88.6% கர்நாடக பகுதிகளில் வறட்சி, குடிநீர் திட்ட வடிவமைப்பு குறைபாட்டை ஒப்புக்கொள்ளும் அரசு
அதானி, பிலாகவி: வடக்கு கர்நாடகாவின் பிலாகவி மாவட்டம் அதானி தாலுக்காவில் உள்ள பாண்டெகான் கிராமத்தை சேர்ந்த விவசாயி மற்றும் சமூக பணியாளரான தொண்டிரா துக்காரா, 68, தனது 2.5 ஏக்கர் விளை நிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சோளம் (sorghum) சாகுபடி செய்வார். சோளம் ஒரு வறண்ட நிலப்பயிர் ஆகும்; இது ராபி (குளிர்காலம்) மற்றும் காரீஃப் (பருவமழை) இரண்டிலும் வளரும். கடந்த வருடம், சுதாரின் மொத்த பயிரும் மழை குறைவால் பொய்த்தது; அவரால் மற்றொரு பயிரையும் சாகுபடி செய்ய முடியவில்லை.
பிலாகவி மாவட்டத்தின் ஒரு பகுதியான அதானி தாலுகா, கடும் வறட்சியை எதிர்கொண்டுள்ளது - அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2018 வரை - சராசரியாக 135.70 மி.மீ. மழை பதிவாக வேண்டிய அதானியில், 40.38 மி.மீ மட்டுமே பதிவாகி உள்ளது; அதேபோல் மாவட்டத்தில், 152.50 மி.மீ.க்கு பதிலாக 50.60 மி.மீ. மழை மட்டுமே பெய்ததாக, கர்நாடகா அரசின் வருவாய்த்துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான, கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் (KSNDMC) தரவுகள் தெரிவிக்கின்றன.
அதானி பகுதி, கடந்த 10 ஆண்டுகளாகவே படிப்படியாக மழைப்பொழிவு விகித சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது; இது, விவசாயத்தை தக்கவைக்க போதுமானதாக இல்லை. அதனால் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் மாற்று வாழ்வாதாரமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். சூதருக்கு மூன்று மாடுகள், ஐந்து ஆடுகள் உள்ளன. அவற்றின் பாலை லிட்டர் ஒன்று ரூ.30 என்று விற்பனை செய்கிறார். அவர் இறைச்சிக்காக ஆடுகளை வளர்ப்பதோடு ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் (ஒரு ஆட்டுக்குட்டி ரூ.4,000-7,000; ஆடு ஒன்று ரூ 10,000 என ) அவற்றை விற்கிறார்.
இப்போது, கால்நடைகளை நிர்வகிக்க போதுமான தண்ணீர் இல்லை.பயிர் விளைச்சல் இல்லாத நிலையில், தாலுகாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகளுக்கு, மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டமான பிரதம மந்திரி பாசல் பீமா யோஜனாவின் (பி.எம்.எப்.பி.ஒய்.) கீழ் காப்பீடு தொகையும் கிடைக்கவில்லை.
காந்திநகரில் உள்ள இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் முன் கூட்டியே வறட்சி குறித்து எச்சரித்த நிலையில், மே மாதம் 30, 2019 வரை நாட்டில் குறைந்தபட்சம் 43.87% பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தன. வறட்சி குறித்த எங்களது தொடரில் இது ஆறாவது மற்றும் கடைசி கட்டுரை. முந்தைய கட்டுரைகளை நீங்கள் இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்க முடியும்.
Source: DEWS, IIT Gandhinagar; May 2019
வறட்சியால் வறண்டுள்ள மாவட்டங்கள்
கர்நாடகா, அதன் 30 மாவட்டங்களில் 23ஐ வறட்சி பாதித்ததாக அறிவித்தது குறித்து, செப்டம்பர் 28, 2018இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டு இருந்தது. இவற்றில் 16 நிரந்தர வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக, வறண்ட நில வேளாண்மை குறித்த மத்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. இந்த மாவட்டங்கள் உள்பட நாட்டின் 24 மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக, 2018 டிசம்பரில் பேசிய சட்டசபையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி. தேஷ்பாண்டே கூறினார். நிரந்தர வறட்சி பிராந்தியமாக பிலாகவி அடையாளம் காணப்பட்டுள்ளது என, டிசம்பர் 19, 2018இல் வந்த தி இந்து செய்தி தெரிவித்தது.
