கல்வியும் காலி வயிறும்: தாவரி கோசாவிகள் மற்றும் பிற நாடோடி பழங்குடியினரின் போராட்டம்
இந்தியாவின் மக்கள்தொகையில் 10% நாடோடி மற்றும் பழங்குடியின சீர்மரபினர் உள்ளனர், ஆனால் இன்னும் கல்வி மற்றும் கண்ணியத்திற்காக அவர்கள் போராடுகிறார்கள்;
புதுடெல்லி: நாடோடிகளான தாவரி கோசாவி பழங்குடியினரின் தத்துவம் அனைத்து பொருள்களை துறந்தாலும், 39 வயதான காளிதாஸ் அங்குஷ் ஷிண்டே தனது வாழ்நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட 10 ரூபாய் நோட்டை மட்டும் ஒரு பதக்கத்தைப் போல போற்றி வருகிறார்.
ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, சமூகப் பணியில் முதுகலைப் பட்டத்திற்கான நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக கோலாப்பூரில் உள்ள ஒரு கல்லூரிக்கு, சுமார் 350 கிமீ பயணம் செய்தார். ஷிண்டேவிடம் பேருந்தில் செல்லும் அளவுக்கு பணம் இல்லை. அவர், முதலில் தானியங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரியில் லிப்ட் ஏறினார், பின்னர் உள்ளூர் பஸ்ஸைப் பிடித்தார். அவர் கோலாப்பூரை அடைந்தபோது, அவரிடம் பணம் இல்லை, பசி அவரது வயிற்றை காயப்போட்டது. அவர் தனது நேர்காணலுக்காக ஒரு மூலையில் சோகத்துடன் காத்திருந்தார்.
கல்லூரி நூலகர், அவரை கவனித்தார். அவர், ஷிண்டேவுடன் பேச்சு கொடுத்து, அவரிடம் ஏதாவது சாப்பிடும்படிக்கூறி, 10 ரூபாய் நோட்டைக் கொடுத்தார். பசி வயிற்றை கிள்ளினாலும், ஷிண்டே பணத்தைச் செலவிடவில்லை. "வாழ்நாள் முழுவதும் ஒதுக்கப்பட்டதாக உணர்கிறேன், இது எனக்குக் காட்டப்பட்ட ஊக்கத்தின் ஒரு அரிய சைகை" என்று, அந்த சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்தார்.
2018 ஆம் ஆண்டில், ஷிண்டே தனது, துணை சாதியான தாவரியில், சுமார் 800,000 பேரில் டாக்டர் பட்டம் பெற்ற இரண்டாவது நபர் ஆனார்.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள விராரில் உள்ள தனது இரண்டு படுக்கையறைகள் கொண்ட வாடகை குடியிருப்பில் இருந்து, வீடியோ அழைப்பில் இந்த தகவல்களை அவர் நம்முடன் பகிர்ந்துள்ளார். அவரது மனைவி பிரியா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உட்பட பதினொரு குடும்ப உறுப்பினர்கள், அந்த சிறிய குடியிருப்பைப் பகிர்ந்து கொள்கின்றனர். வீடு இட நெருக்கடியால் தவிக்கிறது, ஆனால் அவர்களது சூழலில் இதுமட்டும் தான் பெற முடியும்.
ரேனேக் கமிஷன் அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10% நாடோடி மற்றும் பழங்குடியின சீர்மரபினர் (NT-DNT) இருந்தாலும், அவர்கள் வரலாற்று ரீதியாக கல்வி, மரியாதைக்குரிய வேலைவாய்ப்பு மற்றும் சமூக கண்ணியம் ஆகியவற்றிற்காக, ஒரு மேல்நோக்கிய போரை எதிர்கொண்டுள்ளனர். தாவரி கோசாவிகள் உட்பட அவர்களில் பெரும்பாலோர் நிலம், பணம் அல்லது சமூக வளங்கள் போன்ற உலக உடைமைகளைக் கொண்டிருக்கவில்லை. அலைந்து திரிதல் மற்றும் யாசகம் எடுப்பது போன்ற அவர்களின் பாரம்பரிய தொழில்களைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை, இது நாடோடி அல்லாத சமூகத்தின் துஷ்பிரயோகம், தாக்குதல்களுக்கு கூட அவர்களை வெளிப்படுத்துகிறது.
