ஸ்ரீபெரும்புதூர், தமிழ்நாடு:தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி (குழந்தை பராமரிப்பு மையம்) ஒன்றில் அழகான படம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது. சுவர்கள் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் மிளிர, அதில் பல வண்ணங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஓவியங்கள், பூக்கள், மாதங்கள், நாட்களின் பெயர்கள் மற்றும் பிற தகவல் விளக்கப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. பொம்மைகள் மற்றும் கற்றல் கருவிகள், ஒரு மூலையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது, அது அறிவியல் பாடப்பிரிவாகத் தோன்றுகிறது.

அந்த அங்கன்வாடியில், இருபது குழந்தைகள் கோரஸாக செய்யுளை கூறிக் கொண்டிருந்தனர். அதனுடன் இணைக்கப்பட்ட சமையலறையில் இருந்து கமகமவென்று சாம்பார்வாசனையும் கொதிக்கும் அரிசியின் மணமும் வீசுகிறது. கட்டிடத்திற்கு வெளியே சிறிய தோட்டத்தில் காய்கறிகள் மற்றும் கீரைகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த அங்கன்வாடியில், உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தின் தெளிவான தரம் தனித்துவமாக தெரிகிறது - நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான அங்கன்வாடிகள் இப்படி இருப்பதில்லை.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில்அங்கன்வாடி மையங்களின் செயல்திறனை மேம்படுத்துவதில், விரிவான பயிற்சி மற்றும் சமூகங்களை ஈடுபடுத்துவது மற்றும் அணிதிரட்டுவது போன்ற முயற்சிகள் பெரிதும் உதவியுள்ளன. 50 திட்டங்களில், தாய் மற்றும் குழந்தை சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவற்றில் புதுமைகளை ஆவணப்படுத்துவது, திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதை எங்களது கள ஆய்வில் கண்டறிந்தோம். அங்கன்வாடிக்கான செலவு மற்றும் வளம், அதில் கிடைக்கும் பயனுள்ள தீர்வுகள் போன்றவை, நாடு முழுவதும் உள்ள மையங்களுக்கு சிறந்த பாடத்தை கற்பிப்பதாக உள்ளன. காலியிடங்கள், பயிற்சி இடைவெளிகள், அதிக வருகை இல்லாத மையங்கள், உள்கட்டமைப்பு மற்றும் தளவாட உபகரணம் போன்ற பிரச்சனைகளைஇவை எவ்வாறு எதிர்கொண்டன என்பதையும் இது விளக்குகின்றது.

ஏறத்தாழ 8.8 கோடி பயனாளிகளுக்கு--ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள், மற்றும் கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்களுக்கு -- துணை ஊட்டச்சத்துகள், பாலர் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதல், நோய்த்தடுப்பு, சுகாதார பரிசோதனைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட சேவைகளை அங்கன்வாடிகள் வழங்குகின்றன. ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்து 1975ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ஐசிடிஎஸ்)திட்டத்தின் கீழ், இம்மையங்கள் செயல்படுகின்றன. இருப்பினும், இந்தியாவில் 4.66 கோடி வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகள் (வயதுக்கேற்ற வளர்ச்சியின்மை; உலகளவில் மூன்றில் ஒரு பங்கு) மற்றும் 2.55 கோடி மெலிந்த குழந்தைகள் (உயரத்திற்கேற்ற எடையின்மை) உள்ளனர் என்று உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை 2018தெரிவித்துள்ளது. இவை இரண்டுமே, குறிப்பாக ஒரே குழந்தைக்கு இரண்டும் இருக்கும்போது, அது இறப்புக்கு வழிவகுக்கிறது,

இந்தியாவில் ஆரம்பகட்ட குழந்தை பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்கான இரண்டு முதன்மை முறைகளாகஇருப்பவை, அங்கன்வாடிகள் மற்றும் தனியார் பிளே ஸ்கூல் எனப்படும் பாலர் பள்ளிகள். ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்புமற்றும் வளர்ச்சிக்கு இந்த முக்கியத்துவம், அவசியமானது. ஏனெனில் இது ஒரு குழந்தையின் சமூக, உணர்ச்சி, அறிவாற்றல் மற்றும் உடல் தேவைகளை நிவர்த்தி செய்கிறது.

