ஊரடங்கில் 60% வீட்டுப் பணியாளர்களுக்கு ஊதியம் இல்லை; வறுமை, கடன், பசியை எதிர்கொண்டனர்

2020 ஊரடங்கு மற்றும் மாநிலங்களின் பகுதியளவு முடக்கங்கள், இந்தியாவில் லட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்களை பாதித்துள்ளது, பெண் தொழிலாளர்கள் நெருக்கடியின் சுமையை தாங்கியுள்ளனர்

Update: 2021-09-13 00:30 GMT

பெங்களூரு: "நாங்கள் பசியுடன் இருக்கும்போது கூட, எங்களால் ஏன் சாப்பிட முடியவில்லை என்பது, என் குழந்தைகளுக்கு புரியவில்லை" என்று, பெங்களூரின் சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த, வீட்டு பணிப்பெண் ஆர். சரஸ்வதி கூறி, கோவிட் -19 ஐ தொடர்ந்து 2020 மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கின் போது எதிர்கொண்ட கடினமான நாட்களை நினைவு கூர்ந்தார். தொற்றுநோய்க்கு முன்பு சரஸ்வதி, ஆறு வீடுகளில் பணிபுரிந்து வந்தார், ஊரடங்கின் போது ஒருவரைத் தவிர, அவரது அனைத்து வீட்டு எஜமானர்களும் அவருக்கான ஊதியத்தை நிறுத்தினர்.

மாதச் சம்பளம் ரூ .10,000 இல் இருந்து ரூ .500 ஆகக் குறைந்த நிலையில், சரஸ்வதியும் அவரது மூன்று குழந்தைகளும், அடிக்கடி பசியோடு உறங்க வேண்டியிருந்தது. இந்த பணத்தை கொண்டு நான் எப்படி என் குடும்பத்திற்கு உணவளிப்பது? அதைத் தாங்குவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது," என்று அவர் கூறினார். 30 வயதான சரஸ்வதி, 10 வருடங்களாக சாந்தி நகரில் வீட்டு வேலைகளை செய்து வருகிறார், அவரது பணியில் கடந்த ஆண்டு மிக மோசமானதாக இருந்தது.

கடந்த 2020 ஊரடங்கு மற்றும் சில மா நிலங்களில் பகுதியளவு முடக்கம் போன்றவை, இந்தியாவில் லட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்களை பாதித்துள்ளது, குறிப்பாக பெண் தொழிலாளர்கள் நெருக்கடியின் சுமையை தாங்கியுள்ளனர் என்று, சிந்தனைக் குழுக்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் நடத்திய பல ஆய்வுகள் கூறுகின்றன.

