மேற்கு பீகாரில் நடந்த ஒரு போராட்டம், சர்வே எடுக்காத நில குடியிருப்பாளர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை காட்டுகிறது

எட்டு இந்திய மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்களில் மாநில அரசால் ஆய்வு செய்யப்படாத பகுதிகள் உள்ளன. இந்த நிலங்களில் வாழும் மற்றும் வேலை செய்யும் மக்களுக்கு, நிலப்பட்டா இல்லை, அதனால் வெளியேற்றப்படுவதில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை;

Update: 2021-09-02 00:30 GMT

புதுடெல்லி: மே 30, 2021 அன்று, பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் கீழ் இந்தியா சிக்கியபோது, ​​பீகாரின் வருவாய் துறையைச் சேர்ந்த சர்வேயர்கள் குழு, மேற்கு நகரமான சாப்ராவில் களமிறங்கியது. நகராட்சி கட்டிடத்திற்கு அருகேயுள்ள ஒரு தெருவில், மாநில அரசு ஒரு புதிய மேம்பாலத்தை கட்டுவதற்கு திட்டமிட்டு, அதற்காக கடைகள் மற்றும் வீடுகள் இடிக்கப்பட வேண்டிய நிலத்தை அதிகாரிகள் அளவிட்டு நிர்மாணிக்கும் பணியை தொடங்கினர்.

இந்த கட்டிடங்களில் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் சுமார் 35 பேர், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நிலம் கையகத்திற்கு அரசு தங்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை என்று, அவர்கள் வாதிட்டனர். ஆனால், இது சர்வே செய்யப்படாத நிலம், அதனால் பொதுச்சொத்து என்று குழு பதில் தந்தது.

"நாங்கள் தலைமுறை தலைமுறையாக இங்கு இருக்கிறோம்," என்று எதிர்ப்பாளர்களில் ஒருவரான அதுல் குமார் கூறினார், அவருடைய வீடு மற்றும் உலோகத் தொழிற்சாலை, இடிக்க வேண்டிய பகுதியாக குறிக்கப்பட்டது. "இப்போது அவர்கள் எங்களை எந்த இழப்பீடும் இல்லாமல் வெளியேறச் சொல்கிறார்கள்" என்றார்.

பீகார் எட்டு இந்திய மாநிலங்களில் ஒன்றாகும மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் (டெல்லி உட்பட)-அவற்றின் புவியியல் பகுதியின் குறிப்பிடத்தக்க பகுதிகளை ஆய்வு செய்யவில்லை-ராஜஸ்தானில் 2% முதல் டெல்லியில் 75% வரை என்று, நேஷனல் கவுன்சில் பார் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச் (NCAER) அமைப்பால், 2020 இல் தொகுக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. மாநிலங்களில், பீகார் அத்தகைய ஆய்வு செய்யப்படாத நிலத்தின் மிக அதிக விகிதத்தைக் கொண்டுள்ளது-அதன் பரப்பளவில் 20% அல்லது 18,832 சதுர கிமீ, இது நாகாலாந்து மாநில பரப்பளவுக்கு சமமானது. என்.சி.ஏ.இ.ஆர். ஆய்வின்படி, பெரும்பாலான ஆய்வு செய்யப்படாத நிலங்கள் இந்தியாவில் நகர்ப்புறங்களில் உள்ளன.

ஒரு தசாப்தத்தில், மத்திய அரசின் இந்திய நில ஆவணங்கள் பதிவு டிஜிட்டலில் நவீனமயமாக்கல் திட்டம், நிலப் பதிவுகளைப் புதுப்பிப்பதற்கும் டிஜிட்டல் மயமாக்குவதற்கும் மாநிலங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க முற்படுகிறது, இதன் மொத்த புவியியல் பகுதியில் வெறும் 3% மட்டுமே கணக்கெடுப்புகளை மேற்கொள்ள முடிந்தது. நாடு 2020 ஆம் ஆண்டில், கிராமப்புறங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்ய, அரசு சுவாமித்வா (SVAMITVA) திட்டத்தை அறிமுகப்படுத்தியது, ஆனால் இந்த பணி நகர்ப்புறங்களை விட்டு வெளியேறுகிறது.

