மும்பை: டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் கணக்கெடுக்கப்பட்ட 630 வளரிளம் பருவத்தினரில், சுமார் 9.2% பேர் இணையதள அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். அவர்களில் பாதி பேர்கூட இதுபற்றி ஆசிரியர்கள், பாதுகாவலர்கள் அல்லது சம்பந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு தெரிவிப்பதில்லை என்று, அரசுசாரா அமைப்பான சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ (Child Rights and You - CRY) மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

இணையதள பயன்பாட்டுடன் பாதிப்பும் அதிகரித்துள்ளது: பதிலளித்தவர்களில் 22.4% (13-18 வயதுடையவர்கள்) ஒருநாளைக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இணையதளம் பயன்படுத்தி, ஆன்லைன் சித்தரவதைக்கு ஆளான்வர்கள். அதே நேரம், நாளொன்றுக்கு நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இணையத்தை பயன்படுத்தியவர்களில் 28% பேர் வரை இணைய அச்சுறுத்தலை எதிர்கொண்டனர் என்று, பிப்ரவரி 18, 2020 அன்று வெளியிடப்பட்ட 'ஆன்லைன் ஆய்வு மற்றும் இணையத்திற்கு அடிமையாதல்’ என்ற தலைப்பிலான ஆய்வு தெரிவித்தது.

வளரிளம் பருவத்தினரில் 4ல் ஒருவர் தங்களது மார்பிங் செய்யப்பட்ட படம் அல்லது வீடியோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததை பார்த்ததாகவும், அவர்களில் 50% பேர் இது குறித்து போலீசில் புகார் செய்யவில்லை என்பதையும் ஆய்வு கண்டறிந்துள்ளது.

கம்ப்யூட்டர்கள், லேப் டாப், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் மூலம் மிரட்டுவதை சைபர் குற்ற துன்புறுத்தல் என வரையறு செய்யப்படுகிறது; இது, சமூகவலைதள ஊடகங்கள், சாட் ரூம் எனப்படும் அரட்டை அறைகள் மற்றும் கேமிங் தளங்களில் ஏற்படலாம்.

பெண்கள் அல்லது குழந்தைகளை இணையத்தில் பின்தொடர்வது அல்லது கொடுமைப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் 2017இல் 542 ஆக இருந்து 2018ம் ஆண்டில் 739 ஆக 36% அதிகரித்துள்ளதாக, தேசிய குற்றப்பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி) சமீபத்தில் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், பெண்கள் மற்றும் குழந்தைகளை இணையத்தில் தொடர்ந்தல் அல்லது கொடுமைப்படுத்துவதற்கான தண்டனை விகிதம் 2017இல் 40% என்பது, 2018ம் ஆண்டில் 25% ஆக 15 சதவீத புள்ளிகள் சரிந்தது. இருப்பினும், அதே காலகட்டத்தில், நிலுவையில் உள்ள சதவீதம் 1 சதவீத புள்ளியில் இருந்து 96% ஆக அதிகரித்துள்ளதை தரவு காட்டுகிறது.

ஆயினும்கூட, அச்சுறுத்தல்/ பிளாக் மெயில் செய்தல் தொடர்பான வழக்குகள் அதே காலகட்டத்தில் 313 என்பது, 223 ஆக 28.3% வீழ்ச்சியடைந்தன; இதற்கு புகார் அளித்தல் குறைவே காரணம் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.

மொத்தத்தில், 2017 முதல் 2018 வரை சைபர் கிரைம் வழக்குகளின் எண்ணிக்கையில் 25% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று என்.சி.ஆர்.பி தரவு காட்டுகிறது.

இணைய அச்சுறுத்தல் ஏன்

ஜெர்மனியில் உள்ள லுபானா பல்கலைக்கழகத்தின் கலாச்சார மற்றும் அழகியல் டிஜிட்டல் மீடியாவின் பேராசிரியர் நிஷாந்த் ஷா கூறுகையில், இணைய அச்சுறுத்தலுடன் மூன்று குறிப்பிட்ட தூண்டுதல்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். "ஒன்று சமூக ஊடகங்களில் பொதுவாகக் காணப்படும் வன்முறையின் இயல்பான தன்மை" என்றார் அவர். "இரண்டாவதாக, இது முன்பின் தெரியாத அல்லது தொலைவில் உள்ளவரால் தொடர்புடையது; இது மனித இருப்பு மற்றும் சமூக பச்சாதாபம் இரண்டையும் பறிக்கிறது; இது பெரும்பாலும் நமது தகவல்தொடர்புகளில் குறியாக்கம் செய்யப்படுகிறது. மூன்றாவது, இது திட்டமிடப்பட்ட வழிமுறை கட்டமைப்புகளை குறிக்கிறது; குறிப்பிட்ட நபர்களை மவுனமாக்குவதற்காக அவை குறிவைக்கின்றன அல்லது அதிகார துஷ்பிரயோகம் மூலம் அவர்களை துன்புறுத்துவது” என்றார்.

ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் (யுனிசெஃப்) 2016 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, உலகளவில் மூன்று இணைய பயனர்களில் ஒருவர் (33%) ஒரு குழந்தை. இந்தியாவில், மூன்று இணைய பயனர்களில் இருவர் (66%) 12 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று, சமீபத்திய இந்தியா இணையதள அறிக்கை- 2019 தெரிவித்தது.

நீடித்த தாக்கம்

டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் கல்லூரியின் இளங்கலை மாணவியான 21 வயது ஸ்ரேயா சிங்* 21, தனது 12 வயதில் இணைய துன்புறுத்தலுக்கு இலக்காகி உள்ளார். "எனது முந்தைய பள்ளியை சேர்ந்த வகுப்பு நண்பன் ஒருவன், எனது புகைப்படங்களையும் தகவல்களையும் சேகரித்து வந்தான்; பின்னர், எனது பெயரில் ஒரு முகநூல் பக்கத்தை உருவாக்கி பயன்படுத்தினார்" என்று சிங், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "எனக்கு இது எதுவும் தெரியாது; இந்த போலி பக்கத்தை பற்றி எனது நண்பர்கள் மூலம் அறிந்தேன்," என்றார்.

ஆரம்பத்தில் இது, பாதிப்பில்லாமல் வெறும் அரட்டை போலத் தோன்றியது; விரைவில் தீயசக்தியாக மாறியது. பள்ளி நண்பர்கள் சிலர், அறுவறுக்கத்தக்க செய்திகளை அனுப்ப முயன்றனர்; இதை எதிர்கொள்ள முடியாத சிங், தனது நண்பர்களைத் தவிர்க்கத் தொடங்கினார். அவர், இறுதியாக மனச்சோர்வை எதிர்கொள்ள ஆலோசனை கோரினார்; அத்துடன் படித்த பள்ளியையும் மாற்றினார்.

"இத்தகைய கொடுமைக்குள்ளாகும் பாதிக்கப்பட்டவர்களின் மன, உளவியல் மற்றும் உணர்ச்சி முறிவு நீண்ட காலமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது - இணையதள சித்தரவதைகள் அத்தகு பாரம்பரியத்தில் மட்டுமே தொடர்கிறது" என்று ஷா சுட்டிக்காட்டினார். இவர், பெங்களூருவை சேர்ந்த இண்டர்நெட் அண்ட் சொசைட்டி என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக இருந்தவர்.

"சித்தரவதை பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பதற்கான ஒரு வழியாக கருதப்படுவதாக சில ஆய்வுகள் உள்ளன," என்று க்ரை (CRY) அமைப்பின் பிராந்திய இயக்குனர் சோஹா மொய்த்ரா கூறினார். "சிலர் பிரபலமடைய விரும்பலாம் அல்லது மற்றவர்களை காயப்படுத்துவதாலோ, அல்லது துஷ்பிரயோகம் செய்வதாலோ சக்திவாய்ந்தவர்களாக காட்டலாம்" என்றார். ஆன்லைன் சித்திரவதைகளுக்கு தனிப்பட்ட மனக்கசப்பு ஒரு பெரிய காரணம் என்று சைபர் கிரைம் சட்ட நிபுணர் கர்னிகா சேத் கூறினார்; அவர், இரண்டு தசாப்தங்களாக இந்தியாவில் சட்ட அமலாக்க குழுக்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

சிங்கை போலவே, வளரிளம் பெண் பயனர்களில் நான்கில் மூன்று பேர் சமூக வலைதள கணக்கை உருவாக்குவதற்கான குறைந்தபட்ச வயதை அறிந்திருக்கவில்லை (அல்லது கடைபிடிக்கவில்லை) ; இந்த வயது முகநூல் கணக்கு தொடங்க 13 மற்றும் பிற அமைப்புகளில் சமூகவலைதள கணக்கு ஆரம்பிக்க 18 என்று க்ரை (CRY) கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. சிறு வயதில் இருந்தே நவீன சாதனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி வளர்ந்ததால், சிறுவர்களில் 80% மற்றும் க்ரை அமைப்பால் பேட்டி கண்டவர்களில் 59% பெண்கள், சமூக ஊடக கணக்குகளைக் கொண்டிருந்தனர்; 31% பேருக்கு இரண்டு வேறு கணக்குகளுக்கு மேல் இருந்தது.

"முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை இணையம் அனுமதிக்கிறது; ஆனால் இது இயற்பியல் உலகில் பயணம், வேலை மற்றும் புதிய சமூகங்களைக் கண்டுபிடிக்கும் நபர்களிடம் இருந்து வேறுபட்டதல்ல" என்று ஷா கூறினார். ஆன்லைன் தவறான நடத்தை "சமூக ஆளுகை மற்றும் அரசியல் செயல்முறைகள் இல்லாததால், ஒருவருக்கொருவர் மனிதர்களாக அங்கீகரிக்க, மக்களை வடிவமைக்கவும் பயிற்சியின்றி வேரூன்றியுள்ளது" என்று அவர் கூறினார். சைபர் மிரட்டல் என்பது சில நேரங்களில் தொலைவில் உள்ள முன்பின் தெரியாத தவறான நபர்களுக்கு, ஒரு சமாளிப்பு வழிமுறையாகும்.

