கோவிட் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏன் ஊரடங்கு ஒரு தீர்வாக இருக்காது

இந்தியாவின் கோவிட்-19 தொற்றுநோயானது, இரண்டாவது அலைக்குள் நுழைகிறது. இதற்கு தீர்வு ஊரடங்கு அல்ல; அதற்கு பதிலாக, புதிய மாறுபாடுகளைக் கண்டறிய இந்தியா மரபணு வரிசைமுறையை இரட்டிப்பாக்க வேண்டும்; தடுப்பூசி போடுவதை விரைவாக்க வேண்டும், முன்னெச்சரிக்கைகள் விரைவாக தொடர வேண்டும்.

Update: 2021-03-24 00:30 GMT

புதுடெல்லி: ஹரித்வாரில் ஹோலி மற்றும் மகாகும்பமேளா பண்டிகைகள் ஒரு புறம், பரபரப்பான தேர்தல் காலகட்டத்தில் உள்ள ஐந்து மாநிலங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், இந்தியாவில் கொரோனாவின் 'இரண்டாவது அலை' உறுதியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"இந்தியாவில் கோவிட்-19 இன் இரண்டாவது அலை இருப்பது, தற்போதைய இதரவுகளில் இருந்து மிகவும் தெளிவாக உள்ளது" என்று கேரளாவின் ராஜகிரி சமூக அறிவியல் கல்லூரியின் சுகாதார பொருளாதார நிபுணரும் துணை பேராசிரியருமான ரிஜோ ஜான் கூறினார்.

இந்த உயர்வு, சார்ஸ்-கோவ்-2 வைரஸின் புதிய மாறுபாடுகளுடன் இருப்பதால் வருகிறது, மேலும் இந்த மாறுபாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் இன்னும் முயற்சித்து வருகின்றனர். இதர்கு மற்றொரு ஊரடங்குதான் பதில் நடவடிக்கையா, அல்லது தனிநபர்கள், சமூகங்கள், வணிகங்கள் மற்றும் நிர்வாகங்கள் உரிய கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செயல்படுகிறதா?

ஊரடங்கு என்பது மீண்டும் வாழ்வாதாரங்களை அழித்து பொருளாதாரத்தை கசக்கிவிடும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதற்கு பதிலாக, புதிய மாறுபாடுகளைக் கண்டறிவதற்கு இந்தியா மரபணு வரிசைமுறையை இரட்டிப்பாக்க வேண்டும், தடுப்பூசி போடும் பணியின் வேகத்தை கூட்ட வேண்டும், மேலும் கோவிட்-19 முன்னெச்சரிக்கைகள் விரைவாக தொடர வேண்டும்.

எண்ணிக்கை

"2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிட்-19 வழக்குகள் வீழ்ச்சியடையத் தொடங்கியபோது, ​​தொற்றுநோய் நமக்குப் பின்னால் இருப்பதாக மக்கள் உணரத் தொடங்கினர்" என்று இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தலைவர் ஸ்ரீநாத் ரெட்டி கூறினார். "அதிக நடமாட்டம் மற்றும் ஒன்றாக கூடுவதன் மூலம் நாம், சார்ஸ்-கோவ்-2 வைரஸை அதிகமாவதற்கான கூடுதல் வாய்ப்பை வழங்கினோம்" என்றார் அவர்.

இந்தியாவின் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 வழக்குகள், 2020 செப்டம்பர் 16 ஆம் தேதி உச்சத்தை எட்டியது, அன்று ஒரே நாளில் 97,860 வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த உச்ச எண்ணிக்கையில் இருந்து, இந்தியாவின் கோவிட்-19 எண்ணிக்கை 2021 பிப்ரவரி 1 அன்று, வெறும் 8,579 வழக்குகள் என்றளவில் குறைந்திருந்தது.

இவ்வாறு, 2021 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில், தொற்றுநோயின் எண்ணிக்கையில் இந்தியாவில் கீழிறங்கியது, இது தொற்றுநோய் கட்டுக்குள் இருந்தது போல் தோன்றியது.

இதே காலகட்டத்தில், பரிசோதனையும் செப்டம்பர் மாதத்தில்தான் மிக உயர்ந்த நிலையை அடைந்தது, இதேபோல் பிப்ரவரியிலும் சரிந்தது: 2020 செப்டம்பர் 24 அன்று ஒரே நாளில் செய்யப்பட்ட 1.49 மில்லியன் பரிசோதனைகள் என்பது, பிப்ரவரி 14, 2021 இல் வெறும் 4,86,122 பரிசோதனைகள் என்றளவில் குறைந்து காணப்பட்டது.