வட கர்நாடகாவின் பிலாகவி மாவட்டத்தின் அதானி தாலுகா கிராமங்களில் முக்கிய ஆதாரமாக உள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டன. நீடிக்கும் வறட்சியால், கரும்பு போன்ற நீர்ப்பாசனங்களை நம்பி இருக்கும் பயிர்களின் சாகுபடி பொய்த்துப்போனது.
கர்நாடகாவில் குறைந்தது ஏழு மாவட்டங்கள் ‘மிகக்குறைந்த வகை’ - மழை இயல்பு அளவு 99% மற்றும் 60% இடையில் என, பருவமழை குறைவு குறித்த (மார்ச் 1 முதல் மே 31, 2019) கே.எஸ்.என்.டி.எம்.சி. அடிப்படையாகக் கொண்ட தரவில் குறிக்கப்பட்டுள்ளது.
Source: Karnataka State Natural Disaster Monitoring Centre
Note: Data is between March 1 to May 31, 2019
இயல்பு அளவு 68% என்ற நிலையில் 31 மிமீ மழையை பதிவு செய்யும் ஆறு மாவட்டங்களில் பிலாகவியும் ஒன்றாகும். அதானியில் மழைக்காலத்திற்கு முந்தைய மழை அளவு 36 மி.மீ; சராசரி மழைப்பொழிவு 52% ஆகும். இந்த மோசமான சூழல், அண்டை தாலுகாக்களான சிக்கோடி (18 மி.மீ மழை, இயல்பு -80%), ரேபாக் (28 மி.மீ மழை, இயல்பு -63%) மற்றும் கோகாக் (16 மிமீ மழை, இயல்பு -85%).
Source: Karnataka State Natural Disaster Monitoring Centre
* Height above Local Ground Level
அதானி பகுதியானது ஆண்டில் சராசரியாக 34 நாட்களுக்கு மட்டுமே - பிலாகவி மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களில் மிகக் குறைவாக- மழை பதிவாகி இருப்பது, 1951 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான பிலாகவி மாவட்ட புள்ளிவிவர அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த மழை ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பதிவாகி உள்ளது.
இந்த 10 மழை அளவீடுகள், இந்த தாலுகா ஒவ்வொரு வருடமும் வறட்சி நிலையில் மோசமடைவதை காட்டுகின்றது. "தண்ணீர் இல்லை என்பதால், விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்" என்று சூடர் கூறினார்.
வட கர்நாடகா மாவட்டங்களில் மழைப்பொழிவானது ஆண்டுதோறும் மாறுபடுகிறது என்று, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தில் (AIRCP) விண்வெளி சார்ந்த பணியில் ஈடுபட்டுள்ள எச். வெங்கடேஷ் தெரிவித்தார். ஒரு ஆண்டில் ஜூன் மாதம் நல்ல மழை பெய்யும் போது, அடுத்த ஆண்டு மழைக்காலம் ஜூலையில் தாமதமாக ஆரம்பிக்கலாம். "அக்டோபர் மாதத்தில் அறுவடை பருவத்தில் குறுகிய கால பயிர்களுக்கு இந்த மழை உதவுகிறது," என்று வெங்கடேஷ் கூறினார். "நாங்கள் குறுகிய மற்றும் நடுத்தர கால மழை முன்அறிவிப்புகளை வழங்குகிறோம். நீட்டிக்கப்பட்ட நீண்ட கால முன்அறிவிப்பு என்பது சோதனை கட்டத்தில் உள்ளது. இந்த கணிப்புகளை Havaamaana Krishi என்ற மொபைல் செயலி மூலம் விவசாயிகளை அடையலாம்" என்றார்.
கர்நாடகா முழுவதும் விவசாயிகளுக்கு வானிலை தொடர்பான தகவலை வழங்கும் வருணா மித்ரா என்றழைக்கப்படும் 24x7 செயல்படும் மூன்று-வரிசை கொண்ட உதவி மையத்தை கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் (KSNDMC) அமைத்துள்ளது. "2018இல் எங்களுக்கு ஏறத்தாழ 15,25,000 அழைப்புகள் வந்தன. அதில் 52,471 அழைப்புகள் பிலாகவி விவசாயிகளிடம் இருந்து வந்தன" என்று கே.எஸ்.என்.டி.எம்.சி. இயக்குனர் ஜி.எஸ். ஸ்ரீநிவாஸ் ரெட்டி கூறினார். இந்திய வானிலை ஆய்வு மையம், மாவட்ட வாரியாக வானிலை முன்னறிவிப்புகளை வழங்குகிறது, அதேநேரம் கே.எஸ்.என்.டி.எம்.சி. விவசாயிகளுக்கு கிராம அளவிலான வானிலை தகவலை அளிக்கிறது.
