பாட்னா: நடமாடும் ஜெனரேட்டருடன் இணைக்கப்பட்ட கனமான அலங்கார விளக்குகளை சிறுவர்கள் சுமந்து செல்ல, பாரம்பரிய இந்திய முறைப்படி மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் விமரிசையாக நடக்கும் காட்சிகளை பட்ராஸில் சாதாரணமாக காணலாம். கனமான விளக்கை சுமந்து கொண்டு, ஊர்வலத்தில் நீண்ட தூரம் நடந்து செல்வது என்பது, பள்ளி வகுப்பிற்கு பிறகு இதில் ஈடுபடும்15 வயது விலாஷ் குமாருக்கு* ஒரு பணியாகும்.

பள்ளிக்கும் சென்று, இதையும் மேற்கொள்ள முடியாத அவர், படிப்பை பாதியில் கைவிட்டார்.

தென்கிழக்கு பீகாரின் பாகல்பூர் நகரத்தை சேர்ந்த குமாரை போலவே, பெரும்பாலும் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட பல குழந்தைகளும், பீகார் மற்றும் அதனை சுற்றி நடைபெறும் திருமணங்களுக்கு மலிவான கூலிக்கு உழைப்பை வழங்க வேண்டியுள்ளது.

மத்திய பீகாரில் உள்ள ஃபுல்வாரி தொகுதியின் பார்சா கிராமத்தில், திருமண முகூர்த்த நாட்களில் - இந்து நாள்காட்டியில் குறிப்பிடப்படும் திருமணத்துக்கான நாட்கள் - சுமார் ஒன்பது சிறுவர்கள் அடங்கிய குழு 8 கி.மீ. மணி சைக்கிளில் செல்வார்கள். அங்கு அவர்கள், திருமண நிகழ்வுகளில் உதவி வேலைகளை செய்கிறார்கள்; இது பெரும்பாலும் 11 மணி நேர வேலையாக இருக்கிறது.

"திருமண வைபவங்களில் எங்களுக்கான பணி நேரம் - மாலை 4 மணி முதல் அதிகாலை 3 மணி வரை" என்று 13 வயதான 8 ஆம் வகுப்பு மாணவர் ராகேஷ் குமார் * கூறினார். சிறுவர்களுக்கு விருந்துக் கூடத்தில் பணிகள் ஒதுக்கப்படுகின்றன. சாப்பாட்டு மேஜைகளில் அட்டைகளை ஒட்டுதல், இரவு விருந்தின் உணவு தட்டுகளை கழுவுதல் மற்றும் உலர்த்துதல்; உணவு பரிமாறுதல் மற்றும் உணவுகளை நிரப்புதல் போன்றவை- குழந்தைகளிடம் ஒப்படைக்கப்பட்ட சில வேலைகள்.

ராகேஷ் குமார்*, 13, மத்திய பீகாரில் உள்ள பார்சா கிராமத்தை சேர்ந்த ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்த பல குழந்தை தொழிலாளர்களில் ஒருவர்; பள்ளிக்கு சென்று வந்த பிறகு திருமண வேலை செய்வதற்காக தலைநகர் பாட்னாவுக்குசெல்கிறார்.

நாங்கள் பேசிய குழந்தைகள், 2019 ஜூலையில் பாட்னாவில் நடந்த, உள்ளூர் குழந்தை தொழிலாளர் முறைகள், தீர்வுகள் குறித்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலும் தினசரி கூலி வேலையில் வாழும் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். இதுபோன்ற சீஸன் நேர வேலைகளால் கிடைக்கும் கூடுதல் பணம், அவர்களின் குடும்பங்களுக்கு முக்கியமானதாகும்.