இந்தியாவில் ஏன் பல பகுதிகள் ஆய்வு செய்யப்படாமல் உள்ளன, இது எந்த இழப்பீடும் இல்லாமல் மக்களை வெளியேற்றுவதற்கு எவ்வாறு பாதிக்கிறது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களுக்காக, சாப்ராவின் வழக்கை நாம் கூர்ந்து கவனிப்போம்.

ஆரம்பத்தில், விளை நிலங்கள் மட்டுமே

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், பீகார், ஹரியானா, கர்நாடகா, மணிப்பூர், டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை அவற்றின் நிலப்பரப்பின் சில பகுதிகளுக்குப் பதிவுகள் இல்லை என்று, என்.சி.ஏ.இ.ஆர். தெரிவித்தது. இது, மாநில நிலப் பதிவுகளின் தரத்தை அளவிடும் நிலப் பதிவேடுகள் சேவைக் குறியீட்டை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாநில அரசுகளிடம் இருந்து தகவல்களைப் பெற்றது. கணக்கெடுக்கப்படாத நிலத்தின் தரவு, காடுகள் இல்லாத பகுதிகளுக்கு மட்டுமே தொடர்புடையது.

பல்வேறு பகுதிகள் ஏன் ஆய்வு செய்யப்படுகின்றன என்பதற்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன, அவற்றில் பல பிரிட்டிஷ் இந்தியாவை நிர்வகித்த காலத்திற்கு செல்கின்றன. இந்தியாவில் ஆரம்ப நில அளவீடுகள், முகலாய சாம்ராஜ்யத்திற்கு முந்தையவை என்றாலும், மிக முக்கியமானவை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் காலனித்துவ அரசால் மேற்கொள்ளப்பட்டன என்று, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள நில வளத்துறையின் அறிக்கை தெரிவித்தது.

ஆனால் ஆங்கிலேயர்கள் விவசாய நிலங்களை மட்டுமே ஆய்வு செய்தனர், கிராமங்கள் மற்றும் நகரங்கள் மற்றும் காடுகளின் மக்கள் வசிக்கும் பகுதிகளை விட்டுவிட்டதாக, ஓய்வுபெற்ற இந்திய நிர்வாக சேவை அதிகாரியும், என்.சி.ஏ.இ.ஆர் ஆய்வின் முதன்மை ஆசிரியருமான தீபக் சனன் கூறினார். "நிலம் வருவாய் வந்த பகுதிகளை ஆய்வு செய்வதே [பிரிட்டிஷரின்] அம்சமாகும்" என்று அவர் கூறினார்.

கடந்த 1950 இல் இந்தியா தனது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, நில பதிவுகளை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பாக மாறியது. அவர்கள் அனைத்து நிலங்களையும் மீண்டும் கணக்கெடுக்க வேண்டும், ஆனால் இந்த வேலையின் வேகம் வேறுபட்டது, சில மாநிலங்களில் பெரும்பாலும் நிறுத்தப்படும் என்று சனன் கூறினார்.

சரிவுகள், சுரங்கப் பகுதிகள், ஆற்றங்கரை நிலங்கள் விலக்கப்பட்டன

ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்ட அறிக்கை, நில அளவீடுகள் சமமான நிலத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன; 10 டிகிரி சாய்வுக்கு அப்பால் உள்ள சரிவுகள் பயிரிட முடியாத தரிசு நிலமாக வகைப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த நிலங்களில் பழங்குடி குடும்பங்களால் நிலப்பட்டா இல்லாமல் பயிரிட்டு வருகின்றனர்.