அதானியில் உள்ள ஷிரூர் கிராமத்தை சேர்ந்த 70 வயது பாண்டுரங்க மேனே, தனது 2.5 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் மற்றும் பஜ்ரா (தினை) சாகுபடி செய்தார். போதிய மழையின்றி, கடந்த இரு ஆண்டுகளில் மேனிற்கு நல்ல விளைச்சல் கிடைக்கவில்லை. "நான் கடந்த ஆண்டு விதைத்த விதைகள் முளைக்கவில்லை," என்று அவர் கூறினார். விவசாயத்தில் மூலம் மேனியின் ஆண்டு வருமானம் ரூ.20,000 ஆகும். அவர் ரூ. 5,000-6,000 பெறுகிறார். இதில் அவரது குழந்தைகள் அனுப்பும் பணமும் அடங்கும்."ஒவ்வொரு வருடமும் எனது வருவாய் கடுமையாக குறைந்து வருகிறது. எனது இந்த வயதில், இன்னமும் ஒரு வேலை கூட எனக்கு கிடைக்கவில்லை, "என்றார் அவர்.
தண்ணீருக்காக தோண்டும் பெரும் பணி
அதானியில் வசிக்கும் ஏறத்தாழ 6,00,000 மக்கள், தங்களது குடிநீர் தேவைகளுக்கு - குடிப்பதில் இருந்து விவசாயம் வரை - ஆழ்துளை கிணறுகளையே பெரிதும் சார்ந்துள்ளனர்; ஆனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பெரும்பாலன ஆழ்துளை கிணறுகளும் வறண்டுவிட்டன. சுமார் 120 அடி ஆழத்தில் உள்ள ஒருசில திறந்தவெளி கிணறுகள் மட்டுமே உள்ளன; ஆனால் தண்ணீரை எடுக்க, 700 முதல் 800 அடி ஆழம் செல்ல வேண்டும்; இதற்கு ஊராட்சியிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.
Source: District Statistical Office, Belagavi
"அவர்களின் நோக்கத்தின்படி ஆழ்துளை கிணறுகளின் சேவை இனி கிடைக்க வாய்ப்பில்லை” என்று, சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனத்தின் விவசாய நீர் மேலாண்மை நிபுணரும், உதவி பேராசிரியருமான ஏ.வி. மஞ்சுநாத் தெரிவித்தார். "மேலும், அதிக புளோரைடு காரணமாக ஆழ்துளை கிணறுகளின் தரமும் கூட மோசமாக உள்ளது” என்றார். நீரில் உள்ள புளூரைடு மற்றும் நைட்ரேட் அளவுகள், ஆரோக்கியமான வரம்புகளுக்கு அப்பாற்பட்டவை என, அதானி தாலுகா நீர் முகாமைத்துவ திட்டத்தின் அறிக்கையை 2017 மார்ச்சில் வெளியிட்ட மத்திய நிலத்தடி நீர் வாரியம் தெரிவிக்கிறது.
மேலும், கோலார், சிக்கபல்லாபூர் போன்ற இப்பகுதிகளில் உள்ள அணைகளும் வறண்டுவிட்டன.
எல்லையோர கிராமங்களின் நிலை
கர்நாடகாவில் கிட்டத்தட்ட 88.6% - அதாவது 176 தாலுகாக்களில் 156- வறட்சியின் தாக்கத்தில் உள்ளன. ராபி பருவத்தில் ஏற்பட்ட இழப்பை மதிப்பிடுவதற்கான ஒரு கூட்டு ஆய்வு மாநில மற்றும் மத்திய அரசுகளால் நடத்தப்பட்டது. எனினும், அந்த குழுவினர் இதுவரை கிராமங்களில், குறிப்பாக மகாராஷ்டிர எல்லைப்பகுதிகளில் பார்வையிடவில்லை என்று, கிராமவாசிகள் தெரிவித்தனர். தீவனம், வங்கிகள் மற்றும் டேங்கர் லாரி தண்ணீர் வழங்கல் போன்ற சில முக்கிய வசதிகள் செய்து தரப்பட்டாலும், அவற்றின் கிடைக்கும் தன்மை போதுமானதல்ல என்று, பிலாகவி மாவட்ட நிர்வாகத்தின் கணக்கெடுப்பு அறிக்கைகளை, இந்தியா ஸ்பெண்ட் மதிப்பீடு செய்ததில் தெரிய வருகிறது.
