புதுடெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக, வரும் பிப்ரவரி 01, 2020இல் இந்தியா, நான்கு பேரை தூக்கிலிடப் போகிறது. 2012ஆம் ஆண்டு ஜோதி சிங் அல்லது 'நிர்பயா' எனப்படும் டெல்லி மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், இவர்களுக்கு டெல்லி அமர்வு நீதிமன்றம் தூக்கு தண்டனைக்கான வாரண்ட்டை பிறப்பித்து உள்ளது. முன்னதாக, இந்த நால்வரில் ஒருவரின் கருணை மனுவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்திருந்தார்.

கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து இந்தியா 4 மரண தண்டனைகளையே நிறைவேற்றி இருக்கிறது; கடைசியாக 2015இல் நிகழ்த்தப்பட்டது. இந்த 4 இல் மூன்று பேர் பயங்கரவாத செயல்களுக்கும், ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும் தூக்கிலிடப்பட்டதாக, 2018 ஆகஸ்ட்டில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

இந்தியாவையே கொந்தளிக்கச் செய்த ஒரு வழக்கில், பிப்ரவரி 1இல் மரணதண்டனை தரப்படுவது மட்டுமே, பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைத்துவிடாது; உண்மையில், சீர்திருத்தங்களை செயல்படுத்துவதல் என்பதை நோக்கி அரசை திசை திருப்ப வேண்டும்; இது பலாத்கார வழக்கு விசாரணைகளை மேம்படுத்த உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

53% கூடுதல் மரண தண்டனை

கடந்த 2018இல், 186 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டது; இது 2017ல் 121 என்பதைவிட 53% அதிகமென, தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) சமீபத்திய சிறைச்சாலை புள்ளிவிவரம் இந்தியா-2018 தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில், "அரிதான" வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுகிறது. இது கொலை, பயங்கரவாதம், கடத்தி கொலை செய்தல், போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் பலாத்காரம் செய்து கொலை உள்ளிட்ட பல சட்டங்களின் கீழ், நீதிமன்றங்கள் நிறைவேற்றியிருப்பதை, தரவுகள் காட்டுகின்றன.

கடந்த 2018இல் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 40%-க்கும் அதிகமானவர்கள், 2019ல் பாதி (52.9%) பேர் பாலியல் குற்றங்கள் மற்றும் கொலை உள்ளிட்டவற்றுக்காக தண்டனை பெற்றவர்கள் என்று புதுடெல்லி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் (என்.எல்.யூ), இந்தியாவில் மரண தண்டனை 2019 என்ற ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடையே ஏற்படும் கோபம் மற்றும் கொந்தளிப்பை தணிக்கும் வகையில், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அதிக மரண தண்டனை வழங்கப்படுவதாக, இந்தியா ஸ்பெண்டிடம் நிபுணர்கள் தெரிவித்தனர். "இது, பொதுமக்களின் கவலைகளை கையாள, அவர்கள் மேற்கொள்ளும் குறுக்குவழி" என்று மூத்த வழக்கறிஞரும் ஆராய்ச்சியாளருமான பிருந்தா க்ரோவர் கூறினார்; பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கையை உண்மையில் குறைக்க, அடிப்படை மாற்றங்களைச் செய்ய மாநிலங்களும், அமைப்பும் விரும்பவில்லை என்றே தோன்றுவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

12 வயதுக்கு குறைவான குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை வழங்க வகை செய்ய, ஆகஸ்ட் 2019 இல், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்ஸோ) 2012-இல் இந்தியா திருத்தம் செய்தது.

ஹைதராபாத்தில், 27 வயது கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர், 2019 டிசம்பரில் "தப்பி ஓட முயன்றபோது" போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது, "நீதிக்கு புறம்பான கொலைகள்" என்று அழைக்கப்பட்டது. அதன் பிறகு, ஆந்திர மாநில சட்டசபை, பாலியல் பலாத்கார வழக்குகளில் மரண தண்டனை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது.

