டிஜிட்டல் இந்தியாவின் ‘மந்திரக்கோல்’ ஜார்க்கண்டில் தீர்வுகளை விட சிக்கல்களையே அதிகம் உருவாக்குகிறது: ஆய்வில் கண்டுபிடிப்பு
பெங்களூரு: கிராமப்புற இந்தியா முழுவதும் அரசு முதல், நுகர்வோர் வரை (ஜி2சி) சேவைகளை வழங்கும் தனியார் இணைய பொதுச்சேவை மையங்கள் (சிஎஸ்சி), சட்டசபை தேர்தல் நடைபெறும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உரிய சேவைகளை வழங்கத்தவறியது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இணைய பொதுச்சேவை மையங்கள் (சி.எஸ்.சி) வாடிக்கையாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்குதல், ஆதார் வழியே வங்கி கட்டண பரிமாற்ற முறைகள், பான் கார்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், சுகாதார நலன்களை அணுகுவது போன்ற சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
அவ்வப்போது மின்சாரம் மற்றும் இணையதள இணைப்பு தாமதம் போன்றவற்றால் அவை, ஆப் லைனிற்கு சென்று செயலற்று உள்ளன.
"அனைத்து கிராமங்களையும் காகிதமில்லாத டிஜிட்டல் ஊராட்சிகளாக" மாற்ற ஏதுவாக சி.எஸ்.சி - பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
அரசு சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்குவது என்பது பாரதீய ஜனதாவின் (பாஜக ) விருப்பமான தேர்தல் திட்டமாக உள்ளது. இக்கட்சி மத்தியிலும், நவம்பர் 30 முதல் ஐந்து கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் ஜார்க்கண்டிலும் ஆட்சியில் உள்ளது.
தேசிய மின் ஆளுமைத்திட்டத்தின் கீழ் இணைய பொதுச்சேவை மையங்கள், 2006இல் நிறுவப்பட்டன. இவை, பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் “மூலோபாய மூலக்கல்” ஆகும். மனித மேம்பாட்டு குறிகாட்டிகளில் இந்தியாவில் 36 இடங்களில் 34 வது இடத்தில் உள்ள ஜார்கண்ட், 100% இணைய பொதுச்சேவை மையங்கள் அமைக்கப்பட்ட முதல் மாநிலங்களில் ஒன்றாகும்.
‘பொதுச்சேவைகளை வீட்டிற்கு அருகாமையில்’ கொண்டு வரும் நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட இம்மையங்கள், கிராம தொழில்முனைவோர் (வி.எல்.இ) என குறிப்பிடப்படும் தனியாரால் நடத்தப்படுகின்றன. இந்த ‘தொழில் முனைவோர்’ வழங்கும் ஒவ்வொரு சேவைக்கும் மாநில அரசிடம் இருந்து ஒரு கமிஷனை பெறுகின்றனர். "சமூக மாற்றத்தை உருவாக்குவதற்கான சமூக பங்களிப்பு மற்றும் கூட்டு நடவடிக்கை" ஆகியவற்றை செயல்படுத்த அவர்கள் "மாற்ற முகவர்கள்" என்று கருதப்படுகின்றனர்.
இதுபோன்ற 3,00,000 க்கும் மேற்பட்ட மையங்கள் "டிஜிட்டல் இந்தியாவின் கனவை" எவ்வாறு அடையச் செய்கின்றன என்பது குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். மோடி தனது 2018 சுதந்திரதின உரையில், இம்மையங்கள் தகவல் தொழில்நுட்பத்தை உகந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் “எப்போது வேண்டுமானாலும் எங்கும் இணைய” சேவைகளை வழங்குகின்றன என்று கூறினார்.
சேவை துண்டிப்பு விநியோகம்
எப்படியானாலும், இக்கணக்கெடுப்பு முடிவுகள் குறைந்தபட்சம் ஒரு மாநிலத்திலாவது மோடியின் கூற்றுகளுக்கு முரணாக இருந்தது என்றால் அது - ஜார்க்கண்ட்.
ஜார்கண்டில் பிரக்யா கேந்திராஸ் (பி.கே) என அழைக்கப்படும் இணைய பொதுச்சேவை மையங்களின் 401 பயனர்களையும்,10 மாவட்டங்களில் 61 கிராமத் தொழில் முனைவோரையும் ஜூன் 2018 இல் நேர்காணல் செய்த ஆய்வாளர்கள், சேவை மையங்ளின் தன்மை, வகை, அணுகல் விழிப்புணர்வு மற்றும் எடுத்துக் கொண்டவளங்கள், ஏற்பட்ட பிரச்சினைகள், குறைகள் எவ்வாறு தீர்க்கப்பட்டன என்பது பற்றி பயனர்களிடம் கேட்டனர். கிராம தொழில் முனைவோரிடம், அவர்கள் வழங்கிய சேவைகள், நிதி நிலைத்தன்மை மற்றும் அவர்களை தொழில்முனைவோர் அல்லது அரசு ஊழியர்களாக கருதுவது குறித்து கேட்கப்பட்டது.
