பாம்பூர்: தெற்கு காஷ்மீர் நகரில் ஒரு குளிர்கால பிப்ரவரி காலை அது; 38 வயதான குங்குமப்பூ விவசாயி மன்சூர் அகமது பட், 30 கிமீ தொலைவில் உள்ள தலைநகர் ஸ்ரீநகருக்கு புறப்பட்டார்.அவரும் அவருடன் பயணம் செய்யும் மற்ற இரண்டு விவசாயிகளும், வேளாண்துறை அதிகாரிகளை சந்தித்து காஷ்மீரின் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு (ஜி.ஐ) பெற்றுத்தர அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தினர்.

காலநிலை மாற்றம், குறைந்த விலைக்கு ஈரானில் இருந்து இறக்குமதி, மோசமான நீர்ப்பாசனம் மற்றும் காலாவதியான விவசாய முறைகள், அறுவடைக்கு பிந்திய நடைமுறைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் குங்குமப்பூ உற்பத்தி, 2018 வரையிலான 22 ஆண்டுகளில் 65% - அதாவது 16 மெட்ரிக் டன்னில் இருந்து 5.6 மெட்ரிக் டன்னாக குறைந்திருப்பது, காஷ்மீர் வேளாண்துறை (அட்டவணையைப் பார்க்கவும்) ஆவணங்களை இந்தியா ஸ்பெண்ட் அணுகியதில் தெரிய வருகிறது.

ஈரானிய குங்குமப்பூ தரும் போட்டியில் இருந்து காஷ்மீர் வகை குங்குமப்பூவை - ஒரு கிலோ ரூ.1 - 3 லட்சம் விற்கும் உலகின் மிக விலையுயர்ந்த இந்த நறுமணப்பொருளை- காப்பாற்ற, புவிசார் குறியீடு உதவும் என்று பட் மற்றும் அவரது சக விவசாயிகள் நம்புகின்றனர். காஷ்மீர் வகையை விட 48% வரை விலை மலிவான ஈரானிய குங்குமப்பூ, உலக சந்தையில் 95% பங்கை கொண்டுள்ளது.

குங்குமப்பூ, அதன் விலை அதிகமாக இருந்தபோதிலும், அதன் ஆக்ஸிஜனேற்ற குணங்களுக்காக அதற்கு அதிகத்தேவை உள்ளது. குரோகஸ் பூக்களை நூல் போன்ற நறுமணப்பொருளாக மாற்றும் செயல்முறை கடினமானது மற்றும் அதிக வேலை மிகுந்ததாக இருப்பதால், இது மிகப்பெரிய விலையை கொண்டுள்ளது: ஒரு கிலோ குங்குமப்பூவை விளைவிக்க சுமார் 1,60,000 பூக்கள் தேவை.

குரோஸின் அதிக அடர்த்தியோடு இருப்பதால் காஷ்மீர் குங்குமப்பூ அதிக தரம் வாய்ந்தது; இது, குங்குமப்பூவுக்கு அதன் நிறத்தையும் மருத்துவ மதிப்பையும் தரும் கரோட்டினாய்டு நிறமியாகும்: ஈரானிய குங்குமப்பூவில் குரோசின் உள்ளடக்கம் 6.82% என்ற அளவில் ஒப்பிடும்போது காஷ்மீர் குங்குமப்பூவில் அது 8.72% என்றளவில் உள்ளது. இது அடர் இருண்ட நிறம், மேம்பட்ட மருத்துவ குணத்தை தருகிறது என்பது ஆவணங்களின் தகவலாகும்.

"காஷ்மீரி குங்குமப்பூ அதன் இருண்ட மெரூன்-ஊதா நிறத்தால் அடையாளம் காணப்படுகிறது; இது உலகின் இருண்ட ஒன்றாகும், இது வலுவான சுவை, நறுமணம் மற்றும் வண்ணமயமாக்கல் விளைவைக் குறிக்கிறது,” என்று சர்வதேச வேளாண் அதன் தொடர்புடைய அறிவியல் (ஐ.ஜே.எஃப்.ஏ.எஸ்) என்ற இதழ் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரை தெரிவிக்கிறது.

