டார்ஜிலிங்: பருவநிலை மாற்றம், உலகச் சந்தைகளில் மந்தநிலை, நேபாளத்தின் தேயிலை வகைகளின் போட்டி, உற்பத்திச் செலவுக்கும் அதன் விலைக்கும் இடையே உள்ள பொருத்தமின்மை ஆகியன, டார்ஜிலிங்கில் உள்ள தேயிலை தொழிலை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்று, தேயிலை தோட்டங்களை நேரடியாக கள ஆய்வு நடத்திய இந்தியா ஸ்பெண்ட் களநிலவர அறிக்கை கண்டறிந்துள்ளது.

இந்திய தேயிலைகளின் 'ஷாம்பெயின்' என்று உலகம் முழுவதும் அறியப்படும் டார்ஜிலிங் தேயிலை, தென்னிந்தியாவில் உள்ள நீலகிரி மலைகள் மற்றும் அஸ்ஸாமில் இருந்து வரும் தேயிலைகளுக்கு எதிராக தனித்து நிற்கிறது. இமயமலையில் சூரிய ஒளி, மழைப்பொழிவு, மூடுபனி மற்றும் மண்ணின் அமிலத்தன்மை ஆகியவற்றின் சரியான சமநிலையால் தூண்டப்பட்டு, கையால் பறிக்கப்பட்ட அதன் தனித்துவமான சுவை, டார்ஜிலிங் தேயிலை "ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகளாவிய நுண்ணறிவு நுகர்வோரின் ஆதரவையும் அங்கீகாரத்தையும்" வென்றுள்ளது என்று, இந்திய தேயிலை வாரியம் தனது இணையதளத்தில் கூறுகிறது. "அதன் பெயருக்கு தகுதியான டார்ஜிலிங் தேயிலையை உலகில் வேறு எங்கும் வளர்க்கவோ அல்லது தயாரிக்கவோ முடியாது"என்கிறது அது.

பிரகாசமான உலோக நிறத்துடன் கூடிய டார்ஜிலிங் தேயிலை, 2004-ம் ஆண்டில் புவிசார் அடையாள (GI - ஜிஐ) வர்த்தக முத்திரையைப் பெற்ற நாட்டின் முதல் தயாரிப்பு ஆகும்.

இந்த பாராட்டுக்கள் இருந்தபோதிலும், தேயிலையின் உற்பத்தி மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் அதன் தேவை வீழ்ச்சியடைந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது டார்ஜிலிங் தேயிலை தொழில் பற்றிய தொடரின் முதல் கட்டுரை. இந்த முதல் பகுதியில், பருவநிலை மாற்றம் மற்றும் பொருளாதாரக் கருத்தாய்வானது எப்படி தொழிலை பாதிக்கிறது என்பதை விவரிக்கிறது. இத்தொடரின் இரண்டாவது பகுதி தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் நிலை மற்றும் உரிமைகள் குறித்து கவனம் செலுத்தும்.

டார்ஜிலிங் தேநீர் எப்படி குடும்பத்தில் ஒன்றானது

கேமிலியா சினென்சிஸ் (Camillia sinensis) என்ற தாவரத்தின் இலைகள், டார்ஜிலிங் தேயிலை என அழைக்கப்படும் தேயிலையை உலகிற்கு உற்பத்தி செய்கின்றன. இந்த தாவரம் முதன்முதலில் 1841 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆர்தர் காம்ப்பெல் என்பவரால் டார்ஜிலிங்கிற்கு கொண்டு வரப்பட்டது. 1874 வாக்கில், டார்ஜிலிங் மலைகள், டோர்ஸ் மற்றும் டெராய் பகுதிகள் - இமயமலையின் அடிவாரங்கள் - நவீன கால டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி மற்றும் மேற்கு வங்கத்தில் அலிபுர்துவார் மாவட்டங்களில் 113 தேயிலைத் தோட்டங்கள் இருந்தன. 1914 ஆம் ஆண்டில் 8.16 மில்லியன் கிலோகிராம் பயிர் உற்பத்தியுடன் இந்த எண்ணிக்கை 156 ஆக உயர்ந்தது என்று எழுத்தாளர் பசந்த் பி லாமா தனது 2008 ஆம் ஆண்டு புத்தகமான 'தி ஸ்டோரி ஆஃப் டார்ஜிலிங்' இல் 1915 ஆம் ஆண்டு வங்காள அரசாங்க புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி எழுதினார். இன்று, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் கிலோகிராம் தேயிலை பயிரிடப்படுகிறது என்று இந்திய தேயிலை வாரியம் மதிப்பிட்டுள்ளது.

