இந்தியா தனது பொதுநூலகங்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறது?
பெங்களூரு: பெங்களூருவிற்கு சமீபத்தில் சென்று வந்த போது, நூல்களை கடன் தரும் தனியார் சங்கிலி அமைப்பான ஜஸ்ட்புக்ஸ் கிளை, தனிமைப்படுத்தப்பட்ட குறுகிய பாதையில் இருந்து, வடக்கு பெங்களூரு கல்யாண் நகரில், அருகே பூங்காவை எதிர்கொள்ளும் இடத்திற்கு மாற்றப்பட்டிருப்பதைக் கண்டோம். முந்தைய இருப்பிடம் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கவில்லை என்றாலும், புதியது வெவ்வேறு வயதினரால் நிரம்பியிருந்தது, அவர்களில் பலர் பூங்காவிற்குச் செல்வோர் முதல்முறையாக நூலகத்தை கவனிக்க நேர்ந்தது. ஜஸ்ட்புக்ஸ் போன்றவை, தனியார் முதலீட்டின் மூலம் நூலக கலாச்சாரத்தை வளர்க்க முயற்சிப்பது, பொது நூலகங்களின் இத்தைய பங்கு - அனைவருக்கும் தகவல் மற்றும் ஆதாரங்களை அணுகுவதற்கான இலவச மற்றும் திறந்தவெளி வாய்ப்புகளை தருகிறது.
பொது நூலகங்களுக்கு நன்கு நிதி அளிக்கப்பட வேண்டும்; தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, மாறிவரும் காலத்திற்கேப அவற்றின் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று எங்களது 2018 கட்டுரை போல, இந்திய பொது நூலகங்களின் கொள்கை ஆய்வு அமைப்பு தெரிவித்தது. நூலக செஸ் அல்லது பொது நூலக வரி, உள்ளூர் அரசு, நகர நிறுவனம் அல்லது கிராம பஞ்சாயத்துக்கு செலுத்தப்பட்ட சொத்து வரியின் கூடுதல் கட்டணம் அவர்களுக்கு நிதியளிப்பதற்காக இருந்தது. ஆனால் கேள்வி எழுகிறது: இந்தியா உண்மையில் அதன் பொது நூலகங்களுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறது?
பொது நூலகங்களின் தரவுகளை ஆராய்ந்து, பொது நூலகங்களுக்கான தனிநபர் செலவில் உத்தியோகபூர்வ ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதை நாங்கள் கண்டறிந்த பின், தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ. - RTI) சட்டத்தின் கீழ் ஒரு மனுவை தாக்கல் செய்தோம். தகவல் அறியும் உரிமை மனு, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தில் இருந்து, கொல்கத்தாவின் பெல்வெடெர் எஸ்டேட்டில் உள்ள இந்திய தேசிய நூலகம், டெல்லி பொது நூலகம் மற்றும் கொல்கத்தாவின் ராஜாராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை (ஆர்.ஆர்.ஆர்.எல்.எஃப்) உள்ளிட்ட மத்திய நூலகங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இருப்பினும், எந்த தகவலும் வரவில்லை. ஒரு சில நூலகங்கள் அவற்றின் தனிப்பட்ட செலவினங்களின் விவரங்களை வழங்க முடிந்தாலும், ஆண்டு தேசிய பொது நூலகச் செலவு குறித்த எந்த தகவலும் இல்லை.
இந்தியாவில் பொது நூலகங்கள்
முதல் பொது நூலகச் சட்டமான மெட்ராஸ் பொது நூலகச்சட்டம் 1948 இல் நிறைவேற்றப்பட்டது. பொது நூலக சேவைகளை வழங்குதல் மற்றும் பொதுமக்களுக்காக பொதுமக்களே நிதி அளிக்கும் வகையில் சட்ட விதிகளை அறிமுகப்படுத்துவதே இதன் குறிக்கோளாக இருந்தது.
