மும்பை: 2018ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் 678 பேர் தேர்வான நிலையில், அவர்களில் 62 பேரே பெண்கள் என, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரங்களை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் (ம.பி.), சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் 93 மில்லியன் பெண்கள் உள்ளனர். இங்கு தேர்வான எம்.எல்.ஏ.க்களில் 9% பேர் மட்டுமே பெண்கள்; இது, 2013-14ஆம் ஆண்டின் 11% என்பதைவிட குறைவு; அப்போது, 678 பேரில் 77 பெண்கள் வெற்றி பெற்றனர்.

கடந்த முறையைவிட இம்முறை ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்ற போதும், சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டுமே பெண் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை விகிதம் அதிகரித்துள்ளது.

மிசோரம் மாநிலத்தில் மட்டுமே சட்டமன்றத்திற்கு ஒரு பெண் கூட தேர்வு செய்யப்படவில்லை. அம்மாநிலத்தின் மக்கள் தொகை, ஒரு மில்லியனுக்கு மேல் உள்ளது; அதில், 49% பேர் பெண்கள்.

"பெண்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். எனினும் ஜனநாயகம் உண்மையிலேயே பிரதிநிதித்துவம் பெறுவதற்கு, அதிகமான பெண்கள் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்று, அமெரிக்காவின் பென்செல்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரித்திகா குமார் கூறுகிறார். "பெண்கள், தேர்தல்களை வெல்வதற்கு மட்டுமே தகுதியற்றவர்கள் அல்ல; மாறாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்கள் என்பதை பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அளவில் பார்த்தோம்" என்கிறார் அவர்.

உண்மையில் பெண்களின் தேவைகளை அறிந்து நல்லனவற்றை செய்ய பெண் பிரதிநிதிகள் அதிகம் விரும்புகின்றனர் என்று கூறும் குமார் "இது எளிமையானது-பெண்கள் பாதிக்கும் விஷயங்களில் சமமான கருத்து இருக்க வேண்டும்; பொருளாதாரம் மற்றும் சமுதாய அளவில் தேவை" என்றார். "அனைத்து பெரிய கட்சிகளும் பேச்சு நடத்தி, தேர்தல்களில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுப்பதற்கு இதுவே சரியான நேரம் " என்று அவர் மேலும் கூறினார்.

மாநிலங்கள் எப்படி வாக்களித்தன

இந்த ஐந்து மாநிலங்களிலும் கடந்த மூன்று தேர்தலிகளில் பெண்கள் போட்டியிடும் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அவர்கள் பெருமளவில் வெற்றி பெறவில்லை. சட்டமன்ற அளவில் பெண்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கை அதிகரிக்க, இது பொருந்தவில்லை.

மத்தியப்பிரதேசத்தில் இம்முறை அதிகபடசமாக பெண்கள் நிறுத்தப்பட்டனர். மொத்தமுள்ள 2,716 வேட்பாளர்களில் 235 பேர் பெண்கள்; 2013ஆம் ஆண்டு இது 108 ஆகவும், 2008ஆம் ஆண்டு 226 என்ற எண்ணிக்கையைவிட இது அதிகம். இருப்பினும் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை என்பது 22 ஆக மிகவும் குறைவாக உள்ளது. 2013-ல் இது 30 எனவும், 2008-ல் 25 ஆகவும் இருந்தது.

ராஜஸ்தானில் 2018 சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 2,291 வேட்பாளர்களில் 182 பேர் (8%) பெண்கள். இது 2013-ல் 2030 பேர்களில் 152 (7%); 2008ஆம் ஆண்டில் 2,194 பேரில் 154 பெண்கள் (7%) என்பதை விட அதிகம். 2008ஆம் ஆண்டில் 28 பெண்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆகினர்; 2013-ல் 25 பெண்கள் வெற்றி பெற்றனர்; ஆனால், இம்முறை இது 23 ஆக குறைந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் பெண் வேட்பாளர்களின் விகிதம், 14% முதல் 11.5% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

இருப்பினும் போட்டியிட்ட பெண்களின் விகிதத்தை விட வெற்றி பெற்ற பெண்களின் விகிதம் அதிகம். ராஜஸ்தானில் 11.5% பெண்கள் வெற்றி பெற்றனர். ஆனால், போட்டியிட்டவர்களின் விகிதம், 8% ஆகும். இதேபோல் ம.பி.யில் போட்டியிட்ட பெண்களின் விகிதம் 9%, வெற்றி பெற்றவர்களின் விகிதம் 10%; சத்தீஸ்கரில் போட்டியிட்டவர்கள் விகிதம் 10%, வெற்றி பெற்றவர்களின் விகிதம் 14% ஆகும்.

