காலநிலை மாற்றம்: ஃபாஸ்ட் ஃபேஷன் எவ்வாறு சுற்றுச்சூழலை பாதிக்கிறது

ஃபாஸ்ட் ஃபேஷன் என்பது புதிய தோற்றத்திற்கு, தவறான தேவையை உருவாக்கும் யோசனையை அடிப்படையாகக் கொண்டது, இதனால் அதிக ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதே நேரம், இது செயல்பாட்டளவில் பூமிக்கு தீங்கு விளைவிக்கும் ஜவுளி விரயத்தை அதிகரித்துள்ளது என்று நிலைத்தன்மை நிபுணர்கள் கூறுகின்றனர்.;

Update: 2021-12-25 00:30 GMT

மும்பை: நித்யா சந்திரசேகரின் தாயார் தனது பத்தாண்டுகள் பழமையான பனாரசி பட்டுப் புடவையை தூக்கி எறிய முடிவு செய்தபோது, நித்யா அதை மீண்டும் உருவாக்க விரும்பினார். "புடவையின் ஃபார்டரில் வெள்ளி ஜரிகை வேலைப்பாடு இருந்தது, அதை நான் கொடுக்க விரும்பவில்லை," என்றார் அவர். அவர் தனது சகோதரரின் திருமணத்திற்காக, இச்சேலையை மறு உருவாக்கம் செய்ய முடிவெடுத்தார், இதனால், அது 2019 ஆம் ஆண்டு வரை மேலும் ஒரு பத்தாண்டுகளுக்கு நீடித்தது.

"ஒவ்வொரு புடவையும் ஆறு முதல், ஏழு மீட்டர் துணியாகும், இது அதன் அதிகபட்ச திறனுக்கு பயன்படுத்தப்படாவிட்டால், கழிவுவாக சேர்க்கிறது. நீங்கள் புடவையை அணிவதில் சலிப்பு தட்டினால், நீங்கள் ஏன் அதை தூக்கி எறிய வேண்டும்? மாறாக வடிவமைப்பை மாற்றி பயன்படுத்தலாமே" என்று, இந்தியா ஸ்பெண்டிடம் நித்யா கூறினார். நித்யா, மும்பையை சேர்ந்த அன்யா டிசைன்ஸின் நிறுவனர் ஆவார், இது புதிய ஆடைகளை உருவாக்க, வேஸ்ட் புடவைகளை அப்சைக்கிள் செய்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியன் டன் ஜவுளிகள் தூக்கி எறியப்படுகின்றன.

நித்யாவைப் பொறுத்தவரை, நாம் அதிகமாகச் செய்கிறோம், அதிகமாக வாங்குகிறோம், எனவே அவர் துணி உற்பத்தியில் வீணானதைக் குறைக்க தனது வேலையில் பூஜ்ஜிய கழிவு செயல்முறையை இணைத்துள்ளார். அவரைப் போலவே, பல வடிவமைப்பாளர்களும் ஜவுளிக் கழிவுகளை, ஃபேஷன் பொருட்களாக மாற்றுவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றனர், இது ஃபேஷன் நுகர்வு மீதான மக்களின் அணுகுமுறையை மாற்றுகிறது.

முதல் ஐந்து ஆடை உற்பத்தி சந்தைகளில், இந்தியாவிற்கு இது முக்கியமானது மற்றும் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்யப்படும் ஃபாஸ்ட் ஃபேஷன் ஆடைகளை உற்பத்தி செய்யும் சிறந்த உலகளாவிய மையங்களில் ஒன்றாகும். இந்தியாவின் சொந்த ஃபேஷன் தேவையும் அதிகரித்து வருகிறது.

உலகளாவிய ஜவுளித் தொழிலின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் என்பது, கப்பல் போக்குவரத்து மற்றும் சர்வதேச விமானப் பயணத்தை விட அதிகமாக உள்ளது.

