புதுடெல்லி: இந்தியர்கள் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருந்தால், அவர்களின் சராசரி ஆயுள் தற்போதுள்ள 69 என்பது, 70.7 என 1.7 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று, புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் இறக்கும் எட்டு பேரில் ஒருவருக்கு, காற்று மாசுபாடு காரணமாகிறது. அவ்வகையில் 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் 1.24 மில்லியன் இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளானவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 70 வயதிற்கும் குறைவானவர்கள் என்று, காற்று மாசுபாடு இறப்பு மற்றும் நோய்த்தாக்க மதிப்பீடுகள் குறித்த, மாநில அளவிலான நோய் தாக்கம் குறைப்பு முயற்சி தொடர்பான டிசம்பர் 6, 2018 அன்று தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழ் கட்டுரை தெரிவிக்கிறது.

இந்தியாவின் ஆண்டு சராசரி காற்றில் நுண்துகள் அளவு 2.5 மி.மீட்டர் என்று இருக்க வேண்டும்; இது, 90 μg / m3 ஆக இருந்தது. இது, உலகின் நான்காவது அதிக எண்ணிக்கையாகும். இந்தியாவில் தேசிய சுற்றுப்புற காற்றின் தரநிலை பரிந்துரைக்கப்படும் 40 μg / m³ அளவை விட, இது இரண்டு மடங்கு அதிகம்; மற்றும் உலக சுகாதார அமைப்பின் வருடாந்திர வரம்பு 10 μg / m3 ஐ விட ஒன்பது மடங்கு அதிகமாகும்.

உலக மக்கள் தொகையில் 18% உள்ள இந்தியாவில், காற்று மாசுபாட்டால் முன்கூட்டியே இறப்பு ஏற்படுவது அதிகளவில் உள்ளது. காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோயில், 26% பேர் இறக்கின்றனர்.

இந்திய மக்கள் தொகையில் 77% பேர், தேசிய பாதுகாப்பு அளவீட்டை தாண்டி, மோசமான சுற்றுச்சூழலில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக டெல்லி பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்டி மற்றும் குறைந்த வளர்ச்சி கொண்ட ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், பீகார் உள்ளிட்டவை, மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ”காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்ற மதிப்பீடுகள் தொடர்பாக சந்தேகம் இருந்தது. ஆனால், புகையிலை பயன்பாடு, உப்பு உட்கொள்ளல், உயர்ரத்த அழுத்தம் போன்ற பிற ஆபத்து காரணிகளை விட காற்று மாசுபாடு (சுற்றுப்புற மற்றும் வீட்டு மாசுபாடு உள்ளிட்டவை) காரணமாக இந்தியாவில் மரணம் மற்றும் இயலாமை என்ற மிகப்பெரிய ஆபத்து உள்ளது, ஆய்வு நிரூபிக்கிறது” என்று, சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா இன்ஸ்டிடியூட் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பேராசிரியரும், ஆய்வு மைய ஆசிரியருமான கல்பனா பாலகிருஷ்ணன், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.

"இந்த ஆய்வு, காற்று மாசுபாட்டால் மனித ஆயுட்காலம் 1.7 ஆண்டுகள் குறைவதையும், நான்கு ஆண்டுகள் என்று முன்பு நம்பட்டது அல்ல” என்றும் நிருப்பித்துள்ளது” என, இந்திய மருத்துவ கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) இயக்குநர் பலராமா பார்கவ் தெரிவித்தார்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் காற்று மாசுபாட்டின் தாக்கத்தின் முதன்மையான விரிவான மதிப்பீடாக இந்த ஆய்வானது, இந்தியாவின் பொது சுகாதார அறக்கட்டளை (PHFI) ஐ.சி.எம்.ஆர். மற்றும் உடல்நிலை அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 40 க்கும் மேற்பட்ட நிபுணர்களுடன் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், இம்முயற்சியை மேற்கொண்டது.

வளர்ச்சி குறைந்த மாநிலங்களில் முன்கூட்டியே இறப்பு அதிகம்

ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி, நாட்டில் 77% தேசிய வரம்பை விட ஆண்டு சராசரி பி.எம். 2.5 அளவுக்கு அதிகமானதாக, வெவ்வேறு மாநிலங்களில் மாசுபாடு அளவு குறிப்பிடத்தக்க மாறுபாடு இருந்தது. அதிக காற்று மாசுபாடுள்ள மாநிலமானது, மாசுபாடு குறைந்த மாநிலத்தைவிட 12 மடங்கு மோசமாக இருந்தது. வீட்டு மாசுபாடு விஷயத்தில் இந்த வேறுபாடு 43 முறை அதிகமாகும்.

