மும்பை: இந்தியாவின் மொத்த மத்திய பட்ஜெட்டில், 2020-21ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 5% பெண்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்காக செலவிடப்படும் என்று, இந்த ஆண்டுக்கான பாலின பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் ரூ. 1.4 லட்சம் கோடி (19 பில்லியன் டாலர்), பாலின பட்ஜெட்டில் பெண்களுக்கு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பயனளிக்கும் திட்டங்களுக்காக, வெவ்வேறு அமைச்சகங்களால் செய்யப்பட்ட ஒதுக்கீடுகள் இதில் அடங்கும்.

ஆதரவான சட்டங்கள் மற்றும் பிற கொள்கை நடவடிக்கைகளுடன், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் பெண்களை மேம்படுத்துவதற்கும் பொது நிதி திறம்பட ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய, பாலின சமன்பாட்டிற்கான பட்ஜெட், அரசுகளுக்கு உதவி செய்யக்கூடும். உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டு- 2020 இல், 153 நாடுகளில் இந்தியா 112 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, 2005-06 ஆம் ஆண்டில் இருந்து, மத்திய பட்ஜெட்டுடன் பாலின பட்ஜெட்டை வெளியிடத் தொடங்கியது. மத்திய பட்ஜெட் 2021-22 வெளியாக உள்ள நிலையில், பாலின பட்ஜெட் பயனுள்ளவையா, இல்லையா என்பதை நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம்.

இந்தியாவில், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பல முக்கியமான துறைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதியளிக்கின்றன. இந்த கட்டுரையில் நாம், மத்திய அரசால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களைக் கொண்டிருக்கும் மத்திய அரசின் பாலின பட்ஜெட் திட்டங்களை ஆராய்ந்து வருகிறோம். (இந்தியாவில் குறைந்தது 16 மாநிலங்கள் பாலின-செயல்பாட்டுக்கான பட்ஜெட்டை ஏற்றுக்கொண்டன மற்றும் பெண்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அவை மாநில பட்ஜெட் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடுகள், மத்திய பாலின பட்ஜெட் அறிக்கையில் கணக்கிடப்படவில்லை, அவை எங்களது பகுப்பாய்வின் ஒரு பகுதியாக இல்லை).

ஒதுக்கீடுகள் மற்றும் போக்குகள்

கடந்த 16 ஆண்டுகளில், இந்தியாவின் பாலின பட்ஜெட், 2005-06ஆம் ஆண்டில் ரூ.24,241 கோடியில் இருந்து (5.5 பில்லியன் டாலர்), 2020-21ஆம் ஆண்டில் ரூ .1,43,462 கோடியாக (19 பில்லியன் டாலர்) அதிகரித்துள்ளது, இது முழுமையான அடிப்படையில் ஆறு மடங்கு அதிகரிப்பு. இருப்பினும், கடந்த 13 ஆண்டுகளில், மொத்த பட்ஜெட்டின் விகிதாச்சாரமாக ஒதுக்கீடு 4.3% முதல் 5.9% வரை என்று மாறாமல் உள்ளது. இந்த ஒதுக்கீடு கடந்த ஆறு ஆண்டுகளில், மொத்த பட்ஜெட்டில் 5% க்கும் குறைவாக இருந்தது.


பாலின பட்ஜெட்டில், இரண்டு பகுதிகள் உள்ளன: பகுதி A இல் விதவை ஓய்வூதிய திட்டம், பெண்கள் விடுதி திட்டம் மற்றும் மகப்பேறு நலத்திட்டம் போன்ற பெண்களுக்கு 100% ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்கள் உள்ளன; மற்றும் பகுதி B, பெண்களுக்கு குறைந்தபட்சம் 30% நிதியை ஒதுக்குகிறது, அதாவது மதிய உணவு திட்டம், கிராமப்புற வாழ்வாதார பணி மற்றும் உயிர்வாயு திட்டம்.

ஆரம்பத்தில் இருந்தே, பாலின பட்ஜெட்டில் பகுதி B இன் கீழ் ஒதுக்கீட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது, இது மொத்த பாலின பட்ஜெட்டில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது.

கடந்த 2020-21 ஆம் ஆண்டில், பகுதி A பாலின பட்ஜெட்டில் 20% ஆகும் - இது 2015-16 ஆம் ஆண்டில் 14% க்கு பிறகு, இரண்டாவது மிகக் குறைவான ஒதுக்கீடு ஆகும்.


பட்ஜெட்டின் கலவை, அது கவனம் செலுத்தும் பகுதிகள்

பாலின பட்ஜெட்டானது, வெவ்வேறு அமைச்சகங்களால் செய்யப்பட்ட ஒதுக்கீடுகளை இணைக்கிறது, இது பெண்களுக்கு பயனளிக்கும் சில திட்டங்களை தவிர்க்கிறது. எடுத்துக்காட்டாக, அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் வீட்டு குழாய் இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஜல் ஜீவன் மிஷன் என்ற திட்டத்திற்கான ஒதுக்கீட்டின் எந்த பகுதியையும் நீர் மற்றும் சுகாதாரத்துறை தெரிவிக்கவில்லை. திட்ட வழிகாட்டுதல் ஆவணம் இருந்தபோதிலும், இது குறிப்பாக பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்றும், செய்தி குறிப்புகளில் அமைச்சகம் இதை மீண்டும் வலியுறுத்துகிறது என்றும் குறிப்பிடுகிறது.