குடிநீர் இல்லாமல், கால்நடைகளுக்கு தீவனம், நீர்ப்பாசனத்திற்கான தண்ணீர் மற்றும் வாழ்வாதாரம் - மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் (MGNREGS) கீழ் வேலைவாய்ப்புகள் குறைவாகவே உள்ளன -எல்லையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் மகாராஷ்டிராவின் காவத்தே - மஹெங்கால், துல்கான், சல்கரே மற்றும் சாங்லி மாவட்டத்தின் மஹாலூங் பகுதிகளுக்கு குடிபெயர்ந்து செல்கின்றனர். அண்டை மாநிலத்தில் உள்ள வயல்கள் "நன்கு பாசனம்" செய்யப்பட்டுள்ளன. மேலும் "வேலை தேடுவது எளிது" என்று கிராமவாசிகளுக்கு இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.
பயிர் தோல்விக்கான இழப்பீடு
"நான் கடந்த ஆண்டு விதைத்த விதைகள் முளைக்கவில்லை," என்று, வடக்கு கர்நாடகாவின் வறட்சி பாதிக்கப்பட்ட அதானி தாலுகாவை சேர்ந்த 70 வயது பாண்டுரங்க மேனே (இடது) கூறினார். வருமானம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவதாகவும், இந்த வயதில் இனி வயலில் வேலை பார்க்க இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.
தண்ணீர் அதிகம் தேவைப்படும் கரும்பு, அதானியின் பெரிய வணிக பயிராகும். ஒரு சுய அழிவு வடிவத்தில் - வறண்ட கர்நாடகா முழுவதும் நன்கு அறியப்பட்டும் விவசாயிகள் கரும்பு பயிர்களை அதிக லாபம், வருவாய்க்காக இன்னமு தொடர்ந்து பயிரிடுகின்றன; நாட்டின் சர்க்கரை உற்பத்தியில் மூன்றாவது பெரிய கரும்பு உற்பத்தியாளராகவும், இந்தியாவின் சர்க்கரை உற்பத்தியில் 16% எனவும் கர்நாடகா உள்ளது. தற்போது, இது கிருஷ்ணா நதி கரையில் அமைந்துள்ள பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது.
பருத்தி, மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, கோதுமை மற்றும் பருப்பு போன்ற பல உலர்ந்த பயிர்கள், தண்ணீர் எளிதில் கிடைக்காத பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணா நதிக்கரையோரம் உள்ள அயின, ஷிர்ஹத்தி, சப்தசாகர், ஷங்கராட்டி, தாரூர் மற்றும் சாத்தி போன்ற கிராமங்கள், ஆற்றங்கரையில் இருந்து தொலைவில் உள்ள மற்றும் மழைப்பொழிவு குறைவாக பெறும் ஜம்பாகி, அஜூர், மடபவி, பாண்டெகவான், மாலாபாத், சிரூர், அனந்தபூர் மற்றும் சிவனூர் போன்ற கிராமங்கள் ஒப்பிடும்போது, தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள் நன்கு வளர்கின்றன.
ராபி பருவத்தில் (2018) போது தண்ணீர் இல்லாததால் அதானி பகுதியில் மொத்த பயிர் இழப்பு 34,604 ஹெக்டேர் (1,60,774 ஹெக்டேர் சாகுபடியில்). இதில், மத்தியக்குழுவின் அறிக்கை அடிப்படையில் தேசிய பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியாக, 23,375 விவசாயிகள் ரூ .2,353.08 லட்சம் பயிர் இழப்பீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டது. எனினும், இந்த நிதி இன்னும் விடுவிக்கப்படவில்லை.
பிரதம மந்திரி பாசல் பீமா யோஜனா (PMFBY) பயிர் காப்பீட்டு திட்டம், பெல்காம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பதிவுகளை கண்டது. 2016 இல் மட்டும் 140,089 விவசாயிகள் ராபி பருவத்தில் பதிவு செய்தனர்; காரீப் பருவத்தில் 31,538 விவசாயிகள் பதிவு செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் சரிவு கண்டது; நல்ல மழை காரணமாக, ராபி பருவத்தில் 1,910 விவசாயிகள் மற்றும் காரீப் பருவத்தில் 151 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்தனர்.