தேயிலை வர்த்தகத்தின் வளர்ந்து வரும் நிகழ்வு டார்ஜிலிங்கில், மக்கள்தொகை மாற்றத்தை ஏற்படுத்தியது, 1914 இல் மதிப்பிடப்பட்ட 40,000 தொழிலாளர்கள், மலைகள் மற்றும் டோர்ஸ் டெராய் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் அண்டை நாடான நேபாளத்திலிருந்தும் சோட்டா நாக்பூர் பீடபூமியிலிருந்தும் குடியேறியவர்கள்.

டார்ஜிலிங்கைச் சுற்றியுள்ள தொழில் இப்பகுதியின் முக்கிய வாழ்வாதாரங்களில் ஒன்றாக மாறியது.

"பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்துவதுடன், போக்குவரத்து நிறுவனங்கள், கிடங்குகள், ஹோட்டல்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் விவசாய உள்ளீடு உற்பத்தி அலகுகள் ஆகியவற்றில் ஏராளமான நபர்களுக்கு தேயிலை தொழில் மறைமுக வேலைவாய்ப்பை வழங்குகிறது" என்று மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை பிரதிமா சாம்லிங் ராய், ஜூன் 2019 இல் International Journal of Applied Science and Engineering ஜர்னலில் எழுதினார்.

காலநிலை மாற்ற நெருக்கடி

காலநிலை மாற்றம் டார்ஜிலிங் தேயிலையின் தரம் மற்றும் உற்பத்தியை பாதித்துள்ளது. டார்ஜிலிங் தேயிலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஆராய்ச்சியாளர்களின் 2013 ஆய்வின்படி, காலநிலை மாற்றம் "1993 மற்றும் 2002 உடன் ஒப்பிடும்போது முறையே 41.97% மற்றும் 30.90%" உற்பத்தியைக் குறைத்தது.

"வெவ்வேறு வேளாண்-சுற்றுச்சூழல் பகுதிகளில் விளையும் மானாவாரிப் பயிரான" தேயிலையின் உற்பத்தி, மொத்த ஆண்டு மழை மற்றும் அதன் விநியோகம், வெப்பநிலை மற்றும் சூரியக் கதிர்வீச்சு போன்ற சுற்றுச்சூழல் காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வு கூறியது.

கடந்த 1993 முதல் 2012 வரை, இப்பகுதியில் வெப்பநிலை 0.51 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது, ஆண்டு மழைப்பொழிவு 152.50 செ.மீ மற்றும் ஈரப்பதம் 16.07% குறைந்துள்ளது, இது "ஒட்டுமொத்த உற்பத்தி வீழ்ச்சிக்கு" வழிவகுத்தது.

ஒரு ஹெக்டேர் பரப்பளவில் வளரும் டார்ஜிலிங் தேயிலை செடிகளுக்கு தினசரி தேவையான 10 டன் தண்ணீரை வழங்க, மொத்த சராசரி மழை போதுமானதாக இருந்தாலும், மழைப்பொழிவு பெரும் பிரச்சனையாக உள்ளது.

டார்ஜிலிங்-இந்திய தேயிலை சங்கத்தின் (DITA) முதன்மை ஆலோசகர் சந்தீப் முகர்ஜி கூறுகையில், "நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது, பருவம் இப்போது வறட்சியுடன் தொடங்குகிறது" என்றார். இந்திய தேயிலை சங்கம் (ITA) இந்தியாவின் தேயிலை உற்பத்தியாளர்களின் பழமையான சங்கமாகும்.

இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (ITEA) தலைவர் அன்ஷுமன் கனோரியாவும் இதையே எதிரொலித்தார். "ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் வறட்சி நிலவுகிறது, இது முதல் பறிப்பை பாதிக்கிறது [பிப்ரவரி மற்றும் ஏப்ரல் நடுப்பகுதியில் அறுவடை செய்யப்படுகிறது, முதல் பறிப்பு தேநீர் இளமையாகவும் பச்சை நிறமாகவும் இருக்கும்]. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பெய்யும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி, மே மற்றும் ஜூன் மாதங்களில் பெருமழை பெய்யும், இது இரண்டாவது பறிப்பின் உச்ச தரமான காலகட்டமாகும் [மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் அறுவடை செய்யப்படும், இரண்டாவது பறிப்பு தேயிலை இலைகள் முழு உடலுடனும், முதல் பறிப்பை விட கருமையாகவும் இருக்கும்]. இது அதிக வருவாய் காலம் மற்றும் பாதகமான வானிலை டார்ஜிலிங் தேயிலையின் சிறந்த தரத்தை பாதிக்கிறது" என்றார்.


டோர்ஸ் மற்றும் தேராய் பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு தேயிலை தோட்டங்களில் விளைச்சலை பாதிக்கிறது. படம்: ஹேப்பி வேலி டீ எஸ்டேட்.

காலநிலை மாற்றத்தின் பாதகமான தாக்கங்களை தாமதமின்றி குறைக்க தேயிலை தோட்டங்களில் தழுவல் நடவடிக்கைகளை செயல்படுத்துவது முக்கியம், தேயிலை சாகுபடி போன்ற மரப்பயிர் முறையில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு கணிசமான காலம் எடுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

"காலநிலையை சமாளிக்கும் மரக்கன்றுகளை உருவாக்குவதற்கான சிக்கலைத் தீர்க்க தேயிலை ஆராய்ச்சி நிறுவனங்கள் இதைச் செய்து வருகின்றன" என்று, அரசின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைக் கோரும் மின்னஞ்சலுக்கு இந்திய தேயிலை வாரியத்தின் துணைத் தலைவர் சவுரவ் பஹாரி பதிலளித்தார்.

தேவை குறைகிறது

டார்ஜிலிங் தேயிலையின் தேவை மற்றும் உற்பத்தி சில காலமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் வீழ்ச்சியடைந்து வருகிறது, மேலும் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தபோது நிலைமை மோசமாகிவிட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்திய தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2021ல் டார்ஜிலிங் தேயிலை உற்பத்தி சுமார் 7 மில்லியன் கிலோவாக இருந்தது.

நடந்துகொண்டிருக்கும் ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் காரணமாக, முக்கிய ஐரோப்பிய வாங்குபவர்கள் டார்ஜிலிங் தேநீரை வாங்குவதை நிறுத்திவிட்டனர் அல்லது அதற்குக் குறைவான கட்டணம் செலுத்துகிறார்கள் என்று இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கனோரியா விளக்கினார்.

"ஐரோப்பாவில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக ஏற்றுமதி நிலைமை மோசமடைந்துள்ளது," என்று டார்ஜிலிங்-இந்திய தேயிலை சங்கத்தின் முகர்ஜி கூறினார், 2021 இல் 3.5 மில்லியனாக இருந்த டார்ஜிலிங் தேயிலை 2022 இல் (நவம்பர் வரை) 2.84 மில்லியன் கிலோகிராம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஐரோப்பாவைத் தவிர, ஜப்பானும் டார்ஜிலிங் தேயிலையின் முக்கிய சந்தையாகும். இருப்பினும், அமெரிக்க டாலருக்கு எதிராக யென் மதிப்பு சரிவதால், டார்ஜிலிங் தேயிலை விற்பனையாளர்கள் ஜப்பானியர்களிடமிருந்து தங்கள் தயாரிப்புகளுக்கு நல்ல விலையைப் பெறத் தவறிவிட்டனர் என்று கனோரியா விளக்கினார்.

இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவரான கனோரியா, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் உற்பத்திச் செலவு 30% அதிகரித்த போதிலும், 2021 இல் கடந்த நான்கு ஏல விற்பனைகளில் டார்ஜிலிங் தேயிலையின் சராசரி விலை, தேயிலை விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்கத் தவறிவிட்டது என்றார்.

