மக்களவையில் அதிக இடையூறு சந்தித்த ஐ.மு.கூ-2; வேலைநேரத்தில் 3ல் 1 பங்கு வீணடிப்பு; தற்போதைய தே.மு.கூ. சற்று மேல்

Update: 2019-03-08 00:30 GMT

மும்பை: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) இரண்டாவது முறை ஆட்சி புரிந்த போது தான் நாடாளுமன்ற மக்களவை (கீழவை) மிக அதிக இடையூறுகளை சந்தித்தது. அந்த காலகட்டத்தில் (2009-2014), பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) பிரதான எதிர்க்கட்சி கட்சியாக இருந்தபோது, மக்களவையின் திட்டமிடப்பட்ட வேலை நேரங்களில் 37%, இடையூறுகளால் இழக்க நேரிட்டது.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ. ) ஆட்சியில் இருக்கும் தற்போதைய 16வது மக்களவையானது, இரண்டாவதாக (16%) வேலை நேரங்களை இழந்துள்ளது. இருப்பினும், ஐ.மு.கூ. 2 அரசைவிட 20% அதிகமான உற்பத்தி நேரத்தை இது நிர்வகித்துள்ளது.

இத்தகவல்கள் சமீபத்தில் மக்களவை வெளியிட்ட பணி குறித்த அறிக்கையில் இருந்து தெரிய வந்துள்ளது; அத்துடன், தற்போதைய மக்களவையின் செயல்பாடுகள் குறித்து லாபநோக்கற்ற பி.ஆர்.எஸ். சட்ட ஆராய்ச்சி அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.

சமீபத்தில் நடைபெற்ற இரண்டு மக்களவை கூட்ட அலுவல் இடையூறுக்கு ‘மோசடி’ அடிக்கடிகாரணமாக இருந்துள்ளதாக, மக்களவை நடவடிக்கை பதிவுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது.

எதிர்க்கட்சி அரசின் பணிக்கு கணிசமாக தடை ஏற்படுத்தியும் சம நிலையை கையாண்டும் இருந்து வந்துள்ளன. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சட்டம் தொடர்பான விவகாரங்களில் கலந்துரையாடி, விவாதித்து ஒருமித்த கருத்து எட்டப்படுதல் என்ற அடிப்படையில் செயல்படுகிறது. ஆனால் இந்திய நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வ விவாதங்கள் நடப்பதைவிட, இடையூறுகளால் அதிக பணி நேரம் தடைபடுவதையே மக்களவை செயல்பாடுகள் குறித்த எங்கள் பகுப்பாய்வு பதிவுகள் காட்டுகின்றன.

சராசரியாக, ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த மக்களவையானது 2,689 மணி நேரம் பணிபுரிகிறது. (அரசு அதன் பெரும்பான்மையை இழந்தால், மக்களவை அதன் முழு ஆயுள் காலத்திற்கு முன்பே கலைக்கப்படலாம்). ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ் மக்களவை 1,350 மணி நேரம் மட்டுமே இயங்கியுள்ளது - இது சராசரியில் பாதி. தற்போதைய தே.ஜ.கூ. ஆட்சியில் 1,615 மணி நேரம் மக்களவை இயங்கியது - இது 20% அதிகமாகும்.

முதல், இரண்டு மற்றும் மூன்றாவது மக்களவை, பி.ஆர்.எஸ். பகுப்பாய்வின்படி, சராசரியாக 3,500க்கும் அதிகமான மணிநேரம் செயல்பட்டு சிறப்பானவையாக உள்ளன.

ஐந்தாவது மக்களவை காலத்தில், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு (1971-1977), தேசிய அளவில் அவசர நிலையை 1975 இல் பிரகடனப்படுத்தி, தேர்தல்களையும் ஒத்திவைத்தது. இந்த நீட்டிப்பு காலமானது 4,000 மணி நேரத்திற்கும் அதிகமான வேலை நேரங்களை பதிவு செய்தது.

கடந்த இரு மக்களவை ஏன் மிக அதிக இடையூறுகளை சந்தித்தன?

மக்களவையில் மூன்று சந்தர்ப்பங்களில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் இடையூறை ஏற்படுத்தின. முதல்முறையாக 2015 பிப்ரவரியில் பட்ஜெட்டுக்கு முந்தைய தீர்மானம் மீது நன்றி தெரிவித்து பேசியபோது முந்தைய அரசின் வறுமை ஒழிப்புத் திட்டமான, மகாத்மா காந்தி நூறுநாள் வேலை உறுதி திட்டம் நிலையான சொத்துகளை உருவாக்காமல் “தோல்வி” அடைந்ததாக பிரதமர் விமர்சித்திருந்தபோது இடையூறை சந்தித்தார்.

இரண்டாவது முறையாக, 2016 குளிர்கால கூட்டத்தின்போது, எதிர்க்கட்சி கருப்பு பணத்தை ஆதரிப்பதாக பிரதமர் குறிப்பிட்டபோது, அமளி ஏற்பட்டு அவை அலுவல்கள் முடங்கின. கடைசியாக, 2018 பட்ஜெட் கூட்டத்தொடரில் “முன்னாள் பிரதமர் பற்றி இந்நாள் பிரதமர்” விமர்சித்தபோது, எதிர்க்கட்சிகள் இடையூறு செய்ததாக, மக்களவை பதிவுகள் தெரிவிக்கின்றன.

