புதுடில்லி: மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள 388 கிராமங்களுக்கு, சுரங்க மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பு தர மறுப்பதையே மகாராஷ்டிரா அரசு விரும்புகிறது. ‘சுற்றுச்சூழல் முக்கியத்துவ பகுதிகள்’ ஈஎஸ்ஏ- (ESA) அளவை மத்திய அரசு முன்பு பரிந்துரைத்ததைவிட 11% குறைக்கப்படும்; “மாநிலத்தின் அத்தியாவசிய வளர்ச்சித்தேவைகள்” கருதி இம்முடிவு என்று, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு மகாராஷ்டிரா அரசு அனுப்பிய அறிக்கையை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் (ஆர்.டி.ஐ.) கீழ் இந்தியா ஸ்பெண்ட் அணுகியதில் தெரியவந்துள்ளது.

இத்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்தால் மகாராஷ்டிராவில் மேற்குத்தொடர்ச்சி மலையின் பரப்பளவு 17,340 சதுர கி.மீ என்றிருப்பது, 15,359.40 சதுர கி.மீ ஆக குறையும். விலக்கு அளிக்கப்பட வேண்டிய சில கிராமங்களில் மாசுபடுத்தக்கூடிய சில நிறுவனங்கள், உரிய சுற்றுச்சூழல் அனுமதியின்றி வரவழைக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகள் இந்திய காட்டெருமைகளின் தாயகமாகவும், புலிகள், யானைகளின் முக்கியமான நடைபாதையாக உள்ளன.

பல்லுயிர் பெருக்கம் நிறைந்த மேற்குத்தொடர்ச்சி மலைகள், பல வற்றாத நதிகளின் மூலமாகும்; இந்திய தீபகற்பத்தில் தென்மேற்கு பருவமழைக்கு இது முக்கியமானது. இங்கு சுமார் 24.5 கோடி மக்கள் வசிக்கின்றனர். இங்கு மட்டுமே காணப்படும் அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வசிக்கின்றன.

சுற்றுச்சூழல் முக்கியத்துவ பகுதிகள் என்று அரசால் வரையறை செய்த பகுதிகள் மிக முக்கியமானவை; அது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அப்பகுதியில் சுரங்கம், குவாரி, மணல் குவாரி மற்றும் மாசுபடுத்தும் தொழில்கள் மேற்கொள்ளக்கூடாது.

அக்டோபர் 4, 2018இல் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEF & CC) வெளியிட்ட மேற்குத்தொடர்ச்சி மலை குறித்த வரைவு அறிவிப்பு, மகாராஷ்டிராவில் 2,133 கிராமங்களை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவிக்கும் திட்டத்தை முன்வைத்தது - இப்பகுதி அதிக உயிரியல் செழுமை, குறைந்த துண்டாடப்பட்ட பகுதி, மக்கள் தொகை அடர்த்தி குறைந்த நிலப்பரப்புகள், உலக பாரம்பரிய தலங்கள் மற்றும் புலி மற்றும் யானைகள் நடமாடும் பாதைகளை கொண்டிருக்கிறது. எனினும், ஆர்.டி.ஐ. கீழ் இந்தியா ஸ்பெண்ட் அணுகியதில், மகாராஷ்டிரா அரசு 2,092 கிராமங்களை மட்டுமே சுற்றுச்சூழல் முக்கியத்துவ பகுதியாக வகைப்படுத்த திட்டமிட்டுள்ளது தெரிகிறது.

இதில், 388 கிராமங்கள் சுற்றுச்சூழல் முக்கியத்து பகுதிக்குள் இல்லை; இதில் சில, சுரங்க கிராமங்கள் என்பதால் தவிர்க்கப்பட்டன அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக ஏற்கனவே உள்ள கிராமங்களாக இருக்கலாம் என்று, மாநில அரசு தனது அறிக்கையில் கூறியுள்ளது. அதேபோல், முன்பு சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பட்டியலில் இல்லாத 347 கிராமங்கள், இப்பட்டியலில் வகைப்படுத்தவும் மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒருபகுதி குறிக்கப்பட்டவுடன், அங்குள்ள அனைத்து சுரங்கங்களும் இறுதி அறிவிப்பு தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் அல்லது ஏற்கனவே உள்ள சுரங்க குத்தகை காலாவதியாகும் நாள், இதில் எது முன்னர் வருகிறதோ அந்த நாளுக்குள் வெளியேற்ற வேண்டும். அனைத்து புதிய ‘சிவப்பு’ வகைப்பாடு அல்லது அதிக மாசுபடுத்தும் தொழில்கள், தற்போதுள்ள எந்தவொரு தொழில்களின் விரிவாக்கமும், இப்பகுதிகளில் தடைசெய்யப்படும்.