இது மாநில அரசு ஒதுக்கீடுகளையும் கொண்டிருக்கவில்லை, எனவே ஒதுக்கீடுகள் பற்றிய பகுப்பாய்வு மற்றும் மொத்த பட்ஜெட்டுக்கான அவற்றின் விகிதாச்சாரம் ஆகியன மட்டுப்படுத்தப்படுகின்றன.

ஆயினும்கூட, பாலின பட்ஜெட் அமைப்பு, அரசின் கவனம் செலுத்தும் பகுதிகள் மற்றும் பாலின இடைவெளியை குறைப்பதற்கான முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், ஐந்து திட்டங்கள் - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGS) எனப்படும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி அவாஸ் யோஜனா (PMAY) எனப்படும் கிராமப்புற வீட்டுத் திட்டம், ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அங்கன்வாடி சேவைகள் திட்டம், சமக்ரா சிக்ஷா என்று அழைக்கப்படும் பள்ளி கல்வித் திட்டம் மற்றும் தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் (NRHM) கீழ் சுகாதார அமைப்புகள் பலப்படுத்துதல் ஆகியன- மொத்த பாலின பட்ஜெட் ஒதுக்கீட்டில் பாதியை உருவாக்கியுள்ளன.

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா (PMAY) மட்டும், பகுதி A இல் கிட்டத்தட்ட 70% ஒதுக்கீட்டையும், மொத்த பாலின பட்ஜெட்டில் 14% ஐயும் கொண்டுள்ளது.


பாலின பட்ஜெட்டில் 10% நிதி, பெண்களுக்கான கிராமப்புற வீட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது நிபுணர்களைத் நெருடலை தந்தது. ஏனெனில் இந்தத் திட்டம் பெண்களுக்கு பயனளிக்கும் அதே வேளையில், வீடுகள் எப்போதும் பெண்களுக்கு சொந்தமானதாக இருக்காது. "பெண்களின் பெயர்களில் வீடுகள் இருப்பது ஊக்குவிக்கப்படுவதால், பி.எம்.ஏ.ஐ. திட்ட ஒதுக்கீடுகள் பாலின பட்ஜெட்டுக்கு 100% கருதப்படுகின்றன" என்று டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி அமைப்பான அக்கவுன்டபிலிட்டி இனிஷியேடிவ் (Accountability Initiative) இயக்குனர் அவனி கபூர் கூறினார். "ஆனால் யாரும் உண்மையில் கண்காணிக்கப்படுவதில்லை அல்லது அது எந்த அளவிற்கு செய்யப்படுகிறது அல்லது அது உண்மையில் களத்தில் ஏற்படுத்தும் வித்தியாசத்தைப் பார்க்கவில்லை" என்றார்.

பாலின பட்ஜெட் குறித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கையேடு, இந்த செயல்முறை எவ்வாறு தொடர்ச்சியான செயலாகும் என்றும் கொள்கைகளை வகுப்பது மற்றும் நிதி ஒதுக்கீடு செய்வதோடு கூடுதலாக கண்காணிப்பு மற்றும் தாக்க மதிப்பீட்டை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

எவ்வாறாயினும், அமைச்சகங்களால் நடைமுறைப்படுத்தப்படும் பாலின பட்ஜெட் செயல்முறை, பெரும்பாலும் நிதி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட வடிவத்தில் தகவல்களை தெரிவிப்பதில் கவனம் செலுத்துகிறது, மேலும் வெவ்வேறு திட்டங்களுக்கு எடைகளைக் குறிப்பிடுவதற்கான தெளிவான வழிமுறை எப்போதும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாலின பட்ஜெட் தொகைகள் அந்தந்த துறைகள் மற்றும் அமைச்சகங்களால் தீர்மானிக்கப்பட்ட விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதால், ஒரு தெளிவான வழிமுறை முக்கியமானது. உதாரணமாக, 2020-21 பாலின பட்ஜெட்டில், ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேத அறிவியல், சித்தா மற்றும் யுனானி மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில்களை பட்ஜெட்டின் A பாகத்தில், பட்டியலிட்டு, இந்த ஒதுக்கீடுகளில் 100% பெண்களுக்கு பயனளிக்கும் என்று தெரிவித்தது.

கடந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான பாலின பட்ஜெட்டின் பகுதி B இன் கீழ் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் மொத்த ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பகுதியை (33%) ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கியது. இருப்பினும், இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் கிட்டத்தட்ட 55% தொழிலாளர்களாக உள்ளனர்.

