2020 ஆம் ஆண்டில் மிகவும் விலைதரப்பட்ட 10 காலநிலை பேரிடர்களில் 2 இந்தியாவை தாக்கியது

ஆம்பன் புயலும் அதை தொடர்ந்து வந்த பலத்த வெள்ளம் இந்தியாவின் பல பகுதிகளைத் தாக்கி, பல ஆயிரம் கோடி மதிப்பில் சேதங்களை ஏற்படுத்தின.

Update: 2021-01-01 00:30 GMT

புதுடெல்லி: மே மாதத்தில் இந்தியாவைத் தாக்கிய ஆம்பன் சூப்பர் புயல் மற்றும் ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளை பாதித்த வெள்ளம், 2020 ஆம் ஆண்டில் உலகம் கண்ட 10 "அதிகவிலை" தந்த தீவிர காலநிலை நிகழ்வுகளில் ஒன்று என்று, சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அத்துடன், இந்த 10 நிகழ்வுகள் ரூ.10 லட்சம் கோடி (141 பில்லியன் டாலர்) சேதத்தை ஏற்படுத்தின, இது இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆண்டு பட்ஜெட்டை விட 322 மடங்கு அதிகம்.

வங்காள விரிகுடாவில் பதிவான பலமான புயல்களில் ஒன்றான ஆம்பன், மணிக்கு 270 கி.மீ வேகத்தில் காற்று வேகத்துடன், இந்தியா மற்றும் வங்கதேசத்தை தாக்கியது. இந்த புயலால் ஏற்பட்ட அழிவு இரு நாடுகளுக்கும் - இலங்கைக்கும் சுமார் 95,386 கோடி ரூபாய் (13 பில்லியன் டாலர்) இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பரவலான நிதி சேதங்களை விளைவித்த 2020 உலகளாவிய காலநிலை பேரிடர்களின் பட்டியலில் இந்த புயல் நான்காவது இடத்தில் உள்ளது. வெள்ளத்தால் இந்தியாவுக்கு ரூ.73,374 கோடி (10 பில்லியன் டாலர்) செலவானது, அதுதொடர்பான பட்டியலில், இப்புயல் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலை, இங்கிலாந்தை சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான கிறிஸ்டியன் எய்ட் தொகுத்து, '2020ம் ஆண்டில் செலவு எண்ணிக்கை: காலநிலை முறிவின் ஆண்டு', என்ற தலைப்பில் அறிக்கையை டிசம்பர் 28 அன்று வெளியிட்டது.

காலநிலை மாற்றத்தின் வீழ்ச்சிக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இந்தியாவும் உள்ளது. எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடிய பல தீவிர வானிலை நிகழ்வுகளால் அது, 2020 ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டது. நாட்டின் ஏழைகள் அதிக ஆபத்தில் உள்ளனர்.

கிறிஸ்டியன் எயிட் அறிக்கை, ஆண்டின் மிகவும் அழிவுகரமான காலநிலை பேரழிவுகளில் 15-ஐ கண்காணிக்கிறது. இந்த மதிப்பீடுகளில் பெரும்பாலானவை காப்பீடு செய்யப்பட்ட இழப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை; அதாவது, இதன் பொருள் உண்மையான நிதி செலவுகள் அதிகமாக இருக்கும். இந்த காலநிலை பேரிடர்கள் சேர்ந்து குறைந்தது 1.4 கோடி மக்களை இடம்பெயர்ந்ததுடன், குறைந்தது 3,471 பேரை பலி கொண்டது.

இந்த தீவிர நிகழ்வுகள், அவசர காலநிலை நடவடிக்கைகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன என்று அறிக்கை தெரிவித்துள்ளது. தொழில்துறை காலத்திர்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும்போது வெப்பநிலை உயர்வு 2°C-க்கும், 1.5°C-க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்த பாரிஸ் ஒப்பந்தத்திற்கு, இப்போது ஐந்து வயதாகிவிட்டது. நவம்பர் 2021 இல் கிளாஸ்கோவில் நடைபெறவிருக்கும் அடுத்த காலநிலை மாநாட்டிற்கு முன்னதாக புதிய இலக்குகளை எதிர்கொள்ள நாடுகள் உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