ஷிண்டே குடும்பத்தின் கதைகள், பல நாடோடி மற்றும் பழங்குடியின சீர்மரபினர் சமூகங்கள் இருக்கும் நிலைமைகளை எடுத்துக்காட்டுகின்றன, மனித உரிமைகள் மற்றும் நலன்களுக்கான அடிப்படை உத்தரவாதங்கள் இல்லாத சூழலில் அவர்களது வாழ்க்கை உள்ளது. இது, அவர்களின் போராட்டம் பற்றிய இரண்டு பாகங்கள் கொண்ட தொடரின் முதல் கட்டுரை.
முனைவர் பட்டத்திற்கான நீண்ட பாதை
கடந்த 2018ம் ஆண்டு மே 7ல் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் கல்வி நிறுவனத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், தனது பிஎச்டி சான்றிதழை காளிதாஸ் ஷிண்டே (இடது) பெற்றார்.
பட உதவி: காளிதாஸ் ஷிண்டே.
சமூக மேம்பாட்டு கவுன்சிலின் (CSD-SRC) 2017 அறிக்கையின்படி, தாவரி கோசாவி பழங்குடியினரிடம் இருந்து கணக்கெடுக்கப்பட்டவர்களில், 12.5% பேர் மட்டுமே 12ம் வகுப்பு வரை படித்துள்ளனர், அதே சமயம் 59% பேர், 10ம் வகுப்பிற்குப் பிறகு படிப்பை முடித்துள்ளனர். 2008 ஆம் ஆண்டில், 28% பழங்குடியின சீர்மரபினர் மாணவர்கள் ஆரம்பப் பள்ளிக் கல்விக்கான வாய்ப்புகளை பெற்றனர் என்று ரெனேக் கமிஷன் கண்டறிந்தது, உயர்நிலைப் பள்ளிகளில் இந்த எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது.
ஷிண்டேவின் பெற்றோரான அங்குஷ் மற்றும் கமல் ஷிண்டே ஆகியோருக்கு, கல்வியை பெறுவதற்கான விருப்பமோ அல்லது வாய்ப்போ இல்லை. படிப்பு வாசனையில்லாத அவர்கள், தங்கள் ஆறு குழந்தைகளை வளர்ப்பதற்காக யாசகம் கேட்டு பிழைப்பு நடத்தியுள்ளனர். மகாராஷ்டிராவின் திகாஞ்சி கிராமத்தில், ஷிண்டே குடும்பத்தின் பிளாஸ்டிக் கூடாரத்தில், இன்னும் கழிப்பறை மற்றும் மின்சார இணைப்பு இல்லை. ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்கு முன்பு, அங்குதான் காளிதாஸ் பிறந்தார்.
சமூக மேம்பாட்டு கவுன்சில் அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டு வரை, 75% கோசாவி குடும்பங்களில் கழிப்பறை வசதி இல்லை மற்றும் 7.4% மட்டுமே மின் இணைப்பு பெற்றுள்ளது. பழங்குடியின மற்றும் சீர்மரபினர்களின் வளர்ச்சி நிலையை மதிப்பிடுவதற்காக 2015 இல் உருவாக்கப்பட்ட ஐடேட் கமிஷன், மூன்றாண்டு காலத்தில் 3,700 மனுக்கள் மற்றும் குறிப்புகளைப் பெற்றுள்ளது. மின்சாரம், சாலைகள் மற்றும் நீர் வழங்கல் போன்ற சுகாதாரம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை கேட்டு 618 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
திகாஞ்சி கிராமத்தில் ஷிண்டே குடும்பத்தின் கூடாரம், மே 2021.
பட உதவி: காளிதாஸ் ஷிண்டே
அடிப்படை வசதிகள் இல்லாத போதிலும், ஷிண்டே மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸில் (TISS) முனைவர் பட்டம் பெற்றார். ஒரு மகத்தான சாதனை– இதற்கான அவர் ரூ.4 லட்சம் கடன் வாங்கி இருந்ததாக அவர் கூறினார்.