கடந்த 2018 இல், ராபி பருவத்தில் 1,4749 விவசாயிகள், காரீப் பருவத்தில் 8,547 விவசாயிகள் பயிர்க்காப்பீடுக்கு பதிவு செய்தனர். இருப்பினும், விவசாயிகளுக்கு 2016ஆம் ஆண்டு வரை மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 2017 மற்றும் 2018 ஆண்டுக்கான பயிர் சாகுபடி பொய்த்துப்போன விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தரப்படவில்லை.ஏனெனில் மத்திய அரசு அதற்கான நிதியை இன்னமும் விடுவிக்கவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. பொம்மன்ஹல்லி, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
கால்நடைகளுக்கு தீவனம் இல்லை
கெயில்கான் கிராமத்தில், கால்நடைகளுக்கு தேவையான மேய்ச்சல் இல்லை. "எங்களுடைய கால்நடைகளை வளர்ப்பதற்கு முற்றிலும் தீவன வங்கிகளை நாங்கள் நம்பி இருக்கிறோம்," என்று, இதே கிரமத்தை சேர்ந்த 55 வயது அன்னப்பா நிம்பல் தெரிவித்தார். நான்கு பசுக்கள் சொந்தமான மானே, ஒருஒப்பந்தத்திற்கு சம்மதித்தார். பிப்ரவரி 2, 2019 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ஷிரூர் கிராம தீவன வங்கி, ஷிருர், சம்பாரகி மற்றும் பண்டேகான் கிராமங்களுக்கு வழங்குகிறது. மோல், கில்காகான் மற்றும் அஜூர் பஞ்சாயத்துகளிலும் தீவன வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன.
மழையின்மை மற்றும் தீவனம் இருப்பு இல்லாத வங்கிகளால் அதானி தாலுகா விவசாயிகள் தங்களது கால்நடைகளை தங்களது உறவினர் இடங்களுக்கு அனுப்பிவிடுகின்றனர்; அல்லது கால்நடைகளை பசுமை தேடி அதன் போக்கில் மேய விடுகின்றனர்.
தீவனம் பெறுவதற்கு, விவசாயிகள் அதார் அடையாள அட்டையை வழங்க வேண்டும் மற்றும் கணக்காளர் கையொப்பமிடப்பட்ட ஒரு புத்தகத்தில் கொள்முதல் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் விவசாயிகளின் பட்டியலையும் கால்நடை உரிமையாளர்களையும் கால்நடை அதிகாரிகள் வழங்குகின்றனர். "இது தீவனத்திற்கான உண்மையான தேவையை உறுதிப்படுத்துகிறது மற்றும் தீவன நிதிகளின் தவறான பயன்பாட்டை தடுக்கிறது" என்று ஷிரூர் தாலுகா அலுவலக வருவாய் துறை கணக்கர் (கிராம கணக்காளர்) எம்.பி. பட்டீல், 35, தெரிவித்தார். ஷிரூர் கிராமத்தில் மட்டும் 2,200 கால்நடைகள் உள்ளன. ஏறத்தாள 180 விவசாயிகள் தீவன வங்கியின் சேவைகளை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.
ஒவ்வொரு கால்நடைக்கும் ரூ.1 என்ற விலையில் 15 கிலோ தீவனம், ரூ.2 என்ற விலையில் உலர் தீவனம் வழங்கப்படுகிறது. இருப்பினும், ஆரோக்கியமான மாடு போதுமான பால் வழங்க, குறைந்தபட்சம் 20-25 கிலோ எடையுள்ள தீவனம் தேவையென கிராமவாசிகள் தெரிவித்தனர். சில நேரங்களில், மகாராஷ்டிரா விவசாயிகள் தங்கள் உறவினர்களின் இடங்களுக்கு கால்நடைகளை அனுப்பி வைக்கிறார்கள்; அங்கு போதுமான தண்ணீர் மற்றும் தீவனம் உள்ளது.
சர்க்கரை ஆலைகளில் இருந்து கிடைக்கும் கரும்பு சக்கை, தீவனத்தில் முதன்மையானது; ஒவ்வொரு தீவன வங்கிக்கும் 1,518 டன் கரும்பு சக்கை கொண்டு வரப்படுகிறது. இருப்பினும், கோடையில் ஆலைகள் மூடும்போது, தீவன பற்றாக்குறை ஏற்படுகிறது. முன்பெல்லாம் கோசாலைகள் (மாடு தங்கும் இடம்) இருந்தன; ஆனால் இது கடந்த ஐந்து ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. "அதை மீண்டும் கொண்டு வர வேண்டும்," என்றார் சுதார்.
முன்பெல்லாம், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கோசாலைகளில் விடுவர்; அவை பஞ்சாயத்து வளர்ச்சி மற்றும் வருவாய் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு பணிக்குழுவால் நடத்தப்படுகின்றன. இவையே ஐந்து ஆண்டுகளுக்கு முன் தீவன வங்கிகளால் மாற்றப்பட்டன.
