புதுடெல்லி: கிராமப்புறங்களில் வாழும் பெரும்பாலான இந்தியர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும் போது, 2018ல் சொந்தமாக கழிப்பிடத்தை கொண்டுள்ளனர்; எனினும் 44% பேர் இன்னமும் திறந்தவெளியை பயன்படுத்தும் போக்கு தொடர்வதாக, ராஜஸ்தான், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய, 2019 ஜனவரி 4ல் வெளியான ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்திய கிராமப்புற மக்கள் தொகையில் 5ல் இரு பங்கை கொண்டுள்ள இந்த நான்கு மாநிலங்களில், 2016-ல் திறந்தவெளி மலம் கழிப்போர் எண்ணிக்கை 68% ஆக இருந்ததாக அரசு அறிக்கை தெரிவிக்கிறது.

சொந்தமாக கழிப்பிடம் வைத்திருப்போரில் ஏறத்தாழ கால் பங்கினர் (23%) திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர்; 2014ல் இருந்து இந்த எண்ணிக்கை மாறுபடவில்லை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கழிவு சேகரமாகும் தொட்டி “மாசு” பெரும்பாலும் காலியாகவே வைத்திருக்க வேண்டும் என்ற ஜாதி தொடர்புடைய நம்பிக்கை, இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆராய்ச்சி மற்றும் கொள்கை வாதிடும் கருத்தியல் பொருளியல் ஆராய்ச்சி நிறுவனம்-ரைஸ் (RICE) இதுதொடர்பாக "வட இந்திய கிராமப்புறங்களில் திறந்தவெளி மலம் கழித்தலில் உள்ள மாற்றங்கள்: 2014 - 2018" என்ற ஆய்வில் 9812 மக்கள், 156 அரசு அதிகாரிகளிடம் 2018-ல் ஆய்வு மேற்கொண்டது.

தேசிய சுகாதார திட்டமான தூய்மை இந்தியா இயக்கம் (SBM) தொடக்கப்படும் முன்பு, ஆராய்ச்சியாளர்கள் முதலில் இந்த பங்கேற்பாளர்களை அக்டோபர் 2014 இல் சந்தித்தனர். 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், இப்பணியின் தாக்கத்தை அளவிடுவதற்கு அவர்கள் மீண்டும் அங்கு சென்றனர். டெல்லியை சேர்ந்த கணக்கீட்டு முயற்சி (AI) என்ற அமைப்பு, 2017ல் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரிலும் கணக்கெடுப்பை நடத்தியது.

ஆய்வறிக்கை குறித்த கருத்தை அறிவதற்காக தூய்மை இந்தியா இயக்கம் (கிராமப்புற) பொறுப்பாளரான, குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பினோம். இதற்கு பதில் கிடைக்க பெற்றதும் இக்கட்டுரையை நாங்கள் புதுப்பிப்போம்.

2014ஆம் ஆண்டில் 70% மக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்தாத நிலையில், திறந்த வெளியில் மலம் கழித்தலில் தற்போது 26% புள்ளிகள் குறைந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. 2014ல் கழிப்பறையில்லா வீடுகளில் கிட்டத்தட்ட 57%, 2018ல் ஒரு கழிப்பிடத்தை கொண்டுள்ளது.

இருப்பினும், புதிய கட்டமைப்புகளில் ஒரு சிக்கல் ஏற்பட்டது: பெரும்பாலானவை ஒற்றை குழி கழிவு சேகரிப்பு வடிவமைப்பு உடையவை; அரசு பரிந்துரை செய்த இரட்டை குழி கொண்டவையல்ல. இரட்டை குழி அமைப்பில், மலக்கழிவுகள் ஒன்றில் சேகரமாகும் போது மற்றொன்று பயன்படுகிறது; கழிவு அகற்றுவதிலும் இது பாதுகாப்பானது.ஒற்றை குழி முறையில் கழிவுகள் கையாலோ அல்லது அதிக செலவு பிடிக்கும் உறிஞ்சு இயந்திரங்களோ தேவை.