அங்கன்வாடி பணியாளர்களை ஊக்குவித்தல்

தமிழகமும் கேரளாவும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு வலுவான வாழ்க்கைப்பாதையை அமைத்து தந்துள்ளன. அடிப்படை சம்பளத்துடன் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, மகப்பேறு விடுப்பு மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆறு மாதஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, மாதத்திற்கு ரூ.100 மருத்துவ நிதி, ஓய்வூதியம், விருப்ப ஓய்வுச்சலுகைகள்ஆகியவை உள்ளன. கேரளாவில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம், இலவச மருத்துவ வசதி மற்றும் வீடு கட்டுவதற்கு, திருவிழாக்கள் மற்றும் தீவிர நோய்க்கால பணியின் போது நிதி ஊக்கத்தொகை போன்ற சலுகைகளைபெறுகின்றனர்.

இரு மாநிலங்களிலுமே, ஒரு அங்கன்வாடி உதவியாளர் அங்கன்வாடி பணியாளராக பதவி உயர்வு பெற முடியும். பட்டம் பெற்ற ஒரு அங்கன்வாடி பணியாளர், 10 வருட அனுபவம் பெற்ற பிறகு மாநில தேர்வாணையத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றால், மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெறலாம். கேரளாவில், 50% மேற்பார்வையாளர் பதவிகள்அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில், மூன்று வருட வேலை மற்றும் பயிற்சிக்குப் பிறகு, தொழிலாளர் சுகாதாரத்துறையில் கிராம சுகாதார செவிலியர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவராகிறார்.

"கிராமங்களில் பல பெண்கள் அங்கன்வாடி பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள்" என்று திருவனந்தபுரம் அருகேயுள்ள ஒரு கிராம ஊராட்சியின் தலைவி அனிதா, 42, எங்களிடம் கூறினார். இந்த சூழல், அவர்களுக்கு சமூகத்தில் மரியாதை மற்றும் அங்கீகாரத்தை வழங்குகிறது. "இந்த தொழிலாளர்களில் சிலர் சமூகத்துடனான தொடர்பு காரணமாக அப்பகுதியில் பிரபலமடைகின்றனர். அவர்கள் இறுதியில் கிராம ஊராட்சி உறுப்பினர்களாகவும், கிராமத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.

கேரளாவின் திருவனந்தபுரம் அருகே நெட்டயத்தில் உள்ள ஒரு நகர்ப்புற அங்கன்வாடி மையம் இது. தகவல் விளக்கப்படங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அங்கன்வாடி பணியாளரால், குழந்தைகள் மற்றும் அவர்களது தாய்மார்களின் உதவியோடு தயாரித்து, மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மாநிலங்களிலும், அங்கன்வாடி பணியாளர்களின் செயல்திறன், சமூக பங்கேற்பு, உள்பராமரிப்பு மற்றும் பிற அளவுருக்கள் குறித்து, மேற்பார்வையாளர்கள் மதிப்பீடு செய்கின்றனர். பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மூலம் விருது வழங்கப்படுகிறது. இது பணியில்ஒரு ஆரோக்கியமான போட்டிச்சூழலை உருவாக்குகிறது. பாலர் கல்விக்கு முக்கியத்துவம் தருவதால், அங்கன்வாடி பணியாளர்களை ‘மிஸ்’ என்ரே அழைக்கிறார்கள். இது, பணியாளர்களுக்கு பெருமையையும், உரிய அங்கீகாரத்தையும் தருவதாக, அங்கன்வாடி பணியாளர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.

