புதுடில்லி: பக்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது நான்கு வயது முதல் குழந்தை காப்பகத்தில் வளர்ந்து வந்தார். அவர், 18 வயதை எட்டியதும் அரசால் நடத்தப்படும் ‘பின்நலம் பேணும்’ (Aftercare) இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்; 18 வயதிற்குப்பிறகு பல இளைஞர்கள் "உண்மையான" உலகிற்கு திரும்ப, இது உதவுகிறது.

பின்நலம் பேணும் இல்லமானது, விருப்பத்திற்கு மாறாக அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்ததாக கூறினார். திருமணம் சிக்கலானதாக மாறிய போது, அந்த இல்லம் அவருக்கு உதவவில்லை; தனது கணவரின் வீட்டில் இருந்து வெளியேற, போலீஸ் உதவியை அவர் நாடினார். இப்போது பக்திக்கு வயது 21; பணிப்பெண்களுக்கான விடுதியில் தங்கி, திறன் குறைந்த ஜவுளித் தொழிலாளியாக மாதம் ரூ. 6,000 சம்பாதிக்கிறார். ஐந்தாம் வகுப்பில் பாதியோடு நின்ற அவர், அழகுக்கலை நிபுணராக விரும்பினார்; விவாகரத்து எதிர்பார்த்துள்ள அவர், அழகுக்கலை வகுப்பில் சேர்ந்தார்.

குழந்தை காப்பகத்தில் இருந்து வெளியேறிய பிறகு, தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துக் கொள்ள போராடும், ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களில் பக்தியும் ஒருவர். இவரை போன்ற இளைஞர்/ இளைஞிகளில் பாதி பேர் ஊதியத்துடனான வேலையை கண்டுபிடிக்கத் தவறிவிடுவதாக, ‘Beyond 18: Leaving Child Care Institutions - A Study of Aftercare Practices in Five States of India’ என்ற, ஆகஸ்ட் 2019 இல் வெளியான புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

நாடு முழுவதும் 9,589 குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் சுமார் 3,70,000 குழந்தைகள் தங்கியுள்ளதாக, குழந்தை பராமரிப்பு நிறுவனங்களை ஆவணப்படுத்தும் அரசால் நிறுவப்பட்ட ஜெனா கமிட்டியின் செப்டம்பர் 2018 அறிக்கை கூறுகிறது.

ஆதரவற்றோ, கைவிடப்பட்ட அல்லது அடைக்கலம் தேடி வந்த குழந்தைகள், புறக்கணிப்பு, துஷ்பிரயோகம், வன்முறை மற்றும் கடத்தலில் இருந்து தப்பிய குழந்தைகளை, இக்காப்பகங்கள் கவனித்து கொள்கின்றன. இக்குழந்தைகள் 18 வயதை எட்டும் போது காப்பகத்தில் இருந்து வெளியேறி, தங்களை அவர்களாகவே பராமரித்து - சுயமான வாழ்க்கை, சமூக ஆதரவை தேடிக் கொள்ள வேண்டும் என்று, சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 (ஜே.ஜே. சட்டம்), அதன் 2016 விதிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்படி கட்டாயமாகும். விதிவிலக்கான சூழ்நிலைகளில், இத்தகைய வயதினர் மேலும் இரண்டு ஆண்டுகள், அதாவது 21 வயதை எட்டும் வரை அரசின் பொறுப்பில் இருக்கலாம்.

ஆய்வறிக்கைக்காக கணக்கெடுக்கப்பட்டவர்களில் கால்வாசிக்கும் அதிகமானோர் (27%), தங்களுக்கு எந்த பராமரிப்பும் கிடைக்கவில்லை என்றும்; 44% பேர் தங்களின் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு பற்றி இன்னமும் சிந்திக்கவில்லை என்றும் கூறினர். இத்தைய புள்ளிவிவரங்கள் இன்னும் அதிகமாகவே இருக்கக்கூடும். ஏனெனில் இதுபோன்றவர்களை பெரும்பாலும் கண்டறிவது சிரமம் - குழந்தை காப்பகங்களில் இருந்து வெளியேறும்போது, அவர்கள் “யாருடைய பொறுப்பிலும் இல்லை” என்று ஆய்வு கூறியது.

