புதுடெல்லி: சுமார் 70% இந்தியர்கள் தங்களது சுகாதாரத் தேவைகளுக்கு தனியார் சேவையையே நம்பி உள்ளனர்; சொந்த காசை செலவிடுவதால் இது 2012ஆம் ஆண்டில் 5.5 கோடி மக்களை வறுமையில் தள்ளியது.

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ரூ.30,000 வரை மருத்துவ செலவுகளை ஈடுகட்டும் நோக்கில், 2008இல் தொடங்கப்பட்ட ராஷ்டிரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா (RSBY - ஆர்.எஸ்.பி.ஒய்) போன்ற தேசிய காப்பீட்டு மாதிரிகளை, இந்தியா முயற்சித்தது. ஆனால், அதன் ஒட்டுமொத்த செயல்திறன் மோசமாக இருந்தது; அந்த திட்டம் வறுமையை குறைக்க தவறியது.

பிரதமர் நரேந்திர மோடி, தனது லட்சியமான ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (AB-PMJAY / ஏபி-பிஎம்ஜே) திட்டத்தை, செப்டம்பர் 2018 இல் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கினார். ஆர்.எஸ்.பி.ஒய்.- ஐ விட மேம்பட்ட இத்திட்டம், 2011சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பால் (SECC - எஸ்.இ.சி.சி) அடையாளம் காணப்பட்ட 10 கோடி ‘ஏழை மற்றும் பாதிக்கும் ’ குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது.

ஒரு ஆண்டுக்கும் மேலாக, இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள ஏபி-பிஎம்ஜே மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் (NHA) தலைமை செயல் இந்து பூஷணுடன் பேசினோம்.

புதுடெல்லி, ஜன்பாத்தில் உள்ள தனது ஏழாவது மாடி என்ஹெச்ஏ அலுவலகத்தில் அமர்ந்திருந்த பூஷண், “நாங்கள் ஆர்.எஸ்.பி.ஒய் எண்ணிக்கையை கடந்து விட்டோம்” என்றார். டிசம்பர் 2, 2019 வரை 68 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு, பி.எம்.ஜே.ஏ.ஒய் ரூ. 7,160 கோடி மதிப்பில் காப்பீடு வழங்கியுள்ளது மற்றும் 6.7 கோடி பேருக்கு மின்னணு பயனாளி அட்டைகளை வழங்கியுள்ளதாக பி.எம்.ஜே.ஏ.ஒய். வலைத்தளம் மற்றும் என்.எச்.ஏ தெரிவித்துள்ளது. இது ஒடிசா, தெலுங்கானா, மேற்கு வங்கம் மற்றும் புதுடெல்லி ஆகிய நான்கு மாநிலங்களைத் தவிர எல்லாவற்றிலும் நடைமுறையில் உள்ளது.

பி.எம்.ஜே.ஏ.ஒய். திட்டம் குறித்த அகன்ற திரையை சுட்டிக்காட்டிய பூஷண்,மருத்துவமனைகளில் மூன்றில் இரண்டு பங்கு தனியார் மருத்துவமனைகள் எனவும் மூன்றாம் நிலை பராமரிப்புக்காக அவை இருப்பதாக கூறினார். "எனவே பெரிய அளவிலான செலவுகளை கவனித்து வருகிறோம்," என்றார் பூஷண். "நாங்கள் செலவிட்டது ரூ.8,000 கோடி; ஆனால் மக்களுக்கு சேமிப்போ ரூ.15,000 கோடி” என்றார்.

58 வயதான பூஷண், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி; ராஜஸ்தான் கேடரில் அங்கு ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், 1994இல் உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணராக சென்றார். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி)- பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி டெல்லி ஆகியவற்றின் பட்டங்கள் தவிர, அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் சுகாதார பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும், சுகாதார அறிவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். அவரது தற்போதைய பதவிக்கு முன்பு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் கிழக்கு ஆசிய பிரிவு இயக்குநர் ஜெனரலாக பணியாற்றினார்.

நேர்காணலில் இருந்து திருத்தப்பட்ட பகுதிகள்:

பி.எம்.ஜே.ஏ.ஒய்.-இன் முதல் ஆண்டு எப்படி இருந்தது? என்ன வேலை செய்து வருகிறது, எதை செய்யவில்லை?

