கப்பட்ட இடங்களில் 31.3% காலியாகவே உள்ளன.

விகிதாசார அடிப்படையில், தனியார் பள்ளிகளை விட பின்தங்கிய சமூகங்களை சேர்ந்த குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள். பட்டியல் சாதி (எஸ்சி) குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கான தொடக்கக் கல்விக்கான சேர்க்கை விகிதம் அரசுப்பள்ளிகளில் (23.5%) என்பது, உதவி பெறாத தனியார் பள்ளிகளின் 2017-18ம் ஆண்டிற்கான (13.6%) விகிதத்தைவிட அதிகம் என்று தேசிய தகவல் மையம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் பராமரிக்கப்படும் இந்தியாவில் பள்ளி கல்வியின் தரவுத்தளமான யு.டிஸ் (U-DISE) தரவு காட்டுகிறது. அதே ஆண்டில், பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் சேர்க்கை விகிதம் அரசு பள்ளிகளில் 14.2% ஆகவும், உதவி பெறாத தனியார் பள்ளிகளில் 4.7% ஆகவும் இருந்தது. சிறப்புத்தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு (சி.டபிள்யூ.எஸ்.என் - CwSN ) [அதாவது ஏதேனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தை], அரசுப்பள்ளிகளில் சேருதல் 1.2% மற்றும் உதவி பெறாத தனியார் பள்ளிகளில் 0.3% என்று உள்ளது.

சமூக பாகுபாடு, டியூஷனுக்கான சட்டவிதிகளுக்கு புறம்பான கோரிக்கைகள், புத்தகங்கள், செயல்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் திட்டத்தில் சேரும் தனியார் பள்ளிகளுக்கு செலவினங்களை நீண்டகாலம் வழங்காதது போன்றவை மாநிலத்தின் ஆர்டிஇ அமைப்பைக் கட்டுப்படுத்தும் காரணிகளாகும். யு.டிஸ் தரவு தளத்தின்படி, தனியார், உதவி பெறாத மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைக் காட்டிலும் ஆர்.டி.இ. அளவுருக்களுடன் இணங்குவதற்கான சிறந்த வேலையை அரசுப் பள்ளிகள் செய்கின்றன. காரணம் என்னவென்றால், அவை நேரடியாக நிதியுதவி, நிர்வகித்தல் மற்றும் ஆய்வு செய்யப்படுகின்றன என்று, மகாராஷ்டிராவின் ஆர்டிஇ மன்றத்தின் கன்வீனர் ஹேமங்கி ஜோஷி மற்றும் பிரதம் கல்வி அறக்கட்டளையின் குழந்தை பருவ ஆரம்பக்கல்விக்கான திட்ட இயக்குனர் ஸ்மிதின் பிரிட் ஆகியோர் கூறியுள்ளனர்.

மகாராஷ்டிராவில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 2016-17ம் ஆண்டில் 15,718 என்று இருந்தது, 2018-19ம் ஆண்டில் 22,840 ஆக, 45% உயர்ந்தது. அதே காலகட்டத்தில், ஆர்டிஇ சேர்க்கையும் 78% உயர்ந்துள்ளது - அதாவது 2016-17ம் ஆண்டில் 41,565 என்று இருந்தது, 2018-19ம் ஆண்டில் 73,973 ஆக உயர்ந்துள்ளதாக, மாநிலத்தின் ஆர்டிஇ இணையதளத்தில் உள்ள தரவுகளின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு சேர்க்கை மேலும் 6% உயர்ந்தது.

நடப்பு 2020-21 கல்வியாண்டில், அக்டோபர் 29 வரையில், சேர்க்கை கடந்த ஆண்டை விட 1% அதிகரித்துள்ளது. கிடைக்கக்கூடிய 115,477 இடங்களில் 36,251 (31.3%) இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. கடந்தாண்டில் செப்டம்பர் வரை 116,809 இடங்களில் 47,621 (40%) காலியாக இருந்தன.