இந்தியாவின் பொது நூலக இயக்கத்திற்கு, பரோடா மகாராஜா சயாஜிராவ் III கெய்க்வாட், அமெரிக்க நூலக நிர்வாகி வில்லியம் அலன்சன் போர்டன் மற்றும் கணிதவியலாளர் மற்றும் நூலகர் எஸ்.ஆர். ரங்கநாதன் போன்ற முன்னோடியாக இருந்தனர். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இது தொடங்கியது. இந்த இயக்கம் கேரளா மற்றும் ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் நடந்த கல்வியறிவு வளர்ச்சிக்கான சுதந்திரத்திற்கு முந்தைய சமூக இயக்கங்களின் ஒரு பகுதியாகும்; ஆந்திராவில் படகு நூலகம் மற்றும் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் மாட்டு வண்டிகளில் நூலகம் போன்ற முயற்சிகளும் இதில் அடங்கும்.
பெங்களூரு விஜயநகர் ஆர்.பி.சி லே-அவுட் பகுதி பொது நூலகத்தில் நடந்த நூலக கண்காட்சி.
சுதந்திரத்திற்குப் பிறகு, பொது நூலகங்களுக்கான தேசிய இயக்கம், கல்வி மற்றும் உதவிக்கான ஐந்தாண்டு திட்டங்களின் ஒரு பகுதியாக பள்ளி நூலக சேவைகளை மேம்படுத்துதல், மற்றும் நூலக திட்டங்களுக்கு ஆர்.ஆர்.ஆர்.எல்.எஃப் மானியங்களை வழங்குதல் போன்ற பொது நூலகங்களுக்கான பயிற்சி மற்றும் வளர்ச்சிக்கென ஒரு சில அரசு முயற்சிகள் உள்ளன. கிராமங்கள் மற்றும் தாலுகாக்களில் உள்ள ஒரு சில பொது நூலகங்களுக்கும் கட்டிடங்கள் கட்டுவதற்கும் வசதிகளை மேம்படுத்துவதற்கும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த திட்டங்கள் தற்காலிகமாக இருந்தன மற்றும் இந்திய தேசிய நூலகம் மற்றும் இந்திய தேசிய ஆவணக்காப்பகங்களை நிர்வகிக்கும் அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் இது நிர்வகிக்கப்படவில்லை.
ஒருங்கிணைந்த திட்டங்கள் இல்லாமல் பல நூலகங்கள் மோசமான நிலையில் உள்ளன - எடுத்துக்காட்டாக, லைவ்மின்ட் மே 2013 செய்தி குறிப்பிட்டவாறு, பீகார் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் மாவட்ட நூலகத்தில், 12,000 புத்தகங்கள், மிகவும் மோசமாக செயல்படுகிறது. இதை நிர்வகிக்கும் நூலகரின் மாதச்சம்பளம் ரூ.700 - ஒரு பெருநகரத்தில் ஒரு நடுத்தர வகையான உணவகத்தில் உணவு ஒன்றின் விலை இது. ஆயினும்கூட, பல மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்கு படிக்க, தினமும் நூலகத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
கிராமப்புறங்களில் 70,817 நூலகங்களும் நகர்ப்புறங்களில் 4,580 நூலகங்களும் உள்ள நிலையில், இவை முறையே 83 கோடி மற்றும் 37 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு சேவை செய்வதாக, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவித்தது. அப்போது தான் முதல்முறையாக கணக்கெடுப்பு (அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டன) நடந்தது. இந்த எண்கள் தோராயமாக ஒவ்வொரு 11,500 பேருக்கும் ஒரு கிராமப்புற நூலகமாகவும், 80,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒரு நகர்ப்புற நூலகமாகவும் மொழிபெயர்க்கப்படுகின்றன. இருப்பினும், இந்த நூலகங்களின் செயல்பாடு மற்றும் சேவை திறன்களின் அளவு குறித்து துல்லியமான தகவல்கள் எதுவும் இல்லை - கிராமப்புற நூலகங்கள் ஒரு சில புத்தகங்களைக் கொண்ட ஒரு அறையாக இருக்கக்கூடும், மற்றவை தனியார் நன்கொடை பங்களிப்பு அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆதரவால் இயங்கக்கூடும்.