முதல் ஆண்டின் வேகம் மிகச்சிறப்பாக உள்ளது. இத்திட்டம் உருவான விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாம் அதை விரிவாக்க வேண்டும்; மாநிலங்களுக்கு இடையே பெரும் ஏற்றத்தாழ்வு உள்ளது; சில மாநிலங்கள் முதல்முறையாக இத்திட்டத்தைத் தொடங்கின. ஒரு புதிய திட்டத்தைத் தொடங்குவதற்கான ஒரு சூழல் அமைப்பை உருவாக்க, போதிய அவகாசம் தேவைப்படுகிறது. உத்தரபிரதேசம், பீகாரில் இதுதான் நடக்கிறது. இம்மாநிலங்களில் சேவைகளை வழங்க மோசமான உள்கட்டமைப்பே உள்ளது.

பெயர்வுத்திறன் அம்சம் மிக எளிது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. [பெயர்வுத்திறன் என்பது, நோயாளிகள் அங்கீகாரம் பெற்ற நாட்டின் எந்த மருத்துவமனையிலும் சுகாதார வசதி பெற அனுமதிக்கிறது]. உதாரணமாக, 10,000 பேர் உ.பி.க்கு வெளியே உத்தரகண்ட் சென்றுள்ளனர் - அவர்களில் பெரும்பாலோர் ரிஷிகேஷ் எய்ம்ஸ் [அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்] மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பலர் டெல்லி செல்கின்றனர். இதேபோல், சுகாதார உள்கட்டமைப்பு இல்லாததால் பீகாரும் மக்களை வெளியே அனுப்புகிறது.

இதில், டெல்லி தேசிய சுகாதார ஆணியயம் சேவை அளிப்பவராகவும், பெரிய மாநிலங்களான குஜராத் மற்றும் மகாராஷ்டிரா பிற பெறுநர்களாகவும் உள்ளன.[செப்டம்பர் 2019 இல் இருந்து, மருத்துவமனை பயனாளிகள் 68 லட்சம் பேரில் 50,544 (0.7%) பெயர்வுத்திறன் அம்சத்தைப் பயன்படுத்துகின்றன என, இந்தியா ஸ்பெண்டிடம் என்.எச்.எஸ். பகிர்ந்த தகவலில் உள்ளது.

பசுமைவெளி மாநிலங்களில் திட்டத்தின் செயல்திறனை மேம்படுத்த வேண்டும். அவற்றில் விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் சேவைகளை வழங்குவதை வலுப்படுத்த வேண்டும். இதற்காக அந்த இடங்களில் புதிய மருத்துவமனைகள் அமைப்பது போன்ற சலுகைகளை எவ்வாறு வழங்க முடியும் என்பதை அறிய நிதி ஆயோக் [மத்திய அரசின் கொள்கை சிந்தனைக்குழு] உடன் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம்.

சில சந்தர்ப்பங்களில், வடகிழக்கு போன்ற தொலைதூர மாநிலங்கள், அந்தமான் மற்றும் லட்சத்தீவு போன்ற பகுதிகளுக்கு நாங்கள் போக்குவரத்து செலவை வழங்குவது பற்றியும் திட்டமிட்டு வருகிறோம் - ஏனெனில் இந்த இடங்களில் பயணச்செலவும் முக்கிய கூறாகும்.நாங்கள் பொதுவாக விழிப்புணர்வையும், சேவை வழங்கல் மற்றும் தரத்தை மேம்படுத்த முயற்சிக்கிறோம். நாங்கள் இப்போது எங்கள் தொகுப்புகளையும் திருத்தியுள்ளோம். முன்னதாக, அளிப்போர் விகிதங்கள் குறைவாக இருப்பதை குறிப்பிட்டுள்ளனர். எனவே அதை செய்கிறோம். அனைத்து பெரிய மருத்துவமனைகளையும் இத்திட்டத்திற்கு கொண்டு செல்வதே எங்கள் நோக்கம்.

சேவைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, தரமான சிகிச்சை பணிப்பாய்வுகளை உருவாக்க ஐ.சி.எம்.ஆர் [இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்] இல் சுகாதார ஆராய்ச்சித் துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். அந்த பணிப்பாய்வு பின்பற்றப்படுவதை எங்கள் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் உறுதி செய்யும்.

இது, தனியார் துறையில் நடக்கும் தேவையற்ற சிகிச்சைகள் குறித்து கவனித்துக் கொள்கிறதா? ரூ. 4.5 கோடி மதிப்புள்ள சுமார் 3,000 மோசடி வழக்குகள் தணிக்கைகளின் போது கண்டறியப்பட்டதாக ஏபி-பி.எம்.ஜே.ஏ.ஒய். ஆண்டு அறிக்கை 2019 தெரிவித்துள்ளது.

