மும்பை: அவர் தன்னால் முடிந்தவரை தள்ளிப்போட்டார், ஆனால் தனக்கு இறுதியில் வேறு வழியில்லை என்பதை அறிந்ததும், 33 வயதான பாண்டுரங்க ஷிண்டே, தனது கவுரவத்தை விட்டு கடந்த ஜூனில் தனது உறவினர்களிடம் கடன் கேட்டார். "இது சிறந்த உணர்வாக இல்லை," என்று சோகத்தோடு அவர் கூறினார். “ஆனால் எனக்கு காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. நான் ரூ .50,000 கடன் வாங்கினேன் - ஜூன் மாதத்தில் தொடங்கும் பயிர் பருவத்திற்கு அந்த பணம் எனக்கு தேவைப்பட்டது” என்றார் அவர்.

பயிர் கடன்கள் விவசாய சுழற்சிக்கு முக்கியமானவை மற்றும் பயிர் பருவத்திற்கு முன்னதாக பண்ணை உள்ளீடுகளை - அதாவது விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பலவற்றை வாங்குவதற்கு இந்த நிதி பயன்படுகின்றன. மத்திய மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் உள்ள வாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறு விவசாயியான ஷிண்டே, இந்த ஆண்டு மே மாதம் பயிர் கடனுக்காக விண்ணப்பித்திருந்தார், ஆனால் அவருக்கு ஏற்கனவே வாங்கிய கடன் தொகை நிலுவையில் இருந்ததால் இம்முறை அது கிடைக்கவில்லை.

ஷிண்டே தனிநபராக இல்லை. மகாராஷ்டிரா முழுவதும் இதேபோல் பல விவசாயிகள் இந்த காரீப் பருவத்தில், பயிர்க்கடன்கள் மறுக்கப்பட்டுள்ளதாக, மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் (SLBC - எஸ்.எல்.பி.சி) - இது, மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு உள்நாட்டு நிறுவன அமைப்பு- இணையதளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2020 காரீப் பருவத்தில் மகாராஷ்டிராவில் பயிர்க் கடன்களை வழங்குவதற்காக இலக்கு, ரூ. 45,785 கோடி (6.2 பில்லியன் டாலர்) ஆகும். ஆனால் ஆகஸ்ட் இறுதி வரை, இந்த எண்ணிக்கை ரூ.29,511 கோடி (4 பில்லியன் டாலர்) அல்லது இலக்கின் 64% தான் எட்டப்பட்டிருந்தது.

வேளாண் நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மராத்வாடா மற்றும் விதர்பா மாவட்ட விவசாயப்பகுதிகளில், கடன் வழங்கல் என்பது முறையே 53% மற்றும் 61% என மிக மோசமாக உள்ளது. மராத்வாடாவின் விவசாயிகளுக்கு வழங்க நிர்ணயிக்கப்பட்ட கடன் இலக்கு ரூ.11,992 கோடி (1.6 பில்லியன் டாலர்) என்பதுடன் ஒப்பிட்டால், அதில் ரூ. 6,342 கோடி (53% - அதாவது 860 மில்லியன் டாலர்) மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. விதர்பாவில், பயிர் கடன் வழங்கும் இலக்கு ரூ.12,928 கோடி (1.8 பில்லியன் டாலர்) என்ற நிலையில், வங்கிகள் ரூ.7,897 கோடியை ( 1.1 பில்லியன் டாலர்) மட்டுமே வழங்கியுள்ளன.

பயிர்க் கடன்களை பெற விவசாயிகள் சிரமப்பட்டது, இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகும், ஏனெனில் அவர்கள் நிலுவை கடன்களைக் கொண்டிருந்தனர் - முதல் இரண்டு ஆண்டுகளில், வேளாண் கடன் தள்ளுபடி செயல்முறை முறையாக செயல்படுத்தப்படவில்லை. இந்த ஆண்டு, தொற்றுநோய், இந்த செயல்முறையை நிறுத்தியது.