கர்நாடகத்தின் பெல்லாரி மாவட்டத்தில், முன்னாள் சமஸ்தானமான சண்டூரின் ஒரு பகுதியாக இருந்த 12 கிராமங்களைச் சேர்ந்த நிலங்கள், 1977 சட்டத்தின் கீழ் அளவிடப்பட வேண்டும், ஆனால் இது இன்னும் செய்யப்படவில்லை. கிராமங்கள் இரும்பு தாது சுரங்கப் பகுதிகளில் உள்ளன மற்றும் கையில் நில உரிமைகள் இல்லாததால், கிராம மக்கள் தங்கள் நிலத்தை, சுரங்க நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்பு பிரிவுகளுக்கு விற்க வேண்டிய நெருக்கடியில் இருந்தனர்.

பீகாரில் கணக்கெடுக்கப்படாத நிலங்கள் 'டோபோ' நிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை பெரும்பாலும் கங்கை போன்ற மணல் நிறைந்த ஆறுகளின் கரையில் அமைந்துள்ளன, அவை சில தசாப்தங்களுக்கு ஒரு முறை தங்கள் நிலப்பகுதியை மாற்றிக்கொண்டு புதிய நிலப்பொட்டல்களை உருவாக்குகின்றன. பீகாரில் முதல் ஆய்வுகள் 1905 மற்றும் 1915 க்கு இடையில் ஆங்கிலேயர்களால் மேற்கொள்ளப்பட்டன, பின்னர் ஆற்றில் இருந்து வெளிவந்த நிலங்களை விட்டுவிட்டனர். 1959 ஆம் ஆண்டில், பீகார் அரசு திருத்த நில சர்வே ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்தது, ஆனால் 2011 ஆம் ஆண்டு, அதன் பயணம் தேவைப்பட்டாலும் இது இன்னும் முடிக்கப்படவில்லை என்று, மாநில வருவாய் மற்றும் நில சீர்திருத்தத்துறையின் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான தகவல் தெரிவித்தது.

சத்தீஸ்கர் போன்ற பல மாநிலங்கள் உள்ளன, அவை காடுகள் நிறைந்த நிலங்களை சர்வே செய்யவில்லை. இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் பெரும்பாலான மாநிலங்கள் நகர்ப்புற நிலங்களை மட்டுமே சர்வே செய்துள்ளன, சமூக கட்டுப்பாட்டில் உள்ள கிராமப்புறங்களை சர்வே செய்யவில்லை என்று என்.சி.ஏ.இ.ஆர்.இன் சனன் கூறினார்.

வன நிலங்களில் ஆய்வுகள் இல்லாததை நிவர்த்தி செய்ய, 2006வன உரிமைச் சட்டம், ஆதிவாசிகள் மற்றும் பாரம்பரிய வனவாசிகளின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கு முன்பு, காடுகளுக்குள் கணக்கெடுக்கப்படாத வாழ்விடங்களை வருவாய் கிராமங்களாக மாற்ற வேண்டும்.

காடுகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளை நில சர்வே செய்வதில் இருந்து விலக்குவது நில நிர்வாகத்தில் ஒரு முக்கியமான இடைவெளி என்று சனன் கூறினார். ஏனெனில் "வனப்பகுதிகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலங்கள், மக்கள் வசிக்கும் நிலங்கள் பொருளாதார ரீதியாக மதிப்புமிக்கவை" என்றார்.

2008 ஆம் ஆண்டில், அரசு நிலங்களை சர்வே செய்வதற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக, அதன் நிலப் பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டத்தில் ஒரு கூறு சேர்க்கப்பட்டது. இருப்பினும், அதன் பின்னர் அது வெறும் 3% முன்னேற்றம் அடைந்துள்ளது-மேலும் திட்டத்தின் முன்னேற்ற தகவல் பலகையின்படி, ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்ட நிலத்தின் மறுசீரமைப்பிற்கான தரவு இதில் அடங்கும்.