Source: Ministry Of Parliamentary Affairs, 2018

தற்போதுள்ள தே.ஜ.கூ. அரசில், 2018 பட்ஜெட் தொடர் (ஜனவரி - ஏப்ரல்) தான், கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து மிக அதிகமாக பாதிக்கப்பட்டது என, பி.ஆர்.ஏஸ். தெரிவிக்கிறது. மக்களவை அலுவலின் 161 மணி நேரங்களில் 127 மணி நேரம் அல்லது 79% வீணடிக்கப்பட்டது.

தற்போதைய அரசுக்கு எதிராக, 2018 பட்ஜெட் தொடரின் போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நோட்டீஸ்களை வழங்கினர். இருப்பினும், அமளி, இடையூறு காரணமாக இந்த தீர்மானங்கள் அனுமதிக்கப்படவில்லை.

“இந்த இடையூறுகளுக்கான காரணங்கள் வேறுபட்டவை - "ஆந்திரா மறுசீரமைப்பு சட்டம், பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல், காவிரி நீர், எஸ்.சி./எஸ்.டி.தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்ப்பு ப் பட்டியல்" என்று மக்களவை பதிவுகள் கூறுகின்றன.

இந்த அமர்வுக்காக கருவூலத்தில் இருந்து செலவிட்ட தொகை ரூ.190 கோடி(27 மில்லியன் டாலர்) என, தி பைனான்ஷியல் டைம்ஸ் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. இந்த ரூ.190 கோடியை வைத்து, என்ன செய்யலாம் என்பதற்கு உதாரணம், இது 2017-18ல் மத்திய அரசால் தெலுங்கானா மாநில அரசுக்கு பிரதமந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கு (பிரதமரின் வீடு கட்டும் திட்டம்) ஒதுக்கப்பட்டது. (இத்திட்டத்தை செயல்படுத்த தவறியதால், அந்த தொகையை திரும்பச் செலுத்த தெலுங்கானா அரசு கோரப்பட்டுள்ளது).

ஐ.மு.கூ.-2 ஆட்சியின்போது ஊழல், பணவீக்கம், லோக்பால் மசோதா

இந்தியா நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் 2018 அறிக்கையை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் இழந்த நேர கால விவரங்களை, குறுக்கீடு செய்வதற்கான காரணிகளை இந்தியா ஸ்பெண்ட் மேலும் விரிவாக ஆராய்ந்தது.

முன்பே நாம் குறிப்பிட்டது போல், இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் ஐ.மு.கூ. - 2 அரசு தான் அவையில் மிக அதிக எதிர்ப்பை சந்தித்தது. காமன்வெல்த் விளையாட்டுக்கான நிதி முறைகேடு, நிலக்கரித் தட்டு விநியோகம் மற்றும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை ஆகியவற்றில் நிதியியல் முறைகேடு தொடர்பான மோசடிகள்; பணவீக்கம் மற்றும் லோக்பால் மசோதா (ஊழல் புகாரை விசாரிக்கும் அமைப்பை உருவாக்குதல்) முதன்மையான காரணங்கள்.

Source: Ministry Of Parliamentary Affairs, 2018

ஐக்கிய முற்போக்கு கூட்டணி - 2 ஆட்சியில் மிகவும் பயனற்ற மக்களவை அமர்வு, பட்ஜெட் கூட்டத்தொடர் (பிப்ரவரி- மார்ச் 2013) ஆகும். மொத்தம் 163 மணி நேரங்களில் 146 மணி நேரம், “பெட்ரோல் விலை உயர்வு, இலங்கை தமிழர் துயர், ஸ்ரீநகரில் பயங்கரவாத தாக்குதல், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுதல், சி.பி.ஐ. செயல்பாட்டில் தலையீடு, நிலக்கரி ஊழல், லடாக்கில் சீனாவில் தலையீடு, ரயில்வே வாரியத்தில் பதவி உயர்வுக்கு லஞ்சம், உத்திரப்பிரதேச சட்ட ஒழுங்கு நிலை போன்றவை " என மக்களவை பதிவுகள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய மக்களவையின் 14 அமர்வுகளிலும் அமளியும், ஒத்திவைப்புகளாலும் அரசின் கருவூலத்தில் இருந்து செலவிடப்பட்ட தொகை ரூ.199.9 கோடி (28 மில்லியன் டாலர்) என்று, இந்தியா ஸ்பெண்டின் 2013 ஆம் ஆண்டு பகுப்பாய்வு காட்டுகிறது. 800 மணி நேரம் ஒத்திவைப்புகள் மற்றும் அமளியால் இழக்க நேரிட்ட்டது. இதன் மதிப்பான ரூ.200 கோடி, அந்த ஆண்டில் பணியாளர்களுக்கு பயிற்சி வசதிகளை மேம்படுத்துவதற்காக ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

(திவாரி, மும்பை டி.ஐ.எஸ்.எஸ்.சில் ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பங்களிப்பாளர்; சால்வி, இந்தியா ஸ்பெண்ட் மூத்த பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News