மும்பை: 2019 ஜூலை 18 ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் மழை தொடர்பான இயற்கை பேரழிவுகள் - சூறாவளி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்றவற்றால் 6,585 பேர் உயிரிழந்தனர் என நாடாளுமன்ற மக்களவையில் (கீழ் சபை ) ஜூலை 23, 2019 அன்று அரசு பதில் அளித்தது. இது அதாவது, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2,000 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

ஒரு கோடிக்கும் அதிகமான மக்களை பாதித்த பீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில், இதுவரை 170-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக, 2019 ஜூலை 24 இந்தியா டுடே செய்தி தெரிவித்துள்ளது.

அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில், ஜூலை 13, 2019 இல் இருந்து 15 காண்டாமிருகங்கள் உட்பட 204 விலங்குகள் இறந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் கனமழை மற்றும் ஆறுகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால், அசாம் மற்றும் பீகார் மாநிலங்கள் வெள்ள அபாயத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக தேசிய வானூர்த்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் - நாசா (NASA) வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள், “இந்தியா மற்றும் பங்களாதேஷ் முழுவதிலும் உள்ள பல இடங்களில் பிரம்மபுத்ரா நதி அதன் கரைகளை விட எப்படி உயர்ந்திருந்தது” என்பதைக் காட்டுகிறது.

Source: Lok Sabha

தென் மாநிலமான கேரளாவில் 2018இல் வெள்ளம் ஏற்பட்டது - இது 94 ஆண்டுகளில் மிக மோசமான ஒன்று - 2018-19 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இறப்புகளில் 477 உயிர்கள் அல்லது 23% (2,045) மழை தொடர்பான இயற்கை பேரழிவுகள் காரணமாக இருந்துள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் மழை காரணமாக பீகாரில் 970 அல்லது 15% இறப்புகள் பதிவாகியுள்ளன - அடுத்து கேரளா (756), மேற்கு வங்கம் (663), மகாராஷ்டிரா (522) மற்றும் இமாச்சல பிரதேசம் (458) உள்ளன. இந்த ஐந்து மாநிலங்களும், மொத்த இறப்புகளில் 51% கொண்டுள்ளன.

இந்த மூன்று ஆண்டுகளில் மழை தொடர்பான இயற்கை பேரழிவுகள் காரணமாக 200,000 க்கும் மேற்பட்ட கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளன மற்றும் 39 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் / குடிசைகள் சேதமடைந்துள்ளன என்று அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

மழை தொடர்பான பேரழிவுகளுக்கு, ஏப்ரல் 1, 2019 மற்றும் ஜூலை 18, 2019 க்கு இடையில் 496 பேர் இறந்துள்ளனர் அல்லது சராசரியாக ஒருநாளைக்கு ஐந்து பேர் இறந்துள்ளனர். இதில் அதிக எண்ணிக்கை மகாராஷ்டிராவில் (137), அடுத்து பீகார் (78) உள்ளது.

பலத்த மழை, வெள்ளம் 64 ஆண்டுகளில் 100,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்றது

கடந்த 1953ஆம் ஆண்டு மற்றும் 2017-க்கு இடையிலான 64 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 1,07,487 பேர் இறந்ததாக, மார்ச் 19, 2018 அன்று மாநிலங்களவையில் (பாராளுமன்ற மேலவை) மத்திய நீர் ஆணையம் அளித்த தரவுகள் காட்டுவதாக, ஜூலை 17, 2018 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

"வெள்ளத்திற்கு முக்கிய காரணங்கள், குறுகிய நேரத்தில் கொட்டித் தீர்க்கும் அதிக தீவிர கனமழை, மோசமான அல்லது போதுமான வடிகால் திறன், திட்டமிடப்படாத நீர்த்தேக்க கட்டுப்பாடு மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்புகளின் தோல்வி என மதிப்பிடப்பட்டுள்ளது," என்று பதிலில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் 4 கோடிக்கும் அதிகமான ஹெக்டேர் (12%) நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 1980 ஆம் ஆண்டு மற்றும் 2010-க்கு இடையிலான 30 ஆண்டுகளில் 431 பெரிய இயற்கை பேரழிவுகளை இந்தியா கண்டது; இது மனித உயிர்கள், சொத்து மற்றும் வளங்களை இழக்கச் செய்துள்ளது.

"தொழில்நுட்ப மற்றும் பொருளாதார தடைகள் காரணமாக. பாதிப்புக்குள்ளான பகுதியில் இருந்து சுமார் 48% வெள்ளம் மற்றும் குறைந்த மற்றும் மிதமான அளவிலான வெள்ளத்திற்கு எதிராக நியாயமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அளவிலான வெள்ளத்திற்கும் எதிராக பாதுகாப்பு வழங்க இயலாது” என்று மத்திய நீர் ஆணையம் கூறுகிறது.

எதிர்வரும் 2040ஆம் ஆண்டு வாக்கில் கடும் வெள்ள அபாயத்திற்கு ஆளாகும் மக்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் ஆறு மடங்கு - 1971 மற்றும் 2004 க்கு இடையில் இந்த ஆபத்தை எதிர்கொண்டவர்களைவிட 37 லட்சம் அதிகரித்து 2.5 கோடியாக அதிகரிக்கும் என்ற சயின்ஸ் அட்வான்ஸஸ் என்ற சக மதிப்பாய்வு இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் அடிப்படையில், பிப்ரவரி 2018 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டது.

