புதுடெல்லி: நாடாளுமன்ற தரவுகளை பற்றிய இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வின்படி, 15வது மற்றும் 16 வது மக்களவைக்கு இடையில் அவையில் வழங்கப்பட்ட அரசு உத்தரவாத வாக்குறுதிகளின் எண்ணிக்கை 300% அதிகரித்துள்ளது. இதில், காவலில் வைக்கப்பட்ட மரணங்கள் குறித்த தகவல்களை வழங்குவது முதல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் வரை இடம் பெற்றுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதலாவது தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) அரசு பொறுப்பில் இருந்த 16வது மக்களவை (2014-2019) காலத்தில், 1,540 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது பதவிக்காலமான, 15வது மக்களவையின் (2009-2014) இறுதியில் அளிக்கப்பட்ட 385 வாக்குறுதிகளுடன் ஒப்பிடும் போது, இது அதிகம்.

கடந்த 2019 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக நடந்த 2018-19 நாடாளுமன்றக் கூட்டங்களில், மக்களவையில் அளித்த வாக்குறுதிகளில் கிட்டத்தட்ட 76% நிறைவேறவில்லை.

அரசு வாக்குறுதிகள் என்பது, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவாதங்கள் ஆகும். இவை ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகவோ அல்லது விவாதத்தில் குறுக்கிட்டு அளிட்ஜ்ஹ்த வாக்குறுதிகளாக இருக்கும்; நாடாளுமன்ற உறுப்பினர்களால் இவை எழுப்பப்பட்டதாக இருக்கலாம்.

இதற்கு, சரியான நேரத்தில், முறையாக நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, ஒரு முக்கிய நடவடிக்கையாகும்; இந்த செயல்பாடு தீவிரமாக பார்க்கப்படுகிறது.

வாக்குறுதி உத்தரவாதங்கள் மிக முக்கியமானவை. நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு மக்கள் பிரதிநிதியாக அரசை பொறுப்புக்கூற வைத்திருக்க வேண்டும். அவர்களின் தொகுதி மற்றும் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கேட்கிறார்கள்.

ஒரு உத்தரவாதம் வழங்கப்பட்டால், அதை மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என விதிகள் கூறுகின்றன.இந்த காலக்கெடுவுக்குள் அரசால் பூர்த்தி செய்ய முடியாவிட்டால், கேள்விக்குரிய உத்தரவாதத்தை ‘கைவிட்டதாக’ அறிவிக்க, உத்தரவாதம் தொடர்பான குழுவிடம் அரசு கோரிக்கை வைக்க வேண்டும். இக்கோரிக்கையை அனுமதிக்க வேண்டுமா என்பதை குழுவே பரிந்துரைக்கிறது.

முதலாவது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு காலத்தில் மக்களவையில் அளிக்கப்பட்ட உத்தரவாதங்களில் சில நிறைவேற்றப்படவில்லை; உதாரணத்துகு சில எடுத்துக்காட்டுகள் இங்கே:

  • மேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா மலைப்பகுதியில் சட்டவிரோதமான எலி- துளை சுரங்கத்தில் சிக்கிய 15 சுரங்கத்தொழிலாளர்களின் சடலங்கள் 2018 டிசம்பரில் மீட்கப்பட்டது குறித்து அரசிடம் 2019 பிப்ரவரியில் மக்களவையில் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அரசு, "மாநில அரசிடம் இருந்து தகவல் பெறப்படுகிறது" என்று கூறியது; ஆனால் இது குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
  • தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட, காவலில் சித்திரவதை மற்றும் இறப்புகள் பற்றியும், அவற்றை தடுக்க ஏதேனும் வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளதா எனவும், 2016 நவம்பரில் அரசிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அரசு, தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது என்றது; ஆனால் இதுவும் நிலுவையில் உள்ளது.
  • Wrongful Prosecution (Miscarriage of Justice): Legal Remedies’ என்ற சட்ட ஆணையத்தின் ஆகஸ்ட் 2018 அறிக்கையை செயல்படுத்துதல், அதன் வெளியீடு தொடர்பாக, ஏப்ரல் 2018இல் அரசிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கும் வழக்கம் போலவே, புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அரசு கூறியது, ஆனால் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. "விரிவான ஆலோசனை மேற்கொள்ள வேண்டியதன் காரணமாகவும், ஆணையத்தின் அறிக்கைகளுடன் பலவற்றை இணைக்க வேண்டியிருப்பதால், வழக்கத்தை விட அதிக நேரம் எடுக்கும்" என்று உள்துறை விவகார அமைச்சகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