மரண தண்டனை என்பது ஆயுள் தண்டனையை விட வலுவான தடுப்பு நடவடிக்கை என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று, இந்திய சட்ட ஆணையத்தின் 2015 ஆம் ஆண்டு மரணதண்டனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012இல் டெல்லியில் ஜோதி சிங் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பின்னர் பாலியல் வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்தன. இது குற்றவியல் சட்டம் (திருத்தச் சட்டம்), 2013 உட்பட பல சீர்திருத்தங்கள் மற்றும் சட்ட மாற்றங்களுக்கு வழிவகுத்தது. பின்தொடர்ந்து செலுதல், வன்முறை, ஆசிட் வீசி தாக்குதல்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியன, இதன் கீழ் உள்ளன.

எவ்வாறாயினும், சீர்திருத்தங்கள் பலாத்காரம் தொடர்பான அறிக்கையை மேம்படுத்தினாலும், கைது மற்றும் தண்டனை விகிதங்களில் சிறிதளவு பாதிப்பும் ஏற்படவில்லை என, பிப்ரவரி 2019 ஆய்வின் அடிப்படையில் இந்தியா ஸ்பெண்ட் ஆகஸ்ட் 2019 கட்டுரை தெரிவித்தது. பாலியல் பலாத்காரத்திற்கான தண்டனை விகிதம் 2007 முதல் சீராக சரிந்து வருகிறது; இது 2006ல் 27% ஆக இருந்த 2016 ஆம் ஆண்டில் 18.9% என்ற இதுவரையில்லாத குறைந்த அளவை எட்டியதாக ஆய்வு குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்டவர் உயர் அல்லது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராகவும், குற்றவாளி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தராகவும் இருக்கும்போது கடும் தண்டனை என்ற கூக்குரல்கள் அதிகரிக்கின்றன என்று, பெண்கள் உரிமை வழக்கறிஞரும், பெண்களுக்கு சட்ட உதவி வழங்கும் அமைப்பான மஜ்லிஸின் இயக்குநருமான ஃபிளேவியா ஆக்னஸ் கூறினார். இதற்கு நேர்மாறாக இருந்தால், அத்தகைய கொந்தளிப்பை பார்க்க முடியாது என்று அவர் கூறினார்.

பாலியல் குற்றங்களுக்கு அதிக மரண தண்டனை

டிசம்பர் 31, 2019 நிலவரப்படி, இந்தியாவில் 378 கைதிகள், மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாக, என்.எல்.யுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. விசாரணை நீதிமன்றங்கள் 2019 ல் 102 மரண தண்டனைகளை விதித்தன, இது முந்தைய ஆண்டில் 162 ஆக இருந்தது. 2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மரண தண்டனைகளில் பாதிக்கும் மேற்பட்டவை (102 இல் 54) பாலியல் குற்றங்கள் சம்பந்தப்பட்ட கொலைகளுக்கானது என்று அந்த அறிக்கை கூறுகிறது. இவர்களில் பாதிக்கப்பட்டவர், 40 வழக்குகளில், 12 வயதுக்கு குறைவானவர்.

பாலியல் குற்றங்கள் தொடர்பான கொலை வழக்குகளில் மரண தண்டனை கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில், "நிதானம் தவறிய கொலைக்கு " - ஒரு எளிய கொலைக்காக 57.1% மரண தண்டனை வழங்கப்பட்டது; பாலியல் குற்றங்களுடனான கொலை வழக்குகளில் இது, 18% ஆகும். 2019 ஆம் ஆண்டில், பிந்தையது 52.9% ஆக உயர்ந்தது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் முறையே 26 மற்றும் 17 மரண தண்டனைகளை உறுதிப்படுத்தியுள்ளன; அவற்றில் 17 (65.3%) மற்றும் 11 (57.1%) பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன என்று என்.எல்.யுவின் அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் முறையே 56 மற்றும் ஏழு மரண தண்டனைகளை ஆயுள் தண்டனையாக மாற்றின; அவற்றில் 15 (26.7%) மற்றும் நான்கு (64.7%) பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள்.

