பிற எந்த நாட்டைவிட இந்தியாவில் 4.7 மில்லியன் தொற்றுநோய் தொடர்பான இறப்புகள் ஏற்பட்டதாக கூறும் உலக சுகாதார அமைப்பு
அதிகப்படியான இறப்பு பற்றிய புதிய உலகளாவிய மதிப்பீடுகள் இந்தியாவால் மறுக்கப்படுகின்றன;
சென்னை: வியாழன் அன்று வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுகள், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் 4.7 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன, அதே காலகட்டத்தில் நாட்டின் அதிகாரபூர்வ கோவிட்-19 எண்ணிக்கை, 481,000 ஆக இருந்தது. அதே நேரம், இந்த மதிப்பீடு அறிக்கையை இந்திய அரசு நிராகரித்துள்ளது, உலக சுகாதார அமைப்பின் 194 உறுப்பு நாடுகளில், இந்த மதிப்பீடுகளை நிராகரிக்கும் ஒரே நாடு இந்தியாவாகும்.
கடந்த 2020 இல், (கோவிட் முதல் அலை முடிவில்)இந்தியா சுமார் 830,000 அதிகப்படியான இறப்புகளை சந்தித்ததாக, உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன, நாடு 2021 இல் 3.9 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளைக் கண்டது. இவற்றில், 2.3 மில்லியன் இறப்புகள் இரண்டு மாதங்களில் - அதாவது ஏப்ரல் மற்றும் மே 2021--நடந்தது. வைரஸின் டெல்டா மாறுபாட்டால் இந்தியாவின் கொடூரமான இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த காலகட்டம் அது.
உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுகள், "கோவிட்-19 தொற்றுநோயுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய முழு இறப்பு எண்ணிக்கையை" ("அதிகப்படியான இறப்பு" என்று விவரிக்கிறது)"; ஜனவரி 1, 2020 மற்றும் டிசம்பர் 31, 2021 க்கு இடையில் உலகில் 14.9 மில்லியன் இறப்புகள் (13.3 மில்லியனில் இருந்து 16.6 மில்லியன் வரையிலான மதிப்பீடுகளின் வரம்பிற்குள்) என்று கூறுகிறது.
உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, உலகின் எந்த நாட்டிலும் இல்லாத மிகப்பெரிய முழுமையான அதிகப்படியான கோவிட் இறப்பு எண்ணிக்கையை இந்தியா அனுபவித்துள்ளது, இது அடுத்த மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளான ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் இந்தோனேசியாவில் காணப்பட்ட அதிகப்படியான இறப்பு எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
இருப்பினும், மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் பெரு நாடு, 24 மாத காலத்திற்கு அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டிருந்ததை, உலக சுகாதார மதிப்பீடுகள் காட்டுகின்றன, ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது. மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், இரண்டு வருட காலப்பகுதியில் ஒவ்வொரு 100,000 பேருக்கு 171 அதிகமான இறப்புகளுடன், அதிகமான இறப்புகளின் அடிப்படையில் நாடுகளில் இந்தியா 33 வது இடத்தில் உள்ளது.
உலக அளவிலும், இந்தியாவிலும், மதிப்பிடப்பட்ட அதிகப்படியான இறப்புகளில் 57% ஆண்கள்தான். இந்தியாவில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 78% அதிகமான இறப்புகளுக்குக் காரணமாக உள்ளனர், அதே நேரத்தில் உலகளவில் 82% அதிகமான இறப்புகள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்.
அதிகப்படியான இறப்பு என்பது கோவிட்-19 தொற்றுடன் நேரடியாகவும், சுகாதாரம் மற்றும் ஆதரவை அணுகுவதில் தொற்றுநோயின் தாக்கத்தால் மறைமுகமாகவும் தொடர்புடைய இறப்புகளை உள்ளடக்கியது. சாலை விபத்துக்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் குறுக்கீடுகளின் விளைவாக உமிழ்வுகள் குறைவதால் தவிர்க்கப்படும் இறப்புகளால், இது பாதிக்கப்படலாம்.
எனவே, முந்தைய ஆண்டுகளின் தரவுகளின் அடிப்படையில், உண்மையில் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கைக்கும், தொற்றுநோய் இல்லாத நிலையில் எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் இதுவாகும்.
உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுகளுக்கு, இந்திய அரசின் ஆட்சேபனைகளின் மையத்தில் இருக்கும் சில மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் அனுமானங்களை இரு மதிப்பீடுகளும் உள்ளடக்கியது. உலக சுகாதார அமைப்பு, பிப்ரவரி 2021 இல் இந்த செயல்முறையைத் தொடங்கிய போதும், இந்திய அரசு 2020 அல்லது 2021 ஆம் ஆண்டிற்கான அனைத்து காரண இறப்புத் தரவையும், அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை.
