டெல்லியில் தொற்றுநோயால் பெண்களின் வேலையில் ஏற்பட்ட பாதிப்பு பற்றிய ஒரு பார்வை
முறைசார்ந்த வேலைகளில் இருப்பவர்கள் சம்பள வெட்டுக்களை எதிர்கொண்டனர், அதே நேரம் முறைசாரா வேலையில் இருப்பவர்களோ, பல மாத வருமானத்தை இழந்து தங்கள் குழந்தைகளுக்கு உணவு மற்றும் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
புதுடெல்லி: இந்த காலகட்டத்தில் கழிவுத்துண்டுகளின் மதிப்பு கூட குறைந்துவிட்டது. இந்நாட்களில் பயனற்ற கழிவுத்துண்டுகளை வெளியேற்றுவது கூட மிகவும் கடினம். தேசிய தலைநகரின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் வசிக்கும் வடமேற்கு டெல்லியில் குப்பை கழிவுத்துண்டு பொறுக்கும் 29 வயது லுட்ஃபுன் நிஷாவிடம் இதுபற்றி கேளுங்கள். "நான் குப்பை பொறுக்கவில்லை எனில், ஸ்கிராப் வியாபாரிக்கு என்னால் எதையும் விற்க முடியாது. ஊரடங்கிற்கு முன்பு, ஒரு கிலோ பழைய கழிவுத்துண்டுகளை ரூ.35-40க்கு விற்றேன். இப்போது, அது கிலோவுக்கு ரூ.10 ஆக குறைந்துவிட்டது,"என்றார் நிஷா. அவர் தனது பெற்றோர் மற்றும் எட்டு வயது மகனுடன், 90 சதுர அடி குடிசையில் வசிக்கிறார், அதற்கான வாடகை இரட்டிப்பாகி விட்டது - தொற்றுநோய் தொடங்கியபோது ஒரு மாதத்திற்கு ரூ.150 என்றிருந்தது, ரூ.300 ஆகிவிட்டது. "இந்த ஆண்டு நாங்கள் அரிதாகவே சாப்பிட முடியும்," என்று அவர் 2020 டிசம்பர் தொடக்கத்தில் தனது டெல்லி குடியிருப்புகளில் இருந்து தொலைபேசியில் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்திருந்தார்.
சில நாட்கள், குப்பைக் கழிவுகள் மற்றும் குப்பைத் தொட்டிகளை எல்லாம் கடந்து 6 கி.மீ தூரம் நடந்து, தொழில்துறை பகுதியான ரிதாலாவிற்கு சென்று, கழிவுத்துண்டுகளை நிஷா சேகரிப்பார், தனது பாதுகாப்பின் அடையாளமாக, ஆண் துணை வேண்டி, "மனநிலை பாதித்த" தனது தந்தையை உடன் அழைத்துச் செல்வார். நிஷாவின் குழந்தை, பாட்டியுடன் வீட்டிலேயே இருக்கும். "நான் முன்பு மாதத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பாதித்து எப்படியாவது நிர்வகிக்தேன்" என்று நிஷா இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "ஒரு மாதத்திற்கு அரை கிலோ அரிசியில் இருந்து [ஒரு நபருக்கு], நாங்கள் இப்போது கால் கிலோ என்ற நிலையில் இருக்கிறோம். ஊரடங்கின் போது, எந்த வேலையும் இல்லை. நாங்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை சாப்பிட முடியாது".
உலகளவில், முறைசாரா பொருளாதாரத்தில் மதிப்பிடப்பட்ட 74 கோடி பெண்களில் நிஷாவும் ஒருவர், கோவிட்-19 தொற்று தாக்கத்தால், முதல் மாதத்தில் வருமானம் 60% குறைந்ததாக, ஐ.நா. பெண்கள் அமைப்பின் செப்டம்பர் 2020 அறிக்கை தெரிவித்தது.
