புதுடெல்லி: இந்தியாவில் உள்ள 35 மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களில் 14 மட்டுமே 2017-18ல் பிளாஸ்டிக் கழிவு உற்பத்தி பற்றிய தகவல்களை தாக்கல் செய்தாக, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சி.பி.சி.பி. (CPCB) வெளியிட்ட சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. சி.பி.சி.பி. மதிப்பீடு படி 2017-18ல் இந்தியாவில் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் 660,787.85 டன். இது, ஒரு டிரக்கிற்கு 10 டன் வீதம், 66,079 டிரக்குகளை நிரப்பக்கூடிய அளவாகும் - இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 60%க்கும் மேலாக நிலைமையை பிரதிபலிக்கவில்லை.

கடந்த 2016-17 ஆம் ஆண்டில் கூட, பிராந்திய மாசுபாடு வாரியங்களில் இருந்து 25 மட்டுமே இத்தகையை அறிக்கையை சி.பி.சி.பி. பெற்றது. அந்த ஆண்டின் மொத்த பிளாஸ்டிக் கழிவு உற்பத்தி எண்ணிக்கை 16 லட்சம் டன்கள் அல்லது 160,000 டிரக் நிரப்பும் அளவு என்று மதிப்பிடப்பட்டது.

சி.பி.சி.பி. தேசிய பசுமை தீர்ப்பாயத்தை (NGT) அணுகி, இணங்காத அரசுகளை பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் செயல்படுத்த கட்டாயப்படுத்தக் கோரியது. 2019 ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் சிபிசிபி அறிக்கைகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பிற்கும் 2019 மார்ச் 12இல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாவிட்டால், மாதம் ரூ. 1 கோடி வீதம் சி.பி.சி.பி.க்கு அபராதமாக செலுத்த வேண்டுமென்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.

இந்தியா 1.65 கோடி டன்கள் அதாவது சுமார் 16 லட்சம் டிரக் நிரம்பும் அளவுக்கு ஆண்டுதோறும் பிளாஸ்டிக் பயன்படுத்துகிறது என, பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபடும் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்பான இந்திய பிளாஸ்டிக் அறக்கட்டளையின் புள்ளி விவரங்களை அடிப்படையாக கொண்டு, 2018 ஜூன் Down to Earth இதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது. இதில் 43% ஒருமுறை மட்டும் பயன்படுத்தி வீசக்கூடிய பொருட்கள்; இவை குப்பை அதிகரிக்க காரணமாக உள்ளது என்று அந்த கட்டுரை தெரிவிக்கிறது. மொத்தத்தில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பிளாஸ்டிக் உற்பத்தியில் 80% வீசப்படக்கூடியவை.

இவை ஆறுகள், கடலில் கலந்து கடல் சார்ந்த விலங்கினங்களுக்கு பிளாஸ்டிக்கால் பெரும் தீங்கு உண்டாகிறது. இது மண் மற்றும் தண்ணீரில் கலந்து நச்சுத்தன்மை கொண்ட டையாக்ஸின்களை வெளிப்படுத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.

ஒவ்வொரு நாளும் குறைந்தது 40% பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன - இது 25,940 டன் அல்லது 2,594 டிரக்கில் ஏற்றக் கூடியது என்று, 2011-12 ஆம் ஆண்டிற்கான சி.பி.சி.பி.யின் 2015 ஆய்வு தெரிவிக்கிறது. இது சேகரிக்கப்படுவதில்லை. மெல்லிய பிளாஸ்டிக் பைகள் மற்றும் திரைப்பட சுருள்களுக்கு மறுசுழற்சி சந்தையில் போதிய மதிப்பு இல்லை - கிலோவுக்கு 4 ரூபாய்க்கு மேல் கிடைப்பதில்லை.

பிளாஸ்டிக் கழிவு உற்பத்தியில் துல்லியமான தரவு, சேகரிப்பு மற்றும் அகற்றுதல் ஒரு நாட்டின் கழிவு மேலாண்மை மீதான அதன் கொள்கை எவ்வாறு வடிவமைக்கப்படுவது என்பதை ஒருங்கிணைப்பதாகும். இந்த புள்ளிவிவரங்கள் இந்தியாவுக்கு இன்னும் தேவை. ஏனெனில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை வெளியேற்றுவதற்கான அதன் தீர்மானத்தை 2019இல் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மன்றத்தில் (UNEA) தெரிவித்தது; மேலும் நாட்டிற்குள் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வதையும் தடை செய்தது.

