பத்ராக், ஒடிசா: தயாமதி பிஸ்வாலின் மண் குடிசை வீட்டில் இருக்கும் ஒரு அறையின் கூரையில் இருந்து தொங்கும் கயிறுகளில் இரண்டு கூடைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் கிழக்கு பகுதி மூலையில் உள்ள இப்பகுதியில் ஆண்டுதோறும் பருவமழை வெள்ள பாதிப்புகளின் போது, இந்த கூடையில் உள்ள சில பொருட்கள் -- ஒரு சீப்பு, பழங்கள், சில துணிகள்-- மட்டுமே உலர்ந்திருக்கும்.

“சில நேரங்களில் வெள்ளம் வடியும் வரை காத்திருக்க,நாங்கள் 15 நாட்கள் வரை கட்டிலிலேயே அமர்ந்திருக்கும் அவலம் ஏற்படும்” என்று நான்கு மகள்களுக்கு தாயான 48 வயது பெண் கூறுகிறார்.

பிஸ்வாலின் வீடு அமைந்துள்ள சிதல்பூர் கிராமம், பைத்தாரணி ஆற்றின் கிளை நதி செல்லுமிடத்தில் இருந்து 50 கி.மீ.க்கும் குறைவான தொலைவில் உள்ளது. இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் செல்லும் இது, ஒடிசாவின் இரண்டாம் பெரிய நதி; வங்கக்கடலில் கலக்கிறது.

ஒடிசாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பத்ராக் பகுதியில் உள்ள சித்தப்பூர் கிராமத்தில் வசிக்கும் மக்கள், வெள்ளம் மற்றும் மழைப்பொழிவை ஒருங்கே சந்திக்கின்றனர்.

ஆண்டுதோறும் பெய்யும் மழை, வெள்ளப்பெருக்கால் பூச்சிகள் மற்றும் பாம்புகள் வந்து செல்கின்றன. வீடுகளின் மண் சுவர்கள் அதற்கு வழிவிடுகின்றன. ஒரே குடிநீர் ஆதாரமாக கை பம்புகள் வெள்ளத்தினுள் மூழ்கிவிடுகின்றன. சில நேரங்களில் வெள்ளம் வடிய 15 நாட்கள் வரை ஆகிறது.

பருவநிலை மாற்றத்தால் வங்காள விரிகுடா பகுதியில் சமீப காலமாக மழைப்பொழிவை அதிகரிக்க செய்துள்ளது. இது, இன்னும் புயல் போன்ற பேரிடருக்கான வாய்ப்புகள் இருப்பதையே காட்டுகிறது.

"மொத்தத்தில், வட இந்திய கடல் பகுதியில் சூறாவளி சுழல்கள் அதிகரித்து வருகிறது; இதில் அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடாவும் அடங்கும்" என்று புனேயில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி அஸ்மிதா தேவ் கூறினார். அவர் 30 ஆண்டு வானிலை மாற்றங்களை ஆய்வு செய்து அதன் முடிவை 2015 மே மாதம் வெளியிட்டார். "சூறாவளிகள் முன்கூட்டியே நிகழ்கின்றன; அவற்றின் அதிர்வு மற்றும் தீவிரம் அதிகரித்து வருகிறது, இது பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறிக்கிறது" என்றார் அவர். வங்காள விரிகுடாவை சுற்றியுள்ள நிலம் அடிக்கடி வறட்சியை எதிர்கொள்கிறது, தண்ணீரில் உப்புத்தன்மை அதிகரித்து விவசாய நிலங்கள் பாதிக்கின்றன. கடல் மற்றும் நதிகளின் அரிப்பு அதிகரித்து அதன் மட்டம் அதிகரிக்கிறது என்று, உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அமைப்பான இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்- ஐ.யு.சி.என். (IUCN) 2013 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஒடிசாவின் 20 கிராமங்கள் குறித்த தரவுகளும் இடம் பெற்றுள்ளன.