ஆனால் அதன் பின்னர் வழக்குகள் அதிகரித்து வருகின்றன, அத்துடன் 2021 மார்ச் 21 அன்று, மத்திய அரசு சுமார் 47,000 கோவிட் வழக்குகளைப் பதிவு செய்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 2021 பிப்ரவரி 1 ஆம் தேதியுடன் ஒப்பிட்டால், இந்தியாவின் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 4.5 மடங்கு உயர்ந்துள்ளன.

அதே நேரத்தில், இந்தியா தனது இலக்கை அடைய தேவையான வேகத்தில் தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்ளவில்லை என்று மார்ச் 2021 இல் நாங்கள் தெரிவித்தோம். இந்த திட்டத்தில், ஜூலை 2021 க்குள் 500 மில்லியன் தடுப்பூசி என்ற இலக்கு உள்ள நிலையில், இரண்டு மாதங்களுக்குள் அதில் 7% ஐ மட்டுமே இந்தியா எட்டியிருந்தது. இந்த இலக்கை அடைய இது ஒரு நாளைக்கு 3.65 மில்லியன் சொட்டு மருந்துகளை கொடுத்தாக வேண்டும்.

"கோவிட்-19 தரவு பற்றிய எனது வழக்கமான பகுப்பாய்வில் இருந்து, ஏழு நாள் சராசரியாக தினசரி புதிய வழக்குகள் 167% உயர்ந்துள்ளன என்பதை இது காட்டுகிறது (பிப்ரவரியில் அதன் ஏழு நாள் சராசரி குறைந்த புள்ளியில் இருந்து), அதே காலகட்டத்தில் இறப்புகள் 71% அதிகரித்துள்ளன, ஆனால் இதே காலகட்டத்தில் தினசரி சோதனை 31% மட்டுமே அதிகரித்துள்ளது "என்று ஜான் கூறினார். "தற்போது 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு வெளிப்படையான எழுச்சி காணப்படுகிறது" என்றார்.

வழக்குகள் ஏன் அதிகரித்து வருகின்றன?

"இந்தியாவில் வழக்குகளில் ஏன் அதிகரிப்பு உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்கு, கோவிட்-19 வழக்குகள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், இறப்புகள் மற்றும் மரபணு வரிசைப்படுத்துதல் தரவு பற்றிய தரவுகள் நமக்கு அவசரமான தேவையாகும்" என்று, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியின் பேராசிரியர் ககன்தீப் காங் கூறினார்.

செரோ-சர்வே தரவு சில நுண்ணறிவை வழங்கும். "எடுத்துக்காட்டாக, ஏற்கனவே அதிக அளவு செரோ-நேர்மறை நிலையை அடைந்திருக்கக்கூடிய இடங்களில் வழக்குகள் அதிகரித்து வருகிறதா? ஆம் எனில், அவை புதிய வழக்குகள், அல்லது இந்த பகுதிகளுக்குச் சென்ற மக்களிடையே நிகழ்கின்றனவா, அல்லது அவை மீண்டும் தொற்றுநோய்களா, அல்லது வைரஸின் புதிய மாறுபாடு இருந்தால், மற்றும் பலவற்றைக் கண்டுபிடிக்க முடியும்" என்று அவர் சொன்னார்.

காரணிகளின் 'தொற்றுநோயியல் முக்கோணம்' - அதாவது முகவர், புரவலன் மற்றும் சுற்றுச்சூழல் - அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று, இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தொற்றுநோயியல் நிபுணர் கிரிதர் பாபு கூறினார். "முகவர் என்பது வைரஸ் ஆகும், இது நிச்சயமாக மாறிக்கொண்டே இருக்கிறது, மேலும் விஞ்ஞானிகள் மரபணு வரிசைமுறையால் மாறுபாடுகளைப் பற்றிய விஷயங்களைக் கண்டுபிடித்து வருகின்றனர்," என்று அவர் கூறினார். "புரவலர்களாக, நாம் அனைவரும் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோமா, தடுப்பூசி போடுகிறோமா, ஏன் எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்ளது என்பதை விளக்கும். சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை, சினிமாக்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் வைரஸ் பரவுவதை அனுமதிக்கக்கூடிய நிகழ்வுகளை அரசு அனுமதிக்கிறதா என்பது போன்ற எல்லாவற்றையும் நம்மைச் சுற்றி நடக்கிறது" என்றார்.