Source: Census of India 2011, District Census Handbooks
மாதிரி நூலகங்களை அமைப்பது, திறனை வளர்ப்பது, விரிவான கணக்கெடுப்பு மேற்கொள்வதன் மூலம், உகந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது என்ற நோக்கத்துடன், நூலகங்கள் தொடர்பான தேசிய இயக்கம் 2014 இல் தொடங்கப்பட்ட பிறகு, பொது நூலக அமைப்பின் நடைமுறைகள் மற்றும் செயல்திறனை அறிய, நூலகங்களின் மற்றொரு அதிகாரபூர்வ கணக்கெடுப்பை கலாச்சார அமைச்சகம் மேற்கொண்டது. இது ‘நூலகங்களின் தரமான மற்றும் அளவு ஆய்வு’ என்று அழைக்கப்பட்டது, மேலும் 5,000 நூலகங்களின் அடிப்படை தரவுகளைத் தயாரிப்பதன் மூலம் தொடங்கியது. இருப்பினும், 2014 முதல் கண்டுபிடிப்புகள் குறித்து எந்த புதுப்பிப்பும் இல்லை, கணக்கெடுப்பின் முடிவு தெளிவாக இல்லை. தற்போது இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட நூலகங்களின் எண்ணிக்கை 5,478 ஆக இருப்பதால், எண்களும் முரண்பாடாகத் தோன்றுவதாக, தேசிய நூலகங்களின் பதிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் மற்ற ஆய்வுகளில் எண்கள் மிக அதிகமாக இருந்தன.
பொது நூலகங்களின் செயல்பாடு
இந்தியாவில், பொது நூலகங்களுக்கு ஒரே மாதிரியான, நாடு தழுவிய நிர்வாக முறை இல்லை.
நகர நூலகங்கள் அல்லது கிராம சபைகள் போன்ற உள்ளூர் நிர்வாக அமைப்புகளிடமிருந்து வரிகளைப் பயன்படுத்தி மாநில நூலகங்களால் பொது நூலகங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவின் 29 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களில், 19 மாநிலங்கள் மாநில நூலகச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளன, அவற்றில் ஐந்து மாநிலங்களுக்கு மட்டுமே நூலக செஸ் அல்லது வரி விதிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களிலிருந்து நூலக செஸ் சதவீதம்
Source: Respective state library acts
குறைந்த கல்வியறிவு விகிதங்களைக் கொண்ட மாநிலங்களுக்கு சமீபத்திய ஆண்டுகள் வரை நூலகச் சட்டம் இல்லை - பீகார் மற்றும் சத்தீஸ்கர் 2008 இல் இச்சட்டத்தையும், 2009 ல் அருணாச்சல பிரதேசமும் இதை நிறைவேற்றியன; ஆனால் இரண்டிலுமே இன்னும் நூலக செஸ் விதிப்பு இல்லை.
மாநில அளவில், பொது நூலகங்களை நிர்வகிக்க பல துறைகள் உள்ளன -த மிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில், நூலகங்கள் பொது நூலகங்களின் துறையால் கட்டுப்படுத்தப்படுகின்றன; திரிபுரா மற்றும் ஹரியானாவில், நூலகங்கள் கல்வித் துறையால் நிர்வகிக்கப்படுகின்றன, மிசோரம் மற்றும் கோவாவில் உள்ளவை கலை மற்றும் கலாச்சாரத் துறையின் கீழ் உள்ளன.