2020 ஆம் ஆண்டில், நிலங்களை அளவிடுவதற்கான மற்றொரு திட்டத்தை அரசு தொடங்கியது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கீழ், SVAMITVA (கிராமங்களின் அப்பாடி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வரைபடமாக்குதல்) திட்டம், கிராமங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளை சர்வே செய்வதற்கும் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு சொத்து அட்டைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டது. ஆனால் இந்த திட்டம் சாப்ரா போன்ற நகர்ப்புற மக்கள் வசிக்கும் பகுதிகளை விட்டுச்செல்கிறது, இது என்.சி.ஏ.இ.ஆர். ஆய்வு கண்டறிந்தபடி, கணக்கெடுக்கப்படாத நிலங்களின் மிகப்பெரிய பகுதியை உருவாக்குகிறது.

மாநிலக் கொள்கை தெளிவாக இல்லை

சாப்ராவில், கட்டுமானத்தில் உள்ள மேம்பாலம், மக்கள் அடர்த்தியான பகுதி வழியாக செல்கிறது மற்றும் இதற்காக 295 கட்டமைப்புகளை ஓரளவு இடிக்க வேண்டும் என்று, சரண் மாவட்ட ஆட்சியர் (சாப்ராவை உள்ளடக்கியது) ஜூன் 2020 இல் மாநில வருவாய் துறைக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், அந்த பகுதி சர்வே செய்யப்படாத நிலம் மற்றும் அங்கு வசிக்கும் மக்களுக்கு, நில உரிமைகளை வழங்க சட்டத்தின் கீழ் எந்த ஏற்பாடும் இல்லை என்று, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பீகாரின் பொது நில ஆக்கிரமிப்புச் சட்டம் 1956 -ன் கீழ், சர்வே செய்யப்படாத நிலத்தில் இருந்து மாநில அரசால் மக்களை வெளியேற்ற முடியாது என்று 2015 -ல் பாட்னா உயர் நீதிமன்றம் கூறியது. ஏனெனில் "[சர்வே செய்யப்படாத நிலத்தின்] தன்மை இன்னும் அதிகாரிகளால் நிறுவப்படவில்லை" எனவே சட்டத்தின் படி "பொது நிலம்" அல்ல. ஆனால், 2017 ஆம் ஆண்டில், மாநில சட்டத் துறை சர்வே செய்யப்படாத அனைத்து நிலங்களும் அரசு சொத்து என்று கூறியது.

அத்தகைய நிலங்களை அளவீடு செய்வதன் அவசியம் குறித்து, மாநிலங்களவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி கேள்விகளை எழுப்பியுள்ளனர். 2018 ஆம் ஆண்டில், மிதிலேஷ் திவாரி "பீகாரில் ஒரு பெரிய நிலப்பரப்பு இருப்பதாகக் கூறினார், குறிப்பாக ஆறுகளின் குறுக்கே" அது ஆய்வு செய்யப்படவில்லை. "மக்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள், அரசு வரியைக் கூட பெறுகிறது," என்று திவாரி கூறினார். சர்வே செய்யப்படாத நிலங்கள் தொடர்பாக "விரைவில்" ஒரு கொள்கையை கொண்டு வருவதாக உறுதி அளித்து, அரசு தரப்பில் பதில் தரப்பட்டது.

"கங்கை மற்றும் கந்தக் போன்ற இமயமலை நதிகளில் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் கணக்கெடுக்கப்படாத நிலத்தின் பெரும் பகுதிகள் உள்ளன" என்று, பெயர் வெளியிட விரும்பாத, நில நிர்வாகத்தில் நெருக்கமாக ஈடுபட்டுள்ள பீகார் அரசு அதிகாரி தெரிவித்தார், அவர் அங்கீகரிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் அல்ல.