ஊரடங்கா அல்லது ஊரடங்கு இல்லையா?

"அதிகரித்து வரும் கோவிட் வழக்கு எண்ணிக்கைகளுக்கான தீர்வு எளிதானதாகவோ விரைவாகவோ இருக்காது. இரண்டு சிந்தனைப் பள்ளிகள் உள்ளன. ஒன்று ஊரடங்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைப்பதால் அது உயிர்களைப் பாதுகாக்க முடியும் என்ற கருத்து. இன்னொன்று, ஊரடங்கானது வாழ்வாதாரங்களை அழித்துவிடும் என்ற மற்றொரு தரப்பு," என்று ரெட்டி கூறினார்.

பல நகரங்களும் மாநிலங்களும் மீண்டும் பல்வேறு தடைகளை அறிவித்துள்ளன, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தலைவர்கள் புதிய ஊரடங்கு குறித்து எச்சரித்துள்ளனர். எவ்வாறாயினும், மார்ச் 2020 இல், மத்திய அரசு விதித்த முதலாவது ஊரடங்கு மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் மற்றும் மக்களின் நிதி மீதான அழுத்தம் உள்ளிட்ட அதன் கடுமையான வீழ்ச்சிகளுக்குப் பிறகு, மற்றொரு ஊரடங்கு என்பது முன்னோக்கி செல்லும் பாதையாக இருக்காது என்று ஆய்வாளர்கள், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

"கோவிட் -19 நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா தனது சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்க உதவ, ஊரடங்கு அவசியமாக இருந்தது. இப்போது அது சிகிச்சை நெறிமுறைகளுடன் ஏற்கனவே உள்ளது, எனவே மற்றொரு ஊரடங்கு தேவையில்லை,"என்றார் பாபு.

பொருளாதார நடவடிக்கைகளை எவ்வாறு சமநிலைப்படுத்துவது மற்றும் பொது சுகாதார நெருக்கடி முக்கியமாக இருக்கும் என்று ரெட்டி கூறினார். "எடுத்துக்காட்டாக, மூடப்பட்ட பணி இடங்களை எவ்வாறு சிறப்பாக நிர்வகிக்க முடியும்? முடிந்தவரை, மக்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும், ஆனால் தவிர்க்க முடியாத இடங்களில், அலுவலகங்கள் வேலை நாட்கள் மற்றும் வேலை நேரங்களை ஏற்படுத்த செய்ய வேண்டும், "என்று அவர் கூறினார். "பொதுப் போக்குவரத்தும் தளர்த்தப்பட வேண்டும், ஒரு பஸ் அல்லது ரயிலில் கூட்டமாக வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் பொருளில், கிடைக்கக்கூடிய பொது போக்குவரத்து விருப்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். காற்றோட்டம் முக்கியமானது, மக்கள் முகக்கவசங்களை கைவிடக்கூடாது" என்றார். மதக் கூட்டங்கள், அரசியல் நிகழ்வுகள் மற்றும் பிற கூட்டங்களும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

பரவக்கூடிய சங்கிலிகளையும் நாம் கண்காணிக்க வேண்டும், காங் கூறினார், தொற்றுநோயியல் முக்கோணத்தின் ஒவ்வொரு காரணிக்கும் வெவ்வேறு தீர்வு தேவை என்று பாபு கூறினார். வைரஸை கையாள்வதில், விரிவான மரபணு வரிசைமுறை மற்றும் தொடர்பு-தடமறிதல் அவசியம். மக்களுடன் கையாள்வதில், அவர்களுக்கு விரைவாக தடுப்பூசி போடுவது மற்றும் அவர்கள் முன்னெச்சரிக்கைகள் எடுப்பதை உறுதி செய்வது வழக்குகளை குறைக்க உதவும். சுற்றுச்சூழலைக் கையாள்வதற்கு, ஊரடங்குக்கு பதிலாக, குறிப்பாக தொற்றால் மூடப்பட்ட இடங்களில் மக்கள் ஒன்றுகூடாமல் இருப்பதை உறுதி செய்வதும், அலுவலகங்களும் நிகழ்வுகளும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதும் மிகவும் நடைமுறைக்குரிய தீர்வாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று பாபு கூறினார், ஏனெனில் இது கோவிட்-19 இல் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான உறுதியான மருத்துவவழி ஆகும். "குறிப்பாக மக்களின் அன்றாட நடத்தை மாற்றுவது மிகவும் கடினமானது மற்றும் கோவிட்-19 பொருத்தமான நடத்தை உண்மையில் நடைமுறையில் இல்லை என்பதால்" என்றார்.

