பிரசவத்திற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு நான் பனியில் 4 கி.மீ., நடக்க வேண்டிய கட்டாயம் உண்டானது
மோசமான சுகாதார வசதிகள், கடினமான நிலப்பரப்பு மற்றும் பாதகமான வானிலையால், இமாச்சலப் பிரதேசத்தின் கோட்டி கிராமத்தில் உள்ள பெண்கள் பிரசவகால சுகாதார சேவைகளைப் பெற நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.;
கோட்டி (ஹிமாச்சல பிரதேசம்): "பிரசவம் முடிந்த சில நாட்களில், பெரும்பாலான பெண்களுக்கு நீண்ட நேரம் நிற்பது கூட கடினமாக இருக்கும் ஒரு சூழலில், நான் பிறந்த குழந்தையுடன், முழங்கால் அளவுள்ள பனியில் நான்கு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்று, 2020 ஜனவரியில் தனது இளைய மகள் பிறந்ததை நினைவு கூர்ந்தவாறே கௌசல்யா சவுகான், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.
சிம்லாவில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில், கெளசல்யா சவுகானின் மகள் ஆருஷி, பிரசவம் குறித்த நான்கு நாளுக்கு முன்பு பிறந்த நிலையில், காத்திருக்கும் மற்ற நோயாளிகளுக்காக, படுக்கையை காலி செய்யும்படி ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சோதனையானது, சௌஹானின் மிகவும் விரும்பத்தக்க தருணங்களாக கருதப்பட்டதை, ஒரு மோசமான தருணமாக மாற்றியது-- அதாவது அவரது கிராமத்திற்குத் திரும்பும் வழியில், அவரது இன்னும் மீண்டு வரும் உடல் ஒரு புயலை எதிர்கொண்டது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டில் உலகின் மொத்த மகப்பேறு இறப்புகளில், இந்தியா 12% உடன் நைஜீரியாவிற்கு (23%) அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. மார்ச் 2022 இல் வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் அறிக்கையின் படி, 2017-19 காலகட்டத்தில், 100,000 பிறப்புகளுக்கு 103 இறப்புகள் இந்தியாவின் பிரசவகால இறப்பு விகிதம் ஆகும். இதற்கிடையில், மூன்றாவது ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கு உலகளாவிய தாய் இறப்பு விகிதத்தை 2030 ஆம் ஆண்டுக்குள், 100,000 உயிருள்ள பிரசவங்களுக்கு, 70 க்கும் குறைவாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்டி பகுதியில் உள்ள சமூக சுகாதார மையம், சௌஹான் போன்ற பிரசவங்களைக் கையாளுவதற்குத் தகுதியற்ற நிலையில் உள்ளது; போதுமான பணியாளர்கள், படுக்கைகள் மற்றும் உபகரணங்கள் இல்லாததால், அருகில் உள்ள மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை கூட வழங்க முடியவில்லை.
கடந்த 2019-20 ஆம் ஆண்டில் கிராமப்புற சுகாதாரப் புள்ளி விவரங்களின்படி, கிராமப்புறங்களில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தின் சமூக சுகாதார மையங்களில், 80 மகப்பேறு மற்றும் மகப்பேறு மருத்துவர்களில் ஐந்து பேர் மட்டுமே உள்ளனர், 85 குழந்தை மருத்துவர்களில் நான்கு பேர் மற்றும் 80 மருத்துவர்களில் ஐந்து பேர் சுகாதார மையங்களில் தேவைப்படுகிறார்கள்.
மலைப்பாங்கான மாநிலமான இமாச்சலத்தின் தலைநகரான சிம்லா மாவட்டத்தில் 10,000 நபர்களுக்கு சுமார் 2.5 மருத்துவர்கள் உள்ளனர் என்று 2011 ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தின் மாவட்ட புள்ளியியல் சுருக்கத்தின் அடிப்படையில் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த விகிதம் 10,000 நபர்களுக்கு 10 மருத்துவர்கள் என்ற உலக சுகாதார அமைப்பின் (WHO) விதிமுறைக்கு முற்றிலும் மாறாக உள்ளது.