இந்தியா மட்டுமின்றி தெற்காசியாவின் பெரும்பகுதி வெள்ளத்தால் பாதிக்கும்

இந்தியா, நேபாளம், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் (ஹாங்காங்கின் மக்கள் தொகையை போல்) சுமார் 70 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது 2019 ஜூலை நடுப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் அவர்களின் வாழ்க்கை சீர்குலைந்தது என்று, 2019 ஜூலை 18இல் நாசா அறிக்கை தெரிவித்தது.

Source: NASA Earth Observatory

மேலே உள்ள இரண்டு படங்கள், ஜூன் 28 (முன்பு) மற்றும் ஜூலை 14, 2019 (பின்னர்) எடுக்கப்பட்டவை. இந்தியாவின் கிழக்குப் பகுதி நதிக்கரைகள் மற்றும் வெள்ளப்பெருக்குகள் (கடல் நீலம் மற்றும் அடர் நீலம்) அடையாளம் காட்டப்பட்டுள்ளன. மேகங்களை வெள்ளை அல்லது சியான் மற்றும் தாவரங்கள் நிறைந்த நிலத்தில் பச்சை நிறத்தில் காணலாம்.

நாசாவை போலவே, சர்வதேச சார்ட்டர் விண்வெளி மற்றும் பெரிய பேரழிவுகள் அமைப்பு, அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் முன், பின் படங்களை சித்தரித்து காட்டியுள்ளது.

கேரக்டர் என்பது விண்வெளி முகவர் மற்றும் விண்வெளி அமைப்பு ஆபரேட்டர்களின் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு உட்பட - குழுவாகும்; பேரழிவு கண்காணிப்புக்கு செயற்கைக்கோள் படங்களை உலகம் முழுமைக்கும் வழங்கும்.

"உலகளாவிய காலநிலை மாற்றம் தெற்காசியாவில் வெள்ள உற்பத்தியின் அதிர்வெண் மற்றும் அதன் தீவிரத்தை அதிகரிக்கும் மற்றும் விவசாய உற்பத்தியை அச்சுறுத்துகிறது. சிறிய அளவிலான விவசாயிகளுக்கு நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கும். இந்த பிராந்தியங்களில் கிராமப்புற பொருளாதாரத்திற்கு வாழ்வாதாரங்கள் ஒட்டுமொத்த இடர் குறைப்புக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படுகிறது," என்று, இந்தியாவின் பீகாரில் வெள்ள குறியீட்டு காப்பீட்டு விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்க தெற்காசியாவில் வெள்ள அபாய மதிப்பீடு என்ற தலைப்பிலான டிசம்பர் 2018 கட்டுரை தெரிவிக்கிறது.

தெற்காசியாவில் உள்ள நகரங்களான “டாக்கா, கராச்சி, கொல்கத்தா மற்றும் மும்பை- இவை 5 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகர்ப்புறப்பகுதிகள் - அடுத்த நூற்றாண்டில் வெள்ளம் தொடர்பான சேதங்களின் கணிசமான ஆபத்தை எதிர்கொள்ளும் பகுதிகள்” என்ற தெற்காசியாவின் பகுதிகள் - வாழ்க்கை தரநிலைகளில் வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு மாற்றங்களின் தாக்கம் என்ற தலைப்பிலான 2018 உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.

நாட்டின் நிதித் தலைநகரான மும்பை, 2019 ஜூலை முதல் வாரத்தில் பலத்த மழையை எதிர்கொண்டது. சில பகுதிகளில், 5 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் இரண்டாவது அதிகபட்ச மழையால் முடங்கியது; கிட்டத்தட்ட 16 உயிர்களை பலி கொண்டதாக, ஜூலை 2, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

ஒரு குறிப்பிட்ட நிகழ்வை காலநிலை மாற்றத்துடன் இணைக்க விரிவான பகுப்பாய்வு தேவைப்பட்டாலும், மும்பை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தீவிர மழை நிகழ்வுகளின் விகிதம் அதிகரிப்புக்கு வெப்பநிலை காரணமாக உள்ளது என்பது தெளிவாகிறது என, புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் காலநிலை விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

நகர்ப்புற இந்தியாவில் கனமழை நிகழ்வுகள் (100 மி.மீ க்கும் அதிகமாக) கடந்த 100 ஆண்டுகளில் அதிகரித்துள்ளன; 1900ஆம் ஆண்டுகளில் இருந்து ஒட்டு மொத்தமாக 100, 150 மற்றும் 200 மி.மீ க்கும் அதிகமான நிகழ்வுகளின் போக்கு அதிகரித்து வருகிறது; மேலும் சமீபத்திய தசாப்தங்களில் மாறுபாடு அதிகரித்து வருகிறது என்று, ஆகஸ்ட் 29, 2017 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

(மல்லபூர், இந்தியா ஸ்பெண்ட் மூத்த பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.