பீகார் வருவாய்த் துறை, 2019 முதல் பல சமயங்களில், கணக்கெடுக்கப்படாத ஆனால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை அளவீடு செய்வதற்கான ஒரு கொள்கையை உருவாக்குவதை கருத்தில் கொண்டது என்று மாவட்ட கலெக்டர்களுடனான துறை ரீதியான கூட்டங்களின் நிகழ்ச்சி நிரலில் (இங்கே மற்றும் இங்கே பார்க்கவும்) கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை எந்த கொள்கையும் ஏற்படுத்தப்படவில்லை. மார்ச் 2021 இல், மாநில வருவாய் மற்றும் நில சீர்திருத்த அமைச்சர் ராம் சூரத் குமார் ஒரு பேட்டியில், சர்வே செய்யப்படாத நிலங்களை அபகரிப்பதில் "நில மாஃபியா" ஈடுபட்டுள்ளது என்பதை மாநில அரசு கண்டறிந்துள்ளது என்றார். எனவே, அத்தகைய நிலங்களில் உரிமையாளர்களுக்கு உரிமை வழங்குவதற்கான வழிகளைக் கொண்டு வர, அரசு ஒரு குழுவை அமைத்தது.

ஜனவரி 2021 இல், சப்ரா மாவட்ட ஆட்சியர், பீகார் ராஜ் புல் நிர்மாண் நிகம் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு மெமோ ஒன்றை அனுப்பினார். அதில், சர்ச்சைக்குரிய மற்றும் ஆய்வு செய்யப்படாத நிலம் அரசாங்கத்திற்கு சொந்தமானது என்று கூறியது. குறிக்கப்பட்ட சொத்துக்களை குடியிருப்பாளர்கள் தாங்களே இடித்தால், இடிப்பதற்கான செலவை அரசு திருப்பித்தரும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்ததாக, பாட்னா உயர் நீதிமன்றத்தில் 30 குடியிருப்பாளர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மார்ச் 10 அன்று, இந்த திட்டத்தின் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று, நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.

சாப்ரா போராட்டம்

சரண் மாவட்ட ஆட்சியர் நிலேஷ் தியோர், இந்தியாஸ்பெண்டிடம் கூறுகையில், 2017 ஆம் ஆண்டு அரசு வழக்கறிஞர், ஆற்றுப்படுகையில் உள்ள நிலங்கள் அரசு சொத்து என்று தெரிவித்ததாகக் கூறினார். இதைத் தொடர்ந்து, சப்ராவில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதி உட்பட, சர்வே செய்யப்படாத நிலங்களில் சொத்துப்பதிவு அல்லது மாற்றங்களை மாநில அரசு நிறுத்தியது. இந்த விவகாரம், உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் கருத்து தெரிவிக்க தியோர் மறுத்துவிட்டார். "இடிப்பதற்கான மொத்த பரப்பளவு வெறும் 61 தசமங்கள் (0.61 ஏக்கர்). போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கியமான திட்டம் இது "என்று அவர் கூறினார்.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், குடியிருப்பாளர்கள் தங்களது நிலவரி வைத்திருந்ததற்கான ஆவண ஆதாரங்களை சமர்ப்பித்தனர் சொத்து வரி மற்றும் விற்பனை பத்திர ஆவணங்கள்-அவற்றில் சில 1930 களில் இருந்து கட்டப்பட்டு வந்தவை.

"நிலம் அளவீடு செய்யப்படாததால், அது குடிமக்களின் நலனுக்கு பாதகமான ஒரு அனுமானத்தை ஈர்க்கும் தளமாக இருக்க முடியாது" என்று, அவர்களின் மனு வாதிட்டது. கணக்கெடுப்புகள் முடிவடைந்து நிலத்திற்கான அவர்களின் உரிமை முடிவு செய்யப்படும் வரை, அவற்றை அகற்ற வேண்டாம் என்று அரசுக்கு ஒரு உத்தரவு வழங்கும்படி அது கேட்டது.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் சப்ரா ஷஹர் பூமிசுவாமி சங்கதன் (சாப்ரா நகர நில உரிமையாளர்கள் சங்கம்) என அமைப்பை ஏற்பாடு செய்து, தங்கள் கருத்துக்களை தெரிவிக்க, பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி, வீதிகளில் இறங்கி ஊர்வலங்களை நடத்தினர். அவர்களுக்கு தங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டால் கோரிக்கைகளை விட்டுத்தர தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். நகரின் மையப்பகுதியில் உள்ள தங்கள் நிலம் எப்படி ஆய்வு செய்யப்படாமல் விடப்பட்டது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களும், எங்கள் வீடுகளுக்கும் கங்கை நதிக்கும் இடையில் அமைந்துள்ளது. நாங்கள் சர்வே செய்யப்படாத நிலங்களில் இருந்தால், அவர்களும் அவ்வாறே இருப்பார்கள், "என்று சாப்ராவில் போராட்டக்காரர்களில் ஒருவரான அதுல் குமார் கூறினார்.