பாரிஸ் இலக்குகளை பூர்த்தி செய்ய, உலகளாவிய கார்பன் உமிழ்வை 2030ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் பாதியாக குறைக்க வேண்டும். இதற்கு 2019 மற்றும் 2020 க்கு இடையில் ஆண்டுக்கு 7.6% உமிழ்வு தேவைப்படுகிறது, அதாவது நாடுகள் தங்கள் லட்சியங்களை ஐந்து காரணங்களுக்காக உயர்த்த வேண்டும் என்று, இந்தியாஸ்பெண்ட் டிசம்பர் 3 கட்டுரை தெரிவித்தது. எந்தவொரு நாடும் - செல்வந்த அல்லது ஏழை நாடாக இருந்தாலும் சரி - மோசமான காலநிலை நெருக்கடியின் தாக்கங்களில் இருந்து விடுபடவில்லை என்று நாங்கள் தெரிவித்தோம்.

ஆனால் குறைக்க வேண்டிய உமிழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் டிசம்பர் 2020 அறிக்கை தெரிவித்துள்ளது.


மோசமான மூன்று நிகழ்வுகள்

கடந்த 2020ம் ஆண்டில், அட்லாண்டிக் புயல் சீசன் (ஜூன் முதல் நவம்பர் வரை) சாதனை படைத்தது, பெயரிடப்பட்ட 30 புயல்கள் இங்கு உருவாகின. இது குறைந்தது 400 உயிரிழப்புகளையும், ரூ.3 லட்சம் கோடி (41 பில்லியன் டாலர்) இழப்பையும் ஏற்படுத்தியது, இது கிறிஸ்தவ உதவி பட்டியலில் 2020 ஆம் ஆண்டின் அதிக விலை கொடுக்கப்பட்ட பேரிடராக மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் வெள்ளம் மற்றும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ ஆகியன, பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.

ஜூன் மாதத்தில் இருந்து சீனா கடுமையான வெள்ளத்தை சந்தித்தது. இந்த வெள்ளம் 3.5 கோடிக்கும் அதிகமான மக்களை பாதித்தது, குறைந்தது 278 பேர் இறந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர். இந்த வெள்ளத்திற்கு தரப்பட்ட விலை ரூ.2.35 லட்சம் கோடி (32 பில்லியன் டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் 2020 ஆம் ஆண்டு, தீக்கால பதிவில் மிகவும் அழிவுகரமான ஒன்றாகும். கலிபோர்னியா, கொலராடோ, அரிசோனா, வாஷிங்டன் மற்றும் ஓரிகான் முழுவதும் டஜன் கணக்கான காட்டுத்தீக்கள் 80 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை சாம்பலாக்கின, மேலும் 1.46 லட்சம் கோடி ரூபாய் (20 பில்லியன் டாலர்) சேதத்தை ஏற்படுத்தின. இந்த தீ விபத்தில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கோவிட்-19 தொற்றுநோய் 2020ம் ஆண்டின் மிகப்பெரிய கவலையாக இருந்தது. உலகின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பல லட்சம் மக்களுக்கு, காலநிலை முறிவு இதை மேலும் அதிகப்படுத்தியுள்ளது"என்று ஆய்வு அறிக்கையின் ஆசிரியரும், கிறிஸ்டியன் எய்டின் காலநிலை கொள்கை வகுப்பாளருமான கேட் கிராமர், அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஒரு நல்ல செய்தி என்னவென்றால், கோவிட்-19 ஐ போலவே, மனிதர்களுக்கும் காலநிலை நெருக்கடியை எவ்வாறு சரிசெய்வது - அதாவது புதைபடிவ எரிபொருட்களை நிலத்தில் வைத்திருப்பதன் மூலமும், தூய்மையான எரிசக்தி முதலீடுகளை அதிகரிப்பதன் மூலமும், முன்வரிசையில் பாதிக்கப்படுவோருக்கு உதவுவதாலும் என்பது தெரியும்.

ஆம்பனின் சேதம் - ரூ.95,386 கோடி

மணிக்கு 270 கி.மீ வேகத்தில் வேகத்தில் காற்று வீசிய ஆம்பன் புயல், நாங்கள் முன்பு கூறியது போல, வங்காள விரிகுடாவில் உருவான பலமான புயல்களில் ஒன்றாகும். இந்த ஆண்டின் மிக அதிக விலை கொடுக்கப்பட்ட வெப்பமண்டல புயலாகவும் அது இருந்தது, இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கையின் நகரங்களில் ரூ.95,386 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்புயல், குறைந்தது 128 பேரை காவு வாங்கியது, 49 லட்சம் மக்களை இடம்பெயரச் செய்தது.