எளிதாக அணுகும் இடத்தில் பொதுச்சேவை மையம் இருப்பது கட்டாயம் என்ற நிலையில், ஜார்க்கண்டில் 37% மட்டுமே உண்மையில் கிராம ஊராட்சி பவனில் அணுகத்தக்கதாக இருந்தது என்பது, ஜூன் 2018 மாவட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
மின்சாரம் மற்றும் தடையற்ற இணைய இணைப்பு இல்லாதது, பொதுச்சேவை மையங்களின் குறைந்த பயன்பாட்டிற்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டன. ஊராட்சி பவனில் இருந்து செயல்பட்ட சில பொதுச்சேவை மையங்களில், நான்கு பயனர்களில் ஒருவர் தங்கள் வீட்டுக்கு அருகே உள்ள மையத்தை பயன்படுத்தவில்லை. ஊராட்சி பவன்களில் இருந்த பல பொதுச்சேவை மையங்களில் பல இயங்கவில்லை என்றாலும், இருக்கும் சேவைகளை பெறுவதற்கு அதுவே வசதியானது என்று பயனர்கள் கருதினர்.
சேவை கட்டணங்கள் குறித்து அதிகாரபூர்வ அட்டவணை இருந்தபோதும் சேவைகளுக்கு பயனர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஒவ்வொரு பொதுச்சேவை மையம் முன்பும் கட்டண அட்டவணை தெரியும்படி வைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இருப்பதில்லை அல்லது தெரியாத இடத்தில் சிறிய அளவில் ஒப்புக்கு வைக்கப்படுகிறது. பிறப்புச்சான்று, சாதிச்சான்றிதழ் போன்றவற்றுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ.30; ஆனால் பயனர்களிடம் சராசரியாக ரூ.101 பெறப்படுகிறது. இதேபோல் ஆதார் தொடர்பான சேவைகளுக்கு இலவசம் என்ற போதும் பயனர்கள் இது தொடர்பான ஒவ்வொரு சேவைக்கும் சராசரி ரூ.80 ஐ செலுத்தியது ஆய்வில் கண்டறியப்பட்டது.
Source: https://pkas2018.wordpress.com/ (photos were taken by local and student volunteers)
வழங்கப்படும் சேவைகளின் பட்டியல், அவற்றுக்கான அதிகாரபூர்வ கட்டண அட்டவணை, பொதுச்சேவை மையங்களில் வைக்க வேண்டும் என்பது கட்டாயம். ஜார்கண்டின் கிரிடிஹ் மாவட்டம், சில்காவில் உள்ள மையத்தில் வைக்கப்பட்டுள்ள, சேவைக்கான முறையான கட்டண அட்டவணை என்பதற்கு, படம்- 1 நல்ல எடுத்துக்காட்டு. கிழக்கு சிங்பம் மாவட்டம் பங்காட்டியில் உள்ள சேவை மையத்தில் கட்டணத்தை குறிப்பிடாமல் படம் -2 இல் உள்ள அட்டவணை, மோசமான உதாரணமாகும்.
பொதுச்சேவை மையங்ளில் 22% பயனர்கள் மட்டுமே சேவைக்கான கட்டண அட்டவணையை பார்த்ததாகக் கூறினர் என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. குறைந்த விழிப்புணர்வு மற்றும் முறையான சேவைக்குரிய கட்டண அட்டவணை இல்லாதது, மோசடி செய்யும் சில கிராமத் தொழில் முனைவோரிடம் இருந்து பயனர்கள் விலகிக் செல்ல ஒரு காரணமாக இருக்கலாம். சுமார் 40% பயனர்கள், சேவைக்கட்டணத்தை கிராமத் தொழில் முனைவோரே தங்கள் விருப்பப்படி நிர்ணயித்துக் கொண்டதாக கருதினர்; 43% பேர் அரசு அல்லது தொழில் முனைவோர் நிர்ணயித்தனரா என்று தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர்.
