இந்தியா முன்னேறும் நிலையில், அதிக எண்ணிக்கையில் பலியாகும் சிறுத்தைகள்
பெங்களூரு: நடப்பு 2019ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 218 சிறுத்தைகளை இழந்திருக்கிறது; இது, இதுவரை இல்லாத அதிகபட்சமாக கடந்தாண்டு இறந்த 500 சிறுத்தைகள் என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 40% அதிகம் என, 2009இல் இருந்து பதிவுகள் செய்து வரும் இலாப நோக்கற்ற அமைப்பான வன விலங்கு பாதுகாப்பு சங்கம் (Wildlife Protection Society of India - WPSI) தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் தினமும் ஒரு சிறுத்தை - கிணறுகளிள் விழுந்தோ, தாக்கி அல்லது சுட்டுக் கொல்லப்பட்டோ, ரயில் மற்றும் சாலை விபத்துகளிலோ - 2018இல் இறந்துள்ளதாக, வன விலங்கு பாதுகாப்பு சங்க தரவுகள் ‘கூறுகின்றன; நம்பகமான அரசு தரவு இல்லாத நிலையில், கிடைக்கும் இதுபோன்ற முதன்மை ஆதாரங்களில் சிறுத்தை இறப்புக்கள் குறைத்து மதிப்பிடப்படலாம்.
இந்தியாவில், பெரிய பூனை என்று கூறப்படும் சிறுத்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகபட்ச அளவாக உயர்த்து வருகிறது. புலிகளை விடவும் சிறுத்தைகள் விரைவில் அழிந்து போகும் அபாயம் அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கவலைப்படுகின்றனர்.
நடப்பு 2019 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், 16% அல்லது 35 சிறுத்தைகளின் இறப்பு ரயில் மற்றும் சாலைகள் காரணமாக இருந்துள்ளன. சிறுத்தை வாழ்விடங்களில் உள்கட்டமைப்பு திட்டங்கள் அனுமதிக்கப்பட்ட பிறகே, ரயில் அல்லது வாகனங்களில் சிறுத்தை இறப்பு என்பது சீராக உயர்ந்தது: 2014 இல் 41, 2015 இல் 51, 2016 ல் 51, 2017 ல் 63 மற்றும் 2018 இல் 80 சிறுத்தைகள் இறந்துள்ளன. நாம் பின்னர் விளக்கவுள்ள மற்றொரு உதாரணம், சிறுத்தைகள் இறப்பிற்கும் இந்தியர்களின் மின் கட்டமைப்புக்கும் உள்ள தொடர்பாகும்.
Source: Wildlife Protection Society of India, 2019
Note: Data for 2019 are as of May 1
"பாதிக்கப்படக்கூடியது" என, சர்வதேச இயற்கை பாதுகாப்புக்கான ஒன்றியம் நிர்வகித்து வரும் ‘ரெட் லிஸ்ட்’ பட்டியலில், பாந்தெரா பர்டஸ் (சிறுத்தை அறிவியல் பெயர்) இந்திய சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது மற்றும் வன விலங்கு பாதுகாப்பு சட்டம் - 1972 இன் கீழ் இதற்கு மிக அதிகமான பாதுகாப்பு தேவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பூனை எனப்படும் சிறுத்தைகள், வனத்தின் அடிப்படை உயிரினங்கள், காடுகள் மற்றும் நீர் ஆதாரங்கள் ஆகியவற்றின் நல்வாழ்வைக் குறிக்கும் ஒரு வளிமண்டலம் மட்டுமல்ல; ஆனால் நாட்டின் பொருளாதாரமும் ஆகும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
“சிறுத்தைகள் இருப்பது வன ஆரோக்கியத்தின் குறியீடு” என்று, ஆலோசனை அமைப்பான வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை (WCT) தலைவர் அனீஷ் அந்தேரியா, பி.எச்.டி. தெரிவித்தார். “வனங்கள் அதன் தரத்தை இழந்து வருகின்றன; இதனால் உணவுக்காக அவை (சிறுத்தைகள்) வெளியே வருகின்றன. இது மனித - சிறுத்தை மோதல்களுக்கு வழிவகுக்கிறது. வனம் ஆரோக்கியமாக உள்ள இடங்களில் அவற்றுக்கு குரங்குகள், மான்கள் இரையாகின்றன; தங்களது எண்ணிக்கையை ஒழுங்குபடுத்திக் கொள்கின்றன” என்றார் அவர்.