அதிகரித்து வரும் உலக வெப்பநிலையுடன் வட இந்தியப் பெருங்கடலில் பிராந்தியங்களை பாதிக்கும் புயலிகளின் வலிமை அதிகரித்து வருவதாக இந்தியாஸ்பெண்ட் மே 19 கட்டுரை தெரிவித்தது. அதிக மேற்பரப்பு வெப்பநிலை, இந்த புயலிகளின் தீவிரத்தை அதிகரிக்க "சூப்பர்சார்ஜிங்" செய்கிறது என்று நாங்கள் கட்டுரை வெளியிட்டோம். இது, கிறிஸ்டியன் எய்ட் பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், ஜூன் மாதத்தில் மற்றொரு வலுவான சூறாவளியான நிசர்கா, இந்தியா தாக்கியது.

"இந்தியப் பெருங்கடலைப் பொருத்தவரை, விதிவிலக்காக 2020ம் ஆண்டு சூடாக இருந்தது. அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் 30°C - 33°Cக்கு இடையில் வெப்பநிலையை நாங்கள் கண்டோம்" என்று, புனேவின் இந்திய வெப்பமண்டல வானிலை நிறுவனத்தின் காலநிலை விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல் கூறினார். கடல்சார் உயர் வெப்பநிலைகள் கடல் வெப்ப அலைகளின் சிறப்பியல்புகளைக் கொண்டிருந்தன, அவை மழைக்காலத்திற்கு முந்தைய புயல்களான ஆம்பன் மற்றும் நிசர்கா போன்றவற்றை விரைவாக தீவிரப்படுத்தியிருக்கலாம் என்று கோல் மேலும் கூறினார்.

கூடுதலாக, ஒரு வெப்பமான வளிமண்டலம் அதிக நீரைப் பிடிக்கும், இது புயலின் போது அதிக மழையை உண்டாக்குகிறது, இது வெள்ள அபாயத்தை அதிகரிக்கிறது என்று கிறிஸ்டியன் எய்ட் அறிக்கை தெரிவித்துள்ளது. மனித கார்பன் உமிழ்வின் விளைவாக உலகளாவிய கடல் மட்டங்கள் ஏற்கனவே சுமார் 23 செ.மீ அதிகரித்துள்ளன, இது புயல் எழும்பும் தூரத்தை வியத்தகு முறையில் அதிகரிக்கின்றன.

பரவலான ஜூன்-அக்டோபர் வெள்ளம்

பருவமழை காலமானது இந்தியாவுக்கு கடுமையான மழையை கொடுத்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், இவை குறைந்தது 2,067 இறப்புகளையும், 73,374 கோடி ரூபாய் மதிப்பில் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன என்று கிறிஸ்டியன் எய்ட் அறிக்கை தெரிவித்துள்ளது.

கேரளாவில், தேயிலைத் தோட்டத்தில் ஏற்பட்ட ஒரு நிலச்சரிவில் 49 பேர் கொல்லப்பட்டனர். அசாமில், மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் வெள்ளம் 60,000 க்கும் அதிகமானவர்களை பாதித்தது, 149 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிக்கை குறிப்பிட்டது. கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் வசிக்கும் ஹைதராபாத்தில், 24 மணி நேரத்தில் 29.8 செ.மீ. வெள்ளம் பெய்து, கார்கள் மற்றும் வீடுகளை மூழ்கச் செய்து, குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியா தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக அசாதாரணமாக கனமழையை அனுபவித்தது. கடந்த 65 ஆண்டுகளில், நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக, அறிக்கை தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் என்பது அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாகும், அதிக கார்பன் உமிழ்வானது அவற்றின் நிகழ்வை இரட்டிப்பாக்கக்கூடும் என்று மாதிரிகள் காட்டுகின்றன. சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்ரா உள்ளிட்ட முக்கிய இமயமலை நதிகளின் அதிக மக்கள் தொகை கொண்ட படுகைகள் இந்த நிகழ்வுகளால் மிக மோசமாக பாதிக்கப்படும் என்று இந்தியாஸ்பெண்ட் ஜூலை 2 கட்டுரை தெரிவித்துள்ளது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
Tags:    

Similar News