5-14 வயதுடைய 1.01 கோடி குழந்தைகள் பணிபுரியும் - 2001 ஐ விட 25 லட்சம் குறைவாக இருந்தாலும் - ஒரு நாட்டில், பீகார் போன்ற திருமண விழாக்களில் சட்ட விரோத குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தும் குற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர இயலாத நிலை உள்ளது. குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதற்காக 2017 ஆம் ஆண்டில் இந்தியா, இரண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு மரபுரிமைகளுக்கு ஒப்புதல் அளித்தது; ஆனால் எங்கள் விசாரணையில் குழந்தைகள் வேலை செய்வது மட்டுமல்லாமல், பீகாரில் திருமண நிகழ்வுகளில் கடினமான மற்றும் ஆபத்தான நள்ளிரவு பணிகளை கையாளுகிறார்கள் என்பதையும் கண்டறிந்தோம்.

நாட்டில், பீகார் ஐந்தாவது ஏழ்மையான மாநிலமாகும்; மேலும் பள்ளிக்கு குழந்தைகள் வருகையும் மிகக் குறைவு. 5 முதல் 17 வயதுக்குட்பட்ட 20.7 லட்சம் தொழிலாளர்களுடன், இந்தியாவின் வயது குறைந்த தொழிலாளர்களில் 10.7% பீகார் கொண்டுள்ளது; குழந்தை மற்றும் இளம் பருவ தொழிலாளர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உத்தரபிரதேசம் 45 லட்சமாக உள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில் பீகார் மிகக் குறைந்த விகிதம் - 67% என்றுள்ளது; இந்திய சராசரி 75%.

In 2011, Every Fourth Indian Child (5-14) Was Out Of School; Every Third In Bihar
Indicator All India Bihar
Children aged 5-14 working 3.90% 3.80%
Children aged 5-14 attending school 76.20% 67%

Source: Data from Census 2011 (here and here)

இந்த குழந்தைகளை பணிக்கு அமர்த்தும் திருமண வேலை ஒப்பந்தக்காரர்களை அரசு கண்காணிக்கவில்லை. "நாங்கள் எந்த ஒப்பந்தக்காரர்களின் பதிவுகளையும் வைத்திருக்கவில்லை," என்று மாநில தொழிலாளர் ஆணையர் கோபால் மீனா இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "எங்கள் நடவடிக்கை மீட்பு மற்றும் மறுவாழ்வு என்பதை மையப்படுத்தி உள்ளது" என்றார்.

சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, இத்தகைய செயல்பாடுகள் நடக்கிறது.

இந்தியாவில், குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2016 இன் படி, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் குடும்பத்திற்கு அப்பால் வெளியே நடத்தப்படும் நிறுவனங்களில் வேலை செய்வது தடை செய்யப்பட்ட ஒன்று. குடும்ப நிறுவனங்களில் கூட, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய அமர்த்தக்கூடாது என்று, குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) திருத்த விதிகள், 2017 தெரிவிக்கிறது.

மேலும், சிறுவர் மற்றும் இளம்பருவ தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1986 இன் படி, 14 முதல் 17 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினரை ஒருநாளைக்கு ஆறு மணி நேரத்திற்கு மேல் வேலை வழங்கக்கூடாது. இந்த பணி நேரமும் இரவு 7 மணி முதல், காலை 8 மணி வரை என்று இருக்கக்கூடாது. வாராந்திர விடுமுறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பீகார், குறிப்பாக பாட்னா மற்றும் பாகல்பூர் ஆகிய இடங்களில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் திருமண ஒப்பந்தக்காரர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் தொடர்பான ஒவ்வொரு சட்டத்தையும் மீறுகிறார்கள், இதை, குழந்தைகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்களுடனான எங்கள் உரையாடல்களில் நாங்கள் கண்டோம்.

"தொழிலாளர் துறையினர், பாகல்பூரில் நடக்கும் திருமணங்களை ஆய்வு அல்லது பரிசோதனை செய்தால், 200 குழந்தை தொழிலாளர்கள் வரை வெவ்வேறு வேலைகளில் (திருமணத் தொழிலில்) பணியாற்றுவதைக் காணலாம்" என்று குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக பணியாற்றும் பாகல்பூரில் இருக்கும் சாம்வேட்டை சேர்ந்த அபிஷேக் குமார் தெரிவித்தார். "குறிப்பாக பராட்ஸில், ஒப்பந்தக்காரர்கள் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதன் மூலம், அவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்க முடியும்" என்றார். பாகல்பூரில் வயது வந்தோருக்கான தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.350 சம்பளம் வழங்கப்படுகிறது; ஆனால் திருமண இடங்களில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்களுக்கு வெறும் ரூ.200 தான் தரப்படுகிறது.