ஃபேஷன் துறையில் ஒவ்வொரு ஆண்டும், சுமார் 53 மில்லியன் டன்கள் ஃபைபர் உற்பத்தி செய்யப்படுகிறது, அதில் 70% குப்பைத் தொட்டிகளில் அல்லது எரிக்கப்படுகிறது. ஃபைபர் உற்பத்தி, 2050 ஆம் ஆண்டளவில் 160 மில்லியன் டன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, இங்கிலாந்தை சேர்ந்த, சுற்றுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குப் பணிபுரியும் எலன் மேக்ஆர்தர் அறக்கட்டளை, தெரிவிக்கிறது. 1% க்கும் குறைவான ஃபைபர் புதிய ஆடைகளைத் தயாரிக்க மீண்டும் பயன்படுத்தப்படுகிறது, இது பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஆடைகளின் இழப்பைக் குறிக்கிறது, அவை மீண்டும் பயன்படுத்தப்படாமல் கழிவுகளாக வீசப்படுகின்றன, இது சுற்றுச்சூழலை மோசமாக பாதிக்கிறது என்று அந்த அமைப்பு கூறுகிறது.

ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின்படி, உலகளாவிய ஃபேஷன் துறையானது தண்ணீரைப் பயன்படுத்தும் இரண்டாவது பெரிய நுகர்வோர் ஆகும். பருத்தி உற்பத்தியில் தொடங்கி இறுதிப் பொருளின் சில்லறை விநியோகம் வரை, ஒரு ஜோடி ஜீன்ஸைத் தயாரிக்க 3,781 லிட்டர் தண்ணீர் – இது, மூன்று ஆண்டுகளில் ஒருவர் குடிக்கும் தண்ணீரின் அளவுக்குச் சமம்– தேவை என்று அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியன் டன் ஜவுளிகள் தூக்கி எறியப்படுகின்றன

இந்தியாவின் உள்நாட்டு ஜவுளி மற்றும் ஆடைத் தொழில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 2% பங்களித்தது மற்றும் 2018 இல் தொழில்துறை உற்பத்தியில் 14% ஆகும் என்று, இந்திய வர்த்தக சம்மேளனம் (ஐசிசி) இணைந்து தயாரித்த அறிக்கை தெரிவித்தது.

ஏற்றுமதியைத் தவிர, ஃபேஷனுக்கான உள்நாட்டு தேவை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. ஐசிசி அறிக்கையின்படி, நடுத்தர வர்க்க நுகர்வோரின் வருமானம் அதிகரிப்பதே முக்கிய காரணியாக இருப்பதால், 2018ல் ரூ.3,900 ஆக இருந்த ஆடைகளுக்கான தனிநபர் செலவு 2023ல் ரூ.6,400 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளுக்கு வெளியே ஆடைகளுக்கான மிகவும் கவர்ச்சிகரமான நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக இந்தியா மாற உள்ளது என்று கூறும் மெக்கின்சி, 2022-23 ஆம் ஆண்டில் 300 க்கும் மேற்பட்ட சர்வதேச பேஷன் பிராண்டு கடைகளைன் இந்தியாவில் திறக்கவுள்ளது.

நாங்கள் கூறியது போல், இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியன் டன்களுக்கு மேல் ஜவுளிகள் தூக்கி எறியப்படுகின்றன, இதில் பெரும்பாலானவை வீடுகளில் இருந்து வருவதாக, இந்தியன் டெக்ஸ்டைல் ​​ஜர்னல் தெரிவித்துள்ளது. வீட்டு குப்பைத் தொட்டி எடையில் ஜவுளிகள் சுமார் 3% ஆகும். ஜவுளி கழிவுகள் இந்தியாவின் நகராட்சி திடக்கழிவுகளின் மூன்றாவது பெரிய ஆதாரமாகும்.