டிசம்பர் 2020 முதல், ஜனவரி 2021 வரை நேர்காணல் செய்யப்பட்ட 795 வீட்டுப் பணியாளர்களில், கிட்டத்தட்ட 60% பேர் ஊரடங்கின் போது தங்களது எஜமானர்கள் கூலியை தரவில்லை என்று கூறியதாக, சுயதொழில் மகளிர் சங்கம் (SEWA) நடத்திய கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 டிசம்பர் மாதத்தில், 2020 ஊரடங்கு பிறப்பித்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, 31% வீட்டுப் பணியாளர்கள் வேலைவாய்ப்பை பெறவில்லை மற்றும் குறைவானவர்களே தங்கள் எஜமானர்களிடம் இருந்து உதவிகளை பெற்றதாக, புதுடெல்லி மற்றும் குரியம், ஹரியானா பகுதிகளில் உள்ள 75 தொழிலாளர்களிடம் தொலைப்பேசி வாயிலாக நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இது, எகனாமிக் அண்ட் பொலிடிகல் (EPW) வார இதழில் வெளியாகி இருக்கிறது. இந்த தொழிலாளர்களில், 29% பேர் தங்கள் குடும்பத்தில் உள்ள ஒரே சம்பாதிக்கும் உறுப்பினர்கள், 21% ஒரு வயதான குடும்ப உறுப்பினரை கவனித்துக்கொண்டனர், அதே நேரத்தில் 20% பேர் தீவிர உடல்நலக் குறைபாடு உள்ள ஒருவரை கையாண்டனர். வேறு எந்த வேலையும் தெரியாதவர்களால், மாற்று வருமான ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஊரடங்கு, இந்தியாவின் முறைசாரா துறையை கடுமையாக பாதித்தது, இந்தியாவில் உள்ள 90% தொழிலாளர்களைக் கொண்ட கிட்டத்தட்ட 419 மில்லியன் முறைசாரா தொழிலாளர்களை அச்சுறுத்தி இருக்கிறது என்று, ஆகஸ்ட் 3, 2021 அன்று மக்களவையில் வழங்கப்பட்ட தொழிலாளர் நிலைக்குழுவின் 25 வது அறிக்கை தெரிவித்தது. பழைய முன்னுதாரண ஆதாரங்களை மேற்கோள் காட்டி, "முறைசாரா துறையில் குறிப்பிடத்தக்க வருமான இழப்புகள், பாதிப்புக்குள்ளானவர்களை நெருக்கடிக்குள் ஆழ்த்துகிறது" என்றும், முதல் அலையை விட இரண்டாவது அலை மிகவும் கடுமையானது என்றும் அது கூறியது.

வீட்டுப்பணி செய்வோர் சமூகம் கடுமையாக பாதிக்கப்பட்டது, மேலும் 2021 இல் கூட தாமதமான மற்றும் குறைந்த அளவிலான பொருளாதார மீட்பைப் பதிவு செய்தது. பரவுதல் மற்றும் ஊரடங்கு விதிகள் பற்றிய அச்சங்கள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு பறிபோனது. சில வீட்டுப் பணியாளர்கள், தொழிலாளர் துறை அல்லது தொழிற்சங்கங்களில் பதிவு செய்துள்ளனர், அவர்களின் ஊதியம், வேலை நேரம் அல்லது பணியிடத்தை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் ஏதும் இல்லை. இவை அனைத்தும் கடன், வறுமை மற்றும் தொல்லைகளுக்கு அவர்களின் பாதிப்பை அதிகரித்ததை நாங்கள் கண்டறிந்தோம்.

Full View


Full View

வருமான இழப்பு, வேலை ஸ்திரத்தன்மை

லக்ஷ்மி, 45, தனது முதல் பெயரை கொண்டிருப்பவர், பெங்களூரின் குமாரசாமி லேஅவுட் பகுதியில் இருபது ஆண்டுகளாக வீட்டு உதவியாளராக பணியாற்றி வருகிறார். தொற்றுநோய்க்கு முன், அவர் ஆறு வீடுகளுக்கு வேலை செய்தார் மற்றும் மாதத்திற்கு மொத்தம் 11,000 ரூபாய் சம்பாதித்தார். இப்போது, ​​ஒரு மாதத்தில் 1,500 ரூபாய்க்கு ஒரு வீட்டில் மட்டுமே வேலை செய்கிறார்.

லட்சுமியின் எஜமானர்கள் பெரும்பாலும் வாடகை குடியிருப்புகளில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள். ஆனால் அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால், அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். "நான் வேலை செய்யும் பெரும்பாலான வீடுகளில், இளங்கலை மற்றும் அவர்கள் திரும்பிச் சென்றபோது, ​​அவர்கள் ஏப்ரல்-ஜூனில் [2020] எனக்கு பணம் கொடுக்கவில்லை," என்று அவர் கூறினார். இவர்களில் மிகச்சிலரே, நகரத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