இதன் விளைவாக, உலக சுகாதார அமைப்பானது 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மாதாந்திர இறப்பு விகிதத்தைப் பயன்படுத்தி, மாநில அளவிலான சிவில் பதிவு அமைப்பு இணையதளங்களில் இருந்து இந்தியப் பத்திரிகையாளர்களால் சேகரிக்கப்பட்டு, அவர்களின் மதிப்பீடுகளைத் தயாரிக்க, அவற்றை நாடு அளவிற்கு விரிவுபடுத்தியது. பின்னர், செவ்வாய்கிழமை (மே 3) மாலை, உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுகள் எதிர்பார்க்கப்படுவதற்உ 48 மணி நேரத்திற்குள், இந்திய அரசு 2020 இல் நாட்டில் இறப்புகள் குறித்த சிவில் பதிவு அமைப்புத் தரவை வெளியிட்டது.
இந்திய ஊடகவியலாளர்களால் சேகரிக்கப்பட்ட 2020 தரவுகளின் போக்குகள், 2020 ஆம் ஆண்டிற்கான அரசின் தரவுகளுடன் பொருந்துகின்றன, தொற்றுநோய்கள் பற்றிய புத்தகத்தை எழுதிய மற்றும் எண்ணிக்கைளை பயன்படுத்தி கோவிட் -19 இல் இருந்து அதிகப்படியான இறப்பு பற்றிய கட்டுரையை எழுதிய இணை வரலாற்றாசிரியர் சின்மய் தும்பே கூறினார்.
"இந்திய அரசின் 2020 ஆம் ஆண்டிற்கான அவர்களின் இறப்புத் தரவை, செவ்வாயன்று வெளியிட்டதை நாங்கள் பார்த்தோம்," என்று, இந்தியா ஸ்பெண்டின் கேள்விக்கு பதிலளித்த உலக சுகாதார அமைப்பின் தரவு, பகுப்பாய்வு மற்றும் விநியோகத்திற்கான உதவி இயக்குநர் ஜெனரல் சமிரா அஸ்மா கூறினார். "எங்களால் இன்னும் தரவைப் பார்க்கவும் ஒப்பிடவும் முடியவில்லை. எங்களின் மதிப்பீடுகள் 24 மாதங்கள், இந்தியத் தரவு- 2020க்கானது. தரவை கவனமாகப் பார்த்து, அதை எங்கள் மாதிரிகள் மூலம் இயக்குவதற்கு நேரம் எடுக்கும்" என்றார்.
"[எங்கள்] மதிப்பீடுகள் கிடைக்கக்கூடிய சிறந்த தரவைப் பயன்படுத்துகின்றன மற்றும் வலுவான முறை மற்றும் முற்றிலும் வெளிப்படையான அணுகுமுறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டன" என்றார்.
இதுபற்றி இந்தியா ஸ்பெண்ட் கருத்து கேட்கப்பட்டபோது, சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடந்த வாரத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கைகளுக்கு எதிராக அரசின் கருத்துக்களையும், புதிதாக வெளியிடப்பட்ட 2020 சி.ஆர்.எஸ். தரவுகளையும் எங்களுக்குத் தெரிவித்தார்.
மே 5 அன்று மதிப்பீடுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சகம் தனது ஆட்சேபனைகளை மீண்டும் வலியுறுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டது (மேலும் விவரங்களுக்கு, இந்தியா ஸ்பெண்டின் கட்டுரையை பார்க்கவும்), இந்த முறையை "புள்ளிவிவர ரீதியாக பொருத்தமற்றது மற்றும் அறிவியல் ரீதியாக கேள்விக்குரியது" என்று கூறியது. "கணித மாதிரிகளின் அடிப்படையில் அதிகப்படியான இறப்பு மதிப்பீடுகளை திட்டமிடுவதற்கு, உலக சுகாதார அமைப்பு பின்பற்றும் முறைக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது" என்று அமைச்சகம் கூறியது. "இத்தகைய மாதிரி பயிற்சியின் செயல்முறை, வழிமுறை மற்றும் விளைவுகளுக்கு இந்தியாவின் ஆட்சேபனை இருந்தபோதிலும், உலக சுகாதார அமைப்பு, இந்தியாவின் கவலைகளை போதுமான அளவு கவனிக்காமல் அதிகப்படியான இறப்பு மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது" என்றது.
மேலும், சி.ஆர்.எஸ் தரவைப் பற்றி அமைச்சகம் குறிப்பிடுகையில், "அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின் அடிப்படையிலான துல்லியமான கணிதக் கணிப்பைக் காட்டிலும் குறைவாக நம்பியிருப்பதை விட, உறுப்பினர் நாட்டின் சட்டக் கட்டமைப்பின் மூலம் உருவாக்கப்படும் அத்தகைய வலுவான மற்றும் துல்லியமான தரவு WHO ஆல் மதிக்கப்பட வேண்டும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் மற்றும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது " என்றது.