அந்த அறிக்கையில், பருவநிலை மாற்றத்தால் பெண்களின் தலைமையிலான குடும்பங்கள் அதிகம் பாதிக்கக் கூடியதாக இருந்தது; அவர்களில் 80% பேறுக்கு குறைந்த வேலைவாய்ப்புகளும்; 70% பேருக்கு பணிச்சுமை அதிகரித்தது; பேரிடருக்கு பின் வேலை இல்லாத சூழலில் கிடைக்கும் வேலைகள் நீண்ட நேரம் பணிபுரியக்கூடியதாக இருந்தது என்று தெரிவிக்கிறது.

சிதல்பூர் போன்ற கிராமங்களில் சில ஆண்டுகளில் சாலை, தகவல் தொடர்பு வசதி மேம்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து ஏற்பட்டு வரும் வெள்ளம் அங்குள்ள வீடுகள், சொத்துகளை சேதப்படுத்தி, பிஸ்வால் போன்றவர்களை ஏழ்மையில் விட்டுச் செல்கிறது.

முன்பு அவர்கள், தங்களது தலைவிதி என்று ஏற்றுக்கொண்டனர். இப்போது, அவர்கள் அவ்வாறில்லை.

பருவநிலை மாற்றம் வாழ்க்கை மிகவும் கடினமாக்கிவிட்டது, பிஸ்வால் போன்ற பெண்கள் தற்போது மகளிர் கூட்டமைப்பு மூலம் தங்கள் குரலை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் தட்பவெப்ப பேரழிவுகள் தங்கள் வாழ்வாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என பகிர்ந்து கொள்கிறார்கள்; தீர்வுகளை விவாதிக்கின்றனர். இந்த கூட்டமைப்புகளின் அளவு மற்றும் செல்வாக்கில் வளர்ச்சி பெறும் நிலையில், அதிகரித்து வரும் மாற்றத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் கேள்வியும் கேட்கின்றனர்.

பருவநிலை மாற்றம் மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்ற தொடரில் இது எங்களின் நான்காவது கட்டுரையாகும். ( நீங்கள் முதல் கட்டுரையை இங்கே, இரண்டாவது கட்டுரையை இங்கே, மூன்றாவது கட்டுரையை இங்கே படிக்கலாம்.) சமீபத்திய அறிவியல் ஆய்வு முடிவுகள், பருவநிலை மாற்றத்தை ஏற்று மக்கள் வாழும் முறைகளை இந்த தொடரில் நாம் காணலாம்.

உலகின் மிகப்பெரிய வளைகுடாவான வங்காள விரிகுடா பகுதியில் ஒடிசாவின் கடலோர மாவட்டம் பத்ராக். மழைக்காலத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக வடியாத வெள்ளத்தால் மக்களின் வாழ்க்கிய பல நாட்களுக்கு முடங்கிவிடுகிறது.

உலகின் மிகப் பெரிய வளைகுடாவில் மாற்றங்கள்

உயரும் கடல்மட்டம். நீரில் உவர் தன்மை அதிகரிப்பு. அதிகரித்து வரும் வெப்பநிலை. மேலும் சூறாவளிகள். கடும் மழை. மேலும் அதிகரித்த வறட்சி நாட்கள்.

இவை, வங்காள விரிகுடா பகுதியில் ஏற்கனவே பெரும் சக்தியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களில் சிலவாகும். வங்காள விரிகுடா பகுதி உலகின் பெரிய, முக்கிய பகுதியை சேர்க்கும் குறைக்கப்பட்ட கடலோர நீர்ப்பகுதியாகும். இந்த வளைகுடாவில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், மியான்மார், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளை சேர்ந்த உலக மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் வசிக்கின்றனர். வங்காள விரிகுடாவானது உலகின் மூன்றாவது பெரிய கடலான இந்திய பெருங்கடலை இணைக்கிறது. இப்பெருங்கடல் மேற்கே ஆப்பிரிக்காவில் தொடங்க்கி கிழக்கில் ஆஸ்திரேலியா வரை செல்கிறது.

இந்த பிராந்தியத்தில் தாழ்வான பகுதியில் உள்ள வங்கதேசம் போன்றவை, அதிகரித்து வரும் கடல் மட்ட உயரம், அதிக மழைப்பொழிவு மாற்றங்களால் அடிக்கடி மூழ்கடிக்கப்படுகின்றன. இந்தியாவில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகியன, இதே பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன; ஆனால் இங்குள்ள பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள், இதுவரை குறைந்த கவனத்தையே ஈர்த்துள்ளது.