தொற்றுநோயின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது அறிவிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான ஊரடங்குகள், லாபகரமான வேலைவாய்ப்பு மற்றும் நிலையான வருமானத்தின் அடிப்படையில் உள்நாட்டு தொழிலாளர் சமூகத்தால் பல தசாப்தங்களாக கடினமாக வென்ற முன்னேற்றத்தை கொண்டு ஈடு செய்யப்பட்டதாக, ஜூன் 2020 பெங்களூரு முழுவதும் 2,396 தொழிலாளர்களிடம் நடத்திய ஆய்வு தெரிவித்தது. இந்த ஆய்வை, கர்நாடக தொழிலாளர் உரிமைகள் சங்கம் (DWRU), ப்ருஹத் பெங்களூர் க்ருஹகர்மிகார சங்கம் (BBGS) மற்றும் மாங்கேலாசா கார்மிகாரா யூனியன் உள்ளிட்ட, நான்கு ஆர்வலர் குழுக்கள் இணைந்து நடத்தின.

மார்ச் 2020 ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் 2,396 தொழிலாளர்களில் 87% பேரிடம் வேலைக்கு வர வேண்டாம் என்று கூறப்பட்டது. அவர்கள் எப்போது மீண்டும் வேலைக்கு அழைக்கப்படுவார்கள் என்பதும் தெரியவில்லை. மேலும், 91% (2,180 தொழிலாளர்கள்) ஏப்ரல் 2020 சம்பளத்தையும் இழந்தனர். பிபிஜிஎஸ் பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்ட 396 தொழிலாளர்களில் 86% (341) பேர் வேலை இழந்தனர். ஒட்டுமொத்தமாக, 50 வயதுக்கு மேற்பட்ட கிட்டத்தட்ட 50% வீட்டுப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

லக்னோ, டெல்லி, ராஞ்சி, திருவனந்தபுரம் மற்றும் அகமதாபாத்தில் உள்ள சுயதொழில் மகளிர் சங்கம் (SEWA) கணக்கெடுப்பில், ஊரடங்கிற்கு பிறகு, அவர்களின் மாதாந்திர வருவாயில் பெரும் அடி ஏற்பட்டது.


தொழிலாளர்களின் கூற்றுப்படி, சராசரி மாதாந்திர வருமானம், ஊரடங்கிற்கு முன்பு ரூ. 5,740 என்பதில் இருந்து, ஊரடங்கிற்கு பிறகு ரூ .4,841 ஆக குறைந்தது. கேரளாவில் மிகக் குறைந்த ஊதிய வீழ்ச்சியும், டெல்லி அதிகபட்சமாக 29% வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

அறிக்கையின்படி, ஒரு பகுதியில் நிலவும் விகிதம் மற்றும் பல்வேறு பணிகளைச் செய்ய எடுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில், ஊதியங்கள் தீர்மானிக்கப்பட்டன. இருப்பினும், அனைத்து தொழிலாளர்களும், தங்கள் சம்பளம் சம்பந்தப்பட்ட உழைப்போடு பொருந்தவில்லை என்று உணர்ந்ததாகக் கூறினர். பதில் அளித்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு (67%) ஒருபோதும் ஊதிய உயர்வு பெறவில்லை என்று ஒப்புக்கொண்டனர், அவர்களில் 25% மட்டுமே தங்களுக்கு ஆண்டு உயர்வு கிடைத்ததாகக் கூறினர். அவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் தங்கள் சம்பளத்தைத் தவிர வேறு எந்த சலுகைகளையும் பெறவில்லை.

