நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அரசு முடிவுகள்: 2022-ம் ஆண்டில் குற்றவியல் நீதித்துறையின் மீது ஒரு பார்வை

தேசத்துரோகம், ஜாமீன் சட்டம் மற்றும் குற்றவியல் சட்ட சீர்திருத்தங்கள் - இந்தியாவில் குற்றவியல் நீதிக்கான சில முக்கிய அறிவிப்புகளைப் பார்க்கிறோம்;

Update: 2022-12-27 00:30 GMT

பெங்களூரு: 2022 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பல அரசு முடிவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற கண்காணிப்புகள் மற்றும் தீர்ப்புகள் இந்தியாவின் நீதி அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன அல்லது ஏற்படுத்தும். இவை நீதித்துறையின் செயல்பாடு, காவல்துறையின் செயல்திறன், தன்னிச்சையான கைதுகள் மற்றும் நெரிசல் மிகுந்த சிறைச்சாலை அமைப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

நீதி அமைப்பைப் பற்றிய இந்த ஒரு வருடத்தின் இறுதிப் பார்வையில், குற்றவியல் நீதி செயல்முறையை பாதிக்கக்கூடிய ஐந்து முக்கிய உச்ச நீதிமன்றம் மற்றும் அரசின் முடிவுகளை நாங்கள் ஆராய்கிறோம்.

ஜாமீன் சட்டம், விசாரணைக் கைதிகளின் விடுதலை குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவு

ஜாமீன் வழங்கும் செயல்முறையை சீரமைக்க தனி ஜாமீன் சட்டத்தை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்குமாறு, ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

உலகிலேயே அதிக விசாரணைக்கு உட்பட்ட மக்கள் எண்ணிக்கை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய சிறைகளில் உள்ள மொத்த கைதிகளில் 76% பேர் விசாரணைக்காக காத்திருக்கின்றனர், இது உலக சராசரியான 34% உடன் ஒப்பிடுகையில் சாதகமாக இல்லை.

பல தசாப்தங்களாக குற்றவியல் நீதி அமைப்பில் சிக்கல்களை ஏற்படுத்திய இந்திய சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகளின் பிரச்சனையும் மக்கள் நெரிசலுக்கு ஒரு காரணம். நவம்பர் 2022 இல், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்தியாவின் சிறைகளில் நெரிசல் பிரச்சனையை எடுத்துக்காட்டினார்: "நாம் புதிய சிறைகளை உருவாக்குவதற்கு பதிலாக இருக்கும் சிறைகளை மூட வேண்டும்" என்று முர்மு கூறினார்.

ஜனாதிபதி முர்முவின் உரை நிகழ்ந்த நிலையில், ஜாமீன் வழங்கப்பட்டு, ஜாமீன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகள் பற்றிய தகவல்களை அளிக்குமாறு மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நவம்பர் 2022 லைவ் லா (Live Law) அறிக்கையின்படி, மாநிலங்கள் தொடர்புடைய தரவை தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திற்கு (NALSA) அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நீதி அறிக்கையின் (India Justice Report) தலைமை ஆசிரியரும், காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சியின் மூத்த ஆலோசகருமான மஜா தருவாலா, "நீதிமன்றம் சரியான நடவடிக்கையை எடுத்துள்ளது. கைதுகள் மற்றும் காவல் நீட்டிப்பு வழக்குகள் மற்றும் ஜாமீன் விதிகளை சிந்தித்துப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட வேண்டிய செயல்முறைகள் பற்றிய வழிமுறைகள் உள்ளன, ஆனால் இவை காவல் துறையிலும் நீதித்துறையிலும் நேரடியாகப் புகுத்தப்பட வேண்டும்", என்றார்.

தீர்ப்பு நடைமுறையில் தாமதம், ஜாமீன் விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான ஆதரவு இல்லாமை, அல்லது ஜாமீன் அமைப்பில் ஜாமீன் நிபந்தனைகளுக்கு இணங்க இயலாமை ஆகியவை நீண்டகால சிறைவாசத்தின் பெரும்பாலான வழக்குகளுக்கு பங்களிக்கின்றன என்று டெல்லியின் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பிராஜெக்ட் 39-A, ஃபேர் டிரயல் ஃபெல்லோஷிப் திட்டத்தின் திட்ட இயக்குநர் மேதா தியோ கூறினார்.