விவசாயி ஷிண்டேயின் செலுத்தப்படாத கடன் தொகை ரூ.28,000 ஆகும், அதில் பாதித்தொகை, சமீபத்தில் வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யப்பட்டன. "மீதமுள்ள தொகையும் தள்ளுபடி செய்யப்படும்போது மட்டுமே, பயிர்க் கடனை தர முடியும் என்று வங்கி மேலாளர் கூறிவிட்டார்," என்று ஷிண்டே தெரிவித்தார். "நான் கடன் தள்ளுபடி செய்வதற்கான தகுதியை பெற்றிருக்கிறேன், ஆனால் மாநில அரசின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக வங்கி கூறியது" என்றார் அவர்.

மகாராஷ்டிராவில் 50 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள், அல்லது அதன் கிராமப்புற மக்களில் 37% பேரின் வாழ்வாதாரம், சாகுபடியை சார்ந்தே உள்ளது. வங்கி நிறுவனங்களிடம் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட கடன்களை பெற வழியின்றி, ஏழை விவசாயிகள் அதிக வட்டிக்கு வெளியே தனியார் வட்டிக்காரர்களிடம் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். விவசாயத்தின் அதிகரித்துவரும் இயலாமை என்பது, விவசாயிகளுக்கு ஒருபோதும் போதுமானதாக இல்லை என்பதை உறுதிசெய்கிறது, இது அவர்களை ஒவ்வொரு பருவத்திலும் கடன் வலையில் ஆழமாக தள்ளிவிடுகிறது.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான விவசாயத் தற்கொலைகளை மகாராஷ்டிரா கொண்டிருப்பதற்கு, இது ஒரு முக்கிய காரணம்; கடன் தள்ளுபடியை அறிவிப்பதன் மூலம் இப்பிரச்சனையை அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. இருப்பினும் இது வங்கி நிறுவனங்களில் இருந்து எடுக்கப்படும் முறையான கடன்களுக்கு மட்டுமே பொருந்தும்.

உரிய நேரத்தில் பயிர்க் கடன் என்பது மிக முக்கியம்

பயிர்க் கடன்கள் என்பது, விவசாயக்கடனில் ஒரு முக்கிய அங்கமாகும். விவசாயத்துடன் தொடர்புடைய விவசாயிகள் மற்றும் தொழில்களுக்கு, மாவட்ட - மத்திய கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் மூலம் இதை, அரசு விரிவுபடுத்துகிறது. அந்த வங்கிகள் ஆண்டுக்கு இரு முறை கடனை விநியோகிக்கின்றன: அதாவது, ஜூன் முதல் கரிஃப் பருவம், மற்றும் நவம்பர் மாதத்திற்கு பிறகு ரபி பருவ பயிர்களுக்கு வழங்கப்படுகிறது.

ரூ.3 லட்சம் வரை பயிர்க் கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகள் ஆண்டுக்கு 7% வட்டியில் 3% சலுகை பெறுவார்கள் - அதாவது 4% வட்டி செலுத்தினால் போதும். அவுரங்காபாத்தில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் முன்னணி வங்கி மேலாளர் எஸ்.ஜே. கரேகாங்கர் கூறுகையில், மாநில அரசு அதில் மேலும் 2% வட்டித் தொகையை செலுத்துகிறது. "எனவே, ரூ .1 லட்சம் வரையிலான பயிர்க் கடன்கள் வட்டியின்றியே வழங்கப்படுகிறது, அதே நேரம் ரூ. 1-3 லட்சம் வரையிலான கடன்கள், 2% வட்டி விகிதத்தில் நீட்டிக்கப்படுகின்றன," என்று அவர் கூறினார்.