திருமண நிகழ்வுகளில் குழந்தைகள் பணியமர்த்தப்படுவதற்கான காரணம், சட்டத்தில் உள்ள ஓட்டை என்பதை அறியலாம். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட ஆகஸ்ட் 30, 2017 அறிவிப்பு, 2016 ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தத்தை தொடர்ந்து, 107 வெவ்வேறு தொழில்கள் மற்றும் வேலைகளில் குழந்தைகளை பணி அமர்த்துவதை தடை செய்கிறது. ஆனால் இந்த பட்டியலில் திருமண மற்றும் அரசியல் கட்சி நிகழ்வுகள் இல்லை.

பாட்னாவில் உள்ள குழந்தை மற்றும் இளம் பருவ தொழிலாளர்களிடம் இருந்து நாங்கள் கேள்விப்பட்டது, இந்தியாவில் ரூ.1.1 லட்சம் கோடி (16 பில்லியன் டாலர்) திருமண சேவைத் தொழிலில், குழந்தைகள் அடிக்கடி வேலை செய்கின்றனர்; இது ஆண்டுக்கு 25% வளர்ச்சியடையும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

"பாகல்பூரில் சுமார் எட்டு திருமண மண்டபங்கள் மற்றும் சுமார் 20 ஒளி-ஒலி அமியப்பு, திருமண ஏற்பாட்டு ஒப்பந்தக்காரர்கள் உள்ளனர்; குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்" என்று அபிஷேக் கூறினார். "ஆனால், அத்தகைய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை" என்றார்.

குழந்தை மற்றும் இளம்பருவ தொழிலாளர் சட்டம், 1986 இன் பிரிவு 9 ன் படி, இளம் பருவ தொழிலாளர்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்கள் தொழில் மற்றும் மேலாண்மை விவரங்களை தொழிலாளர் ஆய்வாளருக்கு அனுப்ப வேண்டும். சட்டத்தின் 11வது பிரிவின் படி பணித்தன்மை மற்றும் வேலை நேரம் மற்றும் மீதமுள்ள இளம் பருவத்தினரின் இடைவெளிகளை பதிவு செய்யும் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் உரிமையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆனால், இந்த ஆய்வைத் தடுக்க உரிமையாளர்கள் ஒருவழியைக் வைத்திருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். அதாவது தங்களின் வயதைவிட தோற்றத்தில் வயதானவர்கள் போல் இருப்பவர்களை பணிக்கு அமர்த்துகின்றனர்.

"முன்ஷி கான்வ் மெய்ன் ஆத் ஹைன் கோஜ் ஹைட், கோஜ்டி ஹைன் ஆர் ஜோ சோட் திக்தே ஹைன் அன்ஹே நஹின் புலாதி (கிராமத்திற்கு வரும் ஒப்பந்தக்காரர்கள், எங்களில் உயரமானவர்களைதேடுகிறார்கள், மிகவும் இளமையாக இருக்கும் குழந்தைகளை விட்டுவிடுகிறார்கள்)" என்று பார்சா கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் கூறினார்.

குழந்தைகள் பணியமர்த்துவதற்கு எதிரான அதிகாரபூர்வ சோதனைகளை, தாபாக்கள் (சிறிய வழியோர உணவகங்கள்) மற்றும் தொழிற்சாலைகளில் குவிந்துள்ளன என்று தொழிலாளர் ஆணையர் மீனா தெரிவித்தார். "குழந்தைகள் வேலை செய்வது பற்றி யாரிடமும் ஏதேனும் தகவல் இருந்தால், அவர்கள் அதை எங்களுக்கு அனுப்ப வேண்டும்," என்று அவர் கூறினார்.

