மும்பை: 2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 83 பேர் நீரில் மூழ்கி -இது, காணப்படாத பொது சுகாதார பேரழிவு - இறந்துள்ளனர் என, 2020இல் வெளியாகியுள்ள இந்தியாவில் விபத்து இறப்புகள் மற்றும் தற்கொலைகள் (ஏடிஎஸ்ஐ) குறித்த அறிக்கை தெரிவிக்கிறது. இன்னமும் பாதுகாப்பற்ற ஏரிகள், குளங்கள், ஆறுகள் உள்ள ஒரு நாட்டில், குறிப்பாக கிராமப்புறங்களில், நீரில் மூழ்கி ஏற்படும் இறப்புகளை தடுக்க, நீர்நிலைகளை சுற்றி தடுப்புகளோ, பாதுகாப்பான படகு விதிகளோ, பள்ளிகளில் குழந்தைகளுக்கு நீர் பாதுகாப்பு குறித்த பாடங்கள் என, எந்தவொரு கொள்கையும் அரசிடம் இல்லை.

கடந்த 2018இல் மட்டும் 30,187 இறப்புகள் ஏற்பட்டன; இது குறைந்த மதிப்பீடாக இருக்கலாம் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்; ஏனெனில் நீரில் மூழ்கி ஏற்பட்ட பல இறப்புகள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இந்தியாவில் 2018இல் பதிவான அனைத்து தற்செயலான இறப்புகளில் போக்குவரத்து விபத்துக்கள் (43%), திடீர் மரணங்கள் (11%) ஆகியவற்றை தொடர்ந்து நீரில் மூழ்கி இறப்பு (7%) மூன்றாவது இடத்தில் உள்ளதாக, தேசிய குற்ற பதிவு பணியகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

நீரில் மூழ்கும் இறப்புகளுக்கு பொதுவான காரணம் எதிர்பாராதவிதமாக நீர்நிலைக்குள் விழுவது (இது இறப்புகளில் 66%); இதனால் 19,939 பேர் இறந்தனர். மேலும் படகு கவிழ்ந்தது (1 சதவீதத்திற்கும் குறைவாக) 258 இறப்புகளுக்கு வழிவகுத்தது. நீரில் மூழ்கிய இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு (9,990) இறப்புக்கு எதிர்பாராத சம்பவமே காரணமாகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் நீரில் மூழ்கி ஏறத்தாழ 3,60,000 பேர் இறந்தனர்; இது உலகில் தற்செயல் காயம் தொடர்பான இறப்புகளுக்கு மூன்றாவது முக்கிய காரணியாக அமைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) 2018 ஜனவரி அறிக்கை தெரிவித்துள்ளது.

குறைத்து மதிப்பிடப்படும் நீரில் மூழ்கிய இறப்புகள்

இந்தியாவில் ‘ஆரோக்கியமான வாழ்க்கை’ இழப்பு மதிப்பீடுகள் குறித்த 2019 டிசம்பர் தி லான்செட் அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டில் சுமார் 62,000 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது,விபத்து இறப்புகள் மற்றும் தற்கொலைகள் (ஏடிஎஸ்ஐ) என பதிவான (30,279) இறப்புகளை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம். நீரில் மூழ்கி பல வருடங்கள் (YLL) மத்திய மாநிலம் (எம்.பி.) மற்றும் சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலமான அசாமில் நீரில் மூழ்கி இறந்தவர்களில் 11% பேர் உள்ளனர் என்று லான்செட் அறிக்கை தெரிவித்துள்ளது.

நீரில் மூழ்கிய உயிரிழந்தோர் வருட வீதம் (YLL) மத்திய பிரதேசம் (ம.பி.), சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கில் உள்ள அசாமில் அதிகபட்சமாக 11% என்று இருந்ததாக, தி லான்செட் அறிக்கை தெரிவித்துள்ளது. "ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் தான் நீரில் மூழ்கி இறப்பது மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ள அறிக்கை" என்று ராஷ்ட்ரிய லைப் சேவிங் சொசைட்டி (இந்தியா) நிறுவனர் மற்றும் தலைவரான ரியர் அட்மிரல் (ஓய்வு) புருஷோத்தம் தத் சர்மா கூறினார்; இது, செயல்பாட்டு பாதுகாப்பு, முதலுதவி மற்றும் புத்துயிர் தரும் கல்வித்திட்டங்களை வழங்கும் ஒரு அரசு சாரா அமைப்பு. கடற்கரை மற்றும் ஆற்றங்கரையோர குடியிருப்புகள் நீரில் மூழ்கி ஏற்படும் இறப்புகள் பதிவு செய்யாதது அல்லது விபத்து என பதிவு செய்வதால், இந்த எண்ணிக்கை 1,00,000-க்கும் மேல் இருக்கக்கூடும்.