இந்தியாவின் தலைநகரும், அதிக நகர்ப்புறத்தை (97.5% நகர்ப்புறம்) கொண்டதுமான டெல்லி, மிகக் குறைந்த தொழிலாளர் பங்கேற்பு வீதம் (LFPR) 33% ஆகவும், மே முதல் 2020 ஆகஸ்ட் வரையிலான ஊரடங்கு தளர்வின் முதல் மூன்று கட்டங்களில், நான்காவது மிக உயர்ந்த வேலையின்மை விகிதத்தையும் (23.3%) கண்டது என்று இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (CMIE) தரவுகள் தெரிவிக்கிறது. மிகக் குறைந்த தொழிலாளர் பங்கேற்பு வீதமான எல்.எஃப்.பி.ஆர் என்பது, இந்தியாவில் பணிபுரியும் அல்லது வேலை தேடும் அனைத்து உழைக்கும் வயது மக்களின் விகிதத்தைக் குறிக்கிறது. வேலையின்மை விகிதம் என்பது தொழிலாளர் திறனில் வேலை இல்லாத மக்களின் விகிதமாகும். பாலின அடிப்படையில், டெல்லியின் பெண் எல்.எஃப்.பி.ஆர் 57% ஆண் எல்.எஃப்.பீ.ஆருடன் ஒப்பிடும்போது 5.5%, பெண் வேலையின்மை ஆண்களின் வேலையின்மை 21% க்கு எதிராக 47% ஆக உள்ளது, பொருளாதாரத்தை கண்காணிக்கும் மைய (CMIE) தரவு காட்டுகிறது.
காலவேளை தொழிலாளர் திறன் கணக்கெடுப்பு- 2018-19ன் (PLFS) படி இந்தியாவின் எல்.எஃப்.பி.ஆர் 50.2% ஆக இருந்தது. தொற்றுநோய் மக்களை மேலும் வேலைவாய்ப்புகளில் இருந்து விரட்டிவிட்டதாகத் தெரிகிறது. பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் தகவல்படி, மே மற்றும் ஆகஸ்ட் 2020-க்கு இடையில், எல்.எஃப்.பி.ஆர் 40.2% ஆக குறைந்தது. பெண்களுக்கான தொழிலாளர் பங்கேற்பு விகிதம் ஆண்களுக்கு 67.4% உடன் ஒப்பிடும்போது 9.3% ஆகும். (நகர்ப்புற பெண் - 7.8, கிராமப்புற பெண் - 10.1). நகர்ப்புற ஆண்களின் வேலையின்மை விகிதம் 21.9% ஆக இருந்தது, நகர்ப்புற ஆண்களுக்கு இது 11.7% ஆகும்.
வேலைவாய்ப்பு பற்றாக்குறை இருக்கும்போது, சிறந்த வேலை அல்லது மற்ற எல்லா வேலைகளில் பெண்களுக்கு அளவோடுதான் கிடைக்கிறது என்பது உலக அளவிலும் இந்தியாவிலும் நன்கு அறியப்பட்டதாகும். "டெல்லியில், வேலை தேடும் ஆர்வலர்கள் (முந்தைய குடியிருப்பாளர்கள் மற்றும் புதிய குடியேறியவர்கள்) இடையே ஏற்றத்தாழ்வு உள்ளது. மற்றும் மொத்த வேலை கிடைக்கும் தன்மை, பொருளாதார மந்தநிலையால் மோசமடைந்தது (இப்போது தொற்றுநோயாலும்), எனவே பெண்கள் விகிதாச்சாரத்தில் தோற்றவர்களாக இருக்கக்கூடும்" என்று வளர்ச்சி பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் கூறினார்.
