4ல் 3 தலித் சீர்மரபினர் பழங்குடி குக்கிராமங்களை தீவிர கடனில் தள்ளிய ஊரடங்கு: கணக்கெடுப்பு

Update: 2020-09-16 00:30 GMT

மும்பை மற்றும் புதுடெல்லி: கோவிட்-19 பரவலை தடுக்க அமலாக்கப்பட்ட  ஊரடங்கின்போது, நாட்டில் பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டனர், இதில் ஓரங்கட்டப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தாக,  11 மாநிலங்களில் கிட்டத்தட்ட 1,00,000 குடும்பங்களில் மேற்கொள்ளப்பட்டகணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. தலித்துகள், முஸ்லிம்கள், ஆதிவாசிகள் மற்றும் நாடோடி, சீரமரபினர் பழங்குடிகள் (டி.என்.டி) உள்ளிட்டவர்களின் வாழ்வாதாரங்கள் இல்லாமல் போனதால், வருமான இழப்பு காரணமாக உள்ளூர் பணக்காரர்களிடம் அதிக வட்டிக்கு கடன்களைப் பெறுவது அதிகரித்துள்ளது.

மேலும், இந்த சமூகத்தவர்கள் வசிக்கும் பெரும்பாலான குக்கிராமங்களில், மக்களுக்கு அரசின் நிவாரணம் கிடைக்கவில்லை; நிவாரண ஏற்பாட்டில் பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளதாக, டெல்லியை சேர்ந்தபிராக்சிஸ் இந்தியா தலைமையிலான கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 476 குக்கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் (மொஹல்லாக்கள்) ஆகியவற்றில், குடும்பத்தினரில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் பணத்தேவைக்காக குழந்தைகள் பள்ளிப் படிப்பை கைவிட்டதும் தெரிய வந்துள்ளது.

Full View

ஊரடங்கின் போது இந்த சமூகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடு, மிகவும் மோசமடைந்ததாக, 31 இடங்களை சேர்ந்த பிரதிநிதிகள் (7.25%) தெரிவித்தனர்.

நிதி நெருக்கடி மற்றும் அதன் விளைவாக கடனில் சிக்குதல் போன்றவை பலரை கட்டாய மற்றும் கொத்தடிமை முறைக்கு தள்ளக்கூடும் என்று கணக்கெடுப்பு அறிக்கை முடிவு செய்துள்ளது.

கணக்கெடுப்பு

கடந்த 2020 ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்திற்கு இடையில் தேசிய கூட்டணி மற்றும் சீர்மரபினர் பழங்குடியினர் குழுமம் (National Alliance Group of Denotified and Nomadic Tribes), மற்றும் தொழிலாளர்களின் சிந்தனைக் குழுவான பிராக்சிஸ் தலைமையிலான கேது குழு உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகளால் தரவு சேகரிக்கப்பட்டது. ஒவ்வொரு இடத்தில் இருந்தும் ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகளை நேர்காணல் செய்ததன் மூலம் அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளின் கீழ் அணுகல் மற்றும் பதிவு செய்தல், கடன்கள், வேலைகள் மற்றும் வாழ்வாதாரம் மற்றும் சமூகப்பிரச்சினைகள் போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டன. பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் என  மொத்தம் 11 மாநிலங்களில் 476 இடங்களில் உள்ள 98,000 குடும்பங்களைக் கொண்டிருந்தன. இந்த இடங்கள் ஒவ்வொன்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தலித், முஸ்லிம், ஆதிவாசி மற்றும் சீர்மரபினர் பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் மக்கள் தொகையில்13.4%முஸ்லிம்கள் மற்றும் அவர்கள் மிகப்பெரிய சிறுபான்மை சமூகம். தலித்துகள்16.6% உள்ளனர், அவர்கள்  வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட சமூகத்தவர்களாக உள்ளனர்.

