வல்லுநர்கள்: காலநிலை நடவடிக்கையைத் தூண்ட 2022ஆம் ஆண்டில் இந்தியா என்ன செய்ய வேண்டும்

காற்று மாசுபாடு, காலநிலை ஏற்பு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிக்க, சுகாதார உள்கட்டமைப்பு ஆகியவை மீது, 2022 ஆம் ஆண்டில் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய பகுதிகள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.;

Update: 2022-01-06 00:30 GMT

மும்பை: காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல், மாநில மற்றும் நகர செயல் திட்டங்கள் போன்ற ஏற்ற்கத்தக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணிக்க, மீளக்கூடிய சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், ஆரோக்கியத்திற்கு இந்தியா முன்னுரிமை அளிப்பது ஆகியவை, 2022 ஆம் ஆண்டில் முதன்மையான அக்கறைக்குரிய பகுதிகளாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2022 ஆம் ஆண்டில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கான தடை அமல்படுத்தப்படுவதை, அரசுகள் உறுதி செய்ய வேண்டும் மற்றும் நகரங்கள் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும், இது அகால மரணங்கள் மற்றும் இயலாமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று, நிபுணர்கள் மேலும் கூறியுள்ளனர்.

சுற்றுச்சூழல் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளில் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய முன்னுரிமைப் பகுதிகளின் பட்டியல் இங்கே:

காற்று மாசுபாட்டிற்கான புதிய தரநிலைகள், செயல் திட்டங்கள்

இந்தியாவில் உள்ள நோய்களின் ஆபத்து காரணிகளில் காற்று மாசுபாடு இரண்டாவது இடத்தில் உள்ளது (ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு பிறகு), இது நோய் சுமையில் 10% ஆகும். காற்று மாசுபாடு இந்தியாவில் பிறந்த குழந்தையின் சராசரி ஆயுட்காலம் குறைந்தது 1.5 ஆண்டுகள் குறையும் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது; 2019 ஆம் ஆண்டில், இது 116,000 இந்தியக் குழந்தைகளைக் கொன்றது என்று, அக்டோபர் 2020 இல் எங்கள் கட்டுரையில் தெரிவித்தோம்.

வாகனங்களில் இருந்து வரும் மாசு மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் நிலக்கரி மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் மாசுகள், இந்தியா முழுவதும் ஆண்டு முழுவதும் காற்று மாசுபாட்டிற்கு பங்களிக்கின்றன.

2009 ஆம் ஆண்டில், மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம், தேசிய சுற்றுப்புற காற்று தர நிலைகளை (NAAQS) அறிவித்தது, அதில் எட்டு முதன்மை மாசுபடுத்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன: துகள்கள் (PM 2.5 மற்றும் PM 10), நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, ஓசோன், பென்சீன் மற்றும் அம்மோனியா. PM 2.5 ஐ விட அதிக நுண்ணிய நுண் துகள்களுக்கு காரணியாக இருக்கும் புதிய தரநிலைகளை இந்தியா நிறுவ வாய்ப்புள்ளது.

தேசிய சுற்றுப்புற காற்று தரநிலையின் திருத்தங்கள், இந்தியாவில் அடுத்த தசாப்தத்திற்கான காற்று மாசுபாடு பற்றிய விவாதத்தை வரையறுக்க உதவும் என்று, டில்லியை சேர்ந்த கொள்கை ஆராய்ச்சி மையத்தின் டிசம்பர் 2021 அறிக்கை தெரிவித்தது. வெளிப்பாட்டுடன் தொடர்புடைய ஆபத்து மற்றும் காலப்போக்கில் அது எவ்வாறு உருவானது என்பதைப் பற்றிய நமது புரிதலின் அடிப்படையில் தரங்களை மிகவும் லட்சியமாக்குவது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இதுவரை, 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 95 நகரங்கள் உள்ளன, அவை அடையப்படாத நகரங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, அவை, தேசிய சுற்றுப்புற காற்று தரநிலை அமைப்பின், தரநிலைகளுக்கு இணங்கவில்லை. தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் (NCAP) செயல்படுத்தப்படும், அடையாத நகரங்களுக்கு, நகரத்துக்குரிய செயல் திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன. ஜனவரி 2019 இல் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட தேசிய தூய்மையான காற்றுத் திட்டம், தேசிய அளவிலான இலக்கை 2024 ஆம் ஆண்டிற்குள் PM 2.5 மற்றும் PM 10 செறிவு அளவை 20% முதல் 30% வரை குறைத்து, 2017 ஆம் ஆண்டு செறிவு நிலைகளுக்கான அடிப்படையாக உள்ளது.