இக்கட்டுரையில், இந்திய தலைநகரில் - உலகத்தரம் வாய்ந்த நகரமாகக் கருதப்படுகிறது - உள்ள பெண் தொழிலாளர்களின் நிலைமையை ஆராய்வோம். இங்கு 1981ஆம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு விகிதங்கள் (மற்றும் அணுகுமுறைகள்) கிட்டத்தட்ட நிலையாக இருந்தன. பெண்களின் பணி பங்கேற்பு நீண்ட காலமாக கண்ணுக்குத் தெரியாத நிலையில், தொற்றுநோய் டெல்லியின் முறைசாரா தொழிலாளர்களை கடுமையாக பாதித்தது மற்றும் பல பெண்கள் வேலை இழந்தனர். அமைப்புசார்ந்த துறையில் உள்ள பெண்கள் சம்பள வெட்டுக்கள் முதல் வேலை இழப்பு வரை பல சிரமங்களை எதிர்கொண்டனர். ஊதியம் பெறப்படாத வீட்டு வேலைகளின் அதிகரித்த சுமையால் நெருக்கடி மேலும் அதிகரித்தது, இது பரந்த தவறுகளை வெளிப்படுத்தியது. "டெல்லியைப் பொறுத்தவரையில், நீண்ட பயண நேரம், வேலை நேரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் பெண்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துகின்றன, மேலும் அவர்களின் தொழிலாளர் பங்களிப்பைத் தடுக்கின்றன" என்று இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் மூத்த மேலாளர் சங்கமித்ரா சிங் விளக்கினார்.
எங்களது, பணியிடத்தில்@பெண்கள் (Women@Work) தொடரின் புதிய பதிப்பில், இது மூன்றாவது கட்டுரை. இது பெண்களின் சம்பள வேலைக்கு உள்ள தடைகளை கண்டறிய முயல்கிறது. முதல் கட்டுரை, ஊரடங்கின் விளைவை பகுப்பாய்வு செய்ய இருக்கும் தரவையும், அது ஏற்கனவே இருக்கும் சவால்களை எவ்வாறு அதிகரித்தது என்பதையும் ஆராய்ந்தது. இரண்டாவது பெரும் வேலைகள், பெண்களின் வாய்ப்புகளையும் வருமானத்தையும் எவ்வாறு அதிகரித்துள்ளது என்பதை ஆராய்ந்தது. ஆனால் பாலின சம்பள இடைவெளி மற்றும் சமூக பாதுகாப்பின்மை உள்ளிட்ட வழக்கமான பொருளாதாரத்தின் அதே சவால்களால், அவை பாதிக்கப்படக்கூடியவை.
பல ஷிப்டுகளில் பணி
டெல்லியின் ஓக்லா தொழில்பேட்டை பகுதியில் நீண்ட காலமாக வசிக்கும் துர்கா தேவி, 38, அருகில் உள்ள உயர் நடுத்தர வர்க்கத்தினரின் குடியிருப்புகளான நேரு பிளேஸ் மற்றும் கிரேட்டர் கைலாஷ் ஆகிய பகுதிகளின் மூன்று வீடுகளில் வீட்டு உதவியாக பணியாற்றுகிறார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் மூன்று வேலைகளையும் இழந்தார். "நான் 10 ஆண்டுகளுக்கு மேல் இந்த வீடுகளில் பணிபுரிந்தேன், மொத்தம் ரூ.9,000 (தோராயமாக 120 டாலர்) சம்பாதித்தேன், திடீரென்று அது முடிந்துவிட்டது. ஊரடங்கின்போது எனக்கு எந்த சம்பளமும் வழங்கப்படவில்லை "என்று மூன்று பேரின் தாயான அவர் கூறினார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரின் மதுபானி கிராமத்தில் இருந்து வந்த துர்கா தேவி, டெல்லியின் ஓக்லா பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே நிற்கிறார். தொற்றுநோய் காலத்தில் முதலில் வேலைகளை இழப்பதா அல்லது வீட்டு வேலைகளில் கூடுதல் மணிநேரம் செலவழிப்பதா என்று, வேலைக்கு வரும்போது ஒவ்வொரு அடியிலும் இடையூறுகளை எதிர்கொண்டுள்ள பல பெண்களில் அவரும் ஒருவர்.