கல்வி கைக்கு எட்டாமல் இருந்திருக்கும், ஆனால் அவரது வாழ்க்கையில் ஒரு அதிர்ஷ்டமான இடைவெளி. கடந்த 1994 ஆம் ஆண்டில், அவரது பெற்றோர்கள் தங்கள் மகளின் திருமணத்தைத் தொடர்ந்து, பெரும் கடனில் இருந்தனர், மேலும் அவர்களின் தொழிலான நாடோடி வாழ்க்கை முறையை மீண்டும் தொடங்க முடிவு செய்தனர். ஷிண்டேவின் வற்புறுத்தலின் பேரில், அவரது தந்தை அவரை கோலாப்பூரில் உள்ள பழங்குடியினக் குழந்தைகளுக்காக நடத்தப்படும் அரசு உதவி பெறும் ஆசிரமப் பள்ளிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டார். ஆசிரமப் பள்ளிகள், 1990-91 முதல் செயல்பட்டு வரும் குடியிருப்புப் பள்ளிகளாகும், மேலும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் பழங்குடியினர் துணைத் திட்டப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
ஷிண்டே தனது குடும்பத்தின் கை-வாய்க்கு உணவு பற்றாத இக்கட்டான நிலையை போக்க, விடுமுறையின் போது ஐஸ்கிரீம் விற்றார். 14 வயதில், அவர் தனது தாய் மாமாவின் சைக்கிளில் குப்பைகளை சேகரித்து காசாக்கினார். "அந்த வருடத்தில் தான் நான் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்தேன்" என்றார் ஷிண்டே.
இருப்பினும், அவரது நல்ல மதிப்பெண்கள், மேல்நிலைப் பள்ளிக்கான கட்டணச்சலுகைக்கு உதவவில்லை. அதனால், அவர் பணம் திரட்டுவதற்காக வேலைகளில் ஈடுபட்டார். அவர் ஒரு செய்தித்தாள் கடையில் பணிபுரிந்தபோது, முன்பின் தெரியாத ஒருவர், பால்டனில் உள்ள முதோஜி கல்லூரிக்கு சென்று படிக்கும்படி பரிந்துரைத்தார். ஷிண்டே தனது உறவினர்களிடம் கடன் வாங்கி கல்லூரிக் கட்டணத்தை செலுத்தினார். அடுத்த ஐந்து வருடங்கள், ஆங்கில இலக்கியம் படிப்பதில் செலவிட்டார்.
கல்லூரி வாழ்க்கை, ஷிண்டேவுக்கு நிதி மட்டுமல்லாத கவலைகளையும் அளித்தது. ஜாதி மற்றும் மத ரீதியாக மாணவர்கள் விமர்சித்தனர்; அவரை "டவ்ரி" (அவரது குடும்பப்பெயரான தாவரியின் பிறழ் வடிவம்) என்று சொல்லி பேச்சால் கொடுமைப்படுத்துவார்கள், அது அவரை 'ஷிண்டே' என்று மாற்ற நிர்ப்பந்தித்தது. "அவர்கள் என் நோட்டு புத்தகங்களை கிழித்து விடுவார்கள், வகுப்பில் உள்ள அனைத்து குழுக்களிடம் இருந்தும் நான் அந்நியப்பட்டதாக உணர்ந்தேன்," என்று அவர் கூறினார். இந்த நிகழ்வு குறித்து, கல்லூரியின் தற்போதையமுதல்வர் பண்டரிநாத் கடம் என்பவரிடம் இந்தியா ஸ்பெண்ட் கருத்து கேட்டபோது, அவர் அதிர்ச்சியடைந்தார். "எங்கள் கல்லூரி, மகாராஷ்டிராவின் வளர்ந்த பகுதியில் உள்ளது, இத்தகைய புகார்கல் மிகவும் அரிதானவை" என்றார்.
முதோஜி கல்லூரியில் சேர்ந்த மாணவர்களில், 5% மட்டுமே பழங்குடியின மற்றும் சீர்மரபு மாணவர்கள் என்று கதம் கூறினார். 2018 ஆம் ஆண்டில், அவர்களின் நலனுக்காக ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டது, ஆனால் அந்த பிரிவுக்கு எந்த புகாரும் வரவில்லை. 2004ஆம் ஆண்டில் அத்தகைய பிரிவு என்று எதுவும் இல்லை என்றாலும், ஷிண்டே தனது பேராசிரியர்களிடம் புகார் கூறுவது, தனது வகுப்புத் தோழர்களிடம் இருந்து விரும்பத்தகாத கவனத்தை, செயல்பாட்டை ஏற்படுத்தும் என்று கருதினார்.