பல அரசு செயல்பாட்டாளர்கள் மற்றும் பயனாளிகளுக்கு, பின்நலம் பேணுதல் தொடர்பான சட்ட விதிகள் தெரியவில்லை என்பதை ஆய்வு கண்டறிந்தது. "இது சட்டம் மற்றும் கொள்கையில் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை மோசமாக செயல்படுத்த வழிவகுக்கிறது," என்று ஆய்வை மேற்கொண்ட டாடா டிரஸ்ட் அமைப்பின் கொள்கை மற்றும் ஆலோசனை தலைவர் ஷிரீன் வாகில் கூறினார். பின்நலம் பேணும் சேவை வழங்கும் நிறுவனங்கள், சேவைத்தரம் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை; நாட்டில் இதுபோன்ற நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளும் இல்லை.

ஆய்வில் கணக்கெடுக்கப்பட்ட இளைஞர்கள் “எதிர்கொள்ள போராடுவதோடு சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். போதிய கவனிப்பின்றி மனநோய்களுக்கு ஆளாகிறார்கள். நிச்சயமற்ற தன்மை மற்றும் வேலையின்மையும் உள்ளது. சுயமாக இருக்க முடிவதில்லை; அத்துடன் யாரைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பதுகூர தெரியவில்லை” என, அறிக்கையின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுனிசெப், டாடா அறக்கட்டளை மற்றும் டெல்லி, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநில அரசுகளின் ஆதரவோடு அரசுசாரா அமைப்பான உதயன் கேர், இந்த ஆய்வை மேற்கொண்டது. 17 - 30 வயதுக்குட்பட்ட 435 ‘பின்நலம் பேணுதலில்’ இருந்து விடுபட்டவர்கள் நேர்காணல் செய்யப்பட்டனர்; ஐந்து மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட குழந்தை பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

"காப்பகங்களை விட்டு வெளியேறும் இளைஞர்களுக்கு என்ன நடக்கிறது என்பது குறித்த பெரிய அளவிலான முதல் அறிக்கை இதுவாகும்" என்று உதயன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கிரண் மோடி கூறினார்.

குழந்தை பராமரிப்பு மற்றும் பின்நலம் பேணும்

இந்தியாவில் உள்ள 9,589 குழந்தை காப்பகங்களில் 91% தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்; 9% அரசும் நடத்துவதாக, ஜீனா குழு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த காப்பகங்களின் மோசமான கட்டுப்பாடு, கண்காணிப்பு, முறையான சீர்திருத்தங்களின் தேவை குறித்து, இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டு இருந்தது. பீகாரில் உள்ள முசாபர்பூர் காப்பகம், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தியோரியாவில் காப்பகம் மற்றும் மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள மாற்றுத்திறனாளி பெண்களுக்கான விடுதியில் துஷ்பிரயோகம் மற்றும் அலட்சியப் போக்குகள் வெளிச்சத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பராமரிப்புக்கான உரிமையை வழங்கும் ஜே.ஜே. சட்டத்தின் கீழ் அனைத்து குழந்தை காப்பகங்களும் பதிவு செய்யப்படுவது கட்டாயமாகும். ஆனால், பல குழந்தை காப்பகங்கள் அவ்வாறு பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்படாதவற்றின் எண்ணிக்கை, ஐந்து மாநிலங்களில் 22% முதல் 62% வரை இருக்கும் என்று உதயன் அறக்கட்டளை ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால், தங்கியுள்ள குழந்தைகள் குறித்த தெளிவான எண்ணிக்கை அந்த காப்பங்களில் இருந்தோஅல்லது அதன் பராமரிப்பாளர்களிடம் இருந்தோ கிடைக்கவில்லை.