இடுப்பு மாற்று சிகிச்சை போலவே, நாங்கள் சில பரிசோதனை மற்றும் சமநிலைகளை உருவாக்குகிறோம் -, நாங்கள் அந்த இடத்தில் பலகைகளை வைக்கிறோம். அவை, அந்த நடைமுறை தேவையா என்பதை ஆராயும். புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம், இதனால் சரியான அளவு (சிகிச்சைக்கு மேல் அல்லது சிகிச்சைக்கு கீழ் அல்ல) சிகிச்சை அளிக்கப்படுகிறது. நபருக்கு கீமோதெரபி, கதிர்வீச்சு அல்லது அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், அதை தகுதிவாய்ந்த சிகிச்சை அளிப்பவர் தீர்மானிக்க வேண்டும். இதேபோல் இருதய நோய்களிலும், அந்த நபருக்கு ஒரு ஸ்டென்ட் தேவையா அல்லது மருத்துவமனை பணம் சம்பாதிக்க ஸ்டெண்டை பரிந்துரை செய்துள்ளதா என, அவர்களை ஆராயக்கூடிய ஒரு அமைப்பு எங்களிடம் உள்ளது.

அடுத்தது மோசடி மற்றும் துஷ்பிரயோகத்தை கண்டறிதல் மற்றும் தடுப்பது. இதற்காக நாங்கள் எங்கள் தகவல் தொழில்நுட்ப அமைப்பை வலுப்படுத்தி வருகிறோம். சில அமைப்பு முறைகளை [முறைகேடு மற்றும் மோசடி] பெரிதும் குறைக்கிறோம்.

ஒவ்வொரு வாரமும் பகுப்பாய்வின் அடிப்படையில் சாத்தியமான மோசடி வழக்குகள், அது பற்றிய தரவுகளை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். தடயவியல் பகுப்பாய்வு மற்றும் பெரிய தரவு பகுப்பாய்விற்கு எங்களுக்கு உதவும் ஒரு நிறுவனத்தை, நாங்கள் இறுதி செய்கிறோம். எங்களுக்கு கிடைக்கும் எச்சரிக்கைகளை மாநிலங்களுடன் பகிர்ந்து தருகிறோம். மாநிலங்களின் திறனையும் நாங்கள் வளர்த்து வருகிறோம்; எனவே இதுபோன்ற பணிகளை அவர்களே செய்ய முடியும். இறுதியாக நாங்கள் எங்கள் தகவல் தொழில்நுட்ப முறையை மேம்படுத்துகிறோம்; மேலும் ‘ஜீரோ’ என்ற கருவி முறையை கொண்டு வந்துள்ளோம். இது மிகவும் வலுவானதாகவும், பயனர்களுக்கு உகந்ததாகவும், பாதுகாப்பாகவும் இயங்கக்கூடியது.

நாங்கள் அவர்களை தொடர்ந்து தூண்டுகிறோம். இதனால் மேலும் பல மோசடி வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை 300 மருத்துவமனைகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. அவற்றிடம் பணத்தை திரும்பக் கோரி இருக்கிறோம். அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் [முதல் தகவல் அறிக்கைகள்] பதிவு செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 2019 இல் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக்கின் மூத்த ஆலோசகர் அலோக் குமார், காப்பீடு திட்டத்தில் நடுத்தர குடும்பங்களை சேர்ப்பது குறித்து பேசினார் - இது தற்போது எந்த திட்டத்திலும் இல்லை. திட்டப்பயனாளிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தும் திட்டங்கள் உள்ளதா?

இந்த திட்டத்திற்கு ஒரு வயதுதான் ஆகிறது. விரிவாக்குவதற்கு முன் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருங்கிணைக்க வேண்டும். சுகாதார காப்பீடு சேவைகளை வழங்குவதற்கான சூழல் அமைப்பை வலுப்படுத்துவதே எங்கள் நோக்கம்.

எங்களின் தரவுத்தளம் மிகவும் பழையது. இது, 2011 தரவுத்தளமாகும். எனவே நாங்கள் அதை சரி செய்ய வேண்டும். இன்னும் எஞ்சியிருக்கும் நபர்களை, திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுவது பற்றி அடையாளம் காண வேண்டும்.