"தொற்றுநோய் மற்றும் பணிநிறுத்தம் காரணமாக தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் (NCAP) உண்மையில் புறப்படவில்லை," என்று, ஆற்றல் மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சிக்கான இலாப நோக்கற்ற மையத்தின் (CREA) ஆய்வாளர் சுனில் தஹியா, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். "தொற்றுநோயில் இருந்து நாம் பின்வாங்கும்போது, தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தை வலுப்படுத்துவதும், நிலக்கரி-மின் நிலையங்களில் இருந்து உமிழ்வைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிப்பதும் முக்கியம்" என்றார்.

நிலக்கரி மின் நிலையங்களில் இருந்து வெளிப்படும் உமிழ்வுகள், காற்று மாசுபாட்டின் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்; நிலக்கரி சக்தியை விரிவுபடுத்துவது இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களில் 60% அதிக அகால மரணங்களுக்கு வழிவகுக்கும் என்று 97 நகரங்களைச் சேர்ந்த உலகளாவிய வலையமைப்பான C40 சிட்டீஸ் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவின் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் ஐம்பத்தைந்து சதவீதம், ஐந்து பெரு நகரங்களில் – டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா– 500 கி.மீக்குள் உள்ளது, இது நகர்ப்புறவாசிகளின், குறிப்பாக இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்று அறிக்கை கூறுகிறது.

"காற்றின் தரம் மோசமடைந்து வருவதில் நிலக்கரியின் தாக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா தெளிவான திட்டங்களை அமைக்கவில்லை என்றாலும், நிலக்கரியை படிப்படியாக குறைக்க தொடர்ந்து அழுத்தம் இருக்கும்," என்று, மந்தன் அத்யாயன் கேந்திரா என்ற ஆராய்ச்சி அமைப்பின் ஆய்வாளர் ஸ்ரீபாத் தர்மாதிகாரி கூறினார்.

"காற்று மாசுபாட்டின் ஆரோக்கிய அம்சம் சுற்றுச்சூழல் கொள்கைகளில் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய ஒன்று," என்று, சுற்றுச்சூழல் நீதி ஆர்வலர் மற்றும் இந்தியாவில் தீங்கு விளைவிக்காத சுகாதாரத்துடன் காலநிலை மற்றும் ஆரோக்கியத்திற்கான பிரச்சாரகர், ஸ்வேதா நாராயண் கூறினார். "அனல் மின் நிலையங்களுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, பொது சுகாதாரத்தைப் பார்க்கத் தவறிவிட்டது மற்றும் மாசுபடுத்தும் ஆலைகளுக்கான சுகாதார தாக்க மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தைச் சுற்றி வளர்ந்து வரும் வேகம் உள்ளது" என்றார்.

உறுதியான சுகாதார உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளித்தல்

காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவாக உயரும் வெப்பநிலை மற்றும் மாற்றப்பட்ட மழைப்பொழிவு முறைகள் ஆகியவை டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா, மலேரியா போன்ற தொற்று நோய்களைப் பரப்புவதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்குகின்றன; இது அதிக இறப்புகள், பயிர் தோல்விகள், மனநலப் பிரச்சனைகள், கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள் மற்றும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் தொடர்பான நோயுற்ற தன்மை ஆகியவற்றிற்கும் வழிவகுக்கும் என்று அக்டோபர் 2021 இல் முன்பே கட்டுரையில் தெரிவித்திருந்தோம்.

"சுகாதார அமைப்பின் பின்னடைவைக் கட்டியெழுப்புவதில், நாம் அங்கு இல்லை," என்று நாராயண் மேலும் கூறினார். "வெள்ளம் அல்லது சூறாவளிகளின் போது அவ்வப்போது தலையீடு உள்ளது, ஆனால் தீவிர வானிலையின் வழக்கமான நிகழ்வுகளைத் தாங்கக்கூடிய ஒரு உள்கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் அவசியம்" என்றார்.