அவரது கணவர், செக்யூரிட்டியாக தனது வேலையைத் தக்க வைத்துக் கொண்டாலும், துர்கா தேவி மீண்டும் வேலையைத் தொடங்கும் ஆறு மாதங்கள் வரை மிகவும் கடினமான சூழலே இருந்தது. அவர்கள் "குறுக்குவழிகளை" நாட வேண்டியிருந்தது, "இரண்டுக்கு பதிலாக ஒரு உருளைக்கிழங்கை" சாப்பிட்டார்கள். "என் இளைய குழந்தைகளுக்கு படிக்க ஒரு கம்ப்யூட்டர் தேவை. எங்களால் அதை வாங்க முடியவில்லை, எனவே அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது," என்று, இந்தியாஸ்பெண்டிடம் அவர் தெரிவித்தார். உலகளவில், வீட்டு வேலை செய்வோரில் 72%, அவர்களில் 80% பெண்கள், கோவிட்-19 காரணமாக வேலையை இழந்ததாக ஐ.நா பெண்கள் அறிக்கை கூறுகிறது.
துர்கா தேவி போன்ற பெண்கள் வீட்டு உதவியாளர்களுக்கு, மற்றவர்களின் வீடுகளில் வேலை செய்வதற்கு ஊதியம் வழங்கப்படுகிறது, ஆனால் அத்துடன் அவர்கள் தங்களது சொந்த வீட்டிலும் எல்லா வேலைகளையும் செய்தாக வேண்டும். தேசிய புள்ளிவிவர அலுவலகம் நடத்திய டைம் யூஸ் இன் இந்தியா -2019 ஆய்வின்படி, ஆண்களது வெறும் ஒன்றரை மணிநேரத்துடன் ஒப்பிடும்போது பெண்கள் கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் ஊதியம் பெறாத வீட்டு வேலைகளில் செலவிடுகிறார்கள். காலை 8.30 மணிக்கு வேலையைத் தொடங்குவதற்கு முன்பு துர்கா தேவி காலை 5.30 மணிக்கு எழுந்து தனது குடும்பத்தினருக்கான சமையல் மற்றும் துப்புரவு பணிகளை முடிக்கிறார். மாலையில் வீடு திரும்பியதும், இரவு உணவைச் செய்து தன் குழந்தைகளுக்கு வழங்குகிறார். "வார இறுதி நாட்களில் கூட எனக்கு எந்த விடுமுறையும் கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு தேர்வுகள் அல்லது பள்ளி பிரச்சினைகள் என்று வரும்போது, நான் வேலைக்கு போக முடியாது, அன்றைய நாள் ஊதியத்தை இழக்கிறேன்" என்று அவர் தொலைபேசியில் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் கொண்ட வரிசையில், அதிகமான பெண்களை வேலைகளில் கண்டுபிடிப்பதில் ஆச்சரியமில்லை. "குப்பை பொறுக்குவோர் மற்றும் வீட்டு உதவியாளர்கள் பெரும்பாலும் பெண்களே. முறைசாரா தொழில் வேலைகளில் அதிகரிப்பு உள்ளது, அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பின் பரந்த சரிவைக் கருத்தில் கொண்டால், பெண்கள் இன்னும் சிறுபான்மையினராக உள்ளனர், "கோஷ் கூறினார்.
பராமரிப்புப் பணிகளின் அளவை, தொற்றுநோயானது பெரிதும் அதிகரித்துள்ளது மற்றும் ஊதியம் பெறாத - பெரும்பாலும் அறியப்படாத - இந்த சுமையை பெண்கள் சுமக்கிறார்கள். "அதிகரித்த பாதுகாப்பு சுமையுடன் பொருளாதார பாதுகாப்பின் பற்றாக்குறையானது, பல பெண்களை தொழிலாளர் சந்தையில் இருந்து நிரந்தரமாக வெளியே தள்ளி அச்சுறுத்துகிறது. ஆனால் கடந்தகால தொற்றுநோய்களின் சான்றுகள் கொடுக்கப்பட்டால், அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் அது கணிசமாக சமரசம் செய்யும் "என்று சிங் கூறினார். "டெல்லியில், பெரும்பாலான வேலைகளுக்கு சேவைத்துறையில் உயர் கல்வித் தகுதிகள் தேவை, அவை சமூகத்தின் ஏழ்மையான பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு சாத்தியமில்லை" என்றார்.
