மும்பை: தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) தரவுகளின்படி, 2017ஆம் ஆண்டில் 100 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர். இவர்களில் 58 பேர், கைதான பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை; 42 பேர் போலீஸ் அல்லது நீதிமன்ற காவலில் இருந்தனர்.

காவல் மரணங்கள் தொடர்பான 62 வழக்குகளில், 33 காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்; 27 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர்; ஆனால் யாரும் தண்டனைக்குள்ளாகவில்லை.

"ஒரு வருடத்தில் 100 காவல் மரணங்கள் என்பது, என் பார்வையில் மிக தீவிரமான கவலைக்குரிய ஒன்று. காவலில் வைப்பது, மக்களை பாதுகாப்பாகவும் உயிருடனும் வைத்திருக்க உகந்ததல்ல என்பதை இது குறிக்கிறது” என்று இலாப நோக்கற்ற அமைப்பான காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பின், காவல் சீர்திருத்தங்களின் திட்டத் தலைவர் தேவிகா பிரசாத், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "யாராவது காவலில் இருக்கும்போது இறந்துவிட்டால், அதற்கு சம்மந்தப்பட்ட காவலர் பொறுப்பேற்க வேண்டும்" என்றார்.

அக்டோபர் 21இல், என்.சி.ஆர்.பி தரவு வெளியீட்டை தொடர்ந்து, காவல் மரணங்கள் குறித்த பல செய்திகள் வெளியானதால், தரவுகளை வெளியிடுவது அத்தகைய நடவடிக்கைகளுக்கு தடையாக இல்லை.

கடந்த அக்டோபர் 27, 2019இல், மும்பையின் வதாலா டிரக் டெர்மினல் காவல் நிலையத்தில் 26 வயது இளைஞர் விஜய் சிங், போலீஸ் காவலில் இறந்தார். இது தொடர்பாக, ஐந்து காவல்துறையினர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா அக்டோபர் 30, 2019 செய்தி தெரிவிக்கிறது.

ஒரு ஜோடி அளித்த புகாரை தொடர்ந்து, சிங் கைது செய்யப்பட்டார்; ஒன்றாக அமர்ந்திருந்த அவர்கள் மீது, சிங் தனது பைக்கின் ஹெட்லைட்டை போட்டுக்காட்டி தொல்லை கொடுத்தார் என்பது தான் குற்றச்சாட்டு. நெஞ்சுவலி உடைய அந்த இளைஞர், போலீசாரால் சவுக்கால் அடிக்கபட்டதாகவும், மருத்துவ உதவி மறுக்கப்பட்டதாகவும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டினர்.

உத்தரபிரதேசத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், 50 வயதான சத்ய பிரகாஷ் சுக்லா சித்திரவதை செய்யப்பட்டு போலீஸ் காவலில் இறந்தார் என்று, அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியதை, தி ட்ரிப்யூன் 2019 அக்டோபர் 30இல் செய்தி வெளியிட்டது. சுல்தான்பூரின் பீப்பர்பூர் பகுதியில் வங்கி ஊழியர் வீட்டில் திருடினார் என்பது, சுக்லா மீதான குற்றச்சாட்டு.

"ஒவ்வொரு காவல் மரணமும், ஒவ்வொரு சித்திரவதை புகாரும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அவற்றை பகுப்பாய்வு செய்ய வேண்டும்; விசாரணைகள் முறையாக நடத்தப்பட்டு, அவை உரிய, சிறந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்று முன்னாள் தலைமை தகவல் ஆணையரும், இந்திய காவல்துறை அதிகாரியுமான யசோவர்தன் ஆசாத், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "[காவல்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக] உச்சநீதிமன்றத்தின் அடிப்படை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், உள்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும், திறன்களை கட்டியெழுப்ப வேண்டும் மற்றும் மனிதவள முதலீடு தேவை" என்றார் அவர்.