விவசாயம் என்பது கால நிர்ணயம் கொண்ட வணிகமாகும், எனவே தாமதமாக கிடைக்கும் பயிர்க் கடன்கள் பயனற்றவை என்று, 1 ஏக்கர் கரும்பு விவசாயம், 2 ஏக்கர் பருத்தி சாகுபடி செய்துள்ள ஷிண்டே கூறினார். "நல்ல விளைச்சலைப்பெற, நாங்கள் கால அட்டவணையின்படி நாங்கள் செயலாற்ற வேண்டும்," என்று அவர் கூறினார். “விதைப்பு ஜூன் நடுப்பகுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் நடக்க வேண்டும், இது பருவமழை எப்போது வரும் என்பதைப் பொறுத்து. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, விவசாய நிலத்தை தயார்ப்படுத்த வேண்டும். எனவே, தேவையானவற்றுடன் நாங்கள் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

12 மாத பயிரான கரும்பு, ஒரு ஏக்கர் சாகுபடிக்கு ஷிண்டே ரூ.35,000 முதலீடு செய்ய வேண்டும். "ஆனால் எல்லாம் சரியாக நடந்தால் தான் வருமானமும் நன்றாக இருக்கும்," என்று அவர் கூறினார். “சீசன் முடிவில், நீங்கள் ரூ .1 லட்சம் சம்பாதிக்கலாம். தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு நேரடியாக கருப்பு விற்பனை செய்வதால், அரசு நிறுவனங்களுக்கு அல்ல, விற்கவும் ஒப்பீட்டளவிலும் அது எளிதானது” என்றார்.

பருத்திக்கு, உத்திகள் தேவை. "ஒரு ஏக்கர் பருத்திக்கு ரூ.15,000 அல்லது அதற்கு மேற்பட்ட முதலீடு தேவைப்படுகிறது" என்று ஷிண்டே கூறினார். "ஆனால், வானிலை முறைகளால் எளிதில் பாதிக்கக்கூடியது இந்த பயிர். ஆறு மாதங்களுக்கு பிறகு பயிரை அறுவடை செய்யும் வரை அதன் விளைவு என்னவென்று தெரியாது. பெரும்பாலான நேரங்களில் நாங்கள் பருத்தியை இடைத்தரகர்களுக்கு குறைந்த விலையில் விற்கிறோம், அரசு நிறுவனங்கள் அல்ல. பயிர்க் கடன்களுக்கான அணுகல் இருந்தால், நீங்கள் குறைந்தபட்சம் சரியான நேரத்தில் தயாராக இருக்க முடியும். இந்த ஆண்டு, நான் கடைசி நேரத்தில் பணத்தை கடன் வாங்கியதால் அவசரப்பட வேண்டியிருந்தது” என்றார்.

கொரோனா வைரஸ் நாவலின் பரவலைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடியால் மார்ச் 24 அன்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது விவசாயிகளின் பிழைப்புக்கு பயிர்க் கடன்கள் இன்னும் முக்கியமானதாக மாறியது.

பீர்ப் மாவட்டத்தில் உள்ள - இது, பர்பானியில் இருந்து 100 கி.மீ.க்குள் உள்ள - அஸ்வலாம்பா கிராமத்தைச் சேர்ந்த மாணிக் மற்றும் ஹிராபாய் தக்னே, மார்ச் மாதத்தில் தங்களின் 2 ஏக்கர் பண்ணையில் கோடைகால பயிராக வெண்டை சாகுபடி செய்திருந்தனர். "நான் ரூ.40,000 முதலீடு செய்தேன், ஆனால், வெறும் ரூ.3,000 தான் சம்பாதித்தேன்" என்று 35 வயதான மாணிக் கூறினார். “ஊரங்கால், உரிய விலை கிடைக்கவில்லை. சந்தையில் இருப்பு இல்லை. யாரும் அதை கொண்டு செல்ல முடியாது. எல்லாம் ஸ்தம்பித்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் பயிர் அறுவடை செய்தேன். இந்த பருவத்தில் அந்த இழப்பை ஈடுசெய்ய முடியும் என்று நான் நம்பினேன். ஆனால் எனக்கு பயிர்க் கடன் நிராகரிக்கப்பட்டது” என்றார்.