"பாலின பட்ஜெட் திட்டங்களில், பாலின இடைவெளிகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஒதுக்கீடுகள் அடிமட்ட அடிப்படையிலான திட்டமிடலின்படி இருக்க வேண்டும்," என்று, டெல்லி மனித மேம்பாட்டு நிறுவனத்தில் பாலின ஆய்வு மையத் தலைவரும், ஃபெமினிஸ்ட் பாலிஸி கலெக்டிவ் (Feminist Policy Collective) நிறுவன உறுப்பினருமான ஆஷா கபூர் மேத்தா கூறினார். இருப்பினும், பெரும்பாலான அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இதைச் செய்யாமல் பாலின பட்ஜெட் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை தெரிவிக்கின்றன. மேலும், மதிப்பீடுகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதிலும் தெளிவு இல்லை.

"பாலின பட்ஜெட்டின் ஒரு முக்கியமான முதல்படி, விளைவுகளைத் தீர்மானிப்பதும், பின்னர் அவற்றை அடைவதற்கு என்ன உள்ளீடுகள் தேவை என்பதை வரையறுப்பதும் ஆகும்" என்று கபூர் கூறினார். "இந்தியாவில், இது பல்வேறு திட்டங்கள் அல்லது அமைச்சகங்களின் ஒருங்கிணைப்பு நடவடிக்கையாக இன்னும் செய்யப்படுகிறது" என்றார்.

பாலின பட்ஜெட்டுகள் எதை அடைந்துள்ளன?

அதன் குறைபாடுகள் இருந்தபோதிலும், பாலின பட்ஜெட் பாலின பிரச்சினைகளில் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளது. "பாலின-செயலாக்க பட்ஜெட்டின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று, நிதி பிரச்சனைக்குள் பாலின லென்ஸ் முக்கியமானது என்ற கருத்தின் முக்கிய நீரோட்டம்" என்று கபூர் கூறினார்.

பாலின பட்ஜெட்டானது, கல்வியை எட்டுவதில் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைப்பதில் பாலின இடைவெளியைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளதாக, தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் (NIPFP) பேராசிரியரும் தலைவருமான லேகா சக்ரவர்த்தி கூறினார்; இந்த அமைப்பு, மாநில மற்றும் மத்திய அரசின் கொள்கை கட்டமைப்பிற்குள் பாலின பட்ஜெட்டை ஒருங்கிணைப்பதில் முன்னோடியாக இருந்தது.

"பாலின பட்ஜெட், ஒரு பாலின ஏற்றத்தாழ்வு குறைப்பு கண்ணோட்டம் மூலம் [யூனியன்] பட்ஜெட்டின் முந்தைய, பிந்தைய கொள்கை பகுப்பாய்வாக தொடங்கப்பட்டாலும், இது எதிர்காலத்தை மையமாகக் கொண்ட திட்ட வடிவமைப்பை ஒருங்கிணைப்பதற்கும் பெண்களுக்கு சாதகமாக பட்ஜெட்டை வழங்குவதற்கும் ஒரு கட்டமைப்பை வழங்கியுள்ளது," என்று, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் பெண்களுக்கு எரிவாயு வழங்கும் திட்டங்களின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, சக்ரவர்த்தி கூறினார்.

துறைசார் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க, இலக்கு திட்டங்கள் உதவியுள்ள நிலையில், அவை ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதை நோக்கி நீண்ட தூரம் செல்ல வேண்டும். பாலின பட்ஜெட் கொள்கைகள் "எல்லா பெண்களும் சமம்" என்று கருதக்கூடாது, மேலும் குறுக்குவெட்டுத்தன்மையை (ஒரு நபரின் பல்வேறு சமூக மற்றும் அரசியல் அடையாளங்கள் எவ்வாறு ஒன்றிணைகின்றன மற்றும் பல்வேறு வகையான பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும் என்பதைப் புரிந்துகொள்வதற்கான அணுகுமுறை) ஏற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று, சக்ரவர்த்தி மேலும் கூறினார். அதிகரித்து வரும் சாதி அடிப்படையிலான குற்றங்களைச் சமாளிக்கவும் பாலின பட்ஜெட் கொள்கைகள் தேவை.

"இந்திய பாலின பட்ஜெட்டின் பின்னணியில் குறுக்குவெட்டு பிரச்சினைகளுக்கு கவனமாக அளவுத்திருத்தம் தேவை" என்று சக்ரவர்த்தி கூறினார். "ஒரு விரைவான எடுத்துக்காட்டு தென்னாப்பிரிக்காவின் சூழலில் கறுப்பு பொருளாதார வலுவூட்டல் (BEE) - நிறவெறியின் ஏற்றத்தாழ்வுகளைக் கையாள்வதற்கான ஒரு சக்திவாய்ந்த கொள்கை. பாலினத்திற்கும், இனத்திற்கும் இடையிலான இடைமுகம் கறுப்பு பொருளாதார வலுவூட்டலால் கையாளப்படுகிறது" என்றார்.

(இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளரான அபிஉதயா வர்மா, இக்கட்டுரைக்கு பங்களிப்பு செய்துள்ளார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.