ஜெனா கமிட்டி அறிக்கையில், பின்நலம் பேணும் நிறுவனங்கள் குறித்து போதுமான தகவல்கள் இல்லை. தற்போதைய அறிக்கையின் ஆசிரியர்கள் ஐந்து மாநிலங்களில் பின்நலம் பேணும் பராமரிப்பு நிறுவனங்களை கண்டறிந்தனர் - அதன்படி, டெல்லி, குஜராத்தில் தலா இரண்டு, கர்நாடகாவில் மூன்று, மகாராஷ்டிராவில் ஏழு உள்ளன; ராஜஸ்தானில் எதுவும் இல்லை.

காப்பகங்களில் இருந்து வெளியேறுவோரை பராமரிப்பதற்கான விரிவான பின்நலம் பேணும் திட்டத்தை மாநிலங்கள் இதுவரை கொண்டிருக்கவில்லை. ஆனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு திறன் பயிற்சி, வேலை, உதவித்தொகை, வீட்டுவசதி, சுகாதாரம் வழங்கக்கூடிய வெவ்வேறு திட்டங்களை கொண்டிருந்தன.

மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில், ஆதரவற்றோருக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடு உள்ளது. ராஜஸ்தானில் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு குடும்பம் அல்லது உறவினர்களுடன் தங்குவதற்கு நிதி உதவி தரும் பலன்ஹார் யோஜ்னா திட்டம் உள்ளது. இருப்பினும், தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் எளிதாக அணுகக்கூடிய இதுபோன்ற திட்டங்கள் தேவை என்று அறிக்கை கூறியுள்ளது.

குழந்தை காப்பங்களில் வளர்வோருக்கு கல்வி, திறன் பயிற்சி, பராமரிப்பு இல்லாததால் சமூக ஸ்திரத்தன்மையை அது மோசமாக பாதிக்கிறது. வாலிப பருவத்திற்கு மாற, அவர்களால் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள இயலவில்லை என்று அறிக்கை தெரிவிக்கிறது.

காப்பங்களில் குழந்தைகளுக்கு உணவு, தங்குமிடம் கிடைத்தாலும், அவர்களுக்கு இளைஞராகும் போது தேவைப்படும் முக்கிய வழிகாட்டுதல் மற்றும் மனநல ஆலோசனைகள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் நிச்சயமற்ற, உறுதியற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர் - நேர்காணல் செய்யப்பட்ட இளைஞர்களில் 42% பேர், தங்கள் குழந்தை காலத்தை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காப்பங்களில் வசித்துள்ளனர்.

"பெரும்பாலான குழந்தைகளுக்கு 16 வயதிற்கு பிறகு மாற்றம், திட்டமிடல் தேவைப்படுகிறது; அது அவர்களுக்கு திறன்களை தருகிறது; சுதந்திரமாக வாழ அவர்களை தயார்படுத்துகிறது. ஆனால் பெரும்பாலும் அப்படி காணவில்லை" என்று மோடி கூறினார்.

பின்நலம் பேணுதலில் உள்ள சவால்கள்: வீட்டுவசதி, கல்வி

நிலையான, பாதுகாப்பான வீட்டுவசதி என்பது காப்பகங்களை விட்டு வெளியேறுவோருக்கு ஒரு பெரிய சவால் என்பதை அறிக்கை கண்டறிந்தது. சட்டத்தின்படி கட்டாயம் என்றாலும், கணக்கெடுக்கப்பட்டவர்களில் பாதிக்கும் குறைவானவர்களே வீட்டுவசதி உதவியை பெற்றிருந்தனர்.

ஜே.ஜே. சட்டத்தின் கீழ், ஆறு முதல் எட்டு நபர்கள் கொண்ட குழுக்களுக்கு தற்காலிக அடிப்படையில் கூட்டு வீட்டுவசதி செய்தி தரப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், பின்நலம் பேணும் சேவைகளை பெற்றவர்களில் 39% பேர் கூட, வீட்டு வசதியை பெறவில்லை.