குறையும் உணவு உட்கொள்ளல், அதிகரிக்கும் குழந்தை பராமரிப்பு சுமை

குறைக்கப்பட்ட உணவு நுகர்வு என்பது ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடியின் போது ஏற்பட்ட ஊதிய இழப்பின் நேரடி தாக்கமாகும். "தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, அவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கினார்கள்" என்று, சுயதொழில் மகளிர் சங்கத்தின் (SEWA) தேசிய செயலாளர் மணலி ஷா கூறினார். மேலும், ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும் ஊரடங்கின் போது, அவர்களுக்கு தகுதியான ரேஷனை அணுக முடியவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

கணக்கெடுப்பு மாதிரியின் சராசரி வயது, 40 ஆகும், மற்றும் 725 தொழிலாளர்களில் 47% பேர், 0-14 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையை கொண்டிருந்தனர். "குழந்தை பராமரிப்பு முறைசாரா துறைக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது, ஏனெனில் பெரும்பாலானவர்கள் தங்கள் சிறு குழந்தைகளை அவர்கள் வேலை செய்யும் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல ஊக்குவிக்கப்படவில்லை" என்று ஷா கூறினார். தொழிலாளர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணை, தங்கள் குழந்தைகளுக்கு டிஜிட்டல் கல்வியை வழிநடத்த உதவுவதில்லை என்று அவர் மேலும் கூறினார்.

மேலும், 25% க்கும் அதிகமான தொழிலாளர்களும் தங்கள் பணிச்சுமை அதிகரித்திருப்பதாக, எகனாமிக் அண்ட் பொலிடிகல் வார இதழின் ஆய்வு தெரிவிக்கிறது. "போதுமான இழப்பீடு இல்லாமல் அதிக அளவு வேலைகளைப் பெற, வீட்டு வேலை செய்பவர்களின் மோசமான நிலையை, முதலாளிகள் இப்போது தவறாகப் பயன்படுத்துகின்றனர்" என்று ஆய்வு கூறுகிறது.

சில தொழிலாளர்கள் வாழ்வாதாரச் செலவுகள் அதிகமாகவும், வரம்பற்றதாகவும் இருப்பதால், அவர்கள் வேலை செய்யும் இடத்தில் இருந்து வெகு தொலைவில் இடம்பெயர நேர்ந்தது. சாதாரணமாக போக்குவரத்து செலவுகளை சக தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வீட்டு வேலைக்காரர்கள், இப்போது தனியாக பயணம் செய்ய வேண்டியிருந்தது. இது, அவர்களின் வருவாயைப் பாதித்தது மற்றும் சிலர் தங்கள் பணியிடத்திற்கு முழு தொலைவுக்கும் நடந்து செல்லவும் விரும்பினர்.

பாரபட்சம், அக்கறையின்மை காட்டும் முதலாளிகள்

சுயதொழில் மகளிர் சங்கம் (SEWA) ஆய்வில் சராசரியாக, வீட்டு வேலை செய்பவர்கள் மாதத்தில் 27 நாட்கள் வேலை செய்தார்கள்; டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் தொடர்ந்து அதிக வேலை நாட்களை அறிவித்தது. தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இந்தியாவின் முறைசாரா உழைப்பு அதிகரித்துள்ளது. "தங்கள் குடும்பங்களை காப்பாற்ற, தொழிலாளர்கள் அதிக வருமான ஆதாரங்களுக்காக வெவ்வேறு தொழில்களில் நுழைய வேண்டும்" என்று ஷா கூறினார். பரவுதல் அல்லது நோய்த்தொற்று பற்றிய அச்சம் வீட்டுப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டை அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.


தொழிலாளர்களுக்கு என்னென்ன வசதிகள் உள்ளன என்று கேட்டபோது, ​​83% வீட்டுப் பணியாளர்கள், தங்கள் முதலாளிகள் அவர்களுக்கு குடிநீர், உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்குவதாகக் கூறினர்; 68% பேர், தங்களுக்கு கழிப்பறை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதாகவும், மற்றும் 35% ஓய்வெடுக்க ஒதுக்குப்புற இடம் இருந்தது என்றும் கூறினர். சுமார் 9% தொழிலாளர்கள் இந்த வசதிகள் எதுவும் இல்லை என்று தெரிவித்தனர். பண்டிகைகளில் "அனுமதிக்கப்பட்ட" அரை நாட்களை விட கூடுதலாக விடுப்பு எடுத்ததற்காக, தங்கள் முதலாளிகள் எப்பொழுதும் தங்கள் ஊதியத்தை குறைத்ததாக கூறினர்.

