ரிஷிகேஷ்: உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள நகர்ப்புற குடிசைப் பகுதியில் வசித்து வருபவர் ஆறு குழந்தைகளுக்கு தாயான சீதா தேவி (42). இந்த குடிசைப்பகுதி உள்ளூர் மக்களிடையே பிஹாரி பஸ்தி என்றும் அழைக்கப்படுகிறது.

சீதாதேவியின் 15 வயது மகன் ரமேஷ், நுரையீரலை அதிகம் பாதிக்கும் பாக்டீரியா நோயான காசநோயுடன் (TB - டிபி) போராடுகிறார். ஆனால் எலும்புகள், நிணநீர் கணுக்கள் மற்றும் பிற பாகங்களையும் அது பாதிக்கலாம், மேலும் சரியான நேரத்தில் மற்றும் உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இது உயிருக்கு ஆபத்தானது.

சீதா தேவியின் கணவர், ஒரு வருடத்திற்கு முன்பு நோய்வாய்ப்பட்டு, வேலை செய்வதை நிறுத்திய பிறகு, எட்டு பேர் கொண்ட அவர்களது குடும்பத்திற்கு சீதாதேவிதான் ஒறையாளாக பொறுப்பேற்றுள்ளார். "நாங்கள் கடனில் மூழ்கி இருக்கிறோம். நாங்கள் எங்கள் மகனுக்கு உணவளிக்கவே கடன் வாங்கியுள்ளோம். பழங்கள் மற்றும் முட்டைகளை வாங்க முடியாத நிலை உள்ளது. அவருக்கு தினமும் வழக்கமான சாப்பாடு கொடுப்பதே எங்களுக்கு பெரிய விஷயம்'' என்கிறார், காய்கறி விற்று பிழைப்பு நடத்தும் சீதா தேவி.

காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நிதி உதவி வழங்க, அரசு ஏப்ரல் 2018 இல், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (NTP) கீழ், நிக்ஷய் போஷன் யோஜனா (NPY) தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், காசநோயாளிகள் சத்தான உணவை உண்ணும் வகையில், சிகிச்சையின் காலத்திற்கு, ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் வழங்கப்படுகிறது. காசநோய்க்கான வழக்கமான சிகிச்சையானது ஆறு மாதங்கள் வரை நீடிக்கும்.

ஆனால், சீதா தேவியின் மகன் இந்தத் தொகையைப் பெறவில்லை, இவ்வாறு தொகையை பெறாதது அவர் மட்டும் இல்லை என்று உத்தரகாண்டில் இருந்து எங்களது பகுப்பாய்வு காட்டுகிறது.

மார்ச் 2022 இல் வெளியிடப்பட்ட தேசிய காசநோய் அறிக்கையின்படி, உத்தரகாண்டில் 23,574 காசநோய் நோயாளிகள் அதிகாரப்பூர்வமாக 'அறிவிப்புகள்' வாயிலாக அறியப்பட்டுள்ளனர். காசநோய் திட்டமானது இவர்களில் 88.3% அல்லது 20,825 நோயாளிகளுக்கான வங்கி விவரங்களையே கொண்டிருந்தது மற்றும் அறிவிக்கப்பட்ட நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (56%) நிக்ஷய் போஷன் யோஜனாவின் கீழ் ரூ.500 பெற்றனர். இந்தியா முழுவதும், அறிவிக்கப்பட்ட 2,135,830 காசநோயாளிகளில் 62.1% பேர் இந்தத் தொகையை ஒருமுறையாவது பெற்றுள்ளனர்.

காசநோயை நீக்குவதற்கு ஊட்டச்சத்து குறைபாட்டைச் சமாளிப்பது ஏன் அவசரம்

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் காசநோய் தாக்கும் அபாயம் ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று, காசநோய் மற்றும் நுரையீரல் நோய்க்கு எதிரான சர்வதேச ஒன்றியம் (தி யூனியன்) எனப்படும் உலகளாவிய அமைப்பால் டிசம்பர் 2021 இல் வெளியிடப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு ஒரு நபரை காசநோய்க்கு ஆளாக்குகிறது, அதே சமயம் காசநோய் இருப்பது ஊட்டச்சத்து குறைபாட்டின் வாய்ப்பை அதிகரிக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள நோயாளிகளும் காசநோயிலிருந்து மீள்வது கடினம்.