கைது செய்யப்பட்ட எந்தவொரு (காவலில் உள்ள) நபரின்ஆரோக்கியமும், பாதுகாப்பும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றர் பிரசாத்; "இதனால்தான் ஒரு நபர் காவலில் இறக்கும் போது மரணத்திற்கான காரணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து ஆராய, நீதி விசாரணையை மேற்கொள்ள, சட்டம் உத்தரவிடுகிறது. நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் காவல் மரணம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் ஏன் தெரிவிக்க வேண்டும்? ஏனெனில், அது வீடியோ பதிவு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை போன்ற பிற பொறுப்புகளுக்கான நடவடிக்கைகளைத் தூண்டுகிறது. இவை அதிகப்படியான அதிகாரம் அல்லது சட்டவிரோத காவலில் இருந்து, கைதிகளை பாதுகாக்கும்நடவடிக்கைகள்” என்றார் அவர்.

அதிகம் கூறப்பட்ட காரணம், தற்கொலை

என்.சி.ஆர்.பி. தரவுகளின்படி, இந்தியாவில் பதிவான காவல் மரணங்கள் 2016 ஆம் ஆண்டில் 92 என்றிருந்தது, 2017இல் 100 என, 9% அதிகரித்தது. அதிகபட்சமாக ஆந்திராவில் 27 இறப்புகள் பதிவானது; மகாராஷ்டிரா (15), குஜராத் (10) ஆகியன 2017இல் அடுத்தடுத்த இடங்களில் இருந்தன. மொத்த காவல் மரணங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இம்மூன்று மாநிலங்களில் பதிவாகின.

கடந்த 2017இல் ஏற்பட்ட காவல் மரணங்களில் அதிகபட்ச காரணம், தற்கொலை (37) என்று கூறப்பட்டது. அடுத்து, ‘சிகிச்சையின் போது மருத்துவமனைகளில் உடல் நலக்குறைவு /அல்லது மரணம்’ (28); ‘காவல்துறையினரின் உடல்ரீதியான தாக்குதலால்’ போலீஸ் காவலில் இருந்தபோது ஏற்பட்ட காயங்கள் (5) ஆகும். ‘குறிப்பிடப்படாத பிற சம்பவங்கள்’, 22% இறப்புகளுக்கு காரணமாக இருந்துள்ளன.

"ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக , காவலில் தற்கொலை மரணங்கள் நிகழ்வது உண்மை தான்," என்ற ஆசாத், நிர்பயா வழக்கின் உதாரணத்தை மேற்கோள்காட்டி, “ராம் சிங் (குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர்) சிறையில் இருந்தார்; அவர் தற்கொலை செய்துகொண்டபோது போலீஸ் காவலில் கூட இல்லை. அவமானம் அல்லது வேறு காரணங்களுக்காக கூட தற்கொலை செய்திருக்கலாம்” என்றார்.

மனித உரிமை மீறல்

கடந்த 2017இல் மனித உரிமை மீறல்களுக்காக, காவல்துறையினர் மீது 56 வழக்குகளை, என்.சி.ஆர்.பி பதிவு செய்தது; 57 போலீசார் கைது செய்யப்பட்டனர், 48 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன மற்றும் மூவர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். இந்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகள் ‘சித்திரவதை / காயத்தை ஏற்படுத்துதல் / காயப்படுத்துதல்’ (17); அதை தொடர்ந்து ‘காவல் மரணங்கள்’ (7); ‘என்கவுண்டர் கொலை’ மற்றும் ‘மிரட்டி பணம் பறித்தல்’ ஆகிய இரண்டில் தலா ஆறு வழக்குகள் பதிவாகின.