உலகின்மிகப்பெரிய பழங்குடி மக்கள் தொகை, இந்தியாவில் தான் உள்ளனர், இது நாட்டின் மக்கள் தொகையில் 8.6% ஆகும்; அதில்,705 அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் பழங்குடியினர் உள்ளனர்; சீர்மரபினர் மற்றும் நாடோடி பழங்குடியினர் (டி.என்.டி) நாட்டின் மக்கள் தொகையில்10% ஆகும். இந்த பழங்குடியினர், 1871 ஆம் ஆண்டின் குற்றவியல் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் ஆங்கிலேயர் ஆட்சியின் போது குற்றப்பழங்குடியினராக பட்டியலிடப்பட்டனர். அவர்கள், 1952 இல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இருந்த போதும்  அவர்கள் தொடர்ந்து பழிச்சொல், வறுமை மற்றும் ஒதுக்கப்படுதல் போன்றவற்றை எதிர்கொள்கின்றனர்.

ஊரடங்கிற்கு பிறகு சிறுபான்மையினரின் நிலை, பாதிப்பு குறித்து,இந்தியா ஸ்பெண்ட் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது; இந்த கட்டுரைகளை நீங்கள்  இங்கே,இங்கே,இங்கே மற்றும்இங்கே படிக்கலாம்.

வாழ்வாதார இழப்பு, அதிகரித்த கடன்பாடு

ஊரடங்கு அறிவிப்பானது,வேலை இழப்பு, அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின்தலைகீழ் இடம்பெயர்வு மற்றும் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGS - எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்) மீதான நம்பிக்கைஅதிகரித்தது, ஆனால் 10 கிராமங்களில் நான்கில், ஓரங்கட்டப்பட்ட  நான்கு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் எந்த வேலையும் கிடைக்கவில்லை.

Full View

அனைத்துக்குழுக்களிலும், பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர் (டி.என்.டி)  இருப்பிடங்களில் அதிக விகிதத்தில் எம்.ஜி.என்.ஆர்.ஜி.எஸ் வேலைகள் கிடைக்கவில்லை. ஆய்வில் சேர்க்கப்பட்ட 114 பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர் இடங்களில், கிட்டத்தட்ட பாதி நகர்ப்புற அல்லது நகரகங்களின் கீழ் வந்தது. மேலும், 55-61% கிராமப்புற பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர் பகுதிகளில், இந்த திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த திட்டத்தின் கீழ் யாருக்கும் வேலை கிடைக்காத இடங்களின் விகிதம் ஏப்ரல் முதல் ஜூன் வரை மற்ற சமூகங்களுக்கு குறைந்துவிட்டாலும், பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர் பகுதிகளில் அதிகரித்தன.

ஊரடங்கின்போது நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர்  சமூகங்களுக்கு கடும் சிரமங்களை ஏற்படுத்தி வந்துள்ளன. அவர்கள் இன்னமும் விலங்குகளுடன் நாடோடி வாழ்க்கை முறையை பின்பற்றுவதாக, அறிக்கை தெரிவிக்கிறது. சுற்றுலா மற்றும் பயணிகளின் வருகையின்றி அதை நம்பி வாழும் தொழிலாளர்கள் வேலையிழந்தனர்; பலருக்கும் பிற வேலைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆய்வில் பங்கேற்ற முஸ்லீம் சமூகத்தின் பெரும்பாலானவர்கள், தாங்கள் சுயதொழில் செய்பவர்கள் என்று தெரிவித்தனர், ஆனால் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளின் பற்றாக்குறையானது, சிறுபான்மை சமூகங்கள் முழுவதிலும் காணப்பட்டது, இதனால் அவர்களுக்கு கடன்களை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தலித் பகுதிகளில் கிட்டத்தட்ட ஒன்பது இடங்கள், கடன்கள் மற்றும் கடன்பட்டுள்ளதின் அதிகரிப்பை தெரிவித்தன, இந்த அதிகரிப்பு பழங்குடியினர் மற்றும் சீர்மரப்பினர் பகுதிகளில் 78%, முஸ்லிம் பகுதிகளில் 64% மற்றும் பழங்குடி பகுதிகளில் 47% ஆகும்.

கடன்கள் பெரும்பாலும் முதலாளிகள், வெளிநபர்கள், உறவினர்கள் மற்றும் நிதி சேவை வழங்குபவர்களிடம் அதிக வட்டி விகிதங்களில் பெறப்பட்டவை. இது, கடத்தல், பிணைத்தொழிலாளர்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பிற சமூக மற்றும் பொருளாதாரச் சுரண்டல்களுக்கு தூண்டுதலாக அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் நீமுச்சில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து  அதிக வட்டிக்கு கடன் பெற்று சீர்மரபினர் பழங்குடியான பஞ்சடா சமூகம் பிழைத்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது, இச்சமூகத்தின் பெண்கள் கடத்தப்படுவது அதிகரிக்கும் என்ற அச்சம் இருப்பதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது. 