ஒரு பேருந்தோ அல்லது வாகனமோ ஆற்றில் விழுந்து இறப்பு நேரிட்டால், அது விபத்து என்றே வகைப்படுத்தப்படுகிறது; நீரில் மூழ்கி ஏற்பட்டதாக கருதப்படுவதில்லை. சில நேரங்களில், படகு கவிழ்ந்ததால் ஏற்படும் நீரில் மூழ்கி ஏற்படும் இறப்புகள் கூட, விபத்து மரணங்களின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது என்ற ஷர்மா, நீரில் மூழ்கி இறப்பவர் எண்ணிக்கை குறைத்து மதிப்பிடுவதற்கான காரணங்கள் விளக்கினார்.

"நாட்டின் 70% கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் குளம், ஏரி, ஆறு மற்றும் நீர்த்தேக்கம் போன்ற ஏதேனும் நீர்நிலைகளை கொண்டுள்ளன. அதில் பெரும்பாலானவை பாதுகாப்பற்றவை, மேற்பார்வை செய்யப்படாதவை. இது, நீரில் மூழ்கும் சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது," என்றார் அவர். நீரில் மூழ்குவோரை காப்பாற்றுவதற்கு உயிர் காக்கும் திறன்களை பற்றி மக்களுக்கு தெரியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"ஒருவரை கொல்வதற்கு, தண்ணீரில் மூழ்கடிக்கச் செய்வது ஒரு சுலபமான வழி" என்று சர்மா கூறினார். நீரில் மூழ்கிய இறப்பு தொடர்பான வழக்குகளை பதிவு செய்வது கடினம்; இதனால் வழக்கு பதிவு செய்ய குறிப்பாக கிராமப்புறங்களில் போலீசார் தயங்குவதாக அவர் கூறினார். நகர்ப்புறங்களில் கூட, ஊடகங்களால் வெளிச்சத்திற்கு வரும் வழக்குகள் மட்டுமே பதிவாகின்றன என்றார்.

நீரில் மூழ்குவதை தடுக்க கொள்கை, விழிப்புணர்வு மற்றும் பயிற்சி தேவை

"உயிரை காப்பது என்பது முக்கியமான ஒன்று," ஆனால் இதை உணர நம் நாடு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டுள்ளது என்ற சர்மா, "நீரில் மூழ்குவது தடுக்க மற்றும் பாதுகாப்பது தொடர்பான எந்ந்தவொரு மத்திய கொள்கையோ அல்லது அதை உருவாக்கும் அதிகாரமோ நம்மிடம் இல்லை" என்றார்.

தடுப்பு நடவடிக்கைகளுக்கான தேசிய அல்லது மாநில அளவிலான விரிவான வழிகாட்டுதல்களைக் கொண்டிருப்பது காலத்தின் கட்டாயம் என்று, கேரளாவின் மலபார் பிராந்தியத்தில், பள்ளி குழந்தைகள் நீரில் மூழ்குவது குறித்த ஆய்வை மேற்கொண்ட, தோஹாவை சேர்ந்த மருத்துவ பயிற்சியாளர் ஜசீனா நடுவேதில், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

நீரில் மூழ்குவதைத் தடுக்க ஆறு கொள்கை தலையீடுகளை உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைக்கிறது: நீரின் அணுகலை கட்டுப்படுத்தும் தடைகளை நிறுவுதல், குழந்தைகளை தண்ணீர் பகுதியில் இருந்து அகற்றி, அவர்களுக்கு பராமரிப்புடன் பாதுகாப்பான இடங்களை (பகல்நேர பராமரிப்பு மையம் போன்றவை) வழங்குதல், பள்ளி வயது குழந்தைகளுக்கு நீச்சல் மற்றும் நீர் பாதுகாப்பு திறன்களைக் கற்பித்தல், பாதுகாப்பான மீட்பு மற்றும் புத்துயிர் பெறுதல் குறித்து மக்களுக்கு பயிற்றுவித்தல், பாதுகாப்பான படகு சவாரி, கப்பல் மற்றும் படகு விதிமுறைகளை அமைத்தல் அதை செயல்படுத்துதல், இறுதியாக வெள்ள அபாயங்கள் மற்றும் பிற ஆபத்துகளை, மாநில மற்றும் தேசிய அளவில் நிர்வகித்தல் என்பனவாகும்.