விவசாயிகள் அருகில் உள்ள தீவன வங்கிக்கு செல்ல மூன்று முதல் நான்கு கி.மீ. தூரம் நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். "வறட்சி நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், சம்பராகி மற்றும் பிற கிராமங்களில் அதிகமான தீவன வங்கிகள் திறக்கப்படும்" என்று தலதி பாட்டீல் கூறினார்.
வறட்சியின் போது வேலை உருவாவது முக்கியம்
"எங்களுக்கு விவசாய நிலங்கள் இருந்தாலும், அதை வைத்து இருக்க எங்களால் முடியவில்லை. நூறு நாள் வேலை உற்தி திட்டத்தின் (MGNREGA) கீழ் எங்களுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. நாங்கள் ஒரு கொடுமையான வாழ்க்கையை வாழ்கிறோம்,"என்கிறார் கில்காகன் விவசாயியான நிம்பால். எந்த விருப்பமும் இல்லாமல், கிராமவாசிகள் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவுக்கு இடம் பெயர்ந்து விவசாய, கட்டுமான பணிகளை தேடுகின்றனர். ஷிரூரை சேர்ந்த மானேவுக்கு இரு மகன்கள்; அவர் தனது மனைவியுடன் மகாராஷ்டிராவின் மீராஜ் மற்றும் சாங்லியில் தனித்தனியே வேலை செய்கிறார்கள்."அவர்கள் ஒரு மாதத்திற்கு ஒருமுறை கிராமத்திற்கு வருகிறார்கள்," என்று மானே கூறினார்.
நூறு நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய பணிகள் மேற்கொள்வதை கிராம ஊராட்சிகள் நிறுத்திவிட்டன; மேலும் இத்திட்டத்தின் (MGNREGA) கீழ் முடிக்கப்பட்ட பணிகளின் சதவீதம் பல ஆண்டுகளாகவே குறைந்து வந்துள்ளது. இத்திட்டத்தில் புதிய பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதானியில் வழங்கப்பட்ட வேலை அட்டைகளின் எண்ணிக்கை 3,226; ஆனால் பதிவு செய்து செயல்பாட்டில் இருப்பவர்கள் 1,403 தொழிலாளர்கள் என்று, நூறு நாள் வேலை உறுதி திட்டத்தின் இணையதள தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பதிவு செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை, நடப்பு ஆண்டில் 281 பேர் மட்டுமே.
"ஜில்லா பஞ்சாயத்து கிராமங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும். இது வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்புக்கு உதவும், மேலும் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்” என்று பிலகாவியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவாஜி ககனிகர், 55, கூறினார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆண்டுக்கு 150 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்படுவதால், கிராமப்புற மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக நூறு நாள் வேலை உறுதித்திட்டம் உள்ளது. "இந்த திட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி ஏழை மக்கள் நாளொன்றுக்கு இரு உணவை பெற உதவும் ஒரே திட்டமாகும்" என்று அரசுசாரா அமைப்பான ஜனஜகரனின் செயற்பாட்டாளரும், பிலகாவியில் உள்ள ஊழல் எதிர்ப்பு இயக்கமான பிரஷ்டாச்சர் நிர்முலன் சமிதியின் உறுப்பினருமான சிவாஜி ககனிகர், 55 தெரிவித்தார்.
இருப்பினும், இந்தியா ஸ்பெண்டிடம் பேசிய சில கிராமவாசிகள், கிராமப்புற பெண்கள் அதிகம் போராடும் வரை வேலைகள் வழங்கப்படுவதில்லை என்றனர். சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை, ஊழல் பரவலாக உள்ளது என்று அவர்கள் கூறினர். சில பகுதிகளில், மக்கள் போலி வேலை அட்டைகள் மற்றும் வங்கிக் கணக்குகளை உருவாக்குகிறார்கள் என்று ககனிகர் கூறினார். வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை நீரை சேகரிக்கும் வகையில் தடுப்பணைகளை நூறு நாள் வேலை உறுதி திட்டத்தில் கட்ட வேண்டும். இது வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றார் அவர். அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
குறைபாடுள்ள நீர் திட்டங்கள்
அரசின் தண்ணீர் லாரிகள் ஒவ்வொரு நாளும் ஒரு நபருக்கு 40 லிட்டர் தண்ணீரை வழங்க வேண்டும். ஆனால் 15-20 லிட்டர் (இரண்டு முதல் மூன்று குடங்கள்) மட்டுமே கிடைக்கும் என்கின்றனர் கிராமவாசிகள். வடக்கு கர்நாடகாவின் அதானி தாலுகா, மோல் கிராமத்தில் லாரியில் இருந்து தண்ணீர் பெற வரிசையில் காத்திருந்த மக்கள்.