காலியாக உள்ள இடங்கள் பெரும்பாலும், தங்களது பகுதியில் உள்ள குடும்பத்தினரிடம் இருந்து தேவையான எண்ணிக்கையில் சேர்க்கை விண்ணப்பங்களை பெறாத பள்ளிகளாக உள்ளன; ஏனெனில் பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பது விண்ணப்பதாரர்களின் பெற்றோருக்குரியது என்று, தபஸ்யா பிரதிஷ்டான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தபஸ் சுத்ராதர் ​​தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஊரடங்கு தொடர்பான தாமதங்களால் காலக்கெடு அக்டோபர் 29 வரை நீட்டிக்கப்பட்டது. முந்தைய ஆண்டுகளில், தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் தொகை திருப்பி வழங்காதது போன்றவற்றால் மாணவர் சேர்க்கைகள் தாமதமாகி இருந்தன, இதனால் பெரும்பாலும் கல்வியாண்டின் ஆரம்ப மாதங்கள் - அதாவது 2020, 2019, 2018 மற்றும் 2017ம் ஆண்டுகளில் விண்ணப்பதாரர்கள் இழப்பை சந்தித்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள 22,800-க்கும் மேற்பட்ட தனியார் உதவி பெறாத பள்ளிகளில், 9,331 (41%) மட்டுமே இந்த ஆண்டு ஆர்டிஇ சேர்க்கைக்கு பதிவு செய்துள்ளன. இதற்கான காரணங்களில் முதன்மையானது, தனியார் பள்ளிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்துவதில் அரசின் மோசமான செயல்பாடுகள் தான் என்று நிபுணர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

மேலும் தனியார் பள்ளிகள்

மகாராஷ்டிராவில் 2018-19ம் ஆண்டு வரையிலான ஏழு ஆண்டுகளில் தனியார் உதவி பெறாத பள்ளிகளின் எண்ணிக்கை - அதாவது 11,348 என்றிருந்தது, 22,840 ஆக இருமடங்காக அதிகரித்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கையுடன் இதை ஒப்பிட்டால், 21% ஆகவும், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 2017-18க்கு ஆறு ஆண்டுகளில் 5% வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் யு.டிஸ் தளத்தின் தரவுகள் பகுப்பாய்வு காட்டுகிறது.

மகாராஷ்டிராவில் ஆர்டிஇ கீழ் சேர்க்கை 2016-17 மற்றும் 2018-19ம் ஆண்டுக்கு இடையில் அதிகரித்துள்ளது, இந்த அதிகரிப்பின் பெரும்பகுதி முதல் ஆண்டில் இருந்தது: மூன்று இடைப்பட்ட ஆண்டுகளில் சேர்க்கை 53%, 7% மற்றும் 6% உயர்ந்தது.

அத்துடன், 2013-14ம் ஆண்டு முதல் 2017-18ம் வரையிலான யு-டிஐஎஸ் தரவுகளின் ஒப்பீடு, தனியார், உதவி பெறாத பள்ளிகளில் சேர்க்கப்பட்ட எஸ்சி குழந்தைகளின் விகிதம் 8.6% -8.7% ஆக உள்ளது என்பதைக் காட்டுகிறது; எஸ்.டி குழந்தைகளுக்கு இது 4% க்கும் குறைவு. சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு, விகிதம் 1% முதல் 0.8% வரை குறைந்துள்ளது. மகாராஷ்டிராவின் மொத்த மக்கள்தொகையில் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் ஊனமுற்றோர் விகிதம் 11.8%, 9.3% மற்றும் 2.64% என மாநில பொருளாதார ஆய்வு 2019-20 தெரிவித்துள்ளது. தொடக்கக்கல்விக்கான அரசுப் பள்ளிகளில் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் சிறப்புத்தேவைகளைக் கொண்ட குழந்தைகளின் விகிதம் 2017-18ஆம் ஆண்டில் 15%, 19.3% மற்றும் 2% ஆகும்.

‘40, 000 பள்ளிகள் இன்னும் திருப்பிச் செலுத்தப்படவில்லை ’

ஆர்.டி.இ சட்டத்தின் பிரிவு 12 (2)ன் கீழ், சிறுபான்மையினர் அல்லாத தனியார் உதவி பெறாத பள்ளிகள், நாம் குறிப்பிட்டது போல், இச்சட்டத்தில் சேர்க்கப்படும் ஒரு குழந்தைக்கான செலவினத்தை மாநில அரசிடம் இருந்து திருப்பிப்பெற உரிமை உண்டு.