ஆய்வு செய்த ஐந்து மாநிலங்களில், ராஜஸ்தானில் பின்நலம் பேணும் இல்லங்கள் இல்லை. மற்ற மாநிலங்களில் இத்தகைய இல்லங்கள் சில மாவட்டங்களில் அமைந்திருந்தன; சில இளம் வயதினர் அந்த மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உண்டாகிறது; இதனால், அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட சகாக்கள், ஊழியர்கள், உணவுகளுடனான நட்பை சிதைகிறது. கல்வி நிறுவனம், வேலைகளையும் ஆவர்கள் மாற்ற வேண்டியிருந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒன்றைத் தவிர, ஐந்து மாநிலங்களில் பெண்களுக்கான பின்நலம் பேணும் இல்லங்கள் இல்லை.

இளைஞர்களை விட இளைஞிகளுக்கு குழு வீட்டு வசதி மிகக்குறைவு; ஏனெனில் அவை பாதுகாப்பற்றதாகக் காணப்படுவதாக அறிக்கை கூறியது. சம்பாதிக்கும் திறனுள்ள, காப்பகங்களில் இருந்து வெளியேறிய பெண்கள், பணி புரிவோருக்கான விடுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அவ்வாறு முடியாதவர்கள் ஸ்வாதர் கிரிஹாஸ் (பெண்களுக்கான தங்குமிடம்) மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான இல்லங்களோடு முடித்துக் கொள்கின்றனர்.

காப்பகங்களில் இருந்து வெளியேறுவோருக்கு தொழிற்பயிற்சி, உயர்கல்விக்கான உதவித்தொகை மற்றும் வேலைக்கு செல்லும் வரை நிதி உதவி போன்றவை ஜே.ஜே. சட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டும். தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பிற திட்டங்கள் மூலம் திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு ஏற்பாடுகளும் செய்திருக்க வேண்டும்.

இருப்பினும், குழந்தை காப்பங்களில் தங்கியிருந்த காலத்திலும், பின்னர் அங்கிருந்து வெளியேறிய போதும் கூட, அவர்களின் கல்வி நிலை மோசமாக இருந்ததாக, அறிக்கை கண்டறிந்துள்ளது. ஏறத்தாழ 40% பேர் இடையில் கற்றலை கைவிட்டவர்கள். ராஜஸ்தான், டெல்லியில் முறையே 14% மற்றும் 13% மட்டுமே பள்ளியை தாண்டியுள்ளனர்.

மாநிலங்களில் உள்ள அனைத்து காப்பகங்களில் கிட்டத்தட்ட 21% பேர், தாங்கள் விரும்பிய கல்வியை காப்பங்களில் பெறவில்லை என்றும்; 35% பேர் காப்பங்களில் இருந்து வெளியேறிய பிறகு கல்வியை தொடர்வதில் சிரமத்தை எதிர்கொண்டதாக கூறினர்.

இருப்பினும் கர்நாடகாவில், காப்பகங்களில் இருந்து வெளியேறியவர்களில் 35% பேர், கல்லூரிகள் அல்லது அதற்கு அப்பால் படித்து பட்டம் பெற்றுள்ளனர். பிற மாநிலங்களில் பாதி அல்லது குறைவானவர்களே காப்பகங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேலைவாய்ப்பு திறன்களில் பயிற்சி பெற்றனர்.

தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் குழந்தை காப்பங்களில் வசித்தவர்களில் 65% பேர், அங்கிருந்து வெளியேறிய பின்னர், வேலை செய்யக்கூடிய திறன்களை கொண்டிருந்தனர்; இந்த விகிதம், அரசு காப்பகங்களில் 35% என்பதைவிட இரு மடங்காகும்.