ஆனால், ஜாமீன் வழங்குவதில் தாமதத்திற்கு வழிவகுத்த சிக்கல்களை, அமைப்பு கண்டிப்பாக அடையாளம் காண வேண்டும் என்று அவர் கூறினார். "இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கப்படாவிட்டால், உத்தேசிக்கப்பட்ட விளைவுகளை அடையலாம் அல்லது அடையாமல் போகக்கூடிய நிகழ்வுகளின் அடிப்படையில் மட்டுமே தீர்வுகளை வழங்க முடியும்" என்றார்.

ஜூலை 16 மற்றும் ஆகஸ்ட் 2022-க்கு இடையில் நடத்தப்பட்ட தேசிய சட்ட சேவைகள் ஆணைய பிரச்சாரத்தின் கீழ், மாவட்ட அளவிலான விசாரணைக் குழுவின் (UTRCs) தகுதியான கைதிகளை அடையாளம் காணும் அடிப்படையில், கிட்டத்தட்ட 25,000 கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் தரவுகளின்படி, மாவட்ட அளவிலான விசாரணைக் குழுவின் முடிவின் காரணமாக, சிறைவாசிகளின் எண்ணிக்கை 5.7 சதவிகிதம் குறைந்து 124.3% ஆகவும், விசாரணைக்குட்பட்டவர்களின் விகிதம் 4.5 சதவிகிதம் குறைந்து 72.6% ஆகவும் உள்ளது.

Full View

"விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முன், நீதி அமைப்பின் நடைமுறை மற்றும் கலாச்சாரம் முழுவதும் இது மாற்றங்களை எடுக்கும், அதன் விளைவாக, அதிக கூட்ட நெரிசல் கவனிக்கப்படுகிறது" என்று தருவாலா கூறினார்.

தேச துரோக சட்டத்தை கைவிடும் உச்ச நீதிமன்றம்

மே 2022 இல், உச்ச நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 124A இன் கீழ், தேசத்துரோகக் குற்றத்திற்கான வழக்குகளைப் பதிவு செய்வதைத் தவிர்க்குமாறு மாநிலங்களுக்குத் தெரிவித்தது. 1860 இல் முதன்முதலில் நிறைவேற்றப்பட்ட தேசத்துரோகச் சட்டம், பிரிட்டீஷாரால் எதிர்ப்பை அடக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது. இது "அரசு மீது அதிருப்தியை தூண்டும் அல்லது தூண்ட முயற்சிக்கும்" எவருக்கும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையுடன் அபராதத்துடன் அல்லது இல்லாமல் தண்டனையை வழங்குகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, தொடர்ந்து வந்த இந்திய அரசுகளால் இதேபோன்ற விளைவுக்கு இது பயன்படுத்தப்பட்டது.

1973 ஆம் ஆண்டில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (CrPC) மாற்றங்களுக்குப் பிறகு, பிரிவு 124A இன் கீழ் வாரண்ட் இல்லாமல் கைது செய்ய காவல்துறை அனுமதிக்கப்பட்டது. அரசாங்கம் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளால் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

மார்ச் 2021 பதிலில், 2015 முதல் 2019 வரை, 501 பேர் பிரிவு 124A இன் கீழ் கைது செய்யப்பட்டனர், ஆனால் ஒன்பது பேர் அல்லது 2% மட்டுமே குற்றவாளிகள் என்று அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு தெரிவித்தது.

சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் மற்றும் சட்ட ஆணையத்திடம் தேச துரோக சட்டத்தை கைவிடுவது மற்றும் ஜாமீன் சட்டம் குறித்த அவர்களின் கருத்துகளை, இந்தியா ஸ்பெண்ட் கேட்டுள்ளது. அங்கிருந்து பதில் கிடைத்ததும் இக்கட்டுரையை புதுப்பிப்போம்.

தேசத்துரோகம் பற்றிய 2018 ஆலோசனைக் கட்டுரையில், சட்ட ஆணையம், "சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்துரிமையின் ஒவ்வொரு பொறுப்பற்ற நடைமுறையையும் தேசத்துரோகம் என்று அழைக்க முடியாது" என்று குறிப்பிட்டது. மற்றும் பிரிவு 124A "எந்தவொரு செயலின் பின்னணியிலும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் அல்லது வன்முறை மற்றும் சட்டவிரோத வழிகளில் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும்" என்றது.