ஆய்வில் பங்கேற்ற பலரும், இணைய பொதுச்சேவை மையங்களில் அதிக நேரம் செலவிட வேண்டி இருப்பதாகவும், பலமுறை இம்மையத்திற்கு வந்து செல்ல வேண்டியிருப்பதாகவும் அதிருப்தியோடு கூறினர். பாதிக்கும் மேற்பட்ட பயனர்கள் (55%) பொதுச்சேவை மையத்தில், தங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக அதிக நேரம் செலவிடுவதாக தெரிவித்தனர். எந்தவொரு சான்றிதழையும் பெறுவதற்கு எடுக்கப்பட்ட சராசரி நேரம் ஏழரை மணி நேரம் (அட்டவணை 1).
Table 1: Cost, Time & Frequency Of Visits To Access Services | |||||||
---|---|---|---|---|---|---|---|
Respondents Using The Service (In %) | Official Rate (In Rs) | Median Actual Paid (In Rs) | Mean Actual Paid (In Rs) | Median Time Taken (Hours) | Mean Time Taken (Hours) | Avg. Visits Required | |
Certificates | 56 | 30 | 75 | 101 | 4.64 | 7.5 | 6.56 |
Banking | 30 | 0 | 0 | 34 | 4.86 | 8.1 | 3 |
Aadhaar | 27 | 0 | 70 | 80 | 3.48 | 4.4 | 2.09 |
Other / Jhar Sewa* | 36 | 30 | 78 | 105 | 2.62 | 6.8 | 8.36 |
Source for this table: Pragya Kendra Assessment Study
*Jharkhand Sewa Services
கணக்கெடுக்கப்பட்ட 401 பயனர்களில், 37% பேர் இணைய தொடர்பு / மின்சார பிரச்சினைகளால், பொதுச்சேவை மையத்தை அணுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்; கணக்கெடுப்பு கண்டறியப்பட்ட விவரம் (அட்டவணை 2). சராசரியாக பயனர்கள் ஒரு சான்றிதழுக்காக ஆறு முறைக்கு மேல், வங்கி சேவைக்கு மூன்று முறை மற்றும் பிற சேவைகளுக்கு எட்டு முறைக்கு மேல் வந்து செல்ல வேண்டியிருந்தது. சரிசெய்யப்படாத இத்தகைய துயரங்கள், பொதுச்சேவை மையங்கள் தோற்றுவிக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கத்திற்கு விரோதமாக உள்ளன.
கிராமப்புற வங்கிகளில் உள்ள தடைகள்
பொதுச்சேவை மையங்கள் "வங்கியில்லாத மற்றும் ஒதுக்கப்பட்ட கிராமப்புற சமூகங்களுக்கு" நிதி சேவைகளை வழங்குகின்றன; அவை “அநேகமாக உலகின் மிகப்பெரிய நிதி அணுகல் புள்ளி வலையமைப்பு”, என்று சி.எஸ்.சி மின் ஆளுமை திட்டத்திற்கு தலைமை வகிக்கும் தினேஷ் தியாகி கூறுகிறார். ஜார்க்கண்டில், கிராமப்புற வங்கிகள் அரிதாகவே அமைந்துள்ளதால், இங்கு கூட்டம் அதிகமாக உள்ளது.
பொதுச்சேவை மையங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது முக்கிய சேவை, வங்கி தொடர்பானது என்ற கணக்கெடுப்பு முடிவானது, கள உண்மையை பிரதிபலிக்கிறது. ஆனால் பயனர்கள் இதில் பல தடைகளை எதிர்கொண்டனர். உதாரணமாக, கணக்கெடுக்கப்பட்டவர்களில் 63% பேர் தங்களது வங்கி பரிவர்த்தனைக்கு சேவை மையத்தில் ரசீது அல்லது காகித ஒப்புகை சீட்டு பெறவில்லை என்றனர்; மூன்றில் ஒரு பகுதியினர், வங்கிக் கிளையை பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இத்தகைய ரசீதுகள் / ஒப்புகை சீட்டுகளை வழங்குவது மிக முக்கியமானது, ஏனெனில் பொதுச்சேவை மையங்கள் பாஸ்புக் புதுப்பித்தல் சேவைகளை வழங்கவில்லை. பயனர்கள் தங்கள் வங்கி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கான ஒரே வழி ரசீதுகள் தான். இந்த காகித சீட்டுகள் இல்லாவிட்டால், பரிவர்த்தனைகள் மோசடிக்கு வழிவகுக்கும்.
ஆதார் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு, 42% பயனர்கள் கூடுதலாக ஒரு (அதிகாரப்பூர்வமாக) அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருந்ததை கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. கிராம தொழில் முனைவோர் கூற்றுப்படி, 42% பயனர்களின் பயோமெட்ரிக்ஸ் முதல் முயற்சியில் வேலை செய்தது இல்லை.