கடந்த 16வது மக்களவை காலத்தில் வழங்கப்பட்ட 485 உத்தரவாதங்களை கைவிட, அது தொடர்பான குழுவின் அனுமதியை அரசு கோரியது. ஆனால், அவற்றில் கிட்டத்தட்ட 57% (275) ஐ குழு நிராகரித்தது. உத்தரவாதங்களை கைவிடுமாறு கோருவதற்கான அரசின் காரணங்கள் மாறுபட்டவை - முழுமையற்ற தகவல்கள், நீண்ட காலக்கெடு மற்றும் அரசு அளித்த ‘உத்தரவாதம்’ சர்ச்சை போன்றவை கூறப்பட்டன.

ஒரு உத்தரவாதம் தொடர்பான கேள்விக்கு நாடாளுமன்ற பதில்களின் போது அமைச்சர்கள் பெரும்பாலும் “விஷயம் பரிசீலனையில் உள்ளது”, “நான் அதை கவனிக்கிறேன்” போன்ற ரெடிமேட் பதில்களையே பயன்படுத்துகின்றனர். கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம், விவாதங்கள், தீர்மானங்கள் பலவற்றின் போது “நான் அதைக் கருத்தில் கொள்வேன்”, “தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவையில் சமர்ப்பிக்கப்படும்” மற்றும் “மாண்புமிகு உறுப்பினருக்கு வழங்கப்படும்” என்ற பதில்களே தரப்படுகின்றன.

2018 இல் அளிக்கப்பட்ட 76% உத்தரவாதங்கள் நிறைவேறவில்லை

கடந்த 16வது மக்களவையில் (2014-2019) அளிக்கப்பட்ட அனைத்து உத்தரவாத வாக்குறுதிகளில் கால்பகுதி (28.6%) நிலுவையில் உள்ளது - இது 2009-2014 ஆம் ஆண்டில் ஒப்பிடும் போது 6% ஆக இருந்தது. மொத்தத்தில், பாரதிய ஜனதா தலைமையிலான அரசு, 5,383 உத்தரவாதங்களை அளித்தது; அதில் 1,540 கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலுவையில் உள்ளன.

"அவையில் அரசு அளித்த உத்தரவாதங்களை கண்காணிப்பது நாடாளுமன்றத்தின் நடைமுறைகள் மற்றும் பொறுப்பேற்பு வழிமுறைகளில் ஒன்றாகும்" என்று டெல்லியை சேர்ந்த பிஆர்எஸ் சட்டசபை ஆராய்ச்சி அமைப்பின் துணைத்தலைவர் பிரச்சீ மிஸ்ரா கூறினார். "இந்த உத்தரவாதங்களை நிறைவேற்ற அரசுக்கு மூன்று மாத அவகாசம் உள்ளது. ஒவ்வொரு உத்தரவாதத்தின் தன்மையையும், அத்தகைய நீட்டிப்பைக் கோருவதற்கான அரசின் காரணத்தை ஆராய்ந்த பிறகே, குழு கால அளவை நீட்டிக்கும்.

Source: Committee on Government Assurances, Lok Sabha
Note: First sitting is for the oath-taking ceremony, no parliamentary business is conducted.