தொற்றுநோய் காலத்தில் முதலில் வேலைகளை இழந்தது பெண்கள் மட்டுமல்லாமல், அவர்கள் 'நேர வறுமையையும்' அனுபவித்தனர் - ஊதியம் பெறாத பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளில் வீட்டில் அவர்கள் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
ராஞ்சி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியர் ஜீன் ட்ரூஸ் கூறுகையில், "இது பெண்களின் நேரம் மதிப்பிடப்படவில்லை என்பதிலிருந்து வருகிறது. "சமையல் மற்றும் சுத்தம் செய்வதில் தொழில்நுட்பத்தை -- உதாரணமாக, 40 ஆண்டுகளுக்கு முன்பு கூட பிரஷர் குக்கர்கள் பரவலாக பயன்படுத்தப்படவில்லை-- மறந்து விடுங்கள். ஆனால் ஆண்கள் பெரிதும் உதவுவதில்லை. பிற வளரும் நாடுகளில்கூட வீட்டு வேலைகளில் ஆண்களின் பங்களிப்பு மிகக்குறைவு தான்.
முன்கூட்டிய வேலைகள், வாழ்க்கை
ஓக்லாவில் வசிக்கும் 30 வயதான மெஹர்-உன்-நிசா, காலை 9.30 மணி முதல் மாலை 6.30 வரை பணி நேரம் என்றாலும், கிடைக்கும்போதெல்லாம் இரண்டு மணி நேர கூடுதல் பணியை செய்ய வேண்டியுள்ளது. "அவசர" ஏற்றுமதி காரணமாக, இந்த காலகட்டத்தில் ஓவர் டைம் செய்யும் அவர், ஆடை ஏற்றுமதி தொழிற்சாலையில் எம்பிராய்டரி வேலை பார்க்கிறார். "நான் வேலை செய்யாவிட்டால், என்னால் சாப்பிட இயலாது," என்ற உண்மையை அவர் கூறினார். ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் சம்பாதித்து வந்த மேஹர், 2020 மார்ச் முதல் ஜூன் வரை, வேலையில்லாமல் இருந்தார். அவரது குடும்பம் தன்னார்வலர்களிடம் இருந்து உணவு உதவியை நம்பியது. நீண்டகால முழங்கால் வலியால் அவதிப்படும் அவரது 50 வயது நீரிழிவு கணவர், வேலைக்கு செய்யவில்லை. தனது மூன்று குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கும் ரூ.2,000 வாடகையை செலுத்துவதற்கும், மாதாந்திர சம்பளமான ரூ.6,000 ($ 85) [அல்லது கூடுதல் மணிநேரங்களில் வேலை செய்யும் போது ரூ.7,000 ($ 97)] ஐ நம்பியிருக்கிறார். "எனக்கு சேமிப்பு என்பது இப்போது பூஜ்ஜியம் தான். வழக்கமாக முதலாளி எங்களை வீட்டிலிருந்து இறக்கிவிடுவார், ஆனால் அவர்கள் இல்லாத நாட்களில், நான் ஒரு ஆட்டோ [ரிக்ஷா] பிடிக்க வேண்டும், இது அதிக கட்டணத்தை கொண்டது. விரைவில் ஒரு நல்ல வேலையைக் கண்டறிவேன் என்று நம்புகிறேன், "என்று டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இந்தியாஸ்பெண்டிடம் தொலைபேசியில் அவர் தெரிவித்தார்.