கோவிட் -19 வகைகள்: நமக்கு என்ன தெரியும்?

மார்ச் 18, 2021 நிலவரப்படி, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் வகை சார்ஸ் -கோவ்-2 வைரஸ் இந்தியாவில் 400 வழக்குகள் கண்டறியப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகத்தின் உரை அடிப்படையிலான ஊடக எச்சரிக்கை தெரிவிக்கிறது. இது ஒரு சிறிய மற்றும் அச்சுறுத்தல் இல்லாத எண் போல் தெரிகிறது என்று ரெட்டி கூறினார். ஆனால் இது மரபணு வரிசைப்படுத்துதலுக்காக அனுப்பப்படும் அனைத்து நேர்மறையான நிகழ்வுகளிலும் மிகச் சிறிய பகுதியில் இருந்து வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 5% கோவிட்-19 நேர்மறை மாதிரிகளின் மரபணு வரிசைப்படுத்தலை இந்தியா திட்டமிட்டிருந்தது என்று மார்ச் 19 அன்று, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதன் நோக்கம் "தொடர்ச்சியான கண்காணிப்பின் ஒரு பகுதியாக சாத்தியமான பரவல்கள் மற்றும் தொடர்புடைய விகாரங்களை" அடையாளம் காண்பது.

மார்ச் 10 க்குள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கோவிட்-19 தொடர்பான 19,092 ஆர்.டி. -பி.சி.ஆர். நேர்மறை மாதிரிகளை கோவிட்-19 இன் விகாரங்களை சரிபார்க்க மரபணு வரிசைப்படுத்துதலுக்காக அரசுக்கு அனுப்பி இருந்தன. இவற்றில், 4,869 மாதிரிகள் செயலாக்கப்பட்டன. பதப்படுத்தப்பட்ட மாதிரிகளில், 284 மாதிரிகள் 'இங்கிலாந்து திரிபு'க்கு நேர்மறையானவை என்றும், 11 மாதிரிகள்' தென்னாப்பிரிக்க திரிபு'க்கு நேர்மறையானவை என்றும், 'மாதிரி பிரேசில் திரிபு'க்கு 1 மாதிரி நேர்மறை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

"நாட்டில் கோவிட்-19 இன் புதிய வகைகளுடன், வழக்குகளின் எழுச்சியில், நாம் இன்னும் விரிவான மரபணு சோதனை செய்யாவிட்டால் தவிர, அவை எந்த அளவிற்கு பங்கு வகிக்கின்றன என்பது நமக்கு தெரியவில்லை" என்று ரெட்டி கூறினார். இது கணிசமான வேகத்தில் புறப்படும் வரை, சமூக விலகல் மற்றும் முகக்கவசம் அணிவதை நாம் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும், என்றார்.

புதிய கோவிட்-19 வகைகள் மிகவும் தொற்றுநோயாக இருக்கலாம், ஆனால் மருத்துவ ரீதியாக மிகவும் கடுமையானவை அல்ல, 2020 டிசம்பரில் இந்தியாஸ்பெண்டிற்கு அளித்த பேட்டியில் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலின் மைய இயக்குனர் ராகேஷ் மிஸ்ரா கூறினார். மருத்துவ ரீதியாக மிகவும் கடுமையானதாக இல்லாவிட்டாலும், தொற்றுநோய் பரவினால் அதிகமான மக்கள் மருத்துவமனைகளுக்கு வருவார்கள் என்று அர்த்தம் என, டிசம்பர் 2020 இல் இந்தியாஸ்பெண்டிடம் ரெட்டி தெரிவித்தார்.

ஆனால் இந்த வரிசையின் வேகம் மெதுவாக உள்ளது என்று இந்திய அரசின் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது: "இந்தியா இதுவரை சார்ஸ்-கோவ்ட்-2 தனிமைப்படுத்தல்களை முழு திறனுடன் வரிசைப்படுத்தவில்லை, 10.4 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளில் (0.06%) சுமார் 6,400 மரபணுக்களை மட்டுமே டெபாசிட் செய்துள்ளது" என்று கூறியுள்ளது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
Tags:    

Similar News