அவசர மருத்துவப் போக்குவரத்தை அணுக முடியாத நிலை
ஆம்புலன்ஸ் சேவை அல்லது வசதியான பொதுப் போக்குவரத்து இல்லாததால், தினக்கூலித் தொழிலாளியான கவுசல்யா சவுகானின் கணவர் கேசவ் ராம், சிம்லா நகரில் இருந்து 30 கி.மீ.-ல் உள்ள கோட்டி கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு ரூ.4,000-க்கு ஒரு தனியார் டாக்ஸியை வாடகைக்கு எடுத்தார். "நான் மிகவும் வேதனையில் இருந்தேன், ஆனால் கடுமையான பனி சாலைகளை அடைத்ததால், நான் புதிதாகப் பிறந்த என் பெண்ணுடன் பல கிலோமீட்டர்கள் நடந்து வீட்டை அடைய வேண்டியிருந்தது. வழியில் நாங்கள் காரை பல முறை தள்ள வேண்டியிருந்தது" என்று 34 வயதான கவுசல்யா சவுகான் நினைவு கூர்ந்தார்.
"எங்களிடம் அதிக பணம் இல்லை, மேலும் [மருத்துவமனைக்கு] அருகில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்க முடியவில்லை. எனவே, நாங்கள் கோட்டி பகுதிக்குத் திரும்ப முடிவு செய்தோம். இது ஒரு மலிவான விருப்பம் அல்ல, ஆனால் மற்ற செலவுகளைத் தவிர்க்க நாங்கள் இதைத் தேர்ந்தெடுத்தோம், "என்று கவுசல்யா சௌஹான் கூறினார், அவர் ஒரு தையல்காரராக வேலை செய்வதன் மூலம் வீட்டு வருமானத்திற்கு பங்களிப்பு செய்கிறார். கவுசல்யாவும் அவரது கணவரும் தங்களின் மூன்று பிகா நிலத்தில் (0.60 ஏக்கர்) காய்கறிகளை பயிரிட்டு, வழக்கமான வேலை கிடைக்கும்போது சுமார் ரூ. 20,000 சம்பாதிக்கிறார்கள் - இதில் ரூ.2,500 வீட்டு வாடகைக்கு செலவிடப்படுகிறது, தண்ணீர் மற்றும் மின்சார செலவுகள் தனி.
மார்ச் 26, 2022 அன்று இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்டி கிராமத்தில், கவுசல்யா சௌஹான் ஒரு வாடிக்கையாளருக்கு சல்வார் ஒன்றைத் தைத்துக் கொடுகிறார். அருகில், அவரது 2 வயது மகள் ஆருஷி.
புகைப்படம்: குமார் திவ்யான்சு
கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில், பிரசவத்திற்காக மருத்துவமனையில் படுக்கையைப் பெறுவதற்காக கவுசல்யா சவுகான் முதலில் சிம்லாவை அடைந்தது மிகவும் சிரமமாக இருந்தது.
கர்ப்பத்தின் எட்டாவது மாதத்தில் எதிர்பாராத பிரசவ வலியால் துடித்ததால், அவரது கணவர், தனது பக்கத்து வீட்டுக்காரரான ஒரு தனியார் டாக்ஸி டிரைவரிடம், அருகே இருக்கும் பெரிய மருத்துவமனையான ஷிம்லாவில் உள்ள தீன்தயாள் உபாத்யாய் மண்டல மருத்துவமனைக்கு, சுமார் 30 கி.மீ. மணிக்கு அவரை கொண்டு செல்ல வேண்டியிருந்தது என்பதை கவுசல்யா சவுகான் நினைவு கூர்ந்தார்.
அனைத்து வசதிகளும் இருந்தபோதிலும்,அரசு மண்டல மருத்துவமனை அவசரகால பிரசவத்தை சமாளிக்க தயாராக இல்லை; அவரை கமலா நேரு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தது. "நான் கடும் பிரசவ வலியில் இருந்தேன், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டிருந்தேன், ஆனால் நான் கர்ப்பமாகி எட்டாவது மாதம்தான் ஆகிறது என்பதால், மருத்துவமனை மறுத்து விட்டது. இன்னும் சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த கமலா நேரு மருத்துவமனைக்கு நான் பரிந்துரைக்கப்பட்டேன், அங்கு செல்ல எனக்கு ஆம்புலன்ஸ் வசதி எதுவும் கிடைக்கவில்லை" என்று கவுசல்யா சவுகான் கூறினார்.
மூன்று மாதங்களுக்கு முன், கோட்டி பகுதியில் வசிக்கும் 28 வயதான அனுராதா தேவிக்கு, ரத்த சோகை இருந்ததால், பிரசவ நாளில் தனியார் மருத்துவமனைக்குச் செல்லும்படி மண்டல மருத்துவமனை கூறியது.