இத்திட்டத்தில் அனைத்து ஏழை மக்களையும் நாங்கள் கொண்டு வந்துவிட்டால், திட்டத்தை விரிவுபடுத்தி அவர்களையும் [நடுத்தர குடும்பங்கள் ] கொண்டு வராலாமா என்பதை அரசு தீர்மானிக்க வேண்டும். எனவே திரு. அலோக் குமார் சமீபத்தில் பகிர்ந்து கொண்ட பார்வை, அவரது தொலைநோக்கு பார்வையை காட்டுகிறது. ஆனால் நாம் அவருக்கு செல்வது, நம்மிடம் ஒரு திறம்பட்ட அமைப்பும் சூழலும் தயாராக உள்ளது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம் என்பதாகும்.

புதிய பயனாளிகளை சேர்ப்பது என்.எச்.ஏ அல்லது பல்வேறு அரசு துறைகள் மூலமாக செய்யப்படுமா?

நாங்கள் புதிய பயனாளிகளைச் சேர்க்கவில்லை; வெளியேறி பயனாளிகளை மட்டுமே அடையாளம் காண்கிறோம். [பயனாளிகளைச் சேர்ப்பதற்கான] அழைப்பை அரசு தான் விடுக்க வேண்டும்.

ஆகவே, இதற்கென ஒரு பட்டியல் கணக்கிடப்படுகிறதா?

அப்படி நான் கணக்கிடப்படுவதாக நான் சொல்ல மாட்டேன். நாங்கள் வெளியே சென்றுவிட்ட நபர்களை தான் பார்க்கிறோம்.

எடுத்துக்காட்டாக, நாங்கள் மற்ற அமைச்சகங்களுடன் இணைந்து செயல்படுகிறோம்: அனைத்து கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் பீடி தொழிலாளர்களுக்கும் ஊதியம் கிடக்க தொழிலாளர் அமைச்சகம் நடவடிக்கை எடுப்பது போல, நாங்களும் அவர்களைச் சேர்ப்போம். இதேபோல், எம்.எஸ்.எம்.இ அமைச்சகத்துடன் இணைந்து நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் [எம்.எஸ்.எம்.இ] தொழிலாளர்களை சேர்க்க முயல்கிறோம். இ.எஸ்.ஐ. [ESI - ஊழியர் மாநில காப்பீடு] உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். அந்த தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதற்காக இ.எஸ்.ஐ. உடன் இணைந்து செயல்படுகிறோம்.

கவனிப்பின் தரத்தை நடைமுறைப்படுத்த, நிலையான சிகிச்சை பணிப்பாய்வு குறித்து நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அதை அளவிட ஏதாவது ஆய்வு நடந்ததா?

நாங்கள் தர பராமரிப்பு பற்றிய ஆய்வை மேற்கொள்ளவில்லை, ஆனால் பயனாளிகளின் கருத்து எங்களிடம் உள்ளது. சேவை பெற்ற அனைத்து பயனாளிகளையும் நாங்கள் அழைக்கிறோம். 80% க்கும் அதிகமானோர் சேவைகளில் திருப்தி அடைவதாகக் கூறினர். மிகச் சிறிய அளவில் சிலர் தான் சேவை திருப்திகரமாக இல்லை எனவும், இன்னும் சிலர் சேவைகளுக்கு பணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறினர். நாங்கள் அவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தருகிறோம்; புகார் அளித்து அதை மறுபரிசீலனை செய்ய மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

பி.எம். ஜே.ஏ.ஒய். ஒரு பெரிய திட்டமாக இருப்பதில் நன்மை இருப்பதால், அது மருந்துகளின் விலையையும் குறைத்துள்ளதா?

அதுபற்றி எனக்கு தெரியாது. எனினும் இந்தியாவில், மருந்து விலை மிகக்குறைவு தான்.

மருந்துகள் கைக்காசை கரைப்பதில் பெரும் பங்கைக் கொண்டுள்ளன. உதாரணமாக, வீட்டு செலவில் 70% உடல்நலத்திற்காக மருந்துகளுக்கே செலவாகிறது.

இப்போது, பயனாளிக்கு பதிலாக, நாங்கள் பணம் செலுத்துகிறோம். ஆனால் செலவுகள் குறைந்துவிட்டன என்பதை காட்ட ஆய்வு எதையும் நடத்தவில்லை. மாறாக திட்டம் விரிவடையும் போது, செலவு குறையும் என்று நம்புகிறோம். மருந்துகளின் விலை மட்டுமல்லாமல், உள்வைப்புகள் மற்றும் சாதனங்களின் விலையும் குறைய வேண்டும்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் அக்டோபர் 2019 அறிக்கை, தனியார் மருத்துவமனைகள் லாபம் ஈட்டவோ அல்லது தாக்குப்பிடிக்கும் வாய்ப்புக்கு உகந்த வகையிலோ கட்டணங்கள் சாத்தியமானதாக இல்லை எனவும், அவை சரிவை சந்திப்பதாகவும் கூறியுள்ளது.

