கிஷன்கஞ்ச்: மார்ச் 2020 இல், கோவிட் -19 லாக்டவுன் அமலானபோது, பீகாரின் கிழக்கு கிஷன்கஞ்ச் மாவட்டத்தின் மஜ்காமா கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான ஹசீனா கதுன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அஃபாக் ஆலமை மணந்தார்.

ஒரு வாரம் கழித்து, ஊரடங்கு அமலில் இருந்த போதிலும், அவர்கள் 1,600 கிமீ வடமேற்கே சண்டிகருக்கு ஒரு தனியார் வாகனத்தில் சென்றனர். ஆகஸ்ட் 25, 2022 அன்று கிஷன்கஞ்ச் மாவட்டத்தின் கோச்சத்தமன் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அறிக்கையில், "என் உயிரைப் பாதுகாக்க எனது சம்மதத்திற்கு எதிராக நான் பாலியல் தொழிலுக்கு நிர்பந்தம் செய்யப்பட்டேன்" என்று காதுன் கூறினார். திருமணத்திற்குப் பிறகு, அவரது கணவர் ஒரு மாதம் நன்றாக நடந்து கொண்டார், பின்னர் அவரை இத்தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தினார். மனைவி மறுத்தபோது, ​​ஆலம் அவரை அடித்தார், ஒருமுறை எதிர்த்தால் கொன்றுவிடுவேன் என்று கத்தியைக் காட்டி மனைவியை மிரட்டியதாக, இந்தியா ஸ்பெண்டிடம் அப்பெண் கூறினார்."ஒவ்வொரு நாளும், அவர் என்னை [மதுவை] போதையில் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தினார்" என்றார்.

நாங்கள் (மனைவி மற்றும் கணவன்) உடலுறவு கொள்ளும்போது, ​​என் கணவர் அதை வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை எனது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளார்" என்றார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, சண்டிகரின் மணிமஜ்ராவில் தனது கிராமத்தைச் சேர்ந்த சதாம் (அவர் ஒரு பெயரைப் பயன்படுத்துகிறார்) ஒருவரைச் சந்தித்தார், அவர் தனது கதையைக் கேட்டு தப்பிக்க உதவினார், என்று அவர் கூறினார். அவர் இப்போது வீடு திரும்பிவிட்டார்.

கிஷன்கஞ்சில் உள்ள உள்ளூர்வாசிகள், ஆட்கடத்தல் பிரச்சனை பரவலாக இருப்பதாகவும், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அடிக்கடி இலக்காகிறார்கள் என்றும் கூறுகிறார்கள். கிஷன்கஞ்ச் உட்பட 19 மாவட்டங்களில் 2008 இல் நடத்தப்பட்ட ஆய்வில், 683 கடத்தல் வழக்குகள் கண்டறியப்பட்டன, அதில் 585 பெண்கள் மற்றும் பெண்கள் மற்றும் 98 சிறுவர்கள். "இந்த சிறுவர்களில் 33 பேர் 13 வயதுக்குட்பட்டவர்கள்" என்று அரசுசாரா அமைப்பு பூமிகா விஹார் நடத்திய கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலரும், பூமிகா விஹார் தலைவருமான ஷில்பி சிங் கூறுகையில், "பெண்கள் கடத்தலின் மையமாக சீமாஞ்சல் உள்ளது" என்றவர், "கோஷி-மஹானந்தாவின் இந்தப் பகுதி இளவயது திருமணம் மற்றும் கடத்தலின் மையமாக உள்ளது. வெள்ளத்தின் போது கடத்தல் அதிகரிக்கிறது" என்றார்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) படி, பீகாரில் 2021ஆம் ஆண்டில் 111 மனித கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன, இது 2020 இல் 75 வழக்குகள் என்பதைவிட அதிகம். இது 2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் பதிவான மொத்த வழக்குகளில் (2,189) 5% ஆகும்.

காதுன் மற்றும் அவள் குடும்பத்தின் சோதனை

"எனது மகளை திருமணம் செய்த பிறகு, அவர் அழைத்துச் சென்றுவிட்டார்" என்று கதூனின் தந்தை 50 வயதான கலிமுதீன் கூறினார். ஆலம் அவரை துஷ்பிரயோகம் செய்வார், காதுனின் தாயை அழைத்துச் சென்று குடும்பத்தைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்துவார் என்று, கூலித் தொழிலாளி மற்றும் ஏழு குழந்தைகளின் தந்தையான கலிமுதீன் மேலும் கூறினார்.