இந்தியாவில் மரணதண்டனை தொடர்பான தேசிய விவாதங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது என்று இந்தியாவில் மரண தண்டனை குற்றவாளிகளை ஆவணப்படுத்தும் ஆராய்ச்சி திட்டமான, பிராஜெக்ட் - 39ஏ நிர்வாக இயக்குனர் அனுப் சுரேந்திரநாத் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டில் இரண்டு வழக்குகளை அவர் குறிப்பிட்டார், உச்சநீதிமன்றம், மரண தண்டனையை உறுதி செய்யும் அதே வேளையில், போக்ஸோ சட்டத்தின் 2019 திருத்தங்களை ஆதரிப்பதாக மேற்கோள் காட்டியுள்ளது.

"மரண தண்டனையை வழங்குவதற்கான ஒரு நியாயமாக இதை அழைப்பது தனிப்பட்ட தண்டனை கொள்கைகளை முற்றிலும் மீறுவதாகும்" என்று சுரேந்திரநாத் கூறினார். "மரணம் விளைவிக்கும் எந்தவொரு தண்டனையும்" அநீதிக்கு "சமம் என்ற கருத்துக்கு அப்பால் நாம் செல்ல வேண்டும்" என்றார் அவர்.

தண்டனை விகிதங்களில் சிறிய முன்னேற்றம் காட்டும் விரைவு நீதிமன்றங்கள்

விரைவாக நீதி வழங்க ஏதுவாக, மாநில அரசுகள் விரைவு நீதிமன்றங்களை அமைத்து வரும் நிலையில், அவை பெரியளவில் வித்தியாசத்தை தரவில்லை. மார்ச் 2019 நிலவரப்படி, இந்தியாவில் 581 விரைவு நீதிமன்றங்கள் உள்ளன; அவற்றில் சுமார் 5,90,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, தி இந்து நாளிதழின் 2019 ஆகஸ்ட் செய்தி தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன; அதே நேரம் 56% மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் உட்பட) விரைவு நீதிமன்றங்கள் இல்லை.

குற்றவியல் சட்டத்திருத்தச் சட்டம்- 2013ல் உள்ளது போல் நான்கு மாதங்கள் என்பதற்கு பதிலாக, ஆந்திரப் பிரதேச சட்டசபை நிறைவேற்றிய திருத்தங்களில் ஒன்று, 21 நாட்களுக்குள் (விசாரணையை முடிக்க ஏழு நாட்கள் மற்றும் வழக்கு விசாரணையை முடிக்க 14 நாட்கள்) விசாரணையை முடிக்க வேண்டும் என்று கூறுகிறது.

இத்தகைய விசாரணை நாட்களை குறைப்பது மற்றும் நிர்பந்தமானது, வழக்கு விசாரணை சரியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு பதிலாக அவசரமாக நடத்தப்படுவது, விசாரணைக்கு இடையூறாகவோ அல்லது முழுமையற்ற குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படவோ வாய்ப்பை ஏற்படுத்தலாம்; அல்லது குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்டரீதியான ஜாமீன் வழங்கப்படுவது - இவை அனைத்தும் பாதிக்கப்பட்டவரின் நலனுக்கும் அல்லது வழக்கின் முடிவுக்கும் தீங்கு விளைவிக்கும் ”என்று சுரேந்திரநாத் கூறினார்.

கேள்விக்குரிய ஆதாரங்களின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்த மூன்று வழக்குகளில் 10 பேரை 2019ல் உச்சநீதிமன்றம் விடுவித்தது. ஒரு வழக்கில், விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. மற்ற இரு வழக்குகளில், இது ஒரு புதிய விசாரணைக்கு மீண்டும் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. "மூன்று வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டுமென்ற அதிக சுமை மற்றும் போதிய கட்டமைப்பு இல்லாத காவல்துறையினர் மீது அதிக பொறுப்பை சுமக்கச் செய்வது, குற்றவாளிகளை விடுவிக்க வழிவகுக்கும்" என்று சுரேந்திரநாத் கூறினார்.