மத்திய அரசு 2019 இல் SU.RE என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது ஜவுளித் தொழிலை தூய்மையான சூழலுக்கு பங்களிக்கும் ஃபேஷனை நோக்கி நகர்த்துவதை நோக்கமாகக் கொண்டது. லைஃப்ஸ்டைல், ஷாப்பர்ஸ் ஸ்டாப், ஃபியூச்சர் குரூப் மற்றும் ஆதித்யா பிர்லா ரீடெய்ல் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி சில்லறை வர்த்தகப் பிராண்டுகளில் சுமார் 16 நிறுவனங்கள், 2025 ஆம் ஆண்டிற்குள் நிலையான மூலப்பொருட்கள் மற்றும் செயல்முறைகளைப் பயன்படுத்தி தங்கள் மொத்த நுகர்வில் கணிசமான பகுதியை ஆதாரமாக/பயன்படுத்துவதாக உறுதியளித்துள்ளன. ஆனால் இந்தியாவில் வேகமான ஃபேஷனின் வளர்ச்சியானது, இந்தியா உற்பத்தி செய்யும் ஜவுளிக் கழிவுகளை அதிகரிக்கச் செய்வதாக, நிலைத்தன்மை முயற்சிகளின் வல்லுநர்கள் கூறுகின்றனர். நித்யா போன்ற வடிவமைப்பாளர்கள், இதற்கான தீர்வின் ஒரு பகுதியாக இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஜவுளிக் கழிவுகளைக் குறைப்பதற்கும் நிலையான ஃபேஷனை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பதிலுக்காக, டிசம்பர் 17 அன்று ஜவுளித்துறை அமைச்சகத்தை அணுகினோம். அவர்கள் பதிலளிக்கும்போது, இக்கட்டுரையை நாங்கள் புதுப்பிப்போம்.

ஏன் வேகமான ஃபேஷன் நிலையற்றது

முன்னதாக, ஃபேஷன் துறையானது ஆண்டுக்கு இரண்டு பருவங்களில் இயங்கியது, அப்போது புதிய சேகரிப்புகள் தொடங்கப்படும்: இலையுதிர் காலம்/குளிர்காலம் மற்றும் வசந்தம்/கோடை காலம். உற்பத்தியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் ஒவ்வொரு சீசனுக்கும் புது வகைகளை திட்டமிடுவதற்கும், வாடிக்கையாளர்கள் விரும்புவார்கள் என்று அவர்கள் நம்பும் பாணிகளைக் கணிக்கவும் மாதங்களுக்கு முன்பே வேலை செய்வார்கள்.

கடந்த 2,000 ஆம் ஆண்டுகளில், சர்வதேச பேஷன் பிராண்டுகளான ஜாரா மற்றும் எச் & எம் ஒரு வணிக மாதிரியை முன்னோடியாக மாற்றியது, இது ஆண்டுக்கு 52 'மைக்ரோ சீசன்களை' அறிமுகப்படுத்தியது, அதாவது ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தப்படுகிறது. அப்போதிருந்து, 'ஃபாஸ்ட் ஃபேஷன்' என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது, குறிப்பாக இந்த பிராண்டுகளின் சூழலில், அதிக ஃபேஷன் நுகர்வு விகிதத்தை விவரிக்க விற்பனைக்கு வரும் புதிய ஆடைகளின் எண்ணிக்கையால் தூண்டப்படுகிறது என்று, நிலையான ஃபேஷன் மற்றும் ஜவுளி தயாரிப்புகளை உருவாக்க வணிகங்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆன்லைன் ஆதாரக் குழுவான, சஸ்டெய்னபிள் ஃபேன்ஷன் கலெக்டிவ் (Sustainable Fashion Collective) தெரிவித்தது.

"ஜாரா மற்றுவ்ம் எச்&எம் போன்ற பிராண்டுகள் இந்தியச் சந்தையில் நுழைந்தபோது ஆறு முதல் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய சூழலில் வேகமான ஃபேஷன் அறிமுகப்படுத்தப்பட்டது"என்று, டில்லி மற்றும் கலிபோர்னியாவில் இருந்து செயல்படும் ஒரு நிலைத்தன்மை நிறுவனமான cKinetics இன் நிலையான தொழில் பயிற்சியின் இணை ரேகா ராவத் கூறினார், இது தொழில்களில் நிலையான உத்திகளை பிரச்சாரம் செய்து உருவாக்குகிறது. "வேகமான ஃபேஷன் என்பது புதிய தோற்றத்திற்கான தவறான தேவையை உருவாக்கும் யோசனையின் அடிப்படையிலானது, இதனால் அதிகமான ஆடைகள் விற்பனைக்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் ஆடைகள் விற்கப்படாததால் பெரும் விரயம் ஏற்படுகிறது. விற்கப்படாத ஆடைகள் குப்பைக் கிடங்குகளில் முடிவடைந்து மாசுபாட்டின் சுழற்சியை உருவாக்குகின்றன," என்று அவர் மேலும் கூறினார். "பிரச்சனை என்னவென்றால், வேகமான ஃபேஷனின் விலையின் பெரும்பகுதி விலைக் குறியீட்டில் பிரதிபலிக்கவில்லை. வேகமான நாகரீகத்தின் அனைத்து கூறுகளும் - அதிக உற்பத்தி, குறைந்த தரம், போட்டி விலை நிர்ணயம் - சுற்றுச்சூழலுக்கும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும்" என்றார்.