பி.எம். 2.5-ன் குறைந்தபட்ச வெளிப்பாடு 2.5 மற்றும் 5.9 μg / m3-க்கு இடையில் இருந்ததாக, அறிக்கை தெரிவிக்கிறது.

வட மாநிலங்களின் குறைந்த சமூக வளர்ச்சி குறியீடு (SDI) என்பது, தனிநபர் வருமானம், கல்வி அளவு மற்றும் மொத்த கருவுறுதல் வீதத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. பீகார், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சுற்றுப்புறச்சூழல் மற்றும் வீட்டு மாசுபாடு அளவு மிக அதிகளவில் இருந்தது. காற்று மாசுபாடு குறைவாக இருந்தால் இம்மாநிலங்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கும்: உதாரணமாக, தேசிய சராசரியை விட காற்று மாசுபாடு குறைவாக இருந்தால் ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேச மக்களின் ஆயுட்காலம் மேலும் இரண்டு வருடங்கள் கூடும்.

டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மோசமான பாதிப்புள்ள மத்திய மற்றும் உயர் சமூக வளர்ச்சிக் குறியீடு கொண்ட மாநிலங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாட்டை குறைப்பதன் மூலம் ஆயுட்காலத்தை முறையே முறையே 1.6, 1.8 மற்றும் 2.1 ஆண்டுகள் சேர்க்க முடியும்.

Source: The Lancet Planetary Health

அதிக இறப்பு மற்றும் இயலாமைக்கு வழிவகுக்கும் திட எரிபொருள்கள்

நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட (55.5%) அளவில் சாணம், நிலக்கரி, மரம் மற்றும் விவசாயக் கழிவுகள் போன்ற திட எரிபொருட்களே பயன்படுத்தப்படுகிறது. பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், அசாம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய சமூக வளர்ச்சிக் குறியீடு குறைந்த மாநிலங்களில் இது, 72.1% அதிகமாகும். இந்த மாநிலங்களில் பாதிப்புக்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு வீட்டு மாசுபாடும் காரணமாக இருந்துள்ளது.

Source: The Lancet Planetary Health

எல்லா மாநிலங்களிலுமே வீட்டு மாசுபாடு காரணமாக இறப்பு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, கேரளாவில் சுற்றுச்சூழல் மற்றும் வீட்டு மாசுபாடு காரணமாக இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாக உள்ளது. "பல மாநிலங்களில் திட எரிபொருளுக்கு பதிலாக தூய்மையான எரிபொருள்கள் மாற்றப்பட்டுள்ளன என்பது வெறும் கற்பனைதான்" என்று பாலகிருஷ்ணன் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் (2012-2017) வீட்டு மாசுபாடு 30% குறைந்துள்ளது. ஆனால், குறைந்த வருவாய் உள்ள வீடுகளுக்கு சமையல் எரிவாயு வழங்கும் பிரதமரின் உஜ்வல யோஜனா (PMUY) திட்டம் தான் இதற்கு காரணம் என்று கூறுவது முன்கூட்டியே ஒன்றாது என்கிறார் பாலகிருஷ்ணன்.

வீட்டு மாசுபாட்டில் தனிப்பட்ட அதிகபட்ச குறைவு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில், ஆதாரங்கள் இப்போதில் இருந்து இரண்டு வருடங்கள் வரை கிடைக்கும். "சுத்தமான எரிபொருளின் அணுகல் மற்றும் கிடைப்பது சிக்கல் தீர்க்கப்பட்டாலும், அது மலிவு விலையில் கிடைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்," என்று அவர் கூறினார்.

கடந்த 2017-ல் வீட்டு காற்று மாசுபாட்டால் 4,82,000 மரணங்கள்; 21.3 மில்லியன் இயலாமைக்கு -- அதவாது உடல் நலம், ஆரம்பகால மரணம் ஆகியவற்றுக்கு வழிவகுத்துள்ளது.

சுற்றுச்சூழல் காற்று மாசுபாடு, பெண்களை விட 38.3% அதிக ஆண்களை பாதிக்கிறது; அதேநேரம் வீட்டு மாசுபாடு ஆண்களை விட 17.6% அதிகம் பெண்களை கொல்கிறது.