கடந்த 2005ஆம் ஆண்டில், கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தில் (NSS) சேர்ந்தது ஷிண்டேவுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சமூகத்தின் மீதான மூடநம்பிக்கைகளை ஒழிக்க, ஆர்வலர் நரேந்திர தபோல்கரின் விவேக் வாஹினியுடன் இணைந்து பணியாற்றினார். "இது என் சிந்தனையை மாற்றியது, மேலும் நான் என் சொந்த அடக்குமுறையை வெளிப்படுத்த ஆரம்பித்தேன்" என்று ஷிண்டே கூறினார்.
அடையாள ஆவணங்கள் இல்லாமை
ஷிண்டே எம்.பில் ( M.Phil) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இடஒதுக்கீடு இன்னும் நடைமுறைப்படுத்தப்படாததால், 2008 இல், டிஐஎஸ்எஸ்- இல் பொதுப்பிரிவில் பாடப்பிரிவு சேர்ந்தார். காளிதாஸ் தனது தாயின் நகையை அடகு வைத்து, சேர்க்கைக் கட்டணத்தைச் செலுத்த கடன் வாங்க வேண்டியிருந்தது, மேலும் அவருக்கு உணவு சாப்பிடக்கூட பணம் இல்லை.
அவர் தனது எம்.பில் தேர்வை எழுதினார். தாவரி கோசாவிஸ் பற்றிய ஆய்வறிக்கை மற்றும் அவரது தீட்சை அல்லது திக்ஷாவை, நாத்பாந்த தத்துவத்தில் எடுத்தார். இதற்கு அவர் பெரிய, வெள்ளி வளைய-காதணிகளை அணிய வேண்டியிருந்தது. அவர் இன்று வரை காதணிகளை அணிந்துள்ளார், ஆனால் சிறியவை. "கல்லூரியில் உள்ள உயரடுக்கு மாணவர்களிடம் இருந்து நான் எரிச்சலூட்டும் ஆர்வத்தையும் தீர்ப்பையும் சந்தித்தேன், ஆனால் எனது அடையாளத்தில் இருந்து என்னைப் பிரிப்பது தவறாக உணர்ந்தேன்" என்றார்.
ஷிண்டே தனது பிஎச்டி படிப்புக்கான நிதி தேவைக்கு, மற்றொரு கல்விக் கடனை வாங்கினார். 2015 ஆம் ஆண்டில், அவர் அம்பேத்கர் மெட்ரிகுலேஷன் முன் மற்றும் பிந்தைய உதவித்தொகைக்கு விண்ணப்பித்தார், ஆனால் அதைப் பெற முடியவில்லை. அவர் விளக்கினார், "இந்த மத்திய நிதியுதவி உதவித்தொகை பழங்குடியின மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு மட்டுமே, மேலும் மத்திய அரசு தா வரிசை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்த்துள்ளது" என்றார். ஆனாலும், அவரது விண்ணப்பத்துக்கு பதில் வந்தது. மகாராஷ்டிர மாநில அரசு அவரது கல்வி உதவித்தொகைக்கு ஓரளவு நிதியை விடுவிக்க அறிவுறுத்தப்பட்டது.
பால்கிருஷ்ணா ரேனேக் (இடது) மற்றும் லக்ஷ்மன் கெய்க்வாட் (வலது) ஆகியோருக்கு நடுவில் காளிதாஸ் ஷிண்டே நிற்கிறார், இது ரேனேக் கமிஷன் அறிக்கை தயாரிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். அவர் மகாராஷ்டிராவில் ரேனேக்குடன் களப் பார்வையிட்டார் மற்றும் தரவு சேகரிப்பில் உதவினார்.