"முன்பெல்லாம், நீடித்து நிலைக்கும் பொருட்களை நுகர்வோர் வாங்குவார்கள், அப்போது துணிகள் சாதாரணமாக, 50-80 வரை துவைக்கலாம்" என்று ராவத் கூறினார். "ஆனால் இப்போது, ​​புதிய துணி வகைகளின் போக்கு, தர அம்சங்களை முந்திவிட்டது. இதன் விளைவாக, அதிகமான பொருட்கள் தூக்கி எறியப்படுகின்றன, அவற்றில் பல சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல செயற்கை துணிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன" என்றார். சுமார் 165 நிறுவனங்கள், பெரும்பாலும் ஃபாஸ்ட் ஃபேஷன் பிராண்டுகள், சுமார் 24% ஜவுளி மற்றும் ஆடைத் துறை உமிழ்வுகளுக்கு காரணமாகின்றன என்று cKinetics இன் நவம்பர் 2021 அறிக்கை கூறுகிறது. எச்&எம் மற்றும் குஸ்ஸி போன்ற பிராண்டுகளின் சுமார் 68% ஆடைகள் எலாஸ்டேன், நைலான் மற்றும் அக்ரிலிக் உள்ளிட்ட செயற்கை இழைகளால் ஆனவை. பாலியஸ்டர் மிகவும் பொதுவானது, இது அனைத்து ஃபைபர் உற்பத்தியில் 52% ஆகும்.

"செயல்முறையும் மிகவும் வீணானது" என்று ராவத் குறிப்பிட்டார். "முன்பு ஃபேஷன் ஹவுஸ்கள் ஒரு நிறத்தில் 1,000 கெஜம் துணியை வாங்கினால், இப்போது அவர்களுக்கு 10 வெவ்வேறு வண்ணங்களில் 100 கெஜங்கள் மட்டுமே தேவை, ஏனெனில் சிறிய [உற்பத்தி] ஓட்டங்களுக்கு ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. இது வளங்களின் மீது கூடுதல் அழுத்தத்தை உருவாக்குகிறது - உதாரணமாக, துணிக்கு சாயமிடுதல் மற்றும் சுத்திகரிப்பு தண்ணீர் மற்றும் இரசாயனங்களின் பயன்பாடு. அதிகபட்ச ஜவுளிக் கழிவுகள் தொழிற்சாலைத் தளங்களில் வெட்டப்படும்போதும், ஆடைகள் தயாரிக்கும் போது, ​​எஞ்சியிருக்கும் துணி ஸ்கிராப்புகளையும் உள்ளடக்கியது," என்றார் ராவத்.

கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, ​​விற்பனையில் ஏற்பட்ட கூர்மையான வீழ்ச்சியின் காரணமாக, உலகளவில் €140 பில்லியன் முதல் €160 பில்லியன் வரை மதிப்பிலான ஆடைகள் அதிகப்படியான சரக்குகளாக இருந்தன என்று மே 2020 இல் மெக்கின்சி அறிக்கை தெரிவிக்கிறது.