தனது மகளிடம் அத்துமீறும் வீடியோ வைரலானபோது அவள் என்ன செய்கிறாள் என்பது தனக்குத் தெரிந்ததாக கலிமுதீன் கூறினார். "நாங்களும் எங்கள் கிராமத்தில் உள்ள மக்களும் வீடியோவைப் பார்த்ததும் மிகவும் கவலையடைந்தோம்" என்றார்.

காதுன் வீடு திரும்பிய பிறகு, ஆலம் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்கு பதிலாக வேறொரு பெண்ணை அனுப்பச் சொன்னார். காதுன், அவரை கிராமத்திற்கு வந்து தன்னை அழைத்துச் செல்லும்படி கூறினார். ஆகஸ்ட் 24, 2022 அன்று அவர் கிராமத்தை அடைந்தபோது, ​​​​கிராமத்தினர் அவரைப் பிடித்து, கோச்சத்தமன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆலம், இந்தியா ஸ்பெண்டிடம் கூறுகையில், மிதுன் (இவரது கடைசி பெயர் தெரியவில்லை) மற்றும் முகமது கலாம் என்ற இரண்டு ஆண்கள் உட்பட, கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் இருந்து பெண்களை அழைத்துச் சென்று அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் குழுவில் சேர்த்ததாகக் கூறினார். தனக்கு நான்கு "மனைவிகள்" இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் இத்தொழிலில் ஈடுபடுவதாகவும், அவர் சண்டிகரில் மாவட்டத்தைச் சேர்ந்த 50 பெண்களை விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்தியதாகவும் கூறினார்.

அவர் மீது ஒழுக்கக்கேடான தொழில் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட மற்ற மூன்று பெண்களிடமும் அல்லது அவர்கள் காணாமல் போனால் அவர்களது குடும்பத்தினரிடமும், இந்தியா ஸ்பெண்ட் பேசியது.

காதுன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கோச்சத்தமன் காவல் நிலையத்தின் அதிகாரி சுமன் குமார், இந்தியா ஸ்பெண்டிடம் கூறுகையில், இந்த வழக்கை விசாரிக்க கிஷன்கஞ்ச் துணைப் பிரிவு காவல் அதிகாரி (SDPO) கீழ் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. துணைப் பிரிவு காவல் அதிகாரி அன்வர் ஜாவேத் அன்சாரி, தனது விசாரணையின் முன்னேற்றம் குறித்து, இந்தியா ஸ்பெண்டிடம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

கிஷன்கஞ்ச்: ஒரு பான்-இந்தியா பிரச்சனையின் நுண்ணிய தோற்றம்

இந்தியா முழுவதும், 2021ல், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தரவுகளின்படி 2,189 ஆள் கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2020ல் 1,714 வழக்குகள் என்பதில் இருந்து அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு 2,189 வழக்குகள் மொத்தத்தில் 6,533 பேர் கடத்தப்பட்டனர், அதில் 4,062 பெண்கள் மற்றும் 2,471 ஆண்கள். தெலுங்கானா (347), மகாராஷ்டிரா (320), அசாம் (203) ஆகிய மாநிலங்களில் அதிக கடத்தல் வழக்குகள் உள்ளன.

நிதி ஆயோக்கின் கூற்றுப்படி, 67% முஸ்லிம்களைக் கொண்ட கிஷன்கஞ்ச், பீகாரின் 38 மாவட்டங்களில் மிகவும் ஏழ்மையானது. மாவட்டத்தில் சுமார் 65% பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இம்மாவட்டம் மேற்கு வங்கம் மற்றும் நேபாளத்தை ஒட்டிய 'சீமாஞ்சல்' என்ற பகுதியின் கீழ் வருகிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆட்கடத்தல் உள்ளிட்ட பெண்கள் பிரச்னைகளை தீர்க்க போராடி வரும் பூமிகா விஹாரைச் சேர்ந்த சிங் கூறுகையில், இப்பகுதியில் ஆட்கள் கடத்தல் அதிகமாக உள்ளது. சீமாஞ்சல் பகுதியில் கடத்தலில் இருந்து 275 பெண்களை தனிப்பட்ட முறையில் மீட்டுள்ளதாக சிங் கூறினார்.