பட உதவி: காளிதாஸ் ஷிண்டே
காளிதாஸ் தனது சாதியை "நிரூபிக்க" முடியாமல் போனதால், உதவித்தொகையை பெற முடியவில்லை. அவர் விண்ணப்பித்த பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு 2016-ல்தான், அவருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர்களைச் சேர்ந்தவர்களில், கிட்டத்தட்ட 70% பேர் சாதிச் சான்றிதழைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்று 2018 இல் வெளியிடப்பட்ட அடையாள ஆணைய அறிக்கை குறிப்பிடுகிறது. அவரது பள்ளிச் சான்றிதழில் உள்ள முரண்பாடு காரணமாக, அவரது விண்ணப்பம் பலமுறை நிராகரிக்கப்பட்டது. பகுதி நாடோடியாக இருப்பதால் அவரது குடும்பத்திற்கு நிலப்பதிவேடுகளோ, நிரந்தர குடியிருப்புச் சான்றுகளோ இல்லை. ரெனேக் கமிஷன் அறிக்கையின்படி, கிட்டத்தட்ட 98% பழங்குடியின மற்றும் சீர்மரபினர் மக்களிடம் நிலம் இல்லை.
சி.எஸ்.டி- எஸ்.ஆர்.சி. அறிக்கையின்படி, 93% கோசாவி மக்களிடம் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் போன்ற ஆவணங்கள் இல்லை, மேலும் 1.5% பேர் மட்டுமே தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ், தினசரி ஊதிய வேலை அட்டையைப் பெற்றுள்ளனர். அடையாள ஆணையம் ஆவணங்கள் மற்றும் அடையாளச் சான்றுகளை எளிதாக்குவது தொடர்பாக 454 கோரிக்கைகளையும், கல்வி மற்றும் உதவித்தொகை வசதிகள் தொடர்பாக 342 கோரிக்கைகளையும் பெற்றுள்ளது.
சாதி அடையாளத்தின் (மத்திய-மாநில வேறுபாடுகளை மீறி) ஒருங்கிணைக்கப்பட்ட வகைப்பாட்டின் முக்கியத்துவத்தை,பழங்குடியின மற்றும் சீர்மரபினர்களின் வாழ்வில் மிகைப்படுத்திக் காட்ட முடியாது என்று காளிதாஸ் கூறினார். உதவித்தொகை சரியான ஆவணங்களை பெரிதும் சார்ந்துள்ளது. "கல்வி உதவி இல்லாமல், லட்சக்கணக்கான மாணவர்கள் வேலைகளைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் அல்லது அதைவிட மோசமாக, கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்குத் திரும்புகின்றனர்" என்றார்.
இது குறித்து, கருத்துக்காக சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தை அணுகியுள்ளோம், அவர்கள் பதிலளிக்கும் போது, இக்கட்டுரையை புதுப்பிப்போம்.
அப்படிப்பட்ட ஒரு மாணவர் சேத்தன், 22, தாவரி சமூகத்தைச் சேர்ந்தவர், மேலும் சமீபத்தில் பட்டம் பெற்ற ஆங்கிலப் பட்டதாரி, ஷிண்டே அவருக்கு வழிகாட்டியாக இருக்கிறார். படிப்பில் ஒரே தாவாரி மாணவனான அவனால் முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடர முடியாது. "தேர்வு என் சகோதரனுக்கும் எனக்கும் இடையே இருந்தது. என் கணக்கில் அவர் இளங்கலை படிப்பை கைவிடுவதை நான் விரும்பவில்லை," என்று சேத்தன் கூறினார், அவர் விண்ணப்பித்த எந்த நிறுவனத்திடம் இருந்தும் பதில் கேட்காததால் பிச்சை எடுக்கத் திரும்பினார். வேலைகளுக்கு, அவர் கூறினார்.
ஷிண்டே தனது சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான கல்வி மற்றும் ஆவணப்படுத்தல் செயல்முறைகளை எளிதாக்குவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருவதாகக் கூறினார். மார்ச் 2020 முதல், சில தாவரி பெண்கள் மற்றும் சிறுவர்களின் கல்விச் செலவுகளைச் செலுத்த, பிற சமூகத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் உதவியுடன் நிதியைத் திரட்டினார். "தொற்றுநோய் காரணமாக, அவர்களின் பெற்றோரால், பிச்சை எடுத்து அதன் மூலம் சம்பாதிக்க முடியவில்லை. ஆனால் படிப்பை கைவிடுவது அவர்களின் எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும்" என்றார்.
காளிதாஸ் ஷிண்டேவின் பெற்றோர் தங்கள் கூடாரத்தின் முன் நின்று, ஷிண்டேவின் சுயசரிதையைப் பிடித்துக் கொண்டு, அவர்களுக்கு அருகில் "ஜோலி" தொங்குகிறது. மே 2021.