"கேதார்நாத் தீர்ப்பில் 124A பிரிவின் வரம்பு உச்ச நீதிமன்றத்தால் சுருக்கப்பட்டாலும், காவல்துறை தீர்ப்பைப் பற்றி அறியாதது போல் தெரிகிறது அல்லது வேண்டுமென்றே புறக்கணிக்கிறது" என்று, பெங்களூரைச் சேர்ந்த சட்டம் மற்றும் நீதி சீர்திருத்த சிந்தனைக் குழுவான தக்‌ஷ் (DAKSH) இன் ஆராய்ச்சி மேலாளர் லியா வர்கீஸ் கூறினார். "கைது செய்யப்பட்ட நபர்கள் பெரும்பாலும் தேசத்துரோகக் குற்றத்தைச் செய்யாததால், அதிக விடுதலை விகிதங்களை இது விளக்குகிறது" என்றார்.

"பதவி துஷ்பிரயோகம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் [தேசத்துரோக சட்டத்தின் மூலம்] உடனடி மற்றும் உறுதியான விளைவுகள் இருக்க வேண்டும்; அப்போதுதான் உண்மையான முன்னேற்றங்கள் இருக்கும்" என்று தருவாலா கூறினார்.

2010 மற்றும் 2014 க்கு இடைப்பட்ட ஆண்டு சராசரியுடன் ஒப்பிடுகையில், 2020 வரையிலான ஆறு வருட காலப்பகுதியில், தேசத்துரோக வழக்குகளில் 28% வருடாந்திர அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசத்துரோகத்தின் வலை போர்டல் ஆர்டிகிள் 14 (Article 14)இன் தரவுத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் குற்றத் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் தேசத்துரோக வழக்குகளை அகற்றுவதில் காவல்துறை 83.4% நிலுவையில் உள்ளது, இதில் முந்தைய ஆண்டிலிருந்து விசாரணை நிலுவையில் உள்ள 189 வழக்குகள் அடங்கும், அதே சமயம் நீதிமன்றத்தின் நிலுவை 97% ஆக இருந்தது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் ஆய்வு

ஜூலை 2022 இல், உச்ச நீதிமன்றம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA -பிஎம்எல்ஏ) பல்வேறு விதிகளை உறுதி செய்தது, இதில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஜாமீன் வழங்குவதற்காக குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் சுமையை (குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி எனக் கருதப்படும் விதிமுறைக்கு எதிராக), கைது செய்வதற்கும் பறிமுதல் செய்வதற்கும் அமலாக்க இயக்குநரகத்தின் (ED) அதிகாரங்கள் மற்றும் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை (அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை, முதல் தகவல் அறிக்கைக்கு (FIR) சமமானது) குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கிடைக்கச் செய்தல்.

ஆகஸ்ட் 2022 இல், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து நீதிமன்றம் இரண்டு விஷயங்களை "முதன்மையாக" மறுபரிசீலனை செய்ய முடிவு செய்தது: குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தின் அனுமானம் மற்றும் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை கிடைக்கும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கைக்கு அணுகல் வழங்கப்படாவிட்டால், அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதைக் காட்டுவதற்கான ஆதாரங்களை சமர்பிப்பது கடினம் என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

பணமோசடியின் வரையறை விரிவானது மற்றும் பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கியது, எனவே இந்தச் சட்டத்தின் கீழ் மக்களை குறிவைப்பது அமலாக்கத்துறைக்கு எளிதாகிறது என்று வர்கீஸ் கூறினார்.

"பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகள் ஜாமீனை மிகவும் கடினமாக்குகின்றன மற்றும் குற்றமற்றவர் என்ற அனுமானத்தின் முகத்தில் நிரூபணத்தின் சுமையை மாற்றியமைக்கிறது, இது நமது குற்றவியல் நீதி அமைப்பின் அடித்தளமாகும்," என்று அவர் மேலும் கூறினார். "ஆதாரத்தின் சுமையை மாற்றுவது குற்றவியல் சட்டத்தில் ஒரு கவலையளிக்கும் புதிய போக்கு" என்ரார்.

அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடற்ற அதிகாரம் மற்றும் விதிகளை துஷ்பிரயோகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய கவலை "உண்மை நிலைக்கு முரணானது, குறிப்பாக அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளும் நீதிமன்றங்களின் நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும் போது" என்று இந்தியா ஸ்பெண்டின் கேள்விக்கு அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளது.

தண்டனையின் அதிகாரங்கள் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறையின் சொத்து பறிமுதல் அதிகாரம் "நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்பட்டது மற்றும் அத்தகைய அதிகாரம் உலகெங்கிலும் உள்ள பணமோசடி தடுப்பு நிறுவனங்களுக்கு உள்ளது மற்றும் இந்திய பணமோசடி ஏஜென்சி விதிவிலக்கல்ல", பதில் கூறினார்.

பணமோசடி தடுப்புச் சட்டம் பற்றிய அமலாக்கத்துறை தரவுகளின்படி, 5,422 வழக்குகள் விசாரணையில் உள்ளன, 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 25 பேர் மார்ச் 31, 2022 வரை தண்டனை பெற்றுள்ளனர்.

Full View

முன்னதாக ஜூலை மாதம், 2012-13 மற்றும் 2021-22 க்கு இடையில் 3,985 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அரசு பதில் அளித்தது. 1,180 வழக்குகள், 2021-22 பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வழக்குகள் பதிவாகியுள்ளன, இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததை விட நான்கு மடங்கு அதிகம்.

இந்தியா ஸ்பெண்டிற்கு அமலாக்கத்துறை அளித்த பதில், அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் விசாரணையின் பல்வேறு கட்டங்களில் இருப்பது உண்மைதான் என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது சந்தேக நபர்களால் பல வழக்குகள் தொடரப்படுவதால் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளில் விசாரணை நிலுவையில் உள்ளது என்றும் கூறியது.

விசாரணை நிறைவடைந்த 32 வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 31 வழக்குகளில் பணமோசடி செய்த குற்றத்திற்காக நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர்," என்று அது கூறியது. "வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமலாக்கத்துறையின் தண்டனை விகிதம் சுமார் 97% ஆகும்".

குற்றவியல் சட்டங்களை சீர்திருத்தம்

2020 ஆம் ஆண்டில், உள்துறை அமைச்சகம் குற்றவியல் சட்டங்களில் - ஐபிசி 1860, CrPC 1973 மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் 1872 (IEA) சீர்திருத்தங்களுக்கான தேசிய அளவிலான குழுவை அமைத்தது.

பல ஆண்டுகளாக நாடாளுமன்றக்குழு அறிக்கைகள் குற்றவியல் நீதி அமைப்பில் துண்டு துண்டான அணுகுமுறைக்குப் பதிலாக சீர்திருத்தத்தை பரிந்துரைத்துள்ளன. "...நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்த மசோதாக்களை துண்டு துண்டாக கொண்டு வருவதற்கு பதிலாக, ஒரு விரிவான சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் குற்றவியல் சட்டத்தை சீர்திருத்த மற்றும் பகுத்தறிவு செய்ய வேண்டிய கட்டாய தேவை உள்ளது" என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) (திருத்தம்) மசோதா, 2010 இல் 146வது துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை (2010) கூறியது.

மத்திய அரசு, மார்ச் மாதம், குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களைச் செய்வதற்கான செயல்முறையைத் தொடங்கியது. ஏப்ரல் 2022 இல் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பதிலின்படி, ஐபிசி, CrPC மற்றும் திய சாட்சியச் சட்டம் 1872 (IEA) இன் பல்வேறு பிரிவுகளில் பிப்ரவரியில் குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பித்தது.

அக்டோபரில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேம்படுத்துவதற்கான பல பரிந்துரைகளை அரசாங்கம் பெற்றதாகக் கூறினார். "விரைவில் நாங்கள் புதிய CrPC மற்றும் ஐபிசி-இன் வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்," என்று அவர் கூறினார்.