வேலையில், 81% தொழிலாளர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதாகவும், 4% வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றும் 0.3% பேர் பாலியல் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டதாக கூறியுள்ளனர்.

வீட்டு வேலை செய்பவர்கள் தங்கள் முதலாளிகளிடம் இருந்து மற்ற வகையான அக்கறையின்மை குறித்து தெரிவித்தனர். கர்நாடக தொழிலாளர் உரிமைகள் சங்கத்தின் (DWRU) உறுப்பினர் எம். சாரதா, அரசின் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கும் போது தனது முதலாளியின் விவரங்கள், அவர்களுக்காக பணிபுரிந்த ஆண்டுகள் மற்றும் அவரது ஆதார் நகல்கள் அடங்கிய ஒரு கடிதத்தை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறினார். அவரது முதலாளி அந்த விவரங்களை உடனடியாக வழங்கினார், ஆனால் அவரது சகாக்கள் அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் அல்ல, எளிதில் கிடைக்கவில்லை. "நாங்கள் எதற்கு எங்கள் விவரங்களை கொடுக்க வேண்டும் என்று முதலாளிகள் கேட்டார்கள், விவரம் கொடுத்தால், அவர்கள் எங்களை அழைத்து தொந்தரவு செய்வார்கள் என்று முதலாளிகள் நினைத்தனர்" என்று அவர் கூறினார்.

வேறு வகையான பாகுபாடுகள் இருந்தன என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர். சுயதொழில் மகளிர் சங்கத்தின் கேரளாவுக்கான செயலாளர் சோனியா ஜார்ஜ் கூறுகையில், "இரண்டாவது அலையானது, வீட்டு வேலை செய்பவர்கள் வைரஸ் தொற்றை சுமந்து செல்பவர்கல் என்று முத்திரை குத்தப்பட்டதால் கடினமாக இருந்தது. சில தொழிலாளர்கள், முதலாளிகள் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்தவர்களை அல்லது தடுப்பூசி போடாதவர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கோ அல்லது பணி அமர்த்துவதற்கோ ஆர்வம் காட்டவில்லை. ஒரு சில தொழிலாளர்கள், தங்கள் முதலாளிகளிடம் இருந்து கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களிடம் இருந்து நிதி உதவி அல்லது வேறு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று ஜார்ஜ் கூறினார்.

சட்ட முன்னுரிமை மற்றும் சிவப்பு நாடா முறை

வீட்டு வேலை செய்பவர்கள் பற்றிய தரவு இல்லாததால், நிவாரண நடவடிக்கைகளை அரசு அறிவிக்கும் போது, அந்த இடைவெளியில் அவர்களுக்கு வாய்ப்பு நழுவுகிறது. புலம்பெயர்ந்த வீட்டு வேலை செய்பவர்களின் நிலை மோசமாக உள்ளது, ஏனென்றால் அரசு விரும்பினாலும் அவர்களை எப்படி சென்றடைவது என்று தெரியவில்லை என்று ஷா கூறினார்.

இந்தியாவில் தொழிலாளர் சட்டத்தின் பகுப்பாய்வு, 'தொழிலாளி', 'முதலாளி' அல்லது 'ஸ்தாபனம்' ஆகியவற்றின் வரையறைகளில் உள்ள தடைகள் காரணமாக, வீட்டுத் தொழிலாளர்கள், பல தொழிலாளர் சட்டங்களின் வரம்பில் சேர்க்கப்படவில்லை என்பதைக் காட்டுவதாக, உலகளாவிய நெட்வொர்க் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும், முறைசாரா வேலைவாய்ப்பில் உள்ள பெண்களின் 2014 ஆராய்ச்சியான, உலகமயமாக்கல் மற்றும் ஒழுங்கமைத்தல் (Globalising and Organising - WIEGO) கூறுகிறது.