இந்த ஆண்டு, மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 50% தனியார் பள்ளிகள் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் சேர்க்கைகளை மேற்கொள்ளவில்லை என்று, மகாராஷ்டிரா மாநில ஆங்கிலப்பள்ளி அறக்கட்டளை தலைவர் சஞ்சயராவ் தயாடே பாட்டீல் கூறினார். இந்த சங்கம், நிலுவைத்தொகை கேட்டு போராடும் மாநிலத்தில் உள்ள சுமார் 18,000 தனியார் பள்ளிகளின் இலாப நோக்கற்ற கூட்டணி ஆகும். 2017, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நிலுவைத்தொகை காரணமாக மகாராஷ்டிரா முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் அமைப்புகள், ஆர்டிஇ கீழ் மாணவர் சேர்க்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

ஆர்டிஇயை மேற்பார்வையிடும் அரசு இயக்கமான சமகிர சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டத்தின் கீழ், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் தற்போதுள்ள நிதிப்பகிர்வு 60:40 ஆகும். மத்திய பங்கைப் பெற மாநிலங்கள் தங்கள் மாநில குழந்தைகளின் செலவின கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். 2019ம் ஆண்டு நிலவரப்படி, மகாராஷ்டிரா அரசு ஒரு குழந்தைக்கான செலவு ரூ.17,670 என்று அறிவித்திருந்தது.

மகாராஷ்டிராவின் ஆர்டிஇ விதிகள்-2011ன்படி ஆர்.டி.இ சேர்க்கைக்காக பதிவு செய்யப்பட்ட உதவி பெறாத தனியார் பள்ளிகள் ஒரு குழந்தைக்கு உண்மையான செலவினங்களுக்கோ அல்லது மாநிலத்தால் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தை செலவிற்கும் சமமான திருப்பிச் செலுத்துதலுக்காக ஒரு தனி வங்கிக் கணக்கை பராமரிக்க வேண்டும். திருப்பிச் செலுத்துதல் கோரிக்கைகள் மாவட்ட அதிகாரிகளுக்கு தொகை திருப்பிச் செலுத்தும் கோரிக்கைகளை சமர்ப்பிக்கும் செயல்பாடு மூலம் தொடங்குகின்றன, பின்னர் அவை சேர்க்கைக்கு எதிராக தொகையுடன் சரிபார்க்கப்பட்ட பிறகு, அதை மாநிலத்திற்கு சமர்ப்பிக்கின்றன. அடுத்து, அரசு அந்தத் தொகையை பள்ளிகளுக்கு விடுவித்து, மத்திய நிதி வெளியிடுவதற்கான கோரிக்கையை எழுப்புகிறது. மத்திய திட்ட ஒப்புதல் வாரியம் (PAB -பிஏபி), உண்மையான செலவினங்களின் அடிப்படையில் மாநிலத்திற்கு நிதிகளை விடுவிக்கிறது.

கடந்த 2018-19 மற்றும் 2019-20 கல்வியாண்டுகளுக்கு, திருப்பிச் செலுத்த முன்மொழியப்பட்ட தொகையில் மூன்றில் ஒரு பகுதியை மத்திய திட்ட ஒப்புதல் வாரியம் ஒப்புதல் அளித்தை, அதன் நிகழ்ச்சி குறிப்புகள் காட்டுகின்றன. அதற்கு முன், 2017-18ம் ஆண்டில் முன்மொழியப்பட்ட தொகையில் 3% மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது. (கீழே உள்ள வரைபடத்தை காண்க).

திருப்பிச் செலுத்துவதற்கு முன்மொழியப்பட்ட தொகையில் 96% நடப்பு ஆண்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், இது 2018-19ம் ஆண்டில் மாநிலங்கள் வழங்கிய நிதிகளுக்கு ஒத்திருக்கிறது என்று, மகாராஷ்டிரா தொடக்கக்கல்வி துணை இயக்குநர் தினகர் தெம்கர் எங்களிடம் கூறினார். நிலுவையில் உள்ள நிலுவைத்தொகை குறித்தும், இந்த ஆண்டிற்கான மத்திய திட்ட ஒப்புதல் வாரியம் ஏன் 2018-19ம் ஆண்டுடன் ஒத்திருக்கிறது, 2019-20 ஆண்டுக்கு ஏன் பொருந்தாது என்றும் கேட்டபோது, ​​தெம்கர் ஒரு தெளிவான பதிலைக் கொடுக்காமல், அழைப்பைத் துண்டித்தார்.