உள்கட்டமைப்பு திட்டங்கள் ஒரு வளரும் நாட்டிற்கு முக்கியம், ஆனால் சிறுத்தைகள், வனங்களை பாதுகாக்க, அதன் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துதலும் தேவைப்படுகிறது. ஆனால், நவீனத்துவம் கிராமப்புற பகுதிகளை அடைய, மனித உள்கட்டமைப்புகள், வனப்பகுதிகளில் திறக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம், வன விலங்குகளில் பாதுகாப்பில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
வனவிலங்குகளுக்கான தேசிய நல வாரியம் இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 519 திட்டங்களுக்கு அனுமதி தந்துள்ளது - வணிக சுரண்டல் மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் சட்டத்தால் தடை செய்யப்பட்டு கண்டிப்பாக கட்டுப்படுத்தப்படுகின்றன - கடந்த 4 ஆண்டு தேசிய ஜனநாயகக்கூட்டணி (தே.ஜ.கூ.) ஆட்சியில் 'சுற்றுச்சூழல் உணர்வு மண்டலங்கள்' பகுதியில், ஜூன் 2014 மற்றும் மே 2018 இடையே இவ்வாறு அனுமதி தரப்பட்டதாக, செப்டம்பர் 2018இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. அத்தகைய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மிகவிரைவாக வழங்கப்படுவது, இந்தியாவின் கடைசி காட்டுப் பகுதிகளுக்கு பெறும் அச்சுறுத்தலாகிறது; நாட்டின் நீர் வளங்கள் மறைந்து புவி வெப்பமடைதல்களை துரிதப்படுத்துகிறது.
பாதுகாப்பான பகுதிகள் முக்கிய சுற்றுச்சூழல் சேவைகளை வழங்குகின்றன: அவை மதிப்புமிக்க பல்லுயிரிகளின் கடைசி களஞ்சியமாக இருக்கின்றன, நீர்ப்பாசனங்களாக சேவை செய்கின்றன, கரியமில வாயு பிரிக்கப்படுவதன் மூலம், பருவநிலை மாற்ற பாதிப்புகளை குறைக்க உதவுகின்றன.
ஒவ்வொரு உள்கட்டமைப்பு திட்டமும் சிறுத்தைகள், மற்ற வன விலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்கின்றன.
"தற்போது நாடு முழுவதும் தினமும் 21 கி.மீ. தொலைவிற்கு சாலைகள் போடப்படுகின்றன; இது, விரைவில் 45 கி.மீ. என அதிகரிக்கப்படும். அத்துடன், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அல்லது சுற்றி இந்த சாலைகள் பலவும் அமைக்கப்படும்," என்று, அந்தேரியா கூறினார்.
மற்றொரு உதாரணம்: 83.3 கோடி இந்தியர்கள் வாழும் கிராமப்புற பகுதிகளில் மின்சாரத்தை கொண்டு வருவதற்கான இந்தியாவின் இயக்கம். 2014 இல் இந்திய குடும்பங்களின் 70% பேரிடமே மின்சார இணைப்பு இருந்தது, இது 2019இல் கிட்டத்தட்ட 100% என எட்டப்பட்டதாக, அரசு தரவுகள் கூறுகின்றன.