24 வயதான ரேணுதேவி, கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் நெட்டயம் ஒன்றியத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியின் ஆசிரியர் ஆவார். அவர் ஒரு அறிவியல் பட்டதாரி. ஆரம்பக்கல்வியை தான் கற்ற மையத்தில் பணியாற்றுவதன் மூலம், சமூகத்திற்கு தனது நன்றிக்கடனை திரும்பக் செலுத்துகிறார். "எனது தாய் ஒரு அங்கன்வாடி ஆசிரியராக இருந்தார்; குழந்தையாக இருந்தபோது நானும் இங்குதான் படித்தேன்" என்று ரேணுதேவி கூறினார். "என் அம்மா ஓய்வு பெற்ற பிறகு, நான் அங்கன்வாடி ஆசிரியராக ஆசைப்பட்டதால், இந்த மையத்திற்கு வேலைக்கு விண்ணப்பித்து சேர்ந்தேன்" என்றார்.

பக்கத்து மாநிலமான கர்நாடகாவில்,60% அங்கன்வாடி பணியாளர்கள்தங்களது பணியில் திருப்தி இல்லை எனவும், ஒடிசாவில் இது 91%ஆக இருந்ததையும் வெவ்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன. குறைந்த சம்பளம் அதுவும் தாமதமாக கிடைப்பது, அங்கன்வாடி பணியாளர்களின் வேலை மீதான அதிருப்திக்கு முக்கிய காரணம் என்று, மேம்பாட்டு ஆலோசனை நிறுவனமான ஆக்ஸ்போர்டு பாலிசி மேனேஜ்மென்ட் (2019) மற்றும் இங்கிலாந்தின் சசெக்ஸில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால், பீகாரில் மேற்கொள்ளப்பட்ட அக்டோபர் 2019 ஆய்வில்தெரியவந்துள்ளது. 2019ம் ஆண்டில் ஜார்க்கண்டில் 70,000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், மோசமான சம்பளம் மற்றும் பிற சலுகைகள் இல்லாததை கண்டித்து, 50 நாட்களுக்கும் மேல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள ஐ.சி.டி.எஸ் துறைகள், பெண்கள் தலைமையிலானவை. இது மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இடையே, நெருக்கமான நட்பை உறுதி செய்கிறது என்று மேற்பார்வையாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். அவர்களால் முக்கியமான விஷயங்களை தயக்கமின்றி விவாதிக்க முடிகிறது. தமிழக தலைநகர் சென்னையில் இருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ள திருவள்ளூரில் இருக்கும் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் (CDPO) 44 வயதான புஷ்பலதா, “ஒவ்வொரு நாளும் பணிக்கு வருவதையும், களப்பயணங்களின் போது ஒருவரை ஒருவர் சந்திப்பதையும் நாங்கள் எதிர்பார்த்து இருக்கிற்றோம் என்றார். "எங்களது பழக்கம் பல ஆண்டுகளாக நீடித்து இருப்பதால், பிரச்சினைகளை ஒருவருக்கொருவர் சுதந்திரமாக விவாதிக்க முடிகிறது" என்றார்.

தொழிலாளர்களுக்கு விரிவான பயிற்சி

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அங்கன்வாடி பணியாளர் லட்சுமி *, 28; பயிற்சியின் போது நடத்தப்பட்ட ஒரு செயல்பாட்டை நம்மிடையே விவரித்தார்: ஒரு குழந்தையை குறிக்கும் ஒரு கைப்பாவை பொம்மை, குச்சிகள் சிலவற்றின் உதவியோடு மையத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குச்சியும் குழந்தைக்கு உடல்நலம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற வெவ்வேறு அம்சங்களைக் குறிப்பதாகும். "பயிற்சியாளர், ஒரு சமயத்தில் ஒரு குச்சியை மட்டும் அகற்றும்படி எங்களிடம் சொன்னார் " என்ற லட்சுமி, “ஒவ்வொரு குச்சியாக அகற்ற, இறுதியில், கைப்பாவை கீழே விழுந்தது; இது, ஒவ்வொரு அம்சத்தையும் இழந்தால், குழந்தை இறந்துவிடும் என்பதை குறிக்கிறது. இது ஒரு சக்திவாய்ந்த பயிற்சியாக இருந்தது, அதன் முடிவில் எங்களுக்கே கண்ணீரே வந்துவிட்டது. நாங்கள் எங்கள் பணியை சரிவர செய்யாவிட்டால், அங்கன்வாடிகள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்யாவிட்டால், அது ஒரு குழந்தையின் மரணத்திற்கு வழிவகுக்கும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதில் எங்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்” என்றார்.

உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து சேவைகள் பயனாளிகளுக்கு திறம்பட வழங்கப்படுவதை உறுதி செய்ய அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது மிக முக்கியமானது. கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றில் இதற்காக ஒருமாத படிப்பு உள்ளது; சுகாதாரம் மற்றும் பிற துறைகளின் பிரதிநிதிகள், இப்டங்களை நடத்துகின்றனர்.

ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை, புத்துணர்ச்சி பயிற்சி அளிக்கப்படுகிறது, மற்றும் தொழிலாளர்களின் செயல்திறனில் ஏதேனும் இடைவெளிகள் உண்டா என்பதை அறிய, மேற்பார்வையாளர்கள் மையத்திற்கே சென்று பயிற்சி அளிக்கின்றனர். குறுக்கு கற்றலுக்காக மற்ற அங்கன்வாடிகளில் இருந்து வெளிப்பார்வையாளர்களின் வருகை ஊக்குவிக்கப்படுகின்றன.

கீழ் மட்ட அளவிலான பயிற்சிக்கு தமிழகம் அதன் சொந்த பரவலாக்கப்பட்ட பயிற்சி முறையைக்கொண்டுள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு பயிற்சி குழு உள்ளது, அதில் ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர். கேரளாவில் ஐ.சி.டி.எஸ் மேற்பார்வையாளர்களுக்கு ஒரு நடுத்தர அளவிலான பயிற்சி மையமும், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு 14பயிற்சி மையங்களும்(மாவட்டத்திற்கு ஒன்று) உள்ளன.

தமிழ்நாட்டில், ஆரம்பக் கல்வியை உலகமயமாக்குவதற்கான மத்திய அரசின் திட்டமான சர்வ சிக்ஷா அபியான்ஆசிரியர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து, பிளே ஸ்கூல் கிட்மற்றும் அங்கன்வாடிகளுக்கான பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளன. வகுப்பறையில் செயல்பாட்டு அடிப்படையிலான கற்றலை செயல்படுத்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் அறிவியல் மனநிலையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகளை அவை வடிவமைக்கின்றன. உதாரணமாக, காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக உண்டியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இடது:தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் உள்ள அறிவியல் பிரிவு பகுதி. வலது:நான்கு வயது சிறுவன் ‘நல்ல பழக்கங்களை’ சித்தரிக்கும் விளக்கப்படத்தைப் படிக்கிறான். தமிழ்நாட்டில் அங்கன்வாடி பணியாளர்கள், வகுப்பறையில் செயல்பாட்டு அடிப்படையிலான கற்றலை மேற்கொள்வதற்கான வசதியை பெற்றுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அங்கன்வாடி பணியாளர் ரேவதி, 31, மற்றொரு செயல்பாட்டை விவரித்தார்: ஒவ்வொரு குழந்தையும் வெளியே சென்று வானத்தின் நிறம், பூக்கள் மற்றும் அவர்கள் பார்க்கக்கூடியவற்றை கூர்ந்து கவனிக்கும்படி அறிவுறுத்தப்படுவார்கள். பின்னர் திரும்பி உள்ளே வந்து குழந்தைகள் தாங்கள் கவனித்தவற்றை வகுப்பினருடன் பகிர்ந்து கொள்வார்கள். வாரத்திற்கு ஒரு முறை, வீட்டில் கிடைக்கும் பழங்கள் பற்றி விவரிக்கும்படி குழந்தைகள் கோரபப்ட்டு, ஊக்குவிக்கப்படுகிறார்கள். "இந்த சிறிய செயல்பாடு குழந்தையின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்கு எங்களுக்கு உதவுகிறது, மேலும் அறிவை பெறுவதற்கான பணி மிகவும் அறிவியல் பூர்வமாக உட்பொதிக்கப்படுகிறது" என்று ரேவதி கூறினார். "அதே நேரத்தில், குழந்தைகளின் பார்வையில், கற்றல் மிக வேடிக்கையாக, சுவாரஸ்யமாக இருக்கும். சலிப்பு ஏற்படாது" என்றார்.