இந்த மகாராஷ்டிரா அரசின் இத்தகைய முன்மொழிவு, பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசுகளின் முந்தைய முடிவுகளுக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் முக்கியத்துவ பகுதிகளில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது. நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஜூன் 2014 முதல் மே 2018 வரை 4 ஆண்டுகளில், இந்திய வனவிலங்கு வாரியம் அறிவித்த பாதுகாக்கப்பட்ட மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்தும் வாய்ந்த பகுதிகளில், 500-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் தந்துள்ளதாக, இந்தியா ஸ்பெண்ட் செப்டம்பர் 2018 கட்டுரை தெரிவித்தது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2009 மற்றும் 2013-க்கு இடையில் 260 திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி தந்திருந்தது.

இதேபோல், இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் நிலுவையில் உள்ள, ரூ.19,400 கோடி (2.8 பில்லியன் டாலர்) மதிப்புள்ள 13 ரயில் திட்டங்களுக்கு, 800 ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு வனஅனுமதி கோரும் செயல்முறையில் இருந்து விலக்கு அளித்ததாக, இந்தியா ஸ்பெண்ட் ஜூலை 2019 கட்டுரை கூறியது.

சுற்றுச்சூழல் முக்கியத்துவப்பகுதி எல்லை நிர்ணயிப்பதில் தாமதம்

மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான கே.கஸ்துரிரங்கன் குழுவின் 2013 அறிக்கை அடிப்படையில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், 56,825 சதுர கி.மீ பரப்பளவை சுற்றுச்சூழல் முக்கியத்துவ பகுதியாக, அக்டோபர் 4, 2018 வரைவு அறிவிப்பில் தெரிவித்தது.ஐ.மு.கூ. அரசு இந்த அறிக்கையை ஏற்று ஆறு ஆண்டுகள் ஆகிறது; எனினும், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மாநிலங்கள், சுற்றுச்சூழல் முக்கியத்துவ பகுதி குறித்த இறுதி முடிவு எடுப்பதில் ஒருமித்த கருத்தை எட்டவில்லை.

Source: October 4, 2018 draft notification of the union environment ministry
Note: Kerala's ESA was not included in this notification since they had originally not accepted Kasturirangan report on ESA demarcation, and classified areas by their own verification.

மேற்குத்தொடர்ச்சி மலையில் சுற்றுச்சுழல் முக்கியத்துவ பகுதிகளை குறித்த மகாராஷ்டிராவின் அக்டோபர் 2018 வரைவு அறிவிப்பானது, மத்திய மற்றும் ஆறு மாநிலங்களுக்கு இடையிலான ஆலோசனைகளுக்கு பதிலளிக்கும் ஒரு பகுதியாகும்.

சுற்றுச்சூழல் அமைச்சகம், 2014, 2015, 2017 மற்றும் 2018 இல், சுற்றுச்சூழல் முக்கியத்துவ பகுதிகள் குறித்த நான்கு வரைவு அறிவிப்புகளை வெளியிட்டது. ஒவ்வொரு வெளியீட்டின் போது, மாநிலங்கள் தளர்வு அல்லது மாற்றங்களை கோரி இருந்தன. இதற்கிடையில், உள்கட்டமைப்பு மேம்பாடு பணிகளால் மேற்கு தொடர்ச்சி மலை, நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் பசுமைப்பரப்பு சுருங்கி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த 2006 மற்றும் 2016-க்கு இடையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில், அடர் வனப்பகுதிகள் முறையே 2.84%, 4.38% மற்றும் 5.77% குறைந்ததாக, பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.சி) ஆய்வை மேற்கோள்காட்டி, ஜூன் 2016இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டது.

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கிராமங்கள்

மேற்குத்தொடர்ச்சி மலை பிராந்தியத்தில் சுமார் 60% பகுதிகள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம், காடுகள் தவிர மற்ற தோட்டங்கள் அமைத்தல் என, ‘கலாச்சார நிலப்பரப்புகள்’ ஆக உள்ளன; எஞ்சிய 40% ‘இயற்கை நிலப்பரப்பு’ என்று கஸ்துரிரங்கன் அறிக்கை தெரிவித்துள்ளது. இயற்கை நிலப்பரப்பில், சுமார் 37% (~ 60,000 சதுர கி.மீ) உயிரியல் செளுமை மிக்கவை.