தூய்மை இந்தியா இயக்கம் பெரும்பாலும் கழிப்பறை கட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது; தூய்மை மற்றும் மாசுபாட்டுக்கு வழிவகுக்கும் கழிப்பறை குழி அமைப்பது பற்றி குறைவாகவே அக்கறை காட்டுவதாக, ‘ரைஸ்’ஆராய்ச்சியாளரும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி மேற்கொள்பவரும், ஆய்வறிக்கை ஆசிரியருமான ஆஷிஸ் குப்தா தெரிவித்தார். "இதன் விளைவாக, கழிப்பறை எண்ணிக்கை அதிகரித்தபோது, கழிப்பறை உரிமையாளர்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் எண்ணிக்கையில் சரிவு இல்லை," என்றார் அவர்.

குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் பேக்ட்செக்கர்.இன் இணையதளம் நடத்திய 2018 ஆய்விலும், மோசமான, பயன்படுத்த முடியாத கழிப்பறைகளும் திறந்தவெளி மலம் கழித்தல் அதிகம் உள்ளதும் தெரிய வந்தது.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசத்தில் தொடரும் திறந்தவெளி பயன்பாடு

ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்கள் தங்களை திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாநிலங்களாக அறிவித்துக் கொண்டன; ஆனால் அவை இன்னமும் தங்கள் இலக்கை எட்டவில்லை. கருத்து கேட்கப்பட்டவர்களில் ராஜஸ்தானில் 53% பேர், மத்தியப்பிரதேசத்தில் 25% பேர் தாங்கள் இன்னமும் திறந்தவெளியை பயன்படுத்துவதாக ஒப்புக் கொண்டனர்.

வட இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் திறந்தவெளியில் கழிப்பது முழுமையாக அகற்றப்படவில்லை என்று, ஆய்வு நடத்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் திறந்தவெளியில் கழிப்போர் எண்ணிக்கை 6% புள்ளிகள் “விரைவாக” குறைந்து வருவதாக, ஆவணங்களில் கூறப்பட்டு உள்ளது.

"அரசின் கூற்று மேலோட்டமாக உள்ளது மற்றும் அளவிடப்பட வேண்டியதை [திறந்தவெளி கழிப்பிடம்] அளவிடப்பட வேண்டும்" என்று குப்தா கூறினார்.

வட இந்தியாவில் சொந்தமாக கழிப்பிடம் வைத்திருப்போர் எண்ணிக்கை, 2014ஆம் ஆண்டில் 37% என்றிருந்தது, 2018ல் 71% என, 34% புள்ளி அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் 47% புள்ளிகள் அதிகரித்துள்ளன.

Source: RICE

இருப்பினும், கழிப்பறை உள்ளை வீடுகளில் 40%, மற்றும் 56% பிற அனைத்து வீடுகளில் குறைந்தபட்சம் ஒருவர், திறந்தவெளியை பயன்படுத்துவது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவை என்று அறிவித்த 4 மாநிலங்களுள் இருக்கும் பீகாரில் 60%, ராஜஸ்தானில் 53%; மத்தியப்பிரதேசத்தில் குறைந்த பட்சமாக 25% திறந்தவெளி பயன்பாடு உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் திறந்தவெளியில் கழிக்கும் விகிதம் குறைந்தது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் அல்ல; அதிகளவு கழிப்பிட உரிமையாளர் எண்ணிக்கை அதிகரித்தது தான் என்று, ஆய்வு முடிவுகளை பகுப்பாய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரை 23% கழிப்பிட உரிமையாளர்கள் திறந்த வெளியை பயன்படுத்துவதற்கு இதுவும் காரணம்.