“வறட்சியான நாட்கள் அதிகரித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அதேபோல் அதீத மழை பெய்து வெள்ள பாதிப்பும் உண்டகிறது. இது தண்ணீர் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்த இந்திய வானிலை ஆய்வுத்துறை (IMD) பருவநிலை தரவு மேலாண்மை மற்றும் சேவைகள் தலைவரான புலாக் குஹதகுர்தா “அதற்கு பதிலாக நமக்கு தேவையான பல நாட்கள் மழையின் தீவிரம் குறைந்துவிடுகிறது. மழைக்காலங்களில் ஒடிசா பெறும் மழைப்பொழிவு வங்காள விரிகுடாவில் இருந்து வருகிறது” என்றார்.

அதிகரித்துவரும் வெப்பநிலை அதிகப்படியான மழைப்பொழிவு மற்றும் சூறாவளி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை அதிகரிக்க செய்யும்” என்று பருவநிலை மாற்றம் மீதான ஐ.நாவின் சர்வதேச அரசுக்குழு ஐ.பி.சி.சி. (IPCC) 2018 அக்டோபரில் வெளியிட்ட அறிக்கை எச்சரிக்கிறது. அதிகரித்து வரும் கடல் மட்டம் தாழ்வான நிலப்பகுதிகளில் தண்ணீர் தேங்கச் செய்வதோடு அப்பகுதியில் உவர்ப்பு தன்மையை அதிகரிக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

“குறுகிய காலத்தில் அதிகளவு மழை பெய்து வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை நாங்கள் பார்க்கிறோம்” என்று, பத்ராக்கில் உள்ள கிராம நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் (RWSS) நிர்வாகப் பொறியாளர் அந்தர்யாமி நாயக் தெரிவித்தார். "இந்த மழைநீர் மூழ்வதும் கடலில் கலக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதில்லை; வெள்ளப்பெருக்கை தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறை தான் நிலவுகிறது" என்றார் அவர்.

இதனால் சராசரி மழையளவு குறைகிறது. ஆனால் ஒடிசாவில் "குறிப்பிடத்தக்க வகையில் இல்லை"; ஆனால், ஒடிசாவில் பாயும் ஆறுகள் உருவான அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் "கணிசமாக" உள்ளது என்று, 1901 முதல் 2003 வரை ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக இந்தியாவின் மழைப்போக்கு தரவுகளைப் ஆய்வு செய்து இந்திய வானிலை ஆய்வு மையம் 2006ல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் சராசரி மழை குறைகிறது, ஆனால் தென்மேற்கு பருவக்காற்று பருவத்தில் குறிப்பிடத்தக்க வகையில் இல்லை. ஒடிசாவில் பாயும் நதிகள் உருவாகும் ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இது கணிசமாக குறைந்து வருகிறது.
Source: Trends in rainfall pattern over India by P Guhathakurta and M Rajeevan; National Climate Centre Research Report

கடந்த 2014ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மழை வீழ்ச்சியின் சமீபத்திய பகுப்பாய்வு ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மழைப்பொழிவில் "குறிப்பிடத்தக்க குறைவு" ஏற்பட்டுள்ளதாக என்று கூறப்பட்டுள்ளது.

இதில் சிவப்பு நிறம், குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது. தென்மேற்கு பருவ மழையின் அளவு அதிகரிப்பு அல்லது குறைவை அம்பு குறியீடுகள் பிரதிபலிக்கின்றன.
Source: Observational analysis of Heavy rainfall during southwest monsoon over Indian region, Pulak Guhathakurta, in High-Impact Weather Events over the SAARC Region published in 2014.

கடந்த முப்பது ஆண்டுகளில் பத்ராக் உட்பட ஒடிசாவின் கடலோரப் பகுதிகள் பல இடங்களில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக செயற்கைக்கோள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய குறையும் போக்கு , நீண்ட காலத்திற்கான வெளிப்படை, தண்ணீருக்கான கடின பயணம் - பத்ரக் பெண்களின் மீது அதிகரிக்கும் சுமையாகும்.