குற்றவியல் சட்டங்களில் மாற்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் வரைவு தாக்கல் செய்வது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் இந்தியா ஸ்பெண்ட் கருத்து கேட்டுள்ளது. பதில் கிடைத்ததும் இக்கட்டுரையை புதுப்பிப்போம்.

மரண தண்டனை வழக்குகளில் காரணிகளைக் குறைப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குதல்

செப்டம்பரில், உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை விதிக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய சூழ்நிலைகளைத் தணிக்கும் வகையில் வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணியை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்ப முடிவு செய்தது.

ப்ராஜெக்ட் 39A இன் 'இந்தியாவில் மரண தண்டனை' என்ற அறிக்கையின்படி, 2021ல் இந்தியாவில் 488 மரண தண்டனை கைதிகள் இருந்தனர். இது, 2004 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட அதிகபட்சமாகும், இது 563 ஆக இருந்தது.

ப்ராஜெக்ட் 39A இன் மரண தண்டனை மற்றும் இந்திய உச்ச நீதிமன்ற அறிக்கையின்படி, சூழ்நிலைகளைத் தணிப்பது என்பது குற்றவாளியின் குணாதிசயம், பின்னணி, பதிவு, குற்றம் அல்லது குற்றத்திற்கான சாக்குகள் அல்லது நியாயங்களை அமைக்காத பிற சூழ்நிலைகள் தொடர்பான அம்சங்களாகும்.

மரணதண்டனை விதிக்கப்படுவதற்கு முன், சூழ்நிலைகளைத் தணிப்பதில் போதுமான கவனம் செலுத்தப்படுவதையும், நடைமுறை நியாயம் பாதுகாக்கப்படுவதையும் உறுதிப்படுத்த, பரிந்துரை "மிகவும் முக்கியமானது" என்று, திட்டம் 39 A இல் மூத்த கூட்டாளி (வழக்கு) ஷிவானி மிஸ்ரா கூறினார்.

"...குற்றம் சாட்டப்பட்டவர் தணிக்கும் சூழ்நிலைகளை பதிவில் வைப்பார் என்று எதிர்பார்க்க முடியாது, ஏனெனில் அவ்வாறு செய்வதற்கான நிலை தண்டனைக்குப் பிறகு உள்ளது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

பச்சன் சிங் வழக்கில் (1980), உச்ச நீதிமன்றம், மரண தண்டனையின் அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்தும்போது, தண்டனை குறித்த தனி விசாரணையை முக்கியமான பாதுகாப்பாகக் கருதியது என்று மிஸ்ரா மேலும் கூறினார்.

2007 முதல் 2021 வரையிலான மரண தண்டனை குறித்த ப்ராஜெக்ட் 39A அறிக்கையின் தரவுகள், மரண தண்டனைகளை மாற்றுவதில் முடிவடைந்த 106 தீர்ப்புகளில், 94 தீர்ப்புகள் மாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளைத் தணிக்கக் கருதப்பட்டன, மீதமுள்ளவை தெளிவான காரணங்களைக் கொண்டிருக்கவில்லை.

உறுதிப்படுத்தப்பட்ட 40 மரண தண்டனைகளில், 12 தீர்ப்புகள் (30%) தணிக்கும் சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளவில்லை, இது "பச்சன் சிங்கின் குறைவான சர்ச்சைக்குரிய அம்சத்திற்கு இணங்கத் தவறியது, அதாவது தணிப்பு நடத்தை" என்று அறிக்கை கூறியது.

என்.வி. ரமணா இந்திய தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில், உச்சநீதிமன்றத்தின் மூன்று பெஞ்ச்கள் 15 மரண தண்டனை மேல்முறையீடுகளில் வாதங்களைக் கேட்டன, இதன் விளைவாக பெரும்பாலும் மாற்றங்கள் மற்றும் விடுதலைகள் ஏற்பட்டன என்று மிஸ்ரா கூறினார்.

"இந்த முடிவுகள் முழுவதும் இயங்கும் ஒரு பொதுவான இழை என்பது மரண தண்டனை விதிப்பதற்கான நடைமுறை நியாயத்தன்மை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பற்றிய போதுமான தகவல்கள் இல்லாதது பற்றிய ஆழமான மற்றும் தீவிரமான கவலையாகும்" என்றார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
Tags:    

Similar News