விவசாயிகள் சுட்டிக்காட்டும் பிரச்சனை என்னவென்றால், பொதுவான நுகர்வோர் பல்வேறு வகைகளுக்கு இடையிலான வேறுபாட்டைக் கண்டறிவது கடினம்; இது காஷ்மீரின் குங்குமப்பூ உற்பத்திக்கு பாதகமாக உள்ளது; இதனால், போட்டிச்சந்தையில் தகுதியான மற்றும் அதிக விலையை கேட்க முடியாது. உயர்தர காஷ்மீர் குங்குமப்பூவின் தரம், கலப்படத்தால் பாதிக்கப்பட்டுள்ளது - விற்கப்பட வேண்டிய மலிவான ஈரானிய வகைகளுடன் கலந்து, இது உள்ளூர் விவசாயிகளின் இலாப வரம்பை குறைத்துள்ளது என்று ஐ.ஜே.எஃப்.ஏ.எஸ் கூறுகிறது.

கடை அலமாரிகளில் அதை வேறுபடுத்துவதற்கான சிறந்த வழியாக புவிசார் குறியீ இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். பாம்பூரில் உள்ள க்ரூ கிராமத்தில் 2.5 ஹெக்டேர் பண்ணை வைத்திருக்கும் பட், "இதுதான் இப்போது விவசாயிகளுக்கு கடைசி நம்பிக்கை" என்று கூறினார். "காஷ்மீர் குங்குமப்பூ தற்போது எதிர்பார்த்த விலை ரூ.2,500 என்பதற்கு பதிலாக ஒரு டோலா [10 கிராம்] ரூ.1000 க்கு விற்கப்படுகிறது" என்றார்.

உள்ளூர் குங்குமப்பூவை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள், ஜம்மு - காஷ்மீரின் பொருளாதாரத்திற்கு முக்கியமானவை. வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் தான் இங்குள்ள மக்களில் 80% பேரின் முக்கிய தொழிலாகும்; மேலும் 16,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குங்குமப்பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளன. தற்போது ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் காஷ்மீர் குங்குமப்பூவில் 2.35% ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று ஸ்ரீநகரை சேர்ந்த வர்த்தகர்கள் தெரிவித்தனர்; இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

செப்டம்பர் 2019ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தபடி, தற்போதைய காஷ்மீரின் நெருக்கடி மற்றும் தகவல் தொடர்பு முடக்கம் போன்றவை இந்த பிராந்தியத்தின் பொருளாதாரத்தை தாக்கியுள்ளது.

கடின வேலை, வருவாய் குறைவு

குங்குமப்பூ சாகுபடிக்கு கடின உழைப்பு மற்றும் மிகவும் பொறுமை அவசியம் - இலையுதிர்காலத்தில் அறுவடை தயாராகும் போது, பூக்கள் பறிக்கப்பட்டு, சூல் அகற்றப்பட்டு சிவப்பு நிறம் போகச்செய்து, மெல்லிய நூலின் அளவிற்கு சுருங்கும் வரை நாட்கள் உலர்த்தப்படும். குங்குமப்பூவின் சூல் சுமார் 2 மி.கிராம் எடை கொண்டது; சராசரியாக ஒவ்வொரு பூவிலும் மூன்று சூல்கள் இருக்கும்.

விவசாயத்துறை தகவலின்படி, ஒவ்வொரு ஆண்டும் காஷ்மீர் சராசரியாக 17 மெட்ரிக் டன் குங்குமப்பூவை உற்பத்தி செய்கிறது. புல்வாமா, ஸ்ரீநகர் மற்றும் புட்கம் ஆகிய மூன்று மாவட்டங்களில் குங்குமப்பூ பயிரிடப்படுகிறது.