ஜூலை 28, 2022 அன்று, ஜில்லா பரிஷத்துக்கு சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் தலைவரான நாசிக் நாதிர், கிஷன்கஞ்ச் காவல் கண்காணிப்பாளர் இனாமுல் ஹக்கிற்கு கடிதம் எழுதினார், அதில் பெண் கடத்தல் தொடர்பாக முகமது கலாம் என்ற நபர் மீது குற்றம் சாட்டினார். மாவட்டத்தில் ஆட்கடத்தல் பிரச்னை இருப்பதாகவும், உள்ளாட்சி தேர்தலில் தான் போட்டியிட்டபோது, ​​பெண்களை காணவில்லை என பல குடும்பங்கள் தன்னிடம் புகார் அளித்ததாகவும், தொடர்ந்து இந்த பிரச்னையை எழுப்பி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தியா ஸ்பெண்டிடம் நாதிர் கூறுகையில், "கடந்த 20 ஆண்டுகளாக, காணாமல் போகும் பெண்கள் தொடர்பாக கலாமின் பெயரைக் கேட்டு வருகிறோம். "அந்த ஆண்கள் பெண்களை பலாத்காரம் செய்கிறார்கள் மற்றும் அவர்களை வீடியோ எடுக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். பின்னர், வீடியோக்கள் மூலம் பெண்களை பிளாக்மெயில் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு அந்த ஆண்கள் கட்டாயப்படுத்துகின்றனர்" என்றார்.

சண்டிகருக்கு சுமார் 500 பெண்களை கலாம் கடத்தியதாக அவர் குற்றம் சாட்டினார், ஆனால் அவருக்கு எதிராக யாரும் குரல் எழுப்பவில்லை என்று கூறினார். "எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் [முதல் தகவல் அறிக்கை] பதிவு செய்யப்படவில்லை… அவருக்கு அரசியல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது" என்று கூறிய அவர், மத்திய புலனாய்வுப் பிரிவினரிடம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அரசியல் பாதுகாப்பு குறித்து கோச்சத்தமன் எம்எல்ஏ இசார் அஸ்பி கூறியதாவது: அவருக்கு அரசியல் பாதுகாப்பு கொடுப்பது யார் என்று தெரியவில்லை. விசாரணைக்குப் பிறகு அவர் இதில் உண்மையில் ஈடுபட்டிருந்தால் அவரைப் பிடிப்போம். ஆனால் அவர் இதில் உண்மையாக ஈடுபட்டிருக்க வேண்டும். தொகுதியில் பெண்களை கண்காணிக்கும் விவகாரம் குறித்து, தன்னிடம் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றும், அப்படி ஏதேனும் பிரச்னை இருந்தால், "நிர்வாகம் விசாரித்து, தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பெண் கடத்தல் குறித்து, போலீஸ் சூப்பிரண்டு ஹக்கிடம் இந்தியா ஸ்பெண்ட் தரப்பில் கேட்டபோது, ​​இந்த பிரச்சனை குறித்து தனக்கு தெரியாது என்றும், இது தொடர்பாக எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார். "பெண்கள் காதலுக்காக ஓடிப்போகும்போது காணாமல் போய்விடுகிறார்கள்...பின்னர், அவர்கள் மீட்கப்படுகிறார்கள். அத்தகைய (கடத்தல்) எந்தப் பிரச்சினையும் எங்களுக்கு வரவில்லை. அந்த ஏழைக் குடும்பங்களுக்கு யாரேனும் நலம் விரும்பிகளாக இருந்தால், அந்தக் குடும்பத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து வர வேண்டும்" என்றவர், "தனிப்பட்ட போட்டியின் காரணமாக" எழுதப்பட்டதாகக் கூறி நாதிர் தனக்கு எழுதிய கடிதத்தை அவர் நிராகரித்தார்.

இதற்கிடையில், பாலியல் தொழிலில் இருந்து தப்பித்துவிட்டதால் நிம்மதியடைந்த காதுன், வீட்டு வேலைகளில் தன்னை மும்முரமாக வைத்திருக்கிறார். ஆனால் அவர் தன் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார், மேலும் அவர் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு வேலையைத் தேடுவதாக அவர் சொன்னாள். "எனக்கு அரசு வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும்" என்றார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.