2 ஆண்டுகளாக 10 மாநிலங்களில் இருந்து தகவல் இல்லை

பிளாஸ்டிக் மேலாண்மை கழிவு விதிகள்-2016 என்பது 2018இல் திருத்தப்பட்டு, அதன்படி மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழுக்கள் ஆகியன, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சி.பி.சி.பி.க்கு சுற்றுச்சூழலின் வகை மற்றும் அளவைப் பற்றிய விரிவான தகவல்கள், நகரங்கள், கிராமங்கள் வாரியாக சேகரித்து, பிரித்து அகற்றிய விவரங்களை அனுப்ப வேண்டும் என்றது. இது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31க்குள் அனுப்பப்பட வேண்டும்.

கடந்த 2016-17 மற்றும் 2017-18 ஆண்டுகளில், கீழ்கண்ட மாநிலங்கள் சி.பி.சி.பி.க்கு வருடாந்திர தரவுகளை சமர்ப்பிக்கவில்லை:

  1. டாமன் & டையூ
  2. கோவா
  3. ஜார்க்கண்ட்
  4. கேரளா
  5. லட்சத்தீவுகள்
  6. மிசோரம்
  7. ராஜஸ்தான்
  8. தெலுங்கானா
  9. உத்தரகண்ட்
  10. மேற்கு வங்கம்

சி.பி.சி.பி.இன் 2015 ஆம் ஆண்டு ஆய்வு அறிக்கையானது, 2010-12ல், இந்தியா ஒருநாளைக்கு 25,940 டன் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்தது என தெரிவித்தது. இது ஆண்டுக்கு 95 லட்சம் டன் அளவாகும்.

இந்தியாவின் 60 முக்கிய நகரங்கள் 4,059 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாக்கப்படுகின்றன; 2010-12ல் ஒரு நாளைக்கு சுமார் 405 டிரக் வண்டிகளில் ஏற்றும் அளவுக்கு பிளாஸ்டிக் உற்பத்தியானதாக, அதே ஆய்வு மதிப்பிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 5 நகரங்களில் டெல்லி (689 டன்), சென்னை (429 டன்கள்),கொல்கத்தா (425 டன்), மும்பை (408 டன்) மற்றும் பெங்களூரு (313 டன்கள்) ஆகும். 2018 ஜூனில், உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்திய போது, இந்தியா இந்த புள்ளி விவரங்களை தந்தது.

இருப்பினும், 2018 இல் சி.பி.சி.பி.க்கு பிளாஸ்டிக் கழிவு உற்பத்தியில் தகவல் கொடுக்காத குற்றச்சாட்டுக்கு ஆளாக நகரங்கள் - டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா - என்று எதுவும் இதில் இல்லை. இது இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களின் முழு எண்ணிக்கையை சி.பி.சி.பி. அறிக்கையாக்கும் அளவுக்கு அதிகமாக இருப்பதை குறிக்கிறது.

வழிகாட்டுதல்களை வெளியிடும் ஒரு நோடல் அமைப்பாக சி.பி.சி.பி. உள்ளது. ஆனால் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மாநில அரசுகளின் கீழ் உள்ளன.

இந்தியாவில் பரவலாக இருந்தபோதும் பிளாஸ்டிக் கழிவு இறக்குமதியாகிறது

இந்தியா மிகவும் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகிறது என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன - உரிமம் பெறாத நிறுவனங்கள் பரந்தஉற்பத்தியை குறைக்க - பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஸ்டைரோஃபோம் போன்ற பொருள் உற்பத்தியையும், கழிவு மேலாண்மையில் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தையும் களைய வேண்டும்.

தற்போது, நாடு 40 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை மட்டுமே மறுசுழற்சி செய்ய முடியும்.

கடந்த 2019 மார்ச்சில் பிளாஸ்டிக் கழிவு இறக்குமதி மீதான தடை மறுபரிசீலனைக்கு முன்வு வரை, இந்திய மறுசுழற்சி நிறுவனங்கள் சீனா, இத்தாலி, ஜப்பான் மற்றும் மலாவி ஆகியவற்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்தன. இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மலிவானவை மற்றும் தனிப்படுத்தப்பட்ட வடிவங்களில் கிடைக்கும் என்பதால் தான் இவ்வாறு செய்கின்றன.

"மறுசுழற்சி துறையில் இந்த உபரி பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்த முடியும். ஆனால் பிரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் பற்றாக்குறை உள்ளது " என்று பிளாஸ்டிக் தொழில் ஆலோசகர் ஓ.பி. ரத்ரா கூறினார்.