மகாராஷ்டிரா அரசின் பட்டியலில் உள்ள விலக்களிக்கப்பட வேண்டிய கிராமங்கள், கஸ்துரிரங்கன் அறிக்கையின் ‘இயற்கை நிலப்பரப்புகள்’ என்ற் வகைப்பாட்டில் உள்ளன. அரசு பட்டியலில் உள்ள பெரும்பாலானவை கஸ்தூரிரங்கன் அறிக்கையில், சுற்றுச்சூழல் முக்கியத்துவ பகுதிகள் ஆகும்.

கொங்கன் பகுதியின் சிந்துதுர்க் மாவட்டம் தோடாமார்க் தாலுகாவை, சுற்றுச்சூழல் முக்கியத்துவ பகுதி என்ற வகைப்பாட்டில் இருந்து மாநில அரசு முற்றிலுமாக நீக்கியுள்ளது. மும்பை உயர்நீதிமன்றம் 2013 இல் உத்தரவிட்டது போல, சாவந்த்வாடி- தோடமார்க் பகுதியை, அதன் வனவிலங்கு வாழிடம், நீர்வளங்களை பாதுகாக்க, சுற்றுச்சூழல் முக்கியத்துவ பகுதியாக அறிவிக்க வேண்டும்.

மகாராஷ்டிரா ரிமோட் சென்சிங் அப்ளிகேஷன் சென்டர் தரவுகளின்படி, கோலாப்பூரின் பட்டியலில் நீக்கப்பட்ட அனைத்து கிராமங்களும் 40% அல்லது அதற்கு மேற்பட்ட இயற்கை நிலப்பரப்பை, அதிகபட்சம் 99% வரை கொண்டுள்ளவை ஆகும்.

Source: 2015 report on ecologically sensitive areas of the Western Ghats in Maharashtra, accessed through the Right to Information Act
Note: As per the Kasturirangan report, natural landscapes have been characterized as areas that are not dominated by human settlements, agriculture or plantations, other than forests.

கோலாப்பூர் மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் உள்ள, சுற்றுச்சூழல் முக்கியத்துவ பகுதி பட்டியலில் இருந்து விலக்கு தரப்பட்ட சில கிராமங்கள், இந்திய காட்டெருமைகள் அதிகமுள்ளவை. கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா இடையே இடம் பெயர்வதற்கு புலிகள் மற்றும் யானைகள் பயன்படுத்தும் வனவிலங்கு நடைபாதைகளை கொண்டுள்ளன.

இப்பட்டியலில் ரத்னகிரி மாவட்டத்தை சேர்ந்த கும்பவாடே மற்றும் வில்வி கிராமங்களும் அடங்கும். அவை நானார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்திற்கு அருகே அமைந்துள்ளன. அப்பகுதி தோட்டக்கலை தாவரங்கள் மீது சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக, உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு காட்டியதால், ஆலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. பாதிப்புக்குள்ளான கிராமங்களில் இருந்து தான் புகழ்பெற்ற அல்போன்சா ரக மாம்பழம், முந்திரி, அர்கா பருப்பு மற்றும் வெற்றிலை போன்றவற்றை கிடைக்கின்றன.

ஷாஹுவாடி தாலுகாவில் நிவாலே மற்றும் ரத்னாகரி தாலுகாவில் சவர்தே (இவை, சுற்றுச்சூழல் முக்கியத்துவ பகுதியாக வகைப்படுத்தப்படவில்லை) ஆகியன, முறையே சந்தோலி தேசிய பூங்கா மற்றும் ராதானகரி வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா அரசால் அறிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா அரசின் இந்த யோசனை குறித்து கருத்தறிய, கே கஸ்துரிரங்கன் அறிக்கையை தயாரித்த உயர்மட்ட பணிக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சுனிதா நரேன் என்பவருக்கு, குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது; அவரிடம் இருந்து எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை.

"மாதவ் காட்கில் கமிட்டி அறிக்கையை நிராகரிப்பதும், சுற்றுச்சூழல் முக்கியத்துவ பகுதிகளின் பாதுகாப்பை நீக்குவதும் சரியானதல்ல; குறிப்பாக இம்மாவட்டத்தில் சமீபத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது," என்று, கோலாப்பூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் இலாப நோக்கற்ற அமைப்பான வித்னியன் பிரபோதினியின் அமைப்பாளருமான உதய் கெய்க்வாட் கூறினார். கோலாப்பூரில் உள்ள கிராமங்களை, சுற்றுச்சூழல் முக்கியத்துவ பகுதி வகைப்பாட்டில் இருந்து விலக்குவது மாவட்டத்தின் வனவிலங்குகளுக்கும் நீர் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் என்றார் அவர்.