ஜார்க்கண்ட் முழுவதும் உள்ள பெரிய வங்கிகளின் அதிகாரிகள் அடிக்கடி தங்கள் பயனர்களை தங்கள் கிளையில் இருந்து திருப்பி அனுப்புகிறார்கள்; ரூ.10,000-க்கும் குறைவான தொகையை உள்ளூர் பொதுச்சேவை மையத்தில் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவது ஆய்வில் தெரிய வந்தது. பொதுச்சேவை மையத்தில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு தோல்வியடைந்தால் அதுபற்றி எழுத்து பூர்வமாக அந்த மையத்தின் தொழில் முனைவோரிடம் இருந்து கையொப்பமிட்ட கடிதம் பெற்று வருமாறு பயனாளர்களை வங்கி தரப்பு அறிவுறுத்தி, மீண்டும் அவர்களை அலைக்கழிக்கிறது.
பணத்திற்காக இதில் ஈடுபடும் தொழில் முனைவோர்
இந்த கணக்கெடுப்பில் பயனர்கள் மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் இடையே பெரிய சமூக பொருளாதார மாறுபாடு இருபதை கண்டறிந்தது. தொழில் முனைவோரில் சுமார் 15% பேர் தலித்துகள் / ஆதிவாசிகள்; மாதிரி பயனர்களின் சுயவிவரத்திற்கும் ஜார்க்கண்டின் ஒட்டுமொத்த சுயவிவரத்திற்கும் முற்றிலும் மாறுபாடு உள்ளது: அதாவது, மாநில மக்கள் தொகையில் 40% தலித்துகள் / ஆதிவாசிகள்.
இந்த முரண்பாடு, பாலின பிரதிநிதித்துவம் மற்றும் கல்வி மட்டங்களில் வெளிப்பட்டது. மாநில மக்கள் தொகையில் 49% பெண்கள் உள்ள நிலையில், கிராமப்புற தொழில் முனைவோர் பொதுச்சேவை மையங்களை 93% ஆண்களே வைத்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 90% க்கும் மேற்பட்டவர்கள் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்; அதே நேரம், 37% பயனர்கள் கல்வியறிவு பெறாதவர்கள் அல்லது ஐந்தாம் வகுப்பிற்கும் குறைவாக படித்தவர்கள்.
பஞ்சாயத்து பவன்களில் பொதுச்சேவை மையங்கள் செயல்பட முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாட்டு சிக்கல்கள் என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, பிரதமரின் ‘எங்கும் எப்போதும் இணைப்பு’ என்ற கூற்றுக்கு கிராமப்புற தொழில் முனைவோர் முரணாக உள்ளது.
பாதிக்கும் மேற்பட்டவ (54%) கிராமப்புற தொழில் முனைவோர், கூடுதல் வருமான ஆதாரங்களை நம்பியுள்ளதாகக் கூறியுள்ளனர். பொதுச்சேவை மைய கமிஷன்கள் வணிக ரீதியாக சாத்தியமாக்கவில்லை என்று அவர்கள் கூறினர்; 90% க்கும் அதிகமானோர் கமிஷன்களுக்கு பதிலாக நிலையான மாத சம்பளத்தை விரும்புவதாகக் கூறினர்.
கிராமப்புற தொழில் முனைவோர், பொதுச்சேவை மையம் மூலம் மாதத்திற்கு சராசரி ரூ.3,000 சம்பாதிப்பதாக கூறுகின்றனர்; அதே நேரத்தில் மையம் அமைப்பதற்கு ரூ.87,000 செலவிட்டதாக கூறப்படுகிறது. சுமார் கால்வாசிப் பேர் அதிகாரிகளுக்கு ‘கூடுதல் செலவு’ செய்ய வேண்டி இருப்பதாக கூறினர். குறைந்த கமிஷன் தொகை, நிதிரீதியாக போதுமானதாக இல்லை என்று பெரும்பாலான கிராமத் தொழில் முனைவோர் சுட்டிக்காட்டினர். மேலும், பயனர்களிடம் சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலிப்பது மாநில அதிகாரிகளுக்கும் தெரிந்து தான் நடக்கிறது.
இதுபோன்ற நிதி நிலைத்தன்மையானது, திட்டத்தின் குறிக்கோளுக்கு முரணானது. "நாங்கள் வேறொரு கடையும் நடத்துவதால் இதை சமாளிக்க முடிகிறது" என்று ஒரு கிராமப்புற தொழில் முனைவோர் தெரிவித்தார். “இதுபோன்ற சேவைகளை இன்னும் பலர் வழங்கத் தொடங்கியுள்ளதால், எங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்து, எங்களது லாபமும் குறைக்கிறது” என்றார் அவர்.