பிளாஸ்டிக் கழிவுகள் 2016-17ஆம் ஆண்டில் 12,000 டன் என்பது, 2015 பிளாஸ்டிக் கழிவு இறக்குமதி தடை இருந்த போதும் நான்கு மடங்கு அதிகரித்து, 2017-18ல் 48,000 டன்கள் என்றிருந்தது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்படும் ஓட்டை மூலம் இது சாத்தியமானது. 2019 மார்ச் 6இல் அரசு இதை தடை செய்தது. தடை விதிக்கப்படும் கடைசி நேரத்தில், தற்போதைய நிதியாண்டின் முதல் காலாண்டில் 25,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுவிட்டன.

வரும் 2022க்குள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை இந்தியா ஏன் வெளியேறக்கூடாது

முன்னர் குறிப்பிட்டது போல், கென்யாவின் நைரோபி நகரில் 2019 மார்ச் 11 மற்றும் 15க்கு இடையே நடந்த ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மன்ற (UNEA) கூட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்குள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் அகற்றும் தீர்மானத்தை இந்தியா முன்வைத்தது. பின்னர் இது, 2025 ஆம் ஆண்டு வரை என புதுப்பிக்கப்பட்டது. பெரும்பான்மை உறுப்பு நாடுகள் "2030 இல் குறைப்பு" என்ற லட்சியம் என்பதற்கான வாய்ப்புகளை தேர்வு செய்தன.ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மன்றம் என்பது 170 உறுப்பு நாடுகளுடன் உலகின் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் மன்றமாகும்.

கடந்த 2018இல் ஐ.நா. உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, 2022 ஆம் ஆண்டிற்குள் “பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம்” என்ற முழக்கத்துடன் ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக் அகற்றுவதாக இந்தியா உறுதியளித்தது. "உலகளவில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் சிறு அளவு மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது; பெரும்பாலானவை சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள், பல்லுயிரி சூழலை சேதப்படுத்துகின்றன," என்று, அரசு செய்திக்குறிப்பு கூறுகிறது. "இரண்டுமே உலகளாவிய சவால்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மன்றத்தில் இந்தியா முன் வைத்த தீர்மானங்கள், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான முக்கிய முதல் படிகள் மற்றும் உலகளாவிய சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதாகும்" என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் பிளாஸ்டிக் நுகர்வு 2020இல் 2 கோடி மெட்ரிக் டன்களை கடக்கும்

இருப்பினும், 2022 என்ற இலக்கு சாத்தியம் இல்லை - இந்தியாவின் ஆண்டு பிளாஸ்டிக் நுகர்வு 2020ஆம் ஆண்டில் 2 கோடி டன்னை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2010 மற்றும் 2015 க்கு இடையில், மொத்தம் 10% வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) உடன் பிளாஸ்டிக் பதப்படுத்தும் தொழில் வளர்ந்தது. இது, ஆண்டுக்கு 8.3 மில்லியன் மெட்ரிக் டன் (MMTP) என்பதில் இருந்து 13.4 மில்லியன் மெட்ரிக் டன் என்று அதிகரித்தது என, இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பின் 2017 ஆய்வு தெரிவித்தது. சி.ஏ.ஜி.ஆர் இன் கணிப்புப்படி 2020ஆம் ஆண்டில் இது சுமார் 10.5% ஆக அதிகரிக்கும் அதாவது 22 மில்லியன் மெட்ரிக் டன் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், பிளாஸ்டிக், பேக்கேஜிங் துறை சி.ஏ.ஜி.ஆர். பதிவின்படி 2010 மற்றும் 2015 இடையே 15% வேகமாக வளர்ந்து வந்துள்ளதாக, அந்த ஆய்வு தெரிவிக்கிறது. பிளாஸ்டிக் நுகர்வு அதிகரிப்பானது, நிச்சயமாக பிளாஸ்டிக் கழிவுகளை அதிகரிக்க செய்யும்.

"இத்தகைய பிளாஸ்டிக் தயாரிப்புகளின் உற்பத்தியை நிறுத்த நடவடிக்கை எடுக்க்காவிட்டால், அதன் மீதான கட்டுப்பாடுகள் பயனற்றதாகிவிடும்" என்று, மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கூடுதல் இயக்குனர் மற்றும் நகர்ப்புற மாசு கட்டுப்பாட்டு தலைவரான எஸ்.கே. நிகம் தெரிவித்தார்.

(பானர்ஜி, ஒரு சுற்றுச்சூழல் பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் கலைஞர் ஆவார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.