கடந்த 16வது மக்களவையில், அரசு உத்தரவாதங்களை நிறைவேற்றுவதற்கான விகிதம், 2014 ஜூலை -ஆ கஸ்ட் மாதங்களில் இரண்டாவது அமர்வில் 84% இல் இருந்து, 2019 ஜனவரி - பிப்ரவரி மாதங்களின் கடைசி அமர்வில் 10% ஆக குறைந்தது. அதேநேரம், நிலுவையில் உள்ள வாக்குறுதிகள் ஜூலை - ஆகஸ்ட் 2014 இல் இரண்டாவது அமர்வில் 11% என்று இருந்தது, 2019 ஜனவரி-பிப்ரவரி மாதங்களின் கடைசி அமர்வில் 89% ஆக உயர்ந்தன.

புதிய அரசின் முதல் ஆண்டான 2014-15 இல், மக்களவையில் 1,776 உத்தரவாத வாக்குறுதிகள் தரப்பட்டன. இதில் 81% அல்லது 1,451 பூர்த்தி செய்யப்பட்டன; 13% அல்லது 236 இன்னும் நிலுவையில் உள்ளன.

கடந்த 2019 பொதுத்தேர்தல் நடந்த ஆண்டில், கடைசி மூன்று மக்களவை அமர்வுகளில் அரசு 582 உத்தரவாதங்களை வழங்கியது; அவற்றில் 443 (76%) நிலுவையில் உள்ளன.

அரசுக்கு கண்டனம்

16வது மக்களவையில், 2014-2018 முதல், உத்தரவாத வாக்குறுதிகளை கைவிட வேண்டும் என்ற அனைத்து கோரிக்கைகளிலும், 56.7%ஐ நாடாளுமன்றக் குழு நிராகரித்தது. 2018 ஆம் ஆண்டில், நான்கில் மூன்று பங்கு (76%) கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன; இது ஐந்து ஆண்டுகளில் மிக அதிகபட்ச நிராகரிப்புகள் ஆகும்.

"அரசு உத்தரவாதங்கள் குறித்த அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு தாக்கல் செய்யப்படுகின்றன; ஆனால் இந்த அறிக்கைகள் மீது அவையில் விவாதிக்கப்படுவதில்லை" என்று மிஸ்ரா கூறினார். "இவை ஒருமனதாகவோ, உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டோ, அவர்களால் கருத்து குறிப்புகள் தாக்கல் செய்யப்படுவதோ இல்லை. இந்த உத்தரவாதங்களின் தன்மை என்ன என்பதையும் நாம் காண வேண்டும்”.

உத்தரவாத வாக்குறுதிகளை கைவிடுமாறு கோருவதற்கு அரசு அளித்த பல காரணங்களை, நாடாளுமன்றக்குழு விமர்சித்துள்ளது. திருநங்கைகளின் சமூகத்தை மேம்படுத்துவதற்கான தேசிய கொள்கை குறித்து ஜூலை 2014 இல் கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்த விவகாரத்தை சமாளிக்க ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அரசு பதிலளித்தது. மக்களவையில் இந்த அறிக்கையை வெளியிடுவதை ஒரு உத்தரவாதமாக கருதக்கூடாது என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வாதிட்டது. ஆனால், இந்த வாதத்தை குழு நிராகரித்தது. அவையில் ஒரு அறிக்கை தாக்கல் செய்வது ஒரு உத்தரவாதமாகும் மற்றும் "எந்த அறிக்கையை உத்தரவாதமாக அல்லது வேறுவிதமாகக் கருதுவதற்கான குழுவின் அறிவுத்திறனை அமைச்சகம் கேள்வி கேட்க முடியாது" என்றும் சுட்டிக்காட்டியது.