விவசாயி பட்டின் கதை, இரண்டு தசாப்தங்களாக இப்பயிர் வீழ்ச்சியை சந்தித்து வருவதை விளக்குகிறது. நான்கு தலைமுறைகளாக குங்குமப்பூவை வளர்த்து வரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பட், 1996ல் தனது நிலத்தில் வேலை செய்யத் தொடங்கினார். முதல் 10 ஆண்டுகள் லாபகரமானவை - அவரது வயல்கள் ஆண்டுதோறும் 6 கிலோ குங்குமப்பூவை விளைவித்தன, அவை ஒரு கிலோவுக்கு சுமார் 2.5 லட்சம் ரூபாய்க்கு விற்கலாம்.

ஆனால் 2007 ஆம் ஆண்டில், மலிவான ஈரானிய குங்குமப்பூ இந்திய சந்தைகளுக்கு நெருக்கடியை தரத் தொடங்கியதாக பட் கூறினார். விலைகள் - ஒரு கிலோவுக்கு ரூ.1 லட்சம் வரை - குறைந்துவிட்டதால் பட் வசிக்கும் கிராமமான க்ரூவில், குங்குமப்பூ சாகுபடியில் இருந்து விவசாயிகள் வெளியேறத் தொடங்கினர். அவர்கள் தங்கள் நிலங்களில் கடைகளை அமைத்து அதை வாடகைக்கு விடத் தொடங்கினர்.

"ஒரு தசாப்தத்தில், க்ரூவில் சுமார் 2,400 ஹெக்டேர் குங்குமப்பூ விளை நிலங்கள் இருந்த நிலையில் தற்போது 1,500 ஹெக்டேராக சுருங்கிவிட்டன" என்று பட் கூறினார். "மக்கள் ஆப்பிள் வளர்ப்பது அல்லது ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஷாப்பிங் வளாகங்களை உருவாக்குவது போன்ற பிற வர்த்தகங்களுக்கு மாறினர்" என்றார் அவர்.

கடந்த 24 ஆண்டுகளில், காஷ்மீரில் குங்குமப்பூவுக்கு என்று பயன்படுத்தப்பட்ட சாகுபடி நிலம் 65% குறைந்துள்ளது என்பது, இந்தியா ஸ்பெண்ட் அணுகிய விவசாயத் துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானிய குங்குமப்பூ சதுப்பு நில சந்தை

ஈரானிய குங்குமப்பூவை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது: 2018 ஆம் ஆண்டில் ஈரானில் இருந்து 18.30 மில்லியன் டாலர் மதிப்புள்ள குங்குமப்பூவை இறக்குமதி செய்ததாக இந்திய வர்த்தக மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஈரான் தற்போது உலகின் மிகப் பெரிய குங்குமப்பூ உற்பத்தியாளராக உள்ளது, நாம் முன்பு கூறியது போல், ஒவ்வொரு ஆண்டும் 30,000 ஹெக்டேர் நிலத்தில் 300 டன்களுக்கு மேல் பயிரிடப்படுகிறது. உலகளாவிய விநியோகத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கும் காஷ்மீரில், குங்குமப்பூ சாகுபடி அந்த பகுதியில் சுமார் எட்டில் ஒரு பகுதிக்கு - 3,715 ஹெக்டேர் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.

சுமார் 3,200 ஹெக்டேர் நிலம் கொண்ட புல்வாமா மாவட்டத்தில் உள்ள பம்பூர், பள்ளத்தாக்கில் குங்குமப்பூ சாகுபடி அதிகம் உற்பத்தி செய்கிறது என்று விவசாயத் துறை தெரிவித்துள்ளது. ஸ்ரீநகர் மற்றும் புட்காம் முறையே 165 மற்றும் 300 ஹெக்டேரில் குங்குமப்பூ சாகுபடி செய்கின்றன; ஜம்மு பகுதியில் 50 ஹெக்டேர் நிலத்தில் இதை பயிரிடும் ஒரே மாவட்டம் கிஷ்த்வார் தான்.