"முன்கூட்டிய பிரசவங்களுக்கு வரும்போது எங்களுக்கு சில வரம்புகள் உள்ளன. எங்களிடம் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லை," என்று மண்டல மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் ஷிவிகா மிட்டல் கூறினார். மேலும் கருத்து தெரிவிக்க, மருத்துவமனை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இப்பகுதியில் உள்ள அரிதான மற்றும் விலையுயர்ந்த போக்குவரத்து வசதிகள், நிறைய பெண்கள் நிறுவனமற்ற பிரசவத்தை தேர்வு செய்கின்றனர். "கோட்டியில் இருந்து சிம்லாவிற்குச் செல்ல அனைவராலும் ரூ. 4,000-5,000 வாங்க முடியாது. உண்மையில், பனிப்பொழிவு இருக்கும்போது, வழக்கமான விலையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு விலை உயர்த்தப்படும்," என்று கோட்டி கிராமத்தில் அங்கீகாரம் பெற்ற சமூக நல ஆர்வலர் (ஆஷா) ரீனா தேவி கூறினார். "இதற்கிடையில், ஆம்புலன்ஸ்கள் வருவதற்கு மிக நீண்ட நேரம் எடுக்கும். இதுவே இங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்" என்றார்.
தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் இயங்கும் ஆம்புலன்ஸ்கள் தவிர குறைந்தது 204 ஆம்புலன்ஸ்கள் இமாச்சல பிரதேசத்தில் செயல்படுகின்றன.
சுகாதாரப் பணியாளர்கள் இல்லை
அவரது கிராமத்தில் உள்ள மருத்துவ மையங்கள் உள்ளிட்ட வசதிகள் தொலைதூர மாவட்ட மருத்துவமனைகளுக்கு இணையாக இருந்திருந்தால், சௌஹான் இவ்வளவு கஷ்டங்களைச் சந்தித்திருக்க வேண்டியதில்லை. அரசு தேவைகளின்படி, சமூக சுகாதார மையங்கள் என்பது ஆபரேஷன் தியேட்டர், எக்ஸ்ரே இயந்திரம், தொழிலாளர் அறை மற்றும் ஆய்வகம் போன்ற சிறப்பு சேவைகளைக் கொண்ட 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இருக்க வேண்டும். இதர பணியாளர்களுடன் குறைந்தபட்சம் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர், மகப்பேறு மருத்துவர் மற்றும் குழந்தை மருத்துவர் ஆகியோரால் நிர்வகிக்கப்பட வேண்டும்.
ஆனால் கோட்டியின் சமூக சுகாதார நிலையத்தில் ஒரு தொழிலாளர் அறை உள்ளது, ஆனால் படுக்கைகள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் உள்ளது, மேலும் செவிலியர்கள் அல்லது மகப்பேறு மருத்துவர் இல்லை, இது இங்கு ஒரு பிரசவம் கூட நடைபெறவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.
"ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பான, மருத்துவமனை பிரசவத்தை உறுதிசெய்ய, கிராமத்தில் அல்லது அதைச் சுற்றி செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம் [PHC] அல்லது சமூக சுகாதார மையம் [CHC] இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்," என்று ரீனா கூறினார். "எங்களுக்கு மிக நெருக்கமானது சமூக சுகாதார மையம் கோட்டியில் தான். எவ்வாறாயினும், எங்கள் கிராமத்தின் சமூக சுகாதார மையத்தில் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் கிடைக்காததால், பல கர்ப்பிணிப் பெண்கள் மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், இதற்கு கணிசமான சாலைப் பயணம் தேவைப்படுகிறது. பாதகமான, மோசமான வானிலையில் இது சவாலாக மாறுகிறது" என்றார்.
"கர்ப்ப காலத்தில் வழக்கமான சோதனைகளுக்கு கூட, நான் சிம்லாவில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. எங்கள் சமூக சுகாதார மையத்தில் போதுமான பிரசவ கால சுகாதார வசதிகள் இருந்தால், முதுகுத்தண்டைக் குளிரச் செய்யும் குளிரில் நான் ஒரு குழந்தையுடன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதில்லை" என்று கவுசல்யா சவுகான் கூறினார்.