மாதவ் காட்கில் கமிட்டி அறிக்கையை, மேற்குத்தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு தயாரித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு ஆகஸ்ட் 31, 2011இல் சமர்ப்பித்தது. இது, சுற்றுச்சூழல் வலிமையின் அடிப்படையில் மேற்குத்தொடர்ச்சி மலையின் 142 தாலுகாக்களில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்கள் (ESZ) 1, 2 மற்றும் 3 என வரையறுக்க பரிந்துரைத்தது. இதில், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலம் 1- பகுதிகளில் சுரங்கம், அணை மற்றும் பிற கட்டுமானத்திற்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என்றும் அது கோரியது.

விலக்கப்பட்ட சுரங்க கிராமங்கள்

கிராமங்கள் சுற்றுச்சூழல் முக்கியத்துவப் பகுதியாக கருதப்படவில்லை. ஏனெனில் இவை சுரங்கம் உள்ள கிராமங்கள்; மத்திய அரசின் வரைவு அறிவிப்பின்படி சுற்றுச்சூழல் முக்கியத்துவ பகுதிக்கு வெளியே இருப்பவை; ஆனால், மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (எம்ஐடிசி) மண்டலங்களில் இருப்பவை அல்லது, மத்திய அரசிடம் மகாராஷ்டிரா அரசு 2018 டிசம்பரில் அளித்த திட்ட அறிக்கையின்படி, ‘சிறப்பு மண்டலங்களில்’ இருப்பவை; இந்த அறிக்கை, ஆர்.டி.ஐ-யின் கீழ் இந்தியா ஸ்பெண்டால் அணுகப்பட்டது. இது சிறப்பு மண்டலங்களை வரையறுக்கவில்லை.

மொத்தமுள்ள 388 கிராமங்களில், ராய்காட், புனே மற்றும் ரத்னாகரி மாவட்டங்களின் 55 கிராமங்கள், எம்ஐடிசி தொழில்துறை மண்டலத்திற்குள் வருகின்றன; 19 சுரங்க கிராமங்கள் மற்றும் மீதமுள்ளவை பெரும்பாலும் வெளி கிராமங்கள்.

"மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி கிராமங்களில் அமைந்துள்ள சுரங்கமானது சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பதற்கான ஒரு பெரிய ஆதாரமாக மாறி உள்ளது; சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்க்கும் உள்ளூர்வாசிகளையும் அது காப்பாற்றவில்லை" என்று பெங்களூருவின் ஐ.ஐ.எஸ்.சி.யின் சுற்றுச்சூழல் அறிஞரும் சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் நிறுவனருமான மாதவ் காட்கில் கூறினார். "இயற்கை வளங்களை கொள்ளையடிக்க வசதியாக கஸ்தூரிரங்கன் அறிக்கையை குப்பைக்கு அனுப்ப அரசு விரும்புகிறது" என்றார் அவர்.

இதுபற்றி மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி கூறுகையில், "ஆறு மாநிலங்களும் தங்கள் யோசனைகளிய சமர்ப்பித்துள்ளன. நாங்கள் அவற்றை ஆராய்ந்து கஸ்தூரிரங்கன் அறிக்கை பரிந்துரைகளுடன் ஒப்பிடுகிறோம்" என்றார்.

மகாராஷ்டிராவின் முன்மொழிவு குறித்து கருத்து அறிய, அதன் வனத்துறை செயலாளர் விகாஸ் கராஜை இந்தியா ஸ்பெண்ட் தொடர்பு கொண்டது. மகாராஷ்டிரா மாநில பல்லுயிர் வாரிய உறுப்பினர் செயலாளர் ஜீத் சிங்குடன் பேசுமாறு இந்தியா ஸ்பெண்ட் அழைப்பை, கராஜ் திருப்பிவிட்டார்.

"ஜூன் மாதத்தில் இந்த திட்டம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட பிறகு தான், நான் குழுவில் பொறுப்பேற்றேன்" என்று சிங், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். சுரங்க கிராமங்கள் சுற்றுச்சூழல்முக்கியத்துவ பகுதி பட்டியலில் இருந்து விலக்கப்பட்டிருக்கலாம்; ஏனெனில் சுரங்கங்கள் ஏற்கனவே அங்கு செயல்பட்டிருக்க வேண்டும் அல்லது விரைவில் செயல்பாடுகளை தொடங்கும் நிலையில் இருக்கலாம். நாங்கள் சமர்ப்பித்த முன்மொழிவைமத்திய அரசு ஆராய்ந்து வருகிறது” என்றார் அவர்.