அனைத்து ஜம்மு & காஷ்மீர் குங்குமப்பூ வளர்ப்பாளர்கள் மேம்பாட்டு கூட்டுறவு சந்தைப்படுத்தல் சங்கத்தின்படி, காஷ்மீர் குங்குமப்பூவின் விலை, 2007ம் ஆண்டுக்கு பிறகு 48% குறைந்துள்ளது; ஈரானிய இறக்குமதி கணிசமாக வளர்ந்தது. ஒரு கிராம் காஷ்மீர் குங்குமப்பூ 2020ல் ரூ.120 ஆகவும், 2007ல் 250 ரூபாயாகவும் இருந்தது என்று குங்குமப்பூ வளர்ப்பாளரும் சங்கத்தின் தலைவருமான அப்துல் மஜீத் வாணி தெரிவித்தார்.

ஒரு காலத்தில் குங்குமப்பூ சாகுபடிக்கு பெயர் பெற்ற பம்பூரில் உள்ள கானிபால் என்ற கிராமத்தை வாணி மேற்கோள் காட்டி, வர்த்தகம் எவ்வளவு கடினமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. "கிராமத்தில் 250 ஹெக்டேர் குங்குமப்பூ நிலம் இருந்தது, ஆனால் மகசூல் வீழ்ச்சியடைந்தபோது, ​​விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள நிலத்தில் கட்டுமானங்களை எழுப்பினர்," என்று அவர் கூறினார்.

ஈரானிய குங்குமப்பூவில் கிட்டத்தட்ட 60% துபாய் வழியாக சட்டவிரோதமாக அனுப்பப்படுவதாக வாணி குற்றம் சாட்டினார். "இந்தியாவில் விற்பனை செய்வோர் ஈரானிய குங்குமப்பூவை ஒரு கிலோவுக்கு ரூ.1 லட்சத்திற்கு விற்கிறார்கள், அதே விலைக்கு நாங்களும் விற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், ஆனால் காஷ்மீரி குங்குமப்பூ இரு மடங்கு விலைக்கு விற்க தகுதியானது" என்று அவர் கூறினார்.

ஈரானிய குங்குமப்பூ பெரும்பாலும் காஷ்மீர் குங்குமப்பூ என்று போலியாக காட்டி, உள்ளூர் சந்தைகளில் விற்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். "இது காஷ்மீர் குங்குமப்பூவின் நற்பெயரைப் பாதிக்கிறது, இது ஈரானிய வகைகளை விட அதிக நறுமணம், சுவை மற்றும் வண்ண விளைவைக் கொண்டுள்ளது" என்று காஷ்மீர் விவசாயத் துறை இயக்குனர் அல்தாஃப் அஜாஸ் ஆண்ட்ராபி இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

குங்குமப்பூ வேலை இருந்தும் விளைச்சல் இல்லை

கடந்த 1996ல் ஆண்டு உற்பத்தி 15.95 மெட்ரிக் டன்களாக இருந்த குங்குமப்பூ, 2019ம் ஆண்டில் 15.133 மெட்ரிக் டன்னாக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தேங்கி நிற்கிறது என்று விவசாயத் துறை தெரிவித்துள்ளது. இந்த 24 ஆண்டுகளில் சராசரி மகசூல் ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோ தாண்டவில்லை, சில சமயங்களில் ஹெக்டேருக்கு 0.095 கிலோவாக குறைந்துள்ளது.

கடந்த 2007ல் , ஜம்மு & காஷ்மீர் அரசு குங்குமப்பூ சட்டம் 2007ஐ அறிமுகம் செய்தது. இது குங்குமப்பூக்களை வணிகத் திட்டங்களாக மாற்றுவதை தடைசெய்தது மற்றும் ரூ.10,000 அபராதம் மற்றும் மீறுபவர்களுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனைக்கு வகை செய்தது. அந்த ஆண்டில், 3,280 ஹெக்டேரில் 7.70 மெட்ரிக் டன் ஆண்டு உற்பத்தியை பதிவு இது செய்துள்ளது, சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 2.34 கிலோ மகசூல் கிடைத்தது.