நாங்கள் கட்டணத்தை திருத்தி இருக்கிறோம். பல்வேறு தொழில் அமைப்புகளிடம் இருந்து பெற்ற அனைத்து உள்ளீடுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டோம்.

கிராமப்புறங்களில் சுகாதார கவனிப்பு எவ்வாறு மேம்பட்டுள்ளது என்ற விவரம் உங்களிடம் உள்ளதா?

திட்டம் தொடங்கி ஒரு வருடமே ஆகிறது. எனவே பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. அந்த திசையை நோக்கி சில வளர்ச்சியை காண்கிறோம். பல மாவட்ட மருத்துவமனைகளுக்கு அதிக பணம் கிடைக்கிறது. அவர்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறார்கள், இடைவெளியைக் குறைக்கிறார்கள்.

பல தனியார் மருத்துவமனைகள் தங்கள் நடவடிக்கைகளை 2ம் மற்றும் 3ம் நிலை நகரங்களில் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளனர் என்பதையும் காண்கிறோம். இது மேலும் விரிவாக்கத்திற்கு உதவக்கூடும்.

திட்டத்திற்கான நிதி போதுமானதா? 2019-20 ஆம் ஆண்டில், இந்த திட்டத்திற்கு ரூ. 6,500 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், தேவையோ ரூ.10,000 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

திட்டத்தின் முன்னேற்றம் அவ்வளவு இல்லை என்பதால் - அவை போதுமானவை. நாங்கள் முழுத்தொகையையும் பயன்படுத்தவில்லை, எனவே இத்திட்டத்திற்கு பணம் ஒருபோதும் சிக்கலாக இருந்ததில்லை என்று நினைக்கிறேன்.

நீங்கள் எதிர்பார்க்கும் சவால்கள் என்ன?

ஏராளமான சவால்கள் உள்ளன: கடைசி மைல் கல்லை எவ்வாறு அடைவது, சேவைகளின் தரத்தை எப்படி உறுதிப்படுத்துவது, எந்த மோசடிகளும் நடைபெறாமல் இருப்பதை எவ்வாறு உறுதி செய்வது மற்றும் எந்த குறைபாடும் இல்லாமல் ஐடி அமைப்பு தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வது என உள்ளன.

இவை அனைத்துக்காகவும் நாங்கள் ஒவ்வொரு நாளும் வேலை செய்கிறோம். இணைப்பு காரணமாக, சேவைகள் சில இடங்களில் கிடைக்கவில்லை என்று எங்களுக்கு தகவல் கிடைக்கிறது. அதற்கு பதிலளிக்க வேண்டும். பொதுவாக, பல ஏழை மக்கள் தவறவிடப்படுகிறார்கள் என்ற கருத்தை நாங்கள் பெறுகிறோம். அவர்கள் எப்போதும் இதில் இருப்பார்கள்.

இத்திட்டம் மூன்றாம் நிலை பராமரிப்பை கவனிக்கிறது. ஆனால் இரண்டாம் நிலை மற்றும் முதன்மை பராமரிப்பு கிடைக்குமா? ஏனென்றால் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவது அங்கு தான். பெரும் செலவினம் மூன்றாம் நிலை பராமரிப்பிற்காகவே உள்ளது; ஆனால் இதில் இரண்டாம் நிலை மற்றும் ஆரம்ப நிலைக்கு சொந்த பணம் செலுத்தப்படுகிறது.

நாங்கள் மிகவும் வலுவான சுகாதார மற்றும் மருத்துவ மையங்களை அமைத்ததும், அவை முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்புகளை கவனித்துக் கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம். இலவச மருந்து மற்றும் நோய் கண்டறிதல்களை வழங்க அரசு அமைப்பு வலுவாக இருக்க வேண்டும். மூன்றாம் நிலை மற்றும் அதிக செலவினங்களுக்காக நம்மிடம் பி.எம்.ஜே.ஏ.ஒய். சேவைகள் உள்ளன.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் / சுகாதாரம் சரிபார்ப்பு இணையதள சிறப்பு நிருபர்).