காவு வாங்கும் மின்சாரம்
மின்சாரம் பரவலாக நாடு முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைவது அதிகரித்த நிலையில், மின்சாரத்தால் இறக்கும் சிறுத்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மின்சாரம் தாக்கி இறந்த சிறுத்தைகளின் விகிதம், 2017ஆம் ஆண்டில் 0.9%; 2018 இல் 1.2% என்றிருந்தது, 2019 முதல் நான்கு மாதங்களில் 2.3% என்று அதிகரித்துள்ளது என, டபிள்யு.பி.எஸ்.சி. தரவுகள் கூறும் நிலையில், இது பழமையான மதிப்பீடுகளாக இருக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
விளை நிலங்களை வன விலங்குகள் நாசம் செய்யாமல் இருக்க பலரும் மின் வேலி அமைப்பதால், அதில் சிக்கி விலங்குகள் உயிரிழப்பு அதிகரிக்க காரணமாகிறது. "இந்த விஷயங்கள் பத்தில் ஒரு பங்கு கூட வெளிவரவில்லை," என்று கூறுகிறார் அந்தேரியா. “பாதுகாக்கப்பட்ட விலங்காக சிறுத்தை இருப்பதால் இதுபோன்ற சம்பவங்களை சொல்ல மக்கள் தயங்குகின்றனர்” என்றார் அவர். சிங்கம், புலியைவிட சிறுத்தையின் உடல் சிறியது என்பதால் எளிதில் அகற்றிவிடுகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.
மற்ற விலங்குகளும் கூட இதேபோல் கொல்லப்பட்டுள்ளன.
உதாரணமாக, ராஜஸ்தான் பாலைவன தேசிய பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய மின்சார கம்பிகள் செல்லும் பாதையால் ஒரு சக்தி மிக்க பறவையினம், ஏறத்தாழ 90% அழிவுக்கு காரணமாகி இருக்கிறது என, ஜனவரி 2018இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.
மின் வழித்தடங்கள், ரயில்வே பாதைகள் அல்லது சாலைகளால் வனப்பகுதிகள் பிரிக்கப்பட்டு வலுவிழப்பதால், உணவு தேடி சிறுத்தைகள் மனித வசிப்பிட பகுதிகளுடன் நெருக்கமாகின்றன.
மனித - சிறுத்தை மோதல்களால் 2019 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 18 சிறுத்தைப்புலிகள் (அனைத்து சிறுத்தை மரணங்களில் 8.4%) இறந்துள்ளன; இது 2014 இல் 27 (8.13%); 2015 ஆம் ஆண்டில் 33 (8.27%); 2016 இல் 31 (7.04%); 2017இல் 28 (6.49%) மற்றும் 2018 ஆம் ஆண்டில் 35 (7%) என்றிருந்தது.
உலகின் மிக அதிகபட்சமாக இந்தியாவில் கால்நடை வளர்ப்பு அடர்த்தி அதிகமாக உள்ளது, காடுகளில் உள்ள சிறுத்தைகள் ஒப்பீட்டளவில் குடியிருப்புகளில் இரை தேடுவது எளிதாகிறது என, வனஉயிர் பாதுகாப்பு கழகத்தின் (WCS) சூழலியல் நிபுணர் வித்யா அத்ரேயா கூறினார்.
மோதலை தடுத்தல்
சிறுத்தைகளை பாதுகாப்பதில் முக்கியமானது மனித- சிறுத்தை மோதலைத் தடுப்பதாகும் என்று அத்ரேயா கூறினார். அதாவது, சிறந்த முகாமைத்துவம் என்பதாகும்: உள்கட்டமைப்பு திட்டம் நிறைவேற்றும் போது, சிறுத்தைகள் தாக்குதல்களுக்கான இழப்பீடு மற்றும் வன வாழ்வுக்கான தடுப்பு நடவடிக்கைகளை வழங்குதல் ஆகும்.