பட உதவி: காளிதாஸ் ஷிண்டே
ஆசிரியருக்கு நாதபந்தி
ஷிண்டே, சமீபத்தில் மராத்தியில் தனது சுயசரிதையை வெளியிட்டார், அதன் பெயரிலேயே "ஜோலி" என்று இது அழைக்கப்படுகிறது. தாவரி கோசாவி பழங்குடியின மக்கள், கிராமம் கிராமமாக பயணம் செய்து பிச்சை கேட்கும் போது, தோளில் தொங்கிக் கொள்ளும் காவி நிற துணி பையை, இது குறிக்கிறது. நாதபந்திகள் என்றும் அழைக்கப்படும் அவர்கள், தங்கள் குலதெய்வமான காலபைரவநாதருக்கு பல்லவி பாடுகிறார்கள்.
வரலாற்று ரீதியாக, நாதபந்திகள் பூசாரிகள். விவசாயி மற்றும் கைவினைஞர் சாதியினர், அவர்களை மதித்தனர். "மக்கள் எங்கள் கால்களைத் தொட்டு எங்களிடம் ஆசீர்வாதங்களைக் கேட்பார்கள்" என்று ஷிண்டே கூறினார். ஆனால் இப்போது நிலைமை வேறு… எங்களை கடவுள் ஆக்காதீர்கள். கடவுளின் பிரச்சனைகள் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதில் யாருக்கும் அக்கறை இல்லை" என்றார்.
கடந்த 2018 ஆம் ஆண்டில், குழந்தையை கடத்தும் கும்பல் என்ற குற்றச்சாட்டின் பேரில், மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் உள்ள ரெயின்பாடாவில், ஐந்து தாவரி கோசாவி பல்லவிகள், ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கு தற்போது துலேயில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகம் என்பவரால் நடந்து வருகிறது. "சம்பவத்தின் சில வீடியோக்கள் சாட்சிகளால் எடுக்கப்பட்டன, அவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன," என்று நிகம் கூறினார். "வீடியோக்களிலும் நேரிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் தீர்ப்பு வரும் வரை இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது" என்றார்.
காளிதாஸ் ஷிண்டே, தனது புத்தகத்தின் நகலை ஒரு நாதபந்திக்கு ஜூன் 2021 இல் வழங்கினார்.
பட உதவி: காளிதாஸ் ஷிண்டே
தற்போது, ஷிண்டே மும்பை பல்கலைக்கழகத்தில் விருந்தினர் விரிவுரையாளராக உள்ளார். தற்போதுள்ள சம்பளம் கல்விக் கடனை அடைக்கவோ அல்லது தாவரி மாணவர்களின் சமூக நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சமூக அமைப்பைத் தொடங்கவோ போதுமானதாக இல்லை என்று அவர் கருதுகிறார். குறிப்பாக தாவரி பெண்களின் கல்விக்காக" என்று அவர் மேலும் கூறினார். அவர், ஒரே நேரத்தில் மராத்தியில் முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடர்கிறார், ஏனெனில் இந்த பாடம் மிகவும் பரவலாக கற்பிக்கப்படுகிறது மற்றும் அவருக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடும்.
அவரது இதயத்தை வாட்டிக் கொண்டிருக்கும் வருத்தத்தை உணர்கிறார். அது என்னவென்றால், "எனது பிஎச்டி பட்டமளிப்பு விழாவிற்கு என் பெற்றோர் வர மறுத்துவிட்டனர்," என்று அவர் கூறினார். "ஒருநாள் வேலை தவறினால், அன்று இரவு எங்கள் குடும்பத்திற்கு உணவு இல்லை என்று அவர்கள் நியாயப்படுத்தினர். முரண்... நான் டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும், அவர்களின் வயிறு காலியாக இருக்கும் நாட்கள் இன்னும் உள்ளன" என்றார்.
தேவிதாஸ் ஷிண்டே (நடுவில்), சமூகத்தைச் சேர்ந்த மற்ற ஆண்களுடன், கவரிங் நகை விற்கும் தொழிலைத் தொடங்கியுள்ளார், படம், மே 2021.