அரசு நிவாரண நடவடிக்கைகளுக்கான அணுகல் இல்லை

மத்திய அரசு மார்ச் மாதம் அறிவித்த ரூ.1.7 லட்சம் கோடி நிதி தொகுப்பு என்பது, பழைய திட்டங்களின் மறுவடிவம் மற்றும் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக,இந்தியா ஸ்பெண்ட் மார்ச்கட்டுரை தெரிவித்துள்ளது.

இந்த திட்டங்களை எடுத்துக்கொள்வதில் உள்ள மாறுபாடுகளைத் தணிக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்றும் சிறுபான்மை சமூகங்கள் உரிமைகளை அணுக முடியவில்லை என்றும் கணக்கெடுப்பு அறிக்கை கண்டறிந்துள்ளது. ஆவணங்களின் பற்றாக்குறை மற்றும் உரிமங்களை அணுகுவதற்கான பயம் இந்த சமூகத்தவர்களிடம் முழுவதும் காணப்பட்டது.

கணக்கெடுக்கப்பட்ட 70%-க்கும் மேற்பட்ட இடங்களில், திரும்பி வந்த புலம்பெயர்ந்தோரின் பதிவு கூட தொடங்கப்படவில்லை, இது அரசு நிவாரணங்களை பெறுவதில் இருந்து அவர்களை அந்நியப்படுத்துகிறது.

Full View

மேலும், 62% தலித் பகுதிகளிலும், 74% முஸ்லீம் பகுதிகளிலும், 86% பழங்குடிப் பகுதிகளிலும் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கீட்டின்படி உணவுப் பொருட்கள் கிடைத்தன;  மார்ச் 26 அன்றுபிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கையாக,  கூடுதல் உணவுப்பொருட்கள் வரம்புக்குபட்டே குறைவாக இருந்தது.

இக்குழுக்களில் பழங்குடியினர் மற்றும் சீர்மரபினருக்கு, அரசின்  திட்டங்களுக்கான அணுகல் மிகவும் குறைவாக இருந்தது. பெரும்பாலான மாநிலங்களில் பழங்குடியினர் மற்றும் சீர்மரபினருக்கு எதிராக பாரபட்சம் நிலவுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது; இது, கிராம நிர்வாகத்தில் இருந்து இச்சமூகம் துண்டிக்கப்படுதல், ஆவணங்களின்மை  மற்றும் விழிப்புணர்வு இல்லாதது, குற்றங்களில் களங்கப்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி, இந்த உரிமைகளையும் சேவைகளையும் அணுகுவதைத் தடுக்கிறது.

அத்துடன், 53 முஸ்லீம் பகுதிகளில்,  4% முதல் 34% வரையிலான எந்தவொரு  குடும்பங்களும் திட்டத்தின் சலுகைகளை பெறவில்லை. "திட்டத்தை அணுகுவதற்காக அல்லது எந்தவொரு பாரபட்சத்திற்கும் எந்தவொரு மாநில நிறுவனத்தையும் அணுக முஸ்லிம்கள் தயங்குகிறார்கள்" என்று அறிக்கை தெரிவித்தது. பீகாரில், முஸ்லீம் சமூகத்தவர்கள் திட்டங்களை அணுகும் வாய்ப்பு மிக மோசமாக காணப்பட்டது, அங்கு தலைமுறைகளுக்கு இடையிலான பாலியல் வேலைகளில் ஈடுபடும் சமூகங்கள் கணக்கெடுக்கப்பட்டன. முஸ்லிம்களுக்குள் இந்த சமூகங்களே மிகவும் பாதிக்கப்படக்கூடியவை, அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டைகள் இல்லை, எனவே திட்டங்கள் மற்றும் உரிமங்களுக்கான  அணுகலும் கிடையாது.