இத்திட்டம் குறித்த எங்களின் கேள்விகள், இயக்குநர் நிலை அதிகாரி சதீஷ் கார்கோட்டி மற்றும் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ரவி அகர்வால் ஆகியோருக்கு மின்னஞ்சல் செய்யப்பட்டன. அவர்களின் பதிலை நாங்கள் இதுவரை பெறவில்லை; பதில் கிடைத்தால் இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

சுற்றுச்சூழல் விதிகளை மீறும் தொழில் நிறுவனங்கள்

கோலாப்பூர் மாவட்டத்தின் சந்தகாட், ரத்னாகரி மற்றும் ஷாஹுவாடி தாலுகாக்களில் உள்ள போகோலி, தங்கர்வாடி, துர்கமான்வாடி மற்றும் கிர்கான் கிராமங்களில் நான்கு சுரங்கங்கள் உள்ளன என்பதை, சுற்றுச்சூழல் முக்கியத்துப் பகுதிகள் என்பதில் இருந்து விலக்கப்பட்ட கிராமங்களின் பட்டியல், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் பகுப்பாய்வு ஆகியன காட்டியன.

ஆதித்யா பிர்லா குழுமத்தின் முதன்மை உலோக நிறுவனமான ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தங்கர்வாடி மற்றும் துர்க்மான்வாடி சுரங்கங்களில் இருந்து பாக்சைட் தாது எடுத்தது. இருப்பினும், வனவிலங்கு வாரிய அனுமதி இல்லாமல் ரத்னாகரி வனவிலங்கு சரணாலயத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் பெற்ற மண்டலத்திற்குள் செயல்படுவதாகக் கூறி, துர்க்மான்வாடியில் சுரங்க செயல்பாடுகளை நிறுத்த வேண்டுமென்று, 2018 அக்டோபரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மார்ச் 6, 2019இல், சுரங்கங்களின் சுற்றுச்சூழல் அனுமதியானது, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ‘கைவிடப்பட்டது’.

மகாராஷ்டிரா மாசு கட்டுப்பாட்டு வாரியம் (எம்.பி.சி.பி), நவம்பர் 2018 இல் தங்கர்வாடி சுரங்கத்தை மூடுமாறு, ஹிண்டல்கோவை கேட்டுக் கொண்டது; அது காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்ட விதிகளை மீறுவதாகக் குற்றம் சாட்டியது. எம்.பி.சி.பியின் உத்தரவை எதிர்த்து ஹிண்டல்கோ தரப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. அவ்வழக்கில் சுரங்க நடவடிக்கைகளை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. எம்.பி.சி.பி. தனது உத்தரவை திரும்பப் பெறவும், ஹிண்டல்கோ மனுவை விசாரிக்கவும் அறிவுறுத்தியது.

கோலாப்பூர் சுரங்கங்களில் செயல்படும் நிலை குறித்தும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து எம்.பி.சி.பி. எடுத்த நடவடிக்கைகளின் நிலை குறித்தும் ஹிண்டல்கோவிடம் ஒரு விரிவான கேள்வியை கேட்டு, இந்தியா ஸ்பெண்ட் மின்னஞ்சல் அனுப்பியது. நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை பதில் வரவில்லை.

கோலாப்பூரில் உள்ள மற்ற சுரங்கங்கள் விதிமீறல்கள் காரணமாகவோ அல்லது வளங்கள் தீர்ந்துவிட்டதாலோ மூடப்பட்டுள்ளன என்று எம்.பி.சி.பியின் துணை பிராந்திய அதிகாரி பிரசாந்த் கெய்க்வாட் தெரிவித்தார்.

ஏற்கனவே 2011 ஆம் ஆண்டில், மாதவ் காட்கில் கமிட்டி அறிக்கையானது, மேற்குத் தொடர்ச்சி மலைகள் "பேராசையால் துண்டாடப்பட்டு வருகிறது; ஏழைகளை கசக்கி, அவர்களை வாழ்வாதாரமின்றி வெளியேற்ற முயற்சித்தன. இதில் பெரிய சோகம், இந்த மலைத்தொடர் தென்னிந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும்” என்று குறிப்பிட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி முழுவதிலும் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் கடும் பற்றாக்குறை என்ற பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அது கோரியிருந்தது.

(கானேகர், டெல்லியை சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர். சுற்றுச்சூழல் கொள்கை, வனவிலங்கு மற்றும் காலநிலை மாற்றம் போன்றவை குறித்து எழுதி வருகிறார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.