பட உதவி: காளிதாஸ் ஷிண்டே
மேலும் காளிதாஸுக்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். அவர், தனது இளைய உடன்பிறப்புகளுக்காக தனது சொந்த கல்வியை தியாகம் செய்யாமல் இருந்திருந்தால், இன்று அவருக்கு பதிலாக அவரது சகோதரர் தேவிதாஸ் ஷிண்டே, 43, எளிதாக இருந்திருக்க முடியும்.
ஆறு உடன்பிறந்தவர்களில் மூத்தவரான தேவிதாஸ் ஷிண்டே மூன்றாம் வகுப்பு வரை படித்தார், பின்னர் தனது குடும்பத்தின் வருமானத்திற்கு துணையாக படிப்பை நிறுத்திவிட்டார். "எனது இளைய சகோதரர்கள் படிக்கவும், என் சகோதரிகளுக்கு திருமணம் செய்யவும், நான் பிச்சை, அடுப்புகளை சரிசெய்தல் மற்றும் சமையலறை உபகரணங்களை பிச்சை எடுத்தேன்," என்று அவர் கூறினார்.
தற்போது, தேவிதாஸ் வீராரில் உள்ள ஒரு உள்ளூர் கோவிலுக்கு வெளியே அமர்ந்திருக்கிறார், அவருக்கு அருகில் இரண்டு பசுக்களுடன் கம்புகளில் கட்டப்பட்டு, முன்னால் கொஞ்சம் தீவனம். "இந்துக்கள் பசுக்களுக்கு உணவளிப்பதை புண்ணியம் (நல்ல செயல்) என்று கருதுகின்றனர், ஆனால் சில நேரங்களில் மாநகராட்சி அதிகாரிகள் எங்களை துன்புறுத்துகிறார்கள் மற்றும் இடத்தை காலி செய்யும்படி கேட்கிறார்கள்," என்று அவர் விளக்கினார்.
அவரது வாழ்வாதாரம், அவருக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ. 350 சம்பாதிக்கிறது, அதில் ரூ. 100 அவர் வாடகைக்கு மாடுகளுக்கு லாய உரிமையாளருக்கு செல்கிறது. மற்ற குடியிருப்பாளர்கள், அவரை "பிச்சைக்காரர்" என்று முத்திரை குத்தியதால், பெரிய தீவன மூட்டைகளை சுமந்து கொண்டு விரரில் உள்ள தனது கட்டிடத்திற்குள் நுழைவதற்கு வெட்கப்படுவதாக அவர் கூறினார். அவர் சொந்தமாக ஒரு சிறிய தொழிலைத் தொடங்க விரும்புகிறார், ஒருவேளை பழுதுபார்க்கும் கடை, மற்றும் "மரியாதைக்குரிய" வேலைவாய்ப்பைப் பெற, ஆனால் நிலம் அல்லது மதிப்புமிக்க சொத்துக்கள் இல்லாத காரணத்தால் அவரது கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். "பிச்சை எடுப்பதற்காக மக்கள் என்னை எப்போதும் கேலி செய்கிறார்கள், ஆனால் என்னைப் போன்ற படிக்காதவர் வேறு என்ன செய்ய முடியும்?" என்றார்.
சி.எஸ்.டி- எஸ்.ஆர்.சி. அறிக்கையின்படி, கோசாவிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் பாரம்பரிய தொழிலான அலைந்து திரிந்து பிச்சை எடுப்பதைத் தொடர்கின்றனர்.
"பாபாசாகேப் [பி.ஆர். அம்பேத்கர்] தாழ்த்தப்பட்ட மக்கள், தங்களது தாழ்ந்த வேலைகளைக் கைவிடுவதன் மூலம், கண்ணியத்தைக் காண்கிறார்கள் என்று கூறினார்," என்று தேவிதாஸ் ஷிண்டே, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். "நான் இல்லையென்றால், குறைந்தபட்சம் என் குழந்தைகளாவது பெரிய விஷயங்களைச் செய்ய வேண்டும்" என்றார்.
காளிதாஸ் ஷிண்டேவுடனான அழைப்பின் பின்னணியில், உரையாடல் இரவு உணவிற்குள் நுழையும்போது, பரிமாறும் கரண்டி ஒரு பானையின் மீது மோதியது. ஷிண்டேவின் குடும்பத்தில் ஒரு பகுதியினர், இப்போது வீட்டில் சமைத்த உணவை வாங்க முடியும் என்பது சாதாரண சாதனையல்ல.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.