கூர்க்காலாந்து இயக்கத்தின் விளைவாக இடம்பெயர்வு

கடந்த 2017 கூர்க்காலாந்து இயக்கம் காரணமாக 104 நாள் பணிநிறுத்தத்தின் போது வடக்கு வங்காள தேயிலைத்தோட்டங்களின் நிலைமை மோசமடைந்தது. மேற்கு வங்க அரசு மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வங்கமொழியைக் கட்டாயப் பாடமாக அறிவித்ததைத் தொடர்ந்து, டார்ஜிலிங் மலைகள் முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன. நேபாளி மொழி பேசும் மலைப்பகுதி மக்கள் மீது வங்கத்தின் கலாச்சாரத்தை திணிப்பதாக கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (GJM) குற்றம்சாட்டி, கூர்க்காலாந்து தனி மாநிலக் கோரிக்கையை மீண்டும் எழுப்பியது.

"தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டபோது மக்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், பல தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக மலைகளில் இருந்து இடம் பெயர்ந்தனர். அவர்களில் பெரும்பாலோர் தேயிலைத் தோட்டங்களுக்குத் திரும்பவில்லை" என்று வடக்கு வங்காளத்தில் உள்ள தேயிலைத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பாடுபடும் சமூக ஆர்வலர் சுமேந்திர தமாங், மலைகளில் இருந்து பெரிய அளவில் இடம்பெயர்ந்ததற்கு அரசியல் எழுச்சியைக் குற்றம் சாட்டினார். "மக்கள் மேற்கு வங்கம் அல்லது இந்தியாவின் பிற பகுதிகளுக்கு மட்டுமல்ல, கத்தார் மற்றும் ஓமன் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சென்றுள்ளனர். இதனால், தேயிலை தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது" என்றார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள பொருளாதார ஆய்வு மையத்தின் பிஎச்டி அறிஞர் தாவா ஷெர்பா கூறுகையில், "தேயிலை தொழிலாளர்கள் குடும்பத்தில் இருந்து குறைந்தபட்சம் ஒருவரையாவது அனுப்புவது கட்டாயமாகிவிட்டது. வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்படும் பணம் தேயிலைத் தோட்டங்களுக்குள் இருக்கும் குடும்பங்களைச் சிதைக்காமல் காக்கிறது" என்றார். [இந்த தொடரின் இரண்டாம் பகுதி தோட்டங்களில் உள்ள தேயிலை தொழிலாளர்களின் நிலைமைகளை விவரிக்கும்.]

இருப்பினும், இடம்பெயர்வு மற்றொரு பிரச்சனையை தீவிரப்படுத்தியுள்ளது: பெண்களை பாலியல் அடிமைகளாக்க முயற்சிக்கும் மனிதக் கடத்தல்காரர்கள் அல்லது பெருநகர நகரங்களில் தொழிலாளர்களாக வேலை செய்ய கட்டாயப்படுத்துகின்றனர்.

"பொதுவாக, மலைகளில் இருந்து புலம்பெயர்ந்த பெண்கள் கடத்தல்காரர்களின் தவறான கைகளில் விழுந்தால் பாலியல் தொழிலாளிகளாக முடிவடைகிறார்கள், அதே நேரத்தில் டோர்ஸ் மற்றும் டெராய் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் கட்டுமானத்தளங்களில் அல்லது பணிப்பெண்களாக குறைந்த ஊதியம் பெறும் தீவிர உழைப்பு வேலைகளில் வேலை செய்ய ஈர்க்கப்படுகிறார்கள்" என்றார். வடக்கு வங்காளத்தில் ஆள் கடத்தலை எதிர்த்துப் போராடி, மீட்கப்பட்டவர்களுக்கு உதவும் மார்க் என்ஜிஓவின் நிரய் ஜான் செத்ரி கூறினார். "அவர்களில் பெரும்பாலோர் சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இல்லாமல் சிக்கிக் கொள்கிறார்கள்" என்றார்.

உதாரணமாக, வட வங்காளத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் இருந்து இளம் பெண்கள் கடத்தப்பட்டு, சட்டவிரோத வாடகைத் தாய்க்கு கட்டாயப்படுத்தப்பட்டு, அண்டை நாடுகளான பங்களாதேஷ், நேபாளம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கு எவ்வாறு கடத்தப்பட்டனர் என்பதை தி பிரிண்ட் (The Print) ஊடக அறிக்கை காட்டுகிறது. சிலிகுரி காவல்துறை ஆணையரகம், கடந்த 2019 மற்றும் 2021 ம் ஆண்டுக்கு இடையில் 22 ஆட்கடத்தல் வழக்குகளை பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் 2019-ல் ஒரு மற்றும் அலிபுர்துவாரில் 2019, 2020 மற்றும் 2021 இல் தலா மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.