கடந்த 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை, பீகாரில் குழந்தை தொழிலாளர் குறித்து 18,601 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 1,669 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தொழிலாளர் அமைச்சகம் சார்பில் மார்ச் 23, 2017 அன்று மக்களவையில் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும்கூட, குழந்தைத் தொழிலாளர்களை அடையாளம் காண்பது, மீட்பது மற்றும் மறுவாழ்வு அளிப்பதில் பீகார் மாநிலம், கீழிலிருந்து முதல் ஐந்து மாநிலங்களில் இடம் பெற்றுள்ளது என்று, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுவதற்கு பொறுப்பு வகிக்கும் ஒரு தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அபாயகரமான பணிகள்; ஓய்வும் இல்லை

குழந்தைகள் பிரகாசமான எதிர்காலம் இருப்பதை உறுதி செய்ய வேலை செய்ய வேண்டும். "ஹமாரி பதாய் கே லியே தோ ஹுமீன் கமனா ஹாய் படேகா (நாங்கள் படிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் பணியாற்ற வேண்டும்)" என்று பார்சாவைச் சேர்ந்த 14 வயதான ஷியாம் குமார்* கூறினார். அவர் 7 ஆம் வகுப்பில் இரண்டு முறை தோல்வியடைந்தார், ஆனால் பள்ளி மற்றும் திருமண வேலைகளை தொடர்ந்து கையாளுகிறார். "ஹம் பர் கோய் தபாவ் நஹின் ஹை காம் கா - கோய் ஆர் ஆச்சா காம் மைலே டு கார் லெங்கே (நாங்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதில்லை; இதை விட சிறந்தது கிடைத்தால் நாங்கள் மாறலாம்)" என்றார்.

சில பணிகள் முற்றிலும் அபாயகரமானவை - மின் கம்பிகளைக் கையாளுதல், அதிக சுமைகளைச் சுமந்து நீண்ட தூரம் நடந்து செல்வது, பாரம் உள்ள உணவு கொள்கலன்கள் மற்றும் அலமாரிகளிய மாடிகளுக்கு, தரை, அறைகளுக்கு எடுத்து செல்லுதன் போன்றவை அடங்கும்.

திருமண விழாக்கள் முடிந்தவுடன், வழக்கமாக அதிகாலை 3 மணியளவில், குழந்தைகள் இரவு உணவை உட்கொண்டு வீட்டிற்கு செல்கிறார்கள். ராகேஷும் ஷியாமும் எழுந்து பள்ளிக்குத் தயாராகும் முன், வெறும் இரண்டு மணிநேர தூக்கம் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கும். திருமண சீசன் பல வாரங்களுக்கு மேல் நீடிக்கும் போது, பெரும்பாலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், அவர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு இந்த தண்டனைக்குரிய நிகழ்வை வைத்திருக்க வேண்டியுள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள போரிங் சாலை பகுதி உணவுக் கடையில் பணி புரியும் ஒரு குழந்தை தொழிலாளி. பீகாரில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் (5 முதல் 17 வயது வரை), 67% என்ற மிக குறைந்த விகிதத்தில் உள்ளது.

திருமண நிகழ்வுகளில் பணிபுரியும் பிரவீன் குமார்*, 16, தனது வலது கட்டைவிரலில் நிரந்தர தீக்காய வடுவை கொண்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு திருமண விழாவில், விளக்குகள் அமைக்கும் போது அவரை மின்சாரம் தாக்கி, உயிர் தப்பியுள்ளார்.

"அந்த மின்சார கம்பிகள், நேரடியாக வந்திருப்பவையாக இருந்திருக்க வேண்டும்," என்று அவர் நினைவு கூர்ந்தார். “நான் அந்த கம்பியை பிடித்த் அபோது, சில நொடிகள் என்னால் விலகிச் செல்ல முடியவில்லை. மேலும் என் கைகளில் இருந்து என் உடலின் மேல்பகுதிக்கு மின்சாரங்கள் செல்வதை உணர்ந்தேன். பின்னர், என்ன எப்படி நடந்தது என்று தெரியாது; ஆனால் நான் என் கைமுட்டிகளை விடுவித்தேன்” என்றார்.