சில வேலைவாய்ப்புகள் பெண்களுக்கு குறைவு

காப்பகங்களில் இருந்து வெளியேறிய குறைந்த கல்வித் தகுதி உடையவர்களில் பெரும்பாலானவர்கள் அழுக்கு படியாத பணியில் குறைந்தபட்சத்திற்கும் கீழே சம்பளம் பெறுகிறார்கள் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.

"சிறார் நீதிச் சட்டங்களை தவிர்த்து, காப்பகத்தில் இருந்து வெளியேறுவோருக்கு அரசின் எந்தவொரு கொள்கையோ திட்டமோ, குறிப்போ தெரியது. இதனால் அதிக வேலையின்மை ஏற்படுகிறது" என்று டாடா அறக்கட்டளையின் வாகில் கூறினார்.

நேர்காணல் செய்யப்பட்ட 435 பேரில், கிட்டத்தட்ட பாதி (48%) பேருக்கு வேலை கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்தவர்களில் 93% சம்பள வேலைமற்றும் 7% சுயதொழில் செய்பவர்கள். அவர்கள் சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ.7,500 முதல் ரூ. 8,500 வரை சம்பாதித்தனர். திறமையான பணிக்கான குறைந்தபட்ச ஊதியம் மிகக்குறைவாக மகாராஷ்டிராவிலும் (ரூ. 9,559); அதிகளவாக டெல்லியிலும் (ரூ.14,000) உள்ளது.

காப்பகங்களில் பெரும்பாலான இளைஞர்களுக்கு தொழில்சார் திறன்களை பயிற்றுவிப்பதன் மூலம், பொருளாதார ரீதியாக சுய தொழிலுக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். இது அவர்களின் கல்வி ஆர்வம், லட்சியங்களை புறந்தள்ளிவிட்டு, குறைந்த ஊதியம் பெறும் வேலைகளை பெற்றுத் தருகிறது. பி.ஏ. ஆர்கிடெக் (கட்டிடக்கலை) இளங்கலை வகுப்புக்கான சேர்க்கை கிடைத்தும் அதை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்ட ஒரு திறமையான இளைஞரின் கதையை இந்த ஆய்வு மேற்கோள் காட்டியுள்ளது.

"இளைஞிகளை பொறுத்தவரை, அவர்களுக்கான மறுவாழ்வு என்பது, திருமணம் செய்ததோடு அவர்கள் மறந்துவிடுவதாகும்" என்று வாகீல் கூறினார். இது பெரும்பாலும் வீட்டு அடக்குமுறை அல்லது மணமுறிவுக்கு வழிவகுக்கிறது. இதுபோன்ற திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகள் (குழந்தை பராமரிப்பு) காப்பங்களுக்கு செல்வதும் இதனால் தடைபடுகிறது.

"கூடுதல் கல்வி அல்லது தொழிற்பயிற்சிக்காக, இளைஞர்களை போலவே, [இளைஞிகளும்] தங்கள் விருப்பத்திற்கு மாறாக தையல், நர்சிங் அல்லது அழகு கலைஞர் பயிற்சி மூலம் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள்" என்ற வாகீல் "அவர்களின் உண்மையான திறமை வளர்க்கப்படவில்லை அல்லது மதிக்கப்படவில்லை" என்றார்.

வீட்டுவசதியை போலவே வேலைவாய்ப்பிலும் பெண்கள் ஆண்களை விட மோசமாக உள்ளனர். காப்பகங்களில் இருந்து வெளியேறிய பெண்களில் 63% பேர், சுயமாக வருவாய் ஆதாரங்களைக் கொண்டிருக்கவில்லை; இது ஆண்களில் 36% என்றிருந்தது. கல்வியிலும் இதேநிலையே உள்ளது.

காப்பகங்களை விட்டு சென்ற பெண்களில் 70% நிதி கையாளுதல் குறித்த முறையான கல்வியறிவை கொண்டிருக்கவில்லை. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (53.3%) நிதி வழிகாட்டுதலை பெறவில்லை.