மோசமான தள்ளுபடி அமலாக்கம்

எஸ்.எல்.பி.சி இணையதளத்தில் உள்ள ஒப்பீட்டு தகவல்கள் பயிர் கடன்கள் வழங்குவது சுருங்கத் தொடங்கி இருப்பதை குறிக்கிறது.

கடந்த 2014-15இல், மகாராஷ்டிராவின் பயிர் கடன் இலக்கில், 86% வழங்கப்பட்டது; மராத்வாடா மற்றும் விதர்பா முறையே 78% மற்றும் 75% ஆகும். அதன்பிறகு, வங்கிகள் தங்கள் செயல்திறனை மேம்படுத்தி, தங்கள் இலக்கில் 92% ஐ அடைந்தன. மராத்வாடா மற்றும் விதர்பா முறையே 91% மற்றும் 82%. 2016-17 ஆம் ஆண்டில், எண்ணிக்கை சற்று குறைந்துவிட்டன, ஆனால் இன்னும் 82% எட்டின.

இருப்பினும், 2017-18 ஆம் ஆண்டில், வங்கிகள் ரூ.54,220 கோடி (7.4 பில்லியன் டாலர், 47%) இலக்குக்கு எதிராக ரூ.25,322 கோடி (3.5 பில்லியன் டாலர்) பயிர் கடன்களை மட்டுமே வழங்கியதால், இந்த எண்ணிக்கை கடுமையாக சரிந்தது. மராத்வாடா மற்றும் விதர்பாவில், கடன் வழங்கலின் சதவீதம் இன்னும் மோசமாக - முறையே 30% மற்றும் 37% என்று இருந்தது.

அப்போது இருந்து, பயிர்க் கடன்கள் சரிந்து வருகின்றன. 2018-19 ஆம் ஆண்டில், பயிர்க் கடன் வழங்கல் மாநிலத்தில் 54% இலக்கை அடைவதற்கு ஓரளவு அதிகரித்து, பின்னர் மீண்டும் 2019-20 ஆம் ஆண்டில் அது 48% ஆகக் குறைந்தது.

பயிர்க் கடன் வழங்கலில் இந்த சரிவைத் தடுக்க 2017-18 ஆம் ஆண்டில் என்ன நடந்தது? ஜூன் 2017ல், மகாராஷ்டிராவின் அப்போதைய முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ், 34,000 கோடி ரூபாய் (4.6 பில்லியன் டாலர்) “இதுவரை இல்லாத அளவுக்கு” விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்தார். எவ்வாறாயினும், தள்ளுபடியால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வங்கி அதிகாரிகளை ஒருமுறை செய்ததை போல பயிர்க்கடன்களை வழங்க அனுமதிக்கவில்லை. 2018 ஆம் ஆண்டின் எஸ்.எல்.பி.சி அறிக்கை, "மகாராஷ்டிரா அரசால் விவசாயக்கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தல் / செயல்படுத்துவதற்கு இந்த ஆண்டு குறைந்த கடன் வாங்குதல் காரணமாக இருக்கலாம்" என்று கூறுகிறது.

தற்போதுள்ள நிலுவை கடன் தொகையை அரசு தள்ளுபடி செய்யும் வரை வங்கியாளர்களால் விவசாயிகளுக்கு பயிர் கடன்களை நீட்டிக்க இயலாது என்று, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் தேவிதாஸ் துல்ஜாபுர்கர் கூறினார். “கடன் தள்ளுபடிக்கு தகுதியான விவசாயிகளின் பட்டியலை, வங்கிகள் பெறுகின்றன; வங்கியாளர்கள் அவர்களது கணக்குகளை நீக்கிவிட்டு புதிய பயிர்க் கடன்களை வழங்குகிறார்கள். ஆனால் தள்ளுபடியை அமுல்படுத்துவது மிகவும் மோசமானதாக இருந்தது, அது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் முடிவுக்கு வரவில்லை. எனவே அது பயிர்க் கடன் வழங்கலை, அது பாதித்தது” என்றார்.

கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மகாராஷ்டிரா உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு புதிய அரசு பதவிக்கு வந்தது. அவர் 2019 டிசம்பரில் ஒரு புதிய வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தார், ஆனால் அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, கொரோனா வைரஸ் நாவல் தாக்கியது.

கடந்த மே 22 அன்று, மாநில அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது, இது19 லட்சம் விவசாயிகளை எட்டியுள்ளது, ஆனால் "தொற்றுநோயால் மாநிலத்தின் வருவாய் வறண்டுவிட்டது" என்று சுட்டிக்காட்டியது. அத்துடன், "எனவே, கடன் தள்ளுபடிக்கு மீதமுள்ள பணத்தை உடனடியாக வெளியிட முடியாது" என்று சுற்றறிக்கை கூறியுள்ளது. “இருப்பினும், கடன் தள்ளுபடி செய்ய தகுதியுடையவர்கள், ஆனால் இதுவரை அதைப் பெறாத விவசாயிகள் பயிர்க் கடன்களை நீட்டிக்க வேண்டும். வங்கிகள் அவர்களின் தொகையை 'மாநில அரசிடம் இருந்து பெற வேண்டும்' என்று குறிக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

‘எந்த விவசாயிக்கு நல்ல கடன் மதிப்பீடு உள்ளது?’

மாநில அரசின் சுற்றறிக்கை இருந்தபோதும், நாங்கள் முன்பு கூறியது போல், பயிர்க் கடன் வழங்குவது என்பது மந்தமாகவே உள்ளது. வங்கிகள், தன்னாட்சி நிறுவனமான இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கீழ் வருவதால் மாநில அரசுக்கு, அவர்கள் பதில் அளிக்க மாட்டார்கள். அவர்கள் ரிசர்வ் வங்கியின் உத்தரவு அல்லது மாநில அரசு வழங்கிய சட்டப்பூர்வமாக சுற்றறிக்கை மூலம் மட்டுமே கடன்களை வழங்கியிருக்க முடியும், ஆனால் வணிக வங்கிகளே பயிர்க் கடன்களில் ஆர்வம் காட்டவில்லை, ஏனெனில் அவை நல்ல வணிகத்திற்காக செய்யவில்லை என்று துல்ஜாபுர்கர் கூறினார்.

"கிராமப்புறங்களில் கடன் முறை பலவீனமாக உள்ளது" என்று துல்ஜாபுர்கர் கூறினார். "வர்த்தக வங்கிகள் பொருளாதார ரீதியாக ஓரங்கட்டப்பட்ட பகுதிகளில் செயல்பட ஆர்வம் காட்டவில்லை, அதே நேரத்தில் கூட்டுறவு வங்கிகள் நிதி ரீதியாக சிறப்பாக இல்லை. விவசாயிகள் விலை கொடுத்து முடிக்கிறார்கள்” என்றார்.

கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட் (CIBIL - சிபில்) வழங்கிய ஸ்கோரின்படி, அவரது கடன் மதிப்பு நல்லதல்ல என்பதாலேயே, அவருக்கு கடன் நிராகரிக்கப்பட்டதாக மாணிக் கூறினார். "எந்த விவசாயி ஒரு பெரிய சிபில் ஸ்கோர் பதிவு வைத்திருப்பார் சார்?" என்று அவர் கேட்டார். "நம்மில் பெரும்பாலோர் ஒரு கட்டத்தில் நமது தலையில் கடன் சுமையை பெற்றிருக்கிறோம். எனது ஸ்கோர் பதிவு மோசமானது, ஏனென்றால் 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவை வாங்கினேன், அந்த முதலீடு சரியாக முடிவடையவில்லை. என்னிடம் இப்போது ஆட்டோ இல்லை. கடனை திருப்பிச் செலுத்த எனக்கு சிறிது நேரம் பிடித்தது. இது எனது சிபில் பதிவில் மோசமாக பிரதிபலிக்கிறது. நான் அவர்களிடம் என்னை நியாயப்படுத்த முயற்சித்தேன், ஆனால் வங்கியாளர்கள் எங்களை நன்றாக நடத்துவதில்லை” என்றார்.