சிவப்பு புள்ளிகள், செயற்கைக்கோள் தரவுகள் அடிப்படையில் 1984 முதல் 2015 வரை நிலத்தடி நீர்மட்டம் குறைவதை குறிக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லாததை கறுப்பு குறியீடுகள் காட்டுகின்றன.
Source: Global Surface Water Explorer developed by The European Commission’s Joint Research Centre using satellite data from USGS and NASA.

குடும்ப தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் சுமை

கோடைகாலங்களில், பத்ரா மாவட்ட நதிகளில் உள்ள நீர் உவர்ப்பு நீராக மாறி வருகிறது, கடல்நீர் அதன் வழியே செல்கிறது. இதன் பொருள் நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறுகிறது என்பதாகும்; குடிநீருக்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது.

கலியாபாத் கிராமத்தை சேர்ந்த 58 வயதான குந்தலா ரவுத், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் போதுமான தண்ணீரை நிரப்ப மூன்று, சில நேரங்களில் நான்கு, மணிநேரம் செலவழிக்கிறார்; இதற்காக கை பம்புக்கு 500 மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. ஒருமுறை தண்ணீர் எடுத்து வர, கை பம்பு பகுதி கூட்டத்தை பொறுத்து 20 நிமிடம் முதல் ஒருமணி நேரம் வரை செலவாகிறது.

கலியாபத்தில் உள்ள நான்கு கை பம்புகளில் ஒன்றில் மட்டுமே குடிக்கக்கூடிய தண்ணீர் கிடைக்கிறது. மற்ற பம்புகளில் உள்ள தண்ணீர் உவர்ப்பு தன்மைக்கு மாறிவிட்டன.

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் வசிக்கும் குந்தலா ரவுத், 58, தண்ணீரிய நிரம்புவது பெறும் சுமையாக உள்ளது; தண்ணீருக்காக தினமும் நான்கு மணி நேரம் வரை செலவிட வேண்டியுள்ளது என்றார்.

நிச்சயமாக, இது ஒரு புதிய பிரச்சனை அல்ல.

ஏறத்தாழ பத்து ஆண்டுகள் ஆய்வுகளின் படி, இப்பகுதியில் நிலத்தடி நீரானது புதிய குடிநீரை போன்ற ஐந்து மடங்கு உவர்ப்பு தன்மையை கொண்டுள்ளது. ஒடிசாவின் கடலோரப் பகுதியில் நிலத்தடி நீரின் முக்கிய மாசுபாட்டுக்கு கடல் நீர் முக்கிய காரணம் என்று, இந்திய நீர்வள அமைச்சகம் வெளியிட்ட 2014 அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், நிலத்தடி நீரின் தரம் இந்தியாவின் மேற்கு பகுதியைவிட கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் மாறுபட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

கடல் மட்டம் உயர்வு, மழைப்பொழிவு குறைதல் மற்றும் நிலத்தில் அதிகமான உறிஞ்சப்படுதல் போன்றவை நிலத்தடி நீர் அதிக உவர்ப்புத்தன்மை ஆக காரணம். இதில் முதல் இரண்டு காரணங்கள் பருவநிலை மாற்றத்துடன் நேரடி தொடர்பு கொண்டவை.

காலியாபாத்தில் உள்ள கை பம்பு சில மாதங்களுக்கு ஒருமுறை சேதமடைந்து விடுவதால், பெண்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீரை தேடி நீண்ட தொலைவு செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் சென்று வர மணிக்கணக்கில் நேரமாகிறது.

"இதனால் எங்கள் உடல் புண்படுகிறது; எங்களுக்கு மூட்டு மற்றும் முதுகுவலி உண்டாகிறது," என்ற ரவுத் “தண்ணீர் நுகர்வை குறைக்க நாங்கள் பருகும் அளவை குறைத்துக் கொள்கிறோம்” என்றார்.

இச்சூழலில் தான் ரவுத், பிஸ்வால் போன்ற 12க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது பிரச்சனைகளை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மகளிர் சுயஉதவி குழுக்கள் (SHGs) வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர்; இதுவரை பத்ராக் மாவட்டத்தில், வாட்டர் எய்ட் இந்தியா (WaterAid India) என்ற அரசுசாரா அமைப்பின் உதவியோடு, 11 கிராம ஊராட்சிகளில் (கிராம சபை) இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக்குறை, அதிக கை பம்புகள் தேவை, பேரிடருக்கு பின் சுகாதாரப்பிரச்சனைகள் -- இதில் ஆண்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பது அவர்களின் கூற்று -- ஆகியன அவர்கள் விவாதிக்கும் சில முக்கிய பிரச்சனைகள்.

ஒடிசாவின் பத்ராக் சுற்றுப்பகுதியில் பருவமழையின் போது சேதமடையும் தனது குடிசை மண் வீட்டை, தயாமதி பிஸ்வால், 48, மீண்டும் புதுப்பிக்க வேண்டியுள்ளது. இங்கிருந்து புறப்பட்டுவிட வேண்டுமென்று அவர் நினைக்கிறார்; ஆனால் முடியாது. “என் மகள் படித்தவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த துயரில் இருந்து அவர்களை அனுப்பிய பிறகே நான் எதையும் நினைக்க முடியும்” என்றார்.

வெள்ள காலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை; மாதவிடாய்க்கான துணியை அதே வெள்ளத்தில் நனைத்து ரத்தம் தோய்ந்த துணியையே மீண்டும் நாப்கின்னாக பயன்படுத்த வேண்டிய அவலம் உள்ளது.

"பருவநிலை மாற்றம் தொடர்பான நிகழ்வுகளின் போது பெண்களுக்கு தனியுரிமை இல்லாதது முக்கியமான அம்சம் ஆகும். நம் சமூகத்தில் அவமானத்தின் சுமை பெண்களின் மீது சுமத்தப்படுகிறது, " என்று, ஆசியா மற்றும் பசிபிக் ஏ.என்.யு. கல்லூரியின் க்ராபோர்டு ஸ்கூல் பொதுக்கொள்கை துறை பேராசிரியரும், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் மற்றும் நீர் நெருக்கடியின் தாக்க விவகாரங்களில் நிபுணருமான குந்தலா லகிரி-தத் தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம் எவ்வாறு பெண்களை பாதிக்கிறது என்பது பற்றி ஆராய்வது இன்னும் தாமதமாகிறது மற்றும் இதில் "அதிக கவனம்" தேவை என்ற லகிரி தத், பொதுவில் இருந்து ஒரு ஆண் தன்னை விடுவித்துக் கொள்வது ஏற்கப்படும் போது, பெண்ணுக்கு அத்தகைய வாய்ப்பு தரப்படுவதில்லை என்றார்.

லகிரி-தத் தனது 2017 ஆவணப்படத்தில் பேரழிவுகள் போது பெண்கள் எதிர்கொள்ளும் உள்ளார்ந்த பிரச்சினைகளை விளக்கியிருந்தார்.

குந்தலா லகிரி-தத் தனது தண்ணீரின் விளிம்பில் பெண்கள் ( Women at the Water’s Edge) என்ற ஆவணப்படத்தில், பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் அதிகரித்து, சுந்தரவனக்காடுகள் பகுதி பெண்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது சித்தரிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் உண்டாகும் சுகாதார பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள் பெண்கள் எழுப்பினர். தற்போது வளர்ந்துவிட்ட தனது நான்கு மகளையும் வெள்ளப்பெருக்கின் போது பெற்றெடுத்ததாக கூறும் பிஸ்வால், தற்போதும் அத்தகைய போக்கு சுற்றியுள்ள கிராமங்களில் தொடருவதாக கூறுகிறார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன், தொழிலாளியாக இருந்த போது வெள்ள காலத்தில் தந்தையும், சகோதரரும் தம்மை கூடையில் வைத்து முதுகில் இருவரும் சுமந்து சென்றதை ஜசோதா தாஸ் நினைவுகூர்கிறார். அவர்களின் வீடு உள்ள ஹெங்குபதி கத்துவா சஹி கிராமத்தில் இருந்து மருத்துவமனை 7 கி.மீ. தொலைவில் உள்ளது. அப்போது 21 வயதாக இருந்த ஜசோதாவை, முட்டி அளவுள்ள தண்ணீரில் இருவரும் பிரசவசத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது.

சில கிராமங்களில் கிராமப்புற மீனவர்களுக்கு சொந்தமான படகுகள், கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகின்றன. பழைய துணி, கயிறு, பிளாஸ்டி கேன் என்று எது கிடைக்கிறதோ அதுவே நோயாளியின் படுக்கையாகிறது.

கர்ப்பிணிகளுக்கு மிக மோசமான மாநிலங்கள் என்ற பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ஒடிசாவும் உள்ளது. இங்கு பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம் 27%; இது தேசிய சராசரியை விட அதிகம் என்று, அரசின் நிதி ஆயோக் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒடிசாவில் 15-49 வயதுக்குட்பட்ட பெண்களில் பாதிப்பேருக்கு ரத்தசோகை உள்ளது; மேலும் ஒவ்வொரு நான்கில் ஒருவரும் குறைந்த உடல் எடை குறியீட்டு எண் கொண்டுள்ளனர். மாநிலத்தின் குழந்தை பாலின விகிதாச்சாரம் - கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பாலின விகிதாச்சாரம் - குறைந்து வருகிறது என்று, தேசிய குடும்ப மற்றும் சுகாதார ஆய்வு (NFHS) 2015-16 அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

படத்தில் உள்ளது போன்ற படகுகளே வெள்ளத்தின் போது ஆம்புலன்ஸ் ஆக செயல்படுகின்றன. மழையால் ஒடிசா கடற்கரை பாதிக்கப்படும் போது படகில் மருத்துவமனைக்கு பெண்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்

கலியாபத்தில் உள்ள மற்ற பெண்களுக்கு தோல் நோய்கள் மற்றும் சுவாச பிரச்சனைகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இவை, தண்ணீரில் அதிகளவு உவர்ப்பு தன்மை இருப்பதுடன் தொடர்புடையவை. குடிநீரில் அதிக உப்பு இருப்பது பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் முன்கூட்டிய பிறப்பு நிகழுதல் போன்ற அதிக அபாயங்களுக்கு காரணமாகலாம்.

கலியாபாத்தில் பெண்கள் தனியாக இல்லை. கர்ப்ப சிக்கல்களின் அதிகரிப்பு தண்ணீர் உவர்ப்புத்தன்மை அதிகரிப்புடன் தொடர்புடையது என்று, வங்கதேச அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வங்கதேச தலைநகரான டாக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் அபு சித்திக், இதுபற்றி டாக்கா ட்ரிபியூன் இதழிலில் கூறியுள்ளார். அதில், "பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உப்புநீரே காரணம் என்று பெண்கள் அறிந்திருக்கவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

"பெண்கள் சுகாதார நிலைக்கு பருவநிலை மாற்றத்தின் தாக்கம் வலுவான ஆதாரங்களை வழங்குகிறது," என்ற லகிரி தத், “முன்பிருந்த மற்றும் பிந்தைய படங்கள் மூலம் இதை எளிதாக பார்க்கலாம்; இன்னமும் (இது) மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதி” என்றார்.

கொஞ்சம் சிரமம் இருந்த போதும் சிறு உதவிகள் அவர்களுக்கு கிடைக்கிறது. “எங்கள் குறைகளை ஆண்கள் காது கொடுத்து கேட்பதில்லை” என்று ரவுத் கூறினார்.

ஆனால் ஆண்கள் பெருமளவில் இடம் பெயருகின்றனர். “ஏராளமான ஆண்கள் இடம் பெயருவதால் வேளாண் உற்பத்தி பாதிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது” என்று சன்ஸ்ருஷ்டி அமைப்பின் ஆராய்ச்சியாளரும், “வாழ்வாதார பாலின இடம்பெயர்வு” என்ற தலைப்பில் ஒடிசாவின் வறட்சி பற்றி ஆய்வு செய்தவருமான அமிர்தா படேல் பி.எச்.டி. தெரிவித்தார். “எனவே அதிகம் பெண்கள், போதிய பயிற்சி இல்லாதபோதும் விவசாயம் செய்வதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்” என்றார்.

துடிப்பான பெண்களின் கூட்டமைப்புகள்

தனது கிராமத்து சுயஉதவிக்குழு கூட்டத்தில் பேசும் போது ரவுத் கம்பீரமாக, குரலை உயர்த்தி ஆவேசமாக, உதவி புரிய முன்வராத ஆண்களை சாடினார். பெரும்பாலான இளைய பெண்கள், பெரும்பாலும் அமைதியாக இருக்கிறார்கள். குறைவாக தண்ணீர் குடிப்பதும், ஒரு நாளைக்கு ஐந்து முறிய தண்ணீர் நிரப்புதல் சாதாரணமானது அல்ல என்பதை அவர்கள் அங்கீகரிக்க இன்னும் நாளாகும்.

விரைவில், சிக்கல்கள் தொடங்கின. வயல்களில் உப்பு நீர் புகுந்ததால் அறுவடை பாதிக்கப்பட்டதாக ஒருவர் கூறினார். பள்ளிக்கு சொந்தமான கை பம்பை பயன்படுத்த வேண்டியுள்ளதாக மற்றொருவர் கூறினார்.

"இந்த மகளிர் குழுக்கள் மிகவும் துடிப்பானவை மற்றும் இடைவெளிகளை அடையாளம் காணக்கூடியவை" என்று வாட்டர் எய்ட் இந்தியா திட்ட இயக்குனர் பூரா மொஹந்தி கூறினார். "அவர்கள், அதிகாரிகளிடம் குறிப்பிட்ட கோரிக்கையை முன்வைத்துள்ளனர்; அவை பின்னர் செயல்படுத்தப்படும்" என்றார். பெண்கள் கூட்டமைப்பு திட்டத்தால், பல செயலற்ற சுய உதவிக்குழுக்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்திய மக்கள்தொகையில் 60% பேர் நிலத்தடி நீரையே நம்பியுள்ளனர்; ஆனால் அவற்றில் கிட்டத்தட்ட 15% ஏற்கனவே உறிஞ்சப்பட்டுவிட்டன. எதிர்கால நிலத்தடி நீர் இருப்பு பற்றி எந்த மதிப்பீடும் இல்லை என்றாலும், பொதுவாக மழை குறைவால் நீர் தேக்க இருப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மனித தலையீடுகள் மற்றும் கொள்கைகள், பருவநிலை மாற்ற விளைவுகளை தவறாக மாற்றிவிட்டன. "கடலோர பகுதிகளின் நீர் ஓட்டத்தை நீர்த்தேக்கங்கள் தடுக்கின்றன” என்று பத்ராக் பகுதி அரசு பொறியாளர் நாயக் தெரிவித்தார்.

ஒடிசாவில் 204 அணைகள் உள்ளன; அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் 258 அணைகள் உள்ளன; இவற்றில் சில கட்டப்பட்டு வருகின்றன என்று மத்திய நீர் வழங்கல் ஆணையத்தின் 2016 தரவுகள் தெரிவிக்கின்றன. பல நதிகள் பத்ராக் பகுதியை அடையும் போது வறண்டுவிடுகின்றன; கடல் மட்டங்கள் உயர்ந்து வருவதால், அதன் வழியே கடலில் உள்ளே புகுந்துவிடுகிறது.

பிஸ்வால் இந்த பிரச்சனைகளை எல்லாம் சுமையாக தாங்கினார்; இவை இளைய பெண்களுக்கு செல்வதை அவர் விரும்பவில்லை. அதனால்தான், பெண்களின் கூட்டமைப்பு அவசியமானது என்று கூறினார்.

"இது, வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி அல்ல," என்று கூறும் பிஸ்வால், “இவையெல்லாம் மாறும் என்ற நம்பிக்கையோடு நான் பேசிக் கொண்டிருப்பேன்” என்கிறார்.

இக்கட்டுரை, Earth Journalism Network’s Bay of Bengal Climate Resilience Initiative உதவி மற்றும் ஆதரவோடு எழுதப்பட்டது.

(திஷா ஷெட்டி, கொலம்பியா இதழியல் கல்வி நிறுவனத்தை சார்ந்தவர்; இந்தியா ஸ்பெண்ட்டில் பருவநிலை மாற்றம் குறித்த செய்திகளை வழங்குகிறார்)

இது, இந்தியாவின் பருவநிலை மாற்ற வெப்பப்பகுதிகள் குறித்த தொடரின் நான்காவது பகுதியாகும். நீங்கள் இதன் முதல் பகுதியை இங்கே, இரண்டாவது பகுதியை இங்கே, மூன்றாவது பகுதியை இங்கே படிக்கலாம்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.