2015 ஆம் ஆண்டில், இந்தியா தேசிய சுகாதாரத் திட்டத்தைக் கொண்டு வந்தது, இது காலநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கான தேசிய செயல்திட்டத்தை உள்ளடக்கியது, இது மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் சுகாதாரத் தயார்நிலை மற்றும் பதிலை வலுப்படுத்தும் நோக்கத்துடன் முன் எச்சரிக்கை அமைப்புகளையும் சுகாதார கண்காணிப்பையும் உருவாக்கியது மற்றும் தீவிர வெப்பத்தை தணிக்கும்.

டிசம்பர் 2021 இல் வரவிருக்கும் காலநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கான தங்கள் செயல் திட்டங்களை மாநிலங்கள் ஒன்றிணைத்து வருகின்றன. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த, 2022 ஆம் ஆண்டில் அவை எவ்வாறு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன என்பதைப் பார்ப்பது மாநிலத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளைப் பார்ப்பது முக்கியம்" என்று நாராயண் கூறினார்.

பிளாஸ்டிக் தடையை பயனுள்ளதாக்குதல்

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) அறிக்கையின்படி, நாட்டில் ஒவ்வொரு நாளும் 25,940 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. ஆகஸ்ட் 2021 இல், சுற்றுச்சூழல் அமைச்சகம், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகளை அறிமுகப்படுத்தியது, இது 2022 இல் செயல்படுத்தப்படும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளா ஸ்டிக்கை தடை செய்ய உள்ளது.

ஜூலை 1, 2022 முதல் பிளாஸ்டிக், பாலிஸ்டிரீன் மற்றும் விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன் போன்ற இயர்பட்கள், தட்டுகள், கோப்பைகள், கண்ணாடிகள் மற்றும் பேக்கிங் பிலிம்கள் போன்ற சில ஒற்றைப் பயன்பாட்டுப் பொருட்களைத் தயாரிப்பது, விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. கேரி பேக்குகள், செப்டம்பர் 30, 2021 முதல், தற்போதைய 50 மைக்ரான்களைக் காட்டிலும், குறைந்தபட்சம் 75 மைக்ரான் தடிமனாகவும், 2022 டிசம்பர் 31 முதல் 120 மைதற்போதைய 50 மைக்ரான்களைக் காட்டிலும் இருக்க வேண்டும்.

2019-20 ஆம் ஆண்டில், இந்தியா ஆண்டுக்கு சுமார் 3.4 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கியது. இது நாடு தழுவிய முதல் கட்டமாக இருக்கும் என்றாலும், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் ஏற்கனவே பிளாஸ்டிக் தடை தீர்மானங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. உதாரணமாக, 1998 இல், சிக்கிம் அரசாங்கம் நாட்டின் முதல் பிளாஸ்டிக் பை தடையை நிறைவேற்றியது. கடந்த பத்தாண்டுகளில், 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிளாஸ்டிக் கேரி பைகளுக்கு முழுமையான அல்லது பகுதியளவு தடை விதித்துள்ளன.

முன்னதாக 2011 ஆம் ஆண்டில், மத்திய அமைச்சகம், பிளாஸ்டிக் கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகள்) 2011 ஐ அறிவித்தது, இது குட்கா, புகையிலை மற்றும் பான் மசாலா பொட்டலம் அல்லது விற்க பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய முன்மொழிந்தது. இருப்பினும், மத்திய மாசுகாட்டுப்பாட்டு வாரியத்தின் 2012-13 ஆண்டு அறிக்கை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் விதிகள் "தீவிரமாக" செயல்படுத்தப்படவில்லை மற்றும் பிளாஸ்டிக் பைகள் கண்மூடித்தனமாக பயன்படுத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் (OA 85/2020) தொடர்ந்த வழக்கில், பிளாஸ்டிக் நெய்யப்பட்ட மற்றும் நெய்யப்படாத கேரி பேக்குகள் தயாரிப்பது தொடர்ந்து பொதுமக்களின் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதிராக மனுதாரர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். மெல்லிய படல பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்கு மாற்றாக இந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மட்டுமே இருந்தன. நவம்பர் 2021 அமர்வில் உள்ள பெஞ்ச், பிளாஸ்டிக் தடை விதிகளை மீறும் குற்றவாளிகளுக்கு அபராதம் விதிக்க, அரசாங்கம் கண்காணித்து பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், நோட்டீஸ் தடை விதிப்பது மட்டும் போதாது என்று கூறியது.