வீட்டு வேலை செய்பவர்கள் வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படுவதால், குறைந்தபட்ச ஊதிய சட்டம்- 1948 போன்ற வேலை பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் மகப்பேறு நலச்சட்டம் - 1961; தொழிலாளர் இழப்பீடு சட்டம்- 1923; மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டம்- 1979 மற்றும் பல அடிப்படை சட்டங்களில் இருந்து அவர்கள் விலக்கப்பட்டுள்ளனர்

வீட்டுப் பணியாளர்கள் (வேலைவாய்ப்பு நிலைமைகள்) மசோதா- 1959 போன்ற ஒரு விரிவான சட்டத்தின் அவசியத்தை, உலகமயமாக்கல் மற்றும் ஒழுங்கமைத்தல் அமைப்பு குறிப்பிடுகிறது, இது இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளது. "வேலைவாய்ப்பு, வேலை நிலைமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை, ஒரே நேரத்தில் ஒழுங்குபடுத்தும் ஒரு சிறப்புத் துறைச் சட்டம் தேவை. இதில் ஊதிய நிர்ணயம் மற்றும் வேலைக்கான பிற நிபந்தனைகள், தகராறுகளைத் தீர்ப்பது மற்றும் வேலைவாய்ப்பைப் பாதுகாத்தல், சமூகப் பாதுகாப்பு, குழந்தை பராமரிப்பு வசதிகள், வீட்டு வசதி, பயிற்சி மற்றும் திறன் உருவாக்கம் ஆகியன அடங்கும்.

சுயதொழில் மகளிர் சங்கத்தின் அறிக்கையில் கணக்கெடுக்கப்பட்ட கிட்டத்தட்ட 54% வீட்டுப் பணியாளர்கள், தங்களுக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும், 38% வாய்வழி ஒப்பந்தம் மட்டுமே இருப்பதாக ஒப்புக்கொண்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு ஊதியத்துடன் விடுப்பு அனுமதிக்கப்படவில்லை மற்றும் கால் பகுதிக்கு மட்டுமே மாத விடுப்பு கிடைத்தது என்றும் அவர்கள் சொன்னார்கள்.

அரசிடம் இருந்து நிவாரண நடவடிக்கைகள்

வாரணாசியில் வீட்டு வேலை செய்யும் ரோஷ்னி பாரதி, கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் எப்படி ஊதியம் பெறவில்லை என்பதை நினைவு கூர்ந்தார், அதன்பிறகு எப்போதுமே ஊதியக் குறைப்பை அனுபவித்தார். பிரதம மந்திரி மந்திரி ஜன் தன் யோஜனா அல்லது பொது விநியோக அமைப்பு போன்ற எந்த அரசாங்கத் திட்டத்தின் கீழும் அவர் பதிவு செய்யப்பட்ட பயனாளியாக இல்லை.

ஐ.டபிள்யூ.டபிள்யூ.ஏ.ஜி.இ.நேர்காணல்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளில், ரேஷன் கார்டுகள் மற்றும் பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தில் இருந்து பயனாளிகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் இல்லாததால், அவர்களில் ஒரு சிறிய சதவீதத்தினர் மட்டுமே உள்ளனர். அவர்களிடம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள அட்டைகள் (மானிய உணவு தானியங்களை அணுகத் தேவையானது) அல்லது பல்வேறு சலுகைகளுக்கான சாதிச் சான்றிதழ்கள் இல்லை.

கேரளாவைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள், கேரள சமூகப் பாதுகாப்பு நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். இதனால் ஓய்வூதியம், சுகாதார உதவி, குழந்தைகளுக்கான கல்வி உதவி மற்றும் தொற்றுநோய்களின் போது சிறிய ஆதரவு ஆகியவற்றிற்கு உரிமை உண்டு என்று அறிக்கை கூறுகிறது. இருப்பினும், உத்தரபிரதேசத்தில், தொழிலாளர்களுக்கு, அரசின் எந்த திட்டங்கள் பற்றியும் தெரியாது.