"தங்களது வாழ்வாதாரமாக உள்ள கால்நடைகளை சிறுத்தை தாக்கும்போது மக்கள் கோபமடைகிறார்கள்; அதனால் அவர்களுக்கு உரிய இழப்பீடு தந்தாக வேண்டும்” என்று ஆத்ரேயா தெரிவித்தார். இந்திய சட்டங்கள் அத்தகைய இழப்பீடு தர அனுமதிக்கிறது. ஆனால் "இது மிகவும் நியாயமாக இருக்க வேண்டும்; வெறும் மற்றும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
சிங்கம் மற்றும் புலிகளை விட சிறியதாக சிறுத்தைகள் இருப்பதால், நாம் ஏற்கனவே சொன்னவாறு அவை மனிதர் பகுதியிலேயே நடமாடுகின்றன. இதனால் சிறுத்தைகள் கிராமம், நகரம், 47 சிறுத்தைகள் உள்ள தேசிய பூங்கா அமைந்துள்ள மும்பை போன்ற இடங்களிலும் அவை திரிய தொடங்கிவிட்டன. வீடுகள், பள்ளிகள், வீடுகள் நிரம்பிய காலனிகள், அரசு அலுவலங்கள், அவ்வளவு ஏன் பேருந்துகளுக்கு கீழ் கூட சிறுத்தைகள் காணப்பட்டுள்ளன.
மோதலைத் தடுக்கும் மற்றொரு வழி சிறுத்தை வசிப்பிடத்திற்கு அருகே குப்பைகளை நிர்வகிக்க வேண்டும் என்று, டபிள்யு.சி.டி.யின் அந்தேரியா தெரிவிக்கிறார். குப்பை கழிவுகளை உண்ண வரும் நாய், பன்றிகள் மற்றும் விலங்குகள் சிறுத்தைகளுக்கு நல்ல உணவாகும். தொந்தரவு இல்லாத இயற்கை சூழலைவிட இப்பகுதியில் அவற்றின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்கிறார் அவர்.
உள்கட்டமைப்பு திட்டங்களை திட்டமிடும் போது வனத்துறையின் கணக்குகளை அரசு, ஏதோ "அரிதாகவே கருதுகின்றன" என்ற அந்தேரியா, மகாராஷ்டிராவில் உள்ள "சில மாற்றங்களை" சுட்டிக் காட்டினார்.
மகாராஷ்டிராவில், சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள தடோபா புலிகள் சரணாலயத்தை சுற்றி குறைந்தது ஏழு உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை அவர் மேற்கோள் காட்டினார்; தடுப்பு நடவடிக்கைகள் அதாவது விலங்குகள் குறுக்கிடும் பகுதிகளில் எச்சரிக்கை செய்தல், வாகனங்களில் சத்தம், வெளிச்சத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க, பாலங்களில் ஒலி-ஒளி தடுப்பான்கள் அமைத்தல் போன்ற பரிந்துரைக்கும் வகையில் மாநில வனத்துறையுடன் இணைந்து டபிள்யூ.டி.சி.பணி மேற்கொள்ளும்.
மும்பை சஞ்சய் காந்தி தேசிய பூங்காக்கும், துங்கரேஷ்வர் வனவிலங்கு சரணாலயத்திற்கும் இடையில் உள்ள அனைத்து சாலைத் திட்டங்களும் நகரத்திற்கு வெளியே உள்ள நிலையில், அவை ஒன்றாக கருதப்பட வேண்டும்; வனவிலங்கு தடையற்ற பகுதியாக கருதி, பணிகளுக்கான அனுமதிக்குமாறு மாநிலக்குழு கேட்டுக் கொண்டது. பெஞ்ச் புலிகள் சரணாலயம் பகுதியில்இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 தரைவழிப்பாலங்கள் நிர்மாணித்தது, அவர் சுட்டிக்காட்டிய மற்றொரு உதாரணம் ஆகும்.
வன உயிரினங்கள் வாழும் பகுதியில் மின்சார கம்பி வழித்தடங்கள் பூமிக்கடியில் புதைத்தபடி கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.