"சித்திரவதை என்பது ஒரு மிகப்பெரிய குற்றம். மனித உரிமை மீறலை ஒருபோதும் தவிர்க்க முடியாதது என்று நினைக்கக்க்கூடாது" என்ற பிரசாத், “குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து தகவல்களை பெற சித்திரவதைகளை மட்டுமே காவல்துறை நம்பியிருந்தால், அதன் நம்பகத்தன்மையை அதுவே உடைத்துவிட்டதாக கூறலாம்” என்றார். சித்திரவதையின் மூலம் பெறப்படும் எவும் பயனுள்ள அல்லது நோக்கம் நிறைவேற்றுவதாகவோ இருக்காது” என்றார்.

இது, தீவிர விசாரணை, துப்புகளை கண்டுபிடிப்பது மற்றும் பின்தொடர்வது, தகவல்களை உறுதிப்படுத்துதல், ஆதாரங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல், புதிய விசாரணை மற்றும் விசாரணை நுட்பங்களை கற்றுக்கொள்வது துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை மீட்டெடுக்கும் என்று நம்பலாம் என்ற பிரசாத், சித்திரவதை என்பது இந்தியாவில் சட்டத்தால் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது: "வாக்குமூலத்தை வலுக்கட்டாயமாக பெறுவது, சட்ட விரோதமானது" என்றார்.

கள யதார்த்தங்கள்

வீடு சேதம் போன்ற குற்ற விசாரணை மற்றும் சொத்து தொடர்பான வழக்குகளை தீர்க்க முயற்சிக்கும்போது பொதுவாக அடிதடி காயம் ஏற்படுகிறது என்ற ஆசாத், "வீடு சேத வழக்குகளில் தண்டனை மிகக் குறைவு. எனவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நீர்த்து போகும் வழக்குகளை தீர்க்க, காவல்துறைக்கு கடும் அழுத்தம் உள்ளது" என்றார்.

ஒரு குற்றவாளியை அல்லது சந்தேக நபரை கைது செய்ய நீண்ட நேரம் படைகள் பயன்படுத்தப்படுகிறது. கிராமப்புறங்களில், சி.சி.டி.வி போன்ற இன்றைய விஞ்ஞான உதவிகள் இல்லை; இது போன்ற வழக்குகளில், காவல்துறையினர் வலிமையை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றார் ஆசாத். குறைந்த நிதி ஒதுக்கீட்டால், காவல் உபகரணங்களின் நிலையும் மோசமாக உள்ளது.

மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்களின் திறன் தேவை என்று வலியுறுத்தும் ஆசாத், “அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒரு உள்கட்டமைப்பு உயர்தர காவல் பிரயோகத்தை ஊக்குவிக்க முடியாது” என்றார். "தலைமையகத்தில் ஒரு சில இடங்களைத் தவிர, முறையான விசாரணைக்கான பிரிவுகள் இல்லை," என்று அவர் கூறினார்; "சந்தேக நபரையோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவரையோ 80-100 கி.மீ. வாகனத்தில் அழைத்து சென்று போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரிக்க முடியாது. எனவே விரைவாக விசாரிக்க, கீழ்-நிலை அதிகாரிகள் சில நேரங்களில் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். இது காயத்தை ஏற்படுத்தும் அல்லது கடும் சேதத்திற்கு வழிவகுக்கும். இதுதான் காவல்துறையின் உண்மை, ”என்றார்.

கிராமப்புறங்களில் உள்ள காவல் நிலையங்களில் தொலைதொடர்பு சிக்னல் அல்லது நெட்வொர்க், இணைய வசதி, வாகனங்கள் மற்றும் சாலைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. லாக் அப் நிலைமைகள் மிகவும் மோசமானவை; காவலில் வைக்கப்படுவது தவிர, இதுபோன்ற சூழ்நிலைகளில் இருப்பதே ஒரு சித்திரவதைதான் என்று ஆசாத் கூறினார்.