புகைப்பதை விட காற்று மாசுபாட்டால் அதிக சுவாச பிரச்சனைகள்

காற்று மாசுபாடு என்பது பொதுவாக நுரையீரல் நோயுடன் தொடர்புடையது. ஆனால் இந்தியாவில் காற்று மாசுபாட்டால், 2017ஆம் ஆண்டில், 38% இருதய மற்றும் நீரிழிவு நோய்களுக்கு காரணமாக இருந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட 10.3 மில்லியன் இறப்புகளில் 2.5 மில்லியன் இறப்புகள், தொற்று அல்லாத நோய் (NCD) காரணமாக ஏற்பட்டுள்ளது. இது, காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையது. இது, மாசுபாடு தொடர்பான அதிக இறப்பு எண்ணிக்கை உள்ள நாடாக, சீனாவை தொடர்ந்து இந்தியாவை மாற்றியுள்ளதாக, ஜனவரி 3, 2018 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

நாள்பட்டநுரையீரல் அடைப்பு நோய் (சி.ஓ.பி.டி.) 13 சதவீத மரணங்களுக்கு வழிவகுத்தது. 2016ஆம் ஆண்டில் 7.5 மில்லியன் பேர், இந்நோய் ஆபத்தில் இருந்ததாக, ஜனவரி 2018- ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டு இருந்தது.

காற்று மாசுபாடு அளவு பி.எம். 2.5ஐ கடந்து ரத்தத்தில் செல்லும் போது, அது உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். இதனால், சுகாதார தாக்கத்தை தீவிரப்படுத்துகிறது. மேலும் ஆயுஷ்மன் பாரத் திட்டத்தின் ஒருபகுதியாக, தொற்றா நோய்களுக்கான சி.ஓ.பி.டி. கண்காணிப்பு திட்டத்தில் இதை சேர்க்கிறது என்று, ஐ.சி.எம்.ஆர். அமைப்பின் பார்கவ் தெரிவிக்கிறார்.

காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் சுவாச குறைந்த நோய் என்பது, புகையிலை பயன்பாட்டால் ஏற்படக்கூடிய விகிதத்தைவிட அதிகமாக இருந்தது.

சி.ஓ.பி.டி., இதய நோய், வாதம், நீரிழிவு, நுரையீரல் புற்றுநோய் மற்றும் கண்புரை உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கும் புகையிலை பயன்பாடு போன்றே, காற்று மாசுபாடும் காரணமாவதாக, அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அரசு சார்ந்த பரிந்துரைக்கப்பட்ட உத்திகள்

"சுற்றுப்புற நுண்ணிய மாசுபாட்டை கட்டுப்படுத்த, பல துறைகளில் நடவடிக்கை தேவைப்படுகிறது; அவற்றை இந்நடவடிக்கைகளில் இணைப்பது, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் " என்று அறிக்கை கூறுகிறது.

டெல்லியில் வாகனங்கள் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை பயன்படுத்து வது போல், இந்த அறிக்கை, மாநிலம் சார்ந்த குறிப்பிட்ட கொள்கைகளை பரிந்துரைத்துள்ளது. பஞ்சாபில், வேளாண் கழிவுகளை உட்செலுத்துவதற்கான மாற்று தொழில்நுட்பங்களுக்கு மானியம் இருப்பதால், அங்கு அவை எரிக்கப்பட வேண்டியதில்லை. மகாராஷ்டிராவில், நிலக்கரி அல்லது லிக்னைட் அனல் மின் நிலையங்களில் இருந்து 100 கி.மீ. தொலைவிலான கட்டுமானத்தில் கட்டாயமாக சாம்பல் பயன்படுத்தப்படுகிறது. வெளியேற்றத்தால் பிரச்சினைகள் உள்ள மற்ற மாநிலங்களுக்கும் இந்நடவடிக்கைகள் விரிவாக்கப்படலாம் என்று அது தெரிவித்துள்ளது.

டெல்லிக்கு தூய்மையான காற்று என்ற பிரசாரம் கடந்த 2018 ஆண்டு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த அமைச்சகத்தால் தொடங்கி வைக்கப்பட்டது. இது, தேசிய சுத்தமான காற்றுக்கான திட்டம் தொடங்குவதற்கு காரணமானது என்று, சிறப்பு குறிப்புடன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு தொடர்பான பிரச்சனைகளை பொது மக்களுக்கு உணர்த்துதல், நாடு முழுவதும் செயல்பாட்டு நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் என்பது இதன் நோக்கமாகும்.

இந்த அறிக்கை, இந்தியாவின் தேசிய உறுதிப்படுத்திய பங்களிப்பு இலக்கு, அதாவது தேசிய உமிழ்வைக் குறைப்பதற்கும், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு ஏற்பது போன்ற முயற்சிகளை தாங்களாகவே மேற்கொண்டிருந்தன. வரும் 2030 ஆம் ஆண்டில் 33 முதல் 35% வரை காற்றின் நுண்துகள்களின் எண்ணிக்கை குறைப்பதே இந்தியாவின் தற்போதைய இலக்காகும்.

மின்சாரத்தில் இயங்கும் பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவைகள், வெளியேற்ற உமிழ்வை குறைக்கும் வகையில் வாகன தொழில் நுட்பங்களை மேம்படுத்துதல், பாரதத்தின் 5ஆம் தரநிலை போன்றவை, காற்று மாசுபாடு அளவை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.