காப்பகங்களை விட்டு சென்ற பெண்களில் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவருக்கு வங்கிக் கணக்கு இல்லை என்கிறது ஆய்வு. நான்கில் ஒரு பங்கு (26%) பெண்கள் ஒரு கணக்கு கொண்டிருந்தனர்; ஆண்களில் 16% பேருக்கு மட்டுமே ஒரு கணக்கு இருந்தது. பெண்களில் 87% பேருக்கு காப்பீடு இல்லை; ஆண்களை விட குறைவான பெண்களுக்கு காப்பீட்டு அணுகல் (9% vs 16%) இருந்தது.

உடல்நலக்குறைவு, மனஅழுத்தங்கள்

காப்பகங்களில் இருந்து வெளியேறிய இளைஞர்களுக்கு, அவர்கள் சந்திக்கும் சுகாதார பிரச்சனைகளை தடுக்க உதவியோ, வளமோ இல்லை என்பதையும் ஆய்வு கண்டறிந்துள்ளது. கணக்கெடுக்கப்பட்டகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் (38%) அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து எந்தவிதமான நிதி உதவியையும் பெறாதவர்கள்.

ஏறக்குறைய நான்கு பேரில் ஒருவர் (23%), உடல் நலக்குறைவின் போது பராமரித்து உதவ யாரையும் கொண்டிருக்கவில்லை. ஆய்வில் பங்கேற்றவர்களில் நான்கில் மூன்று பேருக்கு (78%) சுகாதாரக்காப்பீடு இல்லை; 13% பேருக்கு சுகாதார பராமரிப்புக்கு போதிய நிதி இல்லை.

தங்களது வாழ்க்கை தந்த கசப்பான அனுபவத்தால் அவர்களில் 61% பேர், தொடர்ந்து உணர்ச்சிபூர்வ துயரங்களை எதிர்கொள்கின்றனர்; பெரும்பான்மையானவர்கள், இதற்கு தொழில்முறை உதவியை நாடவில்லை என்று கூறினர்.

காப்பகங்களில் இருந்து வெளியே வந்தவர்கள் தாங்கள் விரும்பிய கல்வியைத் தொடர இயலாதது, வேலை மற்றும் உறவுகளை தக்கவைப்பது போன்ற சவால்கள், அவர்களின் மோசமான மன ஆரோக்கியம் மற்றும் , பின்னடைவின்மை ஆகியவற்றுடன் தொடர்பு இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

காப்பங்களை விட்டு வெளியேறியவர்கள், அதன் பிறகு தங்களுக்கு பாதுகாப்பு இல்லாததை உணர்ந்தார்கள். இது அவர்களின் மன அழுத்தத்தை அதிகரித்ததாக ஆய்வு கூறுகிறது. "நான் தினமும் பல்வேறு சவால்களையும் வாய்ப்புகளையும் எதிர்கொண்டேன். ஒருவர் அதிக அழுத்தத்தில் இருக்கும்போது, அவரால் ஒரு வேலையை தனியாக செய்ய முடியாது, பல தரப்பினரின் ஆதரவு தேவை" என்று மகாராஷ்டிராவைச் சேர்ந்த 18 வயது இளைஞரின் கூற்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இல்லங்களில் இருந்து வெளியேறிய ஆண்களில் 38% பேர், பெண்களில் 28% பேர் தங்களது வழிகாட்டிகளுடன் உறவுகளை பேணுவதில் சிரமப்பட்டதாக கூறினர். பெரும்பாலானோர் எதிர் பாலினத்தவர்களிடம் சிறிதளவே தங்கள் வெளிப்பாடுகளை காட்டினர். மேலும், மூன்றில் இரண்டு பங்கு ஆண்கள் மற்றும் 88% பெண்கள் காதல் உறவுகளை பராமரிக்க இயலாதது பற்றி பேசினர்; அது தங்களுக்கு “பொருந்தாது” என்பது அவர்களின் கருத்தாகும்.