தொற்றுநோயின் எதிர்மறையான பொருளாதார தாக்கம், 2020 ஆம் ஆண்டில் மேலும் 8.8 கோடி மக்களை தீவிர வறுமையில் தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, உலக வங்கியின் அக்டோபர் அறிக்கை தெரிவித்துள்ளது. ஐ.நா. பெண்கள் அறிக்கையானது, சுமார் 9.6 கோடி மக்கள் என்கிறது, அவர்களில் 4.7 கோடி பேர் பெண்கள் மற்றும் சிறுமியர். தெற்காசியாவில் தொற்றுநோய்க்கு முந்தைய பெண் வறுமை விகிதம் 2021 ஆம் ஆண்டில் 10% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இப்போது அது 13% ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஐ.நா பெண்கள் அறிக்கை தெரிவித்துள்ளது. 2030 வாக்கில், உலகின் ஏழை பெண்கள் மற்றும் சிறுமியரில் 18.6% பேர் தெற்காசியாவில் வசிப்பார்கள், இது தொற்றுநோய்க்கு முந்தைய திட்டங்களில் இருந்து 2.8 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், உலகளவில் ஒவ்வொரு 100 ஆண்களுக்கும் 118 பெண்கள் வறுமையில் இருப்பார்கள், இது 2030 க்குள் 121: 100 ஆக உயரும் என்று ஐ.நா. பெண்கள் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
பாலின பிரச்சினை உள்ளது
சுதந்திரம் பெற்ற 73 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் பெண்களது பணிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது சமூகத்தின் பாலின கட்டுமானமாகும். பெண்கள் செய்யும் வேலையை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், வேலை நிலைமைகள் மற்றும் உழைப்புப்பிரிவு ஆகியன, தடைகளில் அடங்கும். "பெண்களின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும்பாலானவை கண்ணுக்குத் தெரியாதவை" என்று கோஷ் கூறினார். கலாச்சாரத்தடைகள் "மாநிலத்திற்கு மாநிலம் மற்றும் பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுபடுகின்றன", என்ற அவர், எடுத்துக்காட்டாக, வடக்குடன் ஒப்பிடும் போது தென்னிந்தியா மிகவும் வேறுபட்டது என்றார்.
மற்றொரு பெரிய சிக்கல் உடல் பாதுகாப்பு - பணியிடத்திற்குச் செல்வதற்கும் திரும்ப வருவதும் எளிதானது. "கிராமப்புறங்களில் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு பெண்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை, ஏனென்றால் அவர்களால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதன் மூலம் அவர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். வீட்டு அனுமதியின்றி எங்கும் அவர்கள் நகர முடியாது என்பதும் ஒரு கட்டுப்பாட்டு விஷயம். நடமாட்டம் என்பது கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பெரிய சாதனமாக உள்ளது," என்று கோஷ் கூறினார். போக்குவரத்து மற்றும் பயணத்தைப் பொறுத்தவரை டெல்லி மிகவும் வேறுபட்டதல்ல என்று இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் சிங் குறிப்பிட்டார், இதனால் பெண்களின் வாய்ப்புகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இந்த தடைகள் கிராமப்புறங்களில் அல்லது குறைந்த வருவாய் பிரிவில் உள்ள பெண்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. ஹரியானாவில் உள்ள குருகிராமில் வசிக்கும் திவ்யா சேஷன், 42; மனிதவள வல்லுநரும், ஒற்றைத் தாயுமான அவர், ஊரடங்கின் போதுவேலையை இழந்தார். "இது ஒரு தொடக்கமாகும், எனக்கு சரியான