மிகக்குறைந்த முரண்பாடுகளுக்காக விவசாயிகளுக்கு பயிர்க் கடன்கள் மறுக்கப்படுகின்றன, அதே நேரத்தில் பணக்கார தொழிலதிபர்கள் பல கோடி ரூபாய்களைப் பெறுகிறார்கள். "அனைவருக்கும் ஒரே அளவுகோலை ஏன் பயன்படுத்த முடியாது?" அவர் கேட்டார். பயிர்க் கடன்களை வழங்குவதற்கு முன் “வங்கிகள் விவசாயிகளின் சிபில் ஸ்கோர் பதிவுகளை அரிதாகவே சோதித்தன. இது ஒரு புதிய விஷயம்” என்றார்.

வட்டிக்காரர்களை நோக்கி திரும்புதல்

கிராமப்புற மகாராஷ்டிராவில் நம்பகமான நிதி நிறுவனங்கள் இல்லாத நிலையில், அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் தனியார் பணக்கடன் வழங்கும் வட்டிக்காரர்களை அணுகுவதைத் தவிர விவசாயிகளுக்கு வேறு வழியில்லை. மகாராஷ்டிராவில் 2014 ஆம் ஆண்டின் பணக்கடன் (ஒழுங்குமுறை) சட்டம் இருந்தாலும், பணம் செலுத்துபவர்களுக்கு உரிமம் வழங்கப்பட வேண்டும், மற்றும் வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 12% ஆகக் கட்டுப்படுத்துகிறது என்றாலும், இது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.

தனியார் பணப்பற்றாளர்கள் பெரும்பாலும் உள்ளூர் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளுடனான தொடர்புகளைக் கொண்ட வலிமையானவர்கள். விவசாயி மாணிக்கிற்கு அது நன்றாகத் தெரியும். பயிர்க்கடன் இல்லாத நிலையில், ஒரு தனியார் நிதி நிறுவன நபரிடம் இருந்து 5% அல்லது ஆண்டுக்கு 60% வட்டி விகிதத்தில் ரூ.50,000 கடன் வாங்கியுள்ளார். 20 மாதங்களில், அதற்கான வட்டி அசல் தொகையைப் போலவே இருக்கும்.

கடனைத் திருப்பிச் செலுத்த, ஹிராபாய் மற்றும் மாணிக் இருவரும் விவசாயத் தொழிலுக்கான உழைப்பை இரட்டிப்பாகி வருகின்றனர். "எனக்கு ஒரு நாளைக்கு ரூ .125-150 கிடைக்கிறது" என்று ஹிராபாய் கூறினார். “அவருக்கு ஒரு நாளைக்கு ரூ .300 கிடைக்கிறது. எங்களுக்கு 10 மற்றும் 12 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களின் கல்விக்காக நாங்கள் சேமிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன், நாங்கள் வட்டிக்காரரின் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்” என்றார்.

இந்த பருவத்தில் கரும்பு மற்றும் பருத்தி விளைச்சல் நன்கு இருக்கும் என்று எதிர்பார்க்கிறார் மாணிக். "எனது பயிர்களுக்கு நல்ல வருவாய் தேவை, அதன் மூலம் எனது கடனை விரைவில் திருப்பிச் செலுத்த முடியும்," என்று அவர் கூறினார். "நீங்கள் பணம் கொடுப்பவர்களை குழப்பமுடையாது முடியாது" என்றார்.

(பார்த், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.