அதானி, உகர் குர்த் நகரத்தை சேர்ந்த சாவித்ரி ரோகாடே, 45, அண்மையில் குடிநீர் பற்றாக்குறைக்கு எதிராக அனைத்து பெண்கள் எதிர்ப்பு ஊர்வலத்திற்கு தலைமை தாங்கினார். தண்ணீர் பிரச்சனைக்கு அரசியல்வாதிகளை அவர் குற்றம் சாட்டினார்: "இது சில ஆண்டுகளாக நடந்து வருகிறது, இப்பிரச்சினைக்கு அதிகாரிகளால் ஒரு நிரந்தர தீர்வை காண முடியவில்லை. வசதி உள்ளவர்கள் மட்டும் ரூ.20க்கு ஒரு குடம் தண்ணீர் வாங்க முடியும். ஏழைகள் எப்படி தங்களது தாகத்தைத் தணிப்பார்கள், தங்கள் கால்நடைகளுக்கு எப்படி வளர்ப்பார்கள்? தண்ணீர் பற்றாக்குறை தீரும் வரை கிராமங்களுக்கு போதியளவு அதிகாரிகள் தண்ணீர் டேங்கர்களை அனுப்ப வேண்டும்” என்றார்.
கிராமங்களுக்கு நதி நீரை வழங்கும் மாநில அரசின், பல்நோக்கு கிராம குடிநீர் திட்டம்- எம்.வி.எஸ் (MVS), கிருஷ்ணா ஆற்றில் இருந்து அதானி கிராமங்களுக்கு குடிநீரை கொண்டு வருகிறது. இருப்பினும், கோடையில் ஆறு வறண்டுவிட்டால், இத்திட்டம் செயல்படாது; அதானி மற்றும் காக்வாட் தாலுகாக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த "வடிவமைப்பு குறைபாடு" பல்வேறு நீர் திட்டங்களில் உள்ளது என என்ற அறிக்கையை, கிராமப்புற மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா, மே 18, 2019இல் செய்தியாளர் சந்திப்பில் ஒப்புக் கொண்டார். தண்ணீர் பற்றாக்குறை மற்றும் காப்புப்பிரதி திட்டம் இல்லாததால் சுமார் 75 நீர் திட்டங்கள் செயல்படுவது நின்றுவிட்டதாக அவர் கூறினார்.
கடந்தாண்டு போல் இல்லாமல், மஹாராஷ்டிரா அரசு கொய்னா அணையில் இருந்து வட கர்நாடகாவின் வறட்சி நிறைந்த கிராமங்களுக்கான நீரை விடுவிக்காதது, நிலைமையை மோசமாக்கி உள்ளது.
கர்நாடகாவின் 13 நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் அளவுகள் ஒட்டுமொத்த சேமிப்புத் தொகையில் 13.38% என்று, கே.எஸ்.என்.டி.எம்.சி. தரவுகள் கூறுகின்றன.
பொது-தனியார் கூட்டாண்மை முறையில் ஒரு பசாவேஸ்வர-கெம்ப்வாட் லிப்ட் பாசன திட்டம் 1,363 கோடி ரூபாய் செலவில் (4 204.88 மில்லியன்) அதானியில் சுமார் 27,462 ஹெக்டேர் பாசன வசதி செய்ய இலக்காக கொண்டுள்ளது. இது கிருஷ்ணா நதியில் இடது கரையில் இருந்து சுமார் 20 கிராமங்களை பூர்த்தி செய்யும். இருப்பினும், இத்திட்டம் செயல்பட குறைந்தது மூன்றரை ஆண்டுகள் ஆகும் என்று, இத்திட்டத்துடன் தொடர்புடைய அதிகாரி எம்.ஸ்ரீனிவாஸ், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் கீழ் கர்நாடகாவிற்கு 64% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்களிப்பு 2013-14 ஆம் ஆண்டில் ரூ .868.76 கோடியில் இருந்து, 2018-19 ஆம் ஆண்டில் ரூ. 312.33 கோடியாக குறைந்தது என, டெக்கான் ஹெரால்ட் பிப்ரவரி 2019 இல் செய்தி வெளியிட்டது.