இது, ஹேப்பி வேலி டீ எஸ்டேட்டுக்கு செல்லும் ஒரு சாலை. சிறந்த ஊதியம் பெறும் வேலைகள் மற்றும் டார்ஜிலிங்கிற்கு வெளியே சிறந்த வாழ்க்கைக்கான வாய்ப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், பெரும்பாலும் மனிதக்கடத்தல் அல்லது சுரண்டலின் வலையில் சிக்கிக் கொள்கின்றனர்.

ஆனால் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் இந்த எண்கள் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளன என்று கூறுகின்றன. "ஒரு குடும்பம் தங்கள் வீட்டில் இருந்து காணாமல் போன ஒரு உறுப்பினரைப் புகாரளிக்கச் செல்லும்போது, முதலில் காவல்துறையில் புகார் கொடுக்கத் தயங்குகிறது" என்று சேத்ரி கூறினார். காணாமல் போன புகாரைப் பதிவுசெய்து, அந்த நபரைக் கண்டுபிடித்தாலும், குடும்பம் மற்றும் பாலியல் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்கள், சமூக இழிவு மற்றும் பொது அவமானம் காரணமாக போலீஸ் விசாரணையைத் தொடர விரும்பவில்லை என்று சேத்ரி மேலும் கூறினார்.

இந்த கட்டுரையாளர், சிலிகுரி காவல் ஆணையர் தலைமையகத்தின் இன்ஸ்பெக்டர் பிஸ்வஜித் மஜூம்டரிடம், அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட தேயிலை தோட்டங்களில் மனித கடத்தல் சம்பவங்கள் பற்றி சுட்டிக் காட்டினார்.

சிலிகுரி காவல் ஆணையரகத்தின் காணாமல் போனோர் பணியகத்தின் இன்ஸ்பெக்டர் மஜூம்தர் கூறுகையில், "காணாமல் போன புகாரைப் பெற்றவுடன், எங்கள் சிஐடி போர்ட்டல் மூலம் 'சம்பந்தப்பட்ட அனைத்து செய்தியும்' எழுப்பப்படும். பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், வழக்குப் பதிவு செய்வதற்கு முன் இரண்டு அல்லது மூன்று நாட்கள் காத்திருக்குமாறு குடும்பத்தினரைக் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.

இன்ஸ்பெக்டர் மஜூம்தர், மனித கடத்தல் வழக்குகளில் விசாரணை செய்வதற்கான போலீஸ் நெறிமுறை பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார், ஏனெனில் அவர் "அதைப் பற்றி பேச சரியான அதிகாரம் இல்லை" என்றார். சூழ்நிலையின் உணர்திறனைக் கருத்தில் கொண்டு குடும்பங்களுக்கு அனைத்து வகையான உதவிகளையும் காவல்துறை வழங்குவதாக அவர் கூறினார்.

கடத்தல் வழக்குகள் மற்றும் சேத்ரி கூறிய பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு, காவல் ஆணையரகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். பதில் கிடைத்ததும் இக்கட்டுரையை புதுப்பிப்போம்.

நேபாளத்தின் மலிவான தேயிலையின் போட்டி

இதற்கிடையில், வெளிப்புற இடம்பெயர்வு காரணமாக பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்தது மற்றும் கூர்க்காலாந்து பணிநிறுத்தம் உற்பத்தியை பாதித்தது, நேபாளத்தைச் சேர்ந்த டார்ஜிலிங் தேயிலையின் சந்தைகளில் மலிவான மாற்றாகத் தோன்றினார்.

"நேபாளத்தில் இருந்து அதிக அளவு தரம் குறைந்த தேயிலை டார்ஜிலிங் டீ என்று தவறாக முத்திரை குத்தப்பட்டதால், உலக சந்தைகளில் உண்மையான டார்ஜிலிங் தேயிலையின் பிரீமியம் விலை குறைகிறது," வர்த்தகம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 2022 அறிக்கையான 'இந்திய தேயிலைத் தொழிலை குறிப்பாக டார்ஜிலிங் பிராந்தியத்தில் பாதிக்கும் சிக்கல்கள்' கூறுகிறது.