அப்போதிருந்து, சாகுபடி செய்யப்பட்ட நிலம் 3,715 ஹெக்டேரில் நிலையானது. காஷ்மீரில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும், 121 கோடி ரூபாய் மதிப்புள்ள கிட்டத்தட்ட ஒன்பது மெட்ரிக் டன் குங்குமப்பூ சேதம் அடையும் 2014 வரை ஆண்டு உற்பத்தி இரட்டை இலக்கங்களைக் கடந்தது.

Source: Department of Agriculture Kashmir

இத்துறையை புதுப்பிக்க ரூ.400 கோடியில், தேசிய குங்குமப்பூ மிஷன், 2010ல் அமைக்கப்பட்டது; ஆனால், அது தனது மேம்பட்ட உற்பத்தித்திறன், சிறந்த நீர்ப்பாசனம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விவசாயம் மற்றும் அறுவடைக்கு பிந்தைய நடைமுறைகள் போன்ற இலக்குகளை பூர்த்தி செய்ய முடியாததால் விளைச்சல் அதிகரிக்கவில்லை.

தேசிய குங்குமப்பூ மிஷன், ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டது; ஆனால் முக்கியமான பணிகள் ஒருபோதும் முடிக்கப்படவில்லை. நிதி பற்றாக்குறை மற்றும் பல்வேறு கூறுகளின் முழுமையற்ற தன்மையால், 2014 மற்றும் மார்ச் 2019 ஆகிய இரண்டு காலக்கெடுவை வீணாக்கியது - எனவே இப்பணிக்கான இலக்கு 2020 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டது. அரசு இதுவரை ரூ. 266 கோடியை ஒதுக்கி, அதில் ரூ. 247 கோடி நிதி (93%) பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இந்தியா ஸ்பெண்ட் அணுகிய வேளாண்துறை ஆவணங்கள் காட்டுகின்றன.

மிஷனின் ஆரம்ப இரண்டு ஆண்டுகளில் குங்குமப்பூ உற்பத்தியில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என்கிறது தரவு; ஆனால் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இத் அதிகரித்து, வெள்ளம் காரணமாக 2014 ல் குறைந்தது.

காலநிலை மாற்ற விளைவுகள்

தீவிர காலநிலை நிலைமைகள், குறிப்பாக நீடித்த வறட்சி மற்றும் தீவிர மழை மற்றும் பனிப்பொழிவு ஆகியன, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் முறையே 5.2 மற்றும் 5.653 மெட்ரிக் டன்களாக குங்குமப்பூ உற்பத்தியை குறைந்தன. 2019 ஆம் ஆண்டில், காஷ்மீரில் சரியான நேரத்தில் மழை பெய்தபோது, மகசூல் 15.133 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது; மொத்தமுள்ள 3,715 ஹெக்டேர் நிலத்தில் ஒரு ஹெக்டேருக்கு சராசரி மகசூல் 4.07 கிலோ கிடைத்தது.

கடந்த 2019 நவம்பரில், பனியால் பயிர் சேதமடையாமல் இருந்திருந்தால் சமீபத்திய மகசூல் பெரிதாக இருந்திருக்கும் என்று வேளாண்துறை கூறியது.

நாங்கள் பேசிய விவசாயிகள், குங்குமப்பூ மிஷன் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். "128 ஆழ்துளைக் கிணறுகள் வரை அரசு சாத்தியமானது, அவை செயல்படத் தொடங்கும் நாளை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்று விவசாயி நசீர் அகமது கூறினார்.

புவிசார் குறியீட்டுக்கு காத்திருப்பு

செம்பர் 2019 இல், காஷ்மீர் வேளாண்துறை ஏற்பாட்டின்படி, காஷ்மீரத்து குங்குமப்பூ விவசாயிகள், புதுடெல்லியில் உள்ள புவிசார் குறி பதிவு அதிகாரிகளைச் சந்தித்தனர். துணை பதிவாளர் சின்னராஜா ஜி நாயுடு உற்பத்தி முறை, சாகுபடிக்கு உட்பட்ட பகுதி மற்றும் புவிசார் குறியீடு பெறுவதற்காக காரணங்கள், விவரங்களை கேட்டறிந்தார்.