"ஆர்டிஇயின் கீழ் அதிக மாணவர் சேர்க்கைகளுடன், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 தனியார் பள்ளிகளுக்கு திருப்பித்தர வேண்டிய நிலுவைத்தொகை அதிகரித்து வருகிறது; அதற்கான புதுப்பிக்கப்பட்ட தரவு அரசிடம் இல்லை. மத்திய திட்ட ஒப்புதல் வாரிய நிகழ்ச்சி குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிதி இன்னும் போதுமானதாக இல்லை, மேலும் ஆர்.டி.இ. சட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கை என்பது, ஒருபோதும் மாநிலத்தின் முன்னுரிமையாக இருந்ததில்லை” என்று பாட்டீல் கூறினார்.

மகாராஷ்டிராவில் ஆர்டிஇ சேர்க்கை, மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக கண்காணிக்கும் ஒரு விரிவான ஆர்டிஇ மேலாண்மை தகவல் அமைப்பு (எம்ஐஎஸ்) உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு பள்ளிக்கும் ஆர்டிஇ மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான தகவல்கள் பொது தரவு தளத்தில் இன்னும் கிடைக்கவில்லை.

கையால் தொகை வழங்குவதையே மாநில அரசு விரும்புவதால் ஆன்லைன் வாயிலாக திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு பயன்படுத்தப்படவில்லை, இது வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான நடைமுறையின் பற்றாக்குறையை உருவாக்குகிறது என்று தபஸ்யா பிரதிஷ்டானின் சுத்ரதார் கூறினார்.

தொகையை திரும்ப வழங்குதல் உண்மையான செலவினங்களுடன் பொருந்தாததற்கு ஒரு காரணம், முழுமையற்ற ஆவணங்கள்; அத்துடன் இந்த சிக்கலைத் தீர்க்க பள்ளிகள், மத்திய அரசுக்கு மனு கொடுக்க வேண்டும் என்று பிரதம் கல்வி அறக்கட்டளையின் குழந்தைப்பருவ தொடக்கக்கல்விக்கான திட்ட இயக்குனர் ஸ்மிடின் பிரிட் கூறினார்.

சமூக பாகுபாடு மற்றும் கட்டண கோரிக்கைகள்

ஆர்டிஇ சட்டத்தில் இடஒதுக்கீடு பெற்று சேரும் மாணவர்கள் பெரும்பாலும் பாரபட்சமான நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், இவர்களில் ஒருவர் வெவ்வேறு வகுப்பறைகளில் அமர்ந்திருக்கிறார் என்று, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையரின் சிறுவர் உரிமைகள் அடிப்படையிலான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சியான ஆக்சன் பார் தி ரைட்ஸ் ஆப் தி சைல்ட் (Action for the Rights of the Child - ARC) புனே ஒருங்கிணைப்பாளர் சுஷாந்த் சோனோன் கூறினார்.

ஆர்டிஇ இடஒதுக்கீடு மாணவர்களைப் பிரிக்க பள்ளிகள் பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்து [ஆர்டிஇ கீழ் இல்லாத மாணவர்களின்] கோரிக்கைகளை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் என்று பிரிட் கூறினார். "இருப்பினும், சில பள்ளிகள் பாரபட்சமான நடைமுறைகளில் ஈடுபடுகின்றன, அத்தகைய மனநிலையை ஆர்டிஇ-ஆல் மாற்ற முடியாது," என்று அவர் கூறினார்.

பாரபட்சமான நடைமுறைகளை தவிர, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சில தனியார் பள்ளிகள் கல்வி, பாடநெறிக்கு புறம்பான நடவடிக்கைகளுக்கான கட்டணம் கேட்டு உள்ளதாகவும், ஆர்டிஇ மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளில் சேர அனுமதிக்கவில்லை என்றும், ஊரடங்கின் போது கட்டணம் வசூலிப்பதற்கு எதிரான அரசின் உத்தரவை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.