நேரத்தில் பணத்தை அது தரவில்லை. நெருக்கடி ஏற்பட்டபோது, சம்பளம் வரவில்லை," என்றார் அவர். சிறிது காலத்திற்கு பின், சேஷன் வேறொரு வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அது 40% ஊதியக் குறைப்புடன் கிடைத்தது. "எனக்கு 15 வருட அனுபவம் உள்ளது, அவர்கள் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, 'உங்கள் வயதையும் குழந்தை இருப்பதையும் பார்த்தால், நீங்கள் இந்த வேலையில் நீடிப்பீர்களா?' என்பதுதான். இதேபோன்ற சூழ்நிலையில் இருக்கும் ஒரு ஆணிடம் அவர்கள் இதை ஒருபோதும் கேட்க மாட்டார்கள்" என்றார். ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தவாறே வேலை செய்யும்போது, தனது மகனின் படிப்பை கவனிப்பது, சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது மற்றும் நிர்வகிப்பது யார் என்று சேஷனிடம் கேட்கப்பட்டது. "இந்தியாவில் பெண்களுக்கான பணியின் ஒவ்வொரு அடியிலும் தடைகள் இருந்தாலும், அதற்குள் ஒரு 'சாதி அமைப்பும்' கூட இருக்கிறது," என்றார் அவர். "உதாரணமாக, ஒரு வாய்ப்பு தரப்பட்டால் முதலாளிகள் ஒரு பெண்ணை ஒரு தாயை விரும்புகிறார்கள்" என்றார்
இந்த எடுத்துக்காட்டுகள், முன்னிலைப்படுத்த ஒரு முக்கிய தடையாக இருப்பதாக கோஷ் சுட்டிக்காட்டுகிறார். "கோவிட்-19 இன் போது நடுத்தர வர்க்கம் தங்கள் வீட்டுத் தொழிலாளர்களிடம் எவ்வாறு பிரதிபலித்தனர் என்பதைப் பாருங்கள். தொற்றுநோயின் மிக மோசமான காலத்தில், அவர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை அல்லது வீட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை. உள்ளே அனுமதிக்கப்பட்டபோது, அவர்கள் வீட்டின் பெண்களால் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டனர்" என்று கோஷ் கூறினார்.
"எனது மகனின் படிவங்களில் என்னுடையதற்கு பதிலாக, 'லேட்' என்று (கணவர் இறந்திருக்கவில்லை என்றாலும்) எனது முன்னாள் கணவரின் பெயரைப் பயன்படுத்த அரசு அதிகாரிகள் விரும்புகிறார்களா, எனது இணை பாதுகாப்பை [சொந்த அபார்ட்மெண்ட்] புறக்கணிக்கும் கடன் தரும் அதிகாரிகL, காப்புப்பிரதி வருமானத்தைப் பற்றி எனக்கு தெரிவித்து, ஒரு ஆலோசகரோ வேலை நேர்காணலுக்கான ஒரு மணப்பெண்ணை அலங்கரிப்பது போன்ற அமர்வுடன் இருக்க எனக்கு அறிவுறுத்துகிறார் ( மனிதவள பதவிக்கு ஒருவர் ஏன் கவர்ச்சியாக இருக்க வேண்டும்?), எனது விருந்தினர்களைக் கண்காணிப்பதற்கான கேமராவை சரிசெய்யும் தரைதள வீட்டிற்கு… இந்திய சமூகம் அதன் உழைக்கும் பெண்களை எவ்வாறு கருதுகிறது என்பதில், ஒரு முன்னுதாரண மாற்றம் இருக்க வேண்டும், "என்று சேஷன் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், இந்த வாழ்வாதார போராட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள, மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு இது இன்னும் அடிப்படைகளுக்கான போராட்டமாகும். "தயிர் அல்லது பால் வாங்க வேண்டும் என்று நான் நினைக்கும் நேரம் உள்ளது, ஆனால் அதை வாங்க முடியாது" என்று குப்பை கழிவுத்துண்டு சேகரிக்கும் நிஷா கூறினார். "நான் ஒரு ஆணாக இருந்திருந்தால், கட்டுமான தளத்தில் கனமான பொருட்களை தூக்குவது போன்ற எந்தவொரு வேலையையும் என்னால் செய்திருக்க முடியும்" என்றார்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.