கர்நாடக அரசு, 2021 ஜூன் மாதத்தில், 11 வகை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒருமுறை ரொக்க நிவாரணமாக அறிவித்தது, இதில் வீட்டு வேலைக்காரர்களும் அடங்குவர். சாரதாவின் கூற்றுப்படி, அவர்களின் தேவைகளில் ஒன்று ரேஷன் கார்டு மற்றும் ஒவ்வொரு தொழிலாளியும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் இல்லை. "எங்களிடம் குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களிடம் மாநில ரேஷன் கார்டுகள் உள்ளன. அதனால்தான் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன". இதை ஒப்புக் கொண்டு, இந்த இடைவெளியைக் குறைக்க 2020 இல் ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. ஒரு சிலர் தவறான ஆதார் அட்டை எண்களை வைத்திருப்பதற்காக நிராகரிக்கப்பட்டனர். "சிலர், குறிப்பாக யூனியன்-கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தத் தொகையைப் பெற்றுள்ளனர்," என்று அவர் கூறினார். யூனியன் கார்டு வைத்திருப்பவர்கள், கர்நாடக தொழிலாளர் உரிமைகள் சங்கத்தில் (DWRU) பதிவு செய்யப்பட்ட வீட்டுப் பணியாளர்கள் ஆவார்கள்.

கர்நாடக தொழிலாளர் உரிமைகள் சங்கத்தின் இந்த பண நிவாரண நடவடிக்கையை அணுகுவதால் சிக்கல்கள் நிறைந்ததாக உள்ளது. "அவர்கள் வேலைக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கும்படி கேட்கிறார்கள். நாங்கள் அதை கேட்டபோது, ​​அவர்கள் முதலாளிகளால் சான்றளிக்கப்பட்ட கடிதங்கள் மற்றும் முகவரி சான்றுகளை தர ஒப்புக்கொண்டனர் என்று, யூனியனுடன் தொடர்புடையவராக சமூக ஆர்வலர் கே. ராதா கூறினார். பெரும்பாலான தொழிலாளர்கள், பல ஆண்டுகளாக தங்கள் வீட்டில் வேலை செய்தாலும், அவர்களுக்கு இந்த விவரங்கள் தெரியாது என்று அவர் கூறினார்.

நகராட்சி அதிகாரிகள், தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லாமல் நிவாரண நடவடிக்கைகளைச் செயல்படுத்த முடியாது என்று வாதிட்டனர். "ஒப்புதல் செயல்முறை மெதுவாக இழுத்துச் செல்லப்பட்டாலும் வீட்டுத் தொழிலாளர்களும் தூணில் இருந்து தூணுக்கு ஓட வைக்கப்படுகிறார்கள்" என்று ராதா கூறினார்.

சரஸ்வதிக்கு, இவ்விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. "இப்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், அவர்கள் என்னை மீண்டும் வேலைக்கு அழைத்து எனக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்," என்று அவர் தனது முன்னாள் முதலாளிகளை பற்றி கூறினார்.

குறிப்பு: இந்த கட்டுரையில் , இன்னும் வெளியிடப்படாத "முறைசாரா தொழிலாளர்களுக்கான எதிர்கால வேலை பற்றிய தேசிய ஆய்வு" (National Study on Future of Work for the Informal Workers) தரவுகள் அடங்கும், இது விரைவில் வெளியிடப்பட உள்ளது. எனவே, இக்கட்டுரையை பிற தளங்கள் / சமூக ஊடகங்களில் பகிர விரும்பும் ஆசிரியர்கள்/வாசகர்கள், தயவுசெய்து கட்டுரை/பதிவுகளின் தொடக்கத்தில்/முடிவில் இந்த பொறுப்பு துறப்பை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News