பெயர் வெளியிட விரும்பாத மும்பையைச் சேர்ந்த ஆர்டிஇ ஆர்வலர் ஒருவர் கூறுகையில், மத்திய மும்பையில் இயங்கும் அவரது நெட்வொர்க் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 - 40 வழக்குகளில் தலையிட வேண்டியிருந்தது, அந்த வழக்குகள் பெரும்பாலும் புத்தகங்கள், சீருடை கட்டணங்களை தனியார் பள்ளிகள் கோரியது தொடர்பானவை என்றார். பணம் செலுத்தத் தவறினால் குழந்தைகள் வகுப்பில் பங்கேற்க அனுமதிக்கப்படாத நிகழ்வுகளும் உள்ளன. இது மகாராஷ்டிரா ஆர்டிஇ விதிகள்-2011ஐ மீறுவதாகும்.

புனேவின் ஏ.ஆர்.சி.யின் கீழ் உள்ள அமைப்புகளில் ஒன்றான ககாட் கச் பத்ரா காஷ்டகரி பஞ்சாயத்து (KKPKP) அமைப்பின் தன்னார்வலர்கள் - குப்பை அள்ளுவோரின் குழந்தைகளிடம் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆர்டிஇ சேர்க்கை மற்றும் கல்விக் கட்டணக் கோரிக்கைகள் குறித்து ஆராய்கின்றனர். இந்த ஆண்டு இதுவரை இதுபோன்ற எட்டு வழக்குகளை சந்தித்ததாக, அவர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

”நமது முக்கிய பிரச்சினை என்னவென்றால், தரவு பராமரிக்கப்படவில்லை, கே.கே.பி.கே.பியின் கீழ் தலையீடு இருந்தபோதும், தங்கள் குழந்தையின் சேர்க்கை ரத்து செய்யப்படுமோ என்று, இதுபற்றி பேச அஞ்சுகின்றனர்; பல்வேறு காரணங்களால் பள்ளிகளால் கோரப்படும் கட்டணங்களை செலுத்துகின்றனர். இந்த ஆண்டு நாங்கள் பிரச்சினைகள் குறித்து கல்வி அதிகாரியை அணுகினோம், ஆனால் பெற்றோர்கள் தரப்பில் பேச மறுத்துவிட்டனர்,” என்று சோனோன் கூறினார்.

தக்கவைத்தல் குறித்த தரவு இல்லை

முதலாம் வகுப்பு தொடங்கி எட்டாம் வகுப்பு வரையிலான தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ இடஒதுக்கீடு மாணவர்களை தக்கவைத்துக் கொள்ளும் விகிதம் குறித்த ஆய்வு, பிரச்சாரத்தின் செயல்திறனைக் கண்டறிவதற்கு முக்கியம். ஆனால் இதை எளிதாக்க போதுமான தரவு இல்லை என்று மகாராஷ்டிராவின் ஆர்டிஇ மன்றத்தின் கன்வீனர் ஹேமங்கி ஜோஷி கூறினார். மாணவர் சேர்க்கை உறுதி செய்வதில் இருந்து பள்ளியில் இடை நிற்றல் விகிதங்களை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

அத்தகைய வகைப்படுத்தப்பட்ட தரவு யு-டிஸ் ஆல் பராமரிக்கப்படவில்லை. தொடக்க மட்டத்தில் பொதுவான தக்கவைப்பு விகிதம் 2013-14ம் ஆண்டில் 85.3% என்பதில் இருந்து 2017-18ம் ஆண்டில் 94% ஆக உயர்ந்துள்ளது, எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (ஓபிசி), சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள் மற்றும் முஸ்லிம்கள் இடையே தக்கவைப்பு விகிதத்திற்கான தரவு எதுவும் கிடைக்கவில்லை.