"முற்றிலும் சகிப்பு தன்மையில்லாமை"

"நீதிமன்ற காவல் மரணங்கள், காவல்துறை அத்துமீறல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம்; ஆனால் நாம் பயங்கரவாத விஷயத்திலும் சமமாக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இது மனித உரிமைகளுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல்” என்று, டெல்லியில் நடைபெற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 26வது அறக்கட்டளை கொண்டாட்டத்தில் உரையாற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக, அக்டோபர் 12, 2019இல் இந்தியா டுடே செய்தி வெளியிட்டது.

"தேவையில்லாமல் போலீஸ் காவலில் ஒருநபர் கூட இறக்கக்கூடாது அல்லது சட்டவிரோத இறப்புக்கு பலி ஆகக்கூடாது என்பது நமக்கான பொறுப்பு. ஒவ்வொரு நபரும் கண்ணியத்துடன் வாழ வசதிகளையும் நாம் வழங்க வேண்டும்,” என்று அமித் ஷா கூறினார்.

சில திருத்தங்கள்

"காவல் மரணங்களால் ஏற்படும் சிக்கலை கையாளும் வழிமுறைகள் இன்று உள்ளன," என்று ஆசாத் கூறினார்: ஒவ்வொரு காவல்துறை மரணமும் ஒரு மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உட்பட்டது. மாஜிஸ்திரேட் காவல்துறையின் அதே அமைப்பில் இருப்பதாக ஒருவர் சொன்னாலும் அல்லது கைகோர்த்து செயல்படுவதாக கூறினாலும், புகார் அளித்து நீதிமன்றம் செல்ல ஒருவருக்கு உரிமை உண்டு. “பல வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது நீதிமன்றங்கள் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. காவல்துறை மட்டுமல்ல, பிற காரணங்களும், வழிமுறை செயல்பாடும் கூட மாஜிஸ்திரேட், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் முழு நிர்வாக அமைப்பு போன்றவற்றையும் கவனிக்க வேண்டும் அல்லது கேள்வி கேட்க வேண்டும், "என்று அவர் கூறினார்.

"மத்திய புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை மற்றும் நுட்பங்கள் குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்" என்று ஆசாத் மேலும் கூறினார். “அவர்கள் உளவியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் புதுப்பிக்கப்பட்டதை கற்க வேண்டும்; ஆனால், அது நடக்காது. அதற்கான கருவிகள் இயங்கவில்லை. இவைதான் நாம் கவனிக்க வேண்டிய அடிப்படை காரணங்கள்” என்றார்.

காவல் துறை சீர்திருத்தங்கள் மற்றும் காவல் மாரணங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பேசிய பிரசாத்," காவல் மரணங்கள் இல்லாமல் செய்ய, காவல்துறையின் தலைமையின் கீழ் உண்மையான மற்றும் புலப்படக்கூடிய அர்ப்பணிப்பு தேவை. காவல்துறை என்ற போர்வையில் மனிதாபிமானமற்ற செயல்கள், நடைமுறைகளுக்கு இடமில்லை என்பதற்கான உறுதியான சமிக்கையாக, சித்திரவதை மற்றும் காவலில் வைக்கப்பட்ட மரணத்திற்கு காரணமான காவல்துறையினரை தண்டிக்கும் உத்தரவாதம் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது இது அப்படி இல்லை” என்றார்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள - அதாவது மருத்துவ பரிசோதனைக்கான உரிமை, நீதித்துறை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுவதற்கான உரிமை, துன்புறுத்தல் அல்லது சித்திரவதை பற்றி புகார் செய்ய, போலீஸ் காவலுக்கான கால வரம்பு, வழக்கறிஞரை வைத்துக் கொள்ளும் உரிமை, நண்பர் அல்லது குடும்பத்தினருக்கு கைது பற்றி தகவல் தெரிவிக்கும் உரிமை போன்ற ஒவ்வொரு சட்டப் பாதுகாப்புகளை செயல்படுத்த வேண்டியது அவசியம் என்று பிரசாத் கூறினார்.

(மல்லபூர், இந்தியா ஸ்பெண்டின் மூத்த கொள்கை பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.