”இந்த கண்டுபிடிப்புகள் எங்கள் நேர்காணல் முடிவோடு ஒத்துப்போகிறது. தூய்மை இந்தியா இயக்கத்தில் கழிப்பறை கட்ட வலியுறுத்தும் அதிகாரிகள் அதை பயன்படுத்த வேண்டும் என்று பயனாளிகளை அறிவுறுத்துவதில்லை” என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் பயன்படுத்தப்படும் சுயமாக கட்டப்பட்ட கழிப்பறைகள்

கணக்கெடுப்பில் பங்கேற்ற 57% பேரில், கடந்த நான்கு ஆண்டுகளில் கழிப்பிடம் கட்டியவர்களில் 42% பேர் ஏதேனும் ஒருவகையில் அரசின் உதவியை பெற்றனர். மேலும், இந்த கழிப்பிடங்களில் சராசரி 17% அரசு அல்லது ஒரு ஒப்பந்ததாரரால் கட்டப்பட்டது. மத்திய பிரதேசம் (33%), உத்தரபிரதேசம் (22%) ஆகியவற்றில் ஒப்பந்ததாரர்களால் கட்டப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

Latrine Ownership & Support From Government, 2018
Indicator All Four States Bihar MadhyaPradesh Rajasthan UttarPradesh
All Households
Owns latrine 71% 49% 90% 78% 74%
Any government support 39% 19% 53% 46% 43%
Government money 21% 9% 24% 42% 20%
Government built 14% 9% 25% 2% 16%
Households That Did Not Own A Latrine In 2014
Owns latrine 57% 37% 83% 65% 61%
Any government support 42% 18% 66% 37% 55%
Government money 20% 5% 29% 33% 23%
Government built 17% 11% 33% 2% 22%

Source: RICE; Figures in percentage of households

கழிப்பறையை யார் கட்டியது என்பது முக்கியம்: ஒப்பந்ததாரர்களால் கட்டப்படும் கழிப்பறை பொதுவாக தரமின்றி உள்ளது. சுயமாக கழிப்பறை கட்டியவர்களே, பிறரை விட 10% அதிகமாக அதை பயன்படுத்துகின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஒப்பந்ததாரர்களால் பெரும்பாலும் ஆதிவாசி பழங்குடியினர் பகுதிகளில் தான் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஏனெனில், அவர்கள் ஏழைகளாகவும், சொந்த பணத்தில் கழிப்பிடம் கட்ட இயலாதவர்களாகவும் இருந்தனர். மேலும் ஆதிவாசி பகுதிகளில் முறைகேடு புரிவது ஊழல் ஒப்பந்ததாரர்களுக்கு எளிதாக இருந்தது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

கையால் கழிவு அள்ளும் ஒற்றை குழி முறை இன்னமும் விரும்பப்படுகிறது

பெரும்பாலான கழிப்பிட உரிமையாளர்கள் (40%) ஒற்றை குழி கழிவு சேகரிப்பு தொட்டியையே வைத்துள்ளனர்; இரட்டை குழி கழிவு தொட்டியை 25% பேரே பயன்படுத்துகின்றனர். மேலும், 31% கழிப்பறைகள் வாகனங்களில் கழிவுகளை உறிஞ்சும் வகையில் அமைப்பை ஏற்படுத்தி கொண்டுள்ளன. இது, அதிக செலவு பிடிக்கும் ஒன்றாகும்.

எனினும், அரசால் பரிந்துரைக்கப்படும் இரட்டை குழி கழிவு சேகரிப்பு தொட்டி வடிவமைப்பானது உத்தரப்பிரதேச மாநிலத்தில் 61% கழிப்பிடங்களில் கட்டப்பட்டுள்ளது. ஏனெனில், இரட்டை குழி முறையில் கட்டினால் தான் அரசின் மானியத்தொகை ரூ.12,000 பெற முடியும் என்பது தான்.

