மும்பை: கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும், மும்பை புறநகர் ரயில்வே இருப்புப்பாதையில், தினமும் 8 பேர் இறந்தது, அரசு ரயில்வே காவல்துறை (ஜி.ஆர்.பி.) புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது. இது, 2013ஆம் ஆண்டில், தினமும் 10 பேர் என்ற எண்ணிக்கையை விட, 20% குறைவு என்பது, சற்று ஆறுதலான விஷயமாகும்.

மும்பை நகரில் இயக்கப்படும் 2,800 ரயில் சேவைகளில், தினமும் 8 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர். இது, ஐதராபாத் நகர மக்கள் தொகையை விட அதிகம். உலகின் அதிக ரயில் பயணிகளின் அடர்த்தியை கொண்டிருப்பதும் மும்பை நகரமாகும்.

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழில், வெளியான செய்தியில், மும்பை பந்த்ரா ரயில் நிலையத்தில், 2018, ஜூலை 19-ம் தேதி தண்டவாளத்தை இரு குழந்தைகளுடன் கடக்க முயன்ற பெண், ரயில் மோதி இறந்தார். இரு குழந்தைகளும், படுகாயமடைந்தனர்

மற்றொரு சம்பவத்தில், மும்பை போரிவேலி ரயில் நிலையத்தில், நடைமேடை மற்றும் ரயிலுக்கு இடையே சிக்கி, 50 வயது வங்கி பெண் ஊழியர் இறந்ததாக, 2018, ஜூலை 13-ம் தேதி, ‘பர்ஸ்ட் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

மும்பை எல்பின்ஸ்டோன் ரயில் நிலையம், 2018, ஜூலை 19-ஆம் தேதி, பிரபாதேவி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. உள்கட்டமைப்பு வசதிகள், பயணிகள் பாதுகாப்பில் அக்கறை காட்டுவதற்கு பதில், இதுபோன்ற செயல்களில் மட்டுமே, ரயில்வே கவனம் செலுத்துவது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளும், வரவேற்பு தெரிவித்து கருத்துக்களும் பதிவிடப்பட்டன.

ரயில் நிலைய பெயர் மாற்றத்தை வேறுசிலர் வரவேற்றுள்ளனர்.

மும்பை நகரில், (2018 ஜூலை, 20ம் தேதி வரை) கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், ரயில் இருப்பு பாதைகளில் 18,050 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 89% பேர் ஆண்கள், 11% பேர் பெண்கள். இறந்தவர்களில் பலர், அடையாளம் காணப்படவில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Source: Shodh
Note: Deaths recorded by respective railway police stations.

மும்பை மத்திய பிரிவில், அதிகபட்ச பயணிகள் இறந்துள்ளனர்; 2017ஆம் ஆண்டில் அதிகபட்சமாக (368), கல்யாண் ரயில் நிலையத்தில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. அடுத்த இடங்களில், குர்லா (331), தானே (324) ஆகியன உள்ளன.

ரயில் பெட்டிகளில் இருந்து கீழே விழுந்து தான், பயணிகள் அதிகளவில் இறந்துள்ளனர். பெட்டிகளின் கொள்ளளவை விட அதிக பயணிகள் பயணிப்பதே இதற்கு காரணம் என்று, புறநகர் ரயில்கள் குறித்த, 2016 ஆம் ஆண்டுக்கான, இந்திய தலைமை தணிக்கையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-15ஆம் ஆண்டில், மும்பை புறநகர் ரயிலின் மத்திய சேவையில், பெட்டி ஒன்றுக்கு சராசரியாக, நெரிசல் நேரங்களை விட 6% (2666) அதிகமான பயணிகள் பயணித்துள்ளனர். இது, மேற்கு பிரிவில், 9% (2,743) ஆக இருந்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

3 ஆண்டுகளில் 49,790 பேரை ‘காவு’ வாங்கிய ரயில்வே!

கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து, 2017ஆம் ஆண்டு வரையிலான, 3 ஆண்டுகளில், நாடு முழுவதும் ரயில் மோதி, இறந்தவர்களின் எண்ணிக்கை, 49,790 என, 2018 ஜூலை 18-ல் மக்களவையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

“இருப்பு பாதையை கடப்பது, பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காதது, மேம்பாலங்களை பயன்படுத்தாதது, மொபைல்போன் பேசியவாறு கடப்பது போன்றவையே விபத்துக்கு காரணம்” என்று, அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும், இருப்பு பாதையை கடந்த குற்றத்துக்காக, 1 லட்சத்து, 73 ஆயிரத்து, 112 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(மல்லபூர், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர் ஆவார்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.