"காஷ்மீரி குங்குமப்பூவை புவிசார் குறியீடு பெறுவதை ஊக்குவிப்பதும், பாம்பூரில் உள்ள டஸுவில் நறுமணப்பொருள் பூங்கா அமைப்பது, வருவது மின்னணு வணிகமாக்கும் முன்முயற்சி போன்றவை ஒட்டுமொத்த தொழில்துறையினரின் பிரச்சினைகளுக்கும் தீர்வாகும்" என்று ஆண்ட்ராபி கூறினார். "குங்குமப்பூவில் உள்ள [புவிசார் ] பார் குறியீடு நமது குங்குமப்பூவின் கண்டுபிடிப்பை காட்டும்- யார் பயிரிட்டது, அவரது விளைச்சல் எவ்வளவு மற்றும் மிக முக்கியமாக, அவரது விளைபொருட்களின் தரநிலைகள் போன்றவற்றை தெரிவிக்கும்" என்றார்.

புட்காமில் உள்ள நகெம் பகுதியை சேர்ந்த குங்குமப்பூ விவசாயியான தாரிக் அஹ்மத், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஒரு ஹெக்டேர் நிலத்தின் விளைச்சல் சில கிராமுக்கு குறைவாக வீழ்ச்சியடைந்தபோது குங்குமப்பூ சாகுபடியை கைவிட்டார். அவர் புவிசார் குறியீடு பெரும் முயற்சியை வரவேற்றார்: “இது நிச்சயமாக விவசாயிகளின் கடின உழைப்புக்கு விரும்பத்தக்க மதிப்பை கூட்டும்” என்றார்.

பல வணிக அமைப்புகளின் கூட்டமைப்பான காஷ்மீர் சேம்பர் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் காமர்ஸ் (கே.சி.சி.ஐ) குங்குமப்பூ தொழிலுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், போட்டி நாடுகளான ஈரான், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு இணையான தரத்தில் வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பதையும் ஆதரிக்கிறது.

"இந்த நறுமணப் பொருட்களுக்கான வணிக பிராண்ட் பெறுவதற்கு ஒரு வழிமுறை இருக்க வேண்டும்," என்று கே.சி.சி.ஐ தலைவர் ஷேக் ஆஷிக் அகமது இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். குங்குமப்பூ அறுவடை மற்றும் பேக்கேஜிங் முழு செயல்முறையும் இங்கு பாரம்பரிய முறையில் காஷ்மீரில் செய்யப்படுகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் இந்த பணப்பயிரின் தேவை அதிகரிப்பதால் புவிசார் குறியீடு என்பது, இத்தொழிலில் போக்கினை மஆற்ரும் ஒன்றாக இருக்கக்கூடும்” என்றார் அவர்.

நவீன நடைமுறைகளின் தேவை

குங்குமப்பூ வளர்ப்பில், பாரம்பரிய நடைமுறைகளே வேரூன்றி காணப்படுகின்றன; விளைச்சலை மேம்படுத்த, இதில் நவீனத்தை புகுத்த வேண்டும் என்று ஸ்ரீநகர் மாவட்டத்தின் ஷுஹாமா பகுதியில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் பல்கலைக்கழக குங்குமப்பூ ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் பஷீர் அஹ்மத் இல்லாஹி கூறினார்.

"காஷ்மீரில், விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு 225,000 நாற்று விதைக்கிறார்கள்; அதே நேரத்தில் 500,000 ஆக இருக்க வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது," என்று அவர் கூறினார். "அடுத்து, அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை, குறிப்பாக குங்குமப்பூ பூவை வெயிலில் காயவைப்பது மாற வேண்டும். வெளிநாட்டில், வெற்றிட உலர்த்திகள் மூலம் அவர்கள் இதை செய்கிறார்கள்” என்றார்.

(ஃபிர்தோஸ் ஹஸன், ஸ்ரீநகரை சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.