நவம்பர் 17, 2022 அன்று டார்ஜிலிங்கின் துக்வார் தேயிலைத் தோட்டத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவர் தேயிலை இலைகளைப் பறிக்கிறார். டார்ஜிலிங் தேயிலைத் தொழிலின் ஆபத்தான நிலை அதன் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேபாளத்தில் இருந்து தேயிலையின் விலை குறைந்ததற்கு காரணம் "அவர்களின் குறைந்த உற்பத்தி செலவு மற்றும் குறைந்த உற்பத்தி செயல்முறை" என்று அறிக்கை கூறுகிறது. "தேயிலை தொழில் மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது மற்றும் டார்ஜிலிங் தேயிலையின் இரட்டிப்பு அதிகரிப்பு தேயிலை உற்பத்தி மற்றும் பிராந்தியத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது" என்கிறது.

தேயிலை வாரியம், வர்த்தக அமைச்சகத்துடன் இணைந்து, இறக்குமதி செய்யப்பட்ட தேயிலையை விநியோகிப்பதில் இருந்து விநியோகஸ்தர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட தேயிலையை ஏற்றுமதி செய்வதிலிருந்தும் தடை செய்யப்பட்டுள்ளதாக திரு பஹாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட தேயிலையுடன் உண்மையான டார்ஜிலிங் தேநீரைக் கலக்க வேண்டாம் என்று பதிவுசெய்யப்பட்ட வாங்குபவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2020 மார்ச் முதல் கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட முதல் ஊரடங்கு, அதன் பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வரும் பல தேயிலை விவசாயிகளுக்கு "சவப்பெட்டியில் இறுதி ஆணி" என்று சமூக ஆர்வலர் தமாங் கூறினார். சில தேயிலை தோட்ட உரிமையாளர்கள், த டார்ஜிலிங் ஆர்கானிக் டீ எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் (DOTEPL) க்கு சொந்தமான 10 தோட்டங்களில் ஆறு தோட்டங்களை விற்றனர்.

தேயிலை சுற்றுலா

டார்ஜிலிங் தேயிலை தொழிலை மீட்பதற்கும், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், மேற்கு வங்க அரசு 'தேயிலை சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய வணிகக் கொள்கை, 2019' ஐ அறிவித்தது. இது மாநிலத்தின் தேயிலை தொழில், டார்ஜிலிங்கில் ஒரு பெரிய முதலாளி மற்றும் டார்ஜிலிங்கின் முக்கிய வருவாய் ஈட்டும் துறைகளில் ஒன்றான சுற்றுலா ஆகியவற்றுக்கு இடையே ஒரு விரிவான இணைப்பிற்கு அனுமதித்தது.

தேயிலை தோட்டங்கள் தங்கள் நிலங்களில் 15% அல்லது அதிகபட்சமாக 150 ஏக்கர் நிலங்களை தேயிலை சுற்றுலா மற்றும் "நலம் தரும் மையங்கள், கல்வி நிறுவனங்கள், கலாச்சாரம் / பொழுதுபோக்கு மற்றும் கண்காட்சி மையங்கள், மலர் வளர்ப்பு, மருத்துவ தாவரங்கள், உணவு போன்ற பிற வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள கொள்கை அனுமதித்தது. செயலாக்க அலகுகள், பேக்கேஜிங் அலகுகள் போன்றவை".

புதிய தேயிலை சுற்றுலா விதிகளின் பிரகடனத்திற்குப் பிறகு, சொகுசு ஹோட்டல் சங்கிலியான தாஜ், டார்ஜிலிங்கின் மலைகளில் உள்ள புகழ்பெற்ற மகைபரி தேயிலை தோட்டத்திற்குள் சியா குதிர் என்ற ரிசார்ட் மற்றும் ஸ்பாவை அமைத்தது. டார்ஜிலிங் தேயிலைத் தோட்டத்தில் தாஜ் ஹோட்டலின் வருகை, காஞ்சன் வியூ டீ எஸ்டேட் போன்ற பிற தோட்டங்களில் இதேபோன்ற உயர்தர சுற்றுலாத் திட்டங்களுக்கு வெள்ளக் கதவுகளைத் திறந்தது.