பாகல்பூர் நகரில் திருமண நிழழ்விடங்களில் 18 வயதிற்குட்பட்ட பல இளம் பருவத்தினர், ஒலி-ஒளி அமைப்பு ஒப்பந்தக்காரர்களால் தவறாமல் பணி அமர்த்தப்பட்டனர். விரிவான ஒலி-ஒளி ஏற்பாடுகளை அமைத்து தருவதற்கு, அவர்கள் மூன்று நாட்கள் அந்த இடத்தில் தங்க வேண்டும். பிரவீன் நகரத்தின் லாலு சக் மொஹல்லாவை (பகுதி) சேர்ந்தவர்; அங்கு, திருமண இடங்களில் தவறாமல் வேலை செய்யும் ஒரு டஜன் சிறுவர்கள் வசிக்கின்றனர்.

லாலு சக் மொஹல்லாவை சேர்ந்த விலாஸ், பெரும்பாலும் ஊர்வலத்துக்கு முன் கனமான விளக்குகளை பிடித்துக் கொண்டு மூன்று மணி நேரம் நடப்பார். "கபி கபி சார் பெ பீ ரக் கர் சால்டே ஹைன் (சில நேரங்களில், விளக்குகள் எங்கள் தலையிலும் வைக்கப்படுகின்றன)," என்று அவர் கூறினார்.

ஊர்வலம், திருமண நிகழ்விடத்தை அடைந்த பிறகும் கூட, குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் வாழ்த்துவதற்கான நீண்டகால சடங்கு நடந்து வருவதால், சிறுவர்கள் விளக்குகள் மற்றும் கேபிள்களுடன் அங்கும் தொடர்ந்து நிற்கிறார்கள்.இதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும்.

அவரும் பிற குழந்தை மற்றும் இளம் பருவ தொழிலாளர்களும் வேலை முடித்து வீடு திரும்பும்போது பெரும்பாலும் நள்ளிரவு ஆகிவிடும். "ராத் மே ஜக்னே கா காம் ஹொன் கி வஜா சே ஸ்கூல் மெய்ன் பஹுத் நீந்த் ஆதி ஹை (எங்கள் வேலையில், நள்ளிரவு வரை விழித்திருப்பதால், பள்ளியில் இருக்கும் போது தூக்கம் வருவதை உணர்கிறோம்)" என்று விலாஸ் கூறினார். அவர் 8 ஆம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டார். இப்போது திருமண நிகழ்வுகளில் வேலை செய்யாதபோது, வேன் டிரைவராக பணிபுரிகிறார். ஆனால் அவர் ஒரு பழகுபவருக்கான உரிமத்தை கூட வைத்திருக்க முடியாத அளவுக்கு சிறுவயது உருவத்துடன் காணப்படுகிறார்.

திருமண சமையல் சம்பந்தப்பட்ட வேலையின் ஒரு பகுதி - அதிக சமையல் கூட பணி- குழந்தைகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன. "சமையலறை மற்றும் சாப்பாடு கூடம் வெவ்வேறு தளங்களில் இருந்தால், நாங்கள் பல படிகளை ஏறிச் செல்ல வேண்டும்; கனமான பெரிய உணவு பாத்திரங்களை ஏந்தியபடி மேலே ஏறுகிறோம்" என்று பார்சாவைச் சேர்ந்த ஷியாம் கூறினார். "நாங்கள் தட்டுகள் மற்றும் டம்ளர்களை அதிக எண்ணிக்கையில் எடுத்துச் செல்கிறோம். அதில் ஏதாவது உடைந்தால், எங்களை அடிப்பார்கள். எங்கள் ஊதியத்தில் இருந்து அதற்கான தொகை பிடிக்கப்படும்" என்றார் அவர்.

பாட்னாவில் பலூன் விற்பனை செய்யும் ஒரு குழந்தை தொழிலாளி. பாட்னாவை சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான பிராக்சிஸ் இன்ஸ்டிடியூட் பார் பார்ட்டிசிபரேட்டரி பிராக்டிஸஸ் நடத்திய 2018 கணக்கெடுப்பின்படி , குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடும் பொதுவான வேலைகளில் இவ்வகையானதும் ஒன்றாகும்.