உள்ளூர் நூலக அதிகாரிகள் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய நூலக சேவைகளின் செலவுகளையும் ஏற்பாடுகளையும் பதிவுசெய்து வெளியிட வேண்டும், ஆனால் பெரும்பாலானவை அவ்வாறு இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
தமிழ்நாட்டின் வேலூர் போன்ற சில மாவட்டங்கள் ஆண்டுதோறும் பொது நூலகங்கள் குறித்த புள்ளிவிவரங்களை தங்கள் மாவட்ட புள்ளிவிவர கையேட்டில் வெளியிடுகின்றன, அவை இந்த மாவட்டங்களின் வலைத்தளங்களிலும் கிடைக்கின்றன. இதுபோன்ற தகவல்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் கிடைத்திருந்தால், இந்த முக்கியமான சேவையைப் பற்றி பொதுமக்களுக்கு தெரிவிப்பதில் இது நீண்ட தூரம் செல்லும்.
பொது நூலகங்களின் சரியான செயல்பாட்டிற்கு நிதி சுயாட்சி அவசியம். நூலக வரி வசூலிக்கும் ஐந்து மாநிலங்களை தவிர - தமிழ்நாடு, ஒன்றுபட்ட ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் கோவா (வரைபடத்தை காண்க ) - மற்ற 14 மாநில சட்டங்களுக்கு பொது நூலகங்களுக்கான நிதி பாதுகாப்பைப் பெறுவதற்கு கருவி இல்லை. இது நூலகங்கள் தங்கள் சேவைகளை விரிவாக்குவதை கடினமாக்குகிறது. மேலும், பல மாநிலங்களில் அதிக மக்கள் தொகைக்கு எதிரான குறைந்த செலவு என்பது, முழு மக்கள்தொகையையும் உள்ளடக்குவதற்கு நூலகங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதாகும் என, மே 31, 2017 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆதாரம்: வேலூர் மாவட்ட புள்ளிவிவர கையேடு, 2016-2017.
கல்வியறிவு மற்றும் பொது நூலகங்களின் வளர்ச்சி
கல்வியறிவு வளர்ச்சி கலை, கலாச்சாரம் மற்றும் நூலகங்களுக்கான பொது செலவினங்கள் இடையே நெருக்கமான இணைப்பு உள்ளது. இந்தியாவில், கல்வியறிவு விகிதம் 1951 முதல் தொடர்ந்து உயர்ந்துள்ளது; இருப்பினும், பொது நூலகங்களின் எண்ணிக்கை, அவற்றின் விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை இணைந்து உருவாக்கப்படவில்லை.
Source: Census of India, 2011
நூலகங்களுக்காக ஒரு மாநிலத்தின் செலவுக்கும் அதற்கான விருப்பத்திற்கும் எந்த உறவும் இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு மாநிலத்தின் நூலகங்களுக்காக செலவழிக்கும் திறன் மற்றும் அது பெறும் நிதி மற்றும் நூலகங்களுக்கு செலவழிக்க அதன் விருப்பம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு நேரடியான உறவும் இருக்கக்கூடாது, ஏனெனில் இது ஒரு மாநிலத்தின் கல்வி மற்றும் கல்வியறிவு கொள்கைகளைப் பொறுத்தது. உதாரணமாக, தென் மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, எப்போதும் ஒரு உயர்ந்த பொது நூலகத்துறை வளர்ச்சியை கொண்டிருக்கின்றன, ஒவ்வொன்றும் சுமார் 2,000 நூலகங்கள் உள்ளன (கீழே உள்ள தரவை காண்க), பீகாரில் உள்ள எண்ணிக்கையை விட மிக அதிகமான மக்கள் தொகை உள்ளது. ஆனால் இந்த மாநிலங்களுக்கு எப்போதும் இந்த நோக்கத்திற்காக மத்திய அரசு பெரியதாக உதவியதில்லை. மறுபுறம், பல மாநிலங்களும் பொது நூலகங்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசிடம் நிதி பெறத் தவறிவிட்டன.