மாநில மற்றும் நகர காலநிலை திட்டங்களை செயல்படுத்துதல்

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அரசு குழு (IPCC), காலநிலை மாற்றம், உலகினை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அதன் அறிக்கை காட்டுகிறது. உதாரணமாக, இந்தியாவில் பருவமழை நிச்சயமற்றதாகிவிட்டது; குறிப்பாக முக்கியமான காரீஃப்-விதைப்பு மாதங்களில் ஜூலை மற்றும் ஆகஸ்ட், இது இந்தியாவின் பல மாநிலங்களில் நெல் அறுவடையை பாதித்துள்ளது என்று, இந்தியா ஸ்பெண்ட் அக்டோபர் 2021 இல் கட்டுரை வெளியிட்டது. 2021 ஆம் ஆண்டில் கோடை பருவமழைக்கு முன்பு பெய்த தக்டே மற்றும் குலாப் போன்ற புயல்கள் அதிகரித்துள்ளன மற்றும் மேலும் அதிகரிக்கத் தயாராக உள்ளன என்று, இந்தியா ஸ்பெண்ட் மே 2021 கட்டுரை தெரிவித்தது.

மோசமான கணிப்புகளைத் தவிர்ப்பதற்காக, 2099 ஆம் ஆண்டுக்குள் வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த ஒருமித்த கருத்து உள்ளது, ஆனால் அதே நேரத்தில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டிய அவசியம் மிகவும் முக்கியமானது மற்றும் அவசரமானது. சூறாவளி புயல்கள், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகளை சமாளிக்க முக்கியமான உள்கட்டமைப்பை உருவாக்குவது காலநிலை மாற்ற தழுவல் அடங்கும்.

இந்தியா 2015 இல் தொடங்கப்பட்ட காலநிலை மாற்றத்திற்கான பிரத்யேக தேசிய தழுவல் நிதியை (NAFCC) கொண்டுள்ளது. இது, காலநிலை மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டத்தின் (NAPCC) நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கூட்டாட்சி மானியம் மற்றும், காலநிலை மாற்றம் குறித்த மாநில செயல் திட்டங்களை (SAPCC) செயல்படுத்துவதிலும், தழுவல் திட்டங்களை செயல்படுத்துவதிலும் மாநில அரசாங்கங்களை ஆதரிப்பதாகும். தேசிய மற்றும் மாநில செயல் திட்டங்கள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு பதில் அளிப்பதற்கான செயல்திட்டத்தின் ஒரு கட்டமைப்பாகும் மற்றும் இவை முறையே 2008 மற்றும் 2009 இல் நடைமுறைக்கு வந்தது.

இந்தியாவில் உள்ள முப்பத்தி இரண்டு மாநிலங்கள், காலநிலை மாற்றம் குறித்த மாநில செயல் திட்ட வரைவு செயல்முறையைத் தொடங்கியுள்ளன. பிராந்திய காலநிலை பாதிப்பை வரைபடமாக்குவதில் கணிசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இவ்வளவு பெரிய அளவில் கொள்கை வகுக்கும் போது, ​​இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் காலநிலை செயல் திட்டத்தைக் கொண்ட ஒரே நகரம் மும்பை. அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் செயல்திட்டங்களில் கவனம் செலுத்தும் தனது மாநில செயல் திட்டத்தை, அடுத்த மாதம் சமர்ப்பிக்க டெல்லி திட்டமிட்டுள்ளது என்று ஒரு செய்தி அறிக்கை கூறுகிறது.

ஒரு கருத்தியல் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு மாநிலங்களால் அந்தந்த காலநிலை மாற்றம் குறித்த மாநில செயல் திட்டங்களில் முன்மொழியப்பட்டுள்ளது, ஆனால், நடைமுறையில், காலநிலை மாற்றம் குறித்த மாநில செயல் திட்டங்களின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகளின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு கிட்டத்தட்ட இல்லை என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) 2018 அறிக்கை தெரிவிக்கிறது, இது, மாநில காலநிலை செயல் திட்டங்களின் செயல்திறன் பற்றியது.

"மாநில செயல் திட்டங்களின் நோக்கம் பெரும்பாலும் மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்டது மற்றும் மாவட்ட மற்றும் நகர மட்டங்களில் மேலும் பரவலாக்கம் பற்றிய தெளிவான பார்வை இருக்க வேண்டும்" என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் துணை நிரல் மேலாளர் வினீத் குமார் கூறினார்.

மாநில செயல் திட்டங்களின் விரிவான மதிப்பீட்டிற்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் முக்கியமானது மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு எதிராக அவை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News