இன்னும், நாடு முழுவதும் முழு அளவிலான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இதுபோன்ற மிகப்பெரிய கொலைகளுக்கு எவ்விதமான தீர்வுகளும் இல்லை.
வேட்டையாடுதல் மற்றும் தரவு இன்மை
வேட்டையாடப்படுவதே, சிறுத்தைகளின் இறப்புக்கு முக்கிய காரணம்; 2019 ஜனவரி மற்றும் ஏப்ரல் இடையே 26% (57 சிறுத்தை) வேட்டையால் கொல்லப்பட்டுள்ளன. 2018 இல், 169 சிறுத்தைப்புலிகளை வேட்டைக்காரர்கள் கொன்றுள்ளனர். அதிகபட்சமாக, 2011இல் 169 சிறுத்தைகள் கொல்லப்பட்டுள்ளது என டபிள்யு.பி.எஸ்.ஐ. தரவுகள் தெரிவிக்கின்றன.
சிறுத்தைகளில் உடல் பாகங்களுக்கு சர்வதேச சந்தையில் உள்ள அதிக முக்கியத்துவமே, அது வேட்டையாடப்படுவதற்கு வழி வகுக்கிறது என, டபிள்யு.பி.எஸ்.ஐ. திட்ட மேலாளர் டிடோ ஜோசப் கூறினார். "சீனா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதன் தோல், நகங்கள் மற்றும் எலும்புகள் ஆகியவற்றில் பெரும் தேவை உள்ளது" என்றார் அவர். "உள்ளூரில் அதன் பற்கள் மற்றும் நகத்திற்கு தேவை இருக்கிறது. இது சூனியம் செய்வதற்கு என்ற பெயரில் பயன்படுத்தப்படுகின்றன" என்று அவர் கூறினார்.
சிறுத்தைகளின் இறப்புகளை அதிகார தரவுகள் சரியாக பிரதிபலிக்கவில்லை. 2018 டிசம்பரில், அப்போதைய மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா, அரசு அமலாக்க நிறுவனங்களின் தரவை மேற்கோளிட்டு நாடாளுமன்றத்தில் அளித்த தகவலில் 2018 மற்றும் அக்டோபர் 2018 க்கு இடையில் 260 சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த தரவு பட்டியலின்படி, 2015இல் வேட்டையாடப்பட்ட சிறுத்தைகளின் எண்ணிக்கை 64; 2016இல் 83, 2017இல் 47 மற்றும் 2018 அக்டோபர் வரை 66 என்று கூறுகிறது. ஆனால், டபிள்யூ.பி.எஸ்.ஐ. தரவுகளோ 2015இல் 127 சிறுத்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 2016 இல் 154 மற்றும் 2017 இல் 159 என்று கூறுகிறது.
"சிறுத்தை உட்பட வனவிலங்குகளை கையாளுதல் மற்றும் அவற்றின் பாதுகாப்பு முழுவதும் சம்மந்தப்பட்ட மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் பொறுப்பு ஆகும்" என்று நாடாளுமன்றத்தில் தனது அறிக்கையில் சர்மா தெரிவித்தார்.
"இன்று நாம் புலிகளை விட அதிக எண்ணிக்கையில் சிறுத்தைகளை இழந்து கொண்டிருக்கிறோம்," என்று, டபிள்யு.சி.டி. அந்தேரியா கூறுகிறார். "கடந்த நான்கு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது நாம், ஒவ்வொரு நான்கு நாட்களில் நாம் ஐந்து சிறுத்தைகளை இழந்து வருகிறோம். இன்னும் கூட இது குறித்த அதிகாரபூர்வ தேசிய தரவுகள் நம்மிடம் இல்லை. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் உத்தரகண்ட் போன்ற ஒருசில மாநிலங்களில் இதுகுறித்த தரவுகள் இருக்கலாம், ஆனால் அனைத்து மாநிலங்களிடமும் இல்லை" என்றார்.