கேரளாவில், அரசு நடத்தும் புத்துணர்ச்சி பயிற்சித் திட்டங்களைத் தவிர, ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள் போன்ற சமூக உறுப்பினர்கள் முதன்மை பயிற்சியாளர்களாக மாற்றப்படுகிறார்கள். இது பணியாளர்களுக்கு வழக்கமான உயர்தரமான பயிற்சியை வளம் சார்ந்து பயனுள்ள முறையில் உறுதி செய்கிறது.

"பணி ஓய்வுக்குப்பிறகு, சமுதாயத்திற்கு சிறந்த பங்களிப்பை தர, இது ஒரு சிறந்த வழி என்பதை நாங்கள் உணர்கிறோம்" என்று திருவனந்தபுரத்தின் ஆரியநாடு கிராமத்தில் முதன்மை பயிற்சியாளரான 62 வயதான பிந்து எங்களிடம் கூறினார். "உள்ளூர் அங்கன்வாடிகளை குழந்தைகளுக்கான கற்றல் மற்றும் மேம்பாட்டுக்கு சிறந்த இடமாக மாற்ற எங்கள் திறன்களைப் பயன்படுத்த முடிகிறது" என்றார்.

காலியிடங்களை நிரப்ப ‘ஆசிரியர் வங்கி’ பயன்படுத்தும் கேரளா

இந்தியாவின் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்கள், குழந்தைகளின் அடிப்படை ஊட்டச்சத்து மற்றும் மேம்பாட்டு சேவை அணுகலை பாதிக்கின்றன. பீகாரில், மொத்தமுள்ள 1,15,009 அங்கன்வாடி பணிகளில் 26,835 (23.4%) காலியாக உள்ளன - இது நாட்டில் மிக அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதற்கு மாறாக, கேரளாவில் அனுமதிக்கப்பட்ட 33,318 பதவிகளில் 216 (0.65%) காலியிடங்கள் மட்டுமே இருந்தது - இது, 2017-18ம் ஆண்டிற்கான அரசு தரவு அடிப்படையிலானது. இந்த விஷயத்தில், கேரளாவை போல் தமிழகம் சிறப்பாக செயல்படவில்லை - இங்கு அனுமதிக்கப்பட்ட 54,439 பதவிகளில் 15,612 (28.7%) காலியிடங்கள் உள்ளன.

ஐ.சி.டி.எஸ் காலியிடங்களை எதிர்கொள்ள ‘ஆசிரியர் வங்கி’ என்ற திட்டத்தை கேரளா அறிமுகப்படுத்தியது. நேர்காணல் செயல்முறையின் அடிப்படையில், தேவையான தகுதியுள்ள, ஆர்வமுள்ளவர்களின் தொகுப்பு, கிராம அளவில் உருவாக்கப்படுகிறது. இக்குழு, காலி பணியிடத்தை உடனே நிரப்ப உதவுகிறது. இது அங்கன்வாடியின் சீரான செயல்பாட்டை உறுதி செய்கிறது.