இறுதியில், நிலம் அளவிடப்பட்டது-மே 30, 2021 அன்று, பெருந்தொற்று காலத்தில் தான்- ஆனால் இது கட்டுமானப் பணிக்காகவும், நிலப்பதிவுகளை உருவாக்கவும் அல்ல. அன்று மாலை, கணக்கெடுப்புக்கு தலைமை தாங்கிய வருவாய்த் துறை அதிகாரிகள், எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குத் தாக்கல் செய்தனர், அவர்கள் தாங்களாக முன்வந்து காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதோடு, அரசின் அதிகாரியை கடமையைச் செய்யவிடாமல் தடுத்தது, பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 இன் கீழ் கோவிட் -19 நெறிமுறையை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது, போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிகாரி தனது புகாரில், உயர் நீதிமன்றத்தின் 'தற்போதைய நிலை' தொடர வேண்டும் என்ற உத்தரவு, கணக்கெடுப்புக்கு பொருந்தாது என்றும் கூறினார்.

இந்த நிலத்தில் பீகார் அரசு ஒரு கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும் என்று, புவனேஸ்வரில் உள்ள நில நிர்வாக மையத்தின் இயக்குனர் பிரணாப் ரஞ்சன் சவுத்ரி கூறினார். "இது ஆக்கிரமிப்பு இடமாக இருந்தால், அது ஏன் முன்னர் அகற்றப்படவில்லை, மற்றும் அதற்கு பொறுப்பான அதிகாரி தண்டிக்கப்பட்டாரா என்பதை அரசு சொல்ல வேண்டும்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

குடியிருப்பாளர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்தாலும், அவர்கள் நிலத்தை சார்ந்து இருப்பதாகவும், மோதலைத் தவிர்க்க இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும் என்றும் சவுத்ரி கூறினார். ஒடிசாவில், அரசு முறைசாரா குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு நிலப் பட்டங்களை வழங்கியது, அகமதாபாத் மெட்ரோவைப் பொறுத்தவரை, குஜராத் அரசு கிடைக்கக்கூடிய ஆவண சான்றுகள், குடும்பம் மற்றும் பங்கேற்பு மதிப்பீடுகளைப் பயன்படுத்தி சொத்து உரிமைகளை சரிபார்த்த பிறகு மறுவாழ்வு நிவாரணம் அளித்தது என்றார். அகமதாபாத் மெட்ரோவைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும், தங்கள் நில உரிமை நிலையைப் பொருட்படுத்தாமல் இழப்பீடு மற்றும் மறுவாழ்வுக்கு தகுதி உடையவர்கள்.

முன்னாள் அதிகாரியான சனான், மக்களின் உரிமைகளை அரசு ஒப்புக்கொண்டால், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் நிலத்தை கையகப்படுத்த வேண்டும் மற்றும் சந்தை விகிதத்தை இரட்டிப்பாக இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று கூறினார். இப்போது அதை ஆதரிக்க அரசுக்கு சட்டரீதியான கருத்து உள்ளது, அது மேம்பாலத்தை விரைவாகக் கட்ட ஆக்கிரமிப்பாளர்களை வகைப்படுத்துவதாகும் என்றார் அவர்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News