செவ்வாயன்று இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சி.ஆர்.எஸ் தரவு, 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் 8.1 மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளன, இது 2019 ஐ விட 470,000 இறப்புகள் அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த அதிகரிப்பு 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கு இடையிலான அதிகரிப்பை விட சிறியது, உதாரணமாக, முன்னணி நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால், தொற்றுநோய்களின் போது இந்தியாவில் இறப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் இல்லை என்று மே 4 அன்று கூறினார்.
சி.ஆர்.எஸ் தரவு - 2020 க்கு மட்டும்; 2021 தரவு அடுத்த ஆண்டு கிடைக்கும் - இருப்பினும் 2020 இல் இந்தியாவில் எத்தனை இறப்புகள் நிகழ்ந்தன என்பதை மதிப்பிட வேண்டாம். எத்தனை பதிவு செய்யப்பட்டது என்பதை மட்டுமே பார்க்கின்றனர். இந்தியாவின் மாதிரிப் பதிவு அமைப்பு (எஸ்.அர்.எஸ், குடும்பங்களின் பிரதிநிதி மாதிரியைப் கண்டறிகிறது) ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் உண்மையில் எத்தனை இறப்புகள் நிகழ்ந்தன என்பதைக் கணக்கிடுகிறது. இருப்பினும், 2020க்கான எஸ்.ஆர்.எஸ். கணக்கிடப்படவில்லை.
இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட இறப்புகள் கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்பே சிக்கலானவை: இந்தியாவில் பத்தில் ஒன்பது இறப்புகள் 2019 இல் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் கிராமப்புறங்கள் மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்கள் குறைந்த அளவிலான பதிவுகளைப் பதிவு செய்துள்ளன. ஜூன் 2020 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரையின்படி, 2019 இல் ஐந்தில் ஒரு பங்கு இறப்புகள் மட்டுமே மருத்துவ சான்றளிக்கப்பட்டன, மேலும் பெரும்பாலும் இறப்புக்கான அடிப்படைக் காரணம், தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்தகால எஸ்.ஆர்.எஸ் அறிக்கைகளின் தரவுகள், தொற்றுநோய்க்கு முன்னர், இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவதோடு, மக்கள்தொகை வளர்ச்சியும் குறைந்துகொண்டே இருந்தது. பதிவுகளில் கணிசமான அதிகரிப்பு இல்லாததால், 2020 இல் இறப்புகளில் பெரிய அதிகரிப்பை இந்தியா எதிர்பார்த்திருக்கக் கூடாது. உலக சுகாதார அமைப்பின் எதிர்பார்க்கப்படும் (தொற்றுநோய் இல்லாத நிலையில்) இறப்பு விகிதம் இந்தியா எத்தனை இறப்புகளைக் கண்டிருக்க வேண்டும் என்பதில் மிகக் குறைந்த அதிகரிப்பை மட்டுமே காட்டுகிறது.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் பதிவுகள் மேம்படும் என்று பால் கூறினாலும், தொற்றுநோய்களின் போது இறப்புகளின் பதிவு அதிகரித்திருக்கும் என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. தொற்றுநோய் காரணமாக இறப்புகளைப் தெரிவிப்பதில், குடிமக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டதாக தெலுங்கானா போன்ற சில மாநிலங்கள், சி.ஆர்.எஸ். இடம் தெரிவித்தன. அத்துடன், பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் உண்மையில் குறைந்துவிட்டன, இந்தியாவில் கருவுறுதல் இன்னும் குறையவில்லை என்பதால், மனச்சோர்வடைந்த பதிவுகளின் விளைவாக இருக்கலாம் என்று மக்கள்தொகை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர். "நம்மிடம் எஸ்ஆர்எஸ் தரவு இருக்கும் வரை, அதிகரித்த பதிவு காரணமாக இறப்பு அதிகரிப்பு எவ்வளவு, மற்றும் தொற்றுநோயின் விளைவாக எவ்வளவு என்று சொல்வது கடினம்" என்று, மும்பையில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாபுலேஷன் சயின்ஸின் உயிரியல் புள்ளியியல் மற்றும் தொற்றுநோயியல் துறையின் பேராசிரியரும், இறப்பு மதிப்பீட்டில் நிபுணருமான உஷா ராம், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.
(இந்தியா ஸ்பெண்ட் தரவுப் பத்திரிகையாளர் நிலீனா சுரேஷ் இந்தக் கதைக்கு பங்களித்தார்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.