Source: Association for Democratic Reforms (ADR), State Assembly Reports 2018-2008, MyNeta.info
குறிப்பு: போட்டியாளர்களின் எண்ணிக்கை எ.டி.ஆர் பகுப்பாய்வு செய்யப்பட்ட எண்ணிக்கையை குறிக்கிறது; இது, அனைத்து சந்தர்ப்பங்களிலும் போட்டியாளர்களின் மொத்த எண்ணிக்கையை பிரதிபலிக்காது. *2014ல் தெலுங்கானா உருவான பின் முதல்முறையாக வாக்களித்துள்ளது.

சத்தீஸ்கரில் மட்டுமே கடந்த முறையை விட போட்டியிட்டவர்கள் மற்றும் வெற்றி பெற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 90 பேர் கொண்ட சட்டமன்ற இடங்களில் 13 (14%) பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது, 2013-ல் 10 பெண்கள் (11%) மற்றும் 2008-ல் 11 பெண்கள் (12%) என்பதைவிட அதிகம்.

சத்தீஸ்கர் சட்டமன்றத்திற்கு 13 பெண்கள் தேர்வு என்பது கடந்த மூன்று தேர்தல்களை விட அதிக எண்ணிக்கையாகும்.

மிசோரம் மாநிலத்தில், போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த போதும் இதுவரை சட்டமன்றத்திற்கு ஒரு பெண்ணை தேர்வு செய்ததில்லை. 2018 மிசோரம் தேர்தலில் 18 பெண்கள் போட்டியிட்டனர்; 2013 தேர்தலுடன் ஒப்பிடும் போது 200%; 2008 தேர்தலுடன் ஒப்பிடும் போது 100% அதிகமாகும்.

கட்சி வாரியாக முடக்கம்

தேர்தல் சீர்திருத்தங்கள், அரசியலமைப்பை மேம்படுத்துவதற்காக பணியாற்றும் அரசுசாராத ‘நேஷனல் எலக்‌ஷன் வாட்ச்’ அமைப்பின் தகவலின்படி காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுமே, 12%க்கு மேல் பெண் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியதில்லை. எனினும் அதிகபட்சமாக 80 பெண் வேட்பாளர்களை நிறுத்தியது, பா.ஜ.க. தான்; அடுத்து, காங்கிரஸ் சார்பில் 70 பெண்கள் போட்டியிட்டனர்.

அதேபோல் எந்த கட்சியையும் சாராமல் சுயேச்சையாக 79 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேலும், பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி.) சார்பில் 40 பேர், பல்வேறு பிராந்திய கட்சிகள் சார்பில் 303 பெண்கள் போட்டியிட்டனர்.

தெலுங்கானாவில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டி.ஆர்.எஸ்.) தான், பெண்களுக்கு மிகவும் குறைவான வாய்ப்புகளை வங்கியது. இக்கட்சி சார்பில், 3% மட்டுமே பெண்கள் நிறுத்தப்பட்டனர். அடுத்து தேசிய அளவில் பார்த்தால், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (அவரையும் சேர்த்து) 9 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

Source: National Election Watch by Association for Democratic Reforms
குறிப்பு: போட்டியாளர்களின் எண்ணிக்கை, ஏ.டி.ஆர் பகுப்பாய்வு செய்யப்பட்ட எண்ணிக்கையை குறிக்கின்றன. அனைத்து சந்தர்ப்பங்களிலும் போட்டியாளர் மொத்த எண்ணிக்கையை பிரதிபலிக்காது.

வெற்றி பெற்றவர்களில் அதிகபட்ச பெண் வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். ஐந்து மாநிலங்களில், 33 காங்கிரஸ் பெண்கள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

அடுத்ததாக, பா.ஜ.க.வில் 21 பெண் எம்.எல்.ஏ.க்கள்; தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சார்பில் 3; பகுஜன் சமாஜ் கட்சியில் 2; ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் ஜோகி மற்றும் ராஷ்ட்ரீய லோக்தந்த்ரிக் கட்சி சார்பில் தலா ஒரு பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

சுயேச்சையாக நின்றவர்களில் ஒரு பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

Source: National Election Watch by Association for Democratic Reforms and Electoral Commission
குறிப்பு: போட்டியாளர்களின் எண்ணிக்கை, ஏ.டி.ஆர் பகுப்பாய்வு செய்யப்பட்ட எண்ணிக்கையை குறிக்கின்றன. அனைத்து சந்தர்ப்பங்களிலும் போட்டியாளர் மொத்த எண்ணிக்கையை பிரதிபலிக்காது.

கடந்த சட்டசபைத்தேர்தலில் அதிகபட்ச எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சியாக பா.ஜ.க. திகழ்ந்தது. அக்கட்சி சார்பில் 50 பெண் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றிருந்தனர். இது, 2018-ல் 21 ஆக குறைந்துவிட்டது.

இதேபோல் டி.ஆர்.எஸ். கட்சி பெண் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையும் இம்முறை பாதியாக குறைந்துள்ளது. அதாவது, 2014-ல் ஆறு என்ற எண்ணிக்கை 2018-ல் மூன்றாக குறைந்துவிட்டது.

(சங்கேரா, எழுத்தாளர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் ஆராய்ச்சியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.