மற்றொரு சந்தர்ப்பத்தில், மத்திய கோல்பீல்டு லிமிடெட் (சி.சி.எல்) நிறுவனத்திற்கு ராஞ்சி மற்றும் பிற பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதற்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க லஞ்சம் பெற்றதாக கூறப்படும் 'நிலத்திற்கு வேலை' மோசடி குறித்த தகவல்களை வழங்குவதாக, மே 2016 இல் அவைக்கு அளித்த உறுதிமொழியை கைவிட, மத்திய அரசு விரும்பியது. இதில், மத்திய புலனாய்வுப் பிரிவின் நீண்ட நெடிய விசாரணை செயல்முறையை, நிலக்கரி அமைச்சகம் மேற்கோள் காட்டியது. ஆனால், குழுவோ இதன் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. "இத்தகைய காரணங்களுக்காக ஒரு உத்தரவாதத்தை கைவிட முடியாது என்று குழு உறுதியாக (sic) கருதுகிறது," என்று தனது பதிலில் அது கூறியது.

இன்னொரு சந்தர்ப்பத்தில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தொடங்கப்பட்டதில் இருந்து விசாரித்த பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை குறித்து மே 2015இல் கேள்வி கேட்கப்பட்டது. "என்ஐஏவின் கீழ் குறிப்பிட்ட நேரத்திலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்குகள் விசாரணையில் உள்ளன" என்பதால் உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவாதத்தை கைவிட விரும்பியது. 27 வழக்குகள் விசாரணையில் உள்ளன என்று அமைச்சகம் பதிலளித்தது. இந்த பதிலை குழு நிராகரித்தது; "பதிலில் குறிப்பிடப்பட்ட 27 வழக்குகளின் முடிவு குறித்து அமைச்சகத்தில் பதில் தேவை என்று கருகிறோம்" என்று கூறியது.

பிப்ரவரி 2014 இல், ரயில் பாதைக்கான நிலம் கையகப்படுத்தும் போது நிலம் இழந்தவர்களுக்கு வழங்கப்படும் வேலைகள் குறித்த உத்தரவாத வாக்குறுதியை அனுமதிக்குமாறு 2014 பிப்ரவரியில் அரசு கோரியது; இது ஒரு மாநில பணி என்றும், நிலம் கையகப்படுத்துதலுக்கு பணம் அளிப்பது மாநில அரசுடையது எனவும் நியாயப்படுத்தியது. இத்தைகைய கோரிக்கையை காரணம் கூறி குழு நிராகரித்தது; "அத்தகைய அறிக்கை, நாடாளுமன்ற கடமையை நிறைவேற்றுவதற்கான அமைச்சகத்தின் செயலற்ற அணுகுமுறையின் வெளிப்பாடு மட்டுமல்ல; அவர்களின் பொறுப்பை கைவிடுவதும் ஆகும்" என்று வாதிட்டது. பலமுறை முயற்சி செய்த போதும், உத்தரவாதத்தின் தற்போதைய நிலை குறித்து, இந்தியா ஸ்பெண்டிடம் கருத்து தெரிவிக்க ரயில்வே அமைச்சகம் மறுத்துவிட்டது.

குழுவைத் தவிர, நிலுவையில் உள்ள உத்தரவாதம் குறித்து அரசின் பதிலைப் பெற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேறுவழி இல்லை.

"அவையில் அரசால் வழங்கப்பட்ட உத்தரவாதத்திற்கு பதில் கிடைக்காவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் தனித்தனியாக அதுதொடர்பாக பின்தொடர முடியாது" என்று அரசு உத்தரவாதங்கள் தொடர்பான குழுவின் துணை செயலாளர் எஸ் எல் சிங் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "குழு உத்தரவாதங்களைத் தொடர்கிறது, மேலும் அவர் ஒரு பதிலை விரும்பினால் எம்.பி., குழுவின் தலைவர் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தனிப்பட்ட அளவில் எழுதலாம்.நடைமுறைப்படுத்தப்பட்ட உத்தரவாதங்களை பதிவுசெய்வதைப் பொருத்தவரை, அது தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது” என்றார் அவர்.

