மும்பை: அண்மையில் நடந்து முடிந்த -- மத்திய பிரதேசம் (ம.பி.), ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் -- ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்த பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளை இழந்துள்ளது, இந்தியா ஸ்பெண்ட் தேர்தல் தொடர்பான பகுப்பாய்வு புள்ளி விவரங்களில் தெரிய வருகிறது.

இம்மாநிலங்களில் 80 தொகுதிகளுக்கு உட்பட்ட 30 இடங்களில் மோடி தேர்தல் பிரசாரம் செய்ததில், பா.ஜ.க. 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது; 57 இடங்களில் தோல்வியை சந்தித்துள்ளது.

மோடியில் தேர்தல் பிரசாரங்களில் 70% (22 கூட்டங்கள்) ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றன. இங்கு 54 இடங்களில் 22 இடங்ளையே (41%) பா.ஜ.க. வென்றது.

சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில், மோடி எட்டு பிரசாரங்களில் பேசிய நிலையில், பா.ஜ., 26 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றியை பெற்றது.

மோடியை விட ஆதித்யநாத் சிறந்த பிரசாரகரா?

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹிந்தி பேசும் (ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர்) மாநிலங்கள் மற்றும் தெலுங்கானாவில் பா.ஜ.க. பிரசாரங்களுக்கு தலைமை ஏற்று நடத்தினார் என்று, லைவ்மிண்ட் இதழ் 2018, நவ. 27-ல் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நான்கு நிலங்களில் 58 தேர்தல் கூட்டங்களில் ஆதித்யநாத் பங்கேற்று பேசினார். இதில் 27 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது; 42 தொகுதிகளை இழந்தது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மோடியின் தேர்தல் பிரசார வெற்றி விகிதமான 28.75% என்பதைவிட ஆதித்ய நாத்தின் வெற்றி விகிதம் சற்றே அதிகரித்து, 39.13% என்றளவில் உள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 27 தேர்தல் கூட்டங்களில் ஆதித்யநாத் பேசினார். இங்கு, 37 தொகுதிகளில் 21 இடங்களை பா.ஜ.க வென்றது.

சத்தீஸ்கரில் ஆதித்யநாத் பேசிய 23 பிரசார பொதுக்கூட்டங்களில், 23 இடங்களில் பா.ஜ.க. ஐந்து இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

(அல்போன்சா, மும்பை செயிண்ட் பால் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன் எஜுகேஷன் கல்வி நிலையத்தில் முதுகலை டிப்ளமோ பட்டதாரி. இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.