உத்தரகாண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட ஒவ்வொரு நான்கு குழந்தைகளில் ஒருவரை ஊட்டச்சத்து குறைபாடு பாதிக்கிறது; 27% குழந்தைகள் தங்கள் வயதுக்குரிய வளர்ச்சியின்றி வளர்ச்சி குறைபாடுடன் உள்ளனர், மேலும் 13.2% குழந்தைகள் வயதிற்கேற்ற உயரத்தைவிட குறைவான உடல் எடையைக் கொண்டுள்ளனர் என்று, அரசாங்கத்தின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 கூறுகிறது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 59% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 42% பெண்கள், 15-49 வயதுடையவர்கள். 2022 ஆம் ஆண்டில், 121 நாடுகளின் உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா 107 வது இடத்தில் இருந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் காசநோய் ஒழிப்பு இயக்கம் 1962 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. செப்டம்பர் 9, 2022 அன்று, ஜனாதிபதி திரௌபதி முர்மு, 2025-க்குள் காசநோயை நாட்டிலிருந்து அகற்றுவதற்கான இந்தியாவின் நோக்கத்தை மீண்டும் வலியுறுத்தினார், மேலும் பிரதம மந்திரி காசநோய் முக்த் பாரத் அபியானை அறிவித்தார். 2017-2025 தேசிய காசநோய் ஒழிப்பு மூலோபாயத் திட்டத்தின்படி, புதிய காசநோய்களை ஒரு மில்லியனுக்கு 4-க்கும் அதிகமாகக் குறைப்பதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளிக்காமல், காசநோயை அகற்றுவது இலக்கை எட்டுவது கடினம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2019 முதல், 2021 ஆம் ஆண்டு வரையிலான பரவல் கணக்கெடுப்பின் அடிப்படையில், அரசாங்கத்தின் மதிப்பீடுகள், இந்தியாவில் ஒவ்வொரு 100,000 மக்கள்தொகைக்கும் 312 வழக்குகள் இருப்பதாகக் கூறுகின்றன. உத்தரகாண்டின் மருத்துவ சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் மதிப்பீட்டின்படி, மாநிலத்தில் 100,000 மக்கள்தொகைக்கு 275 காசநோய் பாதிப்பு உள்ளது.

"காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விவரங்களை நாங்கள் சேகரிக்கிறோம். இருப்பினும், அவர்களின் நிதி நிலைமையைக் குறிப்பிடும் எந்த பத்தியும் இல்லை. நிக்ஷய் போஷன் யோஜனாவின் நோக்கம் அனைத்து நிதி பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கும் நிதி உதவி வழங்குவதாகும்" என்று டேராடூன் மாவட்ட காசநோய் அதிகாரி மனோஜ் வர்மா கூறினார். "வறுமையுடன் போராடும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக நிக்ஷய் மித்ரா யோஜனா தொடங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் எந்தவொரு தனிநபரும், அமைப்பும், அதிகாரியும் அல்லது பொது பிரதிநிதியும் காசநோயாளிகளை தத்தெடுத்து அவர்களைக் கவனித்துக் கொள்ளலாம்" என்றார்.

நிக்ஷய் போஷன் பணத்தை செலுத்தாதது


காசநோயால் பாதிக்கப்பட்ட தனது 15 வயது சிறுவனைக் கவனித்துக் கொள்ள, படத்தில் உள்ள சீதா தேவி கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார்.

ரமேஷின் காசநோயைக் கண்டறிய மூன்று-நான்கு மாதங்கள் ஆனதால், அவரது உடல்நிலை மோசமடைந்தது என்று சீதா தேவி கூறினார். இந்த நேரத்தில் அவர் பல்வேறு சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றார், ஆனால் அவரது காய்ச்சல் குறையவில்லை மற்றும் அவர் மிகவும் பலவீனமாகிவிட்டார்," என்று அவர் கூறினார். "அவர் இப்போது மருந்து உட்கொண்டு இருக்கிறார்" என்றார்.

சீதாதேவியைப் போலவே நீலம் (22), ரிங்கு தேவி (37) ஆகியோரும் பிஹாரி பஸ்தியில் வசிக்கின்றனர். நீலத்தின் ஆறு வயது மகன் ஆதித்யாவும், ரிங்குவின் 13 வயது மகன் சூரஜும் கடந்த ஏழு மாதங்களாக காசநோய்க்கான மருந்தை உட்கொண்டுள்ளனர். வழக்கமான காசநோய் சிகிச்சைக்கு ஆறு மாதங்கள் ஆகும், ஆனால் மருந்து-எதிர்ப்பு நோயின் வடிவங்களில், சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகள் வரை காலம் பிடிக்கும். மேலும் சிகிச்சையானது பெரும்பாலும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இவர்களில் எந்த குழந்தைக்கும், சிகிச்சைக்காக தொகை மாதம் ரூ.500 கிடைக்கவில்லை.

பிஹாரி பஸ்திக்கு அருகாமையில் உள்ள சந்திரேஷ்வர் நகரின் குறுகிய பாதைகளில் வசிக்கும் பல குடும்பங்கள், காசநோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இரண்டையும் எதிர்த்துப் போராடுவதை நாங்கள் கண்டறிந்தோம். 7 வயதான பினா பால், காசநோயால் பாதிக்கப்பட்டு வெறும் 15 கிலோ எடையுடன் இருக்கிறார். ஏழு வயது சிறுமியின் எடை, 20 முதல் 22 கிலோ வரை இருக்க வேண்டும் என்று லக்னோவைச் சேர்ந்த மார்பு நோய் நிபுணர் சேகர் சிங் கூறினார்.