82% குழந்தை தொழிலாளர்கள் வரை சட்டப்படியான வேலை நேரம் கடந்து பணிக்கு வைக்கப்படுகின்றனர்: ஆய்வு

"மாறிவரும் பொருளாதாரத்துடன், குழந்தைத் தொழிலாளர்களின் தன்மையும் மாறிக்கொண்டே இருக்கிறது" என்று பாட்னாவை சேர்ந்த இலாப நோக்கற்ற பிராக்சிஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் பார்ட்டிசிபரேட்டரி பிராக்டிசஸ் திட்ட மேலாளர் தீரஜ் (அவர் முதல் பெயரை மட்டுமே குறிப்பிடுகிறார்) கூறினார்."குழந்தைகள் பள்ளியில் படிக்கிறார்கள் (ஆனால் அது) அவர்கள் வேலைக்கு இழுக்கப்படுவதில்லை என்று அர்த்தமல்ல" என்றார் அவர்.

82% குழந்தை தொழிலாளர்கள் மற்றும் 68% இளம் பருவ தொழிலாளர்கள் சட்டப்படியான வேலை நேர விதிமுறைகளுக்கு அப்பால் வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்; பீகாரின் 15 நகரங்களில் 1,594 குழந்தை மற்றும் இளம் பருவ தொழிலாளர்கள் பற்றிய 2018 பிராக்சிஸ் கணக்கெடுப்பை காட்டி அவர் இந்த முடிவுக்கு வருகிறார். மேலும், குழந்தை மற்றும் இளம்பருவ தொழிலாளர்களில் 59% பேர், பணிச் சூழலால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினை பற்றி தெரிவித்தனர்.

பார்சாவில் உள்ள ஒவ்வொரு பத்து மாணவர்களில் மூன்று பேர் மட்டுமே 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் என்று மதிப்பிட்டுள்ளனர்.பீகாரில், 15 முதல் 19 வயதுக்குட்பட்ட 44% இளைஞர்கள் எந்த கல்வி நிறுவனத்திலும் படிக்கவில்லை. பாட்னா மாவட்டத்தில், இந்த எண்ணிக்கை 36% ஆக இருந்தது.

"எனது வகுப்பு தோழர்களில் ஒருவர் அவரது தந்தை இறந்த பிறகு சமீபத்தில் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டார்" என்று ராகேஷ் கூறினார். "அவர் குடும்பத்தில் மூத்த மகன் மற்றும் அவரது இளைய உடன்பிறப்புகள் படிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, பல வேலைகளை செய்கிறார். அவர் திருமண சீசன் வேலைகளைச் செய்கிறார்; அதன் பிறகு ஒரு பிஸ்கட் தொழிற்சாலையில் வேலை செய்கிறார். அவர் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை அங்கு வேலை செய்கிறார்” என்றார்.

ஆயினும், வேலையை விட மிகவும் கடினமான அந்த குழந்தைகளுக்கு இருப்பது, வெறிச்சோடிய சாலைகள் வழியாக இரவு நேரத்தில் செல்வது தான் என்றனர். அவர்கள், இரவில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படும் அச்சம் தொடர்ந்து இருந்தது.

"போலீஸ் சான்பீன் கார்தே ஹைர் ஹமரே சமன் பெ ஷக் கர்தே ஹைன் (போலீஸ்காரர்களால் சந்தேகத்தின் பேரில் நாங்கள் தடுத்து நிறுத்தப்படுகிறோம்)" என்று ஷியாம் கூறினார். "ஏக் பார் சார்-பாஞ்ச் டான்டே லாகே தி (ஒருமுறை நாங்கள் அடித்து வீசப்பட்டோம்)" என்றார் அவர்.

(*இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள குழந்தைகளின் பெயர்கள், அவர்களின் அடையாளத்தை பாதுகாக்கும் பொருட்டு, மாற்றப்பட்டுள்ளன).

(குல்கர்னி, மும்பையை சேர்ந்த ப்ரீலான்ஸ் பத்திரிகையாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.