ஆய்வின்போது உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில் பெரும்பாலான கிராமத்தினர் உறிஞ்சு குழி கட்டுமானத்தையும், 48% கழிப்பிட உரிமையாளர்கள் இரட்டை குழி அமைப்பையும் தேர்வு செய்தனர். இரு குழிகளும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி நிலையான வடிவமைப்பின் கருத்தை, அவர்கள் தோற்கடித்தாக கூறினர்.

அச்சுறுத்தல்கள், அபராதங்களை அதிகம் சந்திக்கும் ஆதிவாசி, தலித் குடும்பங்கள்

அனைத்து நான்கு மாநிலங்களிலும், 56% பதிலளித்தவர்களில்,கழிவறை அமைப்பதற்காக மக்களை வற்புறுத்துவதற்கு -- அபராதம், நல உதவி நிறுத்துதல், திறந்தவெளி கழிப்பதை நிறுத்த அச்சுறுத்தல் -- கட்டாய வழிமுறைகளை தாங்கள் அறிந்திருந்ததாக கூறினர். மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பதிலளித்தவர்களில் முறையே 47% மற்றும் 42% பேர், கழிப்பிடம் கட்டாவிட்டால் அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்காது என்று கேள்விப்பட்டதாக கூறினர்.

“ஜாதி சவால்களை எதிர்கொள்வதற்கு பதில் தூய்மை இந்தியா இயக்கம், அதற்கு வலுவூட்டியது” என்ற குப்தா, சமூகத்தின் தேவை உருவாக்குவதற்கான மொத்த சூழல் அணுகுமுறையை பயன்படுத்தும்போது, இந்திய கிராமங்கள் ஜாதி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளன என்பது உண்மைதான் என்றார்.

Threat, Fines, Coercion Faced To Persuade People To Construct A Toilet, 2018
Coercive state action Faced By All Four States Bihar Madhya Pradesh Rajasthan Uttar Pradesh
Stopped from open-defecation Own household 9% 11% 11% 11% 6%
Aware of in village 47% 40% 67% 54% 42%
Benefits threatened Own household 5% 3% 9% 13% 3%
Aware of in village 25% 9% 47% 42% 20%
Fine threatened Own household 2% 1% 6% 1% 2%
Aware of in village 26% 14% 47% 25% 28%
Any of these three Own household 12% 12% 17% 19% 9%
Aware of in village 56% 47% 78% 68% 50%

Source: RICE

நான்கு மாநிலங்களில் உள்ள மற்ற பிரிவினரை விட, தலித் குடும்பங்கள் இந்த கட்டாய நடைமுறைகளை இரண்டு மடங்கும், ஆதிவாசி குடும்பங்கள் மூன்று மடங்கு அதிகமாக எதிர்கொண்டனர். கழிப்பறை இருந்ததா, இல்லையா என பொருட்படுத்தாமல் அவர்கள் பொறுப்பற்ற முறையில் அச்சுறுத்தப்பட்டதாக, ஆய்வு காட்டுகிறது.

அதிகம் குறி வைக்கப்படும் தலித் மற்றும் ஆதிவாசிகள்

Source: RICE

மேலும், கழிப்பறை கட்டுவதற்கு கட்டாயமாக்கப்பட்டவர்கள் கூட, அதனை குறைவாகவே பயன்படுத்தினர்.

இத்தகைய நடவடிக்கைகள் முறையற்றது அல்லது அதிகப்படியானது என்பதை, உள்ளூர் அதிகாரிகள் நினைக்கவில்லை. அவர்கள் கழிப்பறைகள் கட்டுமான இலக்கை 'நியாயமின்றி குறுகிய காலத்தில்' அடைய இந்த நடவடிக்கைகளை நம்பியதாக, ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