பீனாவின் தந்தை தினக்கூலி வேலை செய்பவர் மற்றும் ஆறு பேர் கொண்ட தனது குடும்பத்தை தனியாளாகக் கவனித்து வருகிறார். பீனாவின் தாய்வழிப் பாட்டி, பீனாவின் மருந்துகளைக் காட்டி, "நாங்கள் அவளுக்கு தினமும் பால் கொடுக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். ஆனால் ஒரு குழந்தைக்கு பால் கொடுத்தால் மற்ற குழந்தைகளும் கேட்கும். பீனாவின் பாட்டி பீனாவின் இரண்டு தங்கைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார், ஒரு அறை ஓலைக் கூரை வீட்டில் ஒரு மரக் கட்டிலில் தூங்குகிறார். இவ்வளவு நெருங்கிய இடங்களில் வசிப்பதால், பீனாவின் சிகிச்சையின் முதல் 56 நாட்களுக்கு அவர்களுக்கும் காசநோய் தாக்கும் அபாயம் இருந்தது.


ஏழு வயதான பீனாவுக்கு காசநோய் உள்ளது, மேலும் அவரது வயதுக்குரிய 20-22 கிலோ எடையுடன் ஒப்பிடும்போது வெறும் 15 கிலோ எடைதான் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள நோயாளிகள் காசநோயிலிருந்து மீள்வது கடினம். புகைப்படம்: வாஷா சிங்

"ஒன்பது மாதங்களுக்கும் மேலாகியும், பயனாளிகளுக்கு இன்னும் சிறிய தொகையான 500 ரூபாய் கிடைக்கவில்லை," என்று ரிஷிகேஷை சேர்ந்த அரசு சாரா அமைப்பின் நிறுவனர் AAS (Action for Advancement of Society- இந்த அமைப்பு காசநோயாளிகளுக்கு சத்தான உணவை வழங்குகிறது) அமைப்பின் நிறுவனர் ஹேமலதா கூறினார். "காசநோயாளிகளைக் கொண்ட பெரும்பாலான குடும்பங்கள் நோயாளிகளுக்கு சத்தான உணவை வழங்க முடியாது. சமச்சீரான மற்றும் சத்தான உணவுகள் இல்லாததால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது கடினமாகிறது" என்றார்.

உத்தரகாண்ட் மாநில காசநோய் அதிகாரி பங்கஜ் சிங், சத்தான உணவுக்கான பணத்தை செலுத்தாததற்கு "மென்பொருள் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள்" காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும், "நாங்கள் சிக்கலைத் தீர்த்துவிட்டோம், அக்டோபர் முதல் தொகையை மாற்றத் தொடங்குவோம்" என்று அவர் கூறினார்.

தனது முதல் பெயரை மட்டுமே பயன்படுத்தும் பருல், காசநோயை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடினார், இப்போது லாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு செய்து நோயாளிகளை வலுவாகவும் நோயை எதிர்த்துப் போராடவும் ஊக்குவிக்கிறார். முன்னதாக பதிவு செய்யப்பட்ட நோயாளிகள் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து உணவுப் பலனைப் பெறத் தொடங்கியுள்ளனர் என்று அவர் எங்களிடம் கூறினார். எவ்வாறாயினும், நாங்கள் பேசிய இரண்டு குடும்பங்கள், ஜூலை 2022-இல் பணத்திற்காக பதிவு செய்தனர்.

அக்டோபர் 7, 2022 வரை பணத்தைப் பெறவில்லை என்று சீதா தேவி எங்களிடம் கூறினார். நீலம் முதல் தவணையைப் பெற்றுள்ளார்.

''வாடகை, பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பிள்ளைகளுக்குப் பழங்கள் வாங்க என்னிடம் போதிய பணம் இல்லை. நான் என்ன செய்ய முடியுமோ அதை என் மகனுக்குக் கொடுக்கிறேன்," என்கிறார் மீரா தேவி, காச நோயால் கணவனைப் பிரிந்து, தனது 14 வயது இளைய குழந்தையுடன் வசிக்கும் மீரா, வீட்டுவேலை செய்யும் 10,000 ரூபாயில் தன் மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்கிறாள். "காசநோயாளிகளுக்கு அரசு பணம் தருவதாக மக்கள் என்னிடம் கூறுகிறார்கள், ஆனால் எனக்கு இன்னும் ஒரு பைசா கூட கிடைக்கவில்லை" என்றார்.

இக் கட்டுரையானது, இந்தியா ஸ்பெண்ட் ஹிந்தி தளத்தில் முதலில் வெளியிடப்பட்டது.

(இந்த ஆராய்ச்சி/கட்டுரையானது, தாகூர் குடும்ப அறக்கட்டளையால் ஆதரிக்கப்பட்டது. தாக்கூர் குடும்ப அறக்கட்டளை இந்த அறிக்கையின் உள்ளடக்கங்கள் மீது எந்த தலையங்க, செய்திக் கட்டுப்பாடுகளை ட்டையும் கொண்டிருக்கவில்லை).