தலித்துகளை எடுத்துக் கொண்டால், ஒப்பீட்டளவில் சலுகை பெற்றவர்கள் நன்மைகளை அணுக முடிந்தது, மேலும் உரிமை கோருவதற்கான அதிகாரம் உள்ளவர்கள் - மிகவும் பாதிக்கப்படக்கூடிய உறுப்பினர்களை விலக்ககி வைக்கிறார்கள். எந்தவொரு நன்மைகளையும் அணுக முடியாதவர்கள் பாகுபாடு, ஊழல் மற்றும் லஞ்சம் காரணமாகவும், தகவல் வழங்கல் மற்றும் சேவை வழங்குவோரை அணுக பயம் என்றும் குற்றம் சாட்டினர்.

தொலைதூர இருப்பிடம் மற்றும் ஆவணங்களின் பற்றாக்குறை பழங்குடியினரை, அவர்களது உரிமங்களை அணுகுவதைத் தடுத்தது -ஜன் தன்,உஜ்வாலா அல்லதுகிசான் சம்மன் நிதி யோஜனாவின் கீழ் பணப்பரிமாற்றம் போன்ற மத்திய அரசால் நேரடியாக செயல்படுத்தப்பட்ட திட்டங்களுடன் ஒப்பிடுகையில், அவர்கள் மாநில அரசின் திட்டங்களை அணுக முடிந்தது.

சமூக ஓரங்கட்டல் மற்றும் பாகுபாடு

சிறுபான்மை குழுக்களை ஓரங்கட்டுதல் மற்றும் பின்தங்கிய சூழ்நிலையை, கோவிட் தொற்றுநோய் மேலும் மோசமாக்கியது.

பெரும்பாலான மனித மேம்பாட்டுக் குறிகாட்டிகளில் முஸ்லிம்கள் பின்தங்கியுள்ளனர், ஊரடங்கு காலத்தில், கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் என்று, குறிப்பாக தப்லிகி ஜமாஅத் சம்பவத்திற்கு பிறகு, சிறுபான்மையினர் குற்றச்சாட்டை எதிர்கொண்டதாக, கணக்கெடுப்பு அறிக்கை தெரிவித்தது. மார்ச் இறுதிக்குள், உண்மைச் சரிபார்க்கும் அமைப்புகளால் வெளியிடப்பட்ட போலி கட்டுரைகளின் எண்ணிக்கை மார்ச் 16 முதல் வாரத்தில் 15 ஆக இருந்தது, மார்ச் 30 முதல் வாரத்தில் 33 ஆக உயர்ந்தது, டெல்லியில் நிஜாமுதீன் மார்க்கில் நடந்த தப்லிகி ஜமாஅத் நிகழ்வு, வைரஸ் பரவ வழிவகுத்ததாக தவறாக குற்றம்சாட்டப்பட்டது என்று, இந்தியாவில் தவறான தகவல்கள் பரவல் குறித்துமிச்சிகன் பல்கலைக்கழக அறிஞர்கள்ஆய்வின்அடிப்படையில் மே மாதத்தில்இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கிட்டத்தட்ட 6% தலித் குக்கிராமங்கள்,  பாகுபாட்டை எதிர்கொள்கின்றன; அவர்களுடைய சாதி காரணமாக அவர்களால் தகன மைதானங்களை கூட சுதந்திரமாக அணுக முடியவில்லை.

பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளில், சுமார் 60% பாலியல் வேலை அல்லது கம்பிகள் மீது நடனமாடும் தொழில்களில் ஈடுபட்டுள்ள சமூகங்களிலிருந்து வந்தவை; அத்தொழில்கள்  சமூகத்தால் மட்டுமல்ல, நிர்வாகங்களாலும் அவதூறுக்கு ஆளாவை. பழங்குடியினர் மற்றும் சீர்மரபினருக்கு எதிராக "உள்ளூர் அதிகார அமைப்பு வலுவான சார்புகளைக் கொண்டுள்ளது" என்று அறிக்கை கூறியுள்ளது. தொற்றுநோய்களின் போது கூட அவர்களை  அதிகாரிகள் ஒருபோதும் அணுகவில்லை, சில சூழலில் கிராமங்களில் அவர்கள் நுழையவே தடை செய்யப்பட்டிருந்தது. பாலியல் தொழில் என்ற பெயரில் போலீசார் சோதனை   நடத்தி, இளம் சிறுமியரை காவல்துறையினர் அழைத்துச் சென்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஸ்ரேயா ராமன், தரவு ஆய்வாளர்,திவாரிஇந்தியா ஸ்பெண்ட் முதன்மை நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News