ஃபாஸ்ட் ஃபேஷன் கழிவுகளை மறுசுழற்சியால் எதிர்கொள்ளலாம்

ஃபாஸ்ட் ஃபேஷன் பிராண்டுகள், பெரிய அல்லது சிறிய, ஆர்வமுள்ள இந்திய நுகர்வோருக்கு பதிலளிக்க புதுமையாக உள்ளன, இது அதிக ஜவுளி கழிவுகளுக்கு வழிவகுக்கிறது. "வேகமான ஃபேஷன் மற்றும் அதன் வீணான தன்மைக்கு விடையாக, ஜவுளிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் கருத்து, ஃபேஷன் உலகின் பல அடுக்குகளில் இறங்கத் தொடங்கியுள்ளது" என்று, பவ்யா கோயங்கா கூறினார். இவரது முயற்சியான ஐரோ ஐரோ ஜவுளிக்கழிவுகளை மறுசுழற்சி செய்து ஜவுளிப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. "ஃபேஷன் தொழில் உற்பத்தி-பயன்பாடு-அகற்றுதல் ஆகியவற்றின் நேரியல் வணிக மாதிரியை முன்வைக்கிறது; எனவே, இது சுற்றுச்சூழல் துயரத்திற்கு வெளிப்படையான பங்களிப்பாகும். ஆனால் பயன்படுத்தப்படாத ஒரு பெரிய வாய்ப்பும் உள்ளது" என்று கோயங்கா கூறினார். தயாரிப்பு அல்லது பொருட்களின் பழுது, மீளுருவாக்கம் மற்றும் மறுபயன்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு சுழற்சி உற்பத்தி முறையின் மூலம், ஐரோ ஐரோ மற்ற வணிகங்களுடன் இணைந்து தங்கள் கழிவுகளை ஃபேஷன் மற்றும் உட்புறத்திற்கான ஜவுளிகளாக மாற்றுகிறது. "இதுவரை, நாங்கள் 10,000 கிலோ ஜவுளிக் கழிவுகளை மறுசுழற்சி செய்துள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் பெண்களின் ஆடை விற்பனையில், புடவைகள் போன்ற பாரம்பரிய இந்திய ஆடைகள் இன்னும் 70% என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று Mckinsey அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேற்கத்திய உடைகள் மீதான இந்தியாவின் விருப்பம் அதிகரித்தாலும், 2023 ஆம் ஆண்டுக்குள் ஆடை சந்தையில் 65% பாரம்பரிய உடைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கை கூறுகிறது. "புடவைகள் போன்ற பாரம்பரிய உடைகள் கலாச்சார மற்றும் உணர்வுபூர்வமான மதிப்பைக் கொண்டுள்ளன, மேலும் அவை ஒருபோதும் நாகரீகமாக மாறாது. புடவைகளை மீண்டும் உருவாக்கி அவற்றை இந்தோ-வெஸ்டர்ன் உடையாக உருவாக்க எப்போதும் வாய்ப்பு உள்ளது" என்று நித்யா கூறினார்.

கடந்த 2019 McKinsey அறிக்கையின்படி, வாடகை மற்றும் பழைய ஆடைகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது, மேலும் மறுவிற்பனை சந்தை 10 ஆண்டுகளில் வேகமான ஃபேஷனை விட பெரியதாக இருக்கும்.

நிலைத்தன்மை பற்றிய யோசனையை உற்பத்தியாளர்களால் மட்டும் செயல்படுத்த முடியாது, இது வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பங்களைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ராவத் கூறினார். "ஒரு மூடிய வளைய அமைப்பின் யோசனை வள திறன், புதுப்பிக்கத்தக்க எரிபொருள்கள் மற்றும் மூலப்பொருட்கள் மூலம் நிலைத்தன்மையை நோக்கி வேலை செய்வதாகும், இது நேர்மறையான திசைகளில் மட்டுமே அதிகரிக்கும் படிகளாக இருக்கும்" என்றார்.

எச்&எம் மற்றும் ஜாராவை, இந்தியா ஸ்பெண்ட் தொடர்பு கொண்டு, அவர்களின் நிலையான முயற்சிகள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. எச்&எம் 50க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளைக் கொண்டுள்ளது, அதே சமயம் ஜாரா இந்தியாவில் 22க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டுள்ளது. அவர்களிடம் இருந்து பதிலைப் பெற்றவுடன், இக்கட்டுரையை புதுப்பிப்போம்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News