ஆவணங்கள் இல்லை

நேர்காணல் செய்யப்பட்ட, இல்லங்களில் இருந்து வெளியேறியவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சுதந்திரமாக வாழ தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறினர். அவர்களில் பாதி பேருக்கு (49%), சமைக்கக்கூட பயிற்சி தரப்படவில்லை. 44% பேருக்கு வீட்டு மேலாண்மை தெரியவில்லை. ஐந்தில் இருவர் இதுபோன்ற விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்புவதாகக்கூறினர்.

நேர்காணல் செய்யப்பட்ட இளைஞர்களில் பலர், தங்களுக்கு அடிப்படை ஆவணங்கள் இல்லாததால் தொந்தரவுக்கும் சிக்கலுக்கும் ஆளானதாக கூறினர். அவர்களில் 96% பேருக்கு ஆதார் அட்டை இருந்தாலும், 64% பேருக்கு வாக்காளர் அட்டை இல்லை; 62% பேருக்கு ரேஷன் கார்டு இல்லை; 54% பேருக்கு பான் கார்டு இல்லை. இதனால் ஓட்டுநர் உரிமம் பெற முடியாமல் தவித்த ஒரு இளைஞனின் சம்பவத்தை, அந்த அறிக்கை மேற்கோள் காட்டியிருக்கிறது; அவருக்கு வசிப்பிட ஆதாரம் எதுவுமில்லை.

இந்த விஷயத்தில், பெண்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது - 41% ஆண்களுடன் ஒப்பிடும்போது, பான் கார்டு இல்லாத பெண்களின் எண்ணிக்கை 70% ஆகும். ஆண்களுடன் ஒப்பிடும்போது, நிதிச்சேவை பெறுவதில் பெண்கள் எவ்வளவு மோசமாக அதிகாரத்தை பெற்றுள்ளனர் என்பதை இது காட்டுவதாக ஆய்வு கூறியுள்ளது.

சமவாய்ப்புகளை நோக்கி

குழந்தை காப்பகங்கள் வழங்க வேண்டிய பின்நலம் பேணுவதில் எட்டு அம்சங்களை அதாவது வீட்டுவசதி, சுயமான வாழ்க்கைத்திறன், சமூக மற்றும் ஆளுமைத்திறன், உணர்வுபூர்வ நல்வாழ்வு, உடல் ஆரோக்கியம், கல்வி மற்றும் தொழில் திறன், நிதி சுதந்திரம் மற்றும் பணித்திறன், அடையாளம் மற்றும் சட்ட விழிப்புணர்வு ஆகியவற்றை இந்த அறிக்கை அடையாளம் காட்டுகிறது.

"முதலில் காப்பக ஊழியர்களுக்கு இத்திறன்களைப் பயிற்றுவிக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு நல்ல மனிதர்களாக இருப்பதற்கான வாய்ப்புகளை, அவர்கள் வழங்குகிறார்கள்" என்று உதயன் அறக்கட்டளையின் மோடி கூறினார். “அவர்களை திருமணம் அல்லது குறைந்த ஊதியம் தரும் வேலைகளில் அமர்த்த வேண்டிய அவசரம் என்ன இருக்கிறது? நமது குழந்தைகளை போலவே அவர்களின் கல்வியிலும் நாம் அக்கறை செலுத்த வேண்டும், ”என்றார் அவர்.

Solutions

Some of the ways forward that the report suggests include:

States should develop their own aftercare programmes: Each state should develop its own aftercare programme that ensures that support and services are extended to care-leavers and has a monitoring mechanism.

Transition planning should be mandatory: Children from the age of 14 to 16 should be prepared to transition out of childcare homes. The process should equip them with information on individual rights and entitlements, basic life skills and community exposure.

Single-window support centres: These should be accessible to care-leavers for crisis support for two years after exiting the aftercare programme. There should be a real-time database of this group.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் /சுகாதாரம் சரிபார்ப்பு இணையதளங்களின் சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.