சிறுத்தை இறப்புகளில் சில கூறப்படுவதில்லை; ஏனென்றால் வனத்துறை அதிகாரிகளும், சிறுத்தைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பாளர்களே என்பதால், அவ்வாறு செய்ய வேண்டும்.
"சமீப ஆண்டுகளில் நாம் கவனிக்கிறோம், பெரும்பாலான சிறுத்தை இறப்புக்கள் இயற்கை அல்லது பிராந்திய இறப்புக்கள் எனக் கூறப்படுகின்றன, மேலும் வேட்டையாடப்பட்டு சில சிறுத்தைகளே இறந்ததாக தெரிவிக்கின்றனர்," என்று, தன்னாட்சி கொண்ட வனவிலங்குகள் நல அமைப்பான கிளா (CLaW) நிறுவன உறுப்பினர் சரோஷ் லோதி தெரிவித்தார். "விலங்குகளை பாதுகாப்பதில் தோல்வி (வன அதிகாரிகள்) அறியப்பட்டால், அது அவர்களின் நற்பெயரை கெடுத்துவிடும்; எனவே, அவர்கள் இதுபோன்ற சம்பவங்களை மூடி மறைத்துவிடக்கூடும் " என்றார்.
புலிகளை விட சிறுத்தைகள் "இன்றும் அதிக ஆபத்தில் உள்ளன" என்ற கருத்தை லோதி ஒப்புக் கொள்கிறார். "அவற்றை பாதுகாக்க ஒரு சிறுத்தை குறித்த திட்டம் வேண்டும்," என்ற அவர், மத்திய அரசின் 46 ஆண்டுகால ‘சிறுத்தை திட்டம்’ ஒன்றையும் சுட்டிக்காட்டுகிறார். சிறுத்தைகளை பாதுகாக்க, 2,226 காடுகள் இருக்க வேண்டுமென்ற தேசிய புலி பாதுகாப்பு ஆணையம் (NTCA) நடத்திய 2014 கணக்கெடுப்பை அவர் மேற்கோள்காட்டுகிறார். இந்தியாவின் எல்லையோர பகுதிகள், பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமின்றி வெளிப்புறத்திலும் அவை இருப்பதால், சிறுத்தைகளின் எண்ணிக்கையை எளிதாக கணக்கிட முடியாது.இருப்பினும், 2014 இல் நடத்தப்பட்ட புலி கணக்கெடுப்பு 12,000 க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருக்கலாம் என்று தோராய மதிப்பீடுகளை வழங்கியுள்ளது; புலிகள் கணக்கெடுப்பிற்காக பொருத்தப்பட்ட கேமரா கண்காணிப்பில் சிறுத்தைகளும் தென்பட்டன.
சிறுத்தைகள் வாழ்வு மீது ஆத்ரேயா இன்னும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
"நம் நாட்டின் அழகே, நாம் ஒரு மிக பழைமையான நாகரீகம் கொண்டவர்கள் மற்றும் நாம் விலங்குகளுக்கு உகந்த ஒரு கலாச்சார உறவை பகிர்ந்து வாழ்வதும் தான் "என்று அவர் கூறினார். "நாம் அவற்றின் இருப்புகாக கலாச்சார ரீதியாக நல்ல பாதுகாப்பு நடைமுறைகள் திறந்து இருக்கிறோம். சமீப ஆண்டுகளில் புலிகள், சிங்கங்கள் போன்ற பெரிய விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாம் கண்டிருக்கிறோம். இது, சிறுத்தைகளின் எண்ணிக்கையும் ஒருநாள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை தருகிறது. நாம் நமது தரப்பில் செய்ய வேண்டியது எல்லாம், மனித -விலங்கு மோதல் உருவாகாமல் இருப்பது தான்” என்றார் அவர்.
(சாக்கோ, இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர், பெங்களூரு மவுண்ட் கார்மெல் கல்லூரியில் இதழியல் துறை உதவி பேராசிரியர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.