அனுபவித்து வருவதால், தடுப்பணைகள் (ஓடி வீணாகும் மழைநீரை சேமிக்க அமைக்கப்பட்ட கட்டுமானம்) மற்றும் ஏரிகள் வறண்டு போயுள்ளன. அரசு, சில ஏரிகளை தூர்வாரி வருகிறது. ஆனால் கிருஷ்ணா நதியில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் குழாய் பொருத்துவது மழைக்காலம் தொடங்கும் முன்பே முடிக்கப்படவில்லை.
ஒவ்வொரு நாளும் ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 40 லிட்டர் தண்ணீரை நீர் விநியோகிக்க வேண்டும். இருப்பினும், கிராமவாசிகள் தங்களுக்கு 15-20 லிட்டர் (இரண்டு முதல் மூன்று குடங்கள்) மட்டுமே கிடைப்பதாக கூறுகின்றனர். - இது குளிக்க, துணி துவைக்க, வயல்களுக்கு அனுப்ப போதுமானதல்ல - எனவே இவற்றுக்கும் குடிநீரையே பயன்படுத்துகின்றனர்.
வறட்சி பிடியில் இருந்து காக்க
வெற்றிகரமான உலர் நில விவசாய பயிர்கள் மண்ணில் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவுகின்றன, இது வறட்சி காலங்களில் ஓரளவிற்கு நீடிக்கும். "உற்பத்தித் திறனை அதிகரிக்க அல்லது நல்ல விளைச்சலைப் பெற, வறட்சியின் போது கூட, விவசாயிகள் தாழ்வான நிலத்தில் செங்குத்தாக உழவு செய்ய வேண்டும். இதனால் மழைக்காலங்களில் மழைக்காலம் வயல்களில் அறுவடை செய்யப்படுகிறது, இது மண்ணின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது,” என்று, ஏ.ஐ.சி.ஆர்.பி. மூத்த வேளாண்மை விஞ்ஞானி சர்க்காட் வி எஸ் கூறினார்.
ராபி பருவத்தில், விதைகளை விதைக்கும்போது விவசாயிகள் சிறிய சதுர வடிவ முறைகளை பின்பற்றி நிலத்தில் பயிரிட வேண்டும்; இது தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளவும், மண்ணின் ஈரப்பதத்தை பராமரிக்கவும் உதவுகிறது என்ற சர்க்காட், அதனாலேயே அதானி அருகே விஜயபுராவில் உள்ள ஹனாவத் கிராம விவசாயிகள் வறட்சியில் கூட இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் நல்ல மகசூல் பெற்று வருகின்றனர் என்றார்.
சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் போன்ற நுண்ணிய நீர்ப்பாசன நுட்பங்கள் வறண்ட நிலங்களில் சாத்தியமான விவசாயத்தை எளிதாக்கும். “கால்வாய்கள் வழியாக எளிதாக, உடனடியாக தண்ணீர் கிடைப்பதால், சொட்டுநீர் பாசனத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இருப்பினும், கால்வாய்களை நம்பி இருக்காமல் வாழும் மக்கள் எப்போதும் தண்ணீரை குறைந்தளவே பெறுகிறார்கள். நீரோட்டத்திற்கு எதிரான பகுதி வாழ் விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்தைப் பயன்படுத்தினால், நீரோட்ட போக்கில் வசிப்பவர்கள் கடும் நீர் அழுத்தத்தை அனுபவிக்க மாட்டார்கள்,” என்று மஞ்சுநாத் தெரிவித்தார்.
வேரை சுற்றி பாத்தி போன்ற பாரம்பரிய மற்றும் எளிதான நுட்பங்களும் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், தண்ணீரைப் பாதுகாக்கவும் உதவும். தடுப்பணை அமைத்தல், மழைநீரை சேமிக்கவும், அது வீணாவதை தடுக்க உதவும் மற்றொரு நுட்பமாகும். கர்நாடகாவின் வறட்சி நிலைமையைத் தணிக்க மண் மற்றும் நீர் பாதுகாப்பு திட்டங்களில் தீவிரமான முதலீடுகள் அவசியம்.
வறட்சி குறித்த எங்களின் நிறைவு மற்றும் ஆறாவது பகுதி இதுவாகும். முந்தைய கட்டுரைகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.
(ஷங்கர், பெலகாவியை சேர்ந்த ப்ரீலான்ஸ் எழுத்தாளர் மற்றும் பான்-இந்தியா நெட்வொர்க் அமைப்பின், 101 ரிப்போர்ட்டர்ஸ்.காம் உறுப்பினர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.