இந்தியாவில் உள்ள பொது நூலகங்களுக்கு மத்திய அரசு விடுவித்த நிதி உதவி
Source: IndiaStat, 2012
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள பொது நூலகங்கள், தங்களது பெரிய மக்கள்தொகையின் தேவையை பூர்த்தி செய்ய நூலக வளங்களைப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, அமெரிக்காவில் பொது நூலக அமைப்பு மொத்த மக்கள்தொகையில் 95.6% பேருக்கு சேவைகளை வழங்குகிறது மற்றும் ஆண்டுதோறும் 35.96 டாலர் செலவழிக்கிறது, அதே நேரத்தில் இந்தியாவில் பொது நூலகங்களின் வளர்ச்சிக்கான தனிநபர் செலவு வெறும் 7 பைசா என்று உள்ளது. அமெரிக்காவில் உள்ள நூலகங்களுக்கான முதன்மையாக உள்ளூர் நிதி - 80% நிதி தேசிய நிதியை விட உள்ளூர் கவுன்சில்களில் - இருந்து வருகிறது.
ஐரோப்பாவில், பொது நூலகங்களுக்கான பட்ஜெட்டில் 83% உள்ளூர் நகராட்சிகளிலிருந்து வருகிறது என்று 425 நூலகங்களின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள பல வளரும் நாடுகள் பொது நூலகங்களுக்கான தனிநபர் செலவினம் குறித்த சில புள்ளிவிவரங்களைக் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நைஜீரியாவில், பொது நூலகங்களுக்கான செலவு ஏறக்குறைய NGN 5.00 (அமெரிக்காவில் சுமார் 4 காசுகள்) வரை இருக்கும் என, 2008 இல் வெளியிடப்பட்ட உன்னுமா ஓபராவின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
ஆதாரம்: சூசன்னா மற்றும் பலர். 2013; ஆலியா, 2016; ஐ.எல்.எம்.எஸ்., 2016; சட்டமன்ற சபை ஆணையம், 2016; சேதுமாத்ராவ், 2016 பொது நூலகங்கள் அறிஞர்களால் புத்தகங்களுக்கான களஞ்சியமாக கருதப்படுகின்றன. அவை ஒரு அடையாளமாகவும், நகர்ப்புற வளர்ச்சிக்கான ஊக்கியாகவும், சமூக தொடர்புக்கான இடமாகவும், பொது களத்தின் முக்கிய மையமாகவும் ஒரு அனுபவமாகக் காணப்படுகின்றன. இன்றைய தகவல் யுகத்தில், பல நாடுகளில் உள்ள நூலகங்கள், பாரம்பரிய நூலக சேவைகளுடன், நிகழ்வுகளின் ஹோஸ்டிங், டிஜிட்டல் சேவைகள், பொது மக்களுடன் குறிப்பாக ஆதரவு தேவைப்படும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுடன் ஈடுபடுவது, மற்றும் அறிவு பொருளாதாரத்தை உருவாக்குவது போன்ற பல்வேறு செயல்பாடுகளை ஆராய்ந்து வருகின்றன. இது, கல்விக்கான அணுகலை தரும்.
இந்தியாவில் உள்ள நூலகங்கள் பரந்த செயல்பாடுகளை மேற்கொள்ள, பொது நூலகங்களில் முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் நூலகங்கள் வழங்கும் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை முறையாக மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
(இந்தியாவில் உள்ள பொது நூலகங்களின் கொள்கை ஆய்வு என்ற கட்டுரையின் ஆசிரியர்களால் இத்தலைப்பில் ஒரு விரிவான கட்டுரை வெளியிடப்பட்டது).
(பாலாஜி, வினைய் இருவரும் பெங்களூரு ஐ.ஐ.எச்.எஸ் நூலகக்குழுவில் உள்ளனர். மோகன்ராஜு ஐ.ஐ.எச்.எஸ். இல் வெளி ஆலோசகர்.)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.