காவல்துறையின் பயிற்சி மற்றும் உணர்திறன் ஆகியவற்றுக்கு அரசு முதலீடு செய்ய வேண்டும்; இதனால் அவர்கள் குற்றத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு சரியான வழியில் விசாரணையை நடத்த முடியும் என்று கூறும் க்ரோவர், அரசு தரப்பு விசாரணையை ஒரு கண்ணியமான முறையில் நடத்த வேண்டும் என்றார். "ஆனால் இந்த அம்சங்களில் எந்தவொரு வேலையும் செய்யப்படவில்லை," என்ற அவர் "மரண தண்டனை பற்றி அவ்வப்போது விவாதிப்பதை நாம் பார்க்கிறோம் அல்லது ஹைதராபாத்தில் உள்ளதைப் போன்ற ஒரு புதிய அதிரடி நடவடிக்கையில் நீதியைக் காண்கிறோம். அது எதுவும் வன்முறை சுழற்சியை மாற்றப்போவதில்லை ” என்றார்.

களத்தில் நிலவும் தளவாட பிரச்சனைகளில், போதிய தடயவியல் ஆய்வகங்கள் இல்லாதது மற்றும் அதிக சுமை, குறைவான ஊழியர்களைக் கொண்ட விரைவு நீதிமன்றங்கள் உள்ளிட்டவை அடங்கும். இவை அனைத்தும் நீதித்துறையில் முதலீட்டின் பற்றாக்குறையை வெளிப்படுத்துகின்றன என்று க்ரோவர் கூறினார்.

இதனால், தண்டனை விகிதங்கள் குறைவாகவே உள்ளன. 2018 ஆம் ஆண்டில், 93.2% பலாத்கார வழக்குகளிலும் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் 94.3% பலாத்கார வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், 2018 ஆம் ஆண்டில் தீர்வு வெளியான பலாத்கார வழக்குகளில் 27.2%; அதேபோல் போக்ஸோ சட்டத்தில் 31.5% பலாத்கார வழக்குகளில் மட்டுமே தண்டனை தரப்பட்டுள்ளது என்று, என்.சி.ஆர்.பி. தரவு காட்டுகிறது. மேலும் நீண்ட தாமதங்கள் தொடரும். 2018 ஆம் ஆண்டில், இந்திய நீதிமன்றங்கள் 17,313 வழக்குகளில் விசாரணையை நிறைவு செய்தன, அதேநேரம், பலாத்கார வழக்குகள் 1,38,642 நிலுவையில் உள்ளன - இது 88.7% வீதம்.

அத்துடன், தண்டனைக்கு கவனம் செலுத்துவது என்பது, பாதிக்கப்பட்டவருக்கு கவனம் செலுத்தும் செலவில் வருகிறது. "தண்டனை பெற, நீங்கள் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் மற்றும் குடும்ப ஆதரவை வழங்க வேண்டும்," என்று மஜ்லிஸின் ஆக்னஸ் கூறினார்.

அது போலவே, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கூட குற்றத்தை அரிதாகவே தெரிவிக்கின்றனர் - ஒரு மதிப்பீட்டின்படி, பாலியல் வன்முறை வழக்குகளில் 99.1%, பதிவு செய்யப்படுவதில்லை. காரணம், கணவர் தரப்பில் இருந்து குற்றம் நடப்பதுதான். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் - உதாரணத்திற்கு 2018 இல் 93.8% பலாத்காரங்கள் - பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தவர்களாக மற்றும் 50% பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள், குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் அல்லது முதலாளிகளே குற்றவாளிகளாக இருந்ததாக, என்.சி.ஆர்.பி தரவு காட்டுகிறது.

சட்டத்தை அமலாக்கும் அதிகாரிகளின் அக்கறையின்மை மற்றும் பழிவாங்கப்படலாம் என்ற பயம் ஆகியன, பாதிக்கப்பட்டவர்களை தவிர மற்ற அனைவரையும் வழக்குகளை பதிவு செய்வதில் இருந்து தடுக்கின்றன என்று, எங்களின் ஆகஸ்ட் 2019 கட்டுரை தெரிவிக்கிறது.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் / சுகாதாரம் சரிபார்ப்பு இணையதள சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.