பயனர்களை வாடிக்கையாளர்கள் என்று குறிப்பிடுவது பொதுவானது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இது கிராமப்புற தொழில்முனைவோர் சமூகத்தில், சமூக மாற்றத்தின் முகவர்களாக மாறும் என்ற அரசின் எதிர்பார்ப்புக்கு முரணாக உள்ளது. கிராமப்புற தொழில் முனைவோர் யாரும் தங்களை அத்தகைய சமூக மாற்ற முகவர்களாக பார்க்கவில்லை. அவர்களின் கண்ணோட்டத்தில், பொதுச்சேவை மையம் தொடங்குவதற்கு முக்க்கிய காரணம், நிலையான வேலைவாய்ப்பு என்பது தான்.
குறை தீர்ப்பு வழிமுறை இல்லை
இதுபோன்ற துயரங்கள் அனைத்தும் நம்பகமான குறை தீர்க்கும் வழிமுறைகள் இல்லாததால் பயனர்கள் மற்றும் தொழில் முனைவோர் இருவருக்குமே மோசமானதாகிறது. ஒவ்வொரு கிராமத் தொழில் முனைவோரையும் அரசு கண்காணிக்கும் போது, அவர்கள் தங்களது பயனர்களுக்கு பொறுப்பாக மாட்டார்கள். ஒரு பின்னூட்ட வழிமுறையோ அல்லது வலுவான குறை தீர்க்கும் முறையோ இல்லை.
பெரும்பான்மையான (75%) பயனர்கள், சேவையில் குறைபாடு இருந்தால் பொதுச்சேவை மையம் மீது புகார் அளிக்க முடியும் என்பது தங்களுக்கு தெரியாது என்று கூறினர்.
பொதுச்சேவை மையம் மீது புகார் அளிக்க விரும்பிய மேலும் 22% பேர், ஆனால் அவ்வாறு செய்யவில்லை. "எங்கு புகார் செய்வது என எனக்குத் தெரியவில்லை. இது ஒரு தனியார் நிறுவனமாகும், எனவே பொறுப்பேற்பு என்பது குறைவாக உள்ளது," என்று ஒரு பயனர் எங்களிடம் கூறினார்.
ஒரு மாற்று என்பது வேறுவழியல்ல
இணைய சேவைகளுக்கான தற்போதைய டிஜிட்டல் தளம் பயனர்கள், தொழில் முனைவோர் அரசு அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் கூற்றுப்படி பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு வழிவகுக்கிறது. ஆனால்,இங்கு தொழில்நுட்பம் மீது ஒரு புகைமூட்டம் நிலவுகிறது. பொறுப்புக்கூறல் என்பது, கடைசியில் “கம்ப்யூட்டர்” (அட்டவணை 3) மீது கைக்காட்டப்படுகிறது.
Table 4: Magic Wand Of Digital Service? | |
---|---|
Government’s claim | Reality on ground |
One-stop shop | 42% of citizens had to additionally visit a Mukhiya/Official |
Quick | 55% of respondents said it took longer than anticipated to get work done at a PK |
Corruption-free | Almost all services were overcharged |
Transparent | 63% said they did not receive receipts for their transactions |
Better Clarity | 43% did not know whether the government or PK was responsible for fixing rates |
Accountable | 48% of VLEs said they signed an MoU while the rest didn’t have to. No accountability towards the users of PK |
Source: Pragya Kendra Assessment Study
பொதுச்சேவை மையங்கள் கூடுதல் ஆரோக்கியமானதாக இருக்கக்கூடும்; ஆனால் பொதுச்சேவை விநியோக வழிமுறைகளுக்கு மாற்றாக இல்லை என்று, ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடந்த ஒரு பொது ஆலோசனையில் பரிந்துரைக்கப்பட்டது. அவற்றின் செயல்பாட்டு வடிவமைப்பில் ஆளுமையின் ஒரே மந்திரமாக தனியார்மயமாக்கலை நம்புவதற்கு பதிலாக, ஜனநாயகக் கொள்கைகளை இணைக்க வேண்டும்.
(அனோக்னியா பார்த்தசாரதி, பெங்களூரு தேசிய சட்டப்பள்ளியில் பப்ளிக் பாலிசி பாடப்பிரிவு மாணவர். பெங்களூரு அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் (ஏபியு) கற்பிக்கும் ராஜேந்திரன் நாராயணன், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இனாயத் சபிகி மற்றும் ஏபியு-வின் ராகுல் லஹோத்தி ஆகியோருடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டார்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.