தொடக்கக்கல்வி அளவில் எஸ்.டி., ஓபிசி மற்றும் முஸ்லிம்களுக்கான வருடாந்திர சராசரி இடை நிற்றல் வீதம், பொது ஆண்டு சராசரி வீழ்ச்சி வீதமான 0.5%ஐ விட அதிகமாகும். மும்பை-புறநகர் மாநிலத்தில் இந்த சமூகங்களில் இருந்து அதிக இடை நிற்றல் விகிதங்களைக் கொண்டுள்ளது. பிரிவு 12 (1) (சி) இன் கீழ் அனுமதிக்கப்பட்ட பின்தங்கிய மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் இடையே வெளியேறுதல் தொடர்பான தகவல்கள் மத்திய அரசுடன் பராமரிக்கப்படவில்லை என்று, 2019 ஜூலை மாதம் மாநிலங்களவையில் அரசு கூறி இருந்தது.

முன்னோக்கிய பாதை

  1. பள்ளிகளுக்கு தொகையை திருப்பிச் செலுத்துவதில் வெளிப்படைத் தன்மையை செயலாக்குவதில் நடைமுறை தாமதங்களை தவிர்க்க, ஆவணப்படுத்தல் செயல்முறை பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS - பி.எஃப்.எம்.எஸ்) உடன் இணைக்கப்பட வேண்டும் என்று, தபஸ்யா பிரதிஷ்டான் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி தபஸ் சுத்ராதர் ​​கூறினார். தரவை கைமுறையாக புதுப்பிக்காமல் வளம் கிடைக்கும் தன்மை மற்றும் பயன்பாடு குறித்த நிகழ்நேர தகவல்களை, பி.எஃப்.எம்.எஸ் அனுமதிக்கிறது. "நாங்கள் ஒரு முன்மொழிவுடன் அரசை அணுகி, 2019ம் ஆண்டில் இந்த செயல்முறையைத் தொடங்கினோம், ஆனால் அதை பிறகு பின்தொடரவில்லை,” என்றார் அவர்.
  2. தனியார் பள்ளிகள் மாநிலம் முழுவதும் வளர்ச்சியடைந்துள்ளன, ஆனால் இவற்றில் பெரும்பாலானவை குறைந்த கட்டணம், குறைந்த நிதி கொண்ட பள்ளிகள், அவை ஆசிரியர்களின் சம்பளம், பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு செலவினங்களில் சமரசம் செய்து கொள்வதாக, மகாராஷ்டிராவின் ஆர்டிஇ மன்றத்தின் அமைப்பாளர் ஹேமங்கி ஜோஷி கூறினார். கல்வியின் தரம் குறைவாக இருந்தபோதும், ஆர்.டி.இ திருப்பிச் செலுத்தும் தொகை வாயிலாக அவர்கள் பயனடைகிறார்கள், இது அவர்களின் பள்ளி கட்டணத்தை விட அதிகமாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். "தரமான கல்விக்கான ஆர்டிஇ விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, தனியார் பள்ளிகளை தவறாமல் ஆய்வு செய்வது காலத்தின் தேவை" என்று ஜோஷி கூறினார். சிறுபான்மை தனியார் பள்ளிகளை இந்த ஒதுக்கீட்டில் இருந்து விலக்குவது பயனாளிகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
  3. தனியார் பள்ளிகள் தங்களுக்குத் தகுதியான திரும்பப்பெறப்படும் தொகையை பெற வேண்டும். இது இல்லாவிட்டால் ஏழைகள் தனியார் பள்ளிகளில் தங்களுக்கான கால் பங்கு சேர்க்கை இடஒதுக்கீட்டை மட்டுமே இழக்க நேரிடும், ஆனால் பணக்காரர்களோ நாட்டின் பெரும்பான்மையினராக உள்ள ஏழைகளின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று, ஆக்ஸ்பாம் இந்தியாவின் பிரச்சார முன்னணி அஞ்சேலா தனேஜா கூறினார். "இருப்பினும், அனைவருக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதற்காக, ஓரங்கட்டப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெரும்பான்மையான குழந்தைகள் படிக்கும் முறையை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும், மேலும் தரவு காண்பிக்கும் வகையில் அது நிச்சயமாக தனியார் துறை அல்ல" என்று தனேஜா இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

(சரஸ்வதி, ஆரம்பகால பத்திரிகையாளர் மற்றும் சென்னை ஆசியன் இதழியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.கருத்துகளை respond@indiaspend.org.என்ற முகவரிக்கு அனுப்பலாம்.மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.