கண்காணிப்பு (இது சுய உதவிக்குழுக்களால் செய்யப்படலாம் அல்லது அரசு குழந்தை பராமரிப்பு மையங்கள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்கலாம்) மூலம், குழந்தை நீரில் மூழ்குவதைக் குறைப்பதற்கான வாய்ப்பாக காட்டப்பட்டுள்ளது என்று உலக சுகாதா அமைப்பின் காயம் தடுப்பு மற்றும் காயம் தடுப்பு பிரிவு ஒத்துழைப்பு மையத்தின் தலைவரும், ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் இந்தியா அமைப்பை சேர்ந்தவருமான ஜக்னூர் ஜக்னூர் கூறினார். உயிர் காக்கும் நீச்சல் திட்டத்தை உதாரணம் காட்டிய அவர், உள்ளூர் குளங்களில் ஆறு முதல் 10 வயது குழந்தைகளுக்கு, 12-க்கும் மேற்பட்ட அமர்வுகளில் நீச்சல் கற்பித்தது, குழந்தைகள் நீரில் மூழ்கும் அபாயத்தை குறைத்ததாக தெரிவித்தார். "மிகவும் தாமதமாக, நமக்கு ‘சாலை பாதுகாப்பு’ குறித்த விழிப்புணர் ஏற்பட்டுள்ளது. ஆனால் நீரில் மூழ்குவதைத் தடுப்பதிலும் இதுபோல் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்," என்று சர்மா கூறினார். "இதர்கு ஒரேவழி, நாடு முழுவதும் பெரிய உயிர் காக்கும் வங்கியை அமைப்பது தான். இதனால் ஒரு விபத்து அல்லது நீரில் மூழ்கும் சம்பவம் நடந்தாலும், அருகிலுள்ள ஒருவருக்கு என்ன செய்வது என்று தெரியும்" என்றார். நீரில் மூழ்கும் நிகழ்வுகளின் போது, உயிர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்ற பயிற்சியை தர, ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு ‘உயிர் காக்கும் அமைப்புகளை’ ஏற்படுத்த வேண்டும் என்றார்.

வெகுஜன மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி இது தொடர்பாக மக்கள் அதிக விழிப்புணர்வு இருக்க வேண்டும் மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சாதனங்களுக்கு அரசிடம் அதிக வளங்கள் இருக்க வேண்டும் என்று நடுவேதில் கூறினார். நீரில் மூழ்கி இறந்தவர்களில் 30% மகாராஷ்டிரா மற்றும் ம.பி.

கடந்த 2018இல் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் (4,542 அல்லது 15%) நீரில் மூழ்கி இறந்துள்ளனர்; அடுத்து மகாராஷ்டிரா (4,516 அல்லது 15%), கர்நாடகா (2,486 அல்லது 8%), தமிழ்நாடு (1,785 அல்லது 6%) மற்றும் குஜராத் (1,670 அல்லது 5.5%) உள்ளன. இந்தியாவில் நீரில் மூழ்கி இறப்போரில் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கை இந்த மாநிலங்கள் தான் உள்ளன.

நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொள்வது, இறப்பதற்கான ஒரு வழியாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2018 இல் 6,579 இறப்புகள் (அனைத்து தற்கொலைகளில் 5%) நீரில் மூழ்கியதால் ஏற்பட்டவை. இதில் அதிக எண்ணிக்கையை மகாராஷ்டிரா (1,287), கர்நாடகா (866), தமிழ்நாடு (632) கொண்டுள்ளன.

நீரில் மூழ்கி அதிகமான ஆண்கள் இறக்கின்றனர்

இந்தியாவில் நீரில் மூழ்கி இறப்பவர்களில் 78%பேர் ஆண்கள் தான். உலகம் முழுவதும் அதிகளவில் ஆண்களே நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளனர். இது, பெண்களின் இறப்பு விகிதத்தை விட இரு மடங்கு அதிகமாக உள்ளது. தண்ணீரில் அதிக நேர பயன்பாடு, தனியாக நீந்துவது, நீந்தும் முன் மது அருந்துவது மற்றும் படகு சவாரி செய்வது போன்ற ஆபத்தான நடவடிக்கைகளே இதற்கு காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நீரில் மூழ்கி மருத்துமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்படுவதிலும் பெண்களை விட ஆண்களே அதிகம். கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட நீரில் மூழ்கி 30,187 பேர் இறந்த நிலையில், அதில் 52% (15,686) 18 முதல் 45 வயதுடையவர்கள். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 3,968 அல்லது 13% நீரில் மூழ்கி இறந்தனர். 5-14 வயதுடைய குழந்தைகளின் இறப்புக்கு உலகளவில் மூன்றாவது முக்கிய காரணமாக நீரில் மூழ்வது உள்ளது.

"கிராமப்புறங்களில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குளம் அல்லதுகுட்டை இருக்கும் சூழலில், பெரும்பாலான குழந்தைகள் உரிய கண்காணிப்பின்றி, தாய் வீட்டு வேலைகளில் மூழ்கியிருக்கும் தருணத்தில், தண்ணீரில் மூழ்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர்" என்று ஜக்னூர் கூறினார். நீரில் மூழ்கிய பின் வாந்தி எடுக்க வைப்பதற்காக ‘குழந்தையைச் சுழற்றுவது’ போன்ற மருத்துவ தவறுகள், இருதய புத்துயிர் பெறுவதற்குப் பதிலாக, குழந்தைகளையும் மேலும் ஆபத்தில் ஆழ்த்துவதாக அவர் கூறினார். "பெரும்பாலான மரணங்கள் குழந்தையின் வீட்டில் இருந்து 20 மீட்டருக்குள்ளாகவே நிகழ்கின்றன" என்று ஜக்னூர் கூறினார்.

(மல்லபூர், இந்தியா ஸ்பெண்ட் மூத்த கொள்கை பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.