ஆன்லைன் துன்புறுத்தலை புகாரளித்தல்

வடமேற்கு டெல்லியில் உள்ள அசோக் விஹாரில் வசிக்கும் அங்கிதா*, 19, அரசை விமர்சித்து முகநூலில் பதிவிட்டதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வன்முறைக்கு உள்ளானார். ஆனால் அவர் அதுபற்றி புகார் அளிக்கவில்லை; எப்படி புகார் அளிப்பது என்று தெரியவில்லை என்று அவர் கூறினார்.

“இணைய சித்திரவதைகளை புகார் அளிப்பதில் உள்ளை மிகப்பெரிய பிரச்சினை ஒன்று, பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமானோர் அவர்களுக்கு என்ன மாதிரி கொடுமை நடக்கிறது என்பதை கூட அவர்களால் அங்கிகரிக்க இயலவில்லை ”என்றார் ஷா. துஷ்பிரயோகம் தொடர்பான பிற ஆய்வுகளைப் போலவே, கொடுமைப்படுத்துதல் என்பது டிஜிட்டல் தளத்தில் கட்டமைப்பு ரீதியாக இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைகள் இயல்பான அல்லது சாதாரணமானவை அல்ல என்பது கூடஅவர்களுக்கு தெரியாது. எனவே அவர்கள் உண்மையில் புகாரளிக்கும் தங்களது முகாந்திரத்தை விட்டுவிடுகிறார்கள்; மாற்று வழிக்காக குறை தீர்க்கும் வழிமுறைகள் மற்றும் தொகை செலவிடுவதை பயன்படுத்துகின்றனர்.

இணைய அச்சுறுத்தல் குறித்து அரிதாகவே வெளியே தெரிவிக்க வேறு காரணங்களும் உள்ளன. துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்களுக்கு சட்டரீதியான வாய்ப்புகள் தெரியாது; பதிலடி கொடுப்பதாக அஞ்சலாம் அல்லது அவதூறு குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிப்பதைப் பற்றி கவலைப்படலாம் என்று சேத் கூறினார். "அவர்கள் சட்ட கட்டமைப்பை சந்தேகிக்கிறார்கள் மற்றும் இந்த குற்றங்களை விசாரிக்க பயிற்சி பெற்ற அதிகாரிகள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை," என்று அவர் கூறினார்.

க்ரை ஆய்வுக்கு பதில் அளித்தவர்களில் 35% பேருக்கு மட்டுமே, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்டுள்ள இணைய பாதுகாப்பு வழிகாட்டியை அறிந்திருந்தனர்; இந்த வழிகாட்டி, இணைய பயன்பாட்டிற்கான உதவிக்குறிப்புகளை வழங்குகிறது.

"ஒரு புலப்படும் குற்றத்தை புகாரளிக்கும் போது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்," என்று சேத் கூறினார். “காவல்துறையினர் வழக்கை பதிவு செய்யாத சம்பவங்களும் உள்ளன. வழக்கை பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, பாதிக்கப்பட்டவர் தரப்பில் பிரிவு 156 (3) கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்” என்றார்.

என்ன செய்ய வேண்டும்

குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் இடையே இணைய அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை க்ரை ஆய்வு பரிந்துரைத்தது. ஆசிரியர்களுக்கான ஒருமுக பயிற்சிகளை நடத்துதல் மற்றும் இணையப்பாதுகாப்பு மற்றும் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் குறித்த மாணவர்களுடன் அமர்வுகளை மேற்கொள்ளுதல் பயனுள்ளதாக இருக்கும் என்று க்ரை கூறியது. குழந்தைகளின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்காக தற்போதுள்ள சைபர் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கக்கூடிய இணைய போர்ட்டல்கள் அமைக்கப்பட வேண்டும்.

இத்துறையில் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் எப்போதும் வாதிடும் மூன்று விஷயங்கள் உள்ளதாக ஷா குறிப்பிட்டார்; அவை- ஒன்று, இதில் இருந்து மீண்டவர்களை நம்புதல் ; இரண்டு, பாதுகாப்பான இடங்களை உருவாக்குதல்; மூன்று, பொதுமக்களிடம் விழிப்புணர்வு உருவாக்குதல்.

பாதிப்புக்குள்ளான மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மனநல மருத்துவர் யதன் பால்ஹாரா கூறினார். துஷ்பிரயோகம் செய்தவருக்கும் கொடுமை அனுபவித்ததற்கான வரலாறு இருக்கலாம் என்றார் அவர்.

( *அடையாளம் தெரியாமல் இருக்க, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).

(ரியா மகேஸ்வரி, மும்பை செயின்ட் சேவியர் கல்லூரி பொதுக்கொள்கை பாடத்தில் முதுகலை மாணவி; இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.