காஞ்சன் வியூ டீ எஸ்டேட், 2002 வரை ருங்கீத் தேயிலைத் தோட்டம் என்று அழைக்கப்பட்டது, புதிய தேயிலை சுற்றுலாக் கொள்கைக்குப் பிறகு ரூ. 200 கோடிக்கும் அதிகமான சுற்றுலாத் திட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த முடிவு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பிடிக்கவில்லை. தேயிலைத் தோட்ட நிர்வாகம் "நிதிப் பற்றாக்குறையால்" தங்களுடைய நிலுவைத் தொகையையும் மீதமுள்ள சம்பளத்தையும் செலுத்தத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய தொழிலாளர்கள், இந்தியா ஸ்பெண்டிடம் [காஞ்சன் வியூவின்] உரிமையாளர்கள் ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளுக்கான நிதியை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்று தாங்கள் ஆச்சரியப்பட்டதாகத் தெரிவித்தனர்.

"எங்கள் சம்பளமும் போனஸும் நிலுவையில் இருந்தன. நிதி இல்லை என்று நிர்வாகம் கூறியது. ஆனால் அவர்களிடம் ஐந்து நட்சத்திர விடுதிகள் கட்ட பணம் இருந்தது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று பெயர் வெளியிட விரும்பாத காஞ்சன் வியூ டீ எஸ்டேட் தொழிலாளி கூறினார்.


காஞ்சன் வியூ தேயிலை தோட்டத்திற்குள் உத்தேசிக்கப்பட்ட உல்லாச விடுதியின் கட்டுமானம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 24, 2022 அன்று எடுக்கப்பட்ட படம்.

மேலும், தேயிலை தோட்ட நிர்வாகம், தொழிலாளர்களின் பஸ்தி அல்லது குடிசைப்பகுதி உள்ள இடத்தில், அவர்களது வீடுகளை இடித்து, ஓய்வு விடுதி கட்ட திட்டமிட்டுள்ளதாக, அவர்கள் குற்றம்சாட்டினர். 2019 கொள்கையின்படி, சுற்றுலா நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் வகையில், காஞ்சன் வியூ அதிகாரிகள் தேயிலை செடிகளை வேரோடு பிடுங்குவதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த புதிய கொள்கை தேயிலை தோட்டங்களுக்கும் அதன் தொழிலாளர்களுக்கும் பயனளிக்கும் என்பதை மதிப்பிடுவது இன்னும் முன்கூட்டியே உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

புதிய கொள்கை மற்றும் வட வங்காளத்தில் தேயிலை சுற்றுலாவுக்கு இது எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து அவர்களின் கருத்துக்களைப் பெற, நாங்கள் சுற்றுலாத் துறை மற்றும் மேற்கு வங்க சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை அழைப்பு மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டோம். அவர்கள் பதிலளிக்கும்போது இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும்.

தேயிலைத் தோட்டங்களில் இந்தப் பிரச்சனைகள் எதுவும் ஒரே இரவில் தோன்றவில்லை; பல தசாப்தங்களாக உரிமையாளர்களின் அலட்சியம், தொழிலாளர்களின் கல்வியறிவின்மை மற்றும் உள்ளூர் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் சந்தர்ப்பவாத அரசியலின் விளைவுகள் இவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

டார்ஜிலிங் தேயிலைத் தொழிலுக்கான இந்த சவால்கள், தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் அவர்களின் வாழ்க்கை நிலைமைகள் மேம்படவில்லை. இது, தொழிலாளர் சட்டங்களில் உள்ள மரபுச் சிக்கல்கள் மற்றும் அரசாங்க ஆதரவின்மை ஆகியவற்றுடன் இணைந்து, அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்திக்கு வழிவகுத்தது, இது தொழில்துறைக்கு எதிர்மறையான சுழற்சியை பரப்புகிறது. எங்கள் தொடரின் இரண்டாம் பகுதி டார்ஜிலிங்கில் உள்ள தோட்டங்களில் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய பிரச்சினைகளை ஆராய்கிறது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.