மாநில அளவில் உள்ள சமூக சுகாதார மையங்களின் நிலையை படம் பிடித்துக் காட்டும் கோட்டியின் நிலை குறித்த ஒரு அறிக்கை. மார்ச் 26ம் தேதிப்படி, இமாசலப்பிரதேச மாநிலம் ஷிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்டி சுகாதார மையம், 36 கிராமங்களில் 2,383 பேருக்கு உரியது.
புகைப்பட உதவி: குமார் திவான்ஷு
"கோட்டி சமூக சுகாதார மையங்களின் நிலைமையை நான் அறிந்திருக்கிறேன். தொழிலாளர் அறை, பயன்படுத்தும் நிலையில் இல்லை மற்றும் இது தொடர்பாக நான் சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி பேசியிருக்கிறேன் … ஆனால் ஊழியர் கிடைக்கும் விஷயத்தில் ஒன்றும் சொல்ல முடியாது என்று, சிம்லாவின் தலைமை மருத்துவ அதிகாரி சுர்கா சோப்டா, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.
அவர் மேலும் கூறினார்: "தொழிலாளர் அறை செயல்பாட்டில் இருந்தாலும்கூட, எங்களுக்கு ஒரு மகளிர் மருத்துவ நிபுணர் மற்றும் 4ம் நிலை ஊழியர்கள் வேண்டும்; இதன் மூலம் தொழிலாளர் அறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும். பல முறை, இங்கு பணியாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்; ஆனால் சமூக சுகாதார மையத்தில் யாரும் பணியில் சேர முன்வருவதில்லை. இந்த சூழ்நிலை சிம்லாவுக்கு தனித்துவமானது அல்ல, ஆனால் இது மற்ற மாவட்டங்களிலும் இதேபோன்ற சூழல்தான் நிலவுகிறது; உண்மையில் சொல்வதானால், மற்ற மாநிலங்களில் கூட இப்படிதான் " என்றார்.
சுகாதார உள்கட்டமைப்பு, மலிவு மற்றும் தரமான பிரசவகால சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றின் அணுகல், குறிப்பாக அதிக வளமிக்க மாவட்டங்களைவிட பொருளாதார ரீதியாக மோசமான மாவட்டங்களில் பிரசவ கால இறப்புகளை குறைக்கும் முக்கிய வழியாகும் என்று, 2021 முன்னுரிமை அறிக்கை தெரிவிக்கிறது.
கிராமப்புற இமாச்சல பிரதேசத்தில், சில ஆண்டுகளில் சற்று மாற்றம் உள்ளது, ஜனவரி மாதம் சிம்லாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கவுசல்யா தனது மூத்த மகள் கமினியை பெற்றேடுத்தார். வானிலை நிலைமைகள் ஒத்ததாக இருந்தன, மேலும் சுகாதார உள்கட்டமைப்பின் நிலை முன்னேறியுள்ளது.
"கிராமப்புற இமாச்சல பிரதேசத்தில் உள்ள சுகாதார மையங்கள், ஒரு ஆபத்தான நிலையில் உள்ளன, குறிப்பாக பிரசவ சுகாதாரத்தில். உள்கட்டமைப்பு ஒரு மாவட்டத்தில் கிடைக்கப்பெற்றால், பணிகளை மேற்கொள்வதற்கு ஊழியர்கள் கிடைப்பதில்லை. உண்மையில், சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் நிறைய இடங்கள் காலியாக உள்ளன," என்று இமாச்சல் கிசான் சபாவின் தலைவரும், ஓய்வு பெற்ற இந்திய வன சேவை அதிகாரி ஆகியோரும், பொது சுகாதாரத்தில் பணிபுரியும் ஒரு சமூக ஆர்வலரான குல்டீப் சிங் தன்வார் தெரிவித்தார்.
சிம்லா மாவட்டத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு ஏற்கனவே மோசமாக இருந்ததாக, அவர் மேலும் கூறினார். ஆனால் கோவிட்-19 நிலைமை மேலும், இன்னும் மோசமாகிவிட்டது. "மேலும், ஊரங்கின் போது, பொது போக்குவரத்து மற்றும் வானை தொட்ட கட்டண உயர்வு, அதற்கு அதிக தொகை செலவிட கிராம மக்களை கட்டாயப்படுத்தியுள்ளது; கிராம மக்களிடம் குறைந்தளவே பணம் இருந்தது; இதனால் மருத்துவமனைக்கு செல்லவில்லை" என்றார்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.