நாடாளுமன்றத்தில் பல வழிமுறைகள் உள்ளன; மேலும் பூஜ்ஜிய நேரம் போன்ற பிற வாய்ப்புகளும் உள்ளன; அல்லது அமைச்சர்களைப் பொறுப்பேற்க குறுகிய கால விவாதத்தை கிளப்பலாம் என்று மிஸ்ரா கூறினார். ஒரு "உத்தரவாதக் குழு என்பது உறுதிப்படுத்தப்பட்ட உத்தரவுகளை கண்காணிப்பதற்கான கருவிகளில் ஒன்றாகும்" என்று அவர் கூறினார்.

Source: Committee on Government Assurances, Lok Sabha

பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த நிறைவேறாத உத்தரவாத வாக்குறுதிகள்

பிப்ரவரி 2019 இல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை (இது, நவம்பர் 8, 2016 அன்று இந்தியாவின் நாணயத்தின் 86%-ஐ மதிப்பிழக்கச் செய்தது) பற்றி ஏதேனும் ஆய்வு நடத்தப்பட்டதா என்று நிதி அமைச்சகத்திடம் கேட்கப்பட்டது; அதேபோல், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டதன் தாக்கம்,தொழில்துறை உற்பத்தி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உணரப்பட்டதா என்று கேட்கப்பட்டது. இதற்கு அரசு அளித்த பதில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை அல்லது ஜிஎஸ்டி பற்றி எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை; பொருளாதாரத்தில் அவை ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆய்வு செய்யவில்லை என்பது தான். இருப்பினும், தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அது உறுதி அளித்தது. இந்த விஷயத்தில் எந்தவொரு கண்டுபிடிப்பையோ, முடிவையோ அரசு இன்னும் வெளியிடவில்லை.

கடந்த 2019 ஜனவரியில் அரசிடம் மற்றொரு கேள்வியாக, தானாக முன்வந்து அறிவித்தவர்களின் கறுப்புப்பணத்தின் மதிப்பு குறித்து கேட்கப்பட்டது. இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறிய அரசு, இது தொடர்பாக உறுதிமொழி அளித்தது; அது இன்னும் நிலுவையில் உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் மற்றும் இந்தியாவின் முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் தொழில் உரிமையாளர்கள் மீது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதன் தாக்கம் குறித்து, மார்ச் 2019 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டது.

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் பற்றிய தகவல்கள்

உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 2018 இல் குறைந்துவிட்டதையும், இந்திய ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ஏதேனும் தகவல் உள்ளதா எனவும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் 2018 டிசம்பரில் கேட்கப்பட்டது. தகவல் இன்னும் தொகுக்கப்பட்டு வருகிறது (ஒரு உத்தரவாதமாக கருதப்படுகிறது) என்று அரசு பதிலளித்தது; ஆனால் இன்றுவரை இந்த உத்தரவாதம் நிலுவையில் உள்ளது. உண்மையில் அரசின் நிலை என்னவென்றால், தேசிய குற்றப்பதிவு பணியகம் பத்திரிகையாளர்கள் உட்பட தனித்தனி வகை நிபுணர்களுக்கான தரவுகளை சேகரிக்கவில்லை என்பது தான்.

இருப்பினும், 2014 முதல் 2016 வரை ஊடகவியலாளர்கள் மீது 189 தாக்குதல்கள் நடந்துள்ளதாக உள்துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் 2018 டிசம்பரில் மக்களவைக்கு அளித்த பதிலில் தெரிவித்தார். 2019 ஜனவரியில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த தரவுகளை என்.சி.ஆர்.பி சேகரிக்கவில்லை என்ற அரசின் கூற்றை பேக்ட்செக்கர்.இன் (FactChecker.in) இணையதளம் நிராகரித்தது.

(அலி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப் பணியாளர்; சர்மா, நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த ஒரு ஆராய்ச்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.