சமூகங்களை ஈடுபடுத்துதல் மற்றும் அணிதிரட்டுதல்

உந்துதல் இல்லாமை, தொடர்புடைய அறிவு மற்றும் பயிற்சி இல்லாததால், இத்திட்டத்தில் சமூக ஈடுபாடு பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது என்பதை ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இதற்கு மாறாக, சமூக ஈடுபாட்டின் மூலம் தமது செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக செயல்திறனை கேரளா தனது ஐசிடிஎஸ் திட்டத்திற்கான சமூகத்தணிக்கைகளைஅளவிட, புரிந்துகொள்ள மற்றும் அறிக்கை அளிக்கிறது. பெற்றோர், இளம் பருவ பெண்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷா) ஆகியோரைக் கொண்ட குழுக்கள் அங்கன்வாடி தொழிலாளர்களின் அறிவு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பெற்றோரின் திருப்தி போன்ற குறிகாட்டிகளை மதிப்பீடு செய்கின்றன. அவர்கள் ஊராட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் கிராம அளவிலான கூட்டத்தை நடத்துகிறார்கள், அங்கு கோரிக்கைகளின் வரைவு தயாரிக்கப்பட்டுபொறுப்புக்கூறலுக்காக மாநிலத்துறையுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

மாநிலத்தில் 3ஜி (மூன்றாம் தலைமுறை) அங்கன்வாடிகள் உள்ளன. அதில் உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றனர். இங்கு மூன்று தலைமுறையினர் இடையே தொடர்பு மற்றும் இணை கற்றலை செயல்படுத்துகிறார்கள். வளரிளம் சிறுமியருக்கு பெரியவர்கள் சமையல் மற்றும் தையல் கற்றுத்தருகிறார்கள்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியில், சூடான உணவை சுவைத்து உண்ணும் குழந்தைகள்.

தமிழ்நாட்டில், அங்கன்வாடிகளில் கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களின் கடைசி மூன்று மாதங்களில், சமுதாய வளைகாப்புநிகழ்ச்சி நடத்தப்படுகிறது. விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அங்கன்வாடிகள் மீது நம்பிக்கையை வளர்க்கவும், பல்வேறு திட்டங்களில் பங்கேற்க பெற்றோர் பங்கேற்கவும் இவ்வாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

பணியாளர்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்த, சமுதாயத்திடம் இருந்து நன்கொடைகள் மற்றும் உதவிகளை நாடுகின்றனர். அவர்கள், தங்கள் சுற்றுப்புற பகுதியில், ‘தாய் ஆதரவு குழுக்களை’ உருவாக்குகிறார்கள். அங்கன்வாடி பணியாளர் விடுப்பில் இருத்தல் அல்லது பணியில் இல்லாதிருந்தால் அங்கன்வாடி செயல்பட, இந்த தாய்மார்கள் உதவுகிறார்கள்; அத்துடன், அண்டை வீட்டாரின் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப ஊக்குவிக்கிறார்கள்.

மார்ச் 2018ல் தொடங்கப்பட்ட மத்திய அரசின் போஷன் அபியான்திட்டம், ஊட்டச்சத்து பற்றிய சிறந்த விழிப்புணர்வுக்காக சமூக அணிதிரட்டலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. "போஷன் அபியான் சமூக அணி திரட்டலுக்கு முக்கியத்துவம் தருகிறது. ஆனால் நாங்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாகஇந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" என்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிடிபிஓ மாலதி கூறினார். “உதாரணமாக, ஆரம்பத்தில், கிராமங்களில் குழந்தைகளின் எடை தொடர்பாக நிறைய எதிர்ப்புகள் இருந்தன. சமுதாயத்தில் உள்ள எதிர்ப்பை போக்க, அனைவரையும் ஒன்று திரண்டி, விழிப்புணர்வு படத்தை திரையிட ஏற்பாடு செய்தோம்; செயல்முறை விளக்கம் தந்தோம். அவர்களுடைய நம்பிக்கையை பெறுவதற்கும் அவர்களின் நடத்தையில் மாற்றத்தைத் தூண்டுவதற்கும், அவர்களுடன் நேரம் செலவிட்டோம்” என்றார்.

கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்கள், தங்கள் வீடுகளில் தோட்டங்களை அமைத்து, அதில் விளைபவற்றை அங்கன்வாடிகளுக்கு அனுப்ப ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று சி.டி.பி.ஓ மாலதி கூறினார். சமூகம் பங்களிக்கும் காய்கறிகள் மற்றும் தானியங்கள் குழந்தைகளுக்கு உணவு சமைக்கப் பயன்படுகின்றன. இந்த செயல்முறை சமூக ஈடுபாட்டின் இரட்டை நன்மை மற்றும் குழந்தைக்கு ஊட்டச்சத்து நன்மைகளை விளைவிக்கிறது.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற அங்கன்வாடி மையம் ஒன்றில் சமையலறை அருகேயுள்ள தோட்டம். தமிழகத்தின் கிராமப்புற குடும்பங்கள் பலவும், தங்கள் வீட்டில் தோட்டங்களை அமைத்து, காய்கறி விளைவிக்கின்றன. அவற்றை அங்கன்வாடிகளுக்கு அனுப்ப ஊக்குவிக்கப்படுகிறார்கள், அவை, குழந்தைகளுக்கு உணவு சமைக்க பயன்படுத்தப்படுகிறது.

பல்வேறு அங்கன்வாடி மையங்களின் சிறந்த பணிகள், நடைமுறைகளை வெளியிடும் சிட்டுக்குருவிஎன்ற மாதம் இருமுறை செய்திமடல் தமிழ்நாட்டில் உள்ள சமுதாய உறுப்பினர்கள் மத்தியில் விநியோகிக்கப்படுகிறது. இது வெற்றிக்கதைகளை விவரிப்பதுடன், சத்தான சமையல் குறிப்புகளையும் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் இந்நடைமுறைகள் பிரதிபலிக்க வேண்டும்

இந்த இரு மாநிலங்களின் அணுகுமுறைகளுக்கும், அவற்றின் அதிகபட்ச கல்வியறிவு விகிதம் (இந்தியாவின் சராசரி 74% உடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் 80%; கேரளாவில் 94%), சமூக சீர்திருத்தஇயக்கங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை கொண்டுவருவதற்கான வலுவான அரசியல் விருப்பம்ஆகியன காரணமாக இருக்கலாம். பொதுச்சேவைகளை வழங்குவதில் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் வெற்றிக்கு அவற்றின் ஆக்கபூர்வமான மாநிலக் கொள்கைகள் காரணம் என்று, பொருளாதார வல்லுநர்கள் ஜீன் ட்ரீஸ் மற்றும் அமர்த்தியா சென்ஆகியோர் கூறுகின்றனர்.

ஆயினும்கூட, தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சிறந்த நடைமுறைகளை மற்ற மாநிலங்களில் செயல்படுத்த ஏதுவாக, அவற்றை ஐ.சி.டி.எஸ் போதுமான அளவில் ஆவணப்படுத்தப்படவில்லை. தமிழக அங்கன்வாடிகளில் நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வு குறித்து, கேரளாவின் மூத்த ஐ.சி.டி.எஸ் அதிகாரி, கேரளாவில் உள்ள மையங்களுக்கும் தமிழக மையங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து ஆர்வத்தோடு கேட்டறிந்தது அதன் மூலம் என்ன கற்கலாம் என்று கேட்டார். குறுக்கு கற்றலை ஊக்குவிக்க மாநிலங்களின் சிறந்த செயல்பாடுகளை ஆவணப்படுத்த, மத்திய அரசு மையம் முயற்சித்தது. ஆனால் ஆவணங்கள் செய்தித்தாள்கள், வலைத்தளங்கள் மற்றும் கட்டுரைகள் போன்ற இரண்டாம் நிலை ஆதாரவளங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன; அவை திட்டம் செயல்படுத்துதலின் விரிவான செயல்முறையை முன்னிலைப்படுத்தாது.

*அடையாள பாதுகாப்பு கருதி, ஐ.சி.டி.எஸ் அதிகாரிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

(டாங்மற்றும் சாரங்கிதற்போது புதுடெல்லியில் உள்ள அலெக்சாண்டர் அசோசியேட்ஸ் உடன் பணி புரிகின்றனர். நாடு முழுவதும் உள்ள சுகாதார திட்டங்களில் சிறந்த செயல்பாடுகளை ஆவணப்படுத்தி கற்றல் மற்றும் திட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.