'தூய்மை' என்ற கருத்தோடு இணைக்கப்பட்ட தடைகள் இன்னும் பரவலாக உள்ளன

முஸ்லீம் குடும்பங்களை விட திறந்தவெளியில் அதிகம் பயன்படுத்துவது இந்து குடும்பங்கள் தான் என்று இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. கழிவு சேகரிப்புக்கு பெரிய குழிகளை கொண்டிருந்தாலும் இந்து குடும்பங்களே, சிறிய குழிகளை கொண்டுள்ள முஸ்லீம்களை விட, திறந்தவெளியை அதிகம் பயன்படுத்துவது இந்த ஆய்வில் தெரிய வருகிறது. சிறிய கழிவு சேகரிப்பு குழிகள் அடிக்கடி நிரம்பி, அகற்ற வேண்டியிருக்கும்; இது “ஜாதி அசுத்தத்துடன்” தொடர்புடையது.

திறந்த வெளியை பயன்படுத்தும் கழிப்பிட உரிமையாளர்கள் குழி அளவு & மதம் - 2018

Source: RICE

வீடுகளில் சுயமாக கழிப்பறை கட்டுவோர் பெரிய குழி அமைக்க, சராசரியாக ரூ.34,000 செலவிடுகின்றனர் - இது அரசு தரும் மானியம் ரூ.12,000 ஐ விட மூன்று மடங்கு அதிகம். வீடுகளில் ஒரு கழிப்பறை கட்ட கட்டாயப்படுத்தப்படுகிறது ஏன் என்பதற்கான வேறுபாட்டை இது விளக்குவதாக, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

கழிப்பிடத்திற்கு இரட்டை குழி கழிவு சேகரிப்பு தொட்டியின் அவசியம் குறித்து மேலும் விழிப்புணர்வு -- நடிகர் அக்‌ஷய் குமார் நடித்த கழிப்பிட இரட்டை குழி பற்றிய பிரசார வீடியோ விளம்பரம் ஒரு உதாரணம் -- ஏற்படுத்த வேண்டும். நிலையான மற்றும் மலிவான கழிவு கசடு மேலாண்மை போதுமானதாக இல்லை என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

”திறந்தவெளியில் கழிப்பதை நிறுத்த, கட்டாயமான வழிமுறைகள் கையாள்வதை நிறுத்த வேண்டும். மாறாக, சமூக அணுகுமுறைகளை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளுடன் சேர்ந்து ஊக்குவிக்கப்பட வேண்டும். அது, திறந்தவெளியில் கழிப்பதை மாற்றும் ஒரு சவால் மிக்க பணியாக இருக்கும்” என்று குப்தா தெரிவித்தார்.

திருத்தம்:

  1. இக்கட்டுரையின் முந்தைய பதிப்பில் “கணக்கெடுப்பில் பங்கேற்ற 57% பேரில், கடந்த நான்கு ஆண்டுகளில் கழிப்பிடம் கட்டியவர்களில் 40% பேர் ஏதேனும் ஒருவகையில் அரசின் உதவியை பெற்றனர்”
    என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சரியான எண்ணிக்கை 42% ஆகும்.
  2. சுயமாக கழிப்பறை கட்டியவர்களே, பிறரை விட 10% அதிகமாக அதை பயன்படுத்துகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நாங்கள் கூறியபடி, அது 10% அல்ல.
  3. இக்கட்டுரையின் முந்தைய பதிப்பில் “தலித் மற்றும் ஆதிவாசி குடும்பங்கள் நான்கு மாநிலங்களில் உள்ள மற்ற பிரிவினரை விட, இந்த கட்டாய நடைமுறைகளை மூன்று மடங்கு அதிகமாக எதிர்கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நான்கு மாநிலங்களில் உள்ள மற்ற பிரிவினரை விட தலித் குடும்பங்கள் இரண்டு மடங்கும், ஆதிவாதி குடும்பங்கள் மூன்று மடங்கும் கட்டாய நடைமுறைகளை எதிர